Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 64: `என்னைப் பிடிச்சவங்க கோடி பேர் இருக்காங்க!'; `அடடே' அசிம்; ஆத்திரமடைந்த ஷிவின்

பிக் பாஸ் 6 நாள் 64

அசிமைப் பற்றி விக்ரமனிடம் நீளமாக அனத்திக் கொண்டிருந்தார் ஏடிகே. “அவன் கிட்ட பேசவே கடுப்பாயிருக்கு. நச..நசன்னு பேசிக்கிட்டு.. அப்பப்ப முதுகில குத்தறான்.. லஞ்சம் கொடுக்கற மாதிரி தேவையான சமயத்துல நட்பைக் காட்டறான்..

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 64: `என்னைப் பிடிச்சவங்க கோடி பேர் இருக்காங்க!'; `அடடே' அசிம்; ஆத்திரமடைந்த ஷிவின்

அசிமைப் பற்றி விக்ரமனிடம் நீளமாக அனத்திக் கொண்டிருந்தார் ஏடிகே. “அவன் கிட்ட பேசவே கடுப்பாயிருக்கு. நச..நசன்னு பேசிக்கிட்டு.. அப்பப்ப முதுகில குத்தறான்.. லஞ்சம் கொடுக்கற மாதிரி தேவையான சமயத்துல நட்பைக் காட்டறான்..

பிக் பாஸ் 6 நாள் 64
“நான் பத்து பேரை அடிச்சு டான் ஆனவன் இல்லடா. என்னை அடிச்சுதான் பத்து பேரும் டான் ஆகியிருக்காங்க” என்று ‘மருதமலை’ திரைப்படத்தின் வடிவேலு போல அசிம் பன்ச் டயலாக் பேச, “டேய் .. ஒவ்வொருத்தர் கூடயும் வம்படியா போய் சண்டை போட்டவனே நீதானே?” என்று ஏடிகே காலை வாரினார். “அப்படின்னா.. சண்டை போட்டவங்கள்லாம் கண்டுக்காம போயிருந்தா, அசிம்-ன்னு ஒருத்தன் கிடையாதுல்ல” என்று மணிகண்டன் கூடுதலாக காமெடி செய்ததுதான் இன்றைய நாளின் ஹைலைட். அசிமின் மிகையான தன்னம்பிக்கைக்கு கிடைத்த மூக்குடைப்பு இது.

தோசையா, சோறா என்று கிச்சனில் கலாட்டா நடந்து கொண்டிருக்க “நாலு ஆம்பளைங்க சேர்ந்து போன வாரம் சமைச்சோம். சின்ன சத்தமாவது வந்ததா?” என்று ஏடிகே சொன்னது திருவாக்கியம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘டப்பாங்குத்து ஆடவா’ என்று கர்ணகடூரமான பாடல் ஒலித்தது. அசோகவனத்து சீதை மாதிரி ரச்சிதா சோகமாக அமர்ந்திருக்க, அவார்டு படக்காட்சி மாதிரி காமிரா அவரையே மௌனமாக காட்டியது. ‘ஏன் டல்லா இருக்கீங்க?’ என்று ஆளாளுக்கு ரச்சிதாவை துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். “மணிக்கு எல்லோருமேதான் காசு தந்தாங்க. பதினோரு பேரும் ஃபேவரிட்டஸம் பண்ணிட்டு என்னை மட்டும் ஏண்டா சொல்றீங்க?” என்று மைனா இன்னமும் பொருமிக் கொண்டிருந்தார்.

சபையைக் கூட்டிய பிக் பாஸ், ‘குட்மார்னிங்’ என்று இனிமையாக ஆரம்பித்து விட்டு ‘பத்தாவது வாரம் ஆரம்பிச்சாச்சு.. உங்களுக்கெல்லாம் பத்து போடற நேரம் வந்தாச்சு. இனிமே ‘தளர்வு’ன்ற வார்த்தையே உங்க டிக்ஷனரில இருக்கக்கூடாது. சரி.. இப்ப ஷாப்பிங் போங்க. நல்லா சாப்பிட்டு உடம்பை தயாரா வெச்சுக்கங்க” என்று பொருட்கள் வாங்க அனுப்பினார். வந்திருந்த மளிகைப் பொருட்களில் இருந்து பழங்களை தன்னுடைய இடத்தில் பத்திரப்படுத்தினார் தனலஷ்மி. (ஜனனி ஃபார்முலா?!).

பிக் பாஸ் 6 நாள் 64
பிக் பாஸ் 6 நாள் 64

‘தானே அமர்ந்த தானைத் தலைவன் அசிம்’

தனக்குத் தானே தானைத்தலைவனாகும் முயற்சியில் அசிம் பேசும் ‘பன்ச்’ வசனங்கள், மாஸ் முயற்சிகள், பாடிலேங்வேஜ் ஸ்டைல்கள் போன்றவற்றை அமுதவாணன் ரகளையாக கிண்டலடித்துக் கொண்டிருந்தார். “கண்ணாடி முன்னாடி நின்னு தனியா டயலாக் பேசிட்டு இருக்கான்.. இனிமே நீ பாலைய்யா இல்ல. அசிம்தான்.. அசிம் ஆர்மில்லாம் வெளில தீயா வேலை செஞ்சிட்டு இருப்பாங்கள்ல” என்று அமுதவாணன் சரமாரியாக கிண்டலடிக்க, தன்னைப் பற்றிய கலாய்ப்பு நிகழ்ந்து கொண்டிருப்பதை அறியாமல் தலையை கோதிக் கொண்டு வேகமாக வந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டு பந்தாவாக அமர்ந்தார் அசிம்.

“என்னைப் பிடிக்காதவங்க வீட்ல இருக்கலாம். ஆனா என்னைப் பிடிச்சவங்க வெளில கோடி பேரு இருக்காங்க. எவ்ள தூரம் என்னை எதிர்க்கறாங்களோ..அவ்ள தூரம் அவங்க வளருவாங்க.. என்னை வெச்சுதான் அவங்க வளர்ச்சி” என்றெல்லாம் அசிம் மாஸ் வசனமாக பேச, இதனால் காண்டான ஏடிகே “18 பேரும் எதிர்த்தாங்களா.. நான் எங்கடா உன்னை எதிர்த்தேன்?” என்று எதிர்க்கேள்வி கேட்க “எல்லோரும்தானே என் கூட சண்டை போட்டு பெரிய ஆளா ஆக முயற்சி பண்ணாங்க?” என்று அசிம் மல்லுக்கட்ட, “டேய்.. நீதானே ஒவ்வொருத்தர் கூடவும் போய் சண்டை போட்ட” என்று அசிமின் கட்அவுட்டில் பாலுக்குப் பதிலாக வெந்நீரை ஊற்றினார் ஏடிகே. “அப்படின்னா அந்த பதினெட்டு பேரும் கண்டுக்காம போயிருந்தா.. அசிம் கிடையாதுல்ல.. அவங்களுக்கும்தானே கிரெடிட் போகணும்” என்று அமைதியாக நகைச்சுவை வெடிகுண்டை பற்ற வைத்தார் மணிகண்டன்.

பிக் பாஸ் 6 நாள் 64; அசிம்
பிக் பாஸ் 6 நாள் 64; அசிம்

அசிம் தன்னம்பிக்கையாக பேசுவதும் நடந்து கொள்வதும் பாராட்டத்தக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் இந்த சீசனின் மையமே தான்தான் என்று நினைத்துக் கொள்வதும், ‘டைட்டில் வின்னர்’ என்று தன்னையே நம்பிக் கொள்வதும், தான் செய்யும் அழிச்சாட்டியங்களை மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்று மிகையாக கருதிக் கொள்வதும் அபத்தமாக இருக்கிறது. ‘ரக்கட் பாய்’ பாசத்தினால் சில இளம்பெண்கள் அசட்டுத்தனமாக கைத்தட்டுவதை வைத்து ஏதோ தமிழ்நாடே தன்னுடைய பின்னால் இருக்கிறது என்பது போன்ற கற்பனையை அவர் வளர்த்துக் கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட கற்பனையினால் பின்னடைவைச் சந்தித்த பல சினிமா ஹீரோக்கள் இருக்கிறார்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்.

மூன்றாவது முறையாக தலைவரான மைனா

தலைவர் போட்டி ஆரம்பித்தது. ரச்சிதா, மைனா மற்றும் அமுதவாணன் ஆகிய மூவரும் போட்டியாளர்கள். இதற்கான ஐடியாக்களை ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. ஒரு டப்பில் இருக்கும் தண்ணீரில் பின்பக்கமாக அமர்ந்து, கட்டியிருக்கும் டயாப்பரின் மூலம் நீரை உறிஞ்சிக் கொண்டு, சற்று தூரத்தில் இருக்கும் சேரில் அமர்ந்து பிழிய வேண்டும். சேரின் கீழே இருக்கும் பாட்டிலை யார் முதலில் திரவத்தை நிரப்புகிறாரோ, அவரே தலைவர். (இதெல்லாம் ஒரு போட்டி!) கடகடவென்று ஓடி அமுதவாணன் இந்தப் போட்டியில் வெல்வார் என்று எதிர்பார்த்தால், மைனா அதை சாதித்து விட்டார். ஆக மூன்றாம் முறையாக தலைவரானார் மைனா.

பிக் பாஸ் 6 நாள் 64; ரக்‌ஷிதா, அமுதவாணன், மைனா
பிக் பாஸ் 6 நாள் 64; ரக்‌ஷிதா, அமுதவாணன், மைனா

கிச்சன் டீமில் ஜனனி, தனலஷ்மி, விக்ரமன் ஆகிய மூன்று கத்துக்குட்டிகளை வைத்து அழகு பார்த்தார் மைனா. “தோள் கொடு நண்பா” என்று மைனாவை மணிகண்டன் நட்பு உரிமையில் கேட்க, அவரோ சாப்பிட்டு வைத்திருந்த வாழைப்பழத்தின் தோலை எடுத்து தந்தார். (காமெடியாம்!) தன் துணிகளையெல்லாம் தூக்கிப் போட்டு ‘எடுத்துக் கொடுடா” என்று புதிய தலைவர் பந்தா செய்ய “இந்த அநியாயத்தையெல்லாம் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?” என்று ஜாலியாக புலம்பினார் பாலைய்யா. “கீழ எறிஞ்ச துணிகளை பெருக்கித் தள்ளி வெளில வீசிடுங்க” என்று எவரோ டெரரான ஐடியாவைத் தர, பாய்ந்து வந்து தன் துணிகளை அள்ளிக் கொண்டு போனார் மைனா. (அது!). இது போன்ற இயல்பான நகைச்சுவைக் காட்சிகள்தான் பெரிய ஆறுதலைத் தருகிறது.

பிக் பாஸ் 6 நாள் 64; தனலக்‌ஷ்மி
பிக் பாஸ் 6 நாள் 64; தனலக்‌ஷ்மி

நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. மைனாவின் மீது யாரும் முத்திரை குத்த முடியாது. மைனாவோ மணிகண்டனின் பெயரைச் சொல்லி ‘ஃபேவரிட்டஸத்தில் தான் இல்லை’ என்று பதிவு செய்ய முயன்றார். அசிமின் பெயரைச் சொன்ன ஏடிகே “அவன் பண்றதையெல்லாம் பார்த்தா சினிமா பார்க்கற மாதிரியே இருக்கு. காமிராவைப் பார்த்தவுடனே பேச ஆரம்பிக்கிறான். தன்னம்பிக்கை ஓகே. ஆனா மத்தவங்களை மட்டம் தட்டக்கூடாது” என்று காரணம் சொன்னார். “என்னையும் மத்தவங்களையும் பத்தி அசிம் புறணி பேசறான்” என்று புலம்பினார் மணிகண்டன். “அவங்க உள்ளுக்குள்ள என்ன யோசிக்கறாங்கன்னே தெரியல” என்று ரச்சிதாவின் மீது சரமாரியான முத்திரைகள் விழுந்தன. ‘எப்பவும் சப்போர்ட் தேடறாங்க” என்று ஜனனியின் மீது புகார் சொன்னார் அசிம்.

ஹிட்லிஸ்டின் டாப்பில் இருக்கும் ரச்சிதா

நாமினேஷன் முடிவுகள் வெளிவந்தன. குறைந்த வாக்குகள் முதல் அதிக வாக்குகளின் வரிசையில்: ஜனனி, ஏடிகே, அசிம், விக்ரமன், மணி மற்றும் ரச்சிதா. ஆக ரச்சிதாதான் இப்போதைக்கு ஹிட் லிஸ்டில் இருக்கிறார். அவருடைய பொறுமையும் நிதானமும் ஒருவகையான அழகுதான் என்றாலும் அவசியமான நேரத்தில் கூட தனது உணர்வுகளை அடக்கிக் கொள்வது சில சமயங்களில் நெருடலை ஏற்படுத்துகிறது. இந்த நோக்கில் சக ஹவுஸ்மேட்ஸ் அவர் மீது வைக்கும் புகாரில் உண்மை இருக்கக்கூடும்.

பிக் பாஸ் 6 நாள் 64; ரக்‌ஷிதா
பிக் பாஸ் 6 நாள் 64; ரக்‌ஷிதா

மீண்டும் சோக மோடில் அமர்ந்திருந்த ரச்சிதாவிடம் “ஏன் டல்லாயிட்டீங்க.. லக்குலதான் இருக்காங்க..ன்னு சொன்னதில இருந்து இப்படி டவுன் ஆயிட்டிங்க. கரெக்ட்டா?” என்று மணிகண்டன் யூகித்து அக்கறையுடன் கேட்க, அப்போதும் கூட ‘ஒண்ணுமில்லையே’ என்று மௌனம் சாதித்தார் ரச்சிதா.

“ஏடிகே டாஸ்க்ல நிறைய ஹார்ட் வொர்க் போடறாரு.. ஆனா அவர் பேரை ஏன் யாருமே சொல்ல மாட்றாங்கன்னு தெரியல” என்று மைனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மணி. இப்படி சக போட்டியாளரின் உழைப்பை அங்கீகரிப்பது ஒரு நல்ல குணம். ‘எல்லாத்தையும் கழுவி வெச்சுட்டேன்” என்றபடி சரியாக அப்போது வந்து சேர்ந்தார் ஏடிகே. தாங்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றி மணி அவரிடம் கூற “போகானந்தா கேரக்ட்டர் தொடர்பா என்னை குறிப்பிட்டு நீ சொன்னியே” என்று பதிலுக்கு பாசம் காட்டினார் ஏடிகே.

அசிமைப் பற்றி விக்ரமனிடம் நீளமாக அனத்திக் கொண்டிருந்தார் ஏடிகே. “அவன் கிட்ட பேசவே கடுப்பாயிருக்கு. நச..நசன்னு பேசிக்கிட்டு.. அப்பப்ப முதுகில குத்தறான்.. லஞ்சம் கொடுக்கற மாதிரி தேவையான சமயத்துல நட்பைக் காட்டறான்.. அந்த vibe பிடிக்கலை. அவனுக்கு தன்னம்பிக்கை இருக்கலாம். ஆனா அதை வெச்சு மத்தவங்களை சவால் விட்டுட்டே இருக்கக்கூடாது. இதையெல்லாம் மக்கள் எப்படி பார்க்கறாங்கன்னே தெரியல. இவங்களும் என்ன காட்டறாங்கன்னு தெரியல. ஆனா அவனுக்கு கைத்தட்டல் வருது. ஒண்ணும் புரியல” என்கிற ஏடிகேவின் புலம்பலுக்கு “இன்னமும் கொஞ்ச வாரம்தான் இருக்கு. பல்லைக் கடிச்சிட்டு உங்க வேலையை சரியாப் பண்ணுங்க” என்று சரியான ஆலோசனையைத் தந்தார் விக்ரமன்.

பிக் பாஸ் 6 நாள் 64; ஏடிகே
பிக் பாஸ் 6 நாள் 64; ஏடிகே

ஸ்கிராட்ச் கார்டிற்கான போட்டி நடந்தது. ஸ்ட்ராவினால் ஆங்கில எழுத்துக்களை எடுத்து அடுக்க வேண்டும். இதில் வெற்றி பெற்ற ரச்சிதாவிற்கு ‘Jail Free offer’ கிடைத்தது. “இதை வெச்சிக்கிட்டு நான் என்ன பண்றது?” என்று அவர் அபத்தமாக கேட்க “வருங்காலத்தில் நீங்கள் சிறைக்குச் செல்ல நேரும் பட்சத்தில் அதற்கான முன்ஜாமீன் இது” என்று விளக்கினார் பிக் பாஸ்.

‘தோசையா.. சோறா..? – கிச்சனில் ஒரு கலாட்டா

வாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு உக்கிரமான சண்டை ஆரம்பித்தது. சமையல் அனுபவம் அதிகமில்லாத ஜனனி, தனலஷ்மி, விக்ரமன் ஆகிய மூவரும் ‘தத்தக்கா.. பித்தக்கா’ என்று சமையல் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கிரேவியாக செய்ய முயன்ற உருளைக்கிழங்கு கட்டியாகி பொறியல் போன்று ஆனதால் தோசை சுடும் ஐடியாவை கை விட்டு “சோறு செஞ்சிடலாம்” என்று திட்டத்தை மாற்றிக் கொண்டார்கள். அதாவது செருப்பிற்கு ஏற்ப காலை வெட்டும் வேலை.

தோசை மாவை தனலஷ்மி கரைத்து வைத்து விட்டு பிறகு ஐடியாவை மாற்றியதால் ‘தோசை சாப்பிடலாம்’ என்கிற விருப்பத்துடன் இருந்த ஷிவின் மிகவும் ஏமாற்றமடைந்தார். அவர் தனது ஆட்சேபத்தைத் தெரிவிக்க, ‘போட்டதைச் சாப்பிடுங்க. எங்க வேலைல தலையிடாதீங்க. டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று தனலஷ்மியும் ஜனனியும் எகத்தாளமாகச் சொல்ல, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஷவின் ஆத்திரமாகி உரக்க கத்த அவரை வெறுப்பேற்றி அழகு பார்த்தார் தனலஷ்மி. உணவு விஷயத்தில் ஒருவரை இம்சை செய்யக்கூடாது என்கிற அடிப்படை கூட ஜனனிக்கும் தனலஷ்மிக்கும் தெரியவில்லை.

பிக் பாஸ் 6 நாள் 64
பிக் பாஸ் 6 நாள் 64

“நாங்க ஒரு ஐடியா பண்ணோம். ஆனா சொதப்பிடுச்சு. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜட்ஸ் பண்ணிக்கங்க” என்று கிச்சன் டீம் தன்மையாக சொல்லியிருந்தால் கூட பிரச்சினை சுமூகமாக போயிருக்கலாம். ஆனால் ஓர் அதிகாரம் தன்னிடம் வந்தவுடனேயே அதை வைத்துக் கொண்டு மற்றவர்களைக் கட்டுப்படுத்த நினைப்பதுதான் மனித குணாதிசயமாக இருக்கிறது. பொறுப்பு என்பது அதிகாரம் அல்ல. அதை வைத்து சேவை செய்வதுதான் மனிதம். “போன வாரம் நாலு ஆம்பளைங்க சமைச்சோம். ஒரு சின்ன சத்தம் கூட வரலை” என்று பன்ச் டயலாக் பேசி, இந்தப் பஞ்சாயத்துக்கு முத்தாய்ப்பு வைத்தார் ஏடிகே.

வீட்டின் தலைவராக இந்த விவகாரத்தில் தலையிட முயன்று பிறகு தோற்றுப் போய் ஓரமாக அமர்ந்து விட்ட மைனாவிடம் சாட்சியம் சொல்லிக் கொண்டிருந்தார் ரச்சிதா. ‘இனிமே கிச்சன்ல கேப்டனைத் தவிர யாரும் வந்து கருத்து சொல்லாதீங்க” என்று புதிய விதியை எழுதிக் கொண்டிருந்தார் விக்ரமன். “நமக்குப் பிடிச்சத செஞ்சு தர வேண்டியதுதான் கிச்சன் டீமோட வேலை. இவங்க போடறதைத்தான் சாப்பிடணுமா.. நாம என்ன அடிமையா?” என்று இன்னொரு பக்கம் எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தார் அசிம்.

‘நல்லவனுக்கு நல்லவன்’ – பழைய திரைப்படம் – புதிய காப்பி

பைப் செட்டிங்கை தந்திருக்கும் டிசைன்படி சரியாக அடுக்கும் போட்டி நடந்தது. மூன்று அணிகளாகப் பிரிந்து மோதியதில் ரச்சிதா தலைமையிலான அணி வெற்றி பெற்றது. ஆனால் எல்லோருக்குமே 5000 மதிப்புள்ள பைப்புகளை பரிசளித்து மகிழ்ந்தார்கள். கிச்சன் டீமில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணையை தலைவர் மைனா மேற்கொண்டார். “நாங்க மூணு பேருமே கத்துக்குட்டிங்க. பார்த்து பார்த்து செய்யறோம். காய் வெட்டறதுக்கு ஒரு ஆளு வேணும்” என்று விக்ரமன் சொல்ல, மணியை புதிதாக கிச்சன் டீமில் சேர்த்து, விக்ரமனை பாத்ரூம் அணிக்கு அனுப்பினார் மைனா.

சபையைக் கூட்டிய பிக் பாஸ் “பத்தாவது வாரத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இது அதன் முதல் கட்ட டாஸ்க் எல்லோரையும் பத்தி ‘எப்படிப்பட்ட ஆளு’ன்னு புரிஞ்சு வெச்சிருப்பீங்க.. ‘நல்லவனுக்கு நல்லவன்’ன்னு நாலு பேரை தேர்ந்தெடுக்கணும்.. பிரச்சினைகளுக்கு காரணமாக இல்லாமல், அதை ஊதி பெரிது படுத்தாமல், கலகங்களுக்கு காரணமாக இல்லாத அந்த நான்கு நல்லவர்கள் யார்..? தேர்ந்தெடுங்க” என்றார். இனி வரும் டாஸ்க்குகள் போட்டியின் திசையை தீர்மானிக்கும் என்பதை அழுத்தமாக உணர்த்த விரும்பிய பிக் பாஸ் “புரிதலோட இதை ஆடுங்க.. புத்திசாலித்தனமா தேர்ந்தெடுங்க. ஏன்னா. இது எப்படியா போகும்னு உங்களுக்கு இப்ப தெரியாது” என்கிற வலுவான முன்குறிப்பை அளித்தார்.

பிக் பாஸ் 6 நாள் 64; ஜனனி
பிக் பாஸ் 6 நாள் 64; ஜனனி

ஒவ்வொருவராக வந்து தங்களின் தேர்வைச் சொன்னார்கள். சிலர் தங்களையே நல்லவராக இணைத்துக் கொண்டார்கள். இறுதியில், நல்லவனுக்கு நல்லவனாக வந்த அந்த நான்கு நபர்கள்: ரச்சிதா, கதிரவன், மணிகண்டன் மற்றும் அமுதவாணன். (யப்பா டேய்.. உங்களையெல்லாம் பார்த்த அப்படியொண்ணும் நல்லவங்க மாதிரி தெரியலையே?!). ஆக.. மக்கள் சேஃபான ஆட்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இந்த நான்கு நபர்களுக்கும் தேவதைகளின் இறக்கைகளைத் தந்த பிக் பாஸ், “தூங்கும் நேரம், ஒப்பனை நேரம் ஆகிய நேரங்களைத் தவிர மற்ற சமயங்களில் இதை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். ‘இதை மற்றவர்கள் அணிய அனுமதிக்கக்கூடாது’ என்று சொல்வதின் மூலம், அது திருடு போகக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறைமுகமாக எச்சரித்தார்.

இந்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ திரைப்படம் எப்படித்தான் இருக்கிறதென்று காத்திருந்து பார்ப்போம்.