Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 6: ஜி.பி.முத்துவுக்கு`பாதாம்'; தனலட்சுமிக்கு அட்வைஸ்; கமல் என்ட்ரியில் நடந்ததென்ன?

பிக் பாஸ்

‘அந்தப் பேப்பர்ல ஒண்ணும் இல்லை. கீழே போட்டுடு’ என்கிற காமெடி போல் வெள்ளிக்கிழமையில் எந்த சம்பவமும் இல்லை. மிஸ்டரி பாக்ஸ் தண்டனையின் படி, அசலுக்கு கைவிசிறியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் ஏடிகே.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 6: ஜி.பி.முத்துவுக்கு`பாதாம்'; தனலட்சுமிக்கு அட்வைஸ்; கமல் என்ட்ரியில் நடந்ததென்ன?

‘அந்தப் பேப்பர்ல ஒண்ணும் இல்லை. கீழே போட்டுடு’ என்கிற காமெடி போல் வெள்ளிக்கிழமையில் எந்த சம்பவமும் இல்லை. மிஸ்டரி பாக்ஸ் தண்டனையின் படி, அசலுக்கு கைவிசிறியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் ஏடிகே.

பிக் பாஸ்
ஆறாம் சீசனின் முதல் பஞ்சாயத்து. கமலின் வருகை நாள். “எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்றீங்க தம்பி” என்பது மாதிரி பிரகாசமான லுக்கில் அட்டகாசமான சிரிப்புடன் வந்தார் கமல். பிறந்த குழந்தை, அடுத்த இரண்டாவது நாளில் “இந்த மொபைல்ல 5ஜி ஆப்ஷன் இல்ல. மாத்திடுங்க” என்று வாய் திறந்து சொன்னதைப் போல, 6வது சீசன் நான்காவது நாளிலேயே அதிவிரைவில் டேக் ஆஃப் ஆனதை மேடையில் பெருமையுடன் சொன்னார்.
கமல்
கமல்

சிறப்பாகச் செயல்பட்ட ஹவுஸ்மேட்ஸை பாராட்டிய கமல், சுணக்கமாக இருநதவர்களை `இன்னிக்கு வாழைப்பழம்.. நாளைக்கு வெறும் தோல்தான் இருக்கும். வெளிய அனுப்பிடுவாங்க’ என்று நாசூக்காக எச்சரிக்கவும் தவறவில்லை. `சமையல் கட்டு சுத்தமா இருக்கலாம். சத்தமா இருக்கலாமா?' என்று வழக்கம் போல் கமல் அடித்த அட்டகாசமான ஒன்லைனர்கள் நன்றாக இருந்தன. ஆனால், பாதாம் – ஆதாம் என்று கமல் செய்ய முயன்ற காமெடி பூமராங் போல் அவருக்கே திரும்பிவிட்டது. பிக் பாஸ் டீமிற்கு நூறு கிராம் பாதாம் செலவு ஆனது மட்டுமே மிச்சம். என்ன நடந்ததென்று விரிவாகப் பார்ப்போம்.

வார் வைத்த பேண்ட்டுடன் ‘வார் ஹீரோ’ மாதிரி முறுக்கிய மீசையுடன் வந்தார் கமல். (என்னதான் ரைமிங்னாலும் ஒரு நியாய தர்மம் வேணாமா?!) “ஷோ அட்டகாசமா ஆரம்பிச்சிருக்கு. முதல் வாரத்திலேயே எல்லா சிக்ஸரையும் அடிச்சிட்டாங்க. நாலு நாள்லயே நாற்பதாவது நாளை எட்டின மாதிரி ஒரு ஃபீலிங்.. ஜெட் பிளேன், ஹெலிகாஃப்டர் மாதிரி அப்படியே ஜிவ்வுன்னு மேலே டேக் ஆஃப் ஆகியிருக்கு ” என்று சந்தோஷப்பட்டுக் கொண்ட கமல், வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார்.

‘அந்தப் பேப்பர்ல ஒண்ணும் இல்லை. கீழே போட்டுடு’ என்கிற காமெடி போல் வெள்ளிக்கிழமையில் எந்த சம்பவமும் இல்லை. மிஸ்டரி பாக்ஸ் தண்டனையின் படி, அசலுக்கு கைவிசிறியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் ஏடிகே. “ஹாங்... இங்க பூசு... இந்தப் பக்கம் பூசு... லெப்ட்ல பூசு’ என்ற கவுண்டமணி போல காற்று உபசாரத்தை இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்தார் அசல்.

பாயின்ட் டாஸ்க்
பாயின்ட் டாஸ்க்

‘சேத்து வெச்ச பாயிண்ட் முக்கியம் குமாரு’

லக்ஸரி பட்ஜெட் ஷாப்பிங். கடந்த சீசன் மாதிரியே இந்த முறையும் ஆசை காட்டினார் பிக் பாஸ். மகனுக்கு அரைமனதாக பாக்கெட் மணி தரும் அப்பா “அப்படியே உண்டியல்ல போட்டு வெச்சுரு. பின்னாடி அப்புறம் லம்ப்பா வரும்” என்று செலவழிக்க விடாமல் சதி செய்வதைப் போல ‘தீனிப்பண்டாரங்களா இருக்காம நீங்க சம்பாதிச்ச பாயிண்ட்டை அப்படியே சேத்து வெச்சா வருங்காலத்துல உங்களுக்கு சிறப்பான சலுகைகள் இருக்கு’ என்று சிட்பண்ட் நிறுவனம் போல ஆசை காட்டினார் பிக் பாஸ். 1500 பாயிண்ட்டுகளை சோ்த்தால் இரண்டு முறை தலைவர் போட்டியில் நிற்கலாமாம். 2000 பாயிண்ட்டுக்களை சோ்த்தால் இரண்டு முறை நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு இருக்கிறதாம். எனவே மக்கள் யோசித்து சிக்கனமாக செலவழித்தார்கள்.

ஜி.பி.முத்துவின் கெட்டப்பில் வேட்டி, சட்டையில் வந்தார் தனலஷ்மி. அவருக்கு மேக்கப் போட்டார் முத்து. பழைய விஷயங்களை மறந்து இருவரும் ஒன்றாக பழக ஆரம்பித்திருப்பது பார்க்க நன்றாக இருந்தது.

‘பாதாம்.. ஆதாம்.. மறுபடியும் ஃபேக் பயர் ஆன கமல் காமெடி’

அகம் டிவி வழியாக உள்ளே வந்தார் கமல். ‘சார்... நீங்க அழகா இருக்கீங்க. போட்டிருக்கிற டிரஸ் சூப்பர்’ என்பது போன்ற சம்பிரதாய புகழ் உரைகள் நடந்தேறின. முத்துவிடமிருந்து வம்பை ஆரம்பிக்கலாம் என்று கமல் நினைத்திருப்பார் போல. ஆரம்ப நாளின் எபிசோடில் ‘ஆதாம்’ காமெடி வைரல் ஆனதால் இதை அப்படியே டெலவப் செய்யலாம் என்று பிக் பாஸ் டீம் நினைத்திருக்கலாம்.

எனவே பாதாம் பருப்பை வரவழைத்து “பாதாம் தெரியுது.. ஆதாம் தெரியலையா?” (ரைமிங்.. ரைமிங்...) என்று முத்துவிற்கு விழிப்புணர்வு ஊட்ட முயல “என்னது.. ஆதாமா.. அதாரு?’ என்று கரகாட்டக்காரன் ‘செந்தில்’ மாதிரியே முத்து மறுபடியும் விழிக்க, இந்த முறையும் கமல் காமெடி ‘பணால்’ ஆனது. அப்படி முழித்து விட்டு பின்குறிப்பாக ஒரு பாதாம் பருப்பை எடுத்து முத்து வாயில் அதக்கிக் கொண்டதுதான் இதில் சூப்பரான விஷயம். (ஆளு வெவரம்தேன்!).

ஜி.பி.முத்து
ஜி.பி.முத்து
``இந்தாளு கிட்ட உஷாரா பேசணும்டோய்” என்று நினைத்துக் கொண்டாரோ, என்னவோ.. முத்துவைத் தாண்டி வந்து “அப்புறம்.. எப்படி போகுது?” என்று மற்றவர்களை விசாரிக்க ஆரம்பித்தார் கமல். “உப்புமாவா போட்டு கொல்றாய்ங்க சார்” என்று நேரடியாக சொல்ல வேண்டியதை சற்று மழுப்பி “எல்லாம் ஓகே.. ஆனா சாப்பாடுதான்..” என்று சிலர் இழுத்தார்கள்.
மகேஸ்வரி
மகேஸ்வரி

‘உணவை வீணாக்கக்கூடாதுன்னுன்ற பாடத்தை இங்க வந்துதான் கத்துக்கிட்டோம்’ என்று ஒவ்வொரு சீசனிலும் பாடும் பாட்டை இவர்களும் பாடினார்கள். (அனுபவம் போல் ஒரு சிறந்த ஆசான் இல்லை). ‘உப்புமா ராணி’ என்கிற பட்டத்தை சாந்திக்கு சூசகமாக தந்த கமல் ‘அடிக்கடி முட்டிக்கறீங்க போல’ என்று மகேஸ்வரியை விசாரிக்க ஆரம்பித்து ‘ஐ மீன் கதவுல’ என்று பின்னிணைப்பாக சொன்னது நல்ல குத்தலான காமெடி.

‘முன்ன பின்ன தெரியாதவங்க கூட டூர் வந்த மாதிரி இருக்குது’ என்று ரத்தினச் சுருக்கமாக அசல் கூறியது ரசிக்க வைத்தது. ``வௌங்கேலை.. வௌங்குச்சு" என்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்தும் ஜனனியிடம் “நன்று விளக்கினீர்.. பாத்திரத்தை’ என்று வெஷல் வாஷிங் கிளப்பில் ஜனனி சிறப்பாக செயல்படுவதை வைத்து காமெடி செய்த கமல், `ஒரு சிறிய இடைவேளைக்கு' கிளம்பினார்.

அவருடைய தலை மறைந்ததும், ‘இந்த சீசன் சீக்கிரம் டேக் ஆஃப் ஆனதை’ கமல் வாயிலாக கேட்ட ஹவுஸ்மேட்ஸ் உற்சாகத்தில் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டார்கள். (பிரியாணியாகப் போகும் ஆடுகள் அதை உணராமல் ‘மசாலா வாசனை சூப்பர்ல’ என்று மகிழ்ச்சியடைந்ததைப் போல!).

‘வாழைப்பழத்தை மத்தவங்களுக்கு திருப்பிக் கொடுங்க’…

பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல் “வாழைப்பழக் கட்டில் அனுபவம் எப்படி?” என்று நால்வரையும் விசாரிக்க ஆரம்பித்தார். “முதல் நாளே இப்படி ஆயிடுச்சேன்னு வருத்தமா இருந்தது. உள்ளே தூங்கறவங்களைப் பார்த்து காண்டா இருந்தது” என்று வெளிப்படையாக உண்மையை ஒப்புக் கொண்டார் விக்ரமன். ஆனால் நிவாவோ “வெளில சூரிய வெளிச்சம், காக்கா கத்தினதெல்லாம் நல்லா இருந்துச்சு” என்று ரீல் விட்டார்.

``ஓகே... வீட்டுக்குள்ள நீங்க வந்த அடுத்த நிமிஷமே பிக் பாஸ் அப்படி வெறிகொண்டு ஆடினது கொஞ்சம் ஓவர்தான்" என்பது போல் சொன்ன கமல் “சரி. உங்களுக்கு இப்ப ஒரு வாய்ப்பு தரேன். உங்களோட அதிகம் கனெக்ட் ஆகாத நபர்களை இப்பச் சொல்லுங்க. உங்களுக்கு வந்த வாழைப்பழத்தை திருப்பித் தந்துடலாம்” என்று பிக் பாஸை விடவும் கொலைவெறியாக யோசித்து ஒரு ஆட்டத்தை ஆரம்பித்தார். `ஏன்.. நல்லாத்தானே போயிட்டு இருக்குது?" என்று தயங்கிய நால்வரும் வேறு வழியின்றி சொல்ல ஆரம்பித்தார்கள். இதில் அதிக முறை வந்த பெயர்கள் ராம் மற்றும் ஷிவின். அவர்களை விசாரிக்கத் துவங்கினார் கமல்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

“என் ஆட்டத்துல நான் கவனம் செலுத்தறேன்” என்று ஆரம்பித்த ஷிவினிடம் “இந்த கேம் தனியா ஆடறதுன்னு நெனச்சிட்டீங்களா?” என்று கமல் கேட்டவுடன் நாக்கைக் கடித்துக் கொண்டார் ஷிவின் “நான் பொழுதன்னிக்கும் வெளிலதான் இருந்தேன். என் கெரகம்” என்று விளக்கம் தந்து ராம் எஸ்கேப் ஆக முயலும் போது “மத்தவங்களும்தானே இருந்தாங்க?” என்று அவரையும் மடக்கினார் கமல். என்றாலும் ராமிற்கு அதிக வாய்ப்பு கிடைக்காததையும் மறைமுகமாக ஒப்புக் கொண்டார். (கெடைச்சுட்டாலும்!).

“உங்க ரெண்டு பேருக்கு மட்டுமில்ல. எல்லோருக்குமே என்ன சொல்றன்னா.. இந்த ஆட்டத்தை சுவாரசியமாக்குங்க. உங்க பங்களிப்பு ரொம்ப முக்கியம். மத்தவங்க ஸ்பீடா போயிட்டு இருக்கும் போது சிலர் மந்தமா இருந்தா அது பளிச்சுன்னு தெரியும். எனக்கு கிடைத்த மேடையை நான் சரியாப் பயன்படுத்திக்கறேன். நீங்களும் அதைச் செய்ங்க... ஹவுஸ்மேட்ஸ்ஸாவது வீட்டுக்கு வெளிய அனுப்பிச்சாங்க... ஆனா மக்கள் வீட்டை விட்டே வெளியே அனுப்பிடுவாங்க... பார்த்துக்கங்க” என்று ஆழமான எச்சரிக்கையை நயமான முறையில் கமல் அறிவுறுத்தியது சிறப்பு.

கமலின் தலை மறைந்ததும் “ஆக்சுவலி.. அவர் என்ன சொல்றார்ன்னா..” என்று தனலஷ்மிக்கு விளக்கம் தர ஆரம்பித்தார் ஆயிஷா. தனலஷ்மி பிழைக்க வேண்டுமென்றால் ஆயிஷாவிடமிருந்து தள்ளி இருப்பது நல்லது.

கதிரவன், அமுதவாணன் – அசத்திய கிளப் ஓனர்கள்...

பிரேக் முடிந்து திரும்பிய கமல் “இந்த சீசன்ல தனியா ஆடறது முக்கியமா இருக்கு. இருந்தாலும் டீமாகவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டீர்கள்” என்று ஆரம்பித்து பாத்ரூம் அணியின் நகைச்சுவையுணர்வு, க்ளீனிங் டீமின் அர்ப்பணிப்பு, வெஷல் வாஷிங் டீமின் உழைப்பு என்று வரிசையாகப் பாராட்டினார். ‘என்னைப் பெத்தவங்களுக்கு அப்புறம் இவங்கதான் பாத்ரூமிற்கு தூக்கிட்டுப் போனாங்க’ என்று முத்து சொன்னதையும் அடிக்கோடிட்டுச் சொன்னார். “உப்புமா போட்டாலும் பசியாத்தினது முக்கியம்” என்று போகிற போக்கில் கிச்சன் டீம் சாந்தியையும் பாராட்டிச் சென்றார்.

அடுத்ததாக கிளப் ஓனர்களைப் பற்றி அந்தந்த கிளப் மெம்பர்கள் அபிப்ராயம் சொல்ல வேண்டும். விமர்சனம் என்றால் சிவப்புக் கொடி. பாராட்டு என்றால் பச்சைக் கொடி. ‘லெஃப்ட் இன்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்புவது போல’ சிலர் ஆரம்பத்தில் பச்சையைத் தந்து மகிழ்வித்து விட்டு சடார் என்று சிவப்பைத் தந்து ஷாக் ஆக்கினார்கள்.

கதிரவன்
கதிரவன்

தன்னுடைய ஒட்டுமொத்த டீமிடம் இருந்து வரிசையாக பச்சைக் கொடியை வாங்கி பாராட்டு மழையில் நனைந்தார் கதிரவன். “மனுசனுக்கு ரொம்ப பொறுமை.. கூலா இருக்கார்.. முன்னுதாரணமா இருக்கார்” என்று பாசிட்டிவ் கமெண்ட்கள் தொடர்ந்து வந்தன. “எங்க டீம் உழைப்புதான் இதுக்கு காரணம்” என்று புன்னகையுடன் சொல்லி தன்னடக்கத்துடன் நின்றார் கதிரவன்.

‘நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்!..’ பெற்றோரைச் சுற்றி வந்து விநாயகர் மாம்பழம் வாங்கிய கதையாக, சைலண்ட்டாக இருந்தாலும் வயலண்ட்டாக ஜெயித்து வருகிறார் கதிரவன். மற்றவர்களின் மனதையும் கவர்ந்து வருகிறார். இவர் முக்கியமான போட்டியாளராக இருப்பார் என்று தோன்றுகிறது.

எதிர்பார்த்தபடியே ஷிவினுக்கு அனைத்துமே சிவப்புக் கொடியாக கிடைத்தது. முதலில் பச்சை தந்த விக்ரமன் கூட ``அடுத்த முறையாவது இவங்க பொறுப்பை உணரணும்” என்று சிவப்பிற்கு மாறினார். “மீட்டிங்க்ல இவங்க இதையெல்லாம் சொல்லலையே” என்று ஷிவின் விளக்கம் சொன்னது அபத்தம். அவருக்கே தன் தவறு புரிந்திருக்க வேண்டும். “ஓகே.. என்னை விடவும் நல்ல லீடர்ஸா இவங்க இருக்காங்க” என்று சொல்லி சமாளித்தார்.

கதிரவனைப் போலவே அமுதவாணனுக்கும் அவரது டீமிடமிருந்து ஏகோபித்த பாராட்டு கிடைத்தது. இவரும் கடைசி வரை நீடிக்கப் போகும் ஒரு முக்கியமான போட்டியாளராக இருப்பார் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம். சென்ஸ் ஆஃப் ஹியூமரைத் தாண்டி, ஒருவரின் தவறைச் சுட்டிக் காட்டும் போது மனது புண்படாமல் இதமாகச் சொல்லும் பண்பு அமுதவாணனிடம் இருக்கிறது. “பாராட்டுக்கள். இருந்தாலும் அவசரத்திற்கு பாத்ரூம் வரவங்களைப் போட்டு பாடாப் படுத்திட்டீங்க” என்று சிரித்தார் கமல்.

ஜி.பி.முத்து
ஜி.பி.முத்து

‘வௌங்கலை’ புகழ் ஜனனிக்கு கலவையான எதிர்வினைகள் கிடைத்தன. ‘பொறுமையான பொண்ணு’ என்று பச்சைக்கொடி தந்து முதலில் பாராட்டிய முத்து, சட்டென்று சிவப்புக் கொடியை நீட்டி “நான் எல்லா டீமிற்கும் வேலை செஞ்சதை குத்தம்ன்னு சொன்னது தப்பு’ என்று படபடவென பேசியதற்கு அனைவரும் சிரித்தார்கள். ‘மனிதாபிமானம்’ என்கிற வார்த்தையை சரியாகச் சொல்ல முடியாமல் முத்து தடுமாற, அதை வைத்து சிறிது நேரம் கலாய்த்துக் கொண்டிருந்தார் கமல். (கமலுக்கும் காமெடி ஊறுகாய் முத்துதான்!). மற்றவர்கள் சிவப்புக் கொடி தந்து பிறகு பச்சைக்கு மாறினார்கள். “அவங்க சொன்னதெல்லாம் வௌங்கிச்சா..” என்று கமல் ஆரம்பிக்க “விளங்கிற்று. ஆனா ஒண்டும் செய்ய இயலாது” என்று புன்னகையுடன் சொல்லி அமர்ந்தார் ஜனனி. சற்று சாமர்த்தியமாக நடந்து கொண்டால் இவரும் தவிர்க்க முடியாத போட்டியாளராக மாறக்கூடும்.

ஒரு பிரேக் முடித்து திரும்பிய கமல் “மக்களின் பிரதிநிதியாக இங்கு இரண்டு போ் வந்திருக்கிறார்கள். தனலஷ்மி மற்றும் ஷிவின்” என்று ஆரம்பித்து “ஆக்சுவலி.. மக்களின் பிரதிநிதி’ன்றது என்னோட டைட்டில்.. நான்தான் அதை சொல்லிட்டு இருப்பேன்” என்று டைமிங்காக சொன்னது நன்று.

‘ரீல்ஸ்ன்றது அவமானம் இல்ல.. அடையாளம்’…

பிறகு தனலஷ்மியிடம் விசாரணையைத் துவங்கினார் கமல். ‘வயதுக்கு மரியாதை. ரீல்ஸ்’ என்றெல்லாம் நடந்த பிளாஷ்பேக்கை தனலஷ்மி சொல்ல “ரீல்ஸ்-ன்னு சொன்னதற்கு ஏன் பதட்டமாகறீங்க.. அதுதானே உங்க அடையாளம்? அத வெச்சுதானே உங்களுக்கு சான்ஸ் கிடைச்சது?” என்றெல்லாம் கடந்த சீசனில் தாமரையிடம் சொன்னதைப் போலவே தனலஷ்மிக்கு கமல் அறிவுரை சொன்ன பாணி சிறப்பு.

“நெனச்சத பேச வாய்ப்பு கிடைக்கலைன்னு சொல்லாதீங்க. வெளில மட்டும் இருந்துதா.. நீங்களாதானே ஒரு மொபைலை எடுத்து வீடியோ போட்டு உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினீங்க. இங்கயும் அதைச் செய்ங்க. அதுதான் உங்க சவால்” என்று தனலஷ்மிக்கு பொறுப்பை உணர்த்தினார் கமல். “நான்லாம் சான்ஸ் கேட்க தயங்கவே மாட்டேன். எதுவா இருந்தாலும் பயன்படுத்திக்குவேன். சான்ஸ் கிடைக்கலைன்னா அதை உருவாக்குவேன்” என்றெல்லாம் கமல் பேசியது, ஒரு ‘மினி’ சுயமுன்னேற்ற வகுப்பு என்றே சொல்லலாம்.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

அடுத்ததாக ஷிவினின் பக்கம் வண்டியைத் திருப்பிய கமல் “காரைக்குடி.. சிங்கப்பூர், கார்ப்பரேட் கம்பெனி"ன்னு பல போராட்டங்களைத் தாண்டி வந்திருக்கீங்க. ஆனா இங்க மட்டும் ஏன் கலங்கி தனியா நிக்கறீங்க. உங்க அமைதியே உங்களுக்கு எதிரா திரும்பிடலாம். டிவில சத்தமா அரசியல் விவாதம் செய்யறவங்களைப் பாருங்க.. அவங்க பேசறது அவங்களுக்கு மட்டும்தான் புரியும். மக்களுக்குப் புரியாது. அந்த மாதிரி இங்கயும் ஆயிடக்கூடாது” என்று அரசியல் நையாண்டியுடன் கமல் சொன்ன அறிவுரையை தலையாட்டி ஏற்றுக் கொண்டார் ஷிவின்.

கதிரவன் தாளம் போட ஏடிகேவும் அசல் கோளாறும் இணைந்து பிக் பாஸ் சம்பவங்களை வைத்து சுவாரசியமான வரிகளை இட்டு ஒரு கானா பாடலைப் பாட, அதை ரசித்துக் கேட்ட கமல் “ஓகே... நாளைக்கு மீண்டும் சந்திப்போம்” என்று கூறி விடைபெற்றுக் கொண்டார்.

கமல் சொன்னபடி இந்த சீசன் அதிவேகமாக டேக் ஆஃப் ஆகியிருப்பது உண்மைதான். இந்த ஒரு வாரத்திலேயே உப்புமா முதல் ரீல்ஸ் வரை பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த விமானம் விபத்தில் சிக்காமல் தொடர்ந்து பாதுகாப்பாக பயணிக்க ‘ஆண்டவர்’ துணை நிற்பாராக!