Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 53: அடிடா பாக்கலாம்; `வெளில அனுப்பிடுங்க!'அந்நியன்; அம்பி என வெரைட்டி காட்டிய அசிம்

பிக் பாஸ் 6 நாள் 53

‘நீ அமுதவாணன் கிட்ட போய் பேசு’ என்று அசிமிடம் கதிரவன் ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கும் போது எதற்கோ எழுந்த அசிம், அப்படியே மயங்கி கீழே விழுந்தார். மற்றவர்கள் பதறி அவரை உடனே தூக்கிச் சென்றார்கள்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 53: அடிடா பாக்கலாம்; `வெளில அனுப்பிடுங்க!'அந்நியன்; அம்பி என வெரைட்டி காட்டிய அசிம்

‘நீ அமுதவாணன் கிட்ட போய் பேசு’ என்று அசிமிடம் கதிரவன் ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கும் போது எதற்கோ எழுந்த அசிம், அப்படியே மயங்கி கீழே விழுந்தார். மற்றவர்கள் பதறி அவரை உடனே தூக்கிச் சென்றார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 53
இந்த வார வீக்லி டாஸ்க் நிச்சயம் ஒரு பிளாப் சமாச்சாரம். அத்தனை எதிர்மறைத்தன்மை. கடைசியில் வந்த கலைநிகழ்ச்சி மட்டும் சற்று ஆறுதல். அசிமின் கிரைம் ரிகார்ட் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. அவர் அமுதவாணனின் கன்னத்தில் கை வைத்தது கூட உணர்ச்சி வேகத்தில் இருக்கலாம். ஆனால் ‘அட்ரா.. அட்ரா..’ என்று மூர்க்கமாக காட்டிய உடல்மொழி, எந்தவொரு தெருச்சண்டையின் அநாகரிகத்திற்கும் குறைந்ததல்ல.

இது போன்ற பல காட்டுமிராண்டித்தனங்களைத் தாண்டித்தான் நாகரிக உலகத்திற்கு நாம் நகர்ந்திருக்கிறோம். போக வேண்டிய தூரம் இன்னமும் இருக்கிறது. அசிம் போன்ற நபர்கள் இதைப் பின்னுக்கு இழுத்துச் செல்கிறார்கள். விக்ரமன் சுட்டிக்காட்டுவது போல் இத்தகைய கீழ்மைகளை ‘நார்மலைஸ்’ செய்யக்கூடாது. ‘இதுதான் உங்க ஸ்ட்ராட்டஜின்னு சொல்லிட்டீங்கன்னா.. மத்தவங்க கிட்ட சொல்லிடுவேன்’ என்று வழக்கம் போல் கமல் வார்த்தைகளால் மழுப்பாமல், இந்த வாரம் ‘ரெட் கார்ட்’ தந்து அசிமை வெளியே அனுப்பினால் பிக்பாஸிற்கே அதுவொரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும். ஆனால் செய்ய மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். நீதியை விடவும் கன்டென்ட் முக்கியம்.

நாள் 53-ல் நடந்தது என்ன?

கதிரவன், அசிம், ஷிவின் ஆகிய மூவரும் ஏலியன்ஸ்களிடம் கைதிகளாக பிடிபட்டிருந்தார்கள். இதில் ஷிவின் அவ்வப்போது தப்பிச் சென்று பூக்களைத் திருட முயல பாதுகாப்பை பலப்படுத்துவதற்குள் ஏலியன்ஸ் தவித்துப் போனார்கள். கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்த கதிரவனுக்கும், அவரை பிடிக்க முயன்ற அமுதவாணனுக்கும் இடையில் தள்ளுமுள்ளு நடந்தது. கதிரவனை அமுக்கிப் படுக்க வைத்து அவரின் கால்களையும் கட்ட முயன்றார் அமுதவாணன். இதில் கதிரவனுக்கு வலி ஏற்பட்டிருக்கும் போல. அவர் பலமாகத் திமிறிக் கொண்டிருந்தார்.

இந்தச் சமயத்தில் வீட்டுக்குள் இருந்த அசிம், தன் நண்பன் போராடுவதைப் பார்த்தவுடன் ஆத்திரமடைந்தார். அவர் அமுதவாணனை பலமாகத் தள்ளி விலக்கி விட இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் மூண்டது. ‘அடிச்சுத்தானே விளையாடணும். என்னை அடி… அட்ரா’ என்று மூர்க்கமான உடல்மொழியுடன் மிரட்டிய அசிம், ஒரு கட்டத்தில் அமுதவாணனின் கன்னத்தில் கை வைத்தார். அது நிச்சயம் அடிப்பதற்கான முயற்சியில்லை. ஆனால் ‘சண்டைக்கு வாடா’ என்று எதிராளியை மூர்க்கமாக்கும் முயற்சி.

பிக் பாஸ் 6 நாள் 53:அசிம், அமுதவாணன்
பிக் பாஸ் 6 நாள் 53:அசிம், அமுதவாணன்

தெருச்சண்டையின் உடல்மொழியைக் காட்டிய அசிம்

கன்னத்தை தள்ளியதை விடவும் அசிமின் உடல்மொழிதான் அப்போது பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. உடல்ரீதியாக அமுதவாணனை விடவும் அசிம் பலமானவர். தன்னை விடவும் பலவீனமானவர்களிடம் வீரத்தைக் காட்டுவது கோழைத்தனமான செயல். தன் கன்னத்தில் கை வைக்கப்பட்டதை அமுதவாணன் பலமாக ஆட்சேபித்தார். இதைப் பற்றி மற்றவர்களிடமும் முறையிட்டார். “போடா காமெடி பீஸூ" என்று மலினமான கிண்டலில் இறங்கினார் அசிம். ஏடிகே, மைனா, ஷிவின், விக்ரமன் உள்ளிட்ட பலரும் அசிமின் அட்ராசிட்டியை ஆட்சேபித்தார்கள். தனலஷ்மி வலுவாக சாட்சியம் சொன்னார். ‘அடிச்சியா?’ என்று மணிகண்டன் விசாரித்தார்.

இத்தனை காமிராக்கள் இருக்கும் சூழலிலேயே ஒருவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாவிட்டால், அசிமைப் போன்றவர்கள் சமூகத்தின் தனியிடங்களில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பீதியாக இருக்கிறது. ‘நான் அவரை அடிக்கலை. ‘என்னைப் பாரு’ன்ற மாதிரி கை மட்டும்தான் வெச்சேன். அவர் மட்டும் கதிரவனை அமுக்கிப் பிடிக்கலையா?’ என்பது அசிமின் விளக்கம். ‘அவங்க பண்றது டாஸ்க்’ என்று மற்றவர்கள் தந்த விளக்கம்தான் சரி. இதைக் கேட்டவுடன் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டார் அசிம். எனில் தன் தவறு அவருக்கு இப்போதுதான் உறைத்தது போல.

பிக் பாஸ் 6 நாள் 53: கதிரவன், அமுதவாணன்
பிக் பாஸ் 6 நாள் 53: கதிரவன், அமுதவாணன்

கதிரவனும் தன் வலி குறித்து உரக்கச் சொல்லி, அமுதவாணனுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டாலும், பின்னர் பரஸ்பர மன்னிப்புடன் இருவரும் சமாதானம் ஆனார்கள். ஏனெனில் அது ‘டாஸ்க்கில்’ நடந்த தள்ளுமுள்ளு. தன்னுடைய நண்பர்களே குற்றத்தைச் சுட்டிக் காட்டியதால் குற்றவுணர்வில் ஆழ்ந்த காமிரா முன்னால் வந்த அசிம் “வெளில போறேன்’ என்று மற்றவர்கள் சொன்ன வழியை தானும் பின்பற்றினார். “உணர்ச்சி வேகத்துல நடந்து விட்டது மக்களே.. மன்னிப்பு கேட்கறேன்’ என்று சொல்லியிருந்தாலாவது சற்று முதிர்ச்சியான அணுகுமுறையாக இருந்திருக்கும்.

குற்றவுணர்வில் மயங்கி விழுந்த அசிம்

‘நீ அமுதவாணன் கிட்ட போய் பேசு’ என்று அசிமிடம் கதிரவன் ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கும் போது எதற்கோ எழுந்த அசிம், அப்படியே மயங்கி கீழே விழுந்தார். மற்றவர்கள் பதறி அவரை உடனே தூக்கிச் சென்றார்கள். தூக்கிச் சென்றவர்களில் அமுதவாணனும் இருந்தார். அசிமிற்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

‘என் புருஷன் தினமும் குடிச்சிட்டு வந்து மோசமா அடிப்பாருதான். ஆனா மூணு வேளையும் சோறு போடுவாரு. ரொம்ப நல்லவரு’ என்கிற அப்பாவி மனைவிகளின் மனநிலையில் ஏடிகே இருக்கிறாரா என்று தெரியவில்லை. ‘அசிம் நல்ல பையன்தான். ஆனா அந்த கோபம்தான்..’ என்று ஏடிகே சப்போர்ட்டை ஆரம்பிக்க, ‘ஹலோ.. அவர் எல்லாமே தெரிஞ்சு தெளிவாதான் பண்றாரு’ என்று ஷிவினும் விக்ரமனும் விளக்க ஏடிகே வாயை மூடிக் கொண்டார். ‘கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்’ என்பது நடைமுறையில் இருக்கிற ஒரு பழமொழிதான். ஆனால் அந்தக் கோபமான தருணங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் பேச வேண்டும். தன்னைத் திருத்திக் கொள்வதுதான் ஆரோக்கியமான வழியே தவிர அதை நியாயப்படுத்தி பேசுவதல்ல. ‘கோபத்துல கத்தில குத்திட்டேன். மன்னிச்சுடுங்க’ என்று ஒருவர் சொல்லி தப்பிக்க முடியுமா? குடிபோதை போல திக்கற்ற கோபமும் ஒரு தீய பழக்கம். ஆனால் திருந்தி வர முடியும்.

பிக் பாஸ் 6 நாள் 53: மயங்கி விழுந்த அசிம்
பிக் பாஸ் 6 நாள் 53: மயங்கி விழுந்த அசிம்

மருத்துவ அறையிலிருந்து அசிம் திரும்பி வந்தவுடன் அமுதவாணனை கட்டியணைத்து மன்னிப்பு கேட்ட காட்சி சிறப்பானது. இதுதான் நாகரிகத்திற்கான அடையாளம். மனிதம் வளர்வதற்கான பாதை. இந்த விளையாட்டில் ஏலியன்ஸ் தரப்பு – குறிப்பாக தனலஷ்மி – வலுவாக இருந்ததால் பழங்குடிகள் தங்களிடமுள்ள ரத்தினங்களை பாதுகாப்பதில் ஈடுபட்டார்கள். பொருட்களை படுக்கை அருகே ஒளித்து வைத்த விக்ரமன், தனலஷ்மி கவனிப்பதைப் பார்த்ததும் முதுகுவலி வந்தது போல நடித்த அந்தக் காட்சி இருக்கிறதே?!.. நல்ல நகைச்சுவை.

நள்ளிரவு 12:30 மணி. அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, பூனை போல் எழுந்த அசிம், குளத்தில் இறங்கி பூக்களை தவணை முறையில் கொஞ்சமாக கொஞ்சமாக திருடி, மூட்டையில் கட்டி, புகை பிடிக்கும் அறையின் அருகே ஒளித்து வைத்தார். விடியற்காலையில் எழுந்த தனலஷ்மி குளத்தில் பூக்கள் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டார். காலை 07:30 மணியளவில் ஏலியன்ஸ் நல்ல உறக்கத்தில் இருக்க, பழங்குடிகள் தரப்பிலிருந்து ரச்சிதாவும் மைனாவும் வீட்டிற்குள் சென்று கற்களை லவட்டிக் கொண்டு வந்தார்கள்.

காலை எட்டு மணிக்கு எழுந்த ஏடிகே பூக்களைக் காணாமல் அமுதவாணனை விசாரித்தார். ‘நீ பூ எடுத்தியா?’ என்கிற சந்தேகக் கேள்வி வீடு முழுக்க உலவியது. அசிம் உட்பட யாரும் அதை ஒப்புக் கொள்ளவில்லை. “பாத்திரம்லாம் கழுவாம கெடக்கு. இந்த முறை க்ளீனிங் டீம் மேலதான் குத்தப் போறேன்” என்று ராம் எரிச்சலாக, ‘இருங்க ஷிவின் கிட்ட சொல்றேன்” என்று விலகினார் விக்ரமன். “இவர் எப்பவும் ஷிவினுக்குத்தான் சப்போர்ட்டு” என்று ராம் சொல்ல “ஆமாம்.. அசிம் சொல்றது சிலது கரெக்ட்டு” என்று பின்பாட்டு பாடினார் ஏடிகே.

ரஹ்மான் பாடல் பின்னணியில் ஒரு ஜாலியான கலவரம்

‘கெடா கெடா கறி அடுப்புல கிடக்கு..’ என்கிற ஆவேசமான பாடலுடன் நாள் 53 விடிந்தது. மக்கள் ஆனந்தமாக நடனமாடிக் கொண்டிருக்க, அமைதியாக ஒரு கலவரம் ஆரம்பித்தது. பழங்குடிகள் தயாரித்துக் கொண்டிருந்த கற்களை தனலஷ்மி தூக்கிக் கொண்டு ஓட தள்ளுமுள்ளு நடந்தது. ஒலித்துக் கொண்டிருந்த பாடலின் பின்னணியில் நடந்த இந்தக் கலவரக் காட்சிகளைப் பார்க்க, தியாகராஜன் குமாரராஜா இயக்கிய படத்தின் காட்சிகள் போல வித்தியாசமாக இருந்தது. பாடலின் டெம்போவிற்கு ஆடிய படியே ஜாலியாக திருட்டில் ஈடுபட்டார் விக்ரமன்.

பூக்களை தான் ஒளித்து வைத்த ரகசியத்தை ஏடிகேவின் காதில் மட்டும் ஓதிய அசிம், அவரிடம் டீலிங் பேசி விட்டு பின்குறிப்பாக ‘இதை விக்ரமன் கிட்ட சொல்ல வேணாம்’ என்றார். அசிம் வீட்டிற்குள் நுழைய ‘அப்ப நாம வெளில போய் எடுக்கலாம்’ என்று மணி தன் பரிவாரங்களுடன் கிளம்ப, இன்னொரு தள்ளுமுள்ளுவிற்கான அறிகுறி தெரிந்தது. தனலஷ்மியும் கதிரவனும் பரஸ்பரம் வாக்கு வாதம் செய்து சவால் விட்டுக் கொண்டார்கள். ஒருவரை பயங்கரமாக வெறுப்பேற்றும் விதமாக உடல்மொழி காட்டுவதில் தனலஷ்மி விற்பன்னராக இருக்கிறார். ‘நான் எவிக்ஷனுக்கு தயார். நீ தயாரா?’ என்று கோபப்பட்டார் கதிரவன்.

பிக் பாஸ் 6 நாள் 53
பிக் பாஸ் 6 நாள் 53

போகபிஸ்ஸா விளையாட்டு பிக் பாஸிற்கே சலித்தது போல. அவர் அமுதவாணனை அழைத்து இரண்டு பூட்டுக்களை அளிக்க, மக்கள் பழங்குடி – ஏலியன்ஸ்ஸை தற்காலிகமாக மறந்து விட்டு பூட்டு சாவி ஆட்டத்தில் ஈடுபட்டார்கள். வீடே சிதறி ஓடிய சமயத்தில், சத்தமில்லாமல் சரண்டர் ஆன அசிமை எளிதாக பூட்டிய அமுதவாணன், இன்னொரு ஆளை துரத்திப் பிடிப்பதற்காக மிகவும் அல்லாட வேண்டியிருந்தது. அவரின் டார்கெட் விக்ரமனாக இருந்தது. ‘கல்லு தந்துட்டு பூட்டுங்க’ என்று டீலிங் பேசினார் விக்ரமன்,. இருவரும் ஒன்றாக சென்று பாத்ரூமிற்குள் மறைந்தார்கள். அந்தப் பேரம் ஒத்துவரவில்லையோ, என்னமோ, பின்னர் ஷிவினை துரத்தி பூட்டு மாட்டிய அமுதவாணன், மைனாவை ரிலீஸ் செய்தார்.

அமுதவாணன் காட்டிய குறளி வித்தை

அமுதவாணன் கையில் இருந்த பொம்மை ஒன்றில், அசிமின் ரத்தம் பட்டதால், பொம்மைக்கு உயிர் வந்தது. அது பூக்கள் இருக்குமிடத்தைக் காட்டியது. எனவே பொம்மை காட்டிய வழியில் சென்ற அமுதவாணன், பாத்ரூமில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூக்களைக் காட்ட வீடு ஆச்சரியத்தில் மூழ்கியது. இந்த குறளி வித்தையைப் பார்த்து தனலஷ்மி அஞ்சி நடுங்கினார். (அவ்ளோ பயந்த ஆசாமிக்கா.. இவ்ளோ கோபம் வருது?!). பிறகு காமிராவின் முன்பு வந்த அசிம் “இந்த விளையாட்டை குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் பார்க்க வேண்டாம். எண்டர்மெயின்ட்மென்ட் நோக்கத்திற்காக செய்தோம். எனக்கு அடிபடலை” என்று கண்ணைச் சிமிட்டி விட்டுச் சென்றார். ஒன்றுமே புரியாத இந்தக் காமெடிக்கு, இந்த விளக்கமெல்லாம் அநாவசியம்.

பிக் பாஸ் 6 நாள் 53: ஷிவின்
பிக் பாஸ் 6 நாள் 53: ஷிவின்

அடுத்ததாக பூட்டு விளையாட்டு ‘ஸ்போர்ட்ஸ் சாம்பியனான’ ஜனனியிடம் அளிக்கப்பட்டது. முயல் ஒன்று சிங்க மாஸ்க் அணிந்து காட்டில் வேட்டையாட கிளம்பினால், எப்படியிருக்குமோ அப்படியாக இந்தக் காட்சி நகைச்சுவையாக இருந்தது. இருப்பதிலேயே பாவமான ராமை, டார்கெட்டாக ஜனனி தேடினார். ‘கிச்சான்னாலே இளிச்சவாயன்’ என்கிற கதையாக, ‘அது ஏன் பலியாடு வேணும் போதெல்லாம் என்னைத் தேடி வரீங்க?” என்று பரிதாபமாக கேட்ட ராம், பிறகு தப்பித்து ஓட முயன்றார். துரத்திப் பிடிக்கும் முயற்சியில் ஜனனி காலில் இடித்துக் கொண்டார். அது என்னமோ ஊரில் நடக்கும் விபத்துகள் எல்லாம் ஜனனியின் கால்களைத்தான் தேடி வருகிறது. ஜனனிக்கு காலில் அடிபட்டதால் “சரி.. கீழ விழுந்து வெச்சிராத. பூட்டித் தொலை” என்று தானாக சரண் அடைந்தார் ராம்.

பூட்டு – சாவி ஆட்டமும் சலித்துப் போனதால் ‘போக பிஸ்ஸா’வின் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாக ‘கலைநிகழ்ச்சிகளை’ அறிவித்தார் பிக் பாஸ். சிறப்பாக பங்கு பெறுபவர்களுக்கு, எதிர் அணி கற்களை பரிசாக அளிக்கலாம். கதிரவனின் தாளத்திற்கு ஏற்ப அற்புதமாக ஆடி நடனத்தை துவங்கி வைத்தார் ஷிவின். ரச்சிதா, ஆயிஷா, ஜனனி போன்றவர்களும் நடனமாடினார்கள். தரையே உடைந்து விடும் அளவிற்கு குதித்து ஆவேசமாக ஆடினார் விக்ரமன்.

கோவை சரளாவிடம் அடிவாங்கும் வடிவேலுவின் காமெடியை நகல் செய்யும் விதமாக அமுதவாணன் – தனலஷ்மி காமெடி நிகழ்ச்சி நடந்தது. ‘என்னைப் பொண்ணு பார்க்க வரும் போது என்ன சொன்னே?’ என்று தனலஷ்மி கேட்க “நீ பொண்ணான்னு பார்க்க வந்தேன்’ என்ற அமுதவாணனின் கிண்டலில் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் பாடி ஷேமிங் வாசனை வந்தது. ‘டைனோசர் மூஞ்சி’ என்றெல்லாம் கிண்டல் செய்தார் அமுதவாணன்.

பரிசளிப்பு நேரம். அற்புதமாக நடனமாடிய ஷிவினுக்கு பரிசளித்து மகிழ்ந்தார்கள். “என்னதான் கிண்டல் பண்ணாலும் அதை இயல்பா வாங்கிக்கிட்டா’ என்று தனலஷ்மியை பாராட்டி மகிழ்ந்தார் மைனா. (ஆம், இந்த விஷயத்தில் மைனா மிகவும் சீனியர்!). பிறகு தனலஷ்மிக்கும் அமுதவாணனுக்கும் கற்கள் பரிசளிக்கப்பட்டதோடு எபிசோட் நிறைந்தது.