Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 45: `அவங்க சொல்லாம, நான் சாப்பிட மாட்டேன்!' அட்ராசிட்டி ராபர்ட்; அதகள நீதிபதி ராம்!

பிக் பாஸ்

ஆனால் ஜனனியால் அவ்வாறு இருக்க முடியவில்லை. ‘அடச்சீ’ என்று தனலஷ்மி சொன்னதற்கு ‘உன் திமிரை என் கிட்ட காட்டாதே’ என்று ஜனனியும் பதிலுக்குப் பொங்கியது ஒருவகையில் நியாயமாகவேபட்டது.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 45: `அவங்க சொல்லாம, நான் சாப்பிட மாட்டேன்!' அட்ராசிட்டி ராபர்ட்; அதகள நீதிபதி ராம்!

ஆனால் ஜனனியால் அவ்வாறு இருக்க முடியவில்லை. ‘அடச்சீ’ என்று தனலஷ்மி சொன்னதற்கு ‘உன் திமிரை என் கிட்ட காட்டாதே’ என்று ஜனனியும் பதிலுக்குப் பொங்கியது ஒருவகையில் நியாயமாகவேபட்டது.

பிக் பாஸ்
பிக் பாஸில் நடக்கும் ‘கோர்ட் டாஸ்க்கை’ பார்த்து விட்டு ‘நீதிமன்ற நடவடிக்கைகளை அவதூறு செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கிறது’ என்று யாராவது பொதுநல வழக்கு போடாமல் இருந்தால் சரி. அந்த அளவிற்கு சிரிப்பாய்ச் சிரிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கு விசாரணை செய்யச் சொன்னால் கோக்குமாக்காக பேசுகிறார்கள். Objection sustained.
ரச்சிதா, ராபர்ட்
ரச்சிதா, ராபர்ட்

நாள் 45-ல் நடந்தது என்ன?

ரச்சிதா குற்றம் சாட்டப்பட்டவர், ராபர்ட் நீதிபதி என்னும் போதே வழக்கின் முடிவு எப்படியிருக்கும் என்று ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது. இது மட்டுமல்லாமல் தனலஷ்மி தொடுத்த வழக்கும் வயிற்றெரிச்சலின் அடிப்படையில்தான் தரப்பட்டதே ஒழிய, ஆயிஷா சொல்லும் அளவிற்கு அதில் வலுவான முகாந்திரம் இல்லை.

மைனா கீழே விழுந்ததும், ராம் கோல் அடித்ததும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் நிகழ்ந்தது. மேலும் தனலஷ்மி பந்தைத் தடுக்கும் முயற்சியில்தான் அப்போது இருந்தார். அதாவது ஆட்டத்தில் நீடித்தார் என்பதே இதன் பொருள். எதிர் பக்க கோலி கீழே விழுந்ததற்காக ஆட்டத்தை நிறுத்துவதெல்லாம், சாலையில் நடக்கும் கால்பந்து விளையாட்டில் கூட நடக்காத சமாச்சாரம்.

அப்படியே இந்த வெற்றியில் தனலஷ்மிக்கு ஆட்சேபம் இருந்திருக்கும் என்றால், அப்போதே நடுவரிடம் முறையிட்டிருக்க வேண்டும். மாறாக தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாமல் படுக்கையில் சென்று விழுந்து விட்டார். ஸ்போர்டிவ்னஸ் என்பதின் அடிப்படையான அர்த்தம் கூட தனலஷ்மிக்குத் தெரியவில்லை.

தலைவர் போட்டியில் உலக சதி – தனலஷ்மி ஆவேசம்

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ‘அணி பிரிப்பதில் நிறைய பாலிட்டிக்ஸ் நடக்கிறது. நான் தலைவராகி இருந்திருந்தால் அப்படியே வீட்டை தலைகீழாக மாற்றி நோ்மையின் கொடியை பறக்கச் செய்வேன்’ என்று தனலஷ்மி சொல்வதெல்லாம் உட்டாலக்கடி. தனலஷ்மியும் அவருடைய டீம் பாலிட்டிக்ஸைத்தான் பின்பற்றியிருப்பார். ‘அணி அரசியல் ’ தொடர்ந்து நடக்கிறது என்றால் போராடி, வாதம் செய்து அதை நிரூபித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமே ஒழிய, ஐஸ்கிரீமிற்காக அடம்பிடித்து அழும் குழந்தை போல் தரையில் புரண்டு அழுதெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

ஆக.. அடிப்படை முகாந்திரமே அற்ற இந்த வழக்கில் ‘நடுவர் ரச்சிதா குற்றவாளியல்ல’ என்பது நிரூபணமானது எதிர்பார்த்ததே. அவரின் சார்பில் ஆஜரான வக்கீலான விக்ரமனும் திறமையாகச் செயல்பட்டார். ‘ஸாரி. என்னால சாட்சி சொல்ல முடியல. என்ன நடந்ததுன்னு எனக்கு சரியா தெரியல’ என்று பிறகு தனலஷ்மியிடம் மன்னிப்பு கேட்டார் ஷிவின். வழக்கில் வென்ற ரச்சிதாவிற்கு மாலை, மரியாதை செய்யப்பட்டது.

ரச்சிதா
ரச்சிதா

தனலஷ்மியின் ரியாக்ஷன் எப்படியிருந்தது? வேறென்ன, கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். ‘மத்த டாஸ்க்கா இருந்திருந்தா அழுதிருக்க மாட்டேன். இது தலைவர் போட்டி’ என்று அவர் விளக்கம் தரும் போது நமக்கே சிரிப்பு வந்தது. அம்மணி அழுவதற்கு ஏதாவது காரணம் இருந்தாக வேண்டுமா என்ன?! ‘

இது ஃபவுல் கேமான்னு எனக்குத் தெரியல. நான் தலைவரா செயல்படறதுக்கு நெருடலா இருக்கு’ என்று காமிராவின் முன்பு அநாவசியமாக வாக்குமூலம் தந்து கொண்டிருந்தார் மைனா. ஒருவேளை கமல் விசாரணை நாளை எண்ணி முன்பே எடுத்துக் கொண்ட முன்ஜாமீன் பாதுகாப்பு வாக்குமூலமோ, என்னமோ?!

ராபர்ட்டின் ‘உண்ணாவிரத’ இம்சை – ரச்சிதாவின் பொறுமை

‘எங்க தல.. எங்க தல.. டிஆரு.. டண்டணக்கா’ பாடலுடன் நாள் 45 விடிந்தது. கார்டன் ஏரியாவில், புதிதானதொரு கேம் செட்அப் இருந்ததைப் பார்த்து மக்கள் வியந்து கொண்டிருந்தார்கள். அது Spin Board Task. இருவர் மட்டுமே ஆட முடியும். ஒருவர் போர்டின் மீது ஏறி நிற்க, இன்னொருவர் சக்கரத்தை வேகமாக சுற்றுவார். குறிப்பிட்ட நேரம் வரை நிற்பவர் கீழே விழாமல் தாக்குப் பிடித்து விட்டால் அவர் வெற்றி. விழுந்து விட்டால் சக்கரம் சுற்றியவர் வெற்றி. லம்ப்பாக 400 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

அதென்னமோ முதலில் இடம்பிடிப்பதில் கதிரவன் எப்போதும் கில்லியாக இருக்கிறார். இந்த டாஸ்க்கிலும் போர்டின் மீது முதலில் ஏறி நின்றவர் அவரே. மணிகண்டன் கைவலிக்க வலிக்க சுற்றினாலும் கதிரவனை கீழே விழவைக்க முடியவில்லை. எனவே கதிரவன் வெற்றி.

ராபர்ட்
ராபர்ட்

பிக் பாஸ் வீட்டில் சோறு கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ரணகளத்திலும் ரொமான்ஸ் கிளுகிளுப்பு செய்வதை ராபர்ட் ஒரு அபத்தமான பொழுதுபோக்காகவே வைத்துக் கொண்டிருக்கிறார். சாப்பிடச் சொல்லி ரச்சிதா கேட்கவில்லையென்றால், இவர் சாப்பிட மாட்டாராம். இப்படி எமோஷனல் பிளாக்மெயில் வழியாக அனுதாபத்தை பிடுங்குவது ஒரு கொடூரமான பழக்கம். ஒருவரை நாம் நேசிக்கிறோம் என்றால் அவரை எந்த வகையிலும் கொடுமைப்படுத்தக்கூடாது என்பதுதான் உண்மையான அன்பு.

ராபர்ட்டின் அழிச்சாட்டியத்தை பொறுமையாக ஹாண்டில் செய்து கொண்டிருந்தார் ரச்சிதா. வழியில் தென்படுபவர்களையெல்லாம் ‘அவரைச் சாப்பிடச் சொல்லுங்க’ என்று அவர் தூது அனுப்பிக் கொண்டிருக்க ‘எனக்குப் பசிக்கலை.. வாந்தி வருது’ என்று போலியான காரணங்களை கெத்தாக சொல்லி உணவை மறுத்துக் கொண்டிருந்தார் ராபர்ட்.

வழக்கு எண்.3 – அசிம் Vs ஏடிகே – அவதூறு கேஸ்

அடுத்ததாக அசிம் போட்ட ‘சாவி திருட்டு’ வழக்கு விசாரணைக்கு வந்தது. இதுவும் ஒரு போங்காட்ட கேஸ். ‘ஆட்ட உத்திக்காகத்தான் நான் சாவியை ஒளித்து வைத்தேன். ஆனால் தனிப்பட்ட காழ்ப்பு காரணமாக ஏடிகே தகாத வார்த்தைகளால் என்னை ஏசினார். நான் அவரை டிரிக்கர் செய்யவில்லை. என்னை அவதூறு செய்த ஏடிகே மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்பது அசிம் பதிவு செய்த வழக்கின் சாரம்.

சாவி திருடியது அசிமின் கேம் உத்தி என்பது ஒரு கட்டம் வரைக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. மறுப்பில்லை. ஆனால் சூடான வார்த்தைகள் எல்லை கடந்து போன போதிலும் சரி, அல்லது கேம் முடிந்த பிறகும் சரி, அசிம் தன் விளையாட்டை நிறுத்தவில்லை. மாறாக சாவியை நேரடியாகத் தராமல் நைசாக தூக்கிப் போட்டு விட்டார்.

ஷிவின்
ஷிவின்

மேலும் ஏடிகேவை வார்த்தைகளால் தூண்டி விட்டு அவரை ஆத்திரப்படச் செய்து வேடிக்கை பார்த்தார். இத்தனைக்கும் ஏடிகே அசிமின் நண்பராக இருந்தவர். அசிமிற்கு கெட்ட பெயர் வந்த போதெல்லாம் ஆதரவு தந்தவர். ஆனால் அவரையே குத்தலான வார்த்தைகளால் பேசி மனம்புண்படச் செய்த அசிம், இப்போது சாவி திருட்டு சம்பவத்தின் மூலம் பங்காளிப் பகையாகவே மாற்றி விட்டார். ஒரு நட்பிற்கு உரிய மரியாதையைத் தரும் அடிப்படை பண்பு கூட அசிமிடம் இல்லை.

விசாரணை நாளில் கமலே இது பற்றி விசாரித்து அசிமின் கீழ்மையை ஏற்கெனவே சுட்டிக் காட்டிய பிறகும், அசிம் இந்த வழக்கைப் போடத் துணிந்திருப்பது அசட்டுத்தனம். தன்னை ஆத்திரப்படத் தூண்டியதோடு மட்டுமல்லாமல் சாவியை ஒளித்து வைத்து விளையாடிதால் உண்மையில் ஏடிகேதான் அசிமின் மீது வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் மோதிய ஷிவினும் விக்கிரமனும்

இந்த வழக்கில் அசிமிற்கு வழக்கறிஞராக வாதாட எவரும் முன்வரவில்லை. பேசாமல் தனக்காக அசிம் தானே வாதாடியிருக்கலாம். கதிரவனை கேட்ட போது வாய் பேச முடியாதவர் போல் அவர் சைகை செய்த காமெடி ரசிக்கும்படியாக இருந்தது. ‘அசிம் கேஸ்லாம் ரொம்ப காம்ப்ளிகேட்டடா இருக்கும்’ என்று பீதியுடன் சொன்னார் மணிகண்டன். ‘உன் அளவிற்கு எனக்குப் பேச வராது’ என்று ஒதுங்கினார் அமுதவாணன். வழக்கறிஞர் கிடைக்காமல் அல்லாடிய அசிம் “விக்ரமனை கூட கேட்டுப் பார்ப்பேன். ஆனா எதிர் பக்கம் ரொம்ப வீக்கா இருந்து நம்ம சைட் ஸ்ட்ராங்கா இருக்கறது வேணாமே என்று பார்க்கிறேன்’ என்று கெத்து காட்டியது ஒரு நல்ல நகைச்சுவை.

ராம்
ராம்

கடைசியாக ஷிவினிடம் சென்று சரண் அடைந்தார் அசிம். வழக்கை ஏற்க ஒப்புக் கொண்டார் ஷிவின். ஏடிகேவின் சார்பாக விக்ரமன் ஆஜர் ஆக முடிவு செய்தார். ஆக கோர்ட்டில் ஷிவினும் விக்ரமனும் மோதும் காட்சியைப் பார்க்க பரபரப்பு ஏற்பட்டது. விக்ரமனின் விசாரணை முறையில் தர்க்க ஒழுங்கும் நிதானமும் இருந்தது. ஆனால் வாதாடுகிறேன் என்கிற பெயரில் ஷிவின் உரத்த குரலில் கத்தவே செய்தார். (சினிமாவில் கோர்ட் சீன் காட்சிகளைப் பார்த்த பழக்கம் போல). இதை ஏடிகேவும் பிறகு சுட்டிக் காட்டினார்.

ஷிவின் தரப்பில் சாட்சியாக சொல்லப்பட்ட க்வீன்சி ‘எனக்கு இது பற்றி தெரியாது’ என்று ஒதுங்கிக் கொள்ள அசிமிற்கு ஆத்திரம் வந்தது. போலவே விக்ரமனின் தரப்பில் சாட்சியாக சுட்டிக்காட்டப்பட்ட தனலஷ்மியும் ‘எனக்குத் தெரியாதுங்கய்யா’ என்று பல்டி அடித்தார். வழக்கறிஞர்கள் சாட்சிகளிடம் முன்பே ஒப்புதல் வாங்க மாட்டார்களா, என்ன?!

இந்த வழக்கில் நீதிபதியாக செயல்பட்டவர் ராம். (நோ. நோ.. சிரிக்கக்கூடாது!). இதைத் திறமையாக கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அசிம் கையை உயர்த்தி பேச முயலும் போது ‘வக்கீல் மூலமாத்தானே அவர் பேசணும்.. பேசாம அவரையே இங்க வந்து தீர்ப்பு சொல்லச் சொல்லுங்க’ என்று கெத்து காட்டினார் ராம்.

விசாரணையின் இறுதியில் ஜூரிகள் ‘விக்ரமன் தரப்பு சரி’ என்று கருத்து சொன்னார்கள். ‘இரண்டு தரப்பினருமே ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி சண்டை இட்டார்கள். எனவே யாரும் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. அசிம் டாஸ்க்கிற்காக மட்டுமே இந்தக் காரியத்தைச் செய்தார் என்பது நிரூபணமாகி விட்டது. ஆகவே.. ஷிவின், அசிம் தரப்பு இந்த வழக்கில் வெற்றி பெற்றது” என்பது ராமின் தீர்ப்பு.

நீதிமன்ற டாஸ்க்
நீதிமன்ற டாஸ்க்

அவதூறாக பேசிய ஏடிகே மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான் வழக்கு. அவர் தரப்பில் (மட்டும்) தவறில்லை என்னும் போது ஷிவின், அசிம் வென்றதாக எப்படி ராம் தீர்ப்பளித்தார் என்று வியப்பாக இருக்கிறது. ‘வாதாடும் திறமைதான் பிரதானம்’ என்கிற பிக் பாஸ் விதிகளின்படி பார்த்தாலும் கூட ஷிவினின் ஆக்ரோஷத்தை விடவும் விக்ரமனின் நிதானமான தர்க்கம் சிறப்பாக இருந்தது.

பிறகு இது பற்றி ராமிடம் வெளியில் பேசிக் கொண்டிருந்த விக்ரமன் “நீதிபதியைத்தான் தனிப்பட்ட வகையில் விமர்சிக்கக்கூடாது. தீர்ப்பைப் பற்றி விமர்சிக்கலாம்’ என்று சொன்னதில் இருந்து அடிப்படையான சட்ட விஷயங்கள் பற்றி அவருக்குத் தெரியும் என்று தெரிகிறது. விக்ரமன் ஒரு ஜர்னலிஸ்ட்டும் கூட.

வழக்கு எண்.4. ராம் போட்ட வழக்கு – மேலும் கேலிக்கூத்தாக்கிய மற்றவர்கள்

ஸ்பின் போர்டு டாஸ்க்கில் இந்த முறை ஷிவின் வேகமாக ஓடிச் சென்று நின்றார். சக்கரம் சுற்றுவதில் நான்கு நபர்கள் ஈடுபடலாம் என்று விதியை மாற்றினார் பிக் பாஸ். மணிகண்டன் வேகமாகச் சுற்றினாலும் ஷிவின் அசராமல் தாக்குப் பிடித்து நின்றார். இந்தச் சமயத்தில் பலகையின் ஸ்க்ரூ விலகியதால் அசிம் பதறி கத்தினார். என்றாலும் ‘நான் விளையாட்டை நிறுத்தவில்லை. உங்கள் அக்கறைக்கு நன்றி’ என்று ஸ்போர்டிவ்வாக செயல்பட்டு உறுதியாக நின்ற ஷிவினுக்கு 400 பாயிண்ட்ஸ் கிடைத்தது.

அடுத்ததாக ராம் வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘எல்லை மீறிய நகைச்சுவையை அமுதவாணன் செய்தார்’ என்பது அவரின் புகார். ‘கலக்கப் போவது யாரு’ போன்ற நிகழ்ச்சிகளின் வழியாக உருவாகி வந்தவர் அமுதவாணன். உருவக் கேலி என்பது அந்த நிகழ்ச்சிகளில் சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம். பிக் பாஸ் வீட்டிலும் அமுதவாணன் அதைச் செய்வதைப் பார்த்திருக்கிறோம். குறிப்பாக ராம் என்றாலே எல்லோருக்கும் கிள்ளுக்கீரைதான்.

அமுதவாணன்
அமுதவாணன்

தான் ஆடை அணியும் விதம் பற்றி அமுதவாணன் மிகையாக கிண்டல் செய்தார்’ என்பது சென்சிட்டிவ்வான கேஸ். ஒருவரின் மனம் புண்படுவது என்பது சிரிக்கும் விஷயம் இல்லை. ஆனால் ராம் தொடர்பானது என்றால் கோர்ட்டில் நீதிபதி முதற்கொண்டு அனைவரும் சிரிப்பாகச் சிரித்தார்கள். (தனலஷ்மி நீதிபதியாக அமர்ந்ததற்கே நாம் தனியாகச் சிரித்தாக வேண்டும்).

ராமின் தரப்பில் வழக்கறிஞராக ஆஜரான ஏடிகே மட்டும்தான் இந்த வழக்கை சீரியஸாக கையாண்டார். மற்றபடி அனைவருமே சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்கள். அமுதவாணனின் தரப்பு வக்கீலான மைனா, பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் மேஜையின் கீழ் ஒளிந்து கொண்டார். நீதிபதியான தனலஷ்மி மற்றவர்களைக் கண்டித்தாலும், தானே சிரிப்பை அடக்க முடியாமல் ‘ஸாரி பிக் பாஸ்’ என்று முன்ஜாமீன் வாங்கினார்.

இந்தக் களேபரத்தில் ஏடிகே முன்வைத்த கேள்விகளைக் கவனிக்காமல் போனது தனலஷ்மியின் தவறு. இதை ஏடிகே சுட்டிக் காட்டியவுடன் தனலஷ்மிக்கு வழக்கம் போல் காண்டாகி விட்டது. எனவே விசாரணை முழுவதும் ஏடிகேவின் மீது ஓரவஞ்சனை செய்து கொண்டிருந்தார். அப்போதே தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பது தெரிந்து விட்டது.

‘ஆடையை வைத்து ஒருவரை அவமானப்படுத்துவது தவறான விஷயம்தான். ஆனால் அமுதவாணன் மட்டும் இதைச் செய்யவில்லை. மற்றவர்கள் ஆரம்பிக்க, அவர் கடைசியில்தான் இணைந்தார். எனவே மைனா டீம் வெற்றி’ என்று அவசரம் அவசரமாக, கந்தர கோலத்தில் தீர்ப்பு சொல்லி இறுக்கமான முகத்துடன் எழுந்து கொண்டார் தனலஷ்மி. தன் தவறைச் சுட்டிக் காட்டிய ஏடிகேவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்பதுதான் தனலஷ்மியின் நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தன்னுடைய சிறுபிள்ளைத்தனத்தை, நீதிபதி நாற்காலியில் கூட பின்பற்றும் தனலஷ்மியின் போக்கு சகித்துக் கொள்ளவே முடியாத அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது.

ஆயிஷா
ஆயிஷா

‘மிக மோசமான தீர்ப்பு’ என்று ராமும் ஏடிகேவும் முனகினார்கள். கிச்சன் ஏரியாவிலும் தனலஷ்மியின் அட்ராசிட்டி தொடர்ந்தது. சாப்பாடு வைப்பது தொடர்பாக ஷிவின் மற்றும் அமுதவாணனிடம் கோபத்தைக் காட்டினார். ஆனால் அவர்கள் மிகப் பொறுமையாக இந்த விஷயத்தைக் கையாண்டார்கள். ஆனால் ஜனனியால் அவ்வாறு இருக்க முடியவில்லை. ‘அடச்சீ’ என்று தனலஷ்மி சொன்னதற்கு ‘உன் திமிரை என் கிட்ட காட்டாதே’ என்று ஜனனியும் பதிலுக்குப் பொங்கியது ஒருவகையில் நியாயமாகவே பட்டது.

உடைந்த ஸ்பின் போர்டு – ராபர்ட்டைக் கிண்டலடித்த பிக் பாஸ்

ஸ்பின் போர்டில் அடுத்ததாக அடுத்துப் பிடித்து ஏறியவர் ராபர்ட். அமுதவாணன் சக்கரத்தைச் சுற்ற ஆரம்பித்தார். ஆனால் போர்ட் உடைந்து ஒருபக்கம் சரிந்ததால், கீழே விழுவது போல் பாவனை செய்து அமுதவாணனுக்கு வெற்றி தேடித் தந்தார் ராபர்ட். “ராபர்ட்.. உங்க வெயிட் என்ன?’ என்று கிண்டலடித்த பிக் பாஸ், இந்தப் போட்டி நாளைக்குத் தொடரும் என்று ஒத்தி வைத்தார். ஷிவின் ஆடிய போதே ஸ்க்ரூ கழன்று கொண்டது. அப்போதே இதை ரிப்போ் செய்து வைத்திருக்க வேண்டாமா, பிக் பாஸ்?!

‘ஏன் சாப்பிடாம அடம் பிடிச்சீங்க?” என்று ரச்சிதா கேட்க “நீ ஒரு வார்த்தை கூட கேக்கலையே?” என்று இம்சையான பதில்களைத் தந்து கொண்டிருந்தார் ராபர்ட். பாத்ரூம் ஏரியாவில் இவர்கள் சீரியசாக பேசிக் கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே குறுக்கும் நெடுக்குமாக நடந்து இந்த சீனை அமுதவாணனும் ராமும் காமெடியாக்கிய விதம் சுவாரசியமாக இருந்தது.

டான்ஸ் டாஸ்க்
டான்ஸ் டாஸ்க்

‘தனலஷ்மி எனக்கு சம வயசுதான். இருந்தாலும் யார் கிட்டயும் பேச்சு வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை’ என்று ஜனனி சொல்ல ‘நீ கேளு..’ என்கிற மாதிரி தலையாட்டிய அமுதவாணன், அங்கிருந்து சட்டென்று விலகினார். ‘எதற்கு வம்பு.. ஜனனி கிட்ட பேசினாலே.. பஞ்சாயத்திக்கிடறாங்க’ என்பது அவரது அச்சமாக இருக்கலாம்.

அடுத்த எபிசோடில் என்னென்ன அபத்த வழக்குகள் தொடருமோ?! எங்களைக் காப்பாத்துங்க மை லார்ட்!