Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 65 : `தப்பு அசிமு.. தேவையில்லாம பேசாத!' கொதித்த அமுதவாணன்; களேபர டாஸ்க்!

பிக் பாஸ் 6 நாள் 65

‘ஹப்பாடா. தனித்தனி கூண்டாம்.. அசிம் கிட்ட இருந்து தப்பிக்கலாம்’ என்று ஏடிகே ஜாலியாக கிண்டல் செய்து புறணி பேசிக் கொண்டிருந்தார். அசிமின் ஓவர்பில்டப், மட்டம் தட்டுதல் போன்றவற்றால் ஏடிகே புண்படுகிறார் என்பது தெரிகிறது.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 65 : `தப்பு அசிமு.. தேவையில்லாம பேசாத!' கொதித்த அமுதவாணன்; களேபர டாஸ்க்!

‘ஹப்பாடா. தனித்தனி கூண்டாம்.. அசிம் கிட்ட இருந்து தப்பிக்கலாம்’ என்று ஏடிகே ஜாலியாக கிண்டல் செய்து புறணி பேசிக் கொண்டிருந்தார். அசிமின் ஓவர்பில்டப், மட்டம் தட்டுதல் போன்றவற்றால் ஏடிகே புண்படுகிறார் என்பது தெரிகிறது.

பிக் பாஸ் 6 நாள் 65
‘சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது’ – தனது எழுபதாவது பிறந்த நாள் கட்டுரையில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய வாக்கியங்கள் இவை.

இந்த வார வீக்லி டாஸ்க், சொர்க்கம் – நரகம் – குறுக்கு வழி என்பதாக அமைந்தது. நரகவாசிகளுக்கு கூண்டில் அடைபட்டிருப்பது சிரமம்தான் என்றாலும் பல குறும்பான சாகசங்களைச் செய்து டாஸ்க்கை சுவாரசியப்படுத்தும் வாய்ப்பு நிறைய இருந்தது. ஆனால் பாவம் சொர்க்கவாசிகளுக்கு ஒன்றுமேயில்லை. ‘சமர்த்தா இருங்க’ என்று சொல்லி அவர்கள் கண்காணிக்க வேண்டியிருந்தது. ஆனால் சாத்தான்கள் இந்த டாஸ்க்கை சுவாரசியப்படுத்தினார்களா?

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

கிச்சன் டீமில் விக்ரமனைக் காணாததால் அதைப் பற்றி ஷிவின் விசாரிக்க, நடந்தவற்றைச் சொன்னார் மைனா. ‘நிர்வாக காரணங்களுக்காக ஆளை மாற்றி விட்டோம்’ என்று அவர் சுருக்கமாகச் சொல்லியிருந்தால் கூட பிரச்சினை எழுந்திருக்காது. ‘ஷிவின் தேவையில்லாம உள்ளே வந்து பேசறாங்க’ என்று விக்ரமன் சொன்னதாக கூடுதலாக தகவல்களை மைனா சொல்லியதால் ஷிவினின் மண்டைக்குள் ‘சுர்’ ஏறியது. ‘யம்மா தாயி.. நீ கேட்டதால யதார்த்தமா சொன்னேன். என் வாயைப் பிடுங்காத போ..’என்று எஸ்கேப் ஆக முயன்றார் மைனா.

‘எங்கே அந்த விக்ரமன்?’ என்று ஆவேசமாக தேடிச் சென்றார் ஷிவின். தனலஷ்மி மற்றும் ஜனனியின் மீது அவருக்கு இருந்த கோபம், இப்போது விக்ரமனின் மீதும் பரவியது. “நீங்க வந்து கிரியேட் பண்ணீங்கன்னு நான் சொல்லலை” என்று விக்ரமன் சமாதானமாகப் போக முயன்றாலும் “என்ன நடந்ததுன்னு முழுசா தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க” என்று ஷிவின் ஆவேசமானார். ஒரு கட்டத்திற்குப் பிறகு விக்ரமனுக்கும் சற்று கோபம் பரவி தனலஷ்மியை சாட்சிக்கு அழைக்க சூழலில் இன்னமும் உஷ்ணம் ஏறியது.

பிக் பாஸ் 6 நாள் 65 ; விக்ரமன், ஷிவின்
பிக் பாஸ் 6 நாள் 65 ; விக்ரமன், ஷிவின்

தோசை மாவு பிரச்சினையை வைத்து பெரிதாக வட்டம் போட்ட ஷிவின்

“ஏன் இந்த விஷயத்தைப் போட்டு இப்படி டீடெய்ல்டா ஆராய்ச்சி பண்றீங்க?’ என்று ஆய்வு செய்வதில் மாஸ்டரான விக்ரமனே கதறும்படி ஷிவின் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெருக்கியதால் “ஓகே.. பண்ணுங்க.. பண்ணுங்க’ என்று எரிச்சலாகி நகர்ந்து விட்டார் விக்ரமன். தன்னால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டு விட்டதோ என்று எண்ணிய மைனா, ஷிவினிடம் வந்து விளக்கம் சொல்ல ‘நான் கம்ப்ளீட்டா நார்மலாத்தான் இருக்கேன். ஒண்ணுமில்ல’ என்று உரையாடலை முடித்தார் ஷிவின். ‘நான் நல்லாத்தான் இருக்கேன்.’ என்று பெண்கள் சர்காஸ்டிக்கான குரலில் சொன்னால், அதன் பின்னால் வெடிகுண்டு காத்திருக்கிறது என்று பொருள்.

ஷிவினும் விக்ரமனும் பரஸ்பரம் நல்ல மதிப்பும் நட்பும் கொண்டிருக்கிறார்கள். இருவருமே புத்திசாலிகள் என்பதால் தவிர்க்க முடியாத ஈகோ உரசல் அவ்வப்போது ஏற்பட்டு விடுகிறது. ஷிவினிடம் மன்னிப்பு கேட்க அவரின் பின்னாலேயே திரிந்தார் விக்ரமன். ‘என்னைத் தனியா விடுங்க. உங்களிடம் பேச விரும்பலை’ என்று ஷிவின் முறுக்கிக் கொண்டதால் ஒரு கட்டத்தில் விக்ரமன் விலகி விட்டார். கிச்சன் டீம் செய்த ராவடியால், தோசை கிடைக்காத ஏமாற்றத்தில் ஷிவின் கோபம் கொண்டது கூட ஓகே. ஆனால் விக்ரமனிடம் இத்தனை மிகையான எரிச்சலைக் காட்டியது முறையானதல்ல.

சொர்க்கத்திற்கான குறுக்கு வழி – வீக்லி டாஸ்க்

விடிந்தது. கார்டன் ஏரியாவில் ‘நரகம்’ போன்ற செட்டப் போடப்பட்டிருந்தது. சிதைந்த மனித உடல்கள் ஆங்காங்கே காணப்பட்டன. பாம்புகளும் பல்லிகளும் தென்பட்டன. தெலுங்குப் பட வில்லனின் சாயலில் ஒரு உருவத்தை சாத்தானாக சிலை வடிவில் வைத்திருந்தார்கள். (பிக் பாஸ் முகமா இருக்குமோ?!). ஒரே இரவில் சூழலையே மாற்றியமைத்திருக்கிற, பிக் பாஸின் ஆர்ட் டிபார்ட்மெண்ட் கலைஞர்களுக்கும் பணியாளர்களுக்கும் பாராட்டு.

சூழலுக்குப் பொருத்தமாக ‘உனக்குள்ளே மிருகம்’ என்கிற பாடலுடன் நாள் 65 விடிந்தது. “நீ என்ன மாதிரியான ஏஞ்சல். பேபி ஏஞ்சலா?” என்று இறக்கையை மாட்டிக் கொண்டிருந்த அமுதவாணனிடம் மைனா செல்லம் கொஞ்ச ‘நான் எருமமாடு ஏஞ்சல்’ என்று அவர் காமெடி செய்தார். பாத்திரம் கழுவுதற்காக அமுதவாணணைத் தேடினார்கள். ‘இப்பத்தானே கழுவி வெச்சேன்” என்று அவர் சொல்ல “உன் ஷிப்ட்தானே இது.. என்னைத்தான் எப்பவும் கூப்பிடறாங்க” என்று அசிம் சலித்துக் கொள்ள, அரைமனதாக எழுந்து வந்தார் அமுதவாணன். தான் சரியாக வேலை செய்வதை அமுதவாணன் அவ்வப்போது பதிவு செய்கிறார். என்றாலும் இந்தக் குழப்படி ரீப்ளே போல் அடிக்கடி ஏனோ நிகழ்கிறது.

‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ என்கிற வீக்லி டாஸ்க்கின் விதிகளை வாசிக்க ஆரம்பித்தார் ஷிவின். எது சொர்க்கம், எது நரகம், யார் நல்லவர், எவர் கெட்டவர், நரகத்தில் உள்ளவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல குறுக்கு வழி இருந்தால்? போலவே சொர்க்கத்தில் உள்ளவர்களை நரகத்திற்கு அனுப்ப முடிந்தால்?.. இதுதான் டாஸ்க்கின் ஆதார புள்ளி. சொர்க்கவாசிகள் வீட்டின் உள்ளே இருப்பார்கள். நரகவாசிகள் கார்டன் ஏரியாவில் உள்ள கூண்டில் அடைக்கப்படுவார்கள். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நேர்வழி. தரப்படும் நேரத்திற்கு சைக்கிள் ஓட்டி உழைப்பைத் தரலாம். இன்னொன்று குறுக்குவழி. கூண்டிலிருந்து தப்பித்து சொர்க்கத்திற்கான பாதைக்குள் நைசாக ஓடி விடலாம். ஆனால் பிடிபட்டால் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

பிக் பாஸ் 6 நாள் 65
பிக் பாஸ் 6 நாள் 65

‘ஹப்பாடா. தனித்தனி கூண்டாம்.. அசிம் கிட்ட இருந்து தப்பிக்கலாம்’ என்று ஏடிகே ஜாலியாக கிண்டல் செய்து புறணி பேசிக் கொண்டிருந்தார். அசிமின் ஓவர்பில்டப், மட்டம் தட்டுதல் போன்றவற்றால் ஏடிகே புண்படுகிறார் என்பது தெரிகிறது. எனவே அவரைக் கிண்டல் செய்து தன் காயத்தை ஆற்றிக் கொள்கிறார் என்பதும் கூட புரிகிறது. ஆனால் இதையே தொடர்ச்சியாக ஏடிகே செய்து கொண்டிருக்கக்கூடாது. ஏனெனில் அசிம் உடனான நட்பையும் அவரால் விட முடியவில்லை. எனவே நட்பிற்கான நியாயத்தையும் அவர் காப்பாற்றித்தான் ஆக வேண்டும்.

‘சிறைச்சாலை எனக்கு பூஞ்சோலை’ – தேய்ந்து போன ரிகார்ட் வசனம்

டாஸ்க் துவங்குவதற்கான பஸ்ஸர் துவங்கியது. ‘வண்டி பத்து நிமிஷம் நிக்கும்.. சுச்சா போயிட்டு வரவங்கள்லாம் போயிட்டு வந்துருங்க’ என்று வெளியூர் பஸ் கண்டக்ட்ர் சொல்வது போல “இந்த முறை மட்டும் கழிவறை செல்ல சிறப்பு அனுமதி நரகவாசிகளுக்கு உண்டு’ என்று ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் கருணை காட்டினார் பிக் பாஸ். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

பிக் பாஸ் 6 நாள் 65; தனலக்‌ஷ்மி
பிக் பாஸ் 6 நாள் 65; தனலக்‌ஷ்மி

கூண்டிற்குள் செல்லும் போது ‘சிறைச்சாலை எனக்கு பூஞ்சோலை’ என்று தேய்ந்து போன ரிகார்ட் வசனத்தைச் சொல்லி ஏஞ்சல்களுக்கே கோபத்தை வரவழைத்தார் அசிம். இதர நரகவாசிகளான ஏடிகே, விக்ரமன், ஷவின், தனலஷ்மி, ஜனனி. மைனா ஆகியோரும் அடைக்கப்பட்டார்கள். கூண்டிற்கு மேலேயே சாவிகள் தொங்க விடப்பட்டிருந்ததால் அதை எடுப்பதற்கு கழிவறை குச்சி உள்ளிட்ட உத்திகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் அசிம் கூண்டை அசைத்தாலே சாவிகள் வந்து கீழே விழுந்தன. அதில் தன் கூண்டிற்கான சாவியைக் கண்டுபிடிப்பதுதான் சவால்.

தனலஷ்மியின் கூண்டின் அருகே சிறு பாம்புகள் அசைய (லுலுவாய்க்கு!) அவற்றைப் பார்த்து ஹாரர் படத்தில் வருவது போல பயத்தில் அலறினார் தனலஷ்மி. அவர் கத்தியதைப் பார்த்து பாம்புதான் பயந்திருக்கும். கூண்டின் பூட்டுக்களை ‘மூணு பத்து ரூபா’ என்று சல்லிசான விலையில் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. நரகவாசிகள் எந்தச் சாவியைப் போட்டாலும் திறந்து கொண்டது. எனவே தேவதைகள் விழிப்பாக இருந்து கண்காணிக்க வேண்டியிருந்தது.

“ஹே.. வாடா.. தப்பிச்சுப் போலாம்..” என்று பக்கத்து கூண்டில் இருந்த ஏடிகேவை அசிம் உசுப்பேற்ற “அய்யோ.. இவன் பக்கத்துலயே என்னைப் போட்டாங்களே. இங்கயும் இம்சையைக் கூட்டறானே’ என்கிற மாதிரியான சலிப்பில் ‘ஆக்சுவலி.. இப்ப தப்பிக்கறது வேஸ்ட்டு.. எப்படியும் ஆள் மாத்துவாங்க.. அதுவரைக்கும் ரெஸ்ட் எடுப்போம். இதுதான் என் ஸ்ட்ராட்டஜி” என்று சொல்லி விட்டு கூண்டிற்குள் சௌகரியமாக படுத்துக் கொண்டார் ஏடிகே. “அப்புறம் எப்படி கேம் மூவ் ஆகும். சுவாரசியம் ஏற்படும்?’ என்று அசிம் கதறினாலும் ஏடிகே கண்டுகொள்ளவில்லை.

இந்தப் பக்கம் தனலஷ்மி, மைனா, விக்ரமன், ஷிவின், ஜனனி ஆகியோர் பூட்டைத் திறப்பதும் மாட்டிக் கொள்வதுமாக குறும்புகள் செய்து கொண்டிருந்தார்கள். கதிரவனும் ரச்சிதாவும் உண்மையிலேயே தேவதை வம்சத்தைச் சேர்ந்தவர்கள். ‘அப்படில்லாம் செய்யக்கூடாது கண்ணுங்களா.. நல்ல பசங்கள்ல.. சமர்த்தா இருங்க’ என்று அவர்களை செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

பார்சல் சர்வீஸ் மூட்டையாக மாறிய மைனா

சைக்கிள் ஓட்டுவதற்கான சமிக்ஞை வந்தது. நரகவாசிகள் சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்புகளில் ஒன்று இது. சொர்க்கவாசிகள் தீர்மானித்தபடி இருப்பதிலேயே சமர்த்துக் குழந்தைகளாக இருந்து, குறைந்த குறும்புகள் செய்த ஏடிகேவும் ஜனனியும் தேர்வு செய்யப்பட்டார்கள். ஒருவர் காலிலும் இன்னொருவர் கையிலும் அரைமணி நேரத்திற்கு சைக்கிள் பெடல் செய்ய வேண்டும். இருவரும் தங்களின் டாஸ்க்கை முடித்து விட ‘ஜனனி போகட்டும். நான் தண்டனை ஏற்றுக் கொள்கிறேன்’ என்று விட்டுத்தந்தார் ஏடிகே. சைக்கிள் ஓட்டி முடித்தவருக்கு தண்டனை என்பது என்ன லாஜிக்கோ?! ஏடிகேவை எல் ஷேப்பில் குப்புறப் போட்டு டேப் ஒட்டி மடக்கி வைத்தார்கள். இந்தக் களேபரத்தின் இடையில், கூண்டிலிருந்து தப்பித்து குறுக்குப் பாதையில் ஓடிய மைனா பிடிபட்டார். அவரை பார்சல் சர்வீஸ் லாரியில் ஏற்றப்படும் மூட்டை மாதிரி கட்டி மூட்டையோடு மூட்டையாக அமர வைத்தார்கள். சிறிது நேரத்தில் ஏடிகே மற்றும் மைனாவின் தண்டனைக் காலம் முடிந்ததாக பிக் பாஸ் அறிவித்தார்.

பிக் பாஸ் 6 நாள் 65; விக்ரமன்
பிக் பாஸ் 6 நாள் 65; விக்ரமன்

அடுத்த சைக்கிள் டாஸ்க்கில் தனலஷ்மியும் விக்ரமனும் சென்றார்கள். தனலஷ்மி பாதியிலேயே கைவிட்டு விட முழுதாக ஓட்டி நல்ல பெயர் வாங்கினார் விக்ரமன். தனலஷ்மிக்கு அதே டேப் தண்டனை தரப்பட, விக்ரமன் சமர்த்தாக கூண்டிற்குள் வைக்கப்பட்டார். ஏடிகேவிடம் அசிம் சாவியைத் தர ‘யப்பா. நான் நல்ல பிள்ளையா இருக்க விரும்பறேன். என்னைக் கெடுக்காதே..” என்று அவர் சொல்ல “இவனுங்களையெல்லாம் வெச்சுக்கிட்டு என்னத்த கேம் ஆடி..’ என்று நொந்து போனார் அசிம்.

“நாங்க ரெண்டு பேர் தப்பிச்சு சொர்க்கத்திற்கு போயிட்டா.. நீங்க ரெண்டு பேர் நரகத்திற்கு வந்தாகணும்” என்று அசிம் சொல்ல, ‘அய். நல்லாயிருக்கே.. கதை. அப்படில்லாம் கிடையாது’ என்று அமுதவாணன் சொல்ல, ‘ரூல் புக்கை எடுத்து ஒழுங்கா படி. தமிழ் தெரியும்ல’ என்று அசிம் நக்கலடிக்க “தோடா.. இவருதான் தமிழ் புலவர்.. தமிழ்நாட்டையே தாங்கிப் பிடிக்கற மாதிரி சீனு’ என்று அமுதவாணன் டென்ஷன் ஆக. இரு புலவர்களுக்குள்ளும் விவாதம் ஏற்பட்டது. வில்லங்கமான தமிழ்ச் சொற்கள் தாராளமாக சிதறி தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு இருவரும் தெரிவித்தார்கள்.

அசிம் – அமுதவாணன் – சண்டை

“இப்ப உதாரணத்திற்கு ஒண்ணு சொல்றேன்.. அமுதவாணனும் ஜனனியும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி பண்றாங்கன்னு வெச்சுப்போம்’.. என்று பேச்சு வாக்கில் வாக்கியத்தின் இடையில் வில்லங்கமான வெடிகுண்டை அசிம் ஒளித்து வைக்க “இரு.. இரு.. உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா.. தப்பு அசிமு.. தேவையில்லாம பேசாத’ என்று சூடானார் அமுதவாணன். ‘தோடா.. அசிம்தான் எனக்கு வாய்ப்பு தந்தாராமா?’ என்று டேப் ஒட்டப்பட்டு தூரத்தில் கிடந்த தனலஷ்மியும் இந்தச் சண்டைக்குள் புகுந்தார். எனவே விவாதத்தின் செழுமையும் மொழியின் பெருமையும் கூடியது என்றால் அதில் மிகையில்லை.

பிக் பாஸ் 6 நாள் 65; ஜனனி
பிக் பாஸ் 6 நாள் 65; ஜனனி

‘உதாரணம் சொல்கிறேன் பேர்வழி’ என்று அமுதவாணன் – ஜனனி பெயரை அசிம் இழுத்ததையொட்டி ‘அது தப்பு அசிம்.. அப்படிச் சொல்லக்கூடாது’ என்று நல்ல நண்பர்களாக விக்ரமனும் ஏடிகேவும் சுட்டிக் காட்டினார்கள். அசிம் வில்லங்கமாக தலையாட்டுவதைப் பார்த்து ‘அப்படி சர்காஸமா தலையாட்டாதே’ என்று ஏடிகே எரிச்சல் அடைய “டேய்.. நான் சாதாரணமாத்தான்டா தலையாட்டினேன்’ என்று அசிம் நொந்து போய் சொன்னார்.

சைக்கிள் ஓட்ட வேண்டிய நேரம். இந்த முறை அசிமும் மைனாவும் தேவதைகளால் தேர்வு செய்யப்பட்டார்கள். சைக்கிளில் ஏறிய மறு நிமிடமே அசிம் இறங்கி விட்டார். உடை சௌகரியமாக இல்லை என்பது அவர் சொன்ன காரணம். அல்லது இத்தனை நேரம் மெனக்கெட்டு மிதித்தாலும் மறுபடியும் கூண்டிற்குள்தானே செல்ல வேண்டும் என்று நினைத்து விட்டாரோ, என்னமோ. ஆனால் மைனா சொல்லப்பட்ட நேரம் வரைக்கும் சமர்த்தாக மிதித்து தீர்த்தார். மைனா இரண்டாவது முறையும் தப்பித்து குறுக்கு வழியில் உள்ளே புக முயல, மறுபடியும் அவரைப் பிடித்து மூட்டையாக கட்டி பார்சல் சர்வீஸில் போட்டார்கள்.

‘புத்தி சொல்லி சாத்தான்களை திருத்துங்க’

இந்த டாஸ்க் ஒரு மார்க்கமாக சென்று கொண்டிருந்ததால் ஏதாவது கலகத்தை ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்த பிக் பாஸ், சொர்க்கவாசிகளுக்கு ஒரு குறிப்பு தந்தார். அதாகப்பட்டது “எங்களை மாதிரியே நீங்களும் நல்லவர்களாகத் திகழ்வதற்கு இன்னின்ன விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று தேவதைகள், சாத்தான்களுக்கு புத்தி சொல்ல வேண்டும்.

இந்த நேரத்தில் மைனாவிற்கும் அசிமிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘ஒரு கேப்டனா நான் சொல்றேன்” என்று மைனா சூடாக, பதிலுக்கு அசிமும் உஷ்ணமானார். இந்தச் சண்டை அப்படியே அசிமிற்கும் அமுதவாணனக்கும் இடையே என்றாகியது. “தப்பிச்சுல்லாம் போக மாட்டேன். தைரியமா கயித்தை கழட்டுங்க.. பின்னாடி வெச்சு கட்டுங்க’ என்றெல்லாம் பன்ச் வசனம் பேசினார் அசிம். அமுதவாணன் சற்று தயங்க ‘உள்ள அல்லு இல்ல போல” என்று அசிம் நக்கலடிக்க ‘அய்யோ.. யப்பா.. ஜானி... பயமாருக்குப்பா..’ என்று மெட்ராஸ் படத்தின் ஜானி மாடுலேஷனில் பயப்படுவது போல் பாவ்லா செய்து பதிலுக்கு வெறுப்பேற்றினார் அமுதவாணன். மைனாவிற்கும் அசிமி்ற்கும் தண்டனைக் காலம் முடிந்தது.

பிக் பாஸ் 6 நாள் 65; கதிரவன்
பிக் பாஸ் 6 நாள் 65; கதிரவன்

தேவதைகள், சாத்தான் ஏரியாக்காரர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய நேரம். முதலில் வந்த அமுதவாணன் ‘ஏடிகே நல்ல மன்சன்தான். ஆனா கோபத்தை அடக்கணும்.. காய்ஞ்ச மிளகா.. தீய்ஞ்ச வெங்காயம்..இந்த மேட்டரைக் கூட இழுத்து வெச்சு பஞ்சாயத்து பண்ற கெட்ட வழக்கத்தை விக்ரமன் நிப்பாட்டணும். தனலஷ்மி கோபத்தைக் கண்ட்ரோல் செஞ்சா நல்லாயிருக்கும்’ என்று அமுதவாணன் முடிப்பதற்கு முன்பே ‘என்னா. எதுக்கு கோபம்.. யாரைச் சொல்ற... எப்படிச் சொல்ற.?” என்று தனலஷ்மி எகிற ‘இதோம்மா.. இதைத்தான் குறைச்சுக்கோன்னு சொல்றேன்’ என்று அமுதவாணன் சொன்ன டைமிங் சிறப்பு. “இன்னும் கொஞ்சம் ஆக்டிவ்வா செயல்படணும்” என்று ஜனனிக்கு அவர் சொல்ல, எங்க கிட்டயும் சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம் என்பது மாதிரி ஜனனியும் கோபப்பட்டார்.

அடுத்து வந்த ரச்சிதா “விக்ரமன் ஐயா. நீங்க சொல்றத மத்தவங்க கேட்கணும்னு எதிர்பார்க்கற மாதிரி.. மத்தவங்க சொல்றத நீங்களும் கொஞ்சம் கேளுங்க.. அசிம்.. மத்தவங்க உணர்வுகளை புரிஞ்சுக்கிட்டு பேசுங்க” என்று சொல்ல, அடுத்து வந்த இன்னொரு தேவதையான கதிரவன் ‘அளவா சாப்பிடுங்க” என்று ஜனனிக்கு சொல்ல, பாவனையாக கோபப்பட்டார் ஜனனி. “ஷிவின்.. நீங்க பேசறதெல்லாம் ஓகே.. ஆனா சத்தமா பேசறதால சொல்ல வந்த விஷயத்தோட அர்த்தம் போய் சேரலை” என்று கதிரவன் சொல்ல “உதாரணம் சொல்லுங்க.. எந்த விஷயத்துல?’ என்று ஷிவினும் தன் ஆட்சேபத்தை தெரிவித்தார்.

பிக் பாஸ் 6 நாள் 65
பிக் பாஸ் 6 நாள் 65

தூங்கும் நேரம் நெருங்கி விட்டது. ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒருவரை மாற்றம் செய்ய வேண்டிய நேரம். முழுதாக சைக்கிள் ஓட்டி முடித்த விக்ரமனை சொர்க்கத்தில் ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார்கள். “நான் நரகத்துக்குப் போறேன்..” என்று கதிரவன் தியாகம் செய்தார். ஆக இருவரும் இடம் மாறினார்கள். ‘இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என்று அறிவித்த பிக் பாஸ், ‘நரகவாசிகள் இன்றிரவு வீட்டுக்குள் தூங்கலாம்’ என்று கருணை காட்ட அவர்கள் மகிழ்ச்சியானார்கள். மழை காரணமாக இருக்கலாம்.

என்னதான் பிக் பாஸ் சீனியர் சாத்தான் என்றாலும், அவரிடமும் கொஞ்ஞூண்டு கடவுள்தன்மை இருக்கத்தான் செய்கிறது.