இந்த எபிசோடில், ஹவுஸ்மேட்ஸ் தங்களுடைய பெற்றோர்களின் தியாகங்களை நினைவுகூரும் போது அவற்றில் சில பொதுத்தன்மைகளைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான குடும்பங்களில் அம்மாதான் மைய அச்சாக இருக்கிறார். என்ன சிரமம் ஏற்பட்டாலும் குடும்பம் தொடர்ந்து இயங்கும் உந்துசக்தியாக அம்மாதான் இருக்கிறார். அப்பா பெரும்பாலும் சப்போர்ட்டிங் கேரக்ட்டர்தான். அம்மாவின் தியாகத்தை நினைத்துத்தான் பெரும்பாலான பிள்ளைகள் குற்றவுணர்வில் கதறித் தீர்க்கிறார்கள். அம்மாவின் இழப்பை தீராத துக்கமாக நினைக்கிறார்கள். ஆனால் இவை காலதாமதமாக நடக்கிறது.

இளம் தலைமுறையினர் இதன் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய நீதி என்னவெனில், அந்தப் பருவத்திற்குரிய அறியாமைகள், அசட்டுத்தனங்கள், ஆணவங்கள் இருக்கும்தான். ஆனால் இயன்ற போதெல்லாம் உங்களின் பெற்றோர்களைக் கொண்டாடுங்கள். அவர்களுடன் கூடவே இருங்கள். காலம் கடந்து விட்ட பிறகு குற்றவுணர்வில் ஆழ்ந்து அழுவதால் எவருக்கும் பயனில்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
'தான் கடந்து வந்த பாதையில் பெற்றோர்களின் பங்கு' என்கிற டாஸ்க்கில் ரச்சிதா பேசும் போது அவரின் அம்மாவை பெரிதும் நினைவுகூர்ந்தார். “மைனா சொன்ன மாதிரி எங்க அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டதைத்தான் நிறைய பார்த்திருக்கோம். வறுமையான குடும்பம். எங்க அப்பா டிரைவர். அதை வெளில சொல்ல வெட்கப்படுவேன். அம்மா டெய்லரிங் பண்ணி குடும்பத்தை நடத்தினாங்க. அக்கா நல்லா படிப்பா.. ‘பெண் குழந்தையா பொறந்து தொலைச்சியேன்னு எங்க அம்மா என் கழுத்தைப் பிடிச்சு நெரிப்பாங்க.. சம்பாதிக்கறதுதான் முக்கியம்ன்னு எனக்கு தோணிடுச்சு. தேடினேன். சீரியல் வாய்ப்பு வந்தது. எங்க அம்மாவை நல்லா பார்த்துக்கணும்” என்று கலங்கியபடி தன் கதையை சொல்லி முடித்தார். “எதையுமே நான் பட்டுத்தான் தெரிஞ்சுப்பேன்” என்கிற சுயவாக்குமூலத்துடன் தன் கதையை ஆரம்பித்தார் தனலஷ்மி.

“என் லைஃப்-ன்றது என் அம்மாதான். நான் இங்க நிக்கறதுக்கு முழு காரணம் அவங்கதான். என் திறமைக்கு பெரிய சப்போர்ட்டா இருந்தாங்க. பக்கத்துல இருக்கும் போது அவங்க அருமை தெரியல. தெரிய ஆரம்பிக்கும் போது பிக் பாஸ் வாய்ப்பு வந்துடுச்சு” என்று உருக்கமாக முடித்தார். பள்ளிக்கூட வாழ்க்கையின் பெருமையைச் சொல்லும் பாடலுடன் நாள் 73 விடிந்தது. ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்பது போல ஹவுஸ்மேட்ஸ் குழந்தைகள் என்ன ஊட்டச்சத்து பானம் சாப்பிட்டார்களோ..தெரியவில்லை, ஒரே நாளில் வளர்ந்து ஹை-ஸ்கூல் மாணவர்களாகி விட்டார்கள். கணக்கு ஆசிரியர் கதிரவனை, ஷிவினும் தனலஷ்மியும் இணைந்து குறும்பு செய்தார்கள். சைக்கிள் சாவியை ஒளித்து வைப்பது, டயரில் காற்று பிடுங்குவது என்று தனலஷ்மி அழிச்சாட்டியம் செய்ததால் கதிரவன் சற்று டென்ஷன் ஆனார்.
90’ஸ் கிட்ஸ்களின் கலாசார அடையாளங்கள்
ஸ்கூல் பிரின்சிபலும், மியூசிக் டீச்சருமான அமுதவாணன், ஜிப்பா, கண்ணாடி அணிந்து தலையை படிய வாரி சற்று உருமாறி வித்தியாசமாக வந்தார். ‘விரல் நுனில புக்கை வெச்சு எப்படி சுத்தறது?’ என்று சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் ஷிவின். ‘என்னை babe-ன்னு கூப்பிடுங்க’ என்று விக்ரமனிடம் அடம்பிடித்தார் ரச்சிதா. ‘சைக்கிள் சாவியைக் காணோம்.. எடுத்திருந்தா கொடுத்திடுங்கம்மா’ என்று அமுதவாணன் கெஞ்ச “என்னைப் புகழ்ந்து பாடுங்க’ என்று தனலஷ்மி டிமாண்ட் செய்ய ‘கவிதையே தெரியுமா.. அதுவே நீதான்’ என்று அவர் பாடியதும் தனலஷ்மிக்கு குஷி வந்து சாவியை திருப்பித் தந்தார். ஆங்கில டீச்சர் மைனா புடவை அணிந்து ‘க்யூட்டான’ லுக்கில் வந்தார்.
வகுப்பு ஆரம்பித்தது. ‘ஒரு காலத்துல நான் இதே ஸ்கூல்ல பி.டி. வாத்தியாரா இருந்தேன். ஞாபகம் இருக்கா மாணவர்களே?’ என்று ஆரம்பித்தார் அமுதவாணன். மணிகண்டன் சொல்லும் சில வில்லங்கமான கமெண்ட்டுகளை ‘மியூட்’ செய்வதே பிக் பாஸ் டீமின் வழக்கமாகி விடும் போலிருக்கிறது. அந்தளவிற்கு அநியாயம் செய்தார்.

90’s கிட்ஸ் கலாசார அடையாளங்கள் இதில் வெளிப்பட்டது சுவாரசியம். ரச்சிதாவின் பெயரையும் தன் பெயரையும் வைத்து ‘பிளேம்ஸ்’ போட்டுப் பார்த்தார் மணிகண்டன். சட்டையை இன் செய்யும் போது பாதியை மட்டும் செய்வது அந்தக் காலக்கட்டத்தின் ஒரு கிறுக்குத்தன ஸ்டைலாக இருந்தது. அசிம் அதை சரியாகப் பின்பற்றி செய்தது சிறப்பு. ஆனால் நேற்று ஃபார்மல் லுக்கில் க்யூட் ஆக இருந்த அசிம், மீசையை எடுத்த பிறகு வில்லன் மாதிரி ஆகி விட்டார். “மூஞ்சுல அரிவாள வெச்சிட்டு சுத்தறான் சார்” என்று அசிமின் கிருதாவை கிண்டலடித்தார் மணிகண்டன்.
இசையாசிரியார் அமுதவாணன் ஒரு ஆலாபனையை எடுத்து விட “எட்டு கட்டையையும் கொண்டு வந்துட்டீங்க சார்..” என்று அசிம் கிண்டலடிக்க “பின்னாடி உருட்டுக் கட்டை இருக்கு. நீ சும்மா இல்லைன்னா அதை எடுப்பேன்” என்று நக்கலடித்தார் அமுது. ‘கொடியிலே மல்லிகைப்பூ’ என்கிற மெலடியின் மெட்டில் ‘டங்கா மாரி ஊதாரி’ பாடலை அமர வைத்து அழிச்சாட்டியம் செய்து அமுதவாணன் பாட, இசைக்கச்சேரி இம்சைக்கச்சேரியாக மாறியது. ‘அசிம் லவ்ஸ் ஷிவின்’ என்று பிளாக்போர்டில் கிறுக்கி, ஹார்ட் போட்டு அம்பு விட்டார் மணிகண்டன். (அந்தக் காலத்து மொட்டை கடுதாசி!). அந்த ஹார்ட் வடிவத்தை மாற்றி மாம்பழமாக வரைந்து மாணவர்களை நல்வழிப்படுத்தினார் அமுதவாணன்.
கதிரவனையும் விட்டு வைக்காமல் சண்டை போட்ட தனலஷ்மி
கிறுக்கல் காவியங்களை பாத்ரூம் கதவில் எழுதி மாணவர்கள் குறும்பு செய்தார்கள். ‘லண்டன் இங்லீஷ் டீச்சர்’ ‘பூமர் டீச்சர்’ என்றெல்லாம் பங்கமாக எழுதப்பட்டிருந்த வார்த்தைகளைப் பார்த்து விட்டு பிரின்சிபலிடம் மைனா புகார் செய்தார். கோபம் கொண்ட அமுதவாணன், மணியின் கையில் இருந்த பெயரை அழித்தார். அப்போதும் மணியின் குறும்பு அடங்காததால், உண்மையாகவே கோபம் வந்தது போல் மாறிய அமுதவாணனின் நடிப்பு அருமை. மணியே ஜொ்க் ஆகி பம்மி விட்டார்.

இந்த வீட்டில் தனலஷ்மி சண்டை போடாத நபர் என்று யாருமே கிடையாது போல. அந்த வீட்டின் அமைதிப்புறாவான கதிரவனையும் அவர் விட்டு வைக்கவில்லை. “சைக்கிள்ல காத்து பிடுங்கி விட்ட சரி. ஆனா டியூப் வால்வை உடைச்சது தப்பும்மா’ என்று தனலஷ்மியிடம் கதிரவன் சற்று அழுத்தி சொல்லி விட்டார் போலிருக்கிறது. இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘உன் தப்பை ஒத்துக்கம்மா..” என்று மிருதுவான குரலில் கதிரவன் கோபத்தைக் காண்பிக்க “இந்த மாதிரி என்னால நடிச்சு பேச முடியாது. ஓகே.. இனிமே நான் சைலண்ட்டாவே இருக்கேன். டாஸ்க் முடிஞ்சப்பறம் என் பேரை யாராவது இழுத்தா.. இருக்கு அப்ப” என்று தனலஷ்மி கோபமடைய “நான் நடிச்சு பேசறனா.. சரிம்மா. மன்னிச்சுக்க” என்று வருத்தமடைந்தார் கதிரவன். “கேம் ஸ்பாயிலர்’ என்கிற பட்டம் தனலஷ்மிக்கு பொருத்தமாக இருக்கும்.

‘நான் என்னை கதலிக்கிறேன்’ – இது அசிம் தனலஷ்மிக்கு எழுதிய காதல் காவியக் கடிதத்தின் ஒரு வரி. “அசிம் என்னைப் பார்த்து கண்ணடிக்கிறான்” என்று வெட்கப்பட்டுக் கொண்டே தனலஷ்மி புகார் செய்ய ஒரு சிறுவிசாரணை நடந்து முடிந்தது. ‘தத்துப்பித்தென்று’ அசிம் எழுதிய காதல் கவிதையை நொந்து போய் படித்த அமுதவாணன் “உனக்கு கவிதை எழுத வருதுப்பா தம்பி.. ஆனா அந்தத் திறமையை நல்ல விஷயங்களுக்கு உபயோகப்படுத்து” என்று அறிவுறுத்தினார். ஷிவின் பாத்ரூம் கதவில் மறுபடியும் வில்லங்கமான வதந்திகளை எழுதி வைக்க “நீங்க பாத்ரூம் போகத்தானே பர்மிஷன் கொடுத்தேன்?” என்று பயமே வராதவாறு கோபித்துக் கொண்டார் கதிரவன்.
“எனக்கு கதிரவன் சாரைத்தான் பிடிச்சிருக்கு” என்று தனலஷ்மி வெட்கத்துடன் ரொமாண்டிக் அறிவிப்பு செய்து விட “அப்படின்னா என் வாழ்க்கை என்னாவது?’ என்று அதிர்ச்சியடைந்தார் அசிம். (இன்னமும் என்னென்ன கொடுமையையெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ?!). வகுப்பு முடிந்ததும், சமர்த்தாக இருந்த மாணவன் விக்ரமனுக்கு சாக்லேட் பரிசாக கிடைத்தது. தாடியை எடுக்காமல் டிரிம் செய்து க்யூட்டான மாணவனாக மாறியிருந்தார் விக்ரமன்.
‘ஐ டாக் இங்லீஷ்.. வாக் இங்லீஷ் – மைனா செய்த ஆங்கில அலப்பறை
அடுத்ததாக ஓவியப் போட்டி நடந்தது. இதில் சமூகத்திற்கு அவசியமான செய்தியையும் சொல்ல வேண்டுமாம். விக்ரமன் வரைந்து கொண்டிருந்த ஓவியம் சிறப்பாக இருந்தது. போட்டி முடிந்ததும் ஒவ்வொருவரும் தாங்கள் வரைந்த ஓவியத்தைக் காட்டி அதற்கான விளக்கத்தைச் சொன்னார்கள். “கல்வி முடிந்து வரும் ஓர் இளைஞனின் முன்னால் பல்வேறு வாய்ப்புகள் கதவுகளாகத் திறந்திருக்கின்றன. அவன் சரியான முடிவை எடுக்க வேண்டும்” என்பதை உணர்த்தும் வகையில் ஏடிகே வரைந்திருந்த ஓவியம் அருமை.
‘பெண் சிறார்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையின் கொடுமையை உணர்த்தும் விதமாக’ ஷிவின் வரைந்திருந்த ஓவியமும் அதற்கு அவர் தந்த பொழிப்புரையும் சிறப்பு. அந்தத் தாக்கத்தால் ரச்சிதா அழுது விட்டார். அசிம் வரைந்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலை ஓவியத்தில் ‘தொடர்ச்சியே’ இல்லை. சுற்றுச்சூழல் தொடர்பாக எதையோ அவர் சொல்லி முடித்தார். இறுதியில் ஷிவின் வரைந்திருந்த ஓவியத்திற்கு பரிசு கிடைத்தது.

இங்கலீஷ் டீச்சர் மைனா வகுப்பெடுக்க வந்தார். தபால்வழிக் கல்வியில் ஆங்கிலம் படித்தவர் போலிருக்கிறது. ‘வாட் ஈஸ் மை நேம்?’ என்று தப்பும் தவறுமாக பேசி சமாளித்தார். ‘Who is your favorite poet?’ என்று மாணவர்களின் கேள்விக்கு ‘வாலி’ என்று சொல்லி அதிர்ச்சி தந்தார் மைனா. ‘ஆங்கிலக் கவிஞர்?’ என்று மணிகண்டன் மடக்க “ஷேக்ஸ்பியர்..’ என்று அலட்டலாக சொன்ன மைனா, அவர் எழுதிய கவிதைகளில் எனக்குப் பிடித்தது... டிவிங்கிள்.. டிவிங்கிள்.. லிட்டில் ஸ்டார்’ என்று இஷ்டத்திற்கு அடித்து விட ஷேக்ஸ்பியரின் ஆவி கல்லறையில் புரண்டு அழுதிருக்கும்.
அடுத்ததாக ‘Tongue twisting sentences’ என்கிற பகுதியை நடத்த ஆரம்பித்தார் மைனா. ‘தமிழே நமக்குத் தகராறு.. எதற்கு இந்த விபரீத முயற்சி?’ என்று நம் மைண்ட் வாய்ஸ் ஓடிக் கொண்டிருக்கும்போதே, மைனா தப்புத் தப்பாக சொன்ன ‘நா பிறழ் சொற்களை’ மாணவனான மணிகண்டன்தான் திருத்த வேண்டியிருந்தது. இதே சொற்களை நடனமாடிக் கொண்டே ரைமிங்காக ரச்சிதா சொல்ல “நெட்ட கொக்கு இட்ட முட்ட’ என்று ஓவியா பாடிய காவியத் தருணங்கள் பலருக்கு நினைவில் வந்திருக்கலாம்.

இவர்களின் அலப்பறையினால் பிக் பாஸே ஜெர்க் ஆனார் போலிருக்கிறது. ‘இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என்று அறிவித்து நமக்கும் அவர்களுக்கும் ஆறுதல் தந்தார். சிறந்த ஆசிரியராக அமுதவாணனும், சிறந்த மாணவர்களாக மணிகண்டன் மற்றும் விக்ரமனும் தேர்வானார்கள். (மணிகண்டன் சிறந்த மாணவனா?.. வௌங்கிடும்!).
உணர்வுப்பூர்வமான கடிதங்கள் – உணர்ச்சிகரமான காட்சிகள்...
காமெடி சீன் முடிந்ததும் சென்டிமென்ட் சீனை ஆரம்பிக்கும் நேற்றைய ஃபார்மட்டை இன்றும் கடைப்பிடித்தார் பிக் பாஸ். ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸூம் தங்களின் உறவுகளுக்கு கடிதம் எழுதும் டாஸ்க். உண்மையிலேயே இந்தப் பகுதி உணர்வுபூர்வமாக இருந்தது. தனது கணவருக்கு மைனாவும், அக்காவிற்கு ஷிவினும், அம்மாவிற்கு தனலஷ்மியும், மகனுக்கு ஏடிகேவும், மனைவிக்கு அமுதவாணனும், அம்மாவிற்கு ரச்சிதாவும் கடிதங்களை எழுதி உணர்ச்சிகரமாக வாசித்தார்கள். ஷிவினும் ரச்சிதாவும் கடிதம் வாசிக்கும் போது உணர்ச்சிப்பெருக்கில் அழுதார்கள். மற்றவர்களுக்கும் இந்த மனநிலை பரவியதால் அவர்களும் கண்கலங்கினார்கள்.

தன் மகனுக்காக எழுதிய கடிதத்தை ஏடிகே வாசித்த போது, அதே நிலையில் இருக்கிற அசிம் தாங்க முடியாமல் கதறியழ, விக்ரமன் வந்து கட்டியணைத்து ஆற்றுப்படுத்திய காட்சி நன்றாக இருந்தது. ‘வெற்றியோடு திரும்புகிறேன். இல்லையெனில் 20 லட்சம் பெட்டியோடாவது வருகிறேன்” என்று கடிதத்தில் காமெடி செய்திருந்தார் அமுதவாணன். (ஆனால் தனது ஸ்ட்ராட்டஜியை இப்படி முன்பே போட்டு உடைக்கலாமோ?!).
அடுத்த எபிசோட் கல்லூரி வாழ்க்கையாக இருக்கும். இந்த டாஸ்க்கில் என்னென்ன அழிச்சாட்டியங்கள் நடைபெறவிருக்கிறதோ?!