Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 57: தனலஷ்மி ரீமா சென் ஆயிஷா தமன்னா; ரச்சிதா ரம்யா கிருஷ்ணன்; நேற்று நடந்ததென்ன?

பிக் பாஸ் 6 நாள் 57

முட்டையெல்லாம் காலி ஆயிடுது.....’ என்று விக்ரமனும் அமுதவாணனும் புகார் சொல்ல “நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். அவங்க கிட்ட சொல்லியும் பார்த்தாச்சு.. என்னதான் பண்றது?” என்று சலித்துக் கொண்டார் ரச்சிதா.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 57: தனலஷ்மி ரீமா சென் ஆயிஷா தமன்னா; ரச்சிதா ரம்யா கிருஷ்ணன்; நேற்று நடந்ததென்ன?

முட்டையெல்லாம் காலி ஆயிடுது.....’ என்று விக்ரமனும் அமுதவாணனும் புகார் சொல்ல “நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். அவங்க கிட்ட சொல்லியும் பார்த்தாச்சு.. என்னதான் பண்றது?” என்று சலித்துக் கொண்டார் ரச்சிதா.

பிக் பாஸ் 6 நாள் 57
ஆம், இதைத்தான் எதிர்பார்த்தோம். பிக் பாஸ் வீடு என்னும் ரத்தபூமியில் கலவரங்களின் தடயங்கள் மங்கி, மீண்டும் புன்னகையின் பூக்கள் அரும்பத் துவங்கியிருக்கின்றன. இது போன்ற இயல்பான நகைச்சுவைக் காட்சிகளை எடிட்டிங் டீம் இத்தனை நாள் நம்மிடமிருந்து ஒளித்து வைத்திருந்தது, மாபாதகச் செயல்.
பிக் பாஸ் 6 நாள் 57
பிக் பாஸ் 6 நாள் 57

கோகுலத்துக் கண்ணன் போல, பெண்கள் செய்த குறும்புகளின் இடையில் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கிய கதிரவனின் தவிப்பு புன்னகைக்க வைத்தது. ‘இப்ப பாரேன். அடுத்த பப்பாளி துண்டையும் எடுத்து நைசா லவட்டப் போறான்’ என்று கதிரவன் டீம் தூரத்தில் அமர்ந்து அசிமை கிண்டலடித்த விஷயத்தை, நம்முடைய நண்பர்களின் வட்டத்திலும் நாம் நிச்சயம் நிகழ்த்தியிருப்போம். டாஸ்க் லெட்டரை வாசிக்க விடாமல் ஏடிகே கலாட்டா செய்யப்பட்டதும் சுவாரசியம். இது போன்ற இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் அவசியம் தேவை. அதற்காக ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று பாடத் தேவையில்லை. (கார்த்திகை தீப நாளுக்கு பொருத்தமாக எப்படி மேட்ச் செய்தேன் பார்த்தீர்களா?!). அது போலவே தென்கொரிய வெப்சீரிஸ் போல ஏராளமாக ரத்தம் சிந்தும் காட்சிகளையே தினம் காட்டவும் தேவையில்லை. மகிழ்ச்சியும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை?!

நாள் 57-ல் நடந்தது என்ன?

‘ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி.. ஒவ்வொன்னா சொல்லித் தாரேன் கத்துக்கடி’ என்கிற பாடலுடன் நாள் 57 விடிந்தது. இந்தப் பாடலைக் கேட்டவுடன் ‘ஒருவேளை இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் வெச்சுடுவாங்களோ’ என்கிற பீதி எழுந்தது. மைனா, விக்ரமனையெல்லாம் ஸ்கூல் யூனிபார்மில் பார்க்க நிறைய நெஞ்சுரப்பு வேண்டும். (நெஞ்சுரப்பு – வார்த்தைக்கு நன்றி அசிம்). நல்லவேளையாக அப்படியில்லை.

‘ரச்சிதா அக்கா நாமினேஷன்ல இருந்து தப்பிச்சது அதிர்ஷ்டம்தான்’ என்று காலையிலேயே ஒரு வம்பை ஜனனியும் தனலஷ்மியும் ஆரம்பிக்க, ‘இல்ல. அவங்க உழைப்பும் இருக்கு. நைட்டு ஃபுல்லா கண்ணு முழிச்சி கல்லு தூக்கினாங்க” என்று கண்ணியமாக மறுப்பு சொன்னார் விக்ரமன். அதற்கு முந்தைய நாள்தான் ‘யாரெல்லாம் புறணி பேசுவது?’ என்கிற டாஸ்க் நடந்து முடிந்தது. அதற்குள் மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 57: ரக்‌ஷிதா
பிக் பாஸ் 6 நாள் 57: ரக்‌ஷிதா

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த தமன்னா.. தீபிகா படுகோனே..

சபையைக் கூட்டிய பிக் பாஸ், “குட் மார்னிங்.. அதென்ன.. பெண்கள் மட்டும் குளிச்சு ரெடியாகி உக்காந்திருக்கீங்க.. ஏதாவது பிளானா?’ என்று ஜாலியான கமெண்ட் அடித்து குஷிப்படுத்தினார். 4000 பாயிண்ட்ஸ்ஸை லம்ப்பாக பெற்றிருக்கும் மணிகண்ட்டா (பிக் பாஸ் ஏன் இப்படி ஆணி அடிப்பது போல மணியின் பெயரைச் சொல்கிறார்?!) ஷாப்பிங் கிளம்பினார். மற்றவர்கள் அனைவரும் வயிற்றெரிச்சலுடன் அமர்ந்திருந்தார்கள். நீச்சல்குளத்தில் குதித்தால்தான் அவர்களின் எரிச்சல் அடங்கும். ஆம், நீச்சல் குளத்தின் மூலம் மணி பெற்ற வெற்றிதானே இது?!

‘மணி. மணி.. சிக்கன் வாங்கிக் கொடு..’ என்று சந்தைக்கு கிளம்பும் பெரியப்பாவிடம், வீட்டுப்பிள்ளைகள் பம்பரம் கேட்பது போல் ஆளாளுக்கு கோரிக்கைக் குரல் எழுப்ப “யாரு என்னை நாமினேட் பண்ண மாட்டாங்களோ.. அவங்களுக்கு வாங்கித் தரேன்’ என்று டீல் பேசினார் மணிகண்ட்டா.. ச்சே.. மணிகண்டன். ஜனனி இந்த டீலுக்கு உடனே ஒப்புக் கொண்டார். உள்ளே சென்றவர், லிஸ்ட் போட்டு விட்டு, மிச்சம் இருந்த ஐநூறுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ‘இன்னொரு பக்கெட் சிக்கன் எடுடா.. மணி.. படுபாவி ’ என்று தொலைக்காட்சியின் வழியாக பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கதறினார்கள். அந்தக் கதறல் எங்கோ கசிந்து மணி இருந்த ஏரியாவிலும் கேட்டு விட்டதோ, என்னமோ.. அவரும் அதையே தேர்வு செய்ய “தெய்வமே...’ என்று இவர்கள் கண்ணீர் கசிந்தார்கள். ‘முதன்முறையா டெலிபதி வேலை செஞ்சு.. இந்த சீசன்லதான் பார்க்கறேன்’ என்று பிக் பாஸூம் ஜாலி கமெண்ட் செய்தார். (நெறைய இடத்துல டெலிபோனே வேலை செய்ய மாட்டேங்குது.. இதுல டெலிபதி!).

பிக் பாஸ் 6 நாள் 57: மைனா, ஆயிஷா, தன்லஷ்மி
பிக் பாஸ் 6 நாள் 57: மைனா, ஆயிஷா, தன்லஷ்மி

‘குளிச்சு மொழுகி ரெடியா இருக்கீங்க’ என்று பிக் பாஸே பாராட்டி விட்டதால் மகளிர் அணிக்கு குஷியாகி விட்டது போல. எனவே காமிரா முன்பாக சென்று பிரபல நடிகைகளுடன் ஒப்பிட்டு தங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஜனனி சாய்பல்லவியாம். தனலஷ்மி ரீமா சென்னாம். ஆயிஷா தமன்னாவாம். ஷிவின் தீபிகா படுகோனேவாம். ரச்சிதா ரம்யா கிருஷ்ணனாம். மைனா என்னவென்று கூச்சலில் கேட்கவில்லை. (கடவுளே.. இன்னமும் என்னென்ன கொடுமையையெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ?!).

மூன்றாம் முறை தலைவரான மணிகண்ட்டா

தலைவருக்கான போட்டி ஆரம்பித்தது. மணிகண்ட்டா, தனலஷ்மி, ஷிவின் ஆகிய மூவரும் இதில் கலந்து கொண்டார்கள். ஸ்பிரிங் போர்டு மீது கயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்று, எதிர் போட்டியாளரின் கயிற்றில் இருக்கும் முடிச்சை அவிழக்க வேண்டும். முடிச்சவிக்கிதான்... ச்சே..மன்னிக்கவும் முதலில் முடிச்சை அவிழ்ப்பவர்தான் தலைவர்..

‘விளையாட்டுல உணர்ச்சிவசப்படாதீங்க' என்று கமல் அறிவுறுத்தியும் ஷிவினோடு மோதும் போது டெரரான ஆவேசத்துடன் காணப்பட்டார் தனலஷ்மி. ஆனால் மணியுடன் மோதும் போது புன்னகை வந்து விட்டது. வளர்த்துவானேன்.. கச்சா முச்சா.. என்று நடந்து முடிந்த இந்தப் போட்டியில் மணிகண்டன் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக வீட்டின் தலைவரானார். தனலஷ்மியின் லட்சியக் கனவுகள் நிறைவேற இன்னமும் காலம் இருக்கிறது.

பிக் பாஸ் 6 நாள் 57: மணிகண்ட்டா
பிக் பாஸ் 6 நாள் 57: மணிகண்ட்டா

அணி பிரிக்கும் போது ‘பாத்ரூம் டீமிற்கு யார் இன்னமும் போகலை’ என்று மணி கேட்க “நான் இன்னமும் பாத்ரூம் போகலை’ என்று வெள்ளந்தியாக ஜனனி சொல்ல “இப்ப போயிட்டு வந்துடு’ என்று கிண்டலடித்தார் ஏடிகே. ரச்சிதாவை மீண்டும் கிச்சன் டீமில் இணைத்து அழகு பார்த்தார் மணி. ரச்சிதாவின் கூடவே அசிமும் ஷிவினும் இருப்பார்கள். பாலுக்கு பூனையை காவல் வைத்தது போல, அசிமை கிச்சன் டீமில் வைத்தால் என்னவாகுமோ. அதுவெல்லாம் பின்னர் நடந்தது.

பப்பாளியை வெட்டி துண்டுகளாக இட்டு பங்கு பிரிக்கறேன் என்கிற பெயரில் ஒவ்வொரு துண்டாக வாயில் போட்டு அதக்கினார் அசிம். இதை தூரமாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கதிரவன், அமுதவாணன் உள்ளிட்டோர், ‘பாரேன்..இப்ப அடுத்த பீஸையும் எடுத்து வாயில் போட்டுக்குவான்’ என்று அமைதியாக கிண்டலடித்துக் கொண்டிருந்த காட்சி சுவாரசியம். “ஜாலியா ஏதாச்சும் பேசினா கூட புறணி பேசறதா சொல்லிடறாங்க. பார்த்துப் பேசுங்கப்பா’ என்று ஜாக்கிரதையாக அனத்தினார் ஏடிகே.

வெளியே போகும் மிக்ஸர் பாக்கெட்டுக்கள்

நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதை கமல் ஏற்கெனவே எச்சரித்து விட்டார். கன்ஃபெஷன் ரூமில் தனியான சூழலில் பெயர்களைச் சொல்லலாம் என்பதால் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். விரோதங்களும் புகைச்சல்களும் வியூகங்களும் வெளிப்பட்ட இந்தச் சடங்கின் முடிவில் பெயர்ப்பட்டியல் வந்தது.

இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தவர்களை, அதிக வாக்குகள் முதல் குறைந்த வாக்குகள் வரை என்கிற வரிசையில் பிக் பாஸ் அறிவித்தார். ஆயிஷா, ஜனனி, ராம், அசிம், கதிரவன் மற்றும் ஏடிகே.

பிக் பாஸ் 6 நாள் 57: ஆயிஷா
பிக் பாஸ் 6 நாள் 57: ஆயிஷா

லிஸ்டை கவனித்தால், முதல் மூன்று இடத்தில் இருப்பவர்கள் சுமாரான ஆட்டக்காரர்கள். எனவே, மிக்ஸர் பாக்கெட்டுக்களை வெளியே அனுப்பினால் ஆட்டம் விறுவிறுப்பாகும் என்று மற்றவர்கள் கணக்குப் போடுவது சிறந்த விஷயம். ‘விக்ரமனோட பேரு எப்படி வராமப் போச்சு?’ என்று ஒரு பக்கம் மக்கள் வியக்க “என்னையாடா நாமினேட் பண்றீங்க. நான் போறதுக்குள்ள ரெண்டு மூணு பேரையாவது போட்டுத் தள்ளறேன்” என்று ஜாலியாக சபதம் எடுத்தார் ராம். ‘எல்லோரும் என்னைத்தான் குத்தியிருப்பாங்க. நான்தானே இளிச்சவாயி?!” என்று டாப் 1-ல் வந்த ஆயிஷா அனத்தினார்.

தனது தற்காலிகத் தோழி ஜனனி போய் விடுவோரோ என்கிற அச்சம் தனலஷ்மிக்கு ஏற்பட்டதோ, என்னமோ. ‘கேர்ஸ்லாம் அனுப்பமாட்டாங்கள்ல.. ஜனனியோட பேரண்ட்ஸ் வருவாங்க’ என்று அவர் அசிமிடம் ஆறுதல் தேட “இல்லடா செல்லக்குட்டி..’ என்று ஆரம்பித்து பதில் அளிக்கத் துவங்கினார் அசிம். என்னது?! செல்லாக்குட்டியா..? இந்த பாசமலர் எபிசோட் மறுபடியும் எப்போதிலிருந்து பூக்கத் துவங்கியது?! “இந்த வாரம் என்னையும் ராமையும் அனுப்பிடுவாங்க.. அண்ணன் –தங்கச்சியா ஒண்ணா போயிடுவோம்’ என்று இன்னொரு பக்கம் ஆருடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆயிஷா.

தனலஷ்மியும் ஜனனியும் சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆட வாயால் தாளம் போட்டுக் கொண்டிருந்தார் அமுதவாணன். ‘உங்க புரோக்ராமுக்கு எவ்வளம்மா வாங்கறீங்க?” என்று அவர் ஜாலியாக விசாரிக்க “அஞ்சு லட்சம் + ஜிஎஸ்டி.. நாங்க பிக் பாஸ் செலிபிரிட்டிஸ்..” என்று அவர்கள் பந்தா செய்ய “அப்படியென்ன செஞ்சு கிழிச்சிட்டீங்க.. எனக்கெல்லாம் ரெண்டாயிரம் ரூவா கொடுத்தா போதும். நைட்டு ஃபுல்லா கண்ணு முழிச்சி வேலை செய்வேன்’ என்று நக்கலடித்த அமுதவாணனை, அவர்கள் இருவரும் தலையில் மொத்தினார்கள்.

அசிமின் மீது முட்டை புகார் – ஜனனி மீது சிக்கன் புகார்

‘முட்டையெல்லாம் காலி ஆயிடுது.....’ என்று விக்ரமனும் அமுதவாணனும் புகார் சொல்ல “நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். அவங்க கிட்ட சொல்லியும் பார்த்தாச்சு.. என்னதான் பண்றது?” என்று சலித்துக் கொண்டார் ரச்சிதா. அவர்களின் புகார் அசிமைப் பற்றியதாக இருந்தது. ஒருபக்கம் அசிம் மீது முட்டை புகார் வைக்கப்பட, அவரோ ஜனனி மீது சிக்கன் புகார் வைப்பதில் பிஸியாக இருந்தார்.

மணிகண்டன் செய்த ஷாப்பிங் மூலம் 12 சிக்கன் துண்டுகள் வந்தன. வீட்டில் இருப்பது 13 பேர். “எனக்கு வேண்டாம். நான் ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் பிச்சு வாங்கிக்கறேன்” என்று மணிகண்டன் பெருந்தன்மையாக விட்டுத் தந்தார் போலிருக்கிறது. ஆனால் அசிம் இன்னொரு ஐடியா செய்தார். எப்படியும் அமுதவாணன் சிக்கன் சாப்பிட மாட்டார் என்பதால் அதை மணிகண்டனுக்குத் தரலாம் என்பது அவரது பிளான். ஆனால் ஜனனி போட்ட பிளான் வேறு விதமானது. அமுதவாணன் விட்டுத்தரும் சிக்கனையும் சேர்த்து இரண்டாக லபக்கலாம் என்று அவர் திட்டமிட்டார் போல.

பிக் பாஸ் 6 நாள் 57: அசிம்
பிக் பாஸ் 6 நாள் 57: அசிம்

இது பற்றி மணிகண்டனிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தார் அசிம். அவர் சொல்வது உண்மையென்றால் ஜனனிக்கு போங்குதான். இந்த ஷாப்பிங் வந்ததற்கு காரணமே மணிகண்டன்தான். அவருக்கே சாப்பிட இல்லை என்றால் எப்படி?! சிக்கன் விஷயம்தான் என்றாலும் சற்று சிக்கனமாக இருக்க வேண்டாமோ?!

பாடுவதில் திறமைசாலி என்றாலும் தமிழ் வாசிப்பதில் ஏடிகே ததிங்கினத்தோம் போடுவார் போலிருக்கிறது. டாஸ்க் லெட்டரை வாசிக்கும் விபரீத முயற்சிக்கு அவர் முன் வர, முதல் வாக்கியத்தை முடிப்பதற்குள் ‘என்ன சொல்ற.. புரியல..” என்று அவரை மறுபடியும் மறுபடியும் வாசிக்க வைத்து மற்றவர்கள் செய்த கலாட்டா சுவாரசியம். ‘காலைல ஆறு மணி இருக்கும்.. கோழி கொக்கரொக்கோன்னு கூவுச்சு’ காமெடி மாதிரி ஆரம்ப வாக்கியத்திலேயே நின்று தத்தளித்தார் ஏடிகே. “அவசரப்படாதீங்கடா. எப்படியும் ஒரு வாரம் இருப்பான். ஏடிகேவை வெச்சு செய்யலாம்’ என்று ஆட்டத்தை ஒத்தி வைத்தார் மணிகண்டன்.

கதிரவனுக்கு நிகழ்ந்த நகைச்சுவை வன்முறை

அடுத்த நகைச்சுவைக்கு காரணமாக இருந்தவர் கதிரவன். ஸ்கிராட்ச் கார்ட் போட்டியில் பரபரப்பாக ஆடி வென்று முடித்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பஸ்ஸர் அடிக்கும் வரை அவர் Blindfold அணிந்திருக்க வேண்டுமாம். “மத்தவங்க மேல நான் உப்பு மூட்டை செய்யறாப் போல தந்திருக்கலாம். என் மேல யானையை ஏற வெச்சிட்டீங்களே. இவங்க சும்மாவே ஆடுவாங்க.. சலங்கையை வேற தந்துட்டீங்களே பிக் பாஸ்” என்று கண்ணீருடன் அனத்திக் கொண்டே டாஸ்க்கிற்கு தயாரானார் கதிரவன். சம்பந்தப்பட்ட ஆயுதம் ஸ்டோர் ரூமில் வந்ததும் ‘எங்க அண்ணன். .. எங்க அண்ணன்..’ என்று பெண்கள் அணி இவரை துரத்த ஆரம்பிக்க வீடெங்கும் சிதறி ஓடினார் கதிரவன்.

பிக் பாஸ் 6 நாள் 57: கதிரவன்
பிக் பாஸ் 6 நாள் 57: கதிரவன்

அவரைத் துரத்திப் பிடித்து கண்களை மூடினார்கள். பிறகு ஆரம்பித்தது அந்த ரணகளமான காமெடி. ஆயிஷா இடுப்பில் கிள்ள, ரச்சிதா தலையில் செல்லமாக அடிக்க, ஏடிகே நெருக்கமாக வர ‘அய்யய்யோ’ என்று தவித்துப் போனார் கதிரவன். “டேய். நீ கட்டிப்பிடிச்சிக்கிட்டு இருக்கறது ஷிவினை’ என்று சொல்லி அலற வைத்தார்கள். கொண்டை போட்டு பூ வைத்து முகமெங்கும் லிப்ஸ்டிக் தடவி சூன்யம் வைக்கும் பொம்மை மாதிரி கதிரவனை மாற்றி அழகு பார்த்தார்கள்.

‘காப்பாத்துங்க பிக் பாஸ்’ என்று கதிரவன் அலறியதால் சற்று கருணை காட்டிய பிக் பாஸ், ‘அதே கோலத்துல வந்து டாஸ்க் லெட்டரை படிங்க’ என்றார். இந்த வார வீக்லி டாஸ்க் அறிவிக்கப்பட்டது. “டிவிங்கிள்..டிவிங்கிள்.. பெரிய ஸ்டார்’. ‘நடிகர்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் தரப்படும்’ என்று அறிவிப்பு சொன்னதும் மக்கள் உற்சாகமானார்கள். காலையில் பெண்கள் அணி ‘நடிகை’ விளையாட்டு ஆடியதில் இருந்து பிக் பாஸ் பிக்கப் செய்து கொண்டார் போல. ஆட்டத்தின் சன்மான விதிகள் அறிவிக்கப்பட்டன.

மோசமணி.. வக்கீல் கணேசன்.. சீதா தேவி.. பூனை சேகர்..

பிரபல நடிகர்களின் பெயர்கள், புகழ்பெற்ற கேரக்ட்டர்களின் அடையாளங்கள் போன்றவற்றை மெலிதாக மாற்றி, ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன. ஏடிகேவிற்கு ‘போகானாந்தா’, மைனாவிற்கு ‘பூனை சேகர்’, ஷிவினிற்கு ‘மாடர்ன் மோகினி’, தனலஷ்மிக்கு ‘மோசமணி’, மணிக்கு ‘பாலைய்யா..’, ரச்சிதாவிற்கு ‘சீதா தேவி’, அசிமிற்கு ‘வக்கீல் கணேசன்’, ராமிற்கு ‘தகுவரன்’, ஜனனிக்கு ‘அராத்து வானதி’, அமுதவாணனுக்கு எம்.ஆர்.ராதா போன்ற பாத்திரங்கள் வழங்கப்பட்டன.

பிக் பாஸ் 6 நாள் 57: தனலஷ்மி
பிக் பாஸ் 6 நாள் 57: தனலஷ்மி

‘எனக்கு இன்னமும் ஹெவியா தந்திருக்கலாம்’ என்று தனலஷ்மி அதிருப்தியான குரலில் சொல்ல ‘இதையே ஹெவியா பண்ணுங்க’ என்று பிக் பாஸ் அறிவுறுத்தி அனுப்பியதால் முகம் சோர்ந்து கிடந்தார். விக்ரமனுக்கு அந்நியன் பாத்திரம். இருப்பதிலேயே அமுதவாணனுக்குத்தான் லட்டு மாதிரி ‘ரத்தக் கண்ணீர் எம்ஆர்ராதா கேரக்ட்டர்’ கிடைத்திருக்கிறது. மனிதர் பட்டையைக் கிளப்புவார் என்று எதிர்பார்ப்போம்.

ஆக. பிக் பாஸ் வீடு என்னும் ரத்த பூமியை நகைச்சுவைத் தென்றலின் மூலம் சுத்தப்படுத்தப் போகிறார்கள் போல. ‘இந்த வாரத்தின் டாஸ்க்காவது சுவாரசியமாக அமையட்டும்’ என்று கூட்டுப்பிரார்த்தனை செய்வோம்.