Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 56: `அடுத்த வாரம் டபுள் எவிக்சன்!' - யாருக்கு செல்வாக்கு அதிகம் கமல் வைத்த டெஸ்ட்

பிக் பாஸ் 6 நாள் 56

“எனக்குத் தெரியல சார்.. பேலன்ஸ்டா விளையாடறேன்னு நெனக்கறேன்” என்று டாப் ரேட்டிங்கில் வந்த ஷிவின் சொன்ன போதும் மக்களின் கைத்தட்டல் வந்தது.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 56: `அடுத்த வாரம் டபுள் எவிக்சன்!' - யாருக்கு செல்வாக்கு அதிகம் கமல் வைத்த டெஸ்ட்

“எனக்குத் தெரியல சார்.. பேலன்ஸ்டா விளையாடறேன்னு நெனக்கறேன்” என்று டாப் ரேட்டிங்கில் வந்த ஷிவின் சொன்ன போதும் மக்களின் கைத்தட்டல் வந்தது.

பிக் பாஸ் 6 நாள் 56
க்வீன்சி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் ஆட்டத்திற்கு ஏற்ற குணாதிசயங்கள் அவரிடம் இல்லாமல் இருக்கலாம். இது அவரின் பிரச்சினையல்ல. இது போன்ற சுமாரான ஆட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு ஆட்டம் இன்னமும் சூடு பிடிக்கும். ‘அசிம், தனலஷ்மி போன்றவர்களுக்கு ஏன் ஆதரவு இருக்கிறது என்றால், சுமாரான போட்டியாளர்களே இன்னமும் உள்ளே இருக்கும் போது, இவர்களுக்கு என்ன குறைச்சல்?!’ என்று பார்வையாளர்கள் நினைக்கலாம். சுமாரானவர்கள் வெளியே சென்ற பிறகு இவர்களின் நிறம் இன்னமும் அதிகமாக வெளுக்கும்.
பிக் பாஸ் 6 நாள் 56
பிக் பாஸ் 6 நாள் 56

அசிம் திறமையான பிளேயர் என்பதில் மறுப்பில்லை. அவரின் கட்டுக்கடங்காத கோபமும் அநாகரிகமான செயல்பாடுகளும்தான் அச்சுறுத்துகிறது. ஆனால் அசிமிற்கு பல ரசிகைகள் இருக்கிறார்கள் போல. ‘Rugged Boy’-ஐ சில பெண்கள் விரும்பும் உளவியல் அம்சமோ என்னமோ?! ஆனால் இந்த முரட்டுத்தனத்திற்குப் பின்னால் ஆபத்துக்களும் இருக்கின்றன என்பதை அவர்கள் உணர வேண்டும்.. கோபம் வருகிற சமயங்களில், பெண்களைக் கூட ஏகவசனத்தில் தொடர்ந்து பேசும் அசிமிற்கு பெண் பார்வையாளர்கள் ஆதரவு தருவது ஒரு சுவாரசியமான முரண்.

நாள் 56-ல் நடந்தது என்ன?

‘வளர்ச்சி முக்கியம். வெற்றி என்பது வளர்ச்சியல்ல. தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல. நகர்ந்துகொண்டே இருப்பதுதான் முக்கியம்’ என்கிற அழகான முன்னுரையோடு அரங்கிற்குள் வந்தார் கமல்.

அகம் டிவி வழியாக வீட்டிற்குள் சென்றவர் “எந்தப் பொருளும் இல்லாம ஒரு விளையாட்டு. நீங்க அடிக்கடி பண்ற விஷயம்தான். முகத்திற்கு நேராகப் பாராட்டி விட்டு பின்னால் சென்று புறணி பேசுபவர் யார்?. வரிசையா சொல்லுங்க’ என்று கமல் ஆரம்பித்த முதல் அயிட்டமே வில்லங்கமாக இருந்தது. முதலில் எழுப்பப்பட்ட தனலஷ்மி ‘அதாவது சார்.. இப்படித்தானே?’ என்று ஆட்டத்தின் விதியை தன்னுடைய மொழியில் சொன்னதும் ‘யெஸ்.. நீங்க சொன்னதுதான் கரெக்ட்’ என்று கமல் சொன்னது குறும்பு.

பிக் பாஸ் 6 நாள் 56: கமல்
பிக் பாஸ் 6 நாள் 56: கமல்

‘புறணி பேசும் நபர்கள் யார்.. யார்?’

புறணி பேசுவது மனிதனின் ஆதார குணம். மிக மிக அரிதானவர்கள்தான் இதைச் செய்ய மாட்டார்கள். புறணியால் அதைப் பேசுபவர்களுக்கு ஒரு மனஆறுதல் கிடைத்தால் கூட ஓகே. ஏனெனில் அதிகாரம் உள்ளவர்களிடம் பல விஷயங்களை முகத்திற்கு நேராக சொல்ல முடியாது. புறணி பேசித்தான் ஆற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் இன்னொருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விஷமமாக பேசுவதுதான் ஆபத்து. ‘இங்க எல்லோருமே பேசுவோம்’ என்று ஆயிஷா, மைனா போன்றவர்கள் ஒப்புக் கொண்டது நேர்மை.

‘மணி ஜெயிக்கக்கூடாது என்று முதலில் சொன்னவர், பிறகு மணியை நான்தான் ஜெயிக்க வெச்சேன்’ என்று சொன்னார்’ என்று அசிமைப் பற்றி விக்ரமன் சொன்ன போது ‘இது பயங்கரமான மேட்டரா இருக்கே!’ என்று கமல் வியந்தார். கதிரவன் போன்றவர்கள் சேஃப் கேம் ஆடினார்கள். ரச்சிதா ஏடிகேவைப் பற்றி சொன்னது சரியான பாயிண்ட். ‘எல்லோருக்கும் நல்லவராக’ இருக்கும் விருப்பத்தில் ஏடிகே மாற்றி மாற்றிப் பேசுகிறார். அசிம் பற்றி சொன்ன ஷிவின், ஜனனி தொடர்பான இரு விவகாரங்களைப் பகிர்ந்து கொள்ள ‘ஒருத்தருக்கு மாற்றம் எப்ப வேணா நிகழலாம். அப்பா சொல்லி கேட்காதவங்க.. பிரெண்டு சொல்லி கேட்கலாம்” என்று சொன்ன கமல், பிறகு சொன்ன ஆலோசனை அருமை.

பிக் பாஸ் 6 நாள் 56; விக்ரமன்
பிக் பாஸ் 6 நாள் 56; விக்ரமன்

.. நீங்க முன்னாடி, பின்னாடி பேசறதா நெனச்சுக்கறீங்க. ஆனா எல்லோமே மக்களுக்கு முன்னாடிதான். காமிராக்கு பொய் பேசத் தெரியாது. அது ஒரு கருவிதான். சத்தம் சாதிப்பதை விடவும் மௌனம் சிறப்பாக சாதிக்கும். இது ஆத்திரத்தை வெளிக்காட்டுவதற்கான இடம் இல்லை. இன்டெலிஜென்ஸ்தான் தேவை. ஆனா அது குறைஞ்சிக்கிட்டு இருக்கு.. அசிம் கோபப்படறார். சரி.. நீங்க ஏன் அதுல பங்கு எடுத்துக்கறீங்க.. உங்களுக்கும் சத்தம் பிடிக்குதோ? தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் ஒரே சத்தமா இருக்கும். ஒருத்தர் சொல்ற நல்ல பாயிண்ட் கூட இதில் அமுங்கிடும்… அமைதியா பேசுகிறவரை மக்களுக்குப் பிடிக்கும்..

.. Show must go on. But not at the cost of Audience boredom.. இந்த ஷோ உங்களுக்கெல்லாம் ஒரு அனுபவம்’.. என்று வழக்கம் போல நீளமான உபதேசத்தை சொல்லி முடித்தார் கமல். ஆனால், ‘டிரஸ் எப்படியிருக்குன்னு ஒருத்தர் கேட்டா. இதோ பத்து நிமிஷத்துல வந்துடறேன்..ன்னு சொல்லி சமாளிக்கலாம்’ என்று பேச்சின் இடையில் அவர் சொன்ன ஓர் ஆலோசனை சரியாகப் படவில்லை. அது அபிப்பிராயம் கேட்டவரை அவமதிப்பது போல் ஆகாதா?!

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் – பாராட்டு வாங்கிய ஷிவின் & தனலஷ்மி

அடுத்ததாக லக்ஸரி பட்ஜெட் விஷயத்திற்கு நகர்ந்த கமல், ‘இதன் வெற்றியாளர் மணி.. என்ன காரணம்?’ என்று விசாரிக்க ‘நீச்சல்குளம்தான் காரணம்’ என்று மற்றவர்கள் கோரஸாக சாட்சியம் சொன்னது நல்ல குறும்பு. ‘நானும் துரத்தி விளையாடினேன் சார்.. அப்புறம். ‘குதிடா கைப்புள்ள’ன்னு நீச்சல் குளத்துல குதிச்சிட்டேன்’ என்று ஜாலியாக சொன்னார் மணி. வீட்டுக்கூரை மேல் ஏறிய அமுதவாணனிடம் ‘அந்த முன்னேற்பாடுல்லாம் ஓகே.. ஆனா சுவாரசியம் குறைஞ்சது. நீங்க தப்பிச்சுப் போக முயற்சி பண்றீங்கன்னு பயந்துட்டாங்க’ என்று கமல் சொன்னதும் வீடு மட்டுமல்லாமல் அரங்கமும் இணைந்தது சிரித்தது. அமுதவாணன் காமிரா முன்னால் ரகசியமாக சொல்லி விட்டாவது செய்திருக்கலாம்.

பிக் பாஸ் 6 நாள் 56; ஷிவின்
பிக் பாஸ் 6 நாள் 56; ஷிவின்

‘லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்ல யாரு ரொம்ப பிரமாதமா ஆடியது?’ என்கிற கேள்விக்கு சந்தேகமேயில்லாமல் ஷிவின் – தனலஷ்மியின் போராட்டம் சொல்லப்பட்டது. ஷிவினைப் பாராட்டிய கமல், ‘நீங்க இதை விளையாட்டுன்றதை மறந்துடறீங்க.. அவ்வளவு உணர்ச்சிவசப்படத் தேவையில்லை..’ என்று தனலஷ்மிக்கு அட்வைஸ் செய்தார். சாதாரண பூட்டு விளையாட்டிற்கு அத்தனை கொலைவெறியான எக்ஸ்பிரஷன் தந்தார் தனலஷ்மி. ‘அசுவாரசியமா விளையாடியது யாரு?’ என்கிற கேள்விக்கு ஏடிகே மற்றும் அசிமின் பெயரை தனலஷ்மி சொல்ல “ஓகே. நீங்க சீரியஸா விளையாடறதை சொல்றாங்க.’ என்று ஒரு நீண்ட வாக்கியத்தை அவருக்குச் சொன்ன கமல், அதன் நடுவில் தனலஷ்மி காப்பாற்றப்பட்ட செய்தியை ஒளித்து வைத்த குறும்பு ரசிக்கத்தக்கதாக இருந்தது. கமல் பிரேக்கில் சென்றதும் வழக்கம் போல் வீட்டிற்குள் விவாதங்கள் நிகழ்ந்தன.

“அது ஏண்டா என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேட்டே?” என்கிற கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி, ‘இத்தனை போ் புறணி பேசும் போது என்னை மட்டும் ஏன் சொன்னீங்க?” என்று ஆயிஷாவிடம் கோபித்துக் கொண்டார் ஏடிகே. ஜனனி விவகாரம் தொடர்பாக ஷிவினுக்கும் அசிமிற்கும் இடையில் ஒரு மினி வாக்குவாதம் நடந்தது.

மக்களிடம் செல்வாக்கு பெற்ற போட்டியாளர்

பிரேக் முடிந்து வந்த கமல், பார்வையாளர்களிடம் ரகசியமாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். ‘இப்ப நடக்கப் போற நிகழ்ச்சிக்கு நீங்க கைத்தட்டாம இருங்க. இது வீட்ல இருக்கறவங்களோட பாப்புலாரிட்டி பற்றிய புரிதல். கைத்தட்டி நீங்க காட்டிக் கொடுத்துடாதீங்க’ என்று கேட்டுக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.

‘மக்களின் பார்வையில் யாருக்கு அதிக ரேட்டிங்கும் யாருக்கு குறைந்த ரேட்டிங்கும் இருக்கும்’ என்பதை ஒவ்வொருவரும் யூகித்துச் சொல்ல வேண்டும்’ – இதுதான் டாஸ்க். எதிர்பார்த்தபடியே உயர்ந்த ரேட்டிங்கில் ஷிவினின் பெயர் அதிக முறை வந்தது. ஷிவினை மனம் திறந்து பாராட்டி ஆச்சரியப்படுத்தினார் அசிம். அதற்குப் பிறகு விக்ரமனின் பெயரும் நிறைய முறை வந்தது. ஏடிகேவின் பெயரும் பலமுறை வந்தது எதிர்பாராத ஆச்சரியம். ஷிவின் தன்னைச் சொன்னதால், விக்ரமன் பதில் மொய் வைப்பார் என்று பார்த்தால், இல்லை. அவர் ஏடிகேவின் பெயரைச் சொன்னார்.

பிக் பாஸ் 6 நாள் 56; ரக்‌ஷிதா
பிக் பாஸ் 6 நாள் 56; ரக்‌ஷிதா

குறைந்த ரேட்டிங்கில் அசிமின் பெயர் கணிசமாக வந்தது. அவருடைய கோபமும் வசையும்தான் அவருக்கு கெட்ட பெயர் வாங்கித் தருகிறது. ரச்சிதா, மைனா, அமுதவாணன், தனலஷ்மி போன்ற பெயர்களும் கலவையாக வந்தன. ‘மக்களின் கைத்தட்டலை வைத்து இந்த ரேட்டிங்கை தீர்மானித்தேன்’ என்று ராம் சொன்னது புத்திசாலித்தனம். “நீங்க செலக்ட் பண்ணும் போது பார்வையாளர்களிடமிருந்து எந்த ரியாக்ஷனும் வரலை. கவனிச்சீங்களா.. அவங்க கைத்தட்டல் உங்களுக்கு எந்த influence-ம் பண்ணிடக்கூடாதுன்னு அமைதியா இருக்கச் சொன்னேன்” என்ற கமல், அமைதி காத்த பார்வையாளர்களுக்கு நன்றி சொன்னார்.

குறைவான ரேட்டிங்கில் அதிக முறை இடம் பெற்ற அசிமிடம் விளக்கம் கேட்கப்பட்டது. கெத்தாக எழுந்த அசிம் “அது இவங்களோட பார்வை. அதில் உண்மையில்லை. வெளியே போனாதான் தெரியும். இது எங்களோட கணிப்புதான். எனக்கு கோபம் வருவதை ஒத்துக்கறேன். ஆனா இதை வெச்சு மட்டும் மக்கள் பார்க்க மாட்டாங்க” என்று அவர் தன்னம்பிக்கையுடன் சொன்ன போது இளம் ரசிகைகளிடமிருந்து பலத்த கைத்தட்டல் வந்தது. (Rugged boy effect?!).

இங்குதான் கமலின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. ‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா’ என்கிற வசனம் போல “ஒருவேளை நீங்க பேசும் போது கைத்தட்டுங்கன்னு நான் கூட சொல்லியிருக்கலாம். இல்லையா?’ என்று சொல்லி அசிமின் மிகையான தன்னம்பிக்கையின் நுனியை அநாயசமாக உடைத்தார். ‘மக்களின் கைத்தட்டல், போட்டியாளர்களுக்கு எந்தவித செல்வாக்கையும் ஏற்படுத்தி விடக்கூடாது’ என்பதுதான் கமலின் நோக்கம் என்பது தெரிந்தது. “எனக்குத் தெரியல சார்.. பேலன்ஸ்டா விளையாடறேன்னு நெனக்கறேன்” என்று டாப் ரேட்டிங்கில் வந்த ஷிவின் சொன்ன போதும் மக்களின் கைத்தட்டல் வந்தது. (இவங்களைப் புரிஞ்சுக்கவே முடியாது!).

பிக் பாஸ் 6 நாள் 56: மைனா
பிக் பாஸ் 6 நாள் 56: மைனா

‘போன சீசன்களில் போட்டியாளர்களுக்கு சில புனைப்பெயர்கள் வைக்கப்பட்டன. அது மாதிரி இந்த சீசன் விசேஷம் என்ன?’ என்று ஜாலியான பகுதிக்கு அடுத்து நகர்ந்தார் கமல். அசிமிற்கு ‘பஸ்ஸர்’, பருத்தி மூட்டை, தனலஷ்மிக்கு ‘சவுண்டு சரோஜா’, விக்ரமனிற்கு ‘வண்டு முருகன்’, மணிக்கு ‘ரோஷன்’ என்று வைக்கப்பட்டிருந்த பெயர்கள் கிண்டலாக சபையில் இறைபட்டன. ‘எப்பப்பாரு பொண்ணுங்க கூடத்தான் இருக்கான். எங்களைச் சோ்த்துக்கவே மாட்டேன்றான்’ என்று மணியைப் பற்றி ஜாலியாக புகார் சொன்னார் அசிம்.

வெளியேறிய செந்தமிழ்ச் செல்வி

ஜாலியாக பேசி விட்டு அடுத்தபடியாக ‘எவிக்ஷன்’ பகுதிக்கு நகர்ந்தார் கமல். மைனா, க்வீன்சி, ஜனனி ஆகிய மூவரும் இந்தப் பட்டியலில் இருந்தார்கள். ‘நானா இருக்கலாம்’ என்று க்வீன்சி சொல்ல, மற்ற இருவரும் ‘நான் போக மாட்டேன்’ என்று சொன்ன ஆருடம் பலித்தது. ஆம், க்வீன்சிதான் எவிக்ட் ஆனார். ‘எவ்ள ஹாப்பியா போறா பாரேன்’ என்று அசிம் சொல்ல, ஆயிஷா கண்ணீர் விட்டார். மேடைக்கு வந்த க்வீன்சி “இப்பத்தான் மூச்சே வருது. சுதந்திரத்தோட அருமை இப்பத்தான் புரியது. என்னால முடிஞ்சத பண்ணேன்” என்று கமலிடம் சொல்லி விடைபெற்றார். பயண வீடியோவில் ‘மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே’ பாடலுக்கு இவர் ஆடியிருந்த நடனக்காட்சி அருமையாக இருந்தது.

பிக் பாஸ் 6 நாள் 56: `அடுத்த வாரம் டபுள் எவிக்சன்!' - யாருக்கு செல்வாக்கு அதிகம் கமல் வைத்த டெஸ்ட்

‘அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கு’ என்கிற வெடிகுண்டை வீட்டிற்குள் தூக்கிப் போட்ட கமல், ‘எங்க வீட்டு கிச்சன்ல இருந்து சாப்பாடு அனுப்பறேன்’ என்று சொல்லி தண்ணீரையும் ஊற்றினார். க்வீன்சியை வழியனுப்பி விட்டு ‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்தார் கமல்.

இந்த வாரம் கமல் அறிமுகப்படுத்திய புத்தகம், பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய ‘The Tigerclaw Tree’ என்கிற ஆங்கில நாவல். இதே ஆசிரியரால் ‘புலிநகக் கொன்றை’ என்று தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு வைணவக் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் வழியாக தமிழக, இந்திய வரலாற்றின் பாதையில் பயணிக்கும் நூல் இது. இனம், சாதி ஆகியவற்றைக் கடந்து மனித குணாதிசயங்களை பதிவு செய்திருக்கிறது. இதை எழுதியவர் என் நண்பர். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எங்களுக்குள் ஆரோக்கியமான நட்பு பரவசத்துடன் தொடர்கிறது’ என்ற கமல், வணக்கம் கூறி விடைபெற்றுக் கொண்டார்.

மாறும் கூட்டணிகள், வியூகங்கள்

டாஸ்க்கில் நடந்த விஷயங்கள், வீட்டின் உள்ளே விவாதங்களாக, உரையாடல்களாக வெளிப்பட்டன. `உன் கிட்ட எண்டர்டெயின்மென்ட் குறைஞ்சிடுச்சி. பார்த்துக்க’ என்று அமுதவாணனை சரியாக அலர்ட் செய்தார் மைனா. `அது சரி. ஆனா உன் கிட்ட கேம் குறைஞ்சிடுச்சு. சீரியஸா இல்லைன்னு சொல்றாங்க. கவனிச்சியா?’ என்று பதிலுக்கு அமுதவாணன் கேட்டதும் சரியே. தன் தனிப்பட்ட திறமைகளைக் காட்டும் அதே சமயத்தில், ஆட்டத்திலும் கவனம் செலுத்துவதுதான் இதற்கான தீர்வாக இருக்கும்.

பிக் பாஸ் 6 நாள் 56: அமுதவாணன்
பிக் பாஸ் 6 நாள் 56: அமுதவாணன்

‘விக்ரமன் டாஸ்க்கைத்தாண்டி வேற ஒண்ணு பண்றாரு.. நாமளும் கத்துக்கணும்' என்று அமுதவாணனும் மணியும் பிறகு பேசிக் கொண்டிருந்தார்கள். `கேம் ஆடறதை விடவும் பிரச்னை பத்தி பஞ்சாயத்து பேசினா. போதும் போலிருக்கு’ என்று அலுத்துக் கொண்டார் அமுதவாணன். இன்னொரு பக்கம் ‘அசிம் நம்மளை யூஸ் பண்ணிக்கறான்’ என்று மைனா சொல்ல அதை ஆமோதித்தார் மணி. ‘விக்ரமனுக்கு சர்காஸ்டிக்காதான் பச்சை ரேட்டிங் கொடுத்தேன்’ என்று மணி சொல்லியது முரண்.

க்வீன்சி சென்றதால் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த ஷிவினுக்கு ஆறுதல் சொன்னார்கள். ‘இனிமே நமக்குள்ள தவறான புரிதல் வரக்கூடாது’ என்று அசிமிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஏடிகே. பரிசாக வந்த டிராவல் பேகை வைத்துக் கொண்டு ‘டோரா புஜ்ஜி’ ஆட்டத்தை ஜனனி நிகழ்த்திக் கொண்டிருந்த காமெடியோடு எபிசோட் முடிந்தது.

ஆக.. கூட்டணிகளும் வியூகங்களும் பார்வைகளும் பிக் பாஸ் வீட்டில் மாறிக் கொண்டிருக்கின்றன. வரும் வாரங்களில் இவை எப்படியாக எதிரொலிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.