Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 63: `முடிஞ்சா வெளிய அனுப்புங்க!' - கமலுக்கு டஃப் கொடுத்த மைனா; கண் கலங்கிய ரச்சிதா

பிக் பாஸ் 6 நாள் 63

விக்ரமன் பேசும் போது ‘இருங்க உங்களிடம் அப்புறம் வரேன்’ என்று அவரை கட்டம் கட்டினார் கமல். பிறகு அவரை எழுப்பி ‘உங்களுக்கும் ஏடிகேவிற்கும் என்ன உரசல்?’ என்கிற பிரச்சினையை கமல் எழுப்பியது முக்கியமானது.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 63: `முடிஞ்சா வெளிய அனுப்புங்க!' - கமலுக்கு டஃப் கொடுத்த மைனா; கண் கலங்கிய ரச்சிதா

விக்ரமன் பேசும் போது ‘இருங்க உங்களிடம் அப்புறம் வரேன்’ என்று அவரை கட்டம் கட்டினார் கமல். பிறகு அவரை எழுப்பி ‘உங்களுக்கும் ஏடிகேவிற்கும் என்ன உரசல்?’ என்கிற பிரச்சினையை கமல் எழுப்பியது முக்கியமானது.

பிக் பாஸ் 6 நாள் 63
பாரதியின் பிறந்த தினம் என்பதால் அவரை நினைவுகூர்ந்தபடி அரங்கிற்குள் நுழைந்தார் கமல். தமிழ்நாடு என்கிற பெயர் கனவாக இருந்த காலத்திலேயே, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்று பாடி, அதன் மூலம் அந்தக் கனவை நிஜமாக்கியவரை நினைவுகூர்வது நம் கடமை. பெருமையும் கூட. பெண்ணுரிமை பற்றி பேசியவர் பாரதி. சக்ரவர்த்தினி என்கிற பத்திரிகையை நடத்தி பெண்களை எழுத்தாளர்களாக்கி புரட்சி செய்திருக்கிறார்.
பிக் பாஸ் 6 நாள் 63; கமல்
பிக் பாஸ் 6 நாள் 63; கமல்

இல்லத்தரசிகளுக்கு ஊதியம்.. என்று நாங்கள் சொன்ன போது பலர் இது சாத்தியமா என்றார்கள். இன்றைக்கு ஜி20-ஐ இந்தியா தலைமையேற்கிறது என்றால் அதில் இல்லத்தரசிகளின் பங்கும் இருக்கிறது. இது அவர்களை முடக்கிப் போடும் திட்டமல்ல. முன்னேற்றும் திட்டம். அவர்கள் மல்ட்டி டாஸ்கர்ஸ், அல்ல மல்ட்டி அச்சீவர்ஸ்’ என்று தாய்க்குலத்தின் பெருமை பேசும் முன்னுரையுடன் அகம் டிவி வழியாக வீட்டிற்குள் சென்றார்.

ஒட்டுமொத்தமாக நெகிழ்ந்த வீடு

நிகழ்ச்சியின் ஆரம்பமே சென்டியுடன் இருந்தது. ``உங்களின் தாய் தந்தையரை நினைவுகூர்ந்து கொண்டிருந்தததைப் பார்த்தேன். நெகிழ்வாக இருந்தது. அதைப் பற்றிச் சொல்லுங்களேன்” என்று கமல் சொன்னவுடன் ஒவ்வொருவராக தங்களின் குடும்பத்தைப் பிரிந்திருப்பதைப் பற்றி கண்கலங்கிச் சொல்ல ஆரம்பித்தார்கள். “பிரிவின் போதுதான் குடும்பத்தாரின் அருமை புரிகிறது. வீட்டு உணவின் அருமை தெரிகிறது. உடல்நலம் சரியில்லாத பெற்றோரின் வலி புரிகிறது. அவர்களின் தியாகம் புரிகிறது. அவர்களை உடனே பார்க்க வேண்டுமென்று துடிக்கிறோம்" என்று ஒவ்வொருவரும் தனித்தனி குரலில் பேசினாலும் ஒட்டுமொத்தமாக அதில் இருந்த உணர்வு பொதுவாக இருந்தது.

பிக் பாஸ் 6 நாள் 63
பிக் பாஸ் 6 நாள் 63

‘உங்களுக்கு நன்றி சார்’ என்று அவர்கள் சொன்ன போது ‘இந்த வாய்ப்பிற்குத்தான் நன்றி சொல்லணும். இத்தனை பெரிய ஷோவில் உங்களின் பெற்றோர்களைப் பற்றி பேசுகிறீர்கள். எனக்குப் பொறாமையா இருக்கு. எனக்கு கிடைக்காத பெருமை இது' என்று சொன்ன போது கமல் கண்கலங்க, ஹவுஸ்மேட்ஸ்களும் அந்தக் கண்ணீரைப் பிரதிபலித்தார்கள். உணர்ச்சிகரமான சூழல் என்பதால் சட்டென்று பிரேக்கில் வெளியேறினார் கமல்.

சினிமா கேரக்ட்டருக்குள் நிஜ கேரக்ட்டர்:

பிரேக் முடிந்து திரும்பிய கமல் “இந்த வார டாஸ்க்கில், உங்களுக்குத் தரப்பட்ட கேரக்ட்டருக்குள் உங்களின் குணாதிசயங்கள் ஒளிந்திருந்ததை எத்தனை பேர் உணர்ந்தீர்கள்?” என்கிற கேள்வியை முன்வைத்த போது அனைவருமே அதை ஒப்புக் கொண்டார்கள். ஆயிஷா மட்டும் ‘எனக்கு அந்த கேரக்ட்டர் ஏன் தந்தாங்கன்னு புரியல’ என்றார். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு அழுது ‘எனக்கு நடிக்கத் தெரியாதுய்யா’ என்று ஆயிஷா சொல்வதால் சிம்பு கேரக்ட்டர் தந்தார்களோ, என்னமோ. (ஆனால் எதற்கு மேட் மதன்?!).

விக்ரமன் பேசும் போது ‘இருங்க உங்களிடம் அப்புறம் வரேன்’ என்று அவரை கட்டம் கட்டினார் கமல். பிறகு அவரை எழுப்பி ‘உங்களுக்கும் ஏடிகேவிற்கும் என்ன உரசல்?’ என்கிற பிரச்சினையை கமல் எழுப்பியது முக்கியமானது. ஏன் அவர்கள் அப்படி அப்படி பிறாண்டிக் கொண்டார்கள்? “ஒண்ணுமில்ல சார். அன்னியன் கேரக்ட்டர்ல நிறைய வெரைட்டி காட்டலாம். ஒரே மாதிரி இருக்குன்னு விக்ரமன் கிட்ட சொன்னேன்” என்று ஏடிகே சொல்ல “நடிப்புல கவுரவம் பார்க்கக்கூடாது. வெட்கப்படும் தன்மையை விட்டுடணும். அதனாலதான் என்னால் மொழி தாண்டி போக முடிஞ்சது. விமர்சனங்களுக்கு காதுகளை திறந்து வைப்பவன்தான் சிறந்த அரசியல்வாதியாக இருக்க முடியும். காந்தி பல கடுமையான விமர்சனங்களை நேராகச் சந்தித்தவர்” என்று கமல் சொல்லி முடித்தார்.

பிக் பாஸ் 6 நாள் 63; விக்ரமன்
பிக் பாஸ் 6 நாள் 63; விக்ரமன்

“அது இல்லைங்கய்யா.. நான் பார்க்காத விமர்சனமா.. சினிமால அன்னியன் பண்ற அதே பாடி லேங்வேஜை இவங்க எதிர்பார்க்கறாங்க. அதுல என் கேரக்ட்டர் கலந்தா ஆட்சேபிக்கிறாங்க. ஏன் எப்பவும் நியாயம் பேசறீங்கன்னு கேட்கறாங்க” என்று விக்ரமன் விளக்கம் அளித்தவுடன் “நீங்கள் சொல்றது சரியானது” என்று கமல் ஆமோதிக்க, இப்போது ஏடிகே எழுந்தார். “ஒரு உதாரணம் சொல்றேன்.. ஷிவினை பேய்ப்பாட்டு பாடச் சொன்னேன். ஏன் பேய்ன்னா இப்படித்தான் பாடணுமா?’ன்னு விக்ரமன் கேட்கறாரு. இப்படி எல்லாப் பக்கமும் கேட்டை போட்டா அவர் கிட்ட என்னதாங்க பேச முடியும்?” என்று ஏடிகே சொல்ல சபை கலகலத்தது. “பேய்ன்னா இப்படித்தான் ஸ்டீரியோடைப் பண்ணாதீங்கன்னுதான் சொன்னேன்’ என்று விக்ரமன் சொன்னது சரியான பாயிண்ட்தான். அதற்கு ஏன் சிரித்தார்கள் என்று தெரியவில்லை.

“நான் அரசியல்லதானே இருக்கேன், நடிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்குன்னு நீங்க நினைக்கலாம். அரசியலும் ஒரு கலைதான். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உங்களுக்கு வெளில வேலை இருக்கு. நாம ஒண்ணா இருந்தாலும் இது பொருந்தும். எதிரும் புதிருமாக இருந்தாலும் பொருந்தும்” என்று பொடி வைத்து கமல் பேச, வாய் விட்டுச் சிரித்து விட்டார் விக்ரமன்.

‘அழுது காரியம் சாதிப்பவர் யார்?’

பிரேக் முடிந்து வந்த கமல், அடுத்த தலைப்பைக் கையில் எடுத்தார். "சன்மானத்திற்கு ஒரு விருது.. நேர்மையா ஒரு விருதுன்னு கொடுத்தீங்க. ஓகே.. இப்ப இங்க சில தலைப்புகள் இருக்கு. அது யாருக்குப் பொருந்துமோ, காரணத்தைச் சொல்லி அவருக்கு கொடுங்க” என்று அடுத்த டாஸ்க்கை ஒப்படைத்தார். ஆரம்பமே அதிரடியான தலைப்பாக இருந்தது. ‘சூப்பர் சுயநலம்’ என்கிற தலைப்பிற்கு பலரும் அசிமின் பெயரை முன்மொழிந்தார்கள். தனலஷ்மி, ஜனனி, மைனா, ரச்சிதா, கதிரவன் ஆகியோர் எழுந்து இதற்கான காரணங்களைச் சொன்னார்கள். இதற்கான ஏற்புரையில் “ இதை நான் ஏத்துக்கலை. தனியாத்தான் கேம் ஆட வந்தேன். ஆப்பிள், தயிர்லாம் என்னை விடவும் ஜனனிதான் அதிகம் எடுத்து சாப்பிடறாங்க” என்று ஜனனியை போட்டுக் கொடுத்து விட்டு சமர்த்தாக அமர்ந்தார் அசிம்.

பிக் பாஸ் 6 நாள் 63; தனலக்‌ஷ்மி, ஜனனி, அசிம்
பிக் பாஸ் 6 நாள் 63; தனலக்‌ஷ்மி, ஜனனி, அசிம்

‘அழுதே சாதிப்பவர் யார்?’ என்கிற தலைப்பிற்கு தனலஷ்மி மற்றும் ஆயிஷாவின் பெயர்கள் கணிசமாக வந்தது பொருத்தமே. இதில் பெரும்பான்மையாக வந்து விருதைப் பெற்றார் தனலஷ்மி. “என்னை நல்லாப் புரிஞ்சு வெச்சிருக்காங்க” என்று புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் தனலஷ்மி. கோபப்படவில்லை. மாற்றம் முன்னேற்றம். ‘தடாலடி தற்பெருமை திலகம்’ என்கிற தலைப்பில் தனலஷ்மி, அமுதவாணன் ஆகிய பெயர்கள் வந்தாலும் மறுபடியும் மெஜாரிட்டியில் வந்தார் அசிம். இம்முறை விளக்கம் எதுவும் அளிக்காமல் ‘நன்றி வணக்கம்’ என்று சொல்லி விருதைப் பெற்றார். (அது!) ‘பாருங்க சார். உங்க முன்னாடியே ரெண்டு அவார்டு வாங்கிட்டாரு’ என்று சர்காஸ்டிக்காக சொல்லி விருதின் அடையாளத்தை உறுதி செய்தார் அமுதவாணன்.

‘சோறு முக்கியம்’ என்பது அடுத்த தலைப்பு. ‘ஜனனி.. ஜனனி..’ என்று பாட்டு பாடிய படியே இதை துவக்கி வைத்தார் அசிம். ஜனனியின் பெயர் பெரும்பான்மையாக வந்தது. ‘அவ துணி மூட்டைல ஆப்பிள்லாம் ஒளிச்சு வெச்சுப்பா’ என்று மக்கள் போட்டுக் கொடுக்க “அப்படியா.. எடுத்துட்டு வாங்க பார்க்கலாம்’ என்றார் கமல். உள்ளே பார்த்தால் பத்து கிலோ மாதுளம் பழம் இருந்தது. “எல்லாம் மத்தவங்க கொடுத்தது சார்” என்று சங்கடத்துடன் சிணுங்கினார் ஜனனி. ‘வெளில போய் கடைல வாங்கிட்டு வர்றீங்க போல’ என்று கமல் கிண்டலடித்தார். இது விளையாட்டுக்காக செய்யப்பட்டது என்றாலும், ஒருவரின் உடமையை சோதிப்பதை கமல் செய்தது அத்தனை ரசிக்கத்தக்கதாக இல்லை.

பிக் பாஸ் 6 நாள் 63; மைனா, ஏடிகே
பிக் பாஸ் 6 நாள் 63; மைனா, ஏடிகே

சபையில் அலட்சியமாக பேசிய மைனா

‘நகைச்சுவை என்கிற பெயரில் சொந்தப் பகையை தீர்த்துக் கொள்பவர்’ என்கிற தலைப்பு வந்தவுடன் அமுதவாணன் மற்றும் ஏடிகேவின் பெயர்கள் சமமான எண்ணிக்கையில் வந்ததால் இருவரும் இணைந்து இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்கள். ‘இதுல பெருமையில்லை. நகைச்சுவையில் காழ்ப்பு இருக்கக்கூடாது’ என்று செல்லமாக தலையில் குட்டினார் கமல்.

‘திறமையை மதிக்காமல் ஃபேவரிட்டஸம் செய்பவர் யார்?’ என்பது அடுத்த தலைப்பு. மணிகண்டன் தலையைக் குனிந்து இதற்கு நமட்டுச் சிரிப்பு சிரித்தார். மைனா மற்றும் மணிகண்டனின் பெயர்கள் சமமாக வந்தன. ‘லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில், மணிகண்டன் இடம் பிடிச்சு நண்பர்களுக்கு மட்டும் தந்தார்’ என்கிற புகாரை விக்ரமன் வைத்தது உண்மைதான். ‘நட்புன்றது டாஸ்க்கில் பிரதிபலிப்பது உண்மை’ என்று அழுத்தமாக சாட்சியம் சொன்னார் அசிம்.

இதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்த மைனாவின் குரலில் அலட்சியம் தெரிந்தது. “நாங்க இப்படித்தான் இருப்போம். வேணுமின்னா எங்களை நாமினேஷன் குத்தி வெளில அனுப்புங்க’ என்று உஷ்ணமானார். ‘உங்களை வெளில அனுப்பறதுக்கான விளையாட்டு இல்ல.. இது’ என்று சொன்ன கமலின் முகத்திலும் ஆட்சேபம் தெரிந்தது. ‘மைனாவிற்குப் புரியற மாதிரி சொல்லுங்க’ என்று பிரேக் விட்டு கமல் கிளம்பி விட்டார்.

பிக் பாஸ் 6 நாள் 63 ஜனனி
பிக் பாஸ் 6 நாள் 63 ஜனனி

“எங்களோட நட்பு விளையாட்டை எங்கேயாவது பாதிக்குதா.. சொல்லுங்க..” என்று ஒவ்வொருவரிடமும் சவால் விடுவது போல் கேட்டார் மைனா. இந்த மறுப்பை மைனா ஆரம்பம் முதலே சொல்லி வருகிறார். ஆனால் பார்வையாளர்களுக்கு இது தெளிவாகவே தெரிகிறது. மிக்ஸி பரிசளித்தது முதல் பல விஷயங்களில் இருவரும் தங்களின் நட்பைக் கொண்டாடுகிறார்கள். சன்மானம் விஷயத்திலும் இது பிரதிபலித்தது. ஒருவேளை அவ்வாறு இல்லை என்று மைனா வலுவாக கருதினால் ‘நாங்க அப்படி விளையாடலை. அது உங்க பார்வைன்னா அதை ஏத்துக்கறேன்” என்று சொன்னாலாவது சற்று முதிர்ச்சியாக இருந்திருக்கும். “எங்க இயல்புலதான் இருக்கோம்’ என்று மைனா சாதிக்க, அதையே மணிகண்டனும் வழிமொழிந்தார். ரச்சிதாவும் அசிமும் அரைமனதாக காரணங்களை அடுக்கினாலும் அதை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.

சிலர் இன்னமும் உள்ளே இருக்க காரணம் உழைப்பா, அதிர்ஷ்டமா?

பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல் சூட்டோடு சூடாக ‘அசிம்’ காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொல்ல, இளம் பெண்களிடமிருந்து கைத்தட்டல். (ரக்கட் பாய் பாசம்?!). இன்னொரு புதிய டாஸ்க்கை ஆரம்பித்தார் கமல். உழைப்பு காரணமாக தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் யார்? அதிர்ஷ்டம் காரணமாக இன்னமும் வீட்டில் இருப்பவர் யார்? என்று ஒவ்வொருவரும் பெயர்களைச் சொல்ல வேண்டும்.

பிக் பாஸ் 6 நாள் 63; தனலக்‌ஷ்மி, ஜனனி
பிக் பாஸ் 6 நாள் 63; தனலக்‌ஷ்மி, ஜனனி

இதில் ‘உழைப்பு’ கேட்டகிரியில் பலரும் தனலஷ்மியைச் சுட்டிக் காட்டினார்கள். அதற்கு அவர் தகுதியானவரே. டாஸ்க் என்று வந்து விட்டால் கில்லியாகி விடுகிறார். மற்றபடி தன்னுடைய தனிப்பட்ட ஆளுமையில் உள்ள குறைபாடுகளையும் தனலஷ்மி சரிசெய்து கொண்டால் சிறப்பாக இருக்கும். அமுதவாணன், அசிம், விக்ரமன், ஷிவின் பெயர்களும் ‘உழைப்பு’ கேட்டகிரியில் வந்தன. ‘அதிர்ஷ்டம்’ என்கிற பிரிவில் ஜனனி மற்றும் ரச்சிதாவின் பெயர்கள் சரமாரியாக வந்தன. அசிம் கதிரவனின் பெயரைச் சொன்ன போது ‘உங்க உழைப்பா, லக்கா.. ன்னு தெரியாது. நீங்க SAVED” என்ற தகவலை கமல சொல்ல, கைகூப்பி வணங்கினார் கதிரவன்.

‘லக்’ பிரிவில், ரச்சிதாவின் பெயரை மணிகண்டன் சொல்லி விட்டு, அதற்கு காரணமாக ‘அவங்களோட ரசிகர்கள் வாக்களிச்சு காப்பாத்திடறாங்க போல’ என்று சொல்ல “அந்தப் புகழிற்கு அவங்க உழைப்பு காரணமா இருக்கலாம்.. இல்லையா..?” என்று லாஜிக் பாயிண்ட்டை பிடித்தார் கமல். “வெளில தந்த உழைப்புதான் வீட்டிற்குள் அதிர்ஷ்டமா அமைஞ்சிருக்கு” என்று தன் பாயிண்ட்டை விடாமல் உறுதிப்படுத்தினார் மணி. ‘நான் வெறும் லக்குலயா இருக்கேன்.. இது நியாயமா கோப்பால்..’ என்று ரச்சிதா கண்கலங்கியதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

‘உழைப்பு’ கேட்டகிரியில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று அந்த விருதைப் பெற்ற தனலஷ்மி “இதுக்குப் பின்னாடி வெளில நான் தந்த ஆறு வருஷ உழைப்பு இருக்கு. இங்க அறுபது நாள் உழைப்பு இருக்கு. எல்லாத்துக்கும் எங்க அம்மாதான் காரணம். இதை அவங்க டிவில பார்க்கறப்ப ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்று நெகிழ்ந்தார். அடுத்ததாக ‘அதிர்ஷ்டம்’ கேட்டகிரியில் அதிக வாக்குகள் பெற்று அதிர்ஷ்ட தேவதையாகத் திகழ்ந்த ஜனனிக்கு “ரச்சிதாவிற்கு நீங்க வாக்களிச்சீங்க. ஆனா உங்க கழுத்துலதான் அதிக விருது தொங்குது” என்று கமல் குத்தலாக கேட்க, முகம் வாடினார் ஜனனி. அதென்னமோ இன்றைக்கு ரச்சிதாவிற்கு ஆதரவு அளிப்பதில் கமல் அதிக ஆர்வம் காட்டினார். (கண்கலங்கல் காரணமோ?!).

பிக் பாஸ் 6 நாள் 63; ஷிவின், ரக்‌ஷிதா
பிக் பாஸ் 6 நாள் 63; ஷிவின், ரக்‌ஷிதா

தன்னுடைய விளக்கத்தின் போது ‘நான் சரியாத்தான் விளையாடறேன். இது அவங்க பார்வையா இருக்கலாம். என்னை மேம்படுத்திக்க முயற்சிக்கிறேன்” என்று ரச்சிதா சொல்ல “இதுதான் குட் ஸ்பிரிட்’ என்று பாராட்டினார் கமல். (இது மைனாவிற்கான குட்டாக இருக்கலாம்!). ‘உழைப்பிற்கு விருது வாங்காதவங்க எழுந்திருங்க” என்று சொல்லி விட்டு அதில் ‘ஏடிகே’ காப்பாற்றப்பட்டதை நையாண்டியாக கமல் சொல்ல, மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார் போகானந்தா.

வீட்டை விட்டு வெளியேறிய ஆயிஷா

பிரேக் முடிந்து திரும்பிய கமல், எவிக்ஷன் கார்டை ஆட்டியபடியே வந்தார். “ஆன பெல்லிக்கு தாளம் எந்துகு.. மேளம் எந்துகு’ என்றொரு தெலுங்கு பழமொழி இருக்கிறது. அது போல் அடுத்த எவிக்ஷன் ‘ஆயிஷா’ என்பதை எளிதாக யூகித்து விட முடியும் போது எதற்கு இந்த சஸ்பென்ஸ்? எவிக்ஷன் வரிசையில் ஜனனியும் ஆயிஷாவும் இருக்க “அய்யோ.. எனக்கு பயமா இருக்கே..” என்று குழந்தையாக ஓவர் சீன் போட்ட ஜனனி மீது சற்று எரிச்சலாக வந்தது. தயங்கிய குரலில் அவர் ‘ஆயிஷா’ என்று சொல்ல, ‘நான்தான் போவேன்” என்று தெளிவாக சொன்னார் ஆயிஷா. இதில் ஆச்சரியம் என்னவென்றால் வீட்டில் உள்ள அனைவருமே ஆயிஷாவின் பெயரைத்தான் ஏகமனதாக சொன்னார்கள். ‘நீங்க இப்படிச் சொல்றீங்க.. ஆனா.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்-ன்றதுதானே பிக் பாஸ்..” என்று ஜனனிக்கு ஜெர்க் தந்து விட்டு ‘ஆயிஷா’ பெயர் போட்ட கார்டை குறும்புடன் காட்டினார் கமல்.

பிக் பாஸ் 6 நாள் 63; கமல்
பிக் பாஸ் 6 நாள் 63; கமல்

‘இதோ வந்துடறேன் சார்” என்று ஆயிஷா ஸ்போர்டிவ்வாக இருக்க, அழுகைக்கான முஸ்தீபுகளில் இறங்கினார் தனலஷ்மி. மற்ற அனைவரிடமும் பிரியாவிடை பெற்ற ஆயிஷா, வி்க்ரமனிடம் மட்டும் சற்று தள்ளி நின்றே விடை பெற்றது முரண். ஆயிஷா வெளியேறிய பிறகு “நீங்க காப்பாற்றப்பட்டது லக்கு இல்ல. உங்க உழைப்பு இருக்கு” என்று ஜனனியிடம் ஆறுதலாக சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரமன். (திங்கட்கிழமை நாமினேஷனுக்கு இப்போதே அஸ்திவாரம் போடுகிறாரோ?!).

தமிழ் உரைநடையின் முன்னோடி பாரதி

பிரேக் முடிந்து வந்த கமல் ‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்தார். ‘இன்று பாரதியின் பிறந்த தினம். எனில் வேறு யாருடைய புத்தகத்தை நான் சொல்ல முடியும்?;! பாரதி கவிதைகள் எழுதியிருப்பது பலருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் தமிழில் நல்ல உரைநடை என்பது பாரதியிருந்துதான் துவங்குகிறது. புன்னகையை வரவழைக்கும் வாக்கியங்களில் உரைநடை வடிவத்தை செழுமைப்படுத்தியிருக்கிறார். எனவே ‘பாரதியாரின் சிறுகதைகள்’ நூலைப் பரிந்துரைக்கிறேன். தமிழில் பொலிட்டிக்கல் கார்ட்டூன் உருவாக்கியதிலும் அவரே முன்னோடி” என்று மகாகவியை மிகப் பொருத்தமாக நினைவுகூர்ந்தார் கமல்.

பாரதியார்
பாரதியார்

“வாங்க..’ என்று கமல் அழைத்தவுடன் மான் போல சந்தோஷமாக துள்ளிக் கொண்டே வந்தார் ஆயிஷா. “எவிக்ஷனில் இத்தனை குதூகலமாக ஒருவர் வருவதை இப்போதுதான் பார்க்கிறேன்’ என்று கிண்டலடித்த கமல், பிக் பாஸ் அனுபவத்தை விசாரிக்க “வெளில திறந்து விட்ட மாதிரி இருக்கு” என்று பள்ளிக்கூட மணி அடித்தவுடன் வெளியில் ஓடி வந்த சிறுமி மாதிரி உற்சாகமாக சொன்னார் ஆயிஷா. “உள்ள சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன். சாப்பாட்டோட அருமை தெரிஞ்சது. மனுஷங்களை நம்பக்கூடாதுன்னு புரிஞ்சது” என்றெல்லாம் குழந்தைத்தனமாக அவர் சொல்லிக் கொண்டு போக “கடவுளைக் கூட நம்பாம இருக்கலாம். ஆனால மனுஷங்களை நம்புங்க” என்று கமல் தன் கொள்கையைப் பேச “பின்னால குத்தறாங்களே சார்” என்று சிணுங்கினார் ஆயிஷா. “எனக்கு பெரிய, பலமான முதுகு இருக்குன்னு அவங்களுக்கு காட்டுங்க” என்று சமயோசிதமான ஆறுதலைச் சொன்னார் கமல்.

தனது பயண வீடியோவைப் பார்த்ததும் ‘எனக்கே சகிக்கலை’ என்று சிரிப்புடன் சொன்னார் ஆயிஷா. வீடியோவைப் பார்க்கும் போது அவரது முகபாவங்கள் மாறிக் கொண்டே இருந்ததைப் பார்க்க சுவாரசியமாக இருந்தது. பிக் பாஸ் வாய்ப்பை சிரமப்பட்டுப் பெற்று உள்ளே வருபவர்கள், பிறகு விளையாட்டுத்தனமாக வெளியேறுவதைப் பார்க்க நமக்கே நெருடலாக இருக்கிறது.

பிக் பாஸ் 6 நாள் 63; கமல்
பிக் பாஸ் 6 நாள் 63; கமல்

ஆயிஷாவை வழியனுப்பி வைத்து விட்டு வீட்டிற்குள் சென்ற கமல் “ஓகே.. கிரிக்கெட் டீம் மாதிரி ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை பதினொன்றாக இருக்கிறது. டுவல்த் மேன் கிடையாது... இறங்கி அடித்து விளையாடுங்க. ஒருத்தரை ஒருத்தரை இல்ல. ஆட்டத்தை துணிவாக ஆடுங்கள்” என்று அறிவுறுத்தி விட்டு தானும் விடைபெற்றுக் கொண்டார்.

ஆக.. கமல் குறிப்பிட்டது போல், இந்த கிரிக்கெட் மேட்ச், ஒன்டே ஆட்டம் மாதிரி விறுவிறுப்பாக இருக்கப் போகிறதா? 20-20 மாதிரி பரபரப்பாக மாறப் போகிறதா அல்லது டெஸ்ட் மாட்ச் மாதிரி இழுக்கப் போகிறதா என்பதை காத்திருந்து பார்ப்போம்.