இது பிக் பாஸின் ஐம்பதாவது நாள். உங்களுக்கும் எனக்கும் பரிதாபமான வாழ்த்துகள். இந்த வாரத்தின் தலைவர் அசிம். அதிகாரம் தூள் பறக்குமோ என்று பார்த்தால், இல்லை. நல்ல மாற்றங்கள் தென்பட்டன. திருடனின் கையில் சாவி கொடுத்தால், பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பார்கள். அது போல கோபத்தில் வெடிக்கும் அசிமிடம் பொறுப்பு வந்ததும், மிக நிதானமாக ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்தார்.
ரச்சிதா ஆடை உடுத்தும் விதம் குறித்து ஜனனி அடித்த கமெண்ட் கொடூரமானது. அந்த வீட்டின் குழந்தை என்று ஆரம்பத்தில் இவரைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜனனிதான் ஒரிஜினல் விஷபாட்டிலாக இருப்பார் போலிருக்கிறது. போலவே இன்னொரு உரையாடலில் தனலஷ்மி காட்டிய சைகையும் ரசிக்கத்தக்கதாக இல்லை.
நாள் 50-ல் நடந்தது என்ன?
தான் இருந்த ஏரியா அருகிலேயே ராபர்ட் பெரும்பாலும் உலவிக் கொண்டிருந்ததைப் பற்றி கதிரவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரச்சிதா “இப்படியொரு சூழல்ல.. இப்படியொரு அனுபவம். வீட்ல இருந்துதான் போயிருக்காங்க. நினைப்புல இருந்து இல்ல. ஆனா காமிராவை விடவும் 24x7 பார்த்துட்டே இருந்தது, ஒரு மாதிரியா இருந்தது” என்று சொன்னவர், சட்டென்று “இதை பாசிட்டிவ்வாதான் சொல்றேன்” என்று ஜாக்கிரதையான பின்குறிப்பை இணைத்துக் கொண்டார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் ‘மாஸ்டர் வரும் போதெல்லாம் உங்க எக்ஸ்பிரஷன் ஏன் மாறுது?” என்று தனலஷ்மி கேட்க “மூஞ்சை உர்ருன்னு வெச்சாலாவது அந்தப் பக்கம் போவாரோன்னு எதிர்பார்த்தேன்” என்று விளக்கம் அளித்தார் ரச்சிதா.
ராபர்ட் தன்னிடம் வழிந்து கொண்டேயிருந்ததைப் பற்றி ரச்சிதாவிற்கு சந்தோஷமும் சங்கடமும் ஒருசேர இருந்ததாக யூகிக்கத் தோன்றுகிறது. தன் அழகை அங்கீகாரம் செய்யும் ஆண்களை பெண்களுக்கு உள்ளூற பிடிக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு எல்லைவரைதான் அதை அனுதிப்பார்கள். எனவே சந்தோஷத்தைத் தாண்டி சங்கடமும் ரச்சிதாவிடம் நிறைய இருந்திருக்கிறது. அப்போதே அவர் இதை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கலாம்.
ரச்சிதா பற்றி ஜனனி அடித்த விவகாரமான கமென்ட்:
‘சொய்.. சொய்..’ என்கிற பாடலுடன் நாள் 50 விடிந்தது. ஏறத்தாழ ஒரு கல்யாணத்திற்கான சமையல் பொருட்களை பிக் பாஸ் அனுப்பியிருந்தார். அதில் நிறைய பால் இருந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘மனோ.. கருவாட் வந்திருக்கு' என்பது போல் கத்தி சந்தோஷப்பட்டார்கள்.
‘ஒரு பாக்கெட் பாலை மட்டும் வெளில எடுத்து மொத்தமா காய்ச்சி வெச்சிடலாம். அவங்கங்க பங்கை எடுத்துக்கட்டும்’ என்று ஷிவின் யோசனை சொல்ல “தேவையானப்ப மட்டும் பிரிட்ஜ்ல இருந்து எடுக்கலாம். இல்லைன்னா கெட்டுடும்” என்றார் மணி. “இருங்கப்பா.. இப்பத்திக்கு சாப்பிட்டு சந்தோஷமா இருப்போம்” என்று மெலிதாக கோபப்பட்டார் ஏடிகே. எதுவுமே நடக்காதது போல் அனைத்தையும் மௌனமாக கவனித்தபடியே வேலை செய்தார் ரச்சிதா.

கதிரவனை முன்னிட்டு ஷிவினை கலாட்டா செய்வதை க்வீன்சியும் ஆயிஷாவும் தொடர்கிறார்கள். “கதிர் கிட்ட தாடி எடுக்க வேணாம்ன்னு சொல்லு. பார்க்க நல்லாயிருக்காது” என்று ஷிவின் சொல்ல, “கதிர் அண்ணா.. தாடி எடுத்துருங்க. ஒரு மாற்றம் வேணுமில்ல” என்று ஷிவினை வெறுப்பேற்ற முயன்றார் ஆயிஷா. “நான் வேணா தாடி எடுக்கவா.. எடுத்தா ஆயிஷா மாதிரி ஆயிடுவேன்” என்று இடையில் புகுந்து காமெடி செய்தார் மணிகண்டன். க்வீன்சியின் கையில் இருந்த லிப்ஸ்டிக் அடையாளத்தைப் பற்றி ஷவின் விசாரிக்க அநியாயத்திற்கு வெட்கப்பட்டார் க்வீன்சி. `கதிர் லிப்ஸ்டிக் போடறாரா.. அடிங்’ என்று அந்தக் கிண்டலை ஷிவின் எதிர்கொண்ட விதம் சிறப்பு.
‘மகனே.. தலைவர் போட்டில மட்டும் ஏதாவது சொதப்பினே.. இருக்கு உனக்கு’ என்பது மாதிரி அசிமை கலாட்டா செய்து கொண்டிருந்தார் கதிரவன். “99 கோல் சேவ் பண்ணாகூட விட்டுடுவாங்க. ஒரு கோல் மிஸ் ஆனா திட்ட ஆரம்பிச்சிடுவாங்க’ என்று அசிம் பன்ச் வசனம் பேசினார். கதிரவனின் நகைச்சவைக்கு ஏடிகே சிரிக்க, மற்றவர்களை விட்டு விட்டு அவரை மட்டும் அசிம் விசாரிக்க, ‘ஐயோ.. மறுபடியும் ஆரம்பிச்சிட்டானே” என்பது மாதிரி நொந்து போனார் ஏடிகே.
“எல்லாத்தையும் உள்ளே வெச்சிக்கிட்டு வெளில சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க. கொஞ்சம் வெளியே வாங்க” என்று ரச்சிதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜனனி. அவரை குழந்தை மாதிரி கொஞ்சி விட்டு சென்றார் ரச்சிதா. ஆனால் அந்தக் குழந்தைதான் சற்று நேரத்தில் தன்னைப் பற்றி ஒரு கொடூரமான கமெணட் அடிக்கப் போகிறது என்பது, பாவம் ரச்சிதாவிற்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.
புதிய தலைவரான அசிம் – ஆரோக்கியமான மாற்றம்
தலைவருக்கான போட்டி ஆரம்பித்தது. அசிம், ஷிவின், விக்ரமன் ஆகிய மூவரும் போட்டியாளர்கள். பந்துகள் மேலே இருந்து வந்து விழும். அதில் ‘கேப்டன்’ என்று இருக்கும் ஆங்கில எழுத்துக்களை யார் முதலில் சேர்க்கிறார்களோ அவரே வெற்றியாளர். ஆக்ரோஷமாக செயல்பட்ட அசிமிடம் மல்லுக்கட்டி போராடினார் ஷிவின். ஆனால் அசிம் விட்டுத் தரவில்லை. “அந்த பிசினஸே கிடையாது” என்று சொல்லி ஆவேசமாக விளையாடி அசிம் வெற்றி பெற்றார்.
அசிம் தலைவர் ஆனதில் – இப்போதைக்கு – பல நல்ல விஷயங்கள் நடந்தன. அணி பிரிக்கும் போது யாருமே மூச்சு விடவில்லை. ‘இங்க போ.. அங்க போ’ என்று அவர் சொன்ன போது ஸ்கூல் பிள்ளைகள் போல் சமர்த்தாக நகர்ந்தார்கள். ‘கிச்சன் டீம்ல எல்லோருமே ஆண்கள்தான். பாத்ரூம் க்ளீனிங்ல ரச்சிதா மற்றும் ஆயிஷா போகட்டும்’ என்று அசிம் சொன்ன போது, தனது நெடுங்கால கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார் தனலஷ்மி. பிறகு அசிம் சொன்ன விஷயம் சிறப்பானது. “அவங்க அவங்க குடிச்ச கப், சாப்பிட்ட தட்டை அவங்களே கொண்டு போய் கழுவி வெச்சிடுங்க. நாம சாப்பிட்டதை மத்தவங்க கழுவறது சரியான விஷயமில்ல” என்று சொன்ன ஆலோசனை சூப்பர். இந்த விஷயத்திற்காகவே அசிமை மனமார பாராட்டலாம். நல்ல மாற்றம்.

கிச்சன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஏடிகே, விக்ரமன், மணிகண்டன் மற்றும் ராம் ஆகியோர் ‘இதான் அரிசியா.. இப்படித்தான் சாதமா மாறுதா?’ என்பது போல் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆண்கள் சமைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மைனாவும் ரச்சிதாவும் ‘ஹப்பாடா!. மத்தவங்க சமைக்கும் போது நாம இப்படி ஹாயா இருக்கறது ஜாலியா இருக்கு’ என்று மகிழ்ச்சியடைந்தார்கள். இதுதான் பெரும்பாலான குடும்பத் தலைவிகளின் நிலைமை. ஆண்கள் ஒருநாளாவது சமைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
ஆனால் இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது. கிச்சன் என்பது அதிகாரம். பெரும்பாலான பெண்களின் கையில் இருக்கும் ஆயுதம் அது. எனவே அதை எளிதில் விட்டுத்தர அனுமதிக்க மாட்டார்கள். ஓர் ஆண் சாதாரணமாக ஒரு காஃபி போட கிச்சனுக்குள் நுழைந்தால் கூட, ‘நொய். நொய்’ என்று பெண்கள் ஆயிரம் குறிப்புகளைச் சொல்வதைப் பார்க்கலாம். ஆக, ரச்சிதாவும் மைனாவும் சந்தோஷப்படுவதைப் போல காணப்பட்டாலும் உள்ளுற தங்களின் அதிகாரம் பறிபோன துயரத்தில் இருக்கக்கூடும். ஒவ்வொருவரின் தட்டின் பின்னாலும் அவரவர்களின் பெயர்களை நாக்கை மடித்துக் கொண்டு எழுதிக் கொண்டிருந்தார் அசிம். “எப்படி குழந்தை மாதிரி நாக்கை வெச்சிட்டு எழுதறான் பாரேன்” என்று மைனா ரசித்துக் கொண்டிருந்தார்.

“சாப்பாடு ரெடி.. வாங்க வாங்க..’ என்று மெஸ் பலகை மாதிரி ஏடிகே கூக்குரல் இட, விசிலடித்து கூப்பிட்டார் மணிகண்டன். சாப்பாடு எப்படியிருக்குமோ என்கிற பதட்டம் நமக்கே இருந்த போது, அங்கே இருந்தவர்களுக்கும் அந்தக் கவலை அதிகமாக இருந்திருக்கும். ஆனால் ஆச்சரியகரமாக உணவு மிக சுவையாகவும் சூடாகவும் இருந்தது. “வேற லெவல்.. கிச்சன் டீமிற்கு ஓ போடுங்க” என்று பாராட்டினார் ஆயிஷா. ‘அசிம் கேப்டன் ஆயிட்டதால அந்தப் பக்கம் சாஞ்சுட்டா பாரேன்’ என்று ஆயிஷா பற்றியும் புறணிகள் கிளம்பின.
ஜனனிதான் விஷபாட்டிலா?
முதன்முறையாக தனலஷ்மி சேலை கட்டியிருந்தார். தான் அணிந்திருந்த சேலையை கண்ணாடியில் சரி பார்த்தபடியே ஜனனி நடந்து வர, அப்போது மைனா அடித்த கமெண்ட் தற்செயலானதா அல்லது ஜனனியை சீண்டுவதற்கா என்று தெரியவில்லை. “சேலைன்னா அது ரச்சுதான்.. அவளுக்குத்தான் செமயா செட் ஆகுது” என்று ஜனனியின் காதில்படுமாறு மைனா சொன்னார். பின்னர் தனலஷ்மியிடம் இதைப் பற்றி ஆத்திரத்துடன் முணுமுணுத்த ஜனனி “அவங்களுக்கு சேலை நல்லாவா இருக்கு” என்று சொல்லி விட்டு பின்குறிப்பாக சொன்ன கமென்ட் மிக ஆட்சேபகரமானது. பெண்கள் பொறாமை என்னும் விஷயத்தில் விழுந்தால், அந்த நெருப்பின் கடுமை எத்தகையதாக இருக்கும் என்பதற்கான உதாரணம், ஜனனியின் கமென்ட். பஞ்சாயத்து நாளில் இது விசாரிக்கப்படுமா, அல்லது கூடுதல் சங்கடம் வேண்டாம் என்று தவிர்க்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

‘இரண்டு நபர்களை காரணங்களோடு நாமினேட் செய்ய வேண்டும்’ என்று அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். இதுவும் கடந்த வாரத்தைப் போலவே ஓப்பன் நாமினேஷன். ஆனால் கூடுதலாக ஒரு சங்கடம் உண்டு. யாரை நாமினேட் செய்கிறோமோ, அவர்களின் முகத்தில் கிரீமை பூச வேண்டுமாம். வெறுமனே நாமினேட் செய்தால் போதாதா? இந்த மாதிரியான அவமதிப்புகள் ஏன்? கேட்டால் ‘பிக் பாஸ் ரூல்’ என்பார்கள். கமல் இதைப் பற்றியெல்லாம் கடுமையாக கருத்து சொல்வாரா?
‘ரச்சிதாவிடம் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன் மட்டுமே வருகிறது. சேஃப் கேம் ஆடுகிறார். அவரின் ரியாக்ஷன் என்னவென்றே தெரிவதில்லை’ என்கிற காரணங்களைச் சொல்லி பலரும் ரச்சிதாவின் முகத்தில் கிரீமை அப்பினார்கள். அடுத்தபடியாக க்வீன்சியின் பெயரும் நிறைய முறை வந்தது. ‘யாரையாவது சார்ந்தே அவர் விளையாடுகிறாராம். செல்லத்தை எதிர்பார்க்கிறாராம்’.. தனது முறை வரும் போது “பாருங்க.. அவங்க முகத்துல க்ரீம் கூட யாரும் சரியா பூசலை” என்று நக்கலாகச் சுட்டிக் காட்டிய அசிம், நிறைய க்ரீமை எடுத்து பூச, கோபத்துடன் துடைப்பதற்குச் சென்றார் க்வீன்சி.
ரணகளமாகத் தொடர்ந்த நாமினேஷன் பஞ்சாயத்து
தனலஷ்மியை நாமினேட் செய்த ஏடிகே, அதற்கான காரணங்களைச் சொல்வதற்குள் குறுக்கே குறுக்கே தனலஷ்மி பேசியதால் ‘இதோ. இதுக்காகத்தான் நாமினேட் பண்றேன்” என்று ஏடிகே சொன்னது சிறப்பு. மைனாவை அவர் தலைவராக ஏற்க மறுத்தது குறித்த புகார் அது. மைனாவும் இதே காரணத்தைச் சொல்லி தனலஷ்மியை நாமினேட் செய்தார். தன்னைப் பற்றி எவராவது சிறிய புகார் சொன்னாலும் தீக்குச்சி மாதிரி உடனே பற்றிக் கொள்கிறார் தனலஷ்மி. ஆனால் மற்றவர்களைப் பற்றி மட்டும் வெடிகுண்டு மாதிரியான புகார்களைச் சொல்வார்.
‘ராபர்ட் மகள் என்கிற பாசத்தை அதிகம் காட்டினார்' என்கிற காரணத்தை விக்ரமன் சொல்ல, தன்னுடைய முறை வரும் போது ‘அது அவங்க பர்சனல் விஷயம்’ என்று மறுத்தார் ராம். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் உடனே அடங்கியது. “டாஸ்க்கில் ஜனனியின் பங்களிப்பு இல்லை” என்று கதிரவன் சொல்ல “எந்த இடத்துல, எந்த நிமிடத்துல. எந்த விநாடில அது நடந்தது.. தெளிவா சொல்லுங்க..’ என்பது மாதிரி அநாவசியமாக கோபப்பட்டார் ஜனனி.

எவிக்ஷன் பிராசஸஸிற்காக, இந்த வாரம் நாமினேட் ஆன அதிர்ஷ்டசாலிகள்: ரச்சிதா, க்வீன்சி, ஜனனி, மைனா, தனலஷ்மி மற்றும் கதிரவன்.
நாமினேஷன் முடிந்ததும் ஜனனியும் தனலஷ்மியும் அதைப் பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். ‘இந்த வாரம் ரச்சிதாதான் வெளியே போவாங்க. எனக்கு குத்தினவங்களுக்கு எல்லாம் அடுத்த வாரம் நானும் பதிலுக்கு குத்துவேன்” என்று சொன்னார் தனலஷ்மி. அப்போது அவர் காட்டிய சைகை ரசிக்கத்தக்கதாக இல்லை. காமிரா சட்டென்று க்ளோஸில் வர, சுதாரித்துக் கொண்ட தனலஷ்மி, ‘சும்மா. லுலுவாய்க்கு’… என்று நாக்கை நீட்டி காமிராவிற்கு சமாதானம் சொன்னார். இருபத்து நான்கு மணி நேரமும் காமிரா நடுவில் இருப்பது நரக அவஸ்தைதான். நிம்மதியாக புறணி கூட பேச முடிவதில்லை.
மற்றவர்களுக்கு சிறப்பாக ஆலோசனை சொல்லும் ஷிவின்
“மூஞ்சுல கரி பூசின மாதிரி இருக்கு” என்று நாமினேஷன் சடங்கைப் பற்றி அடிபட்ட முகத்துடன் ஆயிஷா சொல்ல அவருக்கு ஷவின் அளித்த உபதேசம் மிகச் சிறப்பானது. ஷிவினின் மெச்சூரிட்டி லெவல் பல சமயங்களில் வியக்க வைக்கிறது. “இந்த மாதிரி நெருக்கடில உன்னைத் தள்ளினா. நீ என்ன செய்வேன்றதுதான் இந்த நிகழ்ச்சி. இதே மாதிரி விஷயங்கள் உனக்கு வெளியவும் நடக்கலாம். அதை நீ எப்படி ஹாண்டில் செய்யறே.. என்பதுதானே உன் பர்சனாலிட்டி?” என்று ஷிவின் சொன்ன ஆறுதல், மிகச் சரியான புரிதலுடன் இருந்தது.
தான் அதிகமாக நாமினேட் செய்யப்பட்டது, சமையல் ஏரியா பறிபோனது ஆகிய காரணங்களாலோ என்னமோ, சோகத்துடன் இருந்த ரச்சிதாவை அணைத்து ஆறுதல் சொன்னார் ஷிவின். க்யூட்டான காட்சியாக இது இருந்தது. “கேனத்தனமான காரணங்களைச் சொல்லி நாமினேட் பண்றாங்க. தனலஷ்மிக்கு எப்பவுமே என்னைப் பிடிக்காது” என்று இன்னொரு பக்கம் அனத்திக் கொண்டிருந்தார் க்வீன்சி.

தன்னை நீதிபதியாக விடாமல் தடுக்கப்பட்ட சம்பவத்தை விக்ரமன் மீண்டும் கிளப்ப “அப்பா – பொண்ணு ரிலேஷன்ஷிப் வேற. அந்த ஃபீலிங்க்ஸை யாரும் தடுக்க முடியாது. ஆனா அது விளையாட்டிற்குள்ள வரலை. ராபர்ட் மாஸ்டர் கிட்டயும் நான் அதை முன்னாடியே சொல்லிட்டேன்” என்று எரிச்சலுடன் க்வீன்சி விளக்கம் அளித்தாலும் விக்ரமன் கன்வின்ஸ் ஆகவில்லை. அந்தச் சமயத்தில் ராபர்ட்டின் இடையூறு இருந்தது என்பதே அவரின் மனப்பதிவு.
புதிய தலைவரான அசிம், சபையைக் கூட்டி “பாத்ரூம் செம க்ளீனா இருந்தது. அந்த அணிக்குப் பாராட்டு. குக்கிங் வேற லெவல்ல இருந்தது. க்வீன்ஸிக்கு கிளவுஸ் வந்துடுச்சு..” என்று பாராட்டுக்களையும் உத்தரவுகளையும் சரமாரியாக சொல்லிக் கொண்டே போனார். ஜனனியின் ஆடைகளை எங்கு வைப்பது என்கிற பிரச்சினை காலையில் இருந்தே ஓடிக் கொண்டிருந்தது. இது தொடர்பாக அதிருப்தியடைந்தார் ஜனனி. “துவைக்க வேண்டிய துணிகளையும் ஏன் இங்கே வைத்து இடத்தை அடைக்க வேண்டும்?” என்பது அசிமின் கேள்வி. “அது நான் உடுத்தற துணிதான்” என்று குழந்தை மாதிரி அடம்பிடித்தார் ஜனனி. இந்தச் சமயத்தில் தனலஷ்மி சொன்ன யோசனை ஏற்கப்பட்டது. “வீடு பாதி காலியாகி விட்டதால் அந்த இடத்தில் பகிர்ந்து வைக்கலாம்” என்று சொல்லி தனது தோழியை இக்கட்டில் இருந்து காப்பாற்றினார் தனலஷ்மி.
இந்த வாரம்.. ‘அவ்தார் 2 வாரம்’...
இந்த வார டாஸ்க்கிற்கான அறிவிப்பு வந்தது. ஏறத்தாழ அவ்தார் படத்தின் திரைக்கதையைப் போல மிக நீண்ட குறிப்புகள் அதில் அடங்கியிருந்தன. ஷிவின் அதை வாசித்துக் கொண்டே போனார். கேட்கவே தலையைச் சுற்றியது. சுருக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பழங்குடிகளுக்கும் ஏலியன்களுக்கும் இடையில் நடக்கும் போட்டி இது. ‘நாங்கள்தான் பழங்குடி’ என்று ஆளாளுக்கு கர்ச்சீப் போட்டு இடம் பிடித்தார்கள். வீடு இரண்டு அணிகளாகப் பிரிந்தது.
இந்த டாஸ்க்கில் என்னென்ன கலாட்டாக்கள் நடக்கப் போகிறதோ? நாம்தான் தப்பித்து செவ்வாய் கிரகத்திற்கு ஓட வேண்டும் போல.