Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 58: ‘டாஸ்க் பண்ணலாம்; ஆர்வக்கோளாறு இருக்கக்கூடாது' விக்ரமனை சீண்டிய ஏடிகே!

பிக் பாஸ் 6 நாள் 58

‘அந்நியன்’ விக்ரமன், ‘பூனை சேகர்’ மைனா, ‘சீதா தேவி’ ரச்சிதா என வீக்லி டாஸ்க்கிற்காக, மக்கள் தங்களின் பாத்திரங்களுக்குள் கூடுபாய ஆரம்பித்தார்கள். ஒப்பனைகள் ஆரம்பித்தன. கெட்அப்கள் மாறின

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 58: ‘டாஸ்க் பண்ணலாம்; ஆர்வக்கோளாறு இருக்கக்கூடாது' விக்ரமனை சீண்டிய ஏடிகே!

‘அந்நியன்’ விக்ரமன், ‘பூனை சேகர்’ மைனா, ‘சீதா தேவி’ ரச்சிதா என வீக்லி டாஸ்க்கிற்காக, மக்கள் தங்களின் பாத்திரங்களுக்குள் கூடுபாய ஆரம்பித்தார்கள். ஒப்பனைகள் ஆரம்பித்தன. கெட்அப்கள் மாறின

பிக் பாஸ் 6 நாள் 58
சினிமாத்துறையில் திடீரென ஒரு மேஜிக் நடக்கும். ஒரு நகைச்சுவைத் திரைப்படமோ அல்லது ஃபீல் குட் படமோ வெளியாகி பேயோட்டம் ஓடி வசூலை வாரிக் குவிக்கும். ‘அது ஏன் அப்படி ஓடியது?’ என்பது யாருக்கும் சட்டென்று விளங்காது. அதற்கான பல காரணங்களில் ஒன்றை யூகிக்க முடியும். அதற்கு முன்னால் ரத்தம் சொட்ட சொட்ட பல வன்முறைப் படங்கள் வந்திருக்கலாம் அல்லது காட்டமான மசாலாப் படங்கள் நிறைய வந்திருக்கலாம்.
பிக் பாஸ் 6 நாள் 58
பிக் பாஸ் 6 நாள் 58

கடுமையான கோடை வெப்பத்தின் இடையே திடீரென சிறுமழை பெய்தால் நாம் கொண்டாடி விட மாட்டாமோ?! அதுதான் மேற்குறிப்பிட்ட படம் ஓடியதற்கான லாஜிக். எதற்காக இந்த வியாக்கியானம் எனில், பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் நிகழ்ந்த ரணகளமான சம்பவங்கள் முடிந்து நேற்று வந்த எபிசோட் அத்தனை ஜாலியாகவும் சுவாரசியமாகவும் அமைந்து நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரத்தபூமியில் மலர்ந்த ஓர் அபூர்வமான குறிஞ்சிப்பூ. வெல்டன் பிக் பாஸ் டீம். கீப் இட் அப்.

நாள் 58-ல் நடந்தது என்ன?

‘ராஜா ராணி’ படத்திலிருந்து ‘ஓடே. ஓடே..’ என்கிற பெப்பியான பாடல் ஒலிக்க, மக்கள் பாதி உற்சாகத்துடன் எழுந்து ஆடினார்கள். நாள் முழுக்க ஜாலியாக சென்றாலும் காலையில் ஒரு மினி பஞ்சாயத்து நடந்தது. ‘க்ளீனிங் டீம்’ மெத்தனமாக இருப்பதைப் பற்றி ஏடிகே கோபம் கொண்டார். ஏடிகேவும் ராமும் இரவுப் பணியை தீவிரமாகச் செய்து முடித்து விட்டார்கள். ஆனால் காலையில் வரவேண்டிய ஜனனியும் கதிரவனும் வரவில்லை. எனவே கேப்டன் மணியிடம் ஏடிகே புகார் செய்தார். “பார்த்துக்கிட்டே இருந்தும் வரமாட்டேன்றாங்க” என்ற ஏடிகேவின் கோபத்தில் நியாயம் இருந்தது.

பிக் பாஸ் 6 நாள் 58
பிக் பாஸ் 6 நாள் 58

“கேட்டிருந்தா போயிருக்க மாட்டேனா?” என்று பிறகு மணியிடம் வந்து நியாயம் கேட்டார் ஜனனி. தனக்கு ஒதுக்கப்பட்ட பணி என்று வந்த பிறகு, தானாக முன்வந்து செய்வதுதானே முறை?! வெற்றிலை பாக்கு வைத்தா அழைப்பார்கள்?! “அவங்களுக்கு வேலையில்லாத மாதிரி நீ வேலை செஞ்சிடு’ என்று பன்ச் டயலாக் அடித்து ஜனனிக்கு உபதேசம் செய்தார் மணி. வர வர எல்லோருமே கமல் மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஜாலியாக நடந்த கண்ணாமூச்சி ஆட்டம்

வீக்லி டாஸ்க்கை ஆரம்பிப்பதற்கு முன்னால் லக்ஸரி பட்ஜெட் சவாலை ஆரம்பித்து ‘வார்ம் அப்’ செய்தார் பிக் பாஸ். கண்ணாமூச்சி ஆட்டம். அறுபது விநாடிக்குள் குறைந்தது ஆறு பேரையாவது கண்டுபிடித்து விட்டால் 200 பாயிண்ட்ஸ் கிடைக்கும். ஆனால் அந்த வீட்டில் எத்தனை இடத்தில்தான் ஒளிய முடியும்? என்றாலும் கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் சாமர்த்தியமாக ஒளிந்த மக்களின் வித்தையைப் பார்க்க சுவாரசியமாக இருந்தது. துணிக்குள் துணியாக மடங்கிப்படுத்தார் மைனா. ஏடிகே ஒளிந்துகொள்ளும் விதத்தில் புத்திசாலித்தனம் இருந்தது.

இந்த விளையாட்டில் முதலில் வந்த மணி தோற்று விட்டாலும் பிறகு வந்த ஜனனி, ரச்சிதா, மைனா ஆகியோர் 200 பாயிண்ட் சம்பாதித்தார்கள். வேகமாக ஓடி விளையாடிய ரச்சிதாவிடம் மாற்றம் தெரிகிறது. காமிரா முன்பு டைட் குளோசப்பில் நின்று ‘என்னைக் கூப்பிடுவியா... மாட்டியா?' என்று மைனா செய்த குறும்பு ரசிக்கத்தக்க வகையில் இருந்தது. “சீரியஸா ஆடு” என்று மற்றவர்கள் அறிவுறுத்தினாலும், தன் காமெடி இயல்பில் இருந்து மாறாமல் இருக்கும் மைனாவின் குணாதிசயத்திற்கு பாராட்டு.

பிக் பாஸ் 6 நாள் 58
பிக் பாஸ் 6 நாள் 58

“நான் இந்த வாரம் வெளிய போற போது அசிம் அழறா மாதிரி நல்லா பண்ணுவான். என்னைப் பிடிச்சு வெளியே தள்ளினப்புறம் கெத்தா உள்ளே வருவான்” என்று அசிமை மாதிரி தலையைக் கோதியபடி ஏடிகே கிண்டலடிக்க “பேசுங்க சார்.. பேசுங்க.. வெளில உங்க பாப்புலாரிட்டி அதிகமாயிடுச்சு.. அந்த ஆணவத்துல ஆடறீங்க” என்று பதிலுக்கு கிண்டலடித்தார் அசிம்.

தங்களோடு அமர்ந்திருந்த ஷிவினையும் அந்தப் பக்கம் கடந்து போன கதிரவனையும் இணைத்து வைத்து பெண்கள் குழு கிண்டலாக ஒரு சினிமா பாட்டைப் பாட, திகைத்தது போல் திரும்பிப் பார்த்தார் கதிரவன். ஷிவினிற்கு சிரிப்பும் மெல்லிய வெட்கமும் தாங்கவில்லை. ‘தண்ணி குடிச்சுட்டு வரேன்’ என்று எழுந்து விலகினார். கிச்சனுக்குச் சென்று அதே பாட்டை ஷிவின் உற்சாகமாக முணுமுணுத்தார். சிறிய காட்சியாக இருந்தாலும், ஹைக்கூ கவிதை மாதிரி அத்தனை ‘க்யூட்’ ஆக இருந்தது. ஆனால் ஷிவினின் நோக்கில் இதனுள் பொதிந்திருக்கும் மெல்லிய சோகத்தையும் உணர முடிகிறது.

‘அந்நியன்’ விக்ரமன், ‘பூனை சேகர்’ மைனா, ‘சீதா தேவி’ ரச்சிதா

வீக்லி டாஸ்க்கிற்காக, மக்கள் தங்களின் பாத்திரங்களுக்குள் கூடுபாய ஆரம்பித்தார்கள். ஒப்பனைகள் ஆரம்பித்தன. கெட்அப்கள் மாறின. ‘அந்நியன்’ என்கிற பெயரில் தலைமுடியை விரித்துப் போட்டு இம்சையைக் கூட்டினார் விக்ரமன். ‘முதல்வன்’ படத்தின் ரகுவரனாக, ராம் செய்த நடிப்பு உண்மையிலேயே ஆச்சரியம். ஆர்ப்பாட்டம் அதிகமில்லாமல் அசத்தி விட்டார். இதற்காகவே ராம் இன்னமும் சில வாரங்கள் தாக்குப் பிடிக்கலாம்.

போகானந்தாவாக மாறி வந்த ஏடிகேவிற்கும் விக்ரமனிற்கும் இடையில் ஒரு மெல்லிய உரசல் டிராமா ஆரம்பித்தது. ஏடிகேவின் தலைப்பாகையின் முன்னால் முடியை விரித்து ‘அந்நியன்’ எபெக்ட்டை விக்ரமன் காட்ட முயல, அது கழன்று விழுந்ததால் ஏடிகே எரிச்சலானார். ‘இப்படில்லாம் பண்ணாதீங்க’ என்று ஆட்சேபம் தெரிவித்தார். பிறகு நடந்த உரையாடலின் போது ‘டாஸ்க் பண்ணலாம். ஆனால அதுல ஆர்வக்கோளாறு இருக்கக்கூடாது' என்று ஜாடை மாடையாக விக்ரமனை இடித்துரைத்தார் ஏடிகே. இதனால் விக்ரமனின் ஈகோ சீண்டப்பட்டது போல.

மணிகண்டன், அமுதவாணன் தனலஷ்மி
மணிகண்டன், அமுதவாணன் தனலஷ்மி

“ஆக்சுவலி.. ஆர்வக் கோளாறு..ன்னு ஒரு விஷயம் கிடையவே கிடையாது. ஆர்வமா செஞ்சாதான் சிலதை அடைய முடியும்” என்று வியாக்கியானம் பேச ஆரம்பித்து விட்டார் விக்ரமன். லாஜிக், பொலிட்டிக் கரெக்டன்ஸ் போன்றவற்றைப் பின்பற்றுவது அவசியம்தான். ஆனால் அது ஓவர் டேஸாக ஆகி விடக்கூடாது. எல்லாவற்றிற்கும் வியாக்கியானம் பேசுபவர்களுக்கு நண்பர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ‘அய்யய்யே.. அவன் இம்சை தாங்காதுப்பா’ என்று ஒதுங்கி விடுவார்கள்.

“ஆர்வக் கோளாறு என்று ஒன்று இல்லவே இல்லை. அசல் கோளாறு –ன்னுதான் ஒரு பையன் இருந்தான். அவனும் இப்ப போயிட்டான்”.. நல்லவேளையாக விக்ரமன் இப்படியெல்லாம் வியாக்கியானம் பேசியிருந்தால் ஏடிகே பாயைப் பிறாண்டியிருப்பார்.

ரச்சிதா
ரச்சிதா

சீதா தேவியாக, அந்தக் காலத்து சரோஜாதேவி போல பாவனை செய்து கொண்டிருந்தார் ரச்சிதா. ஜகன்மோகினி படத்தில் வரும் பேய் மாதிரி மேக்கப் போட்டிருந்த ஷிவின், சீதாதேவியின் மீது பாய்ந்து ‘பணத்தைக் கொடுத்திடு’ என்று மிரட்ட, ஹீரோயினைக் காப்பாற்ற மின்னல் வேகத்தில் வந்த ‘அந்நியன்’, ஓவர்ஆக்ட் செய்தார். ‘ஒரே காரெக்ட்டர்ல ரொம்ப நேரமா குப்பை கொட்டிட்டு இருக்க.. அன்னியன்னா. திடீர் திடீர்ன்னு மாறணும்யா” என்று விக்ரமனை இடித்துக் காட்டினார் ஏடிகே.

மைக்கேல் ஜாக்சனாக மாறி அசத்திய கதிரவன்

ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி வந்த அமுதவாணனின் கையில் சிகரெட் பைப் இருந்ததால், அது புகையா விட்டாலும் ‘புகை எச்சரிக்கை’ அறிவிப்பை பல காட்சிகளில் அநாவசியமாக போட்டுக் கொண்டிருந்தார்கள். காண்டிராக்ட்டர் நேசமணியாக வந்த தனலஷ்மிக்கு லட்டு மாதிரியாக கிடைத்த வாய்ப்பு. அதை வைத்து ரகளை செய்திருக்கலாம். ஆனால் அவருக்குப் பிடிக்கவில்லை போல. சுமாராகத்தான் கையாண்டார்.

பஸ்ஸர் அடித்ததும் முதலில் தொட்ட தனலஷ்மி, ‘என் தம்பி பூனை சேகரை டான்ஸ் ஆட அழைக்கிறேன்’ என்று தேர்வு செய்ய, மைனா மேடையேறி வடிவேலுவின் உடல்மொழியை சற்று பின்பற்றி நடனமாடி சமாளித்தார். இவரின் கலைத்திறமையைப் பாராட்டி ரூ.1400 சன்மானம் வந்தது.

கதிரவன்
கதிரவன்

அடுத்த முறை பஸ்ஸரை கைப்பற்றிய அமுதவாணன், ஜனனியைத் தேர்ந்தெடுத்து தன் நட்பைக் காப்பாற்றினார். ஜனனி ஆடிய நடனத்திற்காக ரூ.4700 சன்மானம் கிடைத்தது. தனலஷ்மி செய்த தேர்வு காரணமாக, அடுத்ததாக மேடையேறியவர் கதிரவன். ஆனால் அது உண்மையில் ஒரு இன்ப அதிர்ச்சியான சம்பவம். மைக்கேல் ஜாக்சன் ஒப்பனையில் இருந்த கதிரவன், அதே ஸ்டைலில் ரகளையாக ஆடியதால் பிரமிப்பில் வீடே உறைந்து போனது. மக்கள் தங்களின் காரெக்ட்டர்களை மறந்து விட்டு ‘ஆவென்று’ கதிரவனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படியொரு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார் கதிரவன். அவருக்குத்தான் அதிகமான சன்மானம் கிடைத்தது. ரூ.9000.

தனக்குப் பின்னால் வருகிறவர்களுக்கு அதிக சன்மானம் கிடைக்கிறதே என்று அனத்திக் கொண்டிருந்த மைனாவிற்கு தனியாக பணம் கொடுத்து பெருந்தன்மையைக் காட்டினார் ‘முதல்வன்’ ரகுவரன். “அங்க பாருங்களேன்.. பெட்ஷீட்லாம் மடிக்காம அப்படியே இருக்கு. டாஸ்க் நடுவுல விளையாட்டு மாதிரி எதையாவது செஞ்சு மக்களை மடிக்க வைக்கலாம். ஆனா கேப்டன் மணி கண்டுக்க மாட்டேன்றாரு” என்று ராமிடம் ஏடிகே புகார் செய்ய “இதோ வரேன் தம்பி’ என்று எஸ்கேப் ஆனார் ராம்.

‘எனக்கு மட்டும் ஏன் குறைவான சன்மானம்?’ – மைனாவின் அனத்தல்

தோசை சுட்டுக் கொண்டிருந்த கிச்சன் ஏரியாவில், எம்.ஆர்.ராதா வாய்ஸில் அமுதவாணன் செய்த குறும்புகள் ரசிக்க வைத்தன. நித்யானந்தா ஸ்டைலில் ஆங்கிலம் கலந்து பேசி அசத்தினார் ஏடிகே. திடீரென ரெமோவாக மாறி ஒரு பூவை வைத்துக் கொண்டு ரச்சிதாவின் பின்னாலேயே அலைந்து இம்சை செய்தார் விக்ரமன்.

பஸ்ஸர் வாய்ப்பு ரச்சிதாவிற்கு கிடைக்க, அவர் வக்கீல் கணேசனாக உலவிக் கொண்டிருந்த அசிமை நடனமாட தேர்ந்தெடுத்தார். அதுவரை அசிம் செய்து கொண்டிருந்தது, மேஜர் சுந்தர்ராஜனைப் போல என்று நினைத்துக் கொண்டிருந்தால்.. இல்லை. அது சிவாஜியாம்.. ஆனால் சும்மா சொல்லக்கூடாது, மேடையேறிய அசிம், சிவாஜியின் உடல்மொழியை ஃபாலோ செய்து நடனமாடி ஒப்பேற்றிய விதம் உண்மையிலேயே அருமை. அவருக்கு ரூ.4200 கிடைத்தது.

பிக் பாஸ் 6 நாள் 58
பிக் பாஸ் 6 நாள் 58

‘என்னடா. எனக்கு மட்டும் கம்மியா சன்மானம் கொடுத்தீங்க.. அப்புறம் வந்தவங்களுக்கு எல்லாம் ரூபாய் நோட்டை அள்ளி வீசறீங்க. அந்த மைக்கேல் ஜாக்சன் என்னாத்த ஆடினான்.. இடுப்பை இடுப்பை ஆட்டினான். நானும் அதேதாண்டா பண்ணேன்.. அவன் அதிகமா சம்பாதிச்சிட்டு போயிட்டான்’ என்று மைனாவின் அனத்தல் நீண்டதால், இரக்கப்பட்ட மக்கள் வரிசையாக வந்து தங்களால் இயன்ற பணஉதவியை செய்தார்கள்.

இன்னொருவரை சவாலில் ஈடுபடச் செய்யும் பஸ்ஸரை ஏடிகே அழுத்தி விட்டார். அவர் தேர்ந்தெடுத்தது ஆயிஷாவை. ‘மேட் மதன்’ என்கிற பெயரில் யாரென்றே அடையாளம் தெரியாமல் அங்குமிங்கும் உலாத்திக் கொண்டிருந்தார் ஆயிஷா. இருவருக்கும் கான்செப்ட்டை விளக்கினார் பிக் பாஸ். அதன்படி கட்டணக் கழிப்பிடத்திற்கு அவசரமாக வரும் ஏடிகேவிடம் ரூ.2 சில்லறையாக இல்லை.

மைனா
மைனா

‘சில்லறை இல்லையென்றால் அனுமதியில்லை’ என்று ஆயிஷா கறாராக மறுக்க வேண்டும். ‘டோக்கன் போடுபவர்’ என்கிற பணியை ‘பப்ளிக் டாய்லெட் சூப்பர்வைசர்’ என்று அந்தஸ்தாக பிக் பாஸ் மாற்றிச் சொன்ன விதம் நல்ல சமாளிப்பு. (பில்டிங் காண்டிராக்டர்!). தன்னுடைய அவசர நிலையை விளக்கி ஏடிகே தவித்த விதம் நன்றாக இருந்தது. குத்த வைத்து கீழே அமர்ந்து விட்டார். ஆனால் ஆயிஷாவின் பங்களிப்பு மிகச் சுமார்தான். இறுதியில் ஏடிகேவிற்கு ரூ.3150 மற்றும் ஆயிஷாவிற்கு ரூ.1500 சன்மானம் கிடைத்தது.

`பதில் மொய் வைப்பது போல் சன்மானம் தரலாமா?’

அடுத்ததாக பஸ்ஸரை தொட்ட மணி, தனலஷ்மியை நடனமாட அழைக்க, ‘என் உச்சி மண்டைல சுர்ருங்குது’ பாடலுக்கு மோசமணி மோசமில்லாமல் ஆடி முடித்தார். ரூ.6400 லம்ப்பாக கிடைத்தது. (என்னடாங்கடா.. இப்படி அள்ளிக் கொடுக்கறீங்க. மைனாவின் புலம்பல்!).

அடுத்ததாக ஒரு மினி நாடகம். வீட்டிற்குள் மணிகண்ட்டா திருட வர, அங்கு ஐந்து வயது குழந்தையாக படுத்திருக்கும் தனலஷ்மி அழுது ஊரைக் கூட்டுகிறார். மணி எத்தனை சமாதானம் செய்தாலும் அடங்காமல் அழுது கத்தும் குழந்தையாக தனலஷ்மி ஓவர் ஆக்ட் செய்து முடித்தார். அந்த அழுகாச்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. சன்மானம் ரூ.1600. திருடனுக்கு வெறும் 800தான் கிடைத்தது.

ஜனனி, அமுதவாணன்
ஜனனி, அமுதவாணன்
இந்த டாஸ்க்கில் காணப்பட்ட ஆதாரமான முரண் ஒன்றிருக்கிறது. ஒருவரின் திறமையைப் பார்த்து அதற்கேற்பதான் சன்மானம் வழங்க வேண்டும். அந்த முடிவு நேர்மையாக இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ இரக்கப்பட்டும், பதில் மொய் வர வேண்டுமே என்கிற உள்நோக்கத்துடனும் சன்மானம் தந்தது, ரசிக்கத்தக்கதாக இல்லை.