‘செய் அல்லது செத்துமடி’ என்கிற ரேஞ்சிற்கு போட்டியாளர்களை உசுப்பேற்றி உக்கிரமாக்கினார் பிக் பாஸ். “பதினோராவது வாரத்திற்கு வந்து விட்டோம். பெஸ்ட்ன்னு நெனக்கற பத்து பேர் எஞ்சியிருக்கீங்க.. இந்த வீட்டில் நீங்க வாழப் போற கடைசி வாரங்கள் இவை. இனிமேல் கேட்டாலும் கஞ்சி கிடைக்காது. விளையாட டாஸ்க் இருக்காது. என் குரலைக் கேட்க முடியாது. எனவே இறங்கி ஆடுங்க. இனிமே சோர்வுன்ற வார்த்தையே உங்க அகராதில இருக்கக்கூடாது. தளர்வே கூடாது. எப்படி ஆரம்பிச்சீங்கன்றது இப்ப முக்கியமல்ல. எப்படி முடிக்கப் போறீங்கன்றதுதான் இப்ப கேள்வி” என்றெல்லாம் சன்னதம் வரும்படி பிக் பாஸ் உபதேசம் செய்ய மக்கள் முதுகு நிமிர்ந்து அமர்ந்தார்கள்.
விளைவு, இதுவரை கிச்சனில் மட்டுமே மறைமுக அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த ரச்சிதாவே ‘கூடைக்கவிழ்ப்பு’ ஆட்டத்தில் தீவிரமாக இறங்கி ஆடினார். அப்படின்னா இந்த சீசன் இனிமே விறுவிறுப்பா இருக்கும். (யாரு.. சொன்னா? தேவாவே சொன்னான்!).
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘டம்.. டமக்கு டம்மா’ என்று பாத்திரங்கள் உருண்டு விழும் சத்தம் மாதிரியான பாடலோடு நாள் 71 விடிந்தது. ஜனனி வெளியேறியதால் அமுதவாணனுக்கு ஒருபக்கம் துக்கம் இருந்திருக்கலாம். ஆனால் இன்னொரு பக்கம் அவருக்கு அதுவொரு விடுதலையும் கூட. ஆம், இனிமேல் எவரும் ஜனனியோடு இணைத்து ஃபேவரிட்டஸம் என்று அவரைச் சுட்டிக் காட்ட முடியாது. எனவே “இனிமே தனியா நின்னு தைரியமா விளையாடணும்” என்று ஏடிகேவிடம் அவர் சொல்ல “ஆமாம். நட்பு வேற. டாஸ்க் வேற’ என்று வழிமொழிந்தார் ஏடிகே.

“அமுதவாணன் எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு ரூபா சம்பளம் வாங்குவாரு. எழுபது நாள் இருந்துட்டாரு.. டாக்ஸ் போக இவ்ள அமௌண்ட் லம்ப்பா வந்துரும். டைட்டில் அடிக்கற காசுக்கு மேலயே அவருக்கு கிடைச்சுடும்” என்றெல்லாம் மணியும் அசிமும் இணைந்து அமுதவாணனை கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். வருமானவரித்துறையில் பணிபுரியும் எவருக்காவது பிக் பாஸ் பார்க்கிற கெட்ட வழக்கம் ஒருவேளை இருந்தால் அது போட்டியாளர்களுக்கு பிரச்சினைதான். இந்தக் காட்சியை துண்டாக குறித்து வைத்துக் கொள்ளக்கூடும். ‘ஒரு கோடியாம்ப்பே. நீ பார்த்தே?” என்பது மாதிரி இதை கிண்டலாக எதிர்கொண்டார் அமுதவாணன்.
ஹவுஸ்மேட்ஸ்களை ரணகளமாக உசுப்பேற்றிய பிக் பாஸ்
சபையைக் கூட்டிய பிக் பாஸ் ‘வாழ்க்கை என்பது போர்க்களம்’ என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்காத குறையாக வீரவுரையாற்றி மக்களை உசுப்பேற்றினார். “சம்பாதிச்சு வெச்ச பாயிண்ட்டை செலவு பண்ண வேண்டிய கடைசி வாரம். போய் வாங்கிச் சாப்பிட்டு உடம்பைத் தயாரா வெச்சுக்கங்க. இனிமேதான் இருக்கு ஆட்டம்” என்று ஆட்டை பிரியாணிக்கு தயார் செய்வது போல அவர்களை ஷாப்பிங்கிற்கு அனுப்பினார்.
தலைவர் போட்டி ஆரம்பித்தது. ‘யாரையாவது கவிழ்த்தால்தான் ஒருவர் தலைவர் ஆக முடியும்’ என்கிற ஆதாரமான பாடத்தை பிக் பாஸ் வீடு எப்போதும் கற்றுத் தருகிறது. அந்த வகையில்தான் போட்டிகள் வழக்கமாக அமையும் இந்த முறையும் அப்படித்தான். ஒருவரின் தலையில் வெற்றிகரமாக கூடையைக் கவிழ்த்து விட்டால் அவர் தலைவராம். (உக்காந்து யோசிப்பாங்க போல!).

அமுதவாணன், மணி, ஏடிகே ஆகிய மூவரும் போட்டியாளர்கள். இவர்களுக்கு உதவ இரண்டு ஆதரவாளர்கள் முன்வரலாம். பாக்கியுள்ளவர் நடுவர். மணிக்கு மைனா மற்றும் கதிரவன், அமுதவாணனுக்கு ஷிவின் மற்றும் அசிம், ஏடிகேவிற்கு விக்ரமன் மற்றும் ரச்சிதா ஆகியோர் ஆதரவாளர்களாக இருக்க முன்வந்தார்கள். இதன் நடுவராக தனலஷ்மி இருந்தார். ஆனால் ஏன் நடுவராக ஆனோம் என்று பிற்பாடு அவருக்குத் தோன்றியிருக்கும். அந்த அளவிற்கு தத்தளித்துப் போனார். விக்ரமன் அவுட்டா, இல்லையா என்கிற சந்தேகம் வந்த போது முதலில் அவுட் என்ற தனலஷ்மி, பிறகு ‘சரி. நான் சொல்றேன். விளையாடுங்க” என்றார். மணிகண்டன் இதை கடுமையாக ஆட்சேபித்த போது “நீங்க பார்த்தீங்களா. அப்படின்னா அவுட்” என்று குழப்பினார். (குறும்படம் கண்ணுல வந்து போகுமா. இல்லையா?!).
முதலில் ஆதரவாளர்கள் மோதினார்கள். அமுதவாணனும் விக்ரமனும் வாய்ப்பேச்சில் வல்லவர்களாக இருந்தாலும் டாஸ்க்கில் சற்று சுணங்குகிறார்கள். அசிம் நன்கு போராடினார். வழக்கம் போல் மணிகண்டன் ஆவேசமாக இருந்தார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் ரச்சிதாவும் களத்தில் இறங்கி விளையாடியதுதான். கதிரவன் கூட உக்கிரமாக ஆடினார். பிக் பாஸ் தந்த உற்சாக டானிக் அப்படி.
நான்காவது முறை தலைவரான மணிகண்டன்
கச்சா முச்சா என்று நடந்து முடிந்த இந்தப் போட்டியில் மணிகண்டன் சிறப்பாக விளையாடி தலைவரானார். பிக் பாஸ் தமிழ் சீசனிலேயே, ஒரே நபர் நான்காவது முறையாக தலைவராவது இதுதான் முதன் முறையாம். இந்த வரலாற்றுத் தகவலை பிக் பாஸ் சொன்ன போது மணி குஷியானது கூட ஆச்சரியமில்லை. அவரை விடவும் அசிமும் மைனாவும்தான் அதிக உற்சாகமடைந்தார்கள். அணி பிரிக்கப்படும் போது கிச்சன் டீமில் மறுபடியும் ரச்சிதா வந்து இணைந்தார். கூடவே அசிமும் அமுதவாணனும். (அப்படின்னா பப்பாளித் துண்டுகள் விரைவில் காலியாகும்!).
நாமினேஷன் சடங்கை ஆரம்பித்த பிக் பாஸ் “முக்கியமான கட்டத்துல இருக்கீங்க. எனவே யோசிச்சு நாமினேட் பண்ணுங்க” என்று மீண்டும் உசுப்பேற்றி விட்டார். இந்த முறை ஓப்பன் நாமினேஷன். யாரை நாமினேட் செய்கிறோரோமோ அவரின் முகத்தில் சிவப்பு மையால் பெருக்கல் குறி போட வேண்டுமாம்.

ஏஞ்சல் டாஸ்க்கில் எளிதாக விட்டுக் கொடுத்தமைக்காக கதிரவனுக்கு சில வாக்குகள் கிடைத்தன. (பெருந்தன்மையா இருக்கறதுதானே தேவதையின் அடையாளம்?!) இது கூட பரவாயில்லை. ரச்சிதா சிறப்பாக விளையாடியதற்கு கூட நாமினேஷன் கிடைத்தது. இன்று ஆடியது போல் இனி இறங்கி ஆட வேண்டுமென்று ஊக்கப்படுத்துகிறார்களாம். (என்னய்யா லாஜிக் இது.. நல்லா விளையாடியது ஒரு குத்தமா?!). “டாஸ்க்கில் சிறப்பாக செயல்படுவது மட்டுமே பிக் பாஸ் ஆட்டம் அல்ல. அனைத்து விஷயங்களையும் இணைத்துதான் பார்க்கணும்” என்று குறிப்பிட்டு தனலஷ்மியின் மீது ஷிவின் சொன்ன காரணம் மிகச் சரியானது. இது விளையாட்டு வீரர்களுக்கான போட்டி அல்ல. ஒருவரின் தனிப்பட்ட ஆளுமையை பரிசோதிக்கும் போட்டி.
‘ஷிவினுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பு. அவங்க எதுக்கும் ஸாரி கேட்க மாட்டாங்க’ என்கிற காரணத்தைச் சொல்லி குத்தினார் அசிம். “என்னை மட்டும் அப்படிக் கட்டீனீங்க. ஜனனியை சரியாக் கட்டலை” என்று மைனா பழைய புகாரை தூசு தட்டி மீண்டும் சொல்ல அமுதவாணனுக்கும் மைனாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ‘அராஜகமாக நடந்து கொள்கிறார்’ என்று தனலஷ்மி மீதும் வாக்குகள் விழுந்தன.
இந்த வார நாமினேஷன் முடிவுகள்: தனலஷ்மி, ஷிவின், ரச்சிதா, விக்ரமன், மைனா, கதிரவன் மற்றும் அசிம். அதாகப்பட்டது, தலைவர் மணிகண்டன், நாமினேஷன் ஃப்ரீ ஜோன் வாய்ப்பு பெற்ற அமுதவாணன், ஏடிகே ஆகிய மூவரைத் தவிர பாக்கியுள்ள அனைவருமே இந்த வார எவிக்ஷன் பிராசஸிற்குள் வந்திருக்கிறார்கள். (சபாஷ்! சரியான போட்டி!)
ஜனனிக்கு ஆதரவாக செயல்பட்டார்களா? – ‘விடாது கருப்பு’ விவாதம்
“இனிமே போட்டியை ஓப்பனாத்தான் விளையாடணும்” என்று மீண்டும் சபதம் எடுத்துக் கொண்டிருந்தார் அமுதவாணன். “யாரு வரணும்.. வரக்கூடாதுன்னு விளையாடறதெல்லாம் தப்பான ஆட்டம்” என்று விக்ரமன் சொல்ல “அதனாலதான் அசிமை நான் சொன்னேன். ஜனனி போ.. போ..ன்னு சொன்னாரு” என்று ஷிவின் அதை வழிமொழிந்தார். “நீங்களும்தான் தனா. போ.. போ..’ன்னு சொன்னீங்க” என்று ஷிவினுக்கு எதிரான பாயிண்டை சொல்லி மறுத்தார் அமுதவாணன்.
தன்னுடைய பெயர் இந்த விவாதத்தில் வந்தததால் தானும் உள்ளே புகுந்த அசிம் “நான் ஜனனியை மட்டும் சொல்லலை.. மைனாவையும்தான் உள்ளே போகச் சொன்னேன். ஏன்னா என்னால உள்ள போக முடியாது. ஒரே சமயத்துல நாலு பேர் உள்ளே புக முடியாது” என்று அசிம் தன் தரப்பு நியாயத்தை சொன்னார். எனில், ஜனனியை ஜெயிக்க வைத்ததற்கான கிரெடிட்டை பெருமையாக அசிம் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது. ஜனனி வந்து கண்கலங்கி நன்றி சொன்ன போது “அது உன் உழைப்பும்மா” என்று மறுத்திருக்க வேண்டும். ‘ஜனனியோட வீட்ல இருந்து வர்ற வரைக்கும் அவளை இங்க இருக்க வைக்க முயற்சி செஞ்சோம்” என்று அசிம் முன்பு சொன்னதே அவரது திட்டத்தை தெளிவாகக் காட்டுகிறது.

ஆனால் இப்போதோ அவர் பிளேட்டை மாற்றிப் போட்டுப் பேசியதால் “மக்கள் பார்த்துட்டுதான் இருக்காங்க” என்று எரிச்சல் அடைந்து விலகினார் தனலஷ்மி. ஷிவின் இந்தச் சமயத்தில் செய்த காரியம் புத்திசாலித்தனமானது. அவர் அசிமுடன் உரக்கக் கத்தி விவாதிக்கவில்லை. ஏனெனில் அவர் சமீபத்தில் அவ்வாறு செய்துதான் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொண்டார். எனவே ‘உங்க கிட்ட பேச விரும்பல அசிம்” என்று அமைதியாக விலகியது சிறப்பான செய்கை. “அவர் சண்டை போட்டா நீங்க ஏன் அதில் பங்கெடுக்கறீங்க?” என்று முன்னர் கமல் சொன்னதிற்கான உதாரணம் இது.
மைனாவும் அமுதவாணனும் பொழுது போகாமல் மறுபடியும் ‘யார் ஃபேவரிட்டஸம்?’ என்கிற தலைப்பில் அடித்துக் கொண்டார்கள். தன்னைக் கட்டியதற்கும் ஜனனியை கட்டியதற்கும் உள்ள வித்தியாசத்தை நூற்று முப்பத்தியிரண்டாவது தடவையாக மைனா சொல்ல அமுதவாணனும் பதிலுக்கு மல்லுக் கட்டினார். ‘அப்படின்றியா.. சரி போ’ என்று தலையை முழுகி விவாதத்தை முடித்தார் மைனா. (ஹப்பாடா!).
அசிமை பங்கப்படுத்திய பிக் பாஸ்
இந்த வாரத்திற்கான ஸ்கிராட்ச் கார்டு போட்டி வந்தது. பிங் பாலை உருட்டி அது மூன்று பிட்ச்களுக்குப் பின் குடுவையில் விழ வேண்டும். “இது ரொம்ப ஈஸியான கேம் மாம்ஸூ” என்றபடி உற்சாகத்துடன் வந்த அசிம், மூன்று சான்ஸிலும் தோற்றுப் போக “என்ன அசிம்.. இவ்ள ஈசியான கேம்ல் தோத்துட்டீங்க” என்று பங்கம் செய்தார் பிக் பாஸ். அசிம் செய்யும் பில்டப்புகள் உலகத்திற்கே தெரிந்திருக்கிறது. “இப்ப விட்டாதானே அடுத்தடுத்த கேம் விளையாட முடியும்?!” என்று சமாளித்தார் அசிம்.
மற்றவர்களாலும் இயலாமல் போக, மீண்டும் அசிம் விளையாட வந்து அதில் வெற்றி பெற்று விட்டது சுவாரசியம். “எப்பூடீ?” என்று அசிம் பிக் பாஸை பெருமையாக பார்க்க “வாழ்த்துகள் அசிம். ஆனா அடுத்த ரெண்டு கேமை நீங்க ஆட முடியாம போச்சே” என்று அசிம் சொன்ன வார்த்தைகளையே வைத்து ‘வெவ்வே’ காட்டி பிக் பாஸ் விளையாடினார். “யோவ்.. அவருதான் கலாய்க்கறாரான்னு தெரியுதுல்ல.. மறுபடியும் மறுபடியும் போய் வாயைக் கொடுக்கறே” என்று அசிமை கிண்டலடித்தார் அமுதவாணன்.

‘பினாலே டிக்கெட்டா இருக்குமா?” என்று ஆவலாக ஸ்கிராட்ச் கார்டை பிரித்த பார்த்த அசிமிற்கு ஆப்பு காத்திருந்தது. பஸ்ஸர் அடிக்கும் போதெல்லாம் அவர் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டுமாம். “பிக் பாஸ்.. க்விக். இப்பவே பஸ்ஸர் அடிங்க. அவர் டிரஸ்ஸை மாத்திடுவாரு” என்று அவசரப்பட்டார் தனலஷ்மி. (வெஷம். வெஷம்..!). பிக் பாஸூம் டெரராக செயல்பட்டு உடனே பஸ்ஸர் அடிக்க, அப்படியே பிடித்து அசிமை நீச்சல் குளத்தில் தள்ளினார்கள். பாவம், பிறகு பஸ்ஸர் அடிக்கும் போதெல்லாம் அவர் நீரில் விழ வேண்டியதாக இருந்தது. அசிம் மீது என்னதான் எரிச்சல் இருந்தாலும் “பாவம்... அவனுக்கு. ஜலதோஷம் வந்துடும்’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் ஏடிகே. (நண்பேன்டா!).
இந்த வார வீக்லி டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். யெஸ்.. அதேதான். ‘அந்த மிருகம் நம்மளை நோக்கித்தான் வந்துட்டு இருக்கு.. எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க” என்று நாம் நீண்ட காலமாக பயந்து கொண்டிருந்த ஸ்கூல் டாஸ்க் இப்போது அறிவிக்கப்பட்டது. மைனா, விக்ரமன், ரச்சிதா, அசிம் இவர்களையெல்லாம் ஸ்கூல் யூனிபார்மில் பார்க்கும் விபரீதத்தை நம்மால் தாங்க முடியுமா?!
“எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க”
‘BB கனா காணும் காலங்கள்’ என்று பெயரிடப்பட்ட இந்த டாஸ்க்கில் முதல் நாள் ஆரம்பப் பள்ளியும், இரண்டாம் நாள் மேல்நிலைப்பள்ளியும் மூன்றாவது நாள் கல்லூரியாகவும் இருக்குமாம். 7 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள். மாணவர்கள் மழலை மொழியில் பேச வேண்டுமாம். அவர்களுக்கு மம்மு ஊட்டுவது, வாய் துடைத்து விடுவது போன்ற வேலைகளையும் ஆசிரியர்கள் செய்ய வேண்டுமாம்.

மூன்று ஆசிரியர்களுக்குமான கேரக்ட்டர் ஸ்கெட்ச் தரப்பட்டது. ஒருவர் தமிழாசிரியர். இந்தப் பாத்திரத்தை விக்ரமன் எடுத்துக் கொண்டார். கதை சொல்லும் ஆசிரியர் மிகக் கறாரானவராம். இது அசிமிற்கு வந்தது பொருத்தம். மூன்றாவதுதான் இருப்பதிலேயே சுவாரசியமானது. “பி.டி.ஆசிரியர். இவர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு இங்கு வந்து சேர்ந்தவராம். பன்ச் டயலாக் எல்லாம் பேசுவாராம். இந்தப் பாத்திரத்தை அமுதவாணன் எடுத்துக் கொண்டது சாலப்பொருத்தம். வார இறுதியில் ரேங்கிங் உண்டாம். இதில் தோல்வியடைபவர்களுக்கு கடும் தண்டனை உண்டு. ஆசிரியர்கள், மாணவர்களாக மாறக்கூடிய விபத்தும் இருக்கிறது.
“நாளைக்கு ஸ்கூல் இருக்கு. சீக்கிரம் எழுந்துக்கணும்” என்று நம் வீடுகளில் கேட்கும் வசனத்தைப் போலவே பிக் பாஸ் வீட்டு மாணவர்களும் பேசி விட்டு உறங்கச் சென்றார்கள். இந்த டாஸ்க்கையாவது இவர்கள் காமெடியாகவும் சுவாரசியமாகவும் கையாண்டால் நல்லது. இதிலும் அடித்துக் கொண்டால் இவர்களை எந்த வாத்தியாராலும் காப்பாற்ற முடியாது.