Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 69: குறும்படத்தில் வென்ற விக்ரமன்; ரச்சிதாவால் கண்ணீர் விட்ட ஷிவின்!

பிக் பாஸ் 6 நாள் 69

தலைவரான மைனா, மிக்ஸி பரிசளிக்க வேண்டிய நேரம். மணிக்கு நேரிடையாகக் கொடுத்தால் எங்கே ஃபேவரிட்டஸம் என்று சொல்லி விடுகிறார்ளோ?!’ என்று கதிரின் பெயரையும் கூட சேர்த்துக் கொண்டு பிறகு மணிக்கு கொடுத்தார்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 69: குறும்படத்தில் வென்ற விக்ரமன்; ரச்சிதாவால் கண்ணீர் விட்ட ஷிவின்!

தலைவரான மைனா, மிக்ஸி பரிசளிக்க வேண்டிய நேரம். மணிக்கு நேரிடையாகக் கொடுத்தால் எங்கே ஃபேவரிட்டஸம் என்று சொல்லி விடுகிறார்ளோ?!’ என்று கதிரின் பெயரையும் கூட சேர்த்துக் கொண்டு பிறகு மணிக்கு கொடுத்தார்.

பிக் பாஸ் 6 நாள் 69
எல்லைக்கோடு பிரச்சினையில், குறும்படத்தின் வழியாக விக்ரமனுக்கு நியாயம் கிடைக்கும என்பது முன்பே எளிதி்ல் யூகித்த விஷயம்தான். நன்கு அறியாமல் சாட்சி சொல்வது, ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடக்கூடும் என்பதுதான் இதில் நாம் கற்க வேண்டிய நீதி. குறும்படம் மூலம் விஷயம் தெளிவான பிறகும், தவறான சாட்சி சொன்னவர்களில் ஒருவர் கூட விக்ரமனிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

தேவதையின் குணாதிசயம் என்பது டாஸ்க்கிற்காக வலுக்கட்டாயமாக வரவழைப்பதல்ல. அது ஒரு மனிதனுக்குள் இயல்பாகவே படிந்திருக்க வேண்டிய அம்சம். மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமான விஷயமும் கூட. முதல் சீசனில் பரணி வீட்டை விட்டு வெளியேறிய போது ஒட்டுமொத்த வீடே விரோதமாக திரும்பி அமர்ந்திருக்க, ஓவியா மட்டும் ‘Bye Barani’ என்று சொன்ன தருணம் நினைவில் இருக்கிறதா?!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

கமலுக்கு சொர்க்கம், நரகம் போன்ற கற்பிதங்களில் நம்பிக்கையிருக்காது என்பது தெரியும். எனவே ‘அவையெல்லாம் நாம் கால்வைக்காத நிலம். பட்டா இல்லாத நிலத்திற்கு காசு கொடுப்பது மாதிரி செய்து கொண்டிருக்கிறோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நரகத்தை, சொர்க்கமாக மாற்றி நம் பிள்ளைகளுக்கு அளித்து விட்டு செல்ல வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய செயல். கலை, இலக்கியம், அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ வேண்டும்’ என்கிற முன்னுரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை காட்டத் தொடங்கினார் கமல்.

தலைவரான மைனா, மிக்ஸி பரிசளிக்க வேண்டிய நேரம். மணிக்கு நேரிடையாகக் கொடுத்தால் எங்கே ஃபேவரிட்டஸம் என்று சொல்லி விடுகிறார்ளோ?!’ என்று கதிரின் பெயரையும் கூட சேர்த்துக் கொண்டு பிறகு மணிக்கு கொடுத்தார். “மக்கள் கிட்ட போயிட்டு திரும்பத் திரும்ப வர்றதுலதான் பெருமை இருக்கு” என்று சவடாலாகப் பேசிக் கொண்டிருந்தார் தனலஷ்மி. அவர் சொல்வது ஒருவகையில் உண்மைதான். ஆனால் ஒருவர் தேர்வில் ஃபெயிலாகி திரும்பத் திரும்ப எழுதுவதை பெருமையாக சொல்லித் திரிய முடியாது. தனலஷ்மியின் பேச்சைக் கேட்ட ஏடிகே “சமூகம்னா இவங்களுக்கு ஜோக்கா தெரியுது. ‘டேக் இட் கிரான்ட்டடா எடுத்துக்கறாங்க’.. மக்கள் குனிய வெச்சு முதுகுல குத்தும் போதுதான் தெரியும்” என்றது மிகச்சரி.

பிக் பாஸ் 6 நாள் 69
பிக் பாஸ் 6 நாள் 69

நாமினேஷன் பற்றிய உரையாடலின் போது ‘ஏ.. ராமசாமி.. இங்க வாயேன்.. நம்ம ஷிவின் கொளுத்திப் போட மாட்டாளாமாம்..” என்று ஒவ்வொருவரையாக அழைத்து அழைத்து விசாரித்து ஷிவினை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் தனலஷ்மி. இந்தக் கிண்டலை ஷிவின் திறமையாக சமாளித்தாலும் அவரது முகம் மாறியதைக் கவனிக்க முடிந்தது. குறிப்பாக ரச்சிதாவும் இதில் இணைந்த போது அவர் கூடுதலாக வருத்தமடைந்தார். பிறகு இரவின் தனிமையில் அவர் கண்கலங்கிக் கொண்டிருந்ததை காமிரா ஓவியம் போல டாப் ஆங்கிளில் காட்டிக் கொண்டிருந்தது. விடிந்ததும் ஷிவினுக்கு முத்தம் தந்து சமாதானப்படுத்தினார் ரச்சிதா.

'எனக்கு கார்னர் சீட்டுதான் வேணும்’ – அடம்பிடித்து நகர மறுத்த ஹவுஸ்மேட்ஸ்

கமலின் வருகைக்கு முன்னர் அனைவரும் பளபள டிரஸ்ஸில் அமர வேண்டிய நேரம். கார்னர் சீட்டிற்கு இடம் பிடிப்பது மாதிரி ஒவ்வொருவரும் அவர்களின் வழக்கமான ஸ்பாட்டில் அமர அடம்பிடித்தனர். நடுநாயக கம்பீரமாக அமர்ந்திருக்கும் தன்னுடைய இடத்தை விட்டு நகர முடியாது என்று தெரிவித்து விட்டார் அசிம். எனவே ஜனனி இடம் மாறி அமர்ந்தார். ஆனால் அது வாஸ்து சரியில்லாத ‘எவிக்ஷன்’ ஏரியா என்று மற்றவர்கள் கிண்டல் செய்தார்கள். (அதுதான் இந்த வாரமும் உண்மையாயிடுச்சோ?!) ‘சோபா என்பது பொதுவானதுதானே?!” என்று விக்ரமன் சொல்ல ‘ஆரம்பிச்சிட்டார்யா. ரூல்ஸ் ராமானுஜம்’.. என்பது மாதிரி மற்றவர்கள் சர்காஸ்டிக்காக சிரிக்க ஆரம்பித்தார்கள்.

அகம்டிவி வழியாக உள்ளே வந்த கமல், இந்த கர்ச்சீப் போட்டு இடம் பிடிக்கும் வேலையில் முதலில் ஆப்பு வைத்தார். ‘எப்பவும் ஒரே ஆர்டர்ல உக்காந்திருக்கீங்க. போரடிக்குது. மாத்தி உக்காருங்க” என்று சொன்னவுடன் வேறு வழியின்றி அனைவரும் கலைந்து அமர்ந்தனர். “விக்ரமன்.. அசிமோட இடத்துல உக்காந்திருக்கீங்க.. நல்ல போட்டிதான்’ என்று கமல் கிண்டலடித்தார். ஆக.. இடத்திற்காக இவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்ததை உள்ளே இருந்தபடி பார்த்திருப்பார் போல.

பிக் பாஸ் 6 நாள் 69; ஷிவின்
பிக் பாஸ் 6 நாள் 69; ஷிவின்

“என்ன... ஷிவின்.. இரவெல்லாம் கண்ணீர்?” என்று ஆரம்பத்திலேயே விசாரணையை துவக்கினார் கமல். “தனலஷ்மி கிண்டல் பண்ண ஆரம்பிச்சா. ரச்சிதாவும் அதுல சாட்சி சொன்னதுதான் எனக்கு கஷ்டமா போச்சு. இத்தனை நாள் இருக்கேன். அப்ப சொல்லியிருக்கலாம்” என்று ஷிவின் வெட்கமும் வருத்தமும் கலந்து சொல்ல, விளக்கம் சொல்ல எழுந்த தனலஷ்மி “ஜாலிக்கு பண்ணது.. அதெல்லாம் ஒரு மேட்டரா?” என்பது போல் மழுப்ப “ஓகே.. அப்ப பெரிய மேட்டரா பேசுவோம். தோசை மாவு பிரச்சினை என்ன?’ என்று கமல் அடுத்த சப்ஜெக்ட்டிற்கு நகர சபையில் சிரிப்பொலி எழுந்தது.

விவகாரத்தை முழுக்க கேட்டறிந்த கமல் “ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்ட பின்னர், மருமகள் வேலையில் அடிக்கடி மூக்கை நுழைக்கும் மாமியார் மாதிரி பின்னால் நின்று எதையும் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது” என்று ஒருபக்கம் ஷிவினுக்கு அறிவுறுத்தி விட்டு ‘ஒரு பரிந்துரை வரும் போது அலட்சியப்படுத்தாதீங்க. கொளுத்திப் போட்டாதான் அடுப்பு பத்த வைக்க முடியும்” என்று இந்தப் பக்கமும் அட்வைஸ் திரியைப் பற்ற வைத்தார். ‘ஒரு சிறிய தோசைக்குப் பிறகு. மன்னிக்கவும். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு’ என்று கமல் சொன்ன போது சபையில் மிகையான சிரிப்பு வந்தது. (இது அவ்ள ஒண்ணும் பெரிய தோசையில்லையே. ச்சே.. ஜோக் இல்லையே?!).

தொடர்ந்து விதிமீறல்கள் நிகழ்கின்றன. – கமல் காட்டம்

ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல், “இங்கு நிறைய விதிகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. நாமினேஷன் பற்றி விவாதிப்பது, விசாரிப்பது, ஓட்டு சேகரிப்பது போன்றவை விதிமீறல்.. யாரெல்லாம் செய்யறீங்க?” என்று அடுத்த புலன் விசாரணையை ஆரம்பித்தார். இத்தனை சீசன் பார்த்த பழக்கத்தில் நமக்கே நன்றாகத் தெரிகிறது. கமல் ஒன்றை சுற்றி வளைத்து ஆரம்பித்தால், தனக்கான இரையை வேட்டையாட கிளம்புகிறார் என்று. ஆனால் உள்ளே இருப்பவர்கள் தொடர்ந்து மழுப்புவதையும், தெரியாதது போல் திகைப்பதையும் நிறுத்துவதில்லை. எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்து பாவனை செய்கிறார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 69; கமல்
பிக் பாஸ் 6 நாள் 69; கமல்

“நாமினேஷன் முன்னாடிதான் பேசுவோம்.. நான் பேசியிருக்கேன்.. ஆமாம். யாருக்குப் போடலாம்ன்னு பேசியிருக்கோம்..” என்று கமல் அழுத்தி கேட்க கேட்க உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. ஆனால் கமலின் மெயின் டார்கெட் என்பது அமுதவாணன் –ஜனனிதான். ஆனால் போகிற வழியில் நிறைய உண்மைகள் கிடைத்துக் கொண்டேயிருந்தன. இந்த விசாரணை காரணமாக ஜனனியின் முகம் மாறினாலும் அமுக்காணி மாதிரி அப்படியே உட்கார்ந்திருந்தார். “நீங்களா சொல்றீங்களா.. நானா உடைக்கட்டுமா?’ என்று கேட்ட கமல், பிறகு ஜனனி – அமுதவாணனை நேரடியாக விசாரிக்க “ஆமாம். சொல்லிடுவேன்” என்று வெள்ளந்தியான குரலில் தன் தவறை மூடி மறைக்க முயற்சித்தார் ஜனனி. “அவ சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்” என்று சமாளித்தார் அமுதவாணன். “எந்த வகையிலும் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை இன்ஃப்ளூயன்ஸ் செய்வது தவறு அல்ல தப்பு” என்று கமல் எச்சரிக்கை தந்தார்.

பேய்ப் பல்லுடன் ஒரு டெரர் விளையாட்டு

பிரேக் எடுத்து திரும்பிய கமல் “தேவதை சாத்தான் ஆட்டம் ஆடீனீங்க.. நாமளும் ஒரு விளையாட்டு விளையாடலாம். உங்க புகைப்படத்தோட பின்னாடி ஒரு பெயர் இருக்கும். அவரோட அரக்க குணம் வெளிப்பட்ட தருணத்தைச் சொல்லி அவருக்கு இந்த பேய்ப்பல்லை மாட்டி விடுங்க” என்று ஆரம்பித்தார். மணிகண்டனை மூத்திரச்சந்தில் மடக்கி நிறுத்தி போட்ட சண்டையை நினைவுகூர்ந்த விக்ரமன், மணிக்கு பல்லை அளித்தார். ஷிவினுக்குத் தந்த மணிகண்டன் “ஃபேவரிட்டஸம்ன்னு சொல்லுவாங்க. ஆனா விக்ரமனுக்குத்தான் எப்பவும் விருது தருவாங்க” என்று புகார் சொன்னார்.

பிக் பாஸ் 6 நாள் 69; ஏடிகே
பிக் பாஸ் 6 நாள் 69; ஏடிகே

‘கதவை உடைச்சாங்க” என்று அற்பமான காரணத்தைச் சொல்லி ரச்சிதாவைச் சுட்டிக் காட்டினார் தனலஷ்மி. பேய்ப்பல் தரப்பட்டவர்கள் அதை அணிந்து கொண்டே பேசுவதற்கு சிரமப்பட “இப்ப தெரியுதா. கல்யாணராமன் படத்துல நடிச்சப்ப நான் எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன்னு” என்று சிரித்தார் கமல். கிளி ஜோசியத்தில் தனக்குப் பிடிக்காத புகைப்படம் வந்து விட்டால் எப்படி சங்கடம் அடைவோமோ, அப்படியே அசிமின் புகைப்படத்தைப் பார்த்து “எப்படி சார். இப்படியெல்லாம் நடக்குது..?” என்று ஏடிகே நொந்து சிரித்தார். ஏனெனில் அவருக்கு வந்திருந்தது அசிமின் புகைப்படம். “ஒரு விஷயத்தை சரி பண்றேன்னு பெரிசாக்கிடுவான். சைக்கிள் ஜாக்சன் எனக்குப் பிடிக்கும்னு சொன்ன விஷயத்தை திரிச்சு பொதுவில பதிவு பண்ணிட்டான். இப்படியே சண்டை சமாதானம்ன்னு எங்க வாழ்க்கை போகுது” என்று சொன்னார் ஏடிகே.

அமுதவாணன் தனலட்சுமியையும், ஜனனி அமுதவாணனையும் (பார்றா!), ரச்சிதா ஏடிகேவையும் (நகைச்சுவை என்கிற பெயரில் காழ்ப்பு) அசிம் ஜனனியையும் (அவமரியாதை) சுட்டிக் காட்டி அரக்கத்தருணங்களை நினைவுகூர்ந்தார்கள். கதிரவனுக்கும் மைனாவிற்கும் அவர்களின் சொந்தப் பெயர்களே வந்திருந்தன. “எல்லாச் சமயத்துலயும் காமெடி செய்யக்கூடாது. எழவு வீட்ல அழுதுட்டு இருக்கறவங்க கிட்ட போய். ஒரு ஜோக் சொல்லட்டான்னு சிரிச்சா அது அரக்க குணம். கதிரவன் diplomacy.. மைனா.. comedy.. ரெண்டுமே Y-ல முடியுது.. Why?... என்று கிரேசித்தனமாக கேட்டு விட்டு பிரேக்கில் கிளம்பினார் கமல்.

‘முருகேசா.. ஃபேவரிட்டஸம்ன்றது இருக்கா.. இல்லையா?

திரும்பி வந்த கமல் “வீக்லி டாஸ்க்ல விளையாட்டு நோ்மையாக நடந்ததா,? உங்களின் உழைப்பிற்கு ஏற்ப ஊதியம் கிடைத்ததா?’ என்கிற கேள்வியை எழுப்பினார். தனிமையில் காமிராவை நோக்கி அனத்திய தனலஷ்மியை முதலில் எழுப்பி விசாரிக்க ஆரம்பித்த கமல், “யார் யாரெல்லாம் ஃபேவரிட்டஸம் பண்ணாங்க?” என்று நேரிடையான கேள்வியை முன்வைத்தார். “அமுதவாணன், மணி, அசிம், ஏடிகே,.. விக்ரமன் கூட பண்ணார்” என்று சாட்சியம் சொன்ன தனலஷ்மி “நீங்க தனியான ஆட்டம் ஆடலை அசிம் அண்ணா..”ன்னு கூட சொல்லிட்டேன் என்று தன் சாட்சியத்தை முடித்தார். “அசிம் கூடவா?” என்று கமல் அழுத்திக் கேட்டது குறும்பு.

பிக் பாஸ் 6 நாள் 69; ஏடிகே, ஷிவின்
பிக் பாஸ் 6 நாள் 69; ஏடிகே, ஷிவின்

அடுத்ததாக எழுந்த ஏடிகே “நண்பர்களுக்கு சப்போர்ட் பண்ணாங்க. பிடிச்ச ஆளுங்க.. பிடிக்காத ஆளுங்கன்ற பாரபட்சத்தை தனலஷ்மி செஞ்சாங்க.. வெளியே போக மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க. ஷிவின் சிரிச்சதால எனக்கு கோபம் வந்து வார்த்தையை விட்டேன்” என்று உருக்கமாக வாக்குமூலம் சொன்னார். ஷிவின் எழுந்து சில பெயர்களைச் சொன்ன போது ‘உங்க பேரையும் லிஸ்ட்ல சோ்த்துக்கங்க” என்று அசிம் உள்ளிட்டவர்கள் குறுக்கே புகுந்து சொன்னார்கள். “இந்த ஆட்டத்துல என் பவரை காட்ட மாட்டேன்னு சொல்லி ரெண்டு நாள் ஒதுங்கி இருந்த அசிம், மூணாவது நாள் உள்ளே புகுந்து ஜனனிக்கு சப்போர்ட் பண்ணாரு” என்று ஷிவின் சாட்சியம் சொன்னார்.

“கதிரவனை ரொம்ப ஈஸியா தப்பிக்க விட்டுட்டீங்கன்னு உங்க மேல ஒரு புகார் இருக்கே.. ‘யார் உள்ளே இருக்கணும்ன்றது என் ஸ்ட்ராட்டஜின்னு சொன்னீங்களா?” என்று ஷிவினிடம் கமல் விசாரிக்க, அசிம், அமுதவாணன் உள்ளிட்டவர்கள் உற்சாக மிகுதியில் எழுந்து நின்று கைத்தட்டி இந்தக் கேள்வியை ஆதரித்தார்கள். மணி விசிலடித்து கொண்டாடினார். “அப்படின்னா. எல்லாப் பக்கமும் நேர்மையின்மை நடந்திருக்கு..” என்று கமல் ஆரம்பிக்க அதை வலுவாக மறுத்தார் ஷிவின். “இருங்க. இருங்க. வரேன்” என்று கமல் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அடுத்ததாக எழுந்த விக்ரமன், தனலஷ்மி, ஷிவின், அசிம் ஆகிய பெயர்களைச் சொல்லி விட்டு ‘அசிம் திடீர்ன்னு புகுந்துட்டாரு. ஜனனியை உள்ளே அனுப்பப் போறேன்னு முதல்ல அவர் சொல்லல” என்று சாட்சி சொல்லி அமர்ந்தார்.

பிக் பாஸ் 6 நாள் 69; தன்லஷ்மி, ஜனனி
பிக் பாஸ் 6 நாள் 69; தன்லஷ்மி, ஜனனி

வரிசையாக நிகழ்ந்த இந்தச் சாட்சியங்கள் முடிந்ததும் “ஆக.. எல்லோருடைய பெயரும் லிஸ்ட்ல வந்துடுச்சு..” என்று சொல்லி அடுத்த தலைப்பிற்கு சூசகமாக நகர்ந்தார் கமல். அது ஜனனியின் வெற்றி சம்பந்தப்பட்டது. “ஒரு விஷயம் சொல்றேன். நீங்க சொல்ற தீர்ப்புகள் பல நேரங்கள்ல சரியா இருந்தாலும் சில நேரங்களில் தப்பா இருக்கு” என்று ஒரு கச்சிதமான முன்னுரையை அளித்தார் கமல். ஆனால் இதை யாருமே அங்கு புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியம். அனைவருமே ஜனனிக்கு சார்பாகத்தான் இப்போதும் பேசினார்கள். ஆனால் அசிம் மட்டும் சற்று புத்திசாலித்தனமாக “விக்ரமன் கத்தினதை கேட்டேன்” என்பதையும் முன்ஜாக்கிரதையாக இணைத்துக் கொண்டார்.

கைத்தட்டலை தவறாகப் புரிந்து கொண்டு மகிழ்ச்சியடைந்த ஜனனி

அதற்கு முன் நிகழ்ந்தது ஒரு காமெடி. பிளாக் ஹியூமர் என்று கூட அதைச் சொல்லி விடலாம். “ஜனனியின் வெற்றி பற்றிய விஷயம்” என்று கமல் ஆரம்பித்ததும் ‘குறும்படம் வரப்போகுதுடோய்’ என்பதைப் புரிந்து கொண்ட பார்வையாளர்கள் பலமாக கைத்தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அதை தனக்கான வரவேற்பு என்பதாகப் புரிந்து கொண்ட ஜனனி, கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டு ‘கமல் சார் வாயால முதன்முறையா பாராட்டு கிடைக்குது” என்றெல்லாம் அநாவசியமாக மகிழ்ச்சியடைந்ததைப் பார்க்க ஒருபக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது. “அப்படியெல்லாம் நான் சொல்லல. அபாண்டமா சொல்லாதீங்க” என்று குறும்பாக ஜனனியை மறுத்தார் கமல்.

குறும்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலும் ஜனனிக்கு விஷயம் விளங்கவில்லை. ‘அய்.. நானு.. நானு..’ என்று சாக்லேட்டுக்காக கைநீட்டும் பாப்பா மாதிரி சந்தோஷப்பட்டு பிறகு உண்மையை உணர்ந்து முகம் மாறினார். தன்னுடைய வெற்றி நிரூபணமான தருணத்தில் விக்ரமனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. இது போன்ற மிக இயல்பான எக்ஸ்பிரஷன்களை ஒரு திறமையான நடிகர் என்ன முயன்றாலும் தன்னுடைய நடிப்பில் கொண்டு வந்து விடவே முடியாது. பிக் பாஸ் என்பது Scripted show அல்ல என்பதற்கான நிரூபணம் இது. போட்டியாளர்கள் நெருக்கடிக்குள் செல்லுமாறான சூழல் மட்டுமே வடிவமைக்கப்படும்.

பிக் பாஸ் 6 நாள் 69; ஜனனி
பிக் பாஸ் 6 நாள் 69; ஜனனி

ஓகே.. ஜனனியாவது விளையாட்டு மும்முரத்தில் கவனிக்கவில்லை என்று சொல்லி விடலாம். ஆனால் என்ன நிகழ்ந்தது என்பதையே அறியாமல், எங்கோ தூர நின்றிருந்து விட்டு “ஜனனிதான் கை வைத்தார்” என்று சாட்சி சொன்ன அத்தனை பேரும் இதில் குற்றவாளிகள். குறிப்பாக அருகேயே நின்றிருந்தும் வலுவாக சாட்சி சொன்ன தனலஷ்மியின் தரப்பு அதிக சதவீதத்தைக் கொண்ட தவறு. குறும்படம் வெளியான பின்னரும் கூட எவரும் தங்களின் தவறை பளிச்சென்று ஒப்புக் கொள்ளவில்லை. விக்ரமனிடம் மன்னிப்பு கோரவில்லை. மாறாக மென்று முழுங்கி எதை எதையோ சொல்லி அசட்டுத்தனமாக இளித்தார்கள். “உங்களின் தவறான சாட்சியால் ஒரு விளையாட்டின் தீர்மானமே மாறி விட்டது” என்று வலுவான வார்த்தைகளால் அவர்களின் தவறைச் சுட்டிக் காட்டினார் கமல். ‘மந்தைத்தனம்’ என்று அவர் சொன்னது சரியான வார்த்தை.

“இப்ப பார்த்தேன்.. விக்ரமன்தான் கைவெச்சார்” என்று தடுமாறி தடுமாறி தனலஷ்மி சொல்ல “விக்ரமனோட சதியைப் பார்த்தீங்களா.. குறும்படத்துல போய் கைவெச்சிருக்கார்” என்று கமல் சர்காஸ்டிக்கான சொன்ன கமெண்ட்டால் சபை விழுந்து விழுந்து சிரித்தது. இதைப் போலவே அசிமும், மணியும் எதை எதையோ தடுமாற்றமாகச் சொல்லி சமாளித்தார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 69 விக்ரமன்
பிக் பாஸ் 6 நாள் 69 விக்ரமன்

“நீங்க முதல்ல மறுத்தீங்க. ஓகே. ஆனா ஏன் உறுதியில்லாம ஒத்துக்கிட்டீங்க.. ஜனநாயகம்ன்றது மெஜாரிட்டி மட்டும் இல்ல. மைனாரிட்டியோட வாய்ஸையும் கேட்கணும்.. அந்தப் பொறுப்பு மெஜாரிட்டிக்கு இருக்கு” என்று முக்கியமான அரசியல் செய்தியை விக்ரமனிடம் கமல் சொல்லி “அந்த ஜனநாயகம்தான் உங்களைக் காப்பாத்தியிருக்கு” என்று இனிப்புச் செய்தியைச் சொல்லி ‘சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திக்கலாம்’ என்று விடைபெற்றார்.

கமலின் தலைமறைந்ததும் ஆரம்பித்த உக்கிரமான சண்டை

ஆனால் இந்த எபிசோட் கமலின் விடைபெறுதலோடு முறையான வகையில் ஏனோ நிறைவுறவில்லை. மாறாக ஹவுஸ்மேட்ஸ் தங்களின் ஒப்பனைகளைக் கலைக்கும் சமயத்தில் நி்கழ்ந்த கடுமையான வாக்குவாதங்களோடு முடிந்தது. ஃபேவரிட்டஸம் தொடர்பாக தன்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டதால் தனலஷ்மியிடம் விவாதம் செய்தார் மணிகண்டன். வழக்கம் போல் ‘போ.. போ’ என்று வெறுப்பேற்றி அனுப்பினார் தனலஷ்மி.

பிக் பாஸ் 6 நாள் 69; அசிம், மணிகண்ட்டா
பிக் பாஸ் 6 நாள் 69; அசிம், மணிகண்ட்டா

இதையும் விட அசிம் மற்றும் ஷிவினின் சண்டைதான் நீண்ட நேரம் நீடித்தது. தன்னுடைய பெயரை ஷிவின் குறிப்பிட்டதால் அவரிடம் உரையாடலை ஆரம்பித்தார் அசிம். ஆனால் போகப் போக உரையாடலில் உஷ்ணம் கூடியது. “நீங்க ஜனனியை ஜெயிக்க வெச்சதின் மூலம் தனிப்பட்ட ஆட்டத்தை பின்னால் இழுத்து விட்டீர்கள்” என்று ஷிவின் சொன்ன குற்றச்சாட்டை ஏற்க அசிம் தயாராக இல்லை. இதையே வழிமொழிந்து விக்ரமனும் உள்ளே வர “நீங்க எப்பப்பாரு ஷிவினுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க” என்று அவரின் மீதும் எரிந்து விழுந்தார் அசிம்.

ஆக.. தவறாக சாட்சியம் சொல்லி விட்டோமே என்று யாருக்கும் குற்றவுணர்வோ, கவலையோ இல்லை. மாறாக மீண்டும் அவரவர்களின் தவறுகளுக்கு வலுக்கட்டாயமாக நியாயம் கற்பிக்கவே மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை கமல் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுப்பா..