Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 48:`வெளியேறப்போவது இவர்தான்' `விளையாடாட்டி வெளிய வாங்க' சாட்டை சுழற்றிய கமல்

பிக் பாஸ் 6 நாள் 48

ஆனால் கமல் உசுப்பேற்றியதில் இன்னொரு பக்க ஆபத்தும் இருக்கிறது. அசிம், தனலஷ்மி போன்ற ஆட்டக்காரர்களுக்கு சலங்கையைக் கட்டி விட்டது போல் ஆகி விடும்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 48:`வெளியேறப்போவது இவர்தான்' `விளையாடாட்டி வெளிய வாங்க' சாட்டை சுழற்றிய கமல்

ஆனால் கமல் உசுப்பேற்றியதில் இன்னொரு பக்க ஆபத்தும் இருக்கிறது. அசிம், தனலஷ்மி போன்ற ஆட்டக்காரர்களுக்கு சலங்கையைக் கட்டி விட்டது போல் ஆகி விடும்.

பிக் பாஸ் 6 நாள் 48
‘ஏதோ.. உடம்பு சரியில்லை. இந்த வாரம் கமல் வருவாரா.. மாட்டாரா..?’ என்றெல்லாம் சந்தேகம் எழுந்து கொண்டிருந்த வேளையில், அவரோ மருத்துவனைக்குச் சென்று ‘எப்படியிருக்கீங்க டாக்டர்?’ என்று மருத்துவரை நலம் விசாரித்து விட்டு அப்படியே பிக் பாஸ் செட்டிற்கு வந்து விட்டவரைப் போல ஃப்ரெஷ்ஷாக இருந்தார்.
பிக் பாஸ் 6 நாள் 48: கமல்
பிக் பாஸ் 6 நாள் 48: கமல்

வந்தவர், ஆடாமல் சும்மா இருந்த போட்டியாளர்களை வலிக்க வலிக்க சுளுக்கெடுத்தார். கருணையேயில்லாமல் மிக்ஸர் பாக்கெட்டுக்கள் உடைக்கப்பட்டன. ‘இப்படியே சேஃப் கேம் ஆடிட்டு இருந்தா இந்த சீசன்தான் பயங்கர போர்-ன்னு பெயர் வந்துடும்’ என்று அழுத்தமாக ஊசி போட்டார். ‘கட்டிப்பிடி வைத்தியத்தை’ உலகத்திற்கு அறிமுகப்படுத்திய கமல், இப்போது பிக் பாஸ் வீட்டு மக்களுக்கு தந்த அதிர்ச்சி வைத்தியம் அவசியமானதுதான்.

கமல் சுற்றிச் சுற்றி வந்து அழுத்தமாகச் சொன்னதெல்லாம் ‘களத்துல இறங்கி ஆடுங்கப்பா’ என்கிற செய்தியைத்தான். ராபர்ட் வெளியே போகும் மனநிலைக்கு வந்து விட்டார். மற்றபடி ராம், க்வீன்சி, கதிரவன், ஆயிஷா, ஜனனி போன்றவர்கள் எல்லாம் முதல் வாரத்தில் வந்ததைப் போலவே இருக்கிறார்கள். காமெடியாக பேசிக் கொண்டிருந்த அமுதவாணன் கூட இப்போது சோர்ந்து அமர்ந்து விட்டார்.

ஆனால் கமல் உசுப்பேற்றியதில் இன்னொரு பக்க ஆபத்தும் இருக்கிறது. அசிம், தனலஷ்மி போன்ற ஆட்டக்காரர்களுக்கு சலங்கையைக் கட்டி விட்டது போல் ஆகி விடும். அடுத்த வாரத்தில் அவர்களின் அட்ராசிட்டிக்கள் இன்னமும் உக்கிரமாக இருக்கலாம்.

நாள் 48-ல் நடந்தது என்ன?

விநோத எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் அல்லாத அழகான டிஷர்ட் அணிந்து பிரகாசமாக அரங்கிற்குள் நுழைந்தார் கமல். ஆரம்பத்திலேயே ஒரு புத்தகப் பரிந்துரை. ‘இன்று இந்திய அரசியல் சாசன தினம். அறிவார்ந்த மக்களால் உருவாக்கப்பட்டது. அப்போதெல்லாம் தலைவர்களே மிகப் பெரிய அறிஞர்களாக இருந்தார்கள். (என்னா நக்கல்?!) மிக பயனுள்ள புத்தகம் இது. ஜனநாயகம் என்பது பத்திரமாக பூட்டி வைக்கப்பட வேண்டிய சமாச்சாரமல்ல. தொடர்ந்து உபயோகிக்கப்பட வேண்டியது’ என்கிற முன்னுரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார்.

‘அந்த பேப்பரை கீழே போட்டுடு.. அதுல ஒண்ணுமில்லை’ என்கிற காமெடி மாதிரி சில காட்சிகள் வந்து போயின. கிச்சன் ஏரியாவில் ரச்சிதாவின் கொடி பறப்பது தொடர்பான முணுமுணுப்புகள் எழுந்தன. ‘தயிர் கேட்டா புளிப்பு தயிர் சாப்பிட்ட மாதிரி ரச்சிதா முகத்தை சுளிக்கறாங்க’ என்று ஏடிகே புகார் சொல்ல, ‘உங்களுக்கான பங்கை தயங்காம எடுத்துக்கங்க’ என்று ஆலோசனை சொன்னார் மணி.

பிக் பாஸ் 6 நாள் 48
பிக் பாஸ் 6 நாள் 48

‘ஆடு திருடு போற மாதிரி கனவு வந்ததுங்கய்யா’

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “உங்க நீதிமன்ற டாஸ்க் பார்த்தேன். எனக்கு உங்க மேல ஒரு வழக்கு இருக்கு. நானும் உங்களை மாதிரியே லைட்டா விடலாம்ன்னு பார்க்கறேன். அதற்கான சாட்சியம் கார்டன் ஏரியால இருக்கு. போய்ப் பார்த்துட்டு வாங்க” என்று நமட்டுச் சிரிப்போடு சொன்னார். ‘வீட்ல இருக்கறவங்க மட்டும் போனா போதும்’ என்கிற பின்குறிப்பு குண்டூசி வேறு. மக்கள் வெளியே சென்று பார்த்தால் அவர்கள் உபயோகித்த பழைய கோப்பைகள் அங்கே பரிதாபமாக இருந்தன.

அவர்கள் திரும்பி வந்தவுடன் கதிரவனை அழைத்த கமல் ‘நீங்க பொதுநல வழக்கு போட்டீங்க.. சரி.. குற்றவாளி யாரு?’ என்று கேட்க “அய்யா.. ஆடு களவு போன மாதிரி கனவு கண்டேங்க’ என்பது போல் அசட்டுச்சிரிப்பு சிரித்தார் கதிரவன். மற்றவர்களை விசாரித்த போது சிலர் மட்டுமே சற்று துணிச்சலாக பெயர்களைச் சொன்னார்கள். ஆனால் பலரும் மழுப்பி, பூசி மெழுகினார்கள். ‘நான் ஜெயில்ல இருந்த போது ஒருமுறை பார்த்தேன்’ என்று மழுப்பலாக ராபர்ட் சொல்ல “அம்பது நாளுமா ஜெயில்ல இருந்தீங்க?” என்று டக்கென்று கமல் மடக்கிய போது, அவருக்குள் இருந்த ‘பம்மல் கே சம்பந்தம்’ மாடுலேஷன் வெளியே வந்த தருணம் சுவாரசியமாக இருந்தது.

பிக் பாஸ் 6 நாள் 48: கமல்
பிக் பாஸ் 6 நாள் 48: கமல்

ஆக. நாமினேஷன் பயத்தினால் ஒருவரையொருவர் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. நட்பும் ஒரு காரணமாக இருக்கலாம். என்ன இருந்தாலும் அவர்கள்தானே அந்த வீட்டில் தொடர்ந்து இருந்தாக வேண்டும்?! ஆனால் இத்தனை சேஃப் கேம் ஆடும் போது பார்வையாளர்களுக்கு நிச்சயம் எரிச்சல் வரும்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தட்டு, கோப்பைகளை கழுவாமல் அப்படியே வைத்து விடும் புகார் ஒவ்வொரு சீசனிலும் தொடர்கிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் பலரும் பரம்பரைப் பணக்காரர்கள் அல்ல. சராசரியான பின்னணியில் இருந்து வருபவர்கள். எனில் அவர்களின் வீட்டிலும் இப்படித்தான் இருப்பார்களா? சாப்பிட்ட தட்டை கழுவி வைப்பது மிக மிக எளிய செயல். அவசியமான செயலும் கூட. இதைக்கூடவா சொல்லித் தந்து வளர்த்திருக்க மாட்டார்கள்?! மேலும் பிக் பாஸ் வீட்டில் கணிசமான பொழுதும் இருக்கும். குடித்த காஃபி கோப்பை அப்படியே போட்டு வைக்கும் அளவிற்கு என்ன பிஸி? பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு இப்படி மாறி விடுகிறார்களா? அல்லது இளம் தலைமுறையின் டிசைனே அப்படித்தானா? புரியவில்லை.

‘இந்த சீசன்தான் செம போர்–ன்னு பேர் கிடைக்கும்’ – கமல் அதிரடி

ஒரு குற்றவாளியைக் கூட உறுதியாக சொல்ல முடியாத கதிரவனின் வழக்கைப் பற்றி ‘blind man in a dark room looking for a black cat that is not there’ என்ற பழமொழியின் மூலம் கிண்டலடித்த கமல், ‘சின்னத் தப்புதானே என்று விட்டு விட முடியாது. சிறுகச் சிறுக செய்யும் தவறுகளால்தான் ஒரு நதி சாக்கடையாகிறது’ என்று சொன்னது திருவாசகம்.

‘இவ்வளவு சேஃப் கேம் ஆடினா இந்த சீசன்தான் ரொம்ப போர் என்கிற பெயர் கிடைச்சுடும்.. இது ‘யார் நல்லவன்’ற போட்டி இல்ல. நல்லவனாக இருக்கணும்ன்றது என் பரிந்துரை. வல்லவனாகவும் இருக்கணும்னு மக்கள் எதிர்பார்க்கறாங்க.. அசிம் பெரிய வில்லனா இருக்காரேன்னு நெனப்பீங்க.. ஆனா அவர் இந்த வீட்டுக்குள்ள இன்னமும் இருக்காரு.. நானும் உங்களை மாதிரி பூசி மெழுகி பேச முடியாது. கடைசில ஒருத்தர் மட்டுமே ஜெயிப்பீங்க.. ‘இவர் ஜெயிப்பாரு போல’ன்னு நான் போன சீசன்கள்ல நெனச்ச ஆளுங்க எல்லாம் சிறு தவறுகளால் வெளியே போயிருக்காங்க. அதனால அந்த எதிர்பார்ப்புகளை நான் விட்டுட்டேன். எனக்கு யார் மீதும் ஃபேவரிட்டிஸம் கிடையாது” என்றெல்லாம் கமல் சொன்ன உபதேசம் சிறப்பானது.

பிக் பாஸ் 6 நாள் 48: தனலஷ்மி
பிக் பாஸ் 6 நாள் 48: தனலஷ்மி

ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல், தனலஷ்மியை எழுப்பி ‘தலைவர் போட்டியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. நீங்கள் தோற்றது உண்மை’ என்று சொல்ல, அந்தச் சமயத்தில் வீட்டையே தலைகீழாக்கி அழுது புலம்பிய தனலஷ்மி, இப்போதோ பெண் பார்க்க வந்தவர்களுக்கு வணக்கம் சொல்வது போல் நாணி தலைகுனிந்து அதை ஏற்றுக் கொண்டார். (இதுக்காம்மா.. இத்தனை கலாட்டா?!) ‘தலைவருடன் ஒத்துழையாமையெல்லாம் செஞ்சீங்க. அது ஏற்புடையதல்ல. நாளைக்கு அது உங்களுக்கே நடக்கலாம்” என்று கமல் சொன்ன அறிவுரை சிறப்பு.

தலைவர் தேர்தல் தொடர்பான சர்ச்சையை தீர்த்து விட்டாலும் தனலஷ்மி சொன்ன புகார்களில் அடிப்படையான முகாந்திரம் இருக்கிறது என்பதை உணர்ந்த கமல் அதற்கான விசாரணையில் இறங்கினார். ‘கேப்டன் ஆகறதுக்கு முன்னாடியே டீம் பிரிச்சிடறாங்க..’ என்று தனலஷ்மி சொல்ல, மைனா அதை மறுத்தார். “நல்லா சமைக்கத் தெரிந்த இருவர் தொடர்ந்து வருவாங்க.. சார்.. உதவியாளர்கள் மூணு பேரும் மாறிட்டே இருப்பாங்க..” என்று மணி சொல்ல “சாப்பாடு சுவையா வரணும்ன்றதுதான் அடிப்படையான காரணம்" என்று ரச்சிதாவும் ஷிவினும் சாட்சி சொன்னார்கள்.

‘கிச்சன் டீமில்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறதா?’

‘கிச்சன் டீம்ல இருந்தவங்க இதுவரைக்கும் ஜெயிலுக்குப் போனதா சரித்திரம் இல்லையாமே.. அப்படின்னா தனலஷ்மி சொல்றது உண்மை இருக்குல்ல?’ என்று அடுத்த கணையை தொடுத்தார் கமல். “ஏன் உதவிக்கு வந்தவங்க சமைக்கக் கத்துக்கலையா.. வாய்ப்புகள் சமமாக அமையணும்-ன்றது ஒரு முக்கியமான விஷயம்தானே?” என்று கமல் சொன்னதும் “நான் இரண்டு முறை வாய்ப்பு கேட்டேன். தரப்படவில்லை’ என்றார் விக்ரமன்.

‘நான் முதலமைச்சரானால்’ என்கிற கட்டுரையை மீண்டும் எழுதத் துவங்கிய தனலஷ்மி ‘கிச்சன் டீம்ல ஆம்பளைங்களை போட்டிருப்பேன்.. மணி, ரச்சிதா, ஷிவினையெல்லாம் தூக்கி க்ளீனிங் டீம்ல போட்டிருப்பேன்’ என்று சொல்ல, ‘அப்ப நீங்களும் விக்ரமனுக்கு வாய்ப்பு தர மாட்டீங்க.. இல்லையா?,’ என்று டைமிங்கில் கமல் மடக்கியது நன்று. ஒரு கட்டத்தில் ‘நீங்கள் நிகழ்த்த விரும்புவது சம வாய்ப்பா அல்லது பழிவாங்குதலா?’ என்று தனலஷ்மியையும் போகிற போக்கில் ஊமைக்குத்தாக கமல் குத்த, பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் வந்தது.

பிக் பாஸ் 6 நாள் 48: கமல்
பிக் பாஸ் 6 நாள் 48: கமல்

‘சமைக்கத் தெரியும்’ என்கிற காரணத்தை வைத்துக் கொண்டு கிச்சன் அதிகாரத்தை சிலர் கைப்பற்றியிருப்பதில் உண்மை இருக்கலாம். இதில் மாற்றத்தைக் கொண்டு வர தனலஷ்மி உண்மையாகவே விரும்பியிருக்கலாம். ஆனால் இது சரியாக திட்டமிடப்பட வேண்டும். ஏனெனில் உணவு என்பது அடிப்படையான விஷயம். ஆட்கள் சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லி, உணவு விஷயத்தில் தொடர்ச்சியான சொதப்பல் நடந்தால் வீடு தலைகீழாகி விடும். தட்டு கழுவாமல் இருந்தால் கூட மக்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால் தட்டே காலியாக இருந்தால் பிரளயம் நிகழ்ந்து விடும்.

‘தன் உரிமைக்காக குரல் தந்த தனலஷ்மி காப்பாற்றப்பட்டார்’ என்று முதலில் ஊசியையும் குத்தி விட்டு பிறகு பாசமாக தடவியும் விட்டார் கமல். ஆச்சரிய மகிழ்ச்சியில் மூழ்கினார் தனலஷ்மி. ‘போட்டில தோத்தப்புறம் போர்வையை மூடிக்கிட்டீங்களே.. வீடு இருட்டாயிடுச்சா’ என்று தனத்திற்கு இன்னொரு குண்டூசியையும் பரிசாக வழங்கிய கமல் “அடுத்த வார தலைவராவது பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும்’ என்று அறிவுரை சொல்லி பிரேக்கில் சென்றார்.

“இங்க ஃபேவரிட்டிஸம் நிறைய இருக்கு. நான் தலைவரானா நிறைய பிளான் வெச்சிருக்கேன்” என்று தனலஷ்மிக்கு அடுத்தபடியாக அசிமும் கனவில் இறங்கி விட்டார். “நீ கலக்கு மச்சான்’ என்று மணி சொல்ல, “மாத்தி மாத்தி தலைவர் வரணும்.. அரைச்ச மாவை அரைக்க வேணாம்’ என்றார் ஜனனி. (முயல் குட்டில்லாம் பன்ச் டயலாக் பேசற அளவுக்கு நெலைமை ஆயிடுச்சே?!)

‘ஓப்பன் நாமினேஷனாவது நியாயமா நடந்ததா?’

பிரேக் முடிந்து திரும்பிய கமல் “சரி.. நீதிமன்ற டாஸ்க்லதான் நியாயம் இல்ல. ஓப்பன் நாமினேஷன்லயாவது நீதி இருந்ததா?” என்று அடுத்த பஞ்சாயத்திற்கான விதையை உற்சாகமாகப் போட்டார். “சேஃப் கேம் ஆடினாங்க சார்.. வாக்குவாதமே நடக்கலை. ஒரு துளி ரத்தம் கூட சிந்தலை” என்று கமலை விடவும் உற்சாகமாக சாட்சியம் சொன்னார் அசிம். அதையே குறைவான சுருதியில் விக்ரமனும் ராமும் சொன்னார்கள்.

‘இங்க டீம் ஃபேவரிட்டிஸம் இருக்கு சார்.. சிலர்தான் ஒழுங்கா குத்தறாங்க. க்வீன்சி, ஆயிஷா, மைனா, ராபர்ட், ரச்சிதா, கதிர், ஜனனி போன்றவங்கள்லாம் சேஃப் கேம் ஆடி அவங்களுக்குள்ளேயே குத்தாம விடறாங்க' என்று அசிமின் உற்சாகமான சாட்சியம் நீண்டது. சம்பந்தப்பட்டவர்களை எழுப்பி விளக்கம் கேட்ட கமல் “கன்ஃபெஷன் ரூம்லயும் இந்தப் பெயர்களைத்தான் சொல்லியிருப்பீங்களா?” என்று மடக்க ‘இல்லை’ என்று சிலர் நேர்மையாக ஒப்புக் கொண்டார்கள். இன்னமும் சிலர் ‘காரணங்களை இன்னமும் வலுவாக முன்வைத்திருப்போம்’ என்று மழுப்பினார்கள்.

‘சரி. அந்தக் காரணங்களை இப்போ சொல்லுங்களேன்.’ என்று கமல் உசுப்பேற்ற ரச்சிதா மற்றும் க்வீன்சி மீது ரணகளமான தாக்குதலை நிகழ்த்தினார். ‘சமைக்கறது டியூட்டிதான். காம்படிஷன் இல்ல.. ரச்சிதா சேஃப் கேம் ஆடறாங்க. க்வீன்சி க்ளீன் பண்ணி பார்த்ததே இல்லை. கேட்டா அலர்ஜின்றாங்க.. குளிக்கும் போது தண்ணி படாதா.. டாய்லெட் க்ளீனிங்கை அவாய்ட் பண்ணுவாங்க.. வீட்ல கிடைக்கற செல்லத்தை இங்க எதிர்பார்க்கக்கூடாது” என்றெல்லாம் இறங்கி அடித்தார் அசிம். ஆனால் இப்படிப்பட்ட அதிர்ச்சி வைத்தியமெல்லாம் சமயங்களில் அவசியமாகத்தான் இருக்கிறது.

பிக் பாஸ் 6 நாள் 48: க்வீன்சி
பிக் பாஸ் 6 நாள் 48: க்வீன்சி

‘ரெண்டு சோப்பிற்கும் கெமிக்கல் வித்தியாசம் இருக்குது.. க்ளவுஸ் தந்தா பண்ணுவேன்’ என்று க்வீன்சி விளக்கம் அளித்தாலும், இதை முன்பே கேட்டு வாங்கி தன் பணியைச் செய்திருக்கலாம். ‘ரச்சிதா ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷனில் சேஃப் கேம் ஆடுகிறார்’ என்கிற புகார்கள் தொடர்ச்சியாக வருவதைக் கேட்டு ரச்சிதா முகம் சுளித்தார்.

அப்படிப்பட்ட முகமூடியை ரச்சிதா அணிந்திருக்கிறாரா அல்லது அவரது இயல்பே அப்படித்தானா? ஏனெனில் ஒருவர் நீண்ட காலத்திற்கு நடிக்க முடியாது. அதற்கு நிறைய பயிற்சியும் மனக்கட்டுப்பாடும் தேவை. உளவுத்துறை போன்றவற்றில் பணிபுரிபவர்களுக்குத்தான் அந்தத் திறமை இருக்கும். இந்த டாஸ்க்கின் இறுதியில் அசிம் காப்பாற்றப்பட்ட செய்தியை தெரிவித்து இடைவேளைக்கு சென்றார் கமல்.

‘மச்சான். இந்த வீட்ல ரெண்டு டீம் இருக்கு’ என்று கதிரவனிடம் சொன்னபடியே அசிம் கடந்து போக, Pampering பற்றி அசிம் சொன்ன புகாரால் துயர முகத்துடன் அமர்ந்திருந்தார் க்வீன்சி. “என்னால ஒருத்தரை கஷ்டப்படுத்தி ஜெயிக்க முடியாது” என்று அவர் அனத்த “அப்படித்தான் இருக்கும். சமாளிப்போம். மக்களை நம்பு” என்று ஆறுதல் சொன்னார் ஆயிஷா. ‘அசிம் மட்டும் டீம்ல இல்லையாமா?’ என்று உண்மையைப் போட்டு உடைத்தார் மைனா. அசிமும் டீம் பாலிட்டிக்ஸை பின்பற்றுவர்தான். என்னவொன்று சமயத்திற்கு ஏற்ப டீம் ஆட்கள்தான் மாறிக் கொண்டேயிருப்பார்கள்.

‘தீர்ப்புகளில் நியாயம் இருந்ததா, இல்லையா?’

பிரேக் முடிந்து திரும்பிய கமல் “ஸ்டோர் ரூம்ல சில பொருட்கள் இருக்கு.. நீதிமன்ற டாஸ்க்கில் தீர்ப்புகள் ‘சிறந்த வாதம்’ என்கிற அடிப்படையில்தான் வழங்கப்பட்டன ஆனால் நியாயமான தீர்ப்புகள் வந்ததா? அதைப் பத்தி பேசுவோம்.. ‘நியாயம்’ என்றால் பச்சை அட்டையைக் காட்டுங்க.. ‘நியாயமற்றது’ என்றால் சிவப்பு’ என்று டாஸ்க்கின் விதியை விளக்கினார் கமல்.

முதலில் எழுந்த அமுதவாணன் ‘வில் அம்பு வழக்கில் இல்லை என்று தீர்ப்பு வந்தது. ஆனால் விக்ரமன் மீதும் தவறில்லைன்னு சொல்லிட்டாங்க' என்றார். இதில் மெஜாரிட்டியாக ‘நியாயமற்றது’ என்கிற சிவப்பு போர்டு காட்டப்பட்டது. அடுத்ததாக அசிம் ஆப்பிள் திருடிய வழக்கு, சாவி வழக்கு, ராம் ஆடை வழக்கு போன்றவற்றிலும் மக்கள் கருத்து சொன்னார்கள். ‘ராமின் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று துணிச்சலாக சொன்னார் ஆயிஷா.

பிக் பாஸ் 6 நாள் 48: ஆயிஷா
பிக் பாஸ் 6 நாள் 48: ஆயிஷா

“ஏற்கெனவே சொல்லியிருக்கேன். நல்ல, தரமான நகைச்சுவை என்பது கிண்டல் செய்யப்படுகிறவர்களும் இணைந்து சிரிப்பது போன்று இருக்க வேண்டும். அதுதான் அழகான நகைச்சுவை. அதில் நாசூக்கான விமர்சனமும் இருக்கும்’ என்று கமல் சொன்னது அமுதவாணன் போன்றவர்களுக்கான சரியான குட்டு. ராமின் வழக்கு ஜாலியாகப் போய் விட்டாலும் அது சார்ந்த கிண்டல்களால் அவர் அடைந்த மனக்காயம் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

அடுத்ததாக ஜனனி – விக்கிரமன் சம்பந்தப்பட்ட ‘செந்தமிழ்’ வழக்கு பற்றி விசாரித்தார் கமல். இது ஒரு உருப்படியில்லாத வழக்கு என்பதை ஏற்கெனவே விரிவாக பார்த்து விட்டோம். “அந்த டாஸ்க் தொடர்பானது என்னும் போது ‘செந்தமிழ்’ என்பது தானாகவே புரிந்து விடும்’ என்று க்வீன்சி சொன்ன போது பார்வையாளர்களின் கைத்தட்டல் கிடைத்தது.

கடைசியாக கதிரவன் வழக்கு பற்றி விசாரித்த கமல் ‘அது வழக்கே இல்லை. கழுவுற மீன்ல நழுவற மீனா இருக்காதீங்க” என்று கதிரவனுக்கு உபதேசிக்க அதற்கும் அசட்டுச் சிரிப்பைத் தந்தார் கதிரவன். அவர் காப்பாற்றப்பட்ட தகவலைச் சொல்லி பிரேக்கிற்கு சென்றார் கமல்.

‘இறங்கி ஆடுங்க. இல்லைன்னா வெளியே வாங்க’

‘இது வரை வழக்கே பதிவு செய்யாதவர்கள் யார்?’ என்பதுதான் பிரேக் முடிந்து திரும்பிய கமல் முன்வைத்த கேள்வி. ரச்சிதா, ராபர்ட், ஷிவின், க்வீன்சி மற்றும் ஆயிஷா ஆகியோர் எழுந்து நின்றார்கள். ஆளாளுக்கு ஒவ்வொரு காரணங்களைச் சொல்ல ‘டாஸ்க்கோட கிளைமாக்ஸ்ல செமயா அசத்திடலாம்னு காத்திருந்தேன். அதுக்குள்ள அது முடிஞ்சு போச்சுன்னு சொல்லிட்டாங்க’ என்று காமெடி செய்தார் ராபர்ட்.

சிலர் ‘வழக்கு போடுமளவிற்கு எனக்குப் பிரச்சினை இல்லை. நானே அதை தீர்த்துப்பேன்’ என்பது போல் சொல்ல ‘டாஸ்க் என்று வரும் போது அதில் உங்களின் பங்களிப்பு இருக்கணும் இல்லையா?” என்று கமல் கேட்ட கேள்வி முக்கியமானது. “எனக்கு வழக்கு இல்ல. ஆனா வேற இரண்டு போ் வழக்கு போட்டிருந்தா நல்லாயிருக்கும்னு நெனச்சேன்.” என்று ஷிவின் சொல்ல, அதைப் பிடித்துக் கொண்ட கமல் ‘சரி.. அதைப் பத்தி பேசுவோம். வேற எந்த இருவருக்குள் வழக்கு நிகழ்ந்திருக்க வேண்டும்?’ என்று தூண்டில் போட்டார்.

பிக் பாஸ் 6 நாள் 48
பிக் பாஸ் 6 நாள் 48

அப்பா என்கிற பாசத்தை வைத்துக் கொண்டு க்வீன்சிக்கு சாதகமாக நிறைய விஷயங்களை ராபர்ட் செய்கிறார் என்கிற புகார் நிறைய வந்தது. இதில் ரச்சிதாவையும் இணைத்துக் கொண்ட விக்ரமன் ‘ஒரு ஃபேமிலி மாதிரி இருக்காங்க’ என்று விக்ரமன் சொல்ல ‘அய்யோ. அந்தக் குடும்பத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ என்று மறுத்தார் ரச்சிதா. சமையல் ஏரியாவை கைப்பற்றியிருக்கும் ரச்சிதா மீதும் புகார்கள் வந்தன. ‘தயிர் தரமாட்டேன்றாங்க’ என்பதை மீண்டும் பாட்டாக பாடினார் ஏடிகே. ‘கிச்சன் க்வீன்’ என்கிற அடைமொழியுடன் புகார் சொன்னார் அசிம்.

‘நீங்கள்லாம் ஆட்டத்துல இருக்கறவங்க.. களத்துல இறங்கி ஆடித்தான் ஆகணும். பூசி மெழுகக்கூடாது. இல்ல.. பார்வையாளனா மட்டுமே இருப்பேன்னா.. வெளியே வந்து உக்காந்திடுங்க..” என்று வாழைப்பழத்தில் கடப்பாறையை ஒளித்து வைத்த உபதேசம் செய்த கமல்.. ‘சரி. நாளைக்குப் பேசுவோம்’ என்று விடைபெற்றுக் கொண்டார்.

ஓகே.. இந்த வார எவிக்ஷன் யார்? ‘இன்னமும் கொஞ்ச நாள்தான் இருப்பேன்’ என்று அனத்திக் கொண்டிருந்த தாடிக்காரர்தான் வெளியே செல்கிறாராம். ‘எவிக்ஷன் சமயத்தில் மட்டும் சற்று கண்கலங்கினால் போதும். இனிமே இந்த இம்சை இருக்காது.. ஹப்பாடா!’ என்று ரச்சிதா இனி நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடும்.