ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் தருவதற்காக இயன்ற எல்லை வரை மெனக்கெடுகிறவர்கள் நிச்சயம் கவனிக்கப்படுவார்கள். பள்ளிகளில் நிகழும் மாறுவேடப் போட்டிகளில் நாம் இதை உணர்ந்திருப்போம். வித்தியாசமான பாத்திரத்தின் ஒப்பனைக்காகவும் நடிப்பிற்காகவும் அதிகமாக சிரத்தை எடுத்துக் கொள்கிற மாணவன் முதல் பரிசு வாங்குவான்.
இதைப்போல தனது காரெக்ட்டரின் கெட்அப் சேஞ்சிற்காக அமுதவாணன் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. ‘நடிப்பிற்காக தன் தோற்றத்தைக் குரூரமாக்கிக் கொள்ள எவன் துணிகிறானோ, அவனே சிறந்த நடிகன்’ என்பது சிவாஜி கணேசனின் அபிப்ராயம். அதை மெய்ப்பித்து விட்டார் அமுதவாணன்.
நாள் 60-ல் நடந்தது என்ன?
பிக் பாஸ் ஒருவழியாக மனமிரங்கி ராம் + தனலஷ்மி கைவிலங்கை கழற்ற பஸ்ஸர் அடித்தார். ‘அவர்களின் பங்களிப்பைப் பார்த்து சன்மானம் அளிக்கலாம்’ என்றும் அறிவித்தார். ‘தம்பிடி காசில்லை’ என்று அமுதவாணன் சொன்ன கருத்தே அனைவரின் நிலைமையாகவும் இருந்தது. எனவே கையில் ஐம்பது நோட்டு சில்லறையை தந்து விட்டுச் சென்றார்கள்.
மைனாவிற்கும் அமுதவாணனிற்கும் இடையில் ஓர் உரசல். பாத்திரம் விளக்கும் பணியை அமுதவாணன் சரியாகச் செய்யவில்லை என்று மணிகண்டனிடம் சென்று மைனா ரிப்போர்ட் செய்திருப்பார் போல. எனவே அது தொடர்பான விசாரணை நிகழ, “நான் வேலை செய்யலைன்னு நீ பாத்தியா..உனக்குத் தெரியுமா.. எத்தனை முறை செஞ்சிருக்கேன் தெரியுமா.. மணி.. இனிமே உன் கிட்ட ஒவ்வொரு முறையும் சொல்லிட்டுப் போய் செய்யறேன்” என்று கோபமானார் அமுதவாணன். ‘இதுக்கு ஏண்டா இத்தனை சீரியஸ் ஆகறே?’ என்று மைனா பின்வாங்கினார்.

மைனாவும் மணியும் இணைந்து நட்புக் கூட்டணி காரணமாக தன்னைக் குறைசொல்கிறார்கள் என்று அமுதவாணன் உள்ளூற நினைத்துக் கொண்டாரோ, என்னமோ, “இங்க நடக்கறதெல்லாம் தெரியும். பிக் பாஸ்... இனிமே என்னை நீங்க வாட்ச் பண்ணுங்க. காமிராதான் எனக்கு சாட்சி. என் வேலையை நான் கரெக்ட்டாதான் பண்ணறேன்” என்று காமிராவிடம் பேசிக் கொண்டே பாத்திரங்களை சுத்தம் செய்தார். ஆனால் இதே காமிராவின் மூலம் அவருக்கு ‘பூமராங்க் எஃபெக்ட்’ நாளை நிகழப் போகிறது என்பதை அப்போது அவர் அறியவில்லை. இன்னொரு பக்கம் தன் மகனுடைய பிரிவுத் துயரத்தில் சோகமாக பாடிக் கொண்டிருந்தார் மைனா.
கெட்அப் சேஞ்ஓவரில் அசத்திய அமுதவாணன்
எத்தனை முறை கேட்டாலும் உற்சாகம் கொள்ள வைக்கிற, ரகளையான பாடலான ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ பாடலுடன் நாள் 60 விடிந்தது. ‘உடம்பெல்லாம் நமைக்கற மாதிரி இருக்கே’ என்று காலையிலேயே கெட்அப் சேஞ்சிற்கான யோசனையில் இருந்தார் அமுது. பொங்கலை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்த ஏடிகே மற்றும் ராமிடம் சென்று ‘யப்பா.. டேய். பொங்கல் என்னா நல்லாவா இருக்கு.. செங்கல் மாதிரி இருக்கு.. இப்படி ரவுண்டு கட்டி சாப்பிடறீங்க?” என்று அமுதவாணன் நக்கலடிக்க ‘இதாவது கிடைக்குதுன்னே சந்தோஷப்படுய்யா’ என்று டேபிளை நகர்த்தும் சத்தத்தின் குரலில் சொன்னார் ராம். (ரகுவரன் வாய்ஸ்).

பிறகு சமையல் அணியைச் சேர்ந்த ரச்சிதாவிடமும் சென்று பொங்கலைப் பற்றி கமெண்ட் செய்து பங்கம் செய்தார் அமுதவாணன். ஒப்பனைக்கு முன்னால் இருந்த ரச்சிதாவை, யார் என்று அடையாளம் கண்டுபிடிக்கவே நமக்கு அரை மணி நேரம் ஆகியது. “பழைய சோத்துல பெப்பர் மிளகு போட்டு கிளறினா அது பொங்கல் ஆகுமா?” என்று அமுதவாணன் புகார் செய்ய கழுத்தை நொடித்து கண்ணைச் சிமிட்டி வெட்கத்துடன் கோபப்பட்டார் ரச்சிதா. (கேரக்டர்லயே வாழறாங்கப்பா!).
ராமிற்கான கண்ணாமூச்சி வாய்ப்பு கிடைத்தது. ‘வயசானவராச்சே. எப்படி ஓடுவார்?’ என்கிற எண்ணம் நமக்கு சட்டென்று வந்து விட்டது. அந்தளவிற்கு தகுவரன் தாத்தா ஆகவே மாறி விட்டார் ராம். பிறகுதான் அவர் இளைஞர் என்கிற நினைவு வந்தது. ஆனால் அங்குமிங்கும் ஓடி எப்படியோ ஆறு அல்லது எட்டு நபர்களை கண்டுபிடித்து விட்டதாக அவர் கூற, மற்றவர்கள் சந்தேகம் வந்து கணக்கு கேட்டார்கள்.
‘நான் எங்க இருந்தேன்னு சொல்லு பார்க்கலாம்?’ என்று ஏடிகே விசாரணையில் இறங்க ‘அங்க நீ கட்டியிருந்த பச்சை வேட்டி கண்ல பட்டது. அது நீதான். போய்யா. பெரிசா கணக்கு கேட்க வந்துட்டாரு’ என்று மெலிதாக கோபப்பட்டார் ராம். “ஏன்.. உனக்கு பதற்றம் வருது?” என்று பக்கத்தில் இருந்த அமுதவாணன் நையாண்டியாக கிண்டல் செய்தார். ராமிற்கு பாயிண்ட்ஸ் கிடைக்கவில்லை. ‘கிச்சான்னா இளிச்சவாயன்தானே?’ என்கிற மீம் மாதிரி ராம் என்றாலே மற்றவர்களுக்கு கிள்ளுக்கீரை ஆகி விட்டது. மற்றவர்கள் கண்டுபிடித்த போது யாரும் இப்படி சந்தேகம் எழுப்பவில்லை.

மைக்கேல் ஜாக்சன் என்கிற பெயரில் கதவில் மாட்டிய எலி போல கதிரவன் ‘கீச். கீச்..’ என்று கத்திக் கொண்டேயிருக்க “இவன் இம்சை தாங்கலையே. டாஸ்க் எப்ப முடியும்?’ என்று நொந்து போனார் ஜனனி. ஏடிகேவை ஜாலியாகக் கிண்டல் செய்து சீண்ட ஆரம்பித்தார் அசிம். அது தன் ஃபர்பாமன்ஸ் பற்றியது என்பதாகப் புரிந்து கொண்ட ஏடிகே “மறுபடியும் குத்தி பேச ஆரம்பிச்சிட்டியா.. இதுதான் வேண்டாங்கிறது. மத்தவங்களை நோண்டிட்டே இருக்காதீங்கய்யா” என்று கோபம் அடைந்தார். ‘நான் எதுவும் தப்பா சொல்லலைய்யா” என்று உருகினார் ‘வக்கீல் கணேசன்’. ‘மத்தவங்களை நோண்டாதீங்க’ என்கிற விஷயத்தில்தான் விக்ரமனிற்கும் ஏடிகேவிற்கும் இடையே முன்பு பிறாண்டல் ஏற்பட்டது. இப்போது அதே விஷயம் ஏடிகேவிற்கு பிரச்சினையாக திரும்பி வந்திருக்கிறது. ‘தலைவலியும் சுரமும் தனக்கு தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பது மாதிரி ஏடிகேவின் நிலைமை ஆகி விட்டது.
தனது தோற்றத்தை குரூபியாக மாற்றிக் கொண்டு பாத்ரூம் மூலையில் அமர்ந்திருந்த அமுதவாணனை மெல்லிய அதிர்ச்சியுடன் வந்து பார்த்தார் அசிம். கீதா தேவியும் திகைப்புடன் வந்து பார்க்க, அவரைத் துரத்தி விட்டார் வேதா. ‘சும்மாவே என்னை ஒதுக்குவார்கள்... இப்போது என் நிலைமையைப் பார்த்தாயா. கணேசா..” என்று பிக் பாஸ் வீட்டின் பாலிட்டிக்ஸையும் கலந்து அமுதவாணன் அவ்வப்போது கிண்டலடித்தது சிறப்பு. அமுதவாணனின் இந்தக் கோலத்தை பொருட்படுத்தாமல் அசிம் பல சமயங்களில் அருகில் இருந்தார். ‘கீதா தேவி செய்த பொங்கலை சாப்பிட்டுத்தான் இப்படி ஆயிடுச்சு”: என்று கடந்து சென்ற ரச்சிதாவின் காதில் விழுமாறு கிண்டலடித்தார் அமுது. மதிய நேரத்தைக் கடந்தும் பொங்கலின் எஃபெக்ட் குறையவில்லை போல.
‘ரத்தக்கண்ணீர் நாடகம் பரப்பிய தவறான கருத்து’
‘உங்களுக்கு என் வீட்டு கிச்சன்ல இருந்து சாப்பாடு வரும்’ என்று கமல் வாக்களித்திருந்தபடி, விதம் விதமான உணவுகள் வந்திருக்க, மக்கள் உற்சாக மோடிற்கு மாறினார்கள். கமலுக்கு நன்றி கூறி உணவின் மீது கொலைவெறியுடன் பாய்ந்தார்கள். மக்கள் ஆவேசமாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தாலும் வீட்டின் வெளியில் அமர்ந்து அனத்திக் கொண்டிருந்தார் அமுதவாணன். “சோற்றைப் பார்த்தவுடன் என்னை மறந்து விட்டார்களே. நன்றி கெட்டவர்கள்.. கமல் சார் நன்றி. ஒவ்வொரு மனிதனும் இல்லாதவர்களுக்கு உதவுங்கள்’ என்றெல்லாம் அவர் புலம்பிக் கொண்டிருக்க “அமுது.. ஆளில்லாத கடைல யாருக்கு டீ ஆத்திக்கிட்டு இருக்கே?” என்று உள்ளேயிருந்து கிண்டலடித்தார் மைனா.

“நான் உள்ளே வந்தா சாப்பிடறவங்களுக்கு பார்க்க அருவருப்பா இருக்கும்ல” என்று ஆயிஷாவிடம் பிறகு காரணம் சொல்லிக் கொண்டிருந்தார் அமுதவாணன். இது அவருடைய நுண்ணுணர்வையும் நல்ல மனதையும் காட்டுகிறது. ஆனால் தன்னை அறியாமல் தவறான கருத்தைப் பரப்புவதற்கு அமுதவாணன் துணை போகிற ஆபத்தையும் இங்கு பார்க்க வேண்டும்.
தொழுநோய் என்பது மிகப்பழமையான நோய். இது காற்றின் மூலம் பரவுகிறது. நரம்புகளிலும் சருமத்திலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. மெல்ல வளரும் இந்த நாட்பட்ட நோய்க்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சிகிச்சை எடுக்காத நோயாளியின் அருகில் செல்லும் போது நோய்எதிர்ப்பு குறைவாக இருப்பவர்களுக்குத்தான் பிரச்சினை. மேலும் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தில், பெண்களிடம் அதிகம் பழகும் நபருக்கு தொழுநோய் வருவதாகச் சித்தரித்திருப்பது பிழையான காரணம்.

எத்தனையோ விழிப்புணர்வுச் செய்திகளுக்குப் பிறகு, இன்றும் கூட தொழுநோய் பற்றிய அருவருப்பும் அச்சமும் மிகுந்திருக்கும் சூழலில், இதே விஷயத்தை அமுதவாணன் தன்னிச்சையாக எதிர்மறைத்தன்மையில் பதிவு செய்து விட்டார். அவர் உள்ளே சென்று மற்றவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் காட்சி வந்திருந்தால் அது விழிப்புணர்விற்கு துணை போயிருக்கும். கமல் இதைப் பற்றி பேசுவார் என்று நம்புவோம்.
‘இவனுக்கு ஒரு பாயசத்தைப் போட்ற வேண்டியதுதான்’
உணவு முடிந்து பாயசம் அருந்தும் சமயத்தில் ஒரு கலாட்டா நிகழ்ந்தது. ‘எல்லோருக்கும் வேண்டும்.. பார்த்து அளவாக சாப்பிடுங்கள்’ என்று ஏடிகே சொல்லிக் கொண்டிருந்தார். ரச்சிதாவின் கோப்பை வழிந்து இருப்பதைப் பார்த்து அவர் பொதுவான நோக்கில் சொன்னதில் பிழையில்லை. ஆனால் அது தன்னைக் குறித்தான கமெண்ட் என்பதாகப் புரிந்து கொண்ட ரச்சிதா, அதனால் புண்பட்டு ‘எனக்கு வேண்டாம் கோப்பால்’ என்று அழுகையுடன் விலகி அமர்ந்திருக்க, ‘மன்னிச்சுடுங்கம்மா. தெரியாம சொல்லிட்டேன்’ என்று அவரை கெஞ்சிக் கொண்டிருந்தார் ஏடிகே. ‘ச்சே. அழும் போது கூட கேரக்ட்டர்ல இருந்து அவ வெளியே வரல.. லெஜண்ட் ஆர்ட்டிஸ்ட்’ என்று ரச்சிதாவைப் புகழந்து கொண்டிருந்தார் மணிகண்ட்டா.

யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பாத்திரத்தை கவிழ்த்து ஊற்றிக் குடித்த மைனா, “எவ்ள நாளா நல்ல சாப்பாடு கிடைக்காம இருக்கோம். கிடைச்ச நேரத்துல சாப்பிட வேண்டியதுதானே?” என்று சொல்ல, ‘நம்ம சந்தோஷத்துக்குத்தானே கமல் அனுப்பியிருக்கார்’ என்று ஜனனியும் அவருடன் இணைந்து கொண்டார். “எனக்கு கிடைக்கவேயில்லை அய்யா.. நான் சொன்னது தவறா?” என்று பிறகு ஏடிகே சொன்ன போது பரிதாபமாக இருந்தது. என்னதான் உணவு ஏக்கம் இருந்தாலும் அனைவருக்கும் அது சென்று சேர வேண்டும் என்று பார்த்துக் கொள்வதுதான் நாகரிகம். இதைத்தான் விக்ரமனும் சுட்டிக் காட்டினார்.
மணிகண்டன் வெளியே கொண்டு வந்து தந்த உணவை சாப்பிட்டு முடித்த அமுதவாணன், தட்டை அப்படியே வைத்து விட்டு அசிம், ஏடிகேவுடன் அரட்டை அடிக்கச் சென்று விட்டார். வீட்டின் கேப்டனோடு வந்து இதை ஆயிஷா சுட்டிக் காட்ட ‘அப்பவே தெரியும் எனக்கு. நீ ஆள கூட்டிட்டு வருவேன்னு’ என்று கிண்டலடித்து சமாளித்தார் அமுதவாணன். “அங்க பாரு.. உன் தட்டைத்தான் காமிரா ஃபோகஸ் பண்ணுது” என்று அசிம் சுட்டிக் காட்டினார். “ஏய். காமிரா. நான் வேலை பண்றதை ஃபோகஸ் பண்ணுன்னு காலைல சொன்னா. வேற வேலையா பார்த்துட்டு இருக்க. இரு.. உன் ஒயரை பிடுங்கி விடறேன்” என்று அமுதவாணனின் மைண்ட் வாய்ஸ் ஒலித்திருக்கலாம்.
“பாயசம் குடியுங்கள் அம்மா” என்று ஏடிகே துரத்த “வேண்டாம் கோப்பால்..’ என்று வீடெங்கும் நளினமாக ஓடிய கீதா தேவி, வேதாவிடம் அடைக்கலம் புகுந்தார். ‘இரு நான் உன்னைக் காப்பாத்தறேன். யோவ் சாமியார்.. நீ சண்டை போடறது இருக்கட்டும். முதல்ல கூந்தலை உதறி கொண்டை போடு’ என்று அமுதவாணன் செய்த கிண்டல்கள் எல்லாம் ரசிக்கத்தக்க வகையில் இருந்தன.

வீட்டிற்குள் வந்த புதுமுகங்கள் – சந்தோஷ் சொன்ன பொய்
திடீரென இசை ஒலிக்க, மக்கள் திகைத்துப் பார்த்தார்கள். ‘Fall’ என்கிற வெப்சீரிஸின் அறிமுகத்திற்காக அஞ்சலி, ராஜ்மோகன், சந்தோஷ் பிரதாப் ஆகிய மூவரும் உள்ளே வந்தார்கள். ‘இந்த சீசன் செம ஹிட்’ என்று வாய் கூசாமல் சொன்னார் சந்தோஷ். டிரைலர் சம்பிதாயங்களுக்குப் பிறகு அவர்கள் வெளியே சென்றார்கள். இதற்கு நடுவில் ‘Trust Fall’ என்கிற விளையாட்டு நடந்தது. “நீங்க யாரை ரொம்ப நம்பறீங்ளோ.. அவங்களை நம்பி விழலாம். அவங்க பின்னால நின்னு பிடிச்சிடுவாங்க” என்று ஆட்டத்தின் விதி பற்றி சொல்ல “நீங்க தப்பான இடத்துக்கு வந்திருக்கீங்க” என்று சொல்லி சபையை கலகலக்க வைத்தார் மணிகண்டன். அஞ்சலியைப் பார்த்த எபெக்ட்டிலோ, என்னமோ, தன் ஒப்பனையைக் கலைத்து விட்டார் அமுதவாணன்.
“நீ போய் உன் வேலையைச் செஞ்சுடு.. யாராவது குற்றம் சொல்லப் போகிறார்கள்” என்று பாசத்துடன் அமுதவாணனை அலர்ட் செய்தார் ஜனனி. ஆனால் அவரோ “யார் என்னைக் கேக்கறாங்கன்னு பார்க்கறேன். நீ உன் வேலையைப் பாரு. கூட்டணி பிஸ்னஸ்லாம் வேணாம்” என்று அமுது கறாராகச் சொல்லி விலக, முகம் வாடிய ஜனனியிடம் “நீ ரொம்ப வடிவாக இருக்கிறாய்” என்று பொய் சத்தியம் செய்து ஆறுதல் படுத்தினார் ராம்.

சன்மானம் பெற்றதில் டாப் 3-ல் இருக்கும் மணிகண்டன், ஏடிகே, விக்ரமன் ஆகிய மூவரும் நீதிபதிகளாக இருந்து, கலை நிகழ்ச்சியில் பங்கு பெறத் தகுதியான ஐந்து நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான ஆடிஷன் நடந்தது. பெண்ணின் திருமணத்திற்காக சிட்பண்டில் பணம் போட்டு ஏமாந்த ஒரு தாயின் கதறலை மிக அற்புதமாக சித்தரித்து கைத்தட்டல்களையும் சிறிது கண்ணீரையும் பெற்று தேர்வானார் தனலஷ்மி.
சிறப்பாக காமெடி செய்த அசிம்
“ஒரு சீரியஸான வழக்கிற்கு ஆஜராகும் போது யாரோ சிரிப்பு வாயுவை திறந்து விடுகிறார்கள்.. என்ன செய்வீர்கள்?” என்று வித்தியாசமான கான்செப்டை தந்தார் விக்ரமன். இதற்கு அசிம் செய்த நையாண்டியான நடிப்பு அற்புதமாக இருந்தது. விக்ரமன் சொன்னபடி, ‘இன்னொரு வகையான அசிமை’ பார்க்க முடிந்தது. அசிம் தன்னிடமிருக்கும் ஹியூமர் சென்ஸையும் அதிகம் வெளிக்காட்டலாம். அசிம் தேர்வாகி விட, அடுத்து வந்த அமுதவாணன், ஐந்து வயது வேதாவாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். சிறுவனாக இருந்த போதும் ‘சீமாட்டிகளே.. மூதாட்டிகளே..’ என்று எம்.ஆர்.ராதாவின் மொழியை விடாமல் பேசியது சிறப்பு.

தனக்கு தரப்பட்ட கான்செப்டை வைத்து மைனாவால் நிச்சயம் நன்றாகச் செய்திருக்க முடியும். அவருக்கு ஐடியா வரவில்லை போல. எனவே வெயிட்டிங் லிஸ்ட் கிடைத்தது. ‘நல்ல காலம் பொறக்குது’ என்று குடுகுடுப்பைக்காரர் பேசும் பாணியை வைத்தே பல சமயங்களில் சமாளிக்கிறார் மைனா. நீண்ட காலம் கழித்து தன் காதலனைப் பார்க்கும் ஆட்டோக்காரராக ஜனனி அழுது புரண்டு நடித்தாலும் வெயிட்டிங் லிஸ்ட்தான். ஜனனியின் அழுகையைப் பார்த்து மைனாவும் தனலஷ்மியும் தலையைக் குனிந்து ரகசியமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ரோபோவாக வந்த ரச்சிதாவும் கேரெக்ட்டராகவே வாழ்ந்து தேர்வானார். ‘இன்னொரு உடம்பில் புகும்’ ஆவியாக வந்து நகைச்சுவையில் கலக்கிய ஷிவினும் பிறகு தேர்வானார். ஆக இந்த ஐந்து பேரும் கலந்து கொள்ளும் கலைநிகழ்ச்சி களை கட்டும் என்று எதிர்பார்ப்போம்.