ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. அடுத்த பிக் பாஸ் சீசனிலாவது பிரபலங்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள், மாடல்கள் என்றில்லாமல் IQ, EQ அதிகமுள்ளவர்களா என்று சோதனை செய்து அவர்களில் சிலரை போட்டியாளர்களாக தேர்வு செய்தால் ஆட்டம் விறுவிறுப்பாகும். உடல்ரீதியான போட்டி என்பது வெகுசன பார்வையாளர்களை வேண்டுமானால் கவரலாம். ஆனால் மூளையை வைத்து ஆடும் ‘மைண்ட் கேம்’ என்பது பிக் பாஸ் போன்ற ஆட்டத்திற்கு கூடுதல் சுவாரசியத்தைத் தரும்.
’75 நாட்களைக் கவர்ந்தும் யாரிடமும் முதிர்ச்சி தெரியவில்லை’ என்று கமல் ஒரே போடாகப் போட்டது ஒருவகையில் உண்மை. கமல் திரும்பத் திரும்ப அறிவுறுத்தியும் பலர் மக்குப் பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். குறிப்பாக அசிம். “எனக்கு என்ன பதில் சொல்லலாம்ன்னு யோசிக்கறதை விடவும் உங்களை எப்படி மேம்படுத்திக்கறதுன்னு யோசிங்க” என்று கமல் சொன்ன பிறகும் தன் தவறுகளை தொடர்ந்து நியாயப்படுத்தி அசிம் பேசியது அப்பட்டமான சிறுபிள்ளைத்தனம். இவருக்கு தாளம் அடிக்க மணிகண்டன் போன்றவர்கள் வேறு. பிறகு எப்படி இந்த சீசன் உருப்படும்?!
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘இந்தக் கட்டுரையாளர் எப்போதும் அசிமைப் பற்றி நெகட்டிவ்வாக எழுதுகிறார்’ என்கிற புகார்களைப் பார்க்கிறேன். இருப்பதைத்தானே எழுத முடியும்? ஓகே. ஒரு மாறுதலுக்கு அசிமிடம் ‘நல்ல விஷயங்களாக’ தோன்றுவதைப் பற்றி முதலில் சுருக்கமாக எழுதி விட்டு வழக்கமான கட்டுரைக்குள் செல்லலாம். ஓகே?!
இந்த சீசனின் முக்கியமான ஆட்டக்காரர்களில் ஒருவர் அசிம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் இருப்பதால்தான் சற்றாவது ‘பரபரப்பு’ ஏற்படுகிறது. (கவனிக்க, சுவாரசியம் என்று சொல்லவில்லை). ‘சின்னதம்பி’ திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் வில்லன் வரும் போது தவறுதலாகக் கைத்தட்டி விடுவார் கவுண்டமணி. ‘அது வந்து.. அவன் வந்தப்புறம்தான் கதைல ஒரு கச்சா முச்சா நடந்தது’ என்று சமாளிப்பார். அது போல அசிம் இல்லையென்றால் ஆட்டத்தின் விறுவிறுப்பு குறைந்து விடும். ஒரு கதை நன்றாக இருக்க வேண்டுமென்றால் வில்லனின் பாத்திரம் வலுவாக இருக்க வேண்டும் என்பது திரைக்கதையின் பால பாடம். (அசிமைப் பற்றி பாசிட்டிவ்வாக எழுத வேண்டுமென்று நினைத்தால் கூட ஏனோ நெகட்டிவ்வாகவே வருகிறது!).

அசிம் டாஸ்க்குகளில் இயன்ற அளவிற்கு சிறப்பாக விளையாடுகிறார். அதையும் விடவும் பாராட்டத்தக்க அம்சம் ஒன்றுண்டு. பஞ்சாயத்து நாட்களில் கமல் எத்தனைதான் சர்காஸ்டிக் கமெண்ட்டுகளால் அடிஅடியென்று அவரை அடித்தாலும் முகத்தில் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே அமர்ந்திருப்பார். அசிமின் மொழியிலேயே சொன்னால் நல்ல ‘நெஞ்சுரப்பு’ உண்டு. அதைப் போலவே அதற்கான பதில்களையும் எதையோ தொகுத்து சொல்லி சமாளித்து விடுவார். கமலிடம் இது போல் வேறு எவராவது அடிவாங்கினால் நிச்சயம் உடைந்து அழுது விடுவார்கள். கமல் ஏதாவது லேசாக கமெண்ட் அடித்தால் கூட விக்ரமன் பதறி விடுகிறார். தனலஷ்மி போன்றவர்களையெல்லாம் சொல்லவே வேண்டாம். ஆக ஒரு நெருக்கடியான சூழலைக் கூட மனோதைரியத்துடன் எதிர்கொள்ளும் திறமை அசிமிடம் இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் ‘கடப்பாறையை முழுங்கி விட்டு இஞ்சி கசாயம் குடிக்கும்’ கேட்டகிரி.
பெண்களுக்கு ‘Rugged boy’ பாசம் எப்படித் தோன்றுகிறது?
ஆனால் அசிமிடமுள்ள நெகட்டிவ் விஷயங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அதுவொரு நீள்காவியமாக நீண்டு விடும். அவருக்கும் எப்படி கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று யோசித்தால் – குறிப்பாக பெண்கள் – அது ‘ரக்கட் பாய்’ பாசம்தான். மனித குலம் காடுகளில் வசித்த போது உடல் ரீதியாக வலிமையாக இருக்கும் ஆண்களை பெண்கள் விரும்பினார்கள். ஏனெனில் அவர்களிடம்தான் பெண்கள் ‘பாதுகாப்பாக’ இருக்க முடியும். பிடிக்காத ஆண்கள் வலுக்கட்டாயமாக நெருங்கும் போது இவர்களின் மூலம் தப்பிக்க முடியும். இப்படி ஆரம்பித்த ‘பாதுகாப்பு உணர்ச்சி’தான், மரபணுக்களில் பதிந்து, நவீன காலத்திலும் ‘Rugged Boy’ அன்பாகப் பெருகி வழிகிறது.

ஆனால், இதுபோன்ற ஆசாமிகளை தூரத்திலிருந்து ரசிப்பது மட்டுமே எளிது. அவர்களுடன் குடும்பம் நடத்திப் பார்த்தால்தான் அதிலுள்ள சிரமங்கள், அவஸ்தைகள் பெண்களுக்குப் புரியும். இம்மாதிரியான ஆண்களை, பெண்கள் ரசிப்பதால்தான் ஆண்களும் ‘ரக்கட் பாய்’ வேஷத்தை அணிந்து கொள்கிறார்கள். ‘ஆண்மைத்தனம்’ என்கிற பெயரில் பல பொறுக்கித்தனங்களைச் செய்கிறார்கள். இதுவே பல சினிமா ஹீரோக்களின் பாத்திரங்களிலும் கூட பிரதிபலிக்கிறது. மறுபடியும் சமூகத்திற்கே விஷமாக வந்து சேர்கிறது.
‘அந்நியன்’ படத்தில் அம்பி பாத்திரத்தைப் பற்றி விவேக் சொல்லும் போது ‘ஒருத்தன் ரொம்ப நல்லவனா இருந்தா நமக்கு பிடிக்க மாட்டேங்குதுல்ல?!’ என்று சதாவிடம் கேள்வி கேட்பார். இதுதான் யதார்த்தம். நல்லவர்கள், நோ்மையாளர்கள் பல துறைகளிலும் கண்டுகொள்ளப்படாமல் மூலையில் தள்ளப்படுவார்கள். ‘பூமர் அங்கிள்’ என்று ஏளனம் செய்யப்படுவார்கள்.
‘ரேங்கிங் டாஸ்க் என்பது கர்ச்சீப் போட்டு இடம் பிடிப்பதல்ல’
அட்டகாசமான காம்பினேஷன் ஆடையில் அரங்கிற்குள் வந்தார் கமல். ‘தன்மானம், சுயமரியாதை உள்ளவர்கள் மற்றவர்களை அவமரியாதை செய்ய யோசிப்பார்கள். அது திரும்பி வந்து விட்டால் என்ன செய்வது என்று செய்ய மாட்டார்கள். ஆனால் இதை அசிம் யோசிக்கவில்லை. என்னவென்று கேட்போம்’ என்கிற நேரிடையான முன்னுரையுடன் அகம் டிவி வழியாக உள்ளே சென்றார். தன்னை கமல் வறுத்தெடுக்கப் போகிறார் என்பது அசிமிற்கு முன்பே தெரிந்திருக்கிறது. எனவே ‘உங்க டிரஸ் சூப்பர் சார்’ என்று ஆரம்பத்திலேயே ஐஸ் வைத்து பார்த்தார். இதற்கா கமல் மயங்குவார்?

“நான் காலேஜ் போனதில்லை. என்றாலும் உங்க டாஸ்க் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு. ‘ஆண்மையுடன்’ மீசையை தியாகம் செய்தீங்க’ என்று பாராட்டி விட்டு அடுத்த நிமிடமே வில்லங்கமான தலைப்பிற்குள் நுழைந்தார் கமல். ‘உங்க ரேங்கிங் டாஸ்க் பார்த்தேன். விழுந்து விழுந்து சிரிச்சேன்’ என்று சர்காஸ்டிக்காக அவர் சொன்னதுமே பலரின் முகங்கள் மாறின. புன்னகைகள் தொலைந்து போயின.
‘இந்த டாஸ்க் பஸ்ல கர்ச்சீப் போட்டு இடம் பிடிக்கற மாதிரி இல்லீங்க” (கட்டுரையில் நான் குறிப்பிட்ட அதே உதாரணம்!). என்று ஆரம்பித்த கமல் “எக்ஸாம் ஹால்ல முதல்ல வந்து உக்காந்தவனுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்ன்னு சொன்னா, நான்லாம் முதல் மதிப்பெண் பெற்று முட்டாளா ஆகியிருப்பேன். இது தகுதி சம்பந்தப்பட்டது” என்று சொன்னவர், வழக்கம் போல நட்டநடு நாயகமாக கம்பீரமாக அமர்ந்திருந்த அசிமிடம் “நீங்க முதல்ல வந்து உக்காருங்க சார்.. அதுதானே உங்க இடம்” என்று முதல் நையாண்டி ஊசியை வலிமையாக இறக்கினார்.
‘கட்டப்பஞ்சாயத்து என்று அசிம் சொன்னது தவறான பேச்சு’
“நீங்க பாத்ரூம் போயிட்டு வந்து பார்க்கும் போது பத்தாம் நம்பர் இடம்தான் காலியா இருக்குன்னு வெச்சுப்போம்.. என்ன பண்ணியிருப்பீங்க?” என்று அசிமை நோக்கி விசாரணையை ஆரம்பித்தார் கமல். ‘பேசி வாங்கியிருப்பேன்’ என்று பதில் வந்தது. “ஆனா அவ்வளவு சண்டை போட்டுட்டு ஆட்டம் முடிஞ்சவுடனே சேர்ந்துட்டீங்க. அப்ப உங்க கோபமெல்லாம் பொய்யா.. வியர்வைல்லாம் வந்ததே.. ஸ்பிரே அடிச்சதாதான் அப்படி வரும்?” என்று கமல் கேட்டவுடன் தனலஷ்மியும் மணிகண்டனும் உற்சாகமாக கைத்தட்டினார்கள். “அசிம்.. கோபத்தை பத்தி நிறைய பேசியிருக்கோம். உங்க பிள்ளையை உதாரணம் காட்டிக் கூட சொல்லிப் பார்த்துட்டேன். இதைத்தான் கத்துத் தரப் போறீங்களா.. ‘இந்தப் பிள்ளைக்கு’ புரியற மாதிரி சொல்லுங்களேன். இந்தக் குணாதிசயம் வெற்றிக்கு வாய்ப்பு தராது” என்று கமல் நேரிடையாக அடித்தவுடன் சங்கடமான புன்னகையைத் தந்தார் அசிம்.
“அசிம் சொன்ன சபை மரியாதையில்லாத வார்த்தைகளைப் பற்றி மத்தவங்க சொல்லுங்க” என்று கமல் ஆரம்பித்தவுடன் வரிசையாக எழுந்து மக்கள் ஆரம்பித்தார்கள். “கட்டப்பஞ்சாயத்துன்னு சொன்னாரு" என்று ஏடிகே தயக்கத்துடன் சொல்ல “அசிம் அரசியலில் புழங்கக்கூடிய ஆள். அதன் அர்த்தம் அவருக்குத் தெரியும்.

ஆனா அதை வெச்சு ஸ்டீரியோடைப்பா சொல்றதை அவரும் பண்றாரு” என்று விக்ரமன் சொல்ல “விக்ரமன் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலையே அசிம்.. உதாரணம் கேட்டாரே” என்று கமல் அசிம் பக்கம் திரும்ப “ஜனனி மேட்டரை வெச்சு அமுதவாணனை இழுத்தார்” என்று உப்புச்சப்பற்ற காரணத்தைச் சொன்னார் அசிம். டாஸ்க்கினுள் நடந்த விஷயத்தை வைத்துதான் விக்ரமன் உதாரணம் காட்டினாரே ஒழிய, அசிமின் வெளியுலக வாழ்க்கையை வைத்து அல்ல. தனக்கென்று வரும் போது மற்றவர்கள் தொடர்பான சம்பவங்களை உதாரணம் காட்டுகிற அசிம், விக்ரமன் சொன்ன போது மட்டும் ‘கட்டப்பஞ்சாயத்து’ என்று தொடர்பில்லாமல் அவமதிக்க முயன்றதற்கு காரணம் அவரிடம் முறையான பதில் இல்லை. எனவே தனது அடாவடித்தனத்தின் மூலமாகவே விக்ரமனை எதிர்கொள்ள முயன்றார். ஆனால் பார்ப்பவர்களுக்கு அது மிக ஆபாசமாகத் தெரியுமே என்பதைப் பற்றி அசிம் யோசிக்கவேயில்லை.
“டாஸ்க் உதாரணம் சொல்றது எப்படி ‘கட்டப்பஞ்சாயத்து’ ஆகும்?” என்று கமல் கேட்க, விளக்கம் அளிக்கிறேன் பேர்வழி என்று இன்னமும் ஆப்பில் சென்று வாகாக அமர்ந்து கொண்டார் அசிம். “விக்ரமனை தனிப்பட்ட முறையில்தான் கேட்டேன். அவர் சார்ந்திருந்த சமூகம் தொடர்பான பொருள் இல்லை” என்று அசிம் அபத்தமாக விளக்கம் சொல்ல “எதையாவது சொல்லிடாதீங்க. சமூகன்னு சொல்லக்கூடாது” என்று மெலிதான கோபத்துடன் அறிவுறுத்தினார் கமல்.

அடுத்ததாக அமுதவாணனின் பக்கம் வண்டியைத் திருப்பியவர் “அவமானங்களையெல்லாம் மறந்துட்டு விளையாடறீங்க. அப்ப அசிம் கிட்ட கோபப்பட்டதெல்லாம் பொய்யா?” என்று கமல் கேட்க “என்னங்க பண்றது.. முதல் வாரம் அசிம் கிட்ட நல்லாத்தான் பேசினேன். அப்புறம் பயங்கர சண்டையா ஆச்சு. ஆனா அவரே வந்து ‘மன்னிச்சுடுங்க மாம்ஸூ. ஷோக்காகத்தான் பண்ணேன்’ன்னு ஸாரி கேப்பாரு. நானும் கோச்சுக்கிட்டு அப்படியே இருந்தா ‘இவரு ஸ்போர்டிவ்வா இல்லைன்னு சொல்லிடுவாங்களோ’ன்னு பயந்து பேச ஆரம்பிப்பேன். மறுபடியும் சண்டை நடக்கும். இது தொடர்கதையாகவே ஆயிடுச்சு” என்று அமுதவாணன் சாட்சி சொன்னாலும், பழைய விஷயங்களை முற்றிலுமாக மறந்து விட்டு அசிம் பக்கம் சற்று சாய்ந்து விட்டார் என்பதுதான் உண்மை.
‘அசிம் மாதிரியான ஒரு ஆளை வெளியுலகத்தில் பார்த்தா?’
“அசிம் மாதிரியான ஒரு ஆளை வெளியுலகத்துல பார்த்தா என்ன பண்ணுவீங்க?” என்று தனலஷ்மியிடம் கமல் ஆரம்பித்து வரிசையாக கேட்க, ஒவ்வொருவருமே முகம் சுளித்தார்கள். ``போடான்னு சொல்லிடுவேன்” என்றார் மைனா. “என் கண்ணு முன்னாடி இப்படியொரு ஆளு இல்லைன்ற மாதிரியே நடந்துப்பேன்” என்று ரச்சிதா சொன்னதை மனமார பாராட்டினார் கமல். ‘அப்படி இருக்கறது ரொம்ப கஷ்டம். மயக்கமே வந்துடும். காந்தி அப்படித்தான் போராடினார். வெள்ளைக்காரனுக்கு அது புரியல. தலைல ரத்தம் வழிஞ்சாலும் அடி வாங்கினாங்க. அதற்குப் பெயர் அஹிம்சை’ என்று கமல் பாராட்டியதும் முகம் மலர்ந்தார் ரச்சிதா. அவரின் பொறுமையை கமல் பாராட்டியது ஓகே. ஆனால் ‘கண்ணில் தெரிஞ்ச மாதிரியே காட்டிக் கொள்ள மாட்டேன்’ என்று ரச்சிதா சொன்னதையொட்டி பாராட்டியதில் முரண் இருந்தது. ஏனெனில் எல்லா எதிர் தரப்புகளுடனும் காந்தி தனக்குரிய ‘பிரத்யேக மொழியில்’ தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருந்தார். ரச்சிதா போல் மௌனமாக கடந்து போகவில்லை.

‘அவன் கிட்ட இருந்து விலகி நிக்கத்தான் பார்ப்பேன்.. ஆனா அவனது சில குணங்கள் சிலது பிடிச்சிருக்கு. தனது தப்புகளை அவன் உணரவே மாட்டேன்றான்துதான் பிரச்சினை” என்று துல்லியமான விமர்சனத்தை முன்வைத்தார் ஏடிகே. “ஒதுங்கிப் போதலும் ஒருவகையான தற்காத்தல்தான்’ என்று கமல் சொன்னது திருவாசகம். அடுத்ததாக மணிகண்டனின் பக்கம் வண்டியைத் திருப்பிய கமல் ‘உங்கள் நண்பர்’ பற்றி என்ன சொல்றீங்க? என்று நையாண்டியாக கேட்டது சிறப்பு. ‘தட்டிக் கேட்பேன்” என்று மணிகண்டன் சம்பிரதாயமான பதிலைச் சொல்லி மழுப்பியதும் “உள்ளேயே கேட்கலை.. வெளிய கேக்கவா போறீங்க?” என்று குறும்பான உடல்மொழியில் கமல் சொன்னதற்கு சபை வெடித்து சிரித்தது.

‘வெளிச்சூழல் வேற மாதிரில்ல இருக்கும்?!' என்று அபத்தமாக கேட்டார் மணிகண்டன். அசிமும் மணிகண்டனும் ஒரே அலைவரிசையில் சிந்திப்பதால்தான் நண்பர்களாக இருக்கிறார்கள் போலிருக்கிறது. ‘நண்பா..ன்னு தோள்லயாவது தட்டிக் கேட்டிருக்கலாமே” என்று சொன்ன கமல் “நீங்க உங்களுக்குள்ள விளையாடலை. எங்களை வெச்சு விளையாடிட்டிங்க” என்று சொன்னது சிறப்பு. தன்னுடைய முறைக்காக அசிம் கை தூக்கிய போது கமல் அதை கண்டு கொள்ளாதது சிறந்த குறியீடு. புறக்கணிப்பின் வலியை அசிம் உள்ளூற உணர்ந்திருப்பார்.
‘எனக்கு கோர்வையா பேச வராது’ – மழுப்பிய மணிகண்டன்
முதல் இடத்திற்காக போட்டியிடாதவர்களை அழைத்த கமல் “உங்களை நான் சண்டை போடச் சொல்லலை. விவாதத்தின் மூலம் உங்கள் தகுதியை எடுத்துரைத்திருக்கலாமே” என்று சொல்லி விட்டு விளக்கம் சொல்வதற்கு அவர்களை அழைத்தார். ‘என் சுயமரியாதையை விட்டுத்தர விரும்பலை. மேலும் எனக்காக அசிம் விட்டுத் தரேன்னு சொன்னதும் ஒரு காரணம். அதைப் பெற விரும்பலை” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் ஏடிகே. அசட்டுச் சிரிப்புடன் கதிரவன் எழுந்த போது கூட்டத்திலிருந்து சிரிப்பும் கைத்தட்டலும் கேட்டது. ‘கேட்டுதா.. அர்த்தம் புரியுதா?’ என்று கமல் நமட்டுச் சிரிப்புடன் கேட்க சற்று முகம் மாறினார் கதிரவன். ‘இல்ல . சார்.. அங்க இருந்த சூடு தாங்கலை” என்று அவர் பரிதாபமாக சொன்னது கமலுக்குப் புரிந்து விட்டது. கதிரவன் போன்ற மென்மையான மனம் படைத்தவர்களால் அப்படிப்பட்ட சூழலில் நிற்பதே சிரமம். இதில் எங்கே வாதிடுவது?!

“எனக்கு தமிழ்ல கோர்வையா பேச வராது. ஏதாவது வார்த்தையை விட்டுருவனோன்னு பயம் வந்துடும்” என்று மணிகண்டன் மழுப்ப “விக்ரமன் பத்தி பேசும் போது கூடவா?” என்று கமல் சரியாக மடக்கிய இடம் அபாரமானது. ‘உங்க முன்னாடி பேச வருது. இவங்க முன்னாடி வரலை’ என்று பிளேட்டை தலைகீழாக மாற்றிச் சொன்னார் மணிகண்டன். “75 நாட்களைக் கடந்தும் உங்கள் யாரிடமும் முதிர்ச்சி தெரியவில்லை. சற்று ரசித்துக் கொண்டிருக்கும் போதே எங்காவது இடறி விழுந்துடறீங்க” என்று கடுமையான முகத்துடன் கமல் சொல்ல, அனைவரின் முகங்களிலும் கலவரம் தெரிந்தது.
ஒரு பிரேக் முடித்து திரும்பிய கமல் “அமுதவாணன்.. அசிம் கூட என்ன டீலிங்.. அப்பப்ப கண்ணாலயே பேசிக்கறீங்க?” என்று கேட்க “அய்யோ.. அவன் இம்சை தாங்க முடியல. வேற வழியும் எனக்குத் தெரியல. ஜனனி மேட்டரை இழுப்பாங்களோன்னுதான் ஒண்ணாம் நம்பர் பக்கம் நான் போகலை. அந்தப் பொண்ணு வெளியே போயும் என் உசுரை வாங்குது” என்பது போல் புலம்பினார் அமுதவாணன்.
‘தினமும் ரௌத்ரம் பழகாதீங்க' – அசிமிற்கு கமல் அட்வைஸ்
‘சரி. வேற வழியில்ல. பேசித்தானே ஆகணும்’ என்பது மாதிரி அலுப்புடன் அசிமை எழுப்பிய கமல் “எனக்கு பதில் சொல்ல யோசிக்கறதை விடவும் திருந்தறதை பத்தி யோசிங்க. சுயமரியாதை உள்ளவன் அவமானம் செய்ய பயப்படுவான். அது திரும்பி வரும். நீங்க சொல்றது மத்தவங்களுக்கு வலிக்குது. ஆனா நீங்க தட்டி விட்டுட்டு கூலா போயிடறீங்க. ஆவேசத்துல உங்களுக்கு உண்மையாவே கோபம் வருது. வியர்வை வரும் அளவிற்கு ஒருத்தன் நடிக்க முடியாது.” என்ற கமல் ‘ரௌத்ரம் பழகலாம், ஆனா அது தினமும் இருக்கக்கூடாது” என்று சொன்னதும் சரியான உதாரணம் அல்ல. ஏனெனில் அசிம் பழகுவதற்குப் பெயர் ரெளத்ரம் அல்ல. வெறும் ஆத்திரம்.
“மத்தவங்களை விட நீங்க மோசமா பேசறதால மேல இருக்கறதா நெனச்சிக்கறீங்க. எல்லோருமே உங்களை மாதிரியே இருந்தா உங்க நிலைமை என்ன?” என்று அசிமை முழுக்க வறுத்தெடுத்து விட்டு பேச அனுமதித்தார் கமல். இதற்கு அசிம் சொன்ன விளக்கம் வழக்கம் போல் அபத்தமாக இருந்தது. ‘என்னோட வெளியுலகம் ரொம்ப சின்னது. குடும்பம், வேலை செய்யற இடம் மட்டும்தான். எனக்கு நண்பர்கள் கிடையாது. (எப்படி இருப்பாங்க?!) வெளியுலகம் பத்தி எனக்கு நிறைய தெரியாது. வீட்டுக்குள்ளதான் இப்படி பேச வேண்டியிருக்கு. வெளில நான் அமைதியான ஆள்” என்றார் அசிம்.

அசிம் சொன்ன இந்தப் பதில் முதிர்ச்சியில்லாதது. பிக் பாஸ் என்பது அயல் கிரகத்தில் ஏலியன்களை வைத்து நடத்தப்படும் விளையாட்டு அல்ல. நம் சமூகத்தின் ஒரு துண்டு வாழ்க்கைதான். ‘ஒரு புதிய சூழலில் முற்றிலும் அந்நியமான மனிதர்களுடன் சகிப்புத்தன்மையுடனும் இணக்கமாகவும் வாழ முடியுமா’ என்கிற பரிசோதனைதான் இந்த விளையாட்டின் மையம்’. இந்த அடிப்படையான விஷயத்தையே புரிந்து கொள்ளாமல் “எனக்கு வெளியுலக வாழ்க்கை தெரியாது’ என்று சித்தார்த்தா போல அசிம் மழுப்புவது எல்லாம் வேடிக்கை. ‘நான் அமைதியான ஆள்’ என்று அவர் சொன்னாலும், படப்பிடிப்புத்தளங்களில் அவர் செய்த ராவடிகள் பற்றி அவருடன் பணிபுரிந்தவர்கள் இணைய தளங்களில் எழுதிவருகிறார்கள்.
“உங்களுக்குத்தான் நான் தாங்க்ஸ் சொல்லணும். இந்த உரையாடலின் மூலம் மத்தவங்களைப் பற்றி என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது” என்று மேலும் ஒரு விளக்கத்தை அசிம் சொன்னாரே பார்க்கணும்.. ‘திருப்பதில லட்டுக்குப் பதிலாக ஜாங்கிரி தராங்க’ என்கிற விவேக் காமெடிக்கு இணையான நகைச்சுவை அது.
இந்தச் சமயத்தில் ஏடிகே ஏதோ வலியால் தவிப்பதைக் காண முடிந்தது. சாய்ந்து திரும்பி உட்கார்ந்தார். கமல் தலை மறைந்ததும் அப்படியே தரையில் விழுந்தார். உரையாடலின் அழுத்தம் தாங்காமல் அவர் அப்படி நகைச்சுவையாக விழுந்தாரோ என்று முதலில் தோன்றியது. ஆனால் தசைப்பிடிப்பு காரணமாக வலி தாங்காமல் விழுந்திருக்கிறார் என்பது பிறகு தெரிந்தது. மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட அவர், மறுபடியும் நிகழ்ச்சிக்கு திரும்பவில்லை. “ஆஸ்பிட்டல் போயிருக்காரு’ என்கிற தகவலை சொன்னார் கமல். உடல்நலத்துடன் அவர் விரைவில் வீடு திரும்பட்டும்.

அசிமின் பேச்சை நான் ஆதரிக்கவில்லை – ஷிவின் மறுப்பு
“டாஸ்க் முடிஞ்சப்புறம் உடனே சேர்ந்துக்கிட்டீங்களே.. அப்ப கோபமெல்லாம் பொய்யா?” என்று கமல் விசாரிக்க அதை மறுத்தார் ஷிவின். இதையே முன்பு தனலஷ்மியும் மணிகண்டனும் கூட ஆச்சரியப்பட்டு பேசிக் கொண்டார்கள். கமல் கேட்பது ஒருவகையில் நியாயமான கேள்விதான் என்றாலும், முதிர்ச்சியான மனநிலையில் உள்ளவர்கள், கடுமையான விவாதத்திற்குப் பிறகு இறுதியில் கைகுலுக்கிக் கொண்டுதான் பிரிவார்கள். அதுதான் சகிப்புத்தன்மையின் அடையாளம். ஆனால் அது பரஸ்பர நாகரிக விவாதத்தில்தான். அசிம் போன்றவர்களுக்கு உடனே கைகொடுப்பதற்கு அசாதரணமான பொறுமை வேண்டும். ‘Well defensive’-ன்னு அசிம் கிட்ட நான் சொன்னதா ஞாபகமில்லை” என்று சாதித்தார் ஷிவின். ஆனால் சில நிமிடங்களுக்கு முன் அவரே சொன்ன வார்த்தைதான் அது. மட்டுமில்லாமல் ரேங்கிங் டாஸ்க் முடிந்த பிறகும் அதைச் சொன்னதை வீடியோவில் பார்க்க முடிந்தது. ஆனால் ‘நினைவே இல்லை’ என்று சொல்பவரிடம், சந்தேகத்தின் பலனை அளித்துதான் ஆக வேண்டும்.

பிரேக் நேரத்தில் “இநத வாரம் நான்தான் வெளியே போவேன்னு நெனக்கறேன். ஆனா எனக்கு அதில கவலையில்ல. என்னைத் தெரிஞ்சவங்க கொஞ்ச பேரு வெளில இருக்காங்க. அவங்க கூட சந்தோஷமா இருப்பேன்" என்று அசிம் சொன்னதற்குப் பெயர் கிணற்றுத்தவளை மனோபாவம். சமூகத்துடன் இணைக்கமாகப் புழங்குவதற்குத்தான் ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டும். “அதெல்லாம் போக மாட்டே.. நீ ஆடற கேம் ஓகே.. ஆனா பேசற முறை, வார்த்தைகள்தான் தப்பு” என்று சரியான ஆலோசனையை மணிகண்டன் சொன்னது சிறப்பு.
பிரேக் முடிந்து திரும்பிய கமல், ஸ்டோர் ரூமில் இருந்து எடுத்து வரச் சொன்னது வில்லங்கமான அயிட்டம். ஜால்ரா. அசிம் தனது செய்கையின் மூலம் விக்ரமனுக்கு செய்து காட்டிய பொருள் நிஜமாகவே சபைக்கு வந்தது. ஆனால் இதில் என்ன சுவாரசியமான முரண் என்றால் இறுதியில் அந்த ஜால்ரா பட்டம் அசிமிற்குத்தான் கிடைத்தது. (என்னவொரு டிவிஸ்ட்! வினை விதைத்தவன் வினை அறுப்பான்!).
‘அசிமின் கேம் ஓவரா?’ – மற்றவர்களின் பதில்
`விக்ரமன் எப்போதுமே ஷவினுக்கு மட்டுமே ஆதரவு தருவார்’ – இது அசிம் தொடர்ந்து சொல்லும் குற்றச்சாட்டு. இது அவரின் கற்பனை மட்டுமே. எனில் தனது நண்பர்களுக்கு அசிம் தருவதற்கு பெயர் என்ன? இந்த விஷயத்தைப் பற்றி நேற்றைய கட்டுரையில் பார்த்தோம். இருவரும் ஏறத்தாழ ஒரே அலைவரிசையில் சிந்தித்து இணக்கமானவர்களாக இருந்தாலும் கருத்து முரண்பாடு போது முட்டிக் கொள்ளவும் செய்வார்கள். இவையெல்லாம் அசிமின் கண்களில் படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எனில் அசிம் சொல்வது பொய்யான குற்றச்சாட்டு. இந்த விஷயத்தையே விக்ரமனும் ஷிவினும் இப்போது சாட்சியாகச் சொன்னார்கள். இருவரும் காப்பாற்றப்பட்ட செய்தியை கமல் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

நான்காவது முறை தொடர்ந்து தலைவர் பதவியைப் பெற்ற மணிகண்டனை பாராட்டிய கமல், ‘இதுவரை யார் யார் எல்லாம் வீட்டின் தலைவராக ஆனதில்லை?’ என்கிற கேள்வியை எழுப்ப, கதிரவன், விக்ரமன், அமுதவாணன், தனலஷ்மி, ஷிவின், ரச்சிதா ஆகியோர் எழுந்து ‘விளையாட்டில் முயற்சி செய்தும் தோற்றுப் போனோம்” என்று சொன்னதை கமல் பாராட்டினார். “தலைவர் ஆவறது வெறும் பிஸிக்கல் டாஸ்க்கா இருக்கக்கூடாது. தசை வலு முக்கியம் இல்ல. அறிவு சார்ந்ததாகவும் இருக்கணும். தலைமைப் பொறுப்பு ஒரே இடத்தில் குவியக்கூடாது’ என்று சொன்னது முக்கியமான அம்சம். பிக் பாஸ் கவனிக்க வேண்டிய விஷயம்.
அடுத்ததாக ‘Game Over’ என்கிற பலகையை எடுத்து வரச் சொன்ன கமல் ‘யாரோட ஆட்டம் இத்தோட முடிஞ்சு போச்சுன்னு நெனக்கறீங்களோ, அவங்களுக்கு மாட்டுங்க” என்றார். அசிமிற்கு இரண்டு பலகைகள் வந்தன. ஆனால் இது சரியான தேர்வாகப்படவில்லை. பல விஷயங்களில் அசிம் தன்னைத் திருத்திக் கொண்டால் சிறந்த போட்டியாளராக வருவார். அவருடைய கேம் நிறைவடையவில்லை என்பதுதான் உண்மை. இரண்டு பலகைகளைப் பெற்ற ரச்சிதாவும் தன் தரப்பு நியாயத்தைச் சொன்னார்.

‘எங்கள் ஆட்டம் முடியவடையவில்லை’ என்று பலகை பெற்றவர்கள் எழுந்து விளக்கம் சொல்ல “அதை முடிவு பண்ண வேண்டியது நீங்கதான்” என்கிற உத்வேக வார்த்தையோடு கமல் விடைபெற்றார். ‘யெஸ்.. என்னோட ஆட்டம் எப்ப முடியணும்னு நான்தான் முடிவு செய்வேன்” என்று அசிம் கெத்தாக சொன்ன காட்சியோடு எபிசோட் நிறைவுற்றது. (எங்க தலையோட தில்ல பார்த்தியா?!).
முன்பே சொன்னபடி இந்த வார எவிக்ஷனில் ஒரு சுவாரசியமான டிவிஸ்ட் இருக்கிறது. காத்திருந்து பார்ப்போம்.