‘அதிர்ஷ்டம் தைரியமானவர்களுக்கு சாதகமாக இருக்கும்’ (Fortune favors the brave) என்கிற பொன்மொழியுடன் இந்த எபிசோடை துவக்கினார் கமல். உண்மையான விஷயம் இது. ‘ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட முடியாது’ என்று இதை லோக்கலாக மொழிபெயர்க்கலாம்.
வெற்றியின் உச்சியை அடைந்தவர்களின் பெரும்பாலோனோர் கதையைப் பார்த்தால் துணிச்சலான முடிவை நோக்கி அவர்கள் நகர்ந்ததால்தான் வெற்றி சாத்தியமாகியிருக்கும். பிக் பாஸ் வீட்டில் சிலர் சேஃப் கேம் ஆடுகிறார்களா என்றால் ஆம் என்பதே பதில். உதாரணத்திற்கு தட்டுக்களை கழுவி வைக்காமல் இருக்கும் கெட்ட வழக்கம் குறித்து விழிப்புணர்வு வழக்கு இடத் தெரிந்த கதிரவனுக்கு, ‘யார் அந்தத் தவறைச் செய்தது?’ என்பதைக் கறாராகச் சொல்ல முடியவில்லை. சாட்சியங்களின் துணையைத் தேடுகிறார். மற்றவர்களும் இதே போல் மழுப்புகிறார்கள். இந்த ஐம்பது நாளில் யார் யார் அதைச் செய்வார்கள் என்று கூடவா தெரியாது? இதைப் போலவே ராஜா – ராணி டாஸ்க்கில் அத்தனை களேபரம் நடந்த போது ராஜா தனது அதிகாரத்தை உபயோகப்படுத்தவேயில்லை. மாறாக கிரீடத்தை கழற்றி வைத்து விட்டு சந்தோஷமாக காட்டுக்குப் போகிறார். இது போன்ற ராஜா இருந்தால் எந்த தேசம் உருப்படும்?. இந்த விஷயங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

பிக் பாஸ் ஆட்டம் என்பது இதர விளையாட்டுக்களைப் போல் துல்லியமாக வரையறுத்த விதிகள் மற்றும் பயிற்சிகளுடன் கூடிய ஆட்டமல்ல. இந்த நிகழ்ச்சியின் அடிப்படையைப் புரிந்து கொண்டு ஒருவர் தாமாகத்தான் அதற்கேற்ப முன்னேற வேண்டும். ஆனால் சிலர் அடிப்படையிலேயே சில இயல்பான குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். அவற்றிலிருந்து பெரிதும் அவர்களால் மீற முடியாது. பல்வேறு குணாதிசயங்களின் கலவையைக் கொண்ட வீடு மட்டுமே கவனிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். அசிம் – தனலஷ்மி போன்றவர்களின் சண்டை, காரசாரமான மசாலா மாதிரிதான். மசாலாவே சாப்பாடு ஆகி விடாது. ‘இவங்களே பாம்.. வைப்பாங்களாம். அப்புறம் இவங்களே எடுப்பாங்களாம்’ என்கிற வசனம் மாதிரி, பிக் பாஸே சில நெருக்கடிகளை ஏற்படுத்தி விட்டு, ‘ஏன் அப்படிச் செஞ்சே.. ஏன் இப்படிச் செய்யலே?” என்று பிறகு விசாரணை செய்வதெல்லாம் ஒரு வகையான வணிக விளையாட்டு. ஆனால் அடிப்படையான விஷயம் ஒன்றுண்டு. ஒரு விளையாட்டின் விதிகளை, நுட்பங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை ஒருவர் உந்தித் தள்ளி சமநிலையுணர்வோடும் நேர்மையோடும் முன்னேற வேண்டும். அத்தகைய ஸ்போர்டிவ்னஸ் உள்ள ஆசாமியை மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
நாள் 49-ல் நடந்தது என்ன?
ஸ்போர்ட்ஸ் கோச் மாதிரியான ஆடையில் உள்ளே நுழைந்த கமல் “ஐம்பதாவது எபிசோடை நெருங்கி விட்டோம். ஆனால் இவர்களுக்கு ‘துணிச்சலா ஆடுங்க’ என்பதை இன்னமும் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே நாளை கடத்திலாம்ன்னு பார்க்கறாங்க” என்று தலையில் அடித்துக்கொண்டு நொந்தபடியே அகம் டிவி வழியாக உள்ளே சென்றார்.
“நீங்க தயங்கிட்டே இருந்தா நகர முடியாது. சர்க்கஸ் ஆட்டத்தின் பார் விளையாட்டில் ஒரு கட்டத்துல கீழே இருக்கற நெட்டை எடுத்துடுவாங்க. அத்தகைய பதட்டம் இருந்தால்தான் பார்வையாளர்களுக்கு சுவாரசியம் இருக்கும். ஐம்பதாவது நாளுக்கு வந்துட்டோம். இப்பவாவது தைரியமாக ஆடுங்க” என்று உசுப்பேற்றிய கமல் அடுத்த விவகாரத்தை ஆரம்பித்தார்.

லக்ஸரி பட்ஜெட்டில் ‘அண்டர் த டேபிள் டீலிங்’ வைத்த ஆசாமிகளை எழுப்பி நிற்க வைத்து ‘இந்த சீசனோட தனித்துவமே லக்ஸரி பட்ஜெட்டை தனியா ஆடறதுதான். அதையே மீறிடறீ்ங்க. டேபிள் மேல சாப்பாட்டை வெச்சு சாப்பிடறதுதான் பார்க்க நல்லாயிருக்கும். அடில வெச்சு சாப்பிடக்கூடாது. அதைத்தான் நான் பின்பற்றுகிறேன். உங்களுக்கும் அதையே சொல்றேன்.” என்று விளையாட்டில் நோ்மை பற்றி உபதேசித்தார். அது கமல் முன்னிலையில் விசாரணை நாளாக இருந்தாலும் கூட ‘எரும.. எரும.. எல்லாம் உன்னாலதான்..’ என்று மணிகண்டனை சபையிலேயே திட்டும் மைனாவின் இயல்பு சமயங்களில் சுவாரசியமாகவும் பெரும்பாலும் அதிகப்பிரசங்கித்தனமாகவும் இருக்கிறது.
‘க்ரூப்பிஸம் இருக்கிறதா.. இல்லையா?’
‘முருகேசா.. பேய் இருக்கா... இல்லையா.. அதுக்கான அறிகுறிகள் என்ன?’ என்கிற காமெடி வசனம் மாதிரி ‘இந்த வீட்டில் க்ரூப்பிஸம் இருக்கா.. இருக்குன்றவங்க தனியா உக்காருங்க. இல்லைன்றவங்க இன்னொரு அணியா உக்காருங்க. உங்களுக்குள்ள விவாதம் ..நடக்கணும்.. எனக்கும் தெளிவு வேணும்” என்று சாய்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார் கமல்.
மனித குணாதிசயத்தின் அடிப்படையில் ஒன்று ‘குழு மனப்பான்மை’. இரண்டு நபர்களைத் தாண்டி மூன்றாவது நபர் இணையும் போது உத்தரவாதமாக அங்கு குழு மனப்பான்மை உருவாகி விடும். இதைத் தவிர்க்கவே முடியாது. நோ்மையானவர்கள் மட்டுமே இதிலிருந்து விலகியிருப்பார்கள். எனவே பிக் பாஸ் வீட்டில் ‘க்ரூப்பிஸம்’ இல்லை என்று சொல்வது அப்பட்டமான புளுகு. ‘நான் க்ரூப்பில் இல்லை’ என்று வாதிடும் அசிம் கூட குழு மனப்பான்மையில் இருப்பவர்தான். அதை வளர்ப்பவர்தான். ‘பாபநாசம்’ படத்தின் டெக்னிக் மாதிரி, சில விஷயங்களை மற்றவர்களின் மூளைக்குள் திணித்துக் கொண்டேயிருப்பார். சூழலுக்கு ஏற்ப தன் நண்பர் குழாமை மாற்றிக் கொண்டேயிருப்பார்.

‘க்ரூப்பிஸம் இருக்கிறது’ என்கிற அணியில் ஏடிகே, ராம், விக்கிரமன், ரச்சிதா, ராபர்ட், அமுதவாணன், தனலஷ்மி, ஜனனி, அசிம் ஆகியோர் இருந்தனர். இதில மற்றவர்களைக் கூட ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளலாம். ராபர்ட், அமுதவாணன், ஜனனி போன்றவர்களை ஏற்கவே முடியாது. மற்றவர்கள் ‘க்ரூப்பிஸம் இல்லை’ என்கிற அணியில் இருந்தார்கள். எதிர் அணியிலும் பெரும்பாலானவர்கள், ‘நீ ஊதவே வேணாம்’ என்கிற ரேஞ்சில் இருப்பவர்கள்தான். குறிப்பாக மைனா, மணிகண்டன் போன்றவர்கள். என்னதான் அவர்கள் மறுத்தாலும், அவர்களுக்குள் இருக்கிற நட்பே தன்னிச்சையான க்ரூப்பிஸத்தை உருவாக்கி விடும். பல சமயங்களில் அவர்களாலேயே இதை உணர முடியாது.
‘வாக்குகள் அதிகமாகப் பெற்றும் கூட மணி செய்த மறுவாக்கெடுப்பு காரணமாக தான் நீதிபதியாக ஆக விடாமல் தடுக்கப்பட்ட சம்பவத்தை’ முன்வைத்து இந்த விவாதத்தை விக்ரமன் துவக்கி வைத்தார். ஷிவின் அதை மறுக்க “பத்து போ் இருந்தாதான் க்ரூப்-ன்னு கிடையாது. இரண்டு பேர் இருந்தாலும் அது க்ரூப்தான்’ என்று விக்ரமன் மடக்கியது அருமையான பாயிண்ட். “இணக்கமானவர்களிடம் நட்பு கொள்வது வேறு. மற்றவரின் முடிவில் செல்வாக்கைச் செலுத்தும் விஷயம் வேறு. அங்கு கறாரான சுயசிந்தனை அவசியம்’ என்று க்ரூப்பிஸத்தின் அடிப்படையை துல்லியமாக வரையறுத்தார் ஏடிகே.
‘பிக் பாஸ்..இப்பத்தான் உங்க பிரச்சனை புரியுது’ – நக்கலடித்த கமல்
ஒரு கட்டத்தில் சந்தைக்கடை மாதிரி இவர்கள் விவாதம் செல்ல 'பிக் பாஸ்.. இப்பத்தான் உங்க பிரச்சினை புரியுது’ என்று மேலே பார்த்து நக்கலடித்தார் கமல். “ராபர்ட்.. உங்களை வெச்சுதான் விவாதமே நடக்குது.. நீங்க தப்பான சைடுல உக்காந்திருக்கீங்க” என்று கமல் நையாண்டியாக சொன்னதும் ‘இந்த வீட்டில் எப்படி க்ரூப்பிஸம் இயங்குகிறது?’ என்று உரத்த குரலில் அசிம் சொன்னதை எதிர் அணியினர் முகச்சுளிப்புடன் மறுத்தார்கள். “அவங்க சுவரு கட்டி உக்காந்து பேசுவாங்க. நாம உள்ள போகவே முடியாது” என்று அசிம் சொன்னது ஒருவகையில் உண்மைதான். அசிமின் கருத்தை உறுதியாக மறுத்தார் மணிகண்டன். ‘அப்படில்லாம் இல்லை. நீ அப்படி நெனச்சிக்கிட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது. ஐ டோண்ட் கோ்’ என்று நொந்து போய் எரிச்சலுடன் சொன்னார் மைனா. ஆயிஷாவும் ஹைடெசிபலில் கலந்து கொள்ள விவாதம் இரைச்சலானது.

‘உங்க நட்பைச் சந்தேகிப்பதோ, பிரிப்பதோ என் நோக்கம் இல்லை. குழு மனப்பான்மை விளையாட்டை பாதிக்கக்கூடாது. ஆனால் பாதித்திருக்கிறது என்பதால்தான் இந்த விவாதம். க்ரூப்பிஸம் இருப்பதால்தான் இங்கே இத்தனை காரசாரமான உரையாடல்கள் நடைபெற்றன. அதுவே அதற்கு ஆதாரம். க்ருப்பிஸம் இல்லைன்னு சொல்றவங்க மத்தியிலேயே அது இருக்கு” என்ற கமல் “யார் யாரெல்லாம் தனியா விளையாடறது.. சொல்லுங்க பார்க்கலாம்” என்றார். சிலர் தன்னையே சொல்லிக் கொண்டாலும் தனியாக விளையாடும் நபராக ‘ஷிவின்’ பெயர் பல முறை சொல்லப்பட்டது. விக்ரமன், ரச்சிதாவின் பெயர்களும் சொல்லப்பட்டன. அசிமை விக்ரமன் மட்டுமே சொன்னார்.

‘அப்படின்னா.. க்ரூப்பா விளையாடறவங்க தவிர.. தனியா விளையாடறவங்களும் இருக்காங்கன்றது ப்ரூவ் ஆகியிருக்கு’ என்ற கமல் பிரேக்கில் செல்ல ‘க்ரூப்பிஸம் என்றால் என்ன, 50 வார்த்தைகளுக்கு மிகாமல் பதில் எழுதுவும்’ என்கிற பத்து மார்க் கேள்விக்கு விடை எழுதுவது போல ஆளாளுக்கு வரையறை சொல்ல ஆரம்பித்தார்கள். “நீங்க எல்லோரும் ஒண்ணா உக்காந்ததே க்ரூப்பிஸம்தான்’ என்று தனலஷ்மி சொன்னதுதான் ஹைலைட் காமெடி. “அய்யோ.. கமல் சார்தான் ரெண்டு அணியா உக்காரச் சொன்னாரு’ என்று தலையில் அடித்துக் கொண்டார் ஷிவின். ‘ரச்சிதா சர்க்கரை டப்பாவை ஒளித்து வைத்தது பற்றி அசிம் கடுமையான புகார் சொல்ல அது தொடர்பான உரையாடலும் நிகழ்ந்தது.
‘வீட்டுக்குள்ளே பார்வையாளர் யாரு?’ – அடுத்த டாஸ்க்
பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘ஸ்மைலி’ அட்டைகளை ஸ்டோர் ரூமில் இருந்து கொண்டு வரச் சொன்னார். ‘பார்வையாளராக நின்று விளையாடும் நபர் யார்?’ என்று ஒவ்வொருவரும் தேர்வு செய்ய வேண்டும். அவரின் தலையில் ஸ்மைலி அட்டை ஒட்டப்படும். இதில் ராபர்ட்டின் தலையில் மெஜாரிட்டியான ஸ்மைலிக்கள் முளைத்தன. அடுத்த வரிசையில் ரச்சிதாவும், க்வீன்சியும் வந்தார்கள்.
“எனக்கு சத்தம்னா ஆகாது. அப்பா நினைவு வந்துடுச்சு. லோ ஆயிட்டேன்' என்று சரணாகதி அடைந்தார் ராபர்ட். “என் இயல்பே அப்படித்தான் சார். நான் சேஃப் கேம் ஆடலை. எனவே இதை முழுமையா ஒப்புக்க மாட்டேன்” என்று மறுத்தார் ரச்சிதா. ‘கத்தி கத்தி சண்டை போட எனக்குப் பிடிக்காது’ என்று க்வீன்சி சொல்ல ‘கத்தி சண்டை பிடிக்கலைன்னா.. துப்பாக்கில போடுங்க’ என்று கமல் ஜோக் அடிக்கவில்லை.

மாறாக ‘இந்த கேம் சண்டை போடறதுன்ற மாதிரி புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்களா?” என்று சரியான கேள்வியை முன்வைத்தார். ‘ஒருத்தர் மகள்ன்னு பாசம் காட்டும் போது எப்படி அதைத் தடுக்க முடியும்?’ என்று க்வீன்சி சொன்னதும் சரியான விஷயம்தான். ஆனால் முடிவுகளில் ‘அப்பா செல்லம்’ நுழைவதை அனுமதிக்கக் கூடாது என்பதற்குப் பெயர்தான் ஸ்போர்ட்டிவ்னஸ்.
“கோர்ட் டாஸ்க்ல நல்லா பேசினீங்க.. வாய்ப்பு வந்தாதான் செயல்படுவீங்களா.. நீங்களா அதைத் தேடிப் போகணும்.. ஒரு விளையாட்டில் பங்கேற்பு இருக்கணும்... இல்லைன்னா.. தலைல இருக்கற ஸ்மைலியின் சுமை கூடிடும்” என்று க்வீன்சிக்கு மட்டுமல்லாது பொதுவான உபதேசமாகவும் சொல்லி விட்டு பிரேக்கில் சென்றார் கமல்.
சர்காஸ்டிக் கேள்விகளால் அசத்திய பார்வையாளர்கள்
“ஐம்பதாவது எபிசோட் என்பதால் பார்வையாளர்கள் உங்களிடம் கேள்வி கேட்பார்கள்” – பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தந்த ஜெர்க் இதுதான். சீசனுக்கு சீசன் பார்வையாளர்களும் முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள் போல. எனவே வழவழவென்று அல்லாமல் சர்காஸத்துடன் கேள்விகள் வரத் துவங்கின.
“ரச்சிதா, மைனா. உங்க paid holidays எப்படியிருக்கு?”.. என்று ஆரம்பக் கேள்வியே அதிரடியாக இருந்தது. ரச்சிதா சங்கடத்துடன் பார்க்க, மைனாவோ உரக்க சிரித்து அதிர்ச்சியை மழுப்பினார். “என்னோட கேமைத்தான் நான் ஆடறேன். இன்னமும் அதிகமா எதிர்பார்த்தா அதற்கேற்ப மாத்திக்கறேன்” என்று சாமர்த்தியமாக பதில் சொன்னார் ரச்சிதா. “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலுக்கு ஆடுங்க” என்பது அடுத்த நேயர் விருப்பம். வேறு வழி? அனைவரும் எழுந்து கொண்டு கைகோர்த்து ஆட, கமலால் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை. “அவங்க சொல்றது புரியுதா?” என்கிற கேள்வி வேறு. புரியாமல் என்ன?!

“அசிம்.. தனலஷ்மி.. நீங்க ரெண்டு பேரும் இல்லைன்னா.. இந்த வீடு வேஸ்ட்டுன்னு தோணுது” என்பது அடுத்த அபிப்ராயம். இதைக் கேட்டதும் இருவரும் மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு ‘அப்டில்லாம் இல்லீங்’ என்று மறுத்தார்கள். வெறுமனே சண்டையை மட்டும் ரசிக்கும் பார்வையாளர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்பதையே இந்தக் கேள்வி காட்டுகிறது. நம்முள் படிந்திருக்கும் எதிர்மறைத்தன்மை அப்படி. “எப்பவுமே சண்டை இல்லை. ஆரோக்கியமான விவாதம்தான் நடக்கும்” என்று முழு புளியோதரையில் லெக்பீஸை மறைத்தார் அசிம்.
அடுத்த கேள்வி அட்டகாசமானது. ‘நச்’சென்ற கேள்வி அது. “வீட்டுக்குப் போகணும்.. வீட்டுக்குப் போகணும்..ன்னு சிலர் சொல்லிட்டு இருக்காங்க.. அவங்க இப்ப தயாரா இருக்காங்களா?” என்று ஒருவர் கேட்டது பலருடைய மனதில் இருந்த கேள்வியாக இருக்கும். ‘தம்பி.. கேட்டைத் திறடா..” என்கிற வேட்டையாடு விளையாடு ராகவன் சொல்லும் கெத்துக்கு இணையான கேள்வி இது.

‘எப்படா வெளிய அனுப்புவாங்க’ என்று காத்திருக்கும் ராபர்ட் மாஸ்டர் மட்டும் தயாராக கையைத் தூக்கினார். எப்பவும் இந்தக் கேள்வியோடு சுற்றும் தனலஷ்மி கம்மென்று இருப்பதைப் பார்த்து கமல் உசுப்பி விட “மன்னிச்சுடுங்க. மக்களே.. இனிமே அப்படி அடம் பிடிக்க மாட்டேன்” என்று வெட்கப்பட்டார் தனலஷ்மி. பல சமயங்களில் ஆத்திரப்பட்டு கத்தும் தனலஷ்மி, இப்படி திடீரென்று அநியாயத்திற்கு வெட்கப்படும் போது எதை நம்புவது என்றே தெரியவில்லை. சும்மா இருந்த அமுதவாணனையும் கமல் கிளப்பி விட “ஐயா. நானா.. ஆமாங்க.. மறந்துட்டேன்.. அது ஏதோ கோவத்துல சொன்னது” என்று சமாளித்தார்.
‘மணிகண்டன்.. மைனா.. உங்க நட்பு பார்த்தா பொறாமையா இருக்கு. தளபதி ரஜினி –மம்முட்டியையும் மிஞ்சிட்டிங்க..” என்று கிண்டலடித்த ஒரு பார்வையாளர், ‘இது ரொம்ப கிரிஞ்ஞா இருக்கு’ என்று சொன்னதும் ‘கிரிஞ்சுன்னா.. என்னங்கய்யா?’ மோடிற்கு சென்றார் மைனா. ‘இனிமே சண்டை போடறோம்” என்று இருவரும் உறுதி ஏற்றுக் கொண்டார்கள். ‘அவங்க சண்டை போடச் சொல்லலை. நானும் அப்படி சொல்ல மாட்டேன்’ என்று தெளிவுப்படுத்தினார் கமல்.
‘ஐயாமாரே.. பார்த்து கேள்வி கேளுங்க.. நான் ரொம்ப பயந்த சுபாவம்” என்று முன்ஜாமீன் வாங்கினார் ஜனனி. ‘நான் நெனச்சா. அதுல ஜெயிடுச்சுடுவேன்.. நான் நெனச்சா.. இதுல ஜெயிச்சிடுவேன்னு சொல்றீங்க.. அதையெல்லாம் எப்ப நெனப்பீங்க?” என்று நக்கலான கேள்வி வந்தவுடன் ஜெர்க் ஆன ஜனனி, ‘நாளைல இருந்து நெனக்கறேன்” என்று மிகவும் சுமாரான பதிலைச் சொன்னார். இந்தச் சமயத்தில் கமல் அடித்த ஜோக் அற்புதம்.

‘கதிரவன்... வெறும் அனுபவத்திற்காகத்தான் இங்க வந்திருக்கீங்க போல..’ என்று அடுத்த கேள்வி வந்தவுடன் தன்னுடைய டிரேட் மார்க் அசட்டுச் சிரிப்பை சிரித்தார் கதிரவன். அடுத்த கேள்வி அமுதவாணனுக்கு. “ஆரம்பத்துல காமெடியா இருந்தீங்க. இப்ப கோபமா இருக்கீங்க.. ஏன்.” என்று கேட்கப்பட்டதற்கு ‘இனிமே மிக்ஸ் பண்ணி ஆடறேன்” என்று ஜனனியைப் போலவே சுமாரான பதிலைச் சொன்னார் அமுது. அமுதவாணன் காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொல்லி பிரேக்கில் சென்றார் கமல்.
பாராட்டு கிடைத்தால் கூட அதில் ‘உள்குத்து’ இருக்குமோ என்று சந்தேகப்படும் அளவிற்கு ஆகி விட்டார் தனலஷ்மி. “வீட்ல இருக்கக்கூடாதுன்னு சொல்றாங்களா?” என்று அவர் சோக மூடில் பயணிக்க, ‘ஒவ்வொருத்தருக்கும் ஹேட்டர்ஸூம் இருப்பாங்க.. சப்போர்ட்டர்ஸூம் இருப்பாங்க” என்று சரியான பாயிண்டைச் சொன்னார் ஷிவின்.
மணிகண்டனுக்கு கிடைத்த எலெக்ட்ரிக் ஷாக்
பிரேக் முடிந்து வந்த கமல் எவிக்ஷன் கார்டை விசிறிக் கொண்டே வந்தார். ‘நாமினேட் ஆனவங்க ஒண்ணா உக்காருங்க’ என்கிற வழக்கமான வசனத்தை அவர் சொல்ல, மணிகண்டன், ராம், ராபர்ட் ஆகிய மூவரும் நெருங்கி அமர்ந்தார்கள். ‘யார் முதலில் காப்பாற்றப்படுவார்?’ என்கிற கேள்விக்கு மணிகண்டன் என்று மெஜாரிட்டியாக பதில் வந்தது. ஆனால் ஆச்சரியகரமாக ராம் காப்பாற்றப்பட்டார். மணிகண்டனின் முகத்தில் பீதி தெரிந்தது. “பார்த்தீங்களா.. சிரிச்சிக்கிட்டே நாமினேட் பண்ணீங்க. அது உங்களை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தீங்களா?” என்று விளையாட்டு வினையானதை சொல்லி மணிகண்டனை எச்சரித்தார் கமல்.

ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு ‘மணிகண்டன்’ என்று ஆரம்பித்து கமல் சில விநாடிகள் இடைவெளி விட மைனாவிற்கு கண்கள் விரிந்தன. ‘மணிகண்டன் காப்பாற்றப்பட்டார்’ என்று சொல்லி ‘ராபர்ட்’ பெயர் போட்டப்பட்ட எவிக்ஷன் கார்டை கமல் நீட்டியவுடன்தான் அனைவருக்கும் மூச்சே வந்தது.
‘இனிமே உன்னை மகள்ன்னு கூப்பிடறதை யாரும் தடுக்க முடியாது. இப்பத்தான் மூச்சே விட முடியுது’ என்றபடி ஜாலியாக வீட்டை விட்டு கிளம்பினார் ராபர்ட். எதிர்பார்த்தபடியே க்வீன்சி கண்கலங்க, ரச்சிதா இயல்பாக இருந்தார். ஷிவின் கண்ணீர் விட்டார். “பிக் பாஸ் பதில் சொல்ல மாட்றாரு. கோபமா இருக்காரு போல” என்ற ராபர்ட்டிற்கு ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லி இன்ப அதிர்ச்சி தந்தார் பிக் பாஸ். மெயின் டோர் நகர, அதன் கூடவே நகர்ந்து அசத்தினார் ராபர்ட். பிக் பாஸ் டீமில் புதிதாக வந்து சேர்ந்திருக்கும் ஆசாமிக்கு வேறு வேலையே இல்லை. உடனே ரச்சிதாவின் டைட் குளோசப் வைத்து அழகு பார்த்தார்.
பழங்குடி வீரர்களில் ஒரு மகாவீரர்
பிரேக் முடிந்து திரும்பிய கமல், ‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்தார். இந்த வாரம் அவர் அறிமுகப்படுத்திய புத்தகம் ‘Empire of the Summer Moon’. அமெரிக்கப் பழங்குடி வீரர் பற்றிய நூல். எழுதியவர் S. C. Gwynn. Quanah Parker என்கிற கமாண்டர் பற்றியது. Comanche என்கிற இனக்குழுவைச் சேர்ந்த வீரர் அவர். இவரின் பின்னணி சுவாரசியமானது.
தங்களின் நிலப்பிரதேசத்தை ஆக்கிரமிக்க வந்த ஆங்கிலேயரிடமிருந்து, ஒரு பெண்ணை பழங்குடிகள் கடத்திக் கொண்டு வந்து விடுகிறார்கள். துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள். ஆனால் அங்குள்ள தலைவர், அந்தப் பெண்ணை தன் மனைவியாக்கிக் கொள்கிறார். அதன் மூலம் பிறக்கும் குழந்தைதான் Quanah.

பழங்குடி தந்தைக்கும் வெள்ளைக்கார தாய்க்கும் பிறக்கும் Quanah, வந்தேறிகளை எதிர்ப்பதில் ஒரு மகாவீரராகத் திகழ்கிறார். அங்குள்ள சிறுவர்களை இளம் வயதிலேயே மிகச்சிறந்த குதிரையேற்ற வீரர்களாக மாற்றியதில் இவருக்கு பங்குண்டு. இந்தப் பழங்குடியின் வீரத்தைக் கண்டு எதிரிகளே மலைத்துப் போகும் அளவிற்கு குதிரையேற்றத்தில் அத்தனை சிறப்பாக விளங்குகிறார்கள். Quanah-ன் வாழ்க்கை வரலாற்றையொட்டி எழுதப்பட்ட நூல் இது. திரைப்படமாக வருவதற்குண்டான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
‘சுத்தி நரிக்கூட்டம்’ வெளியே வந்து புறணி பேசிய ராபர்ட்
புத்தகப் பரிந்துரை முடிந்ததும் ‘வாங்க ராபர்ட்’ என்று அவரை வரவேற்றார் கமல். “வேற லெவல் அனுபவம். உள்ள இருந்து பார்த்தாதான் தெரியும். சுத்தி நரிக்கூட்டம்” என்று ஏதோ காட்டிலிருந்து தப்பித்து வந்தவரைப் போல் ராபர்ட் சொல்ல, ‘உள்ள எல்லோரும் நண்பர்கள்ன்னு சொன்னீங்களே?’ என்று கமல் விசாரிக்க ‘ஒரே நண்பர்.. அமுதவாணன். என்னோட மகள் க்வீன்சி.. அவ்வளவுதான்’ என்று ராபர்ட் சொன்ன போது.. அடப்பாவி மனுசா.. ‘அப்ப ரொமான்ஸா சுத்தினதெல்லாம் பொய்யா கோப்பால்’ என்று கேட்கத் தோன்றியது. எல்லோரையும் டார்லிங்.. டார்லிங் என்று உள்ளே அழைத்து வி்ட்டு வெளியே வந்து ‘நரிக்கூட்டம்’ என்று புறணி பேசுவது ரசிக்கத்தக்கதாக இல்லை.

ராபர்ட் தொடர்பான பயண வீடியோ சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்தது. ரொமான்ஸ் காட்சிகளின் இடையில் ராஜா – ராணி காட்சிகளை பிளாக் அண்ட் ஒயிட்டில் சினிமாப்பாடல்களையும் இணைத்து அசத்தியிருந்தார்கள். ‘ரொம்ப எதிர்பார்த்தேன்” என்று சொல்லி ராபர்ட்டை வழியனுப்பினார் கமல். முந்தைய சீசன்களில் வெளியே செல்லும் ஆசாமியிடம் ‘உள்ளே இருக்கும் போட்டியாளர்களைப் பற்றிய’ வில்லங்கமான கேள்விகள் கேட்கப்படும். வெளியில் செல்பவரும் வெளிப்படையாக பதில் சொல்வார் இப்போது இந்தப் பகுதியைக் காணோம்.
“ஐம்பதாவது நாள் என்பதால் கேக் அனுப்பியிருக்கேன். என்ஜாய்'' என்றபடி கமலும் விடைபெற்றுக் கொள்ள ‘ஐய்யா.. கேக்கு.. கேக்கு..’ என்று வழக்கத்திற்கு விரோதமாக கத்திய ஏடிகேவைப் பார்க்க விநோதமாக இருந்தது.
‘பிரெண்ட்ஷிப்பை நீ எப்படி க்ரூப்பிஸம்ன்னு சொல்லலாம்..?” என்று அசிமிடம் மைனா உரத்த குரலில் ஆட்சேபிக்க, அதற்கு அசிம் அளித்த விளக்கத்தையெல்லாம் எழுதினால் விடிந்து விடும். நட்பாக இருப்பதில் தவறில்லை. அது விளையாட்டைப் பாதிக்காமல், செல்வாக்கு செலுத்தாமல் இருக்கிறதா என்பது அவரவர்களின் மனச்சாட்சிக்குத்தான் தெரியும். புறவயமாக இதை நிரூபிக்க முடியாது.