Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 55: `வெளியேறப் போகும் இளம் போட்டியாளர்'; கமல் கொடுத்த அதிரடி!

பிக் பாஸ் 6 நாள் 55

அசிம் தன்னை மாத்திக்கலை. அவரு கோபப்பட்டு சண்டை போடும் போதெல்லாம் ‘ரெட் கார்ட்’ கொடுங்கன்னு சொல்றாங்க. நானும் கோபப்பட்டா.. எனக்கும் அசிமிற்கும் என்ன வித்தியாசம்..

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 55: `வெளியேறப் போகும் இளம் போட்டியாளர்'; கமல் கொடுத்த அதிரடி!

அசிம் தன்னை மாத்திக்கலை. அவரு கோபப்பட்டு சண்டை போடும் போதெல்லாம் ‘ரெட் கார்ட்’ கொடுங்கன்னு சொல்றாங்க. நானும் கோபப்பட்டா.. எனக்கும் அசிமிற்கும் என்ன வித்தியாசம்..

பிக் பாஸ் 6 நாள் 55
கமல் வரும் வார இறுதிக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். சில நாட்களில் மொக்கையாக இருந்தாலும் பல நாட்களில் அருமையாக அமைந்து விடும். அந்த வகையில், இந்த எபிசோட் one of the best எனலாம். ஓர் உபதேசத்தை - அதை உபதேசத் தொனியில் அல்லாமல் - எதிராளிக்கு உறுத்தாத வகையில் அதே சமயத்தில் அழுத்தமாக கடத்தும் வகையில் நிகழ்த்துவது சிரமமானது. மிகுந்த நுண்ணுணர்வும் நாகரிகமும் நிதானமும் அதற்குத் தேவை. இந்த விஷயத்தை கமல் மிக அநாயசமாக செய்கிறார். இதில் அவர் மாஸ்டர் என்பதற்கான சாட்சியங்கள் இன்று தெரிந்தன. போலவே சமயோசித நகைச்சுவையும்.
பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

பார்வையாளர்கள் எதற்கோ கைத்தட்டிய போது 'இப்படி கழுவி ஊத்திட்டே இருந்தா எப்படி?' என்று மைனா சிணுங்கினார். சற்று கூட தாமதிக்காமல் அடுத்த நொடியே கமல் அடித்த சிக்ஸர் அற்புதமாக இருந்தது. 'கழுவி ஊத்தினா சுத்தமாகும்'. அதைப் போலவே அசிமிற்கு மிக நுட்பமாக அவர் செக்மேட் வைத்த காட்சிகளையெல்லாம் பாருங்கள். தான் அடிவாங்கியது பல சமயங்களில் அசிமிற்கே கூட தெரிந்திருக்காது. தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல் நடிப்பதில் அசிம் வல்லவர். கமலின் இந்த spontaneity-ம் நையாண்டியும் சமயோசிதமும் நிகழ்ச்சிக்கு கூடுதலான சுவையை அளிக்கிறது. இதையெல்லாம் யாரோ ஸ்கிரிப்ட் எழுதி மட்டும் பேசி விட முடியாது. அனுபவத்திலிருந்து வர வேண்டும். பல விஷயங்களை கமல் தன்னிலிருந்து உணர்ந்துதான் சொல்கிறார் என்பது ஆத்மார்த்தமான தொனியில் இருந்து தெரிகிறது. இன்றைக்கு கோபம், ரியாக்ஷன் சோ் விசாரணை குறித்து சொன்னதும் அப்படித்தான். கமலின் சில ஆலோசனைத் தருணங்களை, ஒரு தேர்ந்த சைக்காலஜிஸ்ட்டின் ‘கவுன்சலிங் செஷன்’ என்று கூட சொல்லி விடலாம். அப்படியொரு ஆத்மார்த்தமான பேச்சு.

நாள் 55-ல் நடந்தது என்ன?

நேர்த்தியான கலர் காம்பினேஷனுடன் கூடிய டிஷர்ட், பேண்ட்டில் வசீகரமான தோற்றத்தில் வந்தார் கமல். ‘நல்லா விளையாடுங்கன்னு போன வாரம் போட்ட ஊசி அழுத்தமாயிடுச்சு போல. கெட்டிக்காரத்தனமா ஆடச்சொன்னா, முரட்டுத்தனமா ஆடினாங்க.. வெற்றிக்கும் சத்தத்திற்கும் சம்பந்தமில்லை. இவங்க சண்டைல, சும்மா இருந்தவங்க டிராஃபி ஜெயிச்சுட்டாங்க. வாங்க விசாரிப்போம்’ என்று முன்னுரை வழங்கினார். பிறகு வெள்ளிக்கி்ழமை நிகழ்வுகள்.

‘சிம்ப்ளி வேஸ்ட்’ பலகையை கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்த மைனா, ஆறுதல் சொல்ல வந்த ஷிவினிடம் ‘இது எனக்கு அசிங்கம்தான்’ என்று சொல்லி உரக்க சிரித்து ஆறுதல் அடைந்தார். இன்னொரு பலகைவாதியான அசிம் ‘இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. விக்ரமன்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது’ என்று வழக்கம் போல் கெத்து குறையாமல் பேசிக் கொண்டிருந்தார். (எவ்ள அடி வாங்கினாலும் சிரிச்சா மாதிரியே இருக்கறதுல அசிமை யாரும் மிஞ்ச முடியாது!).

பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

தேவா – சூர்யாவிற்கு இணையானது, அசிம் – ஏடிகே நட்பு

வீட்டின் தலைவர் என்கிற முறையில் தனக்கு வந்த வாய்ப்பை வைத்து ஏடிகேவிற்கு மிக்ஸி பரிசளித்தார் அசிம். அடிக்கடி பார்க்க முடியாதாம். இன்னொரு நாட்டில் இருந்து வந்திருப்பது ஒரு காரணமாம். (ஏன் கொரியர்ல அனுப்ப முடியாதா?!). ‘பார்த்தியா எங்க பிரெண்ட்ஷிப்பை..?! தேவா.. சூர்யா மாதிரி..’ என்று பின்னர் ரச்சிதாவிடம் சொல்லி பரவசப்பட்டார் ஏடிகே. ‘நல்லாத் தெரியுமே.. உங்க பிரெண்ட்ஷிப்பு!’ என்பது மாதிரி சர்காஸ்டிக்கான சிரிப்புடன் கடந்து சென்றார் ரச்சிதா.

“நீங்க வந்து ஏழு வாரம் ஆச்சு.. ஐம்பது நாள் பயண வீடியோ பார்க்கலாமா?” என்று பிக் பாஸ் கேட்க, முன்னணி நடிகர் படத்திற்கு FDFS டிக்கெட் கிடைத்தது போல் மக்கள் ஆரவாரத்துடன் உற்சாகமானார்கள். பயண வீடியோ சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்தது. நெகிழ்வான தருணங்களும் உற்சாகமான தருணங்களும் மாறி மாறி வந்தன. ஆயிஷாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

“30 நாள்ல எல்லாம் ஒருத்தன் உயிர் நண்பனா ஆக முடியாது” என்று அசிமிடம் ஏடிகே சொன்ன வசனமும் வீடியோவில் வந்தது. பாவம் ஏடிகே. சற்று முன்னர்தான் தங்களின் நட்பு குறித்து பெருமையடித்துக் கொண்டிருந்தார். கார்டன் ஏரியாவில் விதம் விதமான உணவுகள் காத்திருந்தன. “நீங்கள்லாம் செலிபிரிட்டிஸ். அந்த மானம் மரியாதையோட சாப்பிடுங்க’ என்று அமுதவாணன் ஜாலியாக எச்சரித்தாலும், மக்கள் உணவு அயிட்டங்களின் மீது கொலைவெறியுடன் பாய்ந்தார்கள். பாவம், எத்தனை நாள் பசியோ?!

`தோல்வி என்பது வீழ்ச்சியல்ல, படிக்கட்டு’ – கமல் உபதேசம்

அகம் டிவி வழியாக வீட்டிற்குள் வந்த கமல், பேச்சிலர்ஸ் ரூம் மாதிரி, ஆண்கள் தலைமையில் இந்த வாரம் கிச்சன் டீம் செயல்பட்டதையொட்டி ‘சாப்பாடு எப்படியிருந்தது?’ என்று விசாரிக்க “முட்டை தொக்கு சூப்பர்’ என்று சொல்லி மகிழ்ந்தார்கள். தலைவி தனலஷ்மியின் கனவுத் திட்டத்தை தளபதி அசிம் சிறப்பாக செயல்படுத்தினாராம். ‘வெங்காயமெல்லாம் வெட்டித் தந்தேன் சார்’ என்று வீட்டின் கடைக்குட்டி மாதிரி இடையில் உற்சாகமாக சொன்னார் ராம். ‘சமைக்காம இருந்தது, எங்களுக்கு சந்தோஷமா இருந்தது’ என்று கிச்சன் அதிகாரம் பறிபோன துக்கத்தை சிரிப்பால் மறைத்தார் ரச்சிதா.

‘இந்த வார டாஸ்க் எப்படியிருந்தது?’ என்று அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தார் கமல். ‘ரொம்ப சுவாரசியமா இருந்தது. ஆனா கஷ்டமா இருந்தது’ என்று எதிர்வினைகள் வர “ஆமாம். பழங்குடிகளுக்குத்தான் இன்னமும் கஷ்டம். கீழே பூமி மேலே வானம்..ன்னு வெளில படுத்திருந்தாங்க’ என்று ஆமோதித்த கமல், மைனாவின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ‘சிம்ப்ளி வேஸ்ட்’ பலகையைப் பற்றி விசாரிக்க ‘நான் பெஸ்ட் கேர்ள் சார்.. ஆனா’ என்று மைனா பதில் தர ஆரம்பிக்க, பார்வையாளர்களிடமிருந்து சிரிப்பொலி கைத்தட்டல் மூலமாக வந்தது. ‘இப்படி கழுவி ஊத்தினா எப்படி?’ என்று மைனா சிணுங்க, அடுத்த நொடியிலேயே ‘கழுவி ஊத்தினா சுத்தமாகும்’ என்று கமல் சொன்ன அந்த spontaneity கமெண்ட் அபாரம்.

பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

‘தோல்வி என்பது வீழ்ச்சியல்ல, படிக்கட்டு’ என்பது போன்ற சுயமுன்னேற்ற உபதேச வாக்கியங்களை ‘மானே. தேனே..’ போட்டு பேசிய கமல் “போர்டை கழற்றி வெச்சிடுங்க.. நீங்க யாரும் வேஸ்ட் கிடையாது. இதை அணியக்கூடிய சூழல் யாருக்கும் வரக்கூடாது. உங்க பங்களிப்பு நல்லா இருந்தது’ என்று தன் உரையை முடித்தார். ‘என்னடா.. இது அசிம் பக்கம் போகாமலேயே போர்டை கழட்டச் சொல்லிட்டாரே’ என்று நமக்குத் தோன்றியது. அசிமிற்கும் உள்ளூற ‘ஹப்பாடா’ என்றிருந்திருக்கலாம். ஆனால் ‘கழுவியாச்சு. ஊத்த வேணாமா?’ என்று அடுத்ததாக கமல் தந்த டிவிஸ்ட் அற்புதம்.

“உங்க ஆட்டத்துல சத்தம்தான் அதிகமா இருந்தது. அந்த மும்முரத்துல அமைதி-ன்ற விஷயத்தை மறந்துட்டீங்க.. அமைதியாவே பல விஷயங்களை புரிய வெச்சிடலாம். ரோட்ல நிறைய போ் டிராஃபிக் சிக்னல்ல காரணமே இல்லாம ஹார்ன் அடிச்சிட்டு இருப்பாங்க.. நீங்க யோசிச்சு விளையாடியிருக்கலாம். ‘சைலண்ட்டா இருக்காங்க’ன்னு ரச்சிதா பத்தி கம்ப்ளெயிண்ட் சொல்லிட்டு இருந்தீங்க. அந்த விஷயமே இந்த வாரம் அவங்களுக்கு காம்ப்ளிமெண்ட்டா மாறிடுச்சு. உங்க சண்டைல அவங்களை மறந்துட்டீங்க. அவங்க ஹார்ன் அடிக்காம சைலண்ட்டா ஜெயிச்சுட்டாங்க” என்று ரச்சிதாவைப் பாராட்டிய கமல் ‘அதுக்காக பழைய மோடிற்கு போயிடாதீங்க’ என்று மெலிதான எச்சரிக்கையையும் ரச்சிதாவிற்குத் தந்தார்.

‘பிரமோவிற்காக விளையாடறவங்க யாரு?’

ஒரு பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல் ‘ஸ்டோர் ரூம்ல சில பொருட்கள்லாம் இருக்கு’ என்று வழக்கமான வசனத்தைச் சொல்ல அதை எடுக்கப் போன தனலஷ்மிக்கு ‘வந்த பொருள்’ என்ன என்பதைப் பார்த்தவுடன் சிரிப்பும் வெட்கமும் தாங்கவில்லை. “பிரமோ கண்டென்ட்டுக்காக செய்யறார்-ன்னு இந்த வீட்டுல அடிக்கடி பேசிக்கறீங்க. சண்டை போட்டா பிரமோல வரும்ன்னு நெனக்காதீங்க. நகைச்சுவை வரும். முத்து அப்பாவித்தனம் வந்தது. கெட்டிக்காரத்தனம் வரும். இருமல், மயக்கம்லாம் வராது’ என்று கமல் சொன்னது அசிமிற்கான ஊமைக்குத்தாக இருக்கலாம்.

‘பிரமோ கண்டென்ட்டுக்காக விஷயங்களைச் செய்பவர் யார்?’ என்பதுதான் கமல் தந்த டாஸ்க். ‘இதில் அசிம் வேணாம்’ என்று ஆரம்பத்திலேயே கமல் தவிர்த்தது புத்திசாலித்தனம். ஏனெனில் பெரும்பாலோனோர் அசிம் மீதே குத்தி டாஸ்க்கை சொதப்புவார்கள். “அவரு பிரமோ கிங்குன்னு ஏற்கெனவே பெயர் வாங்கிட்டாரு. எனவே அவரை விட்டுடுவோம். சிற்றரசர்கள் யாருன்னு சொல்லுங்க” என்று கமல் சொன்னதும், தான் எஸ்கேப் ஆனது குறித்து மகிழ்ந்தார் அசிம். ஆனால் இது அவருக்கான கட்டம் கட்டல் என்பது புரியவில்லை.

பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

முதலில் எழுந்த வந்த ஷிவின் “அசிமும் தனமும் ஒண்ணு. அறியாதவங்க வாயில மண்ணு.. அவ்ள கடுமையா தனம் ஆடறா” என்று சொல்ல கைத்தட்டல் அதிகரித்தது. தனலஷ்மியின் முகத்தில் கடுகடுப்பு தெரிந்தது. அடுத்த வந்த ராமும் தனலஷ்மியை நோக்கி கைகாட்டி “இவங்கதான் பிரமோ பத்தி பேசினாங்க” என்று புதிதாக எதையோ கண்டுபிடித்தவர் போல் சொல்ல “நீ ஜேம்ஸ்பாண்ட்தான். ஒத்துக்கறேன். துப்பாக்கிய கீழ இறக்கு” என்பது மாதிரி சிரித்தார் கமல். விக்ரமனும் தனலஷ்மியை சுட்டிக் காட்டினார். கூடவே ஆயிஷாவையும்.

அடுத்து வந்த ஆயிஷா ஆடியது நிச்சயம் ஒரு அபத்தமான சேஃப் கேம். மிகுந்த தயக்கத்துடன் அவர் திகைத்து நிற்க “பதட்டத்துல கையில் இருக்கற பேண்டை கிழிச்சுடாதீங்க. இது பிரமோல வராது” என்று கமல் அடித்த கமெண்ட் அருமை. ‘ஏடிகே பாட்டு பாடறார்” என்று மிக மிக மொக்கையான காரணத்தைச் சொல்லி அவருக்கு கட்டினார் ஆயிஷா. “ஆயிஷாவும் சேஃப் கேம் ஆட ஆரம்பிச்சுட்டாங்களே” என்று கமல் சொல்ல வழக்கம் போல் திகைப்பான முகத்துடன் அதை மறுத்தார் ஆயிஷா. தன்னை யாராவது ஏதாவது சொல்லி விட்டால் அப்போது ஆயிஷா தரும் எக்ஸ்பிரஷன்களை கவனிப்பது சுவாரசியமாக இருக்கிறது. போலவே தனலஷ்மியும்.

பிக் பாஸ் 6 நாள் 55: `வெளியேறப் போகும் இளம் போட்டியாளர்'; 
கமல் கொடுத்த அதிரடி!

ஆயிஷாவைப் போலவே க்வீன்சியும் தயங்கி நின்று பிறகு மணியைச் சுட்டிக்காட்டி சேஃப் கேம் ஆடினார். கடைசியாக எழுந்து வந்த ஜனனி, க்வீன்சியை நோக்கி பார்க்க “க்வீன்சி இருக்கறது எபிசோட்லயே வராது. பிரமோல எங்க வரும்?” என்று மணிகண்டன் அடித்த கமெண்ட்டிற்கு வாய் விட்டு சிரித்த கமல், ‘இது பிரமோல வரலாம்’ என்று உடனே சொன்னது குறும்பு. பிறகு மணிகண்டனை தேர்வு செய்த ஜனனி வழக்கம் போல் தத்துப்பித்தென்று புரியாமல் ஏதோ காரணம் சொன்னார்.

‘பிரமோல வர்றவங்க வெற்றி பெற மாட்டாங்க’

ஒருவேளை இந்த டாஸ்க்கில் அசிம் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரைத்தான் பலரும் குத்தியிருப்பார்கள். எனவே அந்த வெறியை தனலஷ்மியின் மீது காட்டினார்கள். தன்னுடைய முறை வரும் போது ஷிவினை சுட்டிக் காட்டினார் தனலஷ்மி. “இங்க வந்திருக்கிற எல்லோருக்குமே தன் முகம் தெரியணும்ன்னு ஆசை இருக்கும்’ என்று ஏடிகே சொன்னது உண்மை. “ஆனா ஒருத்தரை அவமரியாதையா பேசி பிரமோல வரக்கூடாது’ என்று சொன்ன ஏடிகே, தனலஷ்மியை சுட்டிக் காட்டினார்.

பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

இந்த டாஸ்க் முடிந்ததும், ‘பிரமோல வந்தவங்க எல்லாம் வெற்றி பெறலை. வெற்றி பெறணும்னு அவசியமும் இல்லை. மக்கள் பிரமோ பார்த்து வாக்களிக்க மாட்டாங்க. செய்கைகளைப் பார்ப்பாங்க” என்று கமல் விளக்கம் சொன்னதும் ‘சூப்பர்.. சூப்பர்..’ என்று அசிம் மிகையாக கைத்தட்டினார். அசிமிடம் உள்ள ஒரு சாமர்த்தியம் என்னவெனில், அது தன்னைக் குறித்த மறைமுகமான விமர்சனம் என்பது புரிந்தாலும், அது வேறு யாரையோ குறிப்பது மாதிரி கூட்டத்தில் கைத்தட்டி மகிழ்வார். இந்தச் சமயத்தில் அசிமிற்கு கமல் வைத்த செக்மேட் சுவாரசியமானது. ‘அசிம். என்னை சூப்பர்ன்னு பாராட்டறது இருக்கட்டும். இதை நீங்களும் யோசியுங்க’ என்று இன்னொரு ஊமைக்குத்தை அளித்து விட்டு பிரேக்கில் சென்றார்.

இந்த டாஸ்க்கில் அசிமின் முறை வரும் போது ‘விக்ரமன் ‘ஆமாம் சாமி’ போட்டு என்னை எதிர்த்து பேசினா பிரமோல வரலாம்ன்னு பார்க்கறாரு’ என்று காரணம் சொன்னார். எனவே கமலின் தலை மறைந்ததும் “நான் பிரமோல வர்ற மாதிரியா பண்றேன்?” என்று ஷிவினிடம் சந்தேகம் கேட்டார் விக்ரமன். ‘அப்படி நான் நினைக்கலை’ என்று ஷிவின் ஆரம்பித்த வாக்கியத்தை தவறாகப் புரிந்து கொண்ட விக்ரமன் ‘போதும்..’ என்று உரையாடலை நிறுத்தினார். பிறகு மீண்டும் சென்று ஷிவினிடம் விசாரிக்க “நீங்கதான் பேச்சை பாதில நிறுத்தினீங்க. நீங்க நெனக்கறதையெல்லாம் நான் பேச முடியாது” என்று கறாராக பதில் சொன்னார் ஷிவின்.

பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

ஷவினின் இந்த சென்சிட்டிவிட்டி வியக்க வைக்கிறது. ஷிவினின் அபிப்ராயத்திற்கு விக்ரமன் மதிப்பு தருகிறார். ஆனால் அதை முழுவதுமாக கேட்கும் பொறுமையில்லை. காமிராவில் தவறாக ஏதாவது பதிவாகி விடுமோ என்று அஞ்சுகிறார். ஆனால் அசிம் சொன்ன குற்றச்சாட்டில் சற்று உண்மை இருப்பது போல்தான் தோன்றுகிறது. அசிமின் அட்ராசிட்டி வெளிப்படும் போதெல்லாம் விக்ரமன் தலையிடுவது அவசியம்தான். ஆனால் இந்தச் சந்தர்ப்பங்களை விக்ரமனும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வது போலத்தான் தோன்றுகிறது. ‘I Wont Change’ என்று பன்ச் டயலாக் பேசினார் விக்ரமன்.

கோபத்தை அடக்குவது பற்றி கமல் செய்த அருமையான உபதேசம்

பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல், அமுதவாணனுக்கும் கதிரவனுக்கும் இடையில் நடந்த தள்ளுமுள்ளு பற்றி விசாரித்தார். ‘அதுல மூணாவது நபர் வராமப் போயிருந்தா சுமுகமா முடிஞ்சிருக்கும்’ என்று கதிரவன் சொன்னது மிகச்சரியான பாயிண்ட். ஆனால் அதை அவர் கறாராகச் சொல்லாமல், அசிம் தொடர்பானது என்பதால் சிரித்து மழுப்பி சொன்னார். ‘ஏன் இந்தப் பிரச்னை திசை மாறுச்சு.. அதுக்கு காரணம் யாரு.. அசிம் ஏன் விதியை மீறி வீட்டுக்குள்ள வந்தாரு?” என்று தன் டார்க்கெட்டை மெல்ல நெருங்கிய கமல், இடையில் தனலஷ்மிக்கும் ஒரு ஊமைக்குத்தை போனஸாக அளித்தார். ‘அசிம் மட்டுமல்ல. பாருங்க தனலஷ்மியும் விதி மீறல் செய்யறாங்க. இப்ப மைக் போடாம உக்காந்திருக்காங்க’ என்று கமல் சொல்ல, நாக்கைக் கடித்துக் கொண்டு பதறி ஓடினார் தனலஷ்மி. இதனால் வீடு கலகலத்தது.

பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

அசிமை முன்னிட்டு கமல் நிகழ்த்திய அந்த நீண்ட உரை இருக்கிறதே.. அற்புதம்.. “அசிம் தன்னை மாத்திக்கலை. அவரு கோபப்பட்டு சண்டை போடும் போதெல்லாம் ‘ரெட் கார்ட்’ கொடுங்கன்னு சொல்றாங்க. நானும் கோபப்பட்டா.. எனக்கும் அசிமிற்கும் என்ன வித்தியாசம்.. கோபம்ன்றது ஒரு போதை மாதிரி. அனுபவிக்கும் போது நல்லா இருக்கும். பாரதி சொன்ன ரௌத்ரம் வேற. கோபம் வேற. ஆம்பளைன்னா ‘அடிடா’ன்னு சொல்றதுல கம்பீரம் இல்ல. அப்ப அவங்களை கண்டிச்சு அடிக்கற அண்ணன் யாரு?..

.. நான் இந்த நிகழ்ச்சியோட ஆங்க்கர்.. நங்கூரத்தோட வேலை கப்பலை கவிழாம நிலைநிறுத்தி காப்பாத்தறதுதான். ‘இல்ல சார்.. நீங்க ‘ஹோஸ்ட்’ன்னு சொல்றாங்க. அப்படின்னா என் பொறுப்பு இன்னமும் கூடுது. உங்களை விருந்தாளிங்க மாதிரி பாதுகாப்பா கவனிச்சக்கணும். கோபம் வரும் போதெல்லாம் ‘பத்து நிமிஷம் கழிச்சு இதைப் பத்தி பேசலாம்’ன்னு சொல்லிப் பாருங்க. பிரமாதமா இருக்கும். ஆனா அதை ஃபாலோ பண்றது கஷ்டம். என்னையும் சேர்த்துதான் சொல்றேன். கோபத்துல தப்பு செய்யும் போது உள்ளே ஒரு எச்சரிக்கை குரல் கேட்டுக்கிட்டே இருக்கும். கோபத்தின் சத்தம் காரணமா அந்தக் குரல் நமக்கு கேட்கறதில்லை...

பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

‘.. கத்தி கத்தி அசிமின் தொண்டை மட்டும் காய்ஞ்சு போகலை.. அவரோட சிந்தனையும் வறண்டு போச்சு.. ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ன்னு ஒரு பழமொழி இருக்கு. அவனுக்கு புத்தி இல்லைன்னு அர்த்தமில்லை. ஆறாவது அறிவிற்கான தகுதியை அப்ப இழந்துடறோம். நான் ஸ்கேல் எடுத்து அடிக்கற வாத்தியார் இல்லை. அதை விட பெரிய தண்டனை மற்றும் பரிசை தர்றதுக்கு மக்கள் இருக்காங்க. இங்க நடக்கற சண்டையைப் பார்த்து அவங்க அசௌகரியமா முகம் சுளிக்கக்கூடாது. அப்படி நடக்காம பார்த்துக்க வேண்டியது என் கடமை..’ என்றெல்லாம் கமல் நீளமாகவும் ஆத்மார்த்தமாகவும் பேசி முடித்த போது ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்லாது, பார்வையாளர்களும் உணர்ச்சிகரமான நெகிழ்வுடன் கைத்தட்டினார்கள்.

சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டிய ரச்சிதா

“ஓகே.. இந்தச் சண்டையால ஆதாயம் அடைஞ்சது யாருன்னு தெரியுமா... பாருங்க. ரச்சிதாவால சிரிப்பை அடக்க முடியல.. நீங்க போட்ட சண்டைல அவங்களுக்கு நாமினேஷன் ஃப்ரீ கிடைச்சது. அசிம். நீங்களே இந்த வாய்ப்பை தட்டுல வெச்சு கொடுத்துட்டீங்க..” என்று வறுத்தெடுத்த கமல், கூடவே ரச்சிதாவிற்கும் ஒரு குட்டு வைத்தார். “இந்த முறை தாயம் விழுந்துடுச்சு. ஒவ்வொரு முறையும் இந்த அதிர்ஷ்டம் வராது. இது உங்களுக்கு வார்னிங். போராடி வெற்றி பெறுங்க. அதன் சுவையே தனி” என்று சொல்லி விட்டு கடைசியாக ‘ரச்சிதா நீங்க SAVED’ என்று இனிப்பையும் தந்தார்.

பிறகு அசிமை நோக்கி உக்கிரமாக வண்டியைத் திருப்பிய கமல் “நீங்க உக்காருங்க அசிம்.. உங்களுக்கு நான் எதையும் சொல்லப் போறதில்லை. சொல்லிச் சொல்லி எனக்கே மனப்பாடம் ஆயிடுச்சு.. நீங்க என்ன சொல்வீங்கன்னும் எனக்கும் தெரியும். ரச்சிதாவிற்கு சொன்ன அதே விஷயம்தான். தரம் குறையாமல் விளையாடுங்க. அசிமையும், தனலஷ்மியையும் மக்கள் திட்டாம இருக்கறதுக்கு நான்தான் பாடுபட வேண்டியிருக்கு. ஏன்னா.. கூடவே என் பேரும் சேர்ந்து கெடும். அந்த சுயநலம்தான். கெட்டிக்காரத்தனம்தான் உண்மையான பாராட்டை தேடித் தரும். அதான் சந்தோஷம்..’ என்று கமல் நிகழ்த்திய உபதேசம் மிக அருமையானது. இது வாழைப்பழ ஊசி கூட இல்லை. பிரியாணியில் புதைக்கப்பட்ட பெரிய ஆணி

பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘ரியாக்ஷன் சேர்ல உக்காந்தவங்கள்லாம் யாரு. இப்ப அவங்க பதிலுக்கு தாங்கள் கேள்வி கேட்க விரும்பிய நபர்களை அமர்த்தி வைத்து விசாரிக்கலாம்’ என்று வாய்ப்பு தந்தார். இதில் தனலஷ்மியைத்தான் பலரும் கேப் விடாமல் அமர வைத்து அழகு பார்த்தார்கள். ஒரு கட்டத்தில் ‘சார். நான் போலாமா?’ என்று தனலஷ்மி பரிதாபமாக கேட்க “அதை அவங்கதான் முடிவு பண்ணனும்’ என்று கமல் சொன்னது நல்ல குறும்பு. அந்தளவிற்கான அட்ராசிட்டியை தனலஷ்மி செய்திருந்தார். வினை விதைத்தவன் வினையறுப்பான்.

ரியாக்ஷன் சேர் விளையாட்டு – பழிக்குப் பழி

முதலில் வந்த ஏடிகே தனலஷ்மியை அமர்த்தி “ஏன் என்னை மரியாதையில்லாம பேசினீங்க..” என்று ஆவேசமான தொனியில் பல கேள்விகளைக் கேட்க “கோபத்துல பேசிட்டேன்’ என்று சமாளித்தார் தனலஷ்மி. ஏடிகேவின் ஆக்ரோஷத்தைப் பார்த்த கமல், அவரை இடைமறித்து ‘இது உங்களுக்குத் தரப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பு. இதைப் பழிவாங்கறா மாதிரி செய்யாதீங்க. கண்ணியமான விசாரணையாவும் செய்யலாம். நடந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் அதே டோன்ல பேசினா பிரச்சினை ஆறாது. சுருக்கமா சொல்லிடணும்’ என்று செய்த உபதேசம் அருமையானது.

அடுத்து வந்த ஷிவின், தனலஷ்மியை நோக்கி “கண்ல வெங்காயம் தேச்சு அழ வெச்சே. வெங்காயத்துல அழுகை வருமா. கண்ணீர் வேற.. அழுகை வேற.. ஏன் பூட்டு போட வந்தப்ப ஏன் அக்ரெஸ்ஸிவ்வா ஆடின? அது சாதாரண விளையாட்டுதானே.. கோபத்துலயும் நிதானம் வேணும்’ என்று கமலின் சாயலில் பேச, அதை மனமார பாராட்டிய கமல் “இதை மத்தவங்க உதாரணமா பின்பற்றுங்க” என்று சொன்னார்.

பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

அடுத்து வந்த ராமிற்கும் தனலஷ்மிதான் டார்கெட். ‘மணிகண்டன்தான் பெஸ்ட் பிளேயர்ன்னு அடிக்கடி சொல்ற. ராம் எதுவும் பண்ண மாட்டான்னு சொல்றே.. உடம்பை வெச்சிதான் வெற்றியா. நான் ஆறடி, தொன்னூறு கிலோ இருக்கேன். என்னாலயும் மணி மாதிரி ஆக்ரோஷமா ஆட முடியும். ஆனா ஆட மாட்டேன். அதுதான் வித்தியாசம். பழங்குடிகள் பசியில் இருக்கும் போது எங்க கண்ணு முன்னாடியே வெச்சு சாப்பிடற. சாப்பாடு விஷயத்துல விளையாடக்கூடாது.” என்று பேசிய போது அவரின் மனதில் இருந்த காயத்தின் வலி தெரிந்தது. ராமைப் பாராட்டிய கமல் “ஆனா. பாருங்க... நான் வாய்ப்பு தந்த போதுதான் பேசறீங்க.. இப்படி இல்லாம நீங்களா முன் வந்தும் விளையாடுங்க” என்று ராமிற்கும் ஊமைக்குத்தை அளித்தார்.

அடுத்ததாக அசிமை நாற்காலியில் அமர்த்திய ரச்சிதா, ‘மத்தவங்களை மட்டம் தட்டியே ஜெயிக்கப் பார்க்காதீங்க.. ‘நீ என்ன கிழிச்சிட்டேன்னு கேட்கறீங்க” என்று ஆவேசமாக பேசிய போது ராமைப் போலவே இவருக்குள் இருந்த மனக்காயத்தையும் உணர முடிந்தது. ‘அது டாஸ்க்கிற்காக கோபம் வர வைக்கற மாதிரி பேசியது’ என்று அசிம் சமாளித்தாலும் ‘உள்ளத்தில் இல்லாமல் அந்த வார்த்தைகள் வராது என்பதுதான் உண்மை. அசிம் அடிக்கடி இடைமறித்து விளக்கம் அளிக்க ‘ரச்சிதாவை பேச விடுங்க’ என்று கமல் குறுக்கிட்டது அருமை. ரச்சிதாவின் மனக்குமறலை ஏற்றுக் கொண்ட கமல் “அசிமிற்கு நகைச்சுவை இல்லைன்னு சொன்னீங்க. நீங்களும் அதை கொஞ்சம் ஃபாலோ பண்ணலாம்’ என்று அனுப்பி வைத்தார்.

அடுத்ததாக ஆயிஷாவை நாற்காலியில் அமர வைத்த விக்ரமன் “பொம்பளை மாதிரி புறணி பேசாதீங்கன்னு எ்ன்னைச் சொல்றீங்க. ஏன் பொம்பளைங்களை அப்படி ஜெனரலைஸ் பண்றீங்க. அது நியாயமல்லன்னு உணர்றீங்களா?” என்று பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ்ஸூடன் கேட்க, வழக்கம் போல் திகைப்பான முகபாவத்தைத் தந்த ஆயிஷா, வேறு வழியில்லாமல் தன் தவறை ஒப்புக் கொண்டார். தனலஷ்மியாக இருந்தால் ஒப்புக் கொண்டிருந்திருக்க மாட்டார்.

பிக் பாஸ் 6 நாள் 55
பிக் பாஸ் 6 நாள் 55

அடுத்ததாக அசிமை அமர வைத்து கேள்விகளை அடுக்கினார் ஜனனி. “உனக்கு வெட்கமில்ல... அறிவில்லன்னு சொன்னீங்க. சாப்பிடற விஷயத்தை வெச்சு கிண்டல் பண்ணீங்க” என்றெல்லாம் ஆவேசமாக கேட்க “அது டாஸ்க்கிற்காக பண்ணது’ என்று அதே புராணத்தைப் பாடிய அசிம் “நீங்க கூடத்தான் என்னை லூஸூன்னு சொன்னீங்க” என்று பதிலுக்கு கேட்க ‘அதுக்குத்தான் மன்னிப்பு கேட்டுட்டேன்” என்று ஜனனி விளக்கம் சொன்னார். ‘இனிமே பெயர் சொல்லி கூப்பிடாத’ என்று அசிம் சொன்ன வசனத்தையும் ஜனனி பஞ்சாயத்தில் கொண்டு வர இதற்கு கமல் சொன்ன பொழிப்புரை மிக அருமையானது.

‘கோபமா இருக்கும் போது நாம கண்ணாடி பார்க்கறதில்லை. அதை யாராவது பதிவு செஞ்சு காண்பிச்சா.. நம்ம முகம் நமக்கே விகாரமா தெரியும். குருதிப்புனல் படத்துல விசாரணை செய்யற அதிகாரியே.. ஒரு கட்டத்தில் விசாரணைக்கு ஆளாகிற ஆசாமியா மாறிடுவார். அப்படித்தான் இந்த டாஸ்க்கை நடத்த விரும்பினேன். இதில் கிடைக்கும் அனுபவம் வீட்டிற்கு மட்டுமல்ல, உங்களுக்கு வெளியிலும் உதவும்” என்கிற உபதேசத்தோடு விடை பெற்றார் கமல். (இந்த விஷயங்களையெல்லாம் பிக் பாஸ் கட்டுரைகளில் ஏற்கெனவே பலமுறை நான் முறை பதிவு செய்திருக்கிறேன் என்பதையும் பணிவுடன் இங்கு சொல்லிக் கொள்கிறேன்!).

ஓகே.. இந்த வார எவிக்ஷன் யார்? அந்நியன் திரைப்படத்தில் ‘சிக்கன் பகோடா’ என்கிற பெயரை விவேக் வெவ்வேறு வடிவங்களில் ஜம்பிள் செய்து சொல்வார். அது போல இவரது பெயரை கட்டுரையில் வெவ்வேறு விதமாக எழுத வேண்டியிருந்தது. இனி அந்தப் பிரச்சினை இருக்காது. இதுதான் எவிக்ஷன் நபருக்கான க்ளூ.