தனலஷ்மி வெளியேற்றப்பட்டார். ஜனனி வெளியேறிய போது ஏற்பட்ட அதே உணர்வு இப்போதும் ஏற்பட்டது. வீட்டில் இருக்கும் போது கணிசமான அதிருப்தியைத் தந்து விட்டு, வெளியேறும் போது ஒருவிதமான நெகிழ்வை ஏற்படுத்தி விட்டார் தனலஷ்மி. ‘பிக் பாஸில் கலந்து கொள்வது என் நெடுங்கால கனவு. அதற்காக ஐந்து வருடங்கள் உழைத்து எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டேன்’ என்று சொல்லும் தனலஷ்மி, வீட்டிற்குள் வந்த பிறகு கோபம், அராஜகம் போன்ற பள்ளங்களில் அவ்வப்போது சறுக்கி விழாமல் இருந்திருந்தால் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வந்திருக்கக்கூடும்.

டாஸ்க்கில் ஆவேசமாக இறங்கி ஆடுவது, கன்டென்ட் தருவது போன்றவை பிக் பாஸ் வெற்றியாளருக்கான அடையாளம் அல்ல. அது மசாலா மாதிரி. அப்போதைக்கு சற்று சுவையைத் தரலாம். ஆனால் மசாலாவே உணவாகி விட முடியாது. ஆகி விட்டால் கெடுதல்தான். சகிப்புத்தன்மை, அன்பு, நட்பு, தியாகம், விவேகம் போன்ற சேர்மானங்கள் இருந்தால்தான் வாழ்க்கை என்னும் உணவு ஆரோக்கியமான ருசியுடன் அமையும். ‘சக மனிதர்களுடன் இணைக்கமாக உங்களால் வாழ முடிகிறதா?’ என்கிற பரிசோதனைதான் பிக் பாஸ் ஆட்டத்தின் அடிப்படை.
கோபம் என்கிற சறுக்கல் காரணமாக, இன்னமும் உயரத்திற்குச் சென்றிருக்க வேண்டிய தனலஷ்மி இப்போது வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இது அசிமிற்கான எச்சரிக்கை மணி.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வொயிட் கலர் கோட், சூட்டில் பிரைட்டாக உள்ளே வந்தார் கமல். “ஐ.நா.சபை ‘சிறுதானியங்களின் ஆண்டாக’ அறிவித்திருக்கிறது. இந்தியா தந்த அழுத்தம் காரணமாக இருக்கலாம். ‘கம்பு, கேழ்வரகு என்று..‘Millet’ எனப்படும் நவதானியங்களைப் பற்றிய குறிப்புகள் நம் சங்க காலத்தில் இருந்தே இருக்கின்றன. தமிழகத்தில் ஒரு கோடி நபர்களுக்கு நீரிழிவு குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த நோய் தங்களுக்கு இருப்பதே பலருக்குத் தெரிவதில்லை. நார்ச்சத்து கொண்ட தானியங்கள் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். கடந்த பத்து வருடங்களில் பீட்ஸா, பர்கருக்கு எளிதில் மாறி விட்டோம். நம் பாரம்பரிய உணவுகளுக்கும் அது போல குறுகிய நேரத்தில் திரும்புவது கடினமா என்ன? விரைவில் மாறியாக வேண்டும்’ என்கிற முன்னுரையுடன் அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்தார் கமல். அங்கு ஏடிகே மட்டும் இல்லை.

வீட்டில் உள்ளவர்கள் ‘கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்’ என்று கோரஸாக கத்த, அதை புன்னகையுடன் வழிமொழிந்த கமல் “காலேஜ் டாஸ்க்காக எல்லோரும் மீசை, தாடியை எடுத்துட்டீங்க. இதுல நான்தான் முன்னோடி. விக்ரமன் மட்டும் தப்பிச்சிட்டாரு” என்று சிரித்தவர், ‘கிண்டலின் மூலமாக ஆழமான விமர்சனங்களை வைத்து விட முடியும். அது உங்க ஸ்கூல் டாஸ்க்ல தெரிஞ்சது. உங்க குழந்தை நடிப்பிற்கு இன்ஸ்பிரேஷனா யார் இருந்தது?’ என்கிற கேள்வியை முதலில் மைனாவிடமிருந்து ஆரம்பித்தார்.
குழந்தைகளாக மாறிய அசிம், விக்ரமன், அமுதவாணன்
“என் பையன் பேரு துருவ். துத்துன்னு சொல்லுவான். அதையே வெச்சுக்கிட்டு அவன் பண்றதையே செஞ்சேன்” என்று மைனா சொல்ல, ‘மிமிக்ரி’ மாதிரி இது மம்மிக்ரியா?’ என்று கிரேசி வாசனையுடன் கமெண்ட் அடித்தார் கமல். “ஸ்கூல் டைம்ல நான் இப்படித்தான் இருப்பேன்” என்று ரச்சிதா சொல்ல “அவ்ளோ கலாட்டா பண்ணிட்டு இப்பத்தான் அமைதியா மாறிட்டீங்களா?” என்றார் கமல். “எல்கேஜியில் கூடப்படித்த பொண்ணு மாதிரியே செய்ததாக’ கதிரவன் சொன்னார். (எல்கேஜில படிச்ச ‘ரெட்டைக் குடுமி’ பொண்ணையெல்லாமா இன்னமும் நினைவு வெச்சிருக்கீங்க?! கிரேட்!) தங்களுடைய மகனின் சாயல்களை பிரதிபலித்ததாக மணிகண்டனும் அசிமும் சொன்னார்கள். ஏடிகேவின் நடிப்பும் சிறப்பாக இருந்ததாக கமல் சொன்னார்.

‘குழந்தைகளாக மாறி நடிக்க முடியாத ஆசிரியர்களுக்கு இப்ப ஒரு வாய்ப்பு. மழலையா மாறி மற்றவர்களின் மீதான விமர்சனங்களைச் சொல்லலாம்’ என்று வித்தியாசமான டாஸ்க்கை கமல் தந்ததும் ‘அங்கிள்.. அங்கிள்..இந்த ஷிவின் ஆன்ட்டி, விக்ரமன் கிட்ட மட்டும்தான் பேசறாங்க.. என் கிட்ட பேசவே மாட்டேன்றாங்க. அங்கிள்..’ என்று புகார் சொன்னார் அமுதவாணன். “ண்ணா. வணக்கம்னா.. மணி.. நீயும் என் பிரெண்டுதானே.. அசிம் கிட்ட சொல்லு.. என்ன?,’ என்று விக்ரமன் மழலையாக மாறி பேசியது சிறப்பு. அசிமும் எழுந்து குழந்தையாக மாற முயன்று ‘கதிரவன் அநியாயத்திற்கு நல்லவனா இருக்கான். ஷிவின் பேசறது புரியவேயில்ல’ என்று புகார் சொல்ல “அசிம் பாப்பா.. பேசிட்டே இருக்கும் போது நாலு வயது கூடி அடல்ட் வாய்ஸ் வருது’ என்று கமல் கிண்டலடித்த போது அசிம் உட்பட அனைவரும் ரசித்து சிரித்தார்கள்.
குழந்தையாக நடிக்கச் சொல்லவில்லை என்றாலும் தானாகவே மழலையின் உடல்மொழியைக் கொண்டு வந்த கதிரவனுக்குப் பாராட்டு. அவரை ‘தடார்’ என்று எழுப்பிய கமல் ‘நீங்க SAVED” என்று சொல்ல திகைத்துப் போய் பிறகு மகிழ்ச்சியடைந்து நன்றி சொன்ன கதிரவன், கமல் சொன்னபடி அசிமின் இடுப்பில் தாவி ஏறி ஜாலியாக அமர்ந்து கொண்டார்.
‘டியர் மோகன்’.. - காந்திக்கு கமல் எழுதிய மன்னிப்புக் கடிதம்
ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல், ‘நீங்க கடிதம் எழுதிய டாஸ்க் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. அதைப் பத்தி சொல்லுங்களேன்’ என்று இன்னொரு தலைப்பை ஆரம்பித்து வைத்தார். “எத்தனையோ மேடைகள் ஏறியிருக்கேன். பாராட்டு வாங்கியிருக்கேன். என் மனைவி பத்தி எங்கும் சொன்னதில்லை. அவங்களை கூட்டிட்டு போனதில்லை. இங்க அவங்களுக்கு கடிதம் எழுதும் போது என்னையும் அறியாம அழுதுட்டேன்” என்றார் அமுதவாணன். “வீட்ல இருக்கும் போது அம்மாவைக் கண்டுக்கிட்டதே கிடையாது. இங்க வந்த பிறகு அவங்கதான் எல்லாமேன்னு தோணுது” என்று தனலஷ்மி கண்கலங்க “அந்தக் கடிதத்தைப் பத்திரமா வெச்சுக்கங்க” என்று கமல் அறிவுறுத்தியது சிறப்பான விஷயம்.

“அம்மாவைப் பத்தி நிறையப் பேசியிருக்கேன். ஆனா இன்னொரு அம்மாவா இருந்த என்னோட அக்காவைப் பத்தி சென்டியா நான் பேசினதே கிடையாது. அவளுக்கும் பிடிக்காது. இங்க அவளுக்கு கடிதம் எழுதும் போது உடைஞ்சுட்டேன். கண்ணீரா வந்தது” என்றார் ஷிவின். “எங்க வாப்பாக்கு எழுதினேன். மழைலயும் வெயில்லயும் அவர் கஷ்டப்பட்டது, இப்போதான் எனக்குப் புரியுது” என்று அசிம் சொல்லி முடிக்க “அசிம் அவரோட தந்தைக்கு கடிதம் எழுதினாரு. விக்ரமன் இந்த தேசத்தின் பெரிய தகப்பன்களில் ஒருவருக்கு கடிதம் எழுதினார்” என்று அம்பேத்கரைப் பற்றி பேச ஆரம்பிக்கும் போதே தன்னிச்சையாக கண்கலங்கினார் கமல். (காமிரா குளோசப்!).

அம்பேத்கர் பற்றி சொல்ல ஆரம்பித்தார் விக்ரமன். “எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் லண்டன் போய் படிச்சாரு. அவரு நினைச்சிருந்தா அங்கேயே சுகபோகமா வாழ்ந்திருக்கலாம். ஆனால் அடிப்படை உரிமை பற்றிக் கூட தெரியாத, நாதியற்ற மக்களுக்காக உழைக்க இந்தியா திரும்பினாரு. அவர் எழுதிய அரசியல் சட்டம்தான் பல அடிப்படையான உரிமைகளை அடித்தட்டு மக்களுக்கு பெற்றுத் தந்துச்சு. ‘பெண்களுக்கு சமஉரிமை வேணும்’ன்ற விஷயத்தை சட்டத்துக்குள் கொண்டு வரதுக்கு அவர் பல போராட்டங்களை நடத்த வேண்டியதாக இருந்தது. (அவமதிப்புகளும் நடந்தது – கமல்) அது நடக்கலை என்பதற்காக தன் பதவியையே ராஜினாமா செஞ்சார்” என்று விக்ரமன் சொல்லச் சொல்ல நெகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றார் கமல்.
‘நானும் கடிதம் எழுதியிருக்கேன்” என்கிற பீடிகையுடன் ஆரம்பித்த கமல் “டியர் மோகன்...’ என்று ஆரம்பித்து உணர்ச்சிகரமாக வாசித்து முடித்தவுடன், அது மோகன்தாஸ் காந்திக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் என்பதை உணர முடிந்தது.
காந்தி மீதான அன்பு வெறுப்பில்தான் தொடங்கும்:
கமல் என்றல்ல, நான் உட்பட பல முதிரா இளைஞர்கள், அந்த வயதுக்குரிய அறியாமையில் ‘நல்ல கதையா இருக்கே.. காந்தியாலதான் சுதந்திரம் வந்ததா?’ என்று துடுக்குத்தனமாகத்தான் ஆரம்பிப்பார்கள். காந்தியைப் பற்றிய புரிதலே காந்தியின் வெறுப்பிலிருந்துதான் துவங்கும். பிறகு நிதானமாக சற்று நெருங்கிப் பார்த்தால்தான், காந்தி ஏற்றி வைத்திருக்கும் மகத்தான வெளிச்சத்தின் அருமை தெரியும். இன்றும் கூட பல நாடுகள் அணுஆயுதங்களை குவிக்கும் சூழலில் ‘அஹிம்சை’ என்னும் ஆயுதத்தால் சாதிக்க முடியும் என்று எவராவது அப்போது கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியுமா? அது மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களும் அவரை தெய்வமாக நம்பி பின்பற்றிச் சென்றதுதான் ஆச்சரியம். சுயநலம் என்பதை அறியாத தியாகத்துடன் தேசத் தலைவர்கள் இட்டு வைத்த பாதையில்தான் இன்று நாம் சொகுசாக நடந்து கொண்டிருக்கிறோம். அவர்களை நவீன தலைமுறை அறிவதும் நினைவுகூர்வதும் நன்றி மட்டுமல்ல, கடமையும் கூட.

“இந்தக் கடிதத்தின் விளைவுதான் பிற்பாடு ‘ஹேராம்’ என்கிற திரைப்படமாக வந்தது. குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பாவ மன்னிப்பு. நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்களின் மூலம் உலக வரலாற்றையே அறிந்து கொள்ள முடிகிறது. அம்பேத்கரின் ‘லாகூர் பேச்சு’ இன்றளவும் நடைமுறைக்கு வராத விஷயம். நான் பேசறது அரசியல் இல்ல. சமூகத் தீர்திருத்தம். காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்களின் நிழல்தான் நம்மை இன்னிக்கும் காப்பாத்திட்டு வருது” என்று உணர்ச்சிகரமாக பேசி முடித்த கமல் “கடிதம் எழுதற பழக்கமே போயிடுச்சு. கடிதம் எழுதிப் பாருங்க. நம்முடைய உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும் கருவி அது.” என்று பார்வையாளர்களுக்கும் கடிதம் எழுதும் கலையைப் பற்றி பரிந்துரைத்தார்.

ஒரு பிரேக் முடித்து திரும்பிய கமல், “எனக்கு ஓவியம் வரையத் தெரியாது. ஆனா நல்லா ரசிப்பேன். நீங்க வரைஞ்ச ஓவியங்களைப் பார்த்தேன். இதில் “பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி ஷிவின் வரைந்த ஓவியமும் ‘ஒரு மாணவனின் முன்னால் பல்வேறு கதவுகள் வாய்ப்பகளாக திறந்திருக்கின்றன’ என்பது பற்றி ஏடிகே வரைந்த ஓவியமும் சிறப்பாக இருக்கிறது என்று அவர்களைப் பாராட்டினார். (ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏடிகே சபையில் இல்லை). ‘குட் டச்.. பேட் டச்... பற்றி சொன்ன மைனாவைப் பாராட்டிய கமல் “டோன்ட் டச்’ன்னே குழந்தைகளுக்கு சொல்லித் தரலாமான்னு தோணுது. அத்தனை பயமுறுத்தும் விஷயங்கள் நடக்குது. ஆனா குழந்தைகள் அதிகமா பயந்துடாம பூடகமா சொல்லித் தரணும்” என்று கமல் சொன்னது முக்கியம். ஏனெனில் இந்த விழிப்புணர்வுச் செய்தி ‘ஆண் வெறுப்பாக’ பெண் குழந்தைகளின் மனதில் ஏற்பட்டு விடக்கூடாது.
‘இழந்த தருணங்கள் என்ன?’ – கமல் தந்த டாஸ்க்
“ஓகே.. முக்கால்வாசி பயணத்தை முடிச்சிட்டீங்க.. இழந்த தருணங்களைப் பற்றி பேசலாம். ‘இந்தச் சமயத்துல இது மட்டும் நடக்காம போயிருந்தா நல்லாயிருந்திருக்கும்’ன்னு எந்தத் தருணத்தைச் சொல்லுவீங்க?” என்று புதிய டாஸ்க்கை தந்தார் கமல். ஒரு குறிப்பிட்ட, தருணத்தைச் சொல்லாமல் சிலர் பொத்தாம் பொதுவாக சொன்னது தெளிவில்லாமல் இருந்தது. “ஆயிஷா, விக்ரமன் கூட போட்ட சண்டைகளை தவிர்த்திருக்கலாம்ன்னு இப்ப தோணுது” என்று அசிம் வாக்குமூலம் அளித்தது நல்ல விஷயம். வெறும் சம்பிரதாயமான பேச்சாக அல்லாமல், அதை அவர் மனமார கடைப்பிடித்தால் சிறப்பாக இருக்கும். (நானும் அவரைப் பாராட்டி எழுதுவேன்; அசிம் ஆர்மி கிட்ட இருந்து திட்டு வாங்காம தப்பிப்பேன்!).

“யார் கிட்டயும் க்ளோஸா பழகக்கூடாதுன்னு தோணிடுச்சு சார்.. நாம ஏதாவது சொல்லி அவங்க ஹர்ட் ஆயிடுவாங்களோன்னு பயமா இருக்கு” என்று எதிர்மறையாக மணிகண்டன் சொல்லியதை திருத்திய கமல் “மனிதர்களிடம் பழகுங்க. நல்லது. நான் கூட பாலசந்தர், சிவாஜி போன்ற பெரியவங்க கிட்ட இருந்து தயக்கம் காரணமா தள்ளி நின்னுட்டேன். ஏதாச்சும் தப்பா பேசிடுவமோன்னு... ஆனா அது எத்தனை பெரிய இழப்பு –ன்னு இப்பத்தான் புரியது.” என்று அறிவுறுத்தியது சிறப்பான விஷயம்.
‘காப்டன்ஷிப் டாஸ்க்ல இன்னமும் சுதாரிப்பா விளையாடியிருந்தா தலைவராகியிருப்பேன். அதுதான் பெரிய ஏக்கம்’ என்று அமுதவாணன் சொன்னது முற்றிலும் உண்மை. அவர் பல நல்ல சந்தர்ப்பங்களை வீணாக்கி விட்டார். இன்னமும் காலம் கடந்து விடவில்லை. இனி அவர் தீவிரமாக முயற்சிக்கலாம். “நீ கத்தி பேசும் போது பார்க்க நல்லால்ல –ன்னு ரச்சிதா சொல்லுவாங்க. அதை மாத்தியிருந்திருக்கலாம்ன்னு இப்ப தோணுது” என்று ஷிவின் தந்த வாக்குமூலமும் சிறப்பு. உயர்ந்து கொண்டிருந்த ஷிவினின் கிராஃப் அவரது திடீர் கோபம் காரணமாக சற்று கீழே இறங்கி விட்டது. “ராஜா டாஸ்க்ல அசிம் கத்தினாலும் நான் பொறுமையா போயிருக்கலாம்” என்று விக்ரமனும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
ரச்சிதா காப்பாற்றப்பட்ட செய்தியை திடீரென அறிவித்த கமல் “ஓகே. கடந்து போன தருணங்களை விட்டு விடுங்கள். இனி வரப் போவதை திறமையாக எதிர்கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு ‘நாமினேட் ஆனவங்க ஒண்ணா உக்காருங்க’ என்கிற வழக்கமான வசனத்தை சொல்லி விட்டு பிரேக்கில் சென்றார்.
எவிக்ஷன் ஆன தனலஷ்மி – மைனாவின் அதிர்ச்சி
பிரேக் முடிந்து வந்த கமல், “யாரு போவா?” என்று கேட்க ‘நான்தான்.. நான்தான்.’ என்று மைனா, அசிம், தனலஷ்மி மூவருமே சொன்னாலும் மைனாவின் முகத்தில்தான் அவநம்பிக்கை அதிகமாகத் தெரிந்தது. அமுதவாணனும் ரச்சிதாவும் ‘அசிம்’ பெயரைச் சொல்ல, அதை அசிம் மைண்டில் குறித்து வைத்துக் கொண்டிருக்கலாம். மற்றவர்கள் மைனா பெயரைச் சொன்னார்கள். கதிரவன் மட்டும் தனலஷ்மியின் பெயரைச் சொன்னார். சமீபத்தில் அசிம் நிறைய கெட்ட பெயர் வாங்கியிருப்பதால் ‘அவராக இருக்குமோ?’ என்கிற சந்தேகம் வலுவாக இருந்த நிலையில் ‘இவங்களை நம்பவே முடியாது. என்ன வேணா செய்வாங்க” என்று மக்களை நோக்கி சொல்லி அந்த நெருப்பில் எண்ணைய்யை ஊற்றினார் கமல். ‘கிறிஸ்துமஸ் பரிசா. நோ எவிக்ஷனா?’ என்று ஆவலாக கேட்டு சிரிப்பு மூட்டினார் மணிகண்டன்.

ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு ‘தனலஷ்மி’ பெயர் போட்ட கார்டை கமல் நீட்ட, தனலஷ்மியை விடவும் மைனாவிற்குத்தான் அதிக அதிர்ச்சி. ‘என்னது.. நான் தப்பிச்சிட்டனா?!’ தனலஷ்மியின் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தாலும் சுதாரித்துக் கொண்டு விடைபெறுவதற்கான புன்னகையை முகததில் வரவழைத்துக் கொண்டார். “இனிமேல் நீ வெறும் தனலஷ்மி இல்லை. ‘பிக்பாஸ் தனலஷ்மி’ என்று அழைக்கப்படுவாயாக’ என்று ஆசி கூறி விடை தந்தார் அசிம்.
வெளியே தனக்கு கெட்ட பெயர் வந்திருக்கும் என்பது தனலஷ்மிக்குத் தெரிந்திருக்கும். எனவே ‘எல்லாமே கேம்தான்.. நான் யாரையாவது காயப்படுத்தியிருந்தா ஸாரி..’ என்று உருக்கமாக பொது மன்னிப்பு கேட்டது சிறப்பான விஷயம். பிக் பாஸிடமிருந்து விடைபெற வேண்டும் என்று உருக்கமாக காத்திருந்தார். சற்று நேரம் மௌனம் காத்த பிக் பாஸ், தனலஷ்மியின் கோரிக்கையைப் பார்த்ததும் “ஆல் தி பெஸ்ட் சுகி” என்று சொலல அம்மணிக்கு மகிழ்ச்சி. அதற்கும் முன்னதாக வீட்டு வாசலில் அவர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. (இந்தப் பணிவையெல்லாம் வீட்டுக்குள் இருந்த போது கொஞ்சம் காட்டியிருக்கலாமே?!).
பவா செல்லத்துரை என்னும் சிறந்த கதை சொல்லி
பிரேக் முடிந்து அரங்கிற்கு வந்த கமல், எதிர்பார்த்தபடியே ‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்தார். இந்த வாரம் அவர் பரிந்துரைத்த நூல், பவா செல்லத்துரை எழுதிய ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ என்கிற சிறுகதைத் தொகுதி. அவரே ஒரு எழுத்தாளர் என்றாலும் பவாவிற்கு ஒரு சிறப்பான புகழ் உண்டு. இன்றைய தேதியில் தமிழ்நாட்டின் சிறந்த கதை சொல்லிகளில் பவா செல்லத்துரை முக்கியமானவர். தமிழில் எழுதப்பட்ட சிறந்த படைப்புகளை ரசித்து ருசித்து பவா நிகழ்த்தும் உரையாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நூல் வாசிப்பு பழக்கம் என்பதே சமகால தலைமுறையிடம் குறைந்து விட்ட நேரத்தில், கேட்பதின் வழியாக கதை இலக்கியம் என்னும் பாதையின் வெளிச்சத்தை அவர்களுக்கு காட்டும் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார் பவா. கதை சொல்லும் கலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முக்கியமான கலைஞர். பவா செல்லதுரை ஆனந்த விகடன் இதழில் எழுதிவரும் சொல்வழிப் பயணம் தொடரைப் படிக்க க்ளிக் செய்க
பவா செல்லதுரை பேசிய காணொளியைக் காண ....

“வாங்க தனலஷ்மி” என்று மேடைக்கு வரவேற்றார் கமல். “முதல் ஐந்து இடங்களில் ஒன்றை பிடிக்கக்கூடிய போட்டியாளராக நீங்கள் கணிக்கப்பட்டீர்கள்” என்று கமல் சொல்லும் போதே “அவசரப்பட்டு வெளியே வந்துட்டியம்மா” என்கிற கனிவும் கரிசனமும் கமலிடம் தெரிந்தது. “பிக் பாஸ் வரணும்-றது என்பது பெரிய கனவா இருந்தது. அதுக்காக அஞ்சு வருஷம் காத்திருந்தேன். உழைச்சிருக்கேன். இங்க எழுபது நாளைக்கும் மேலாக இருந்ததையே பெரிய விஷயமா நினைக்கிறேன்.” என்ற தனலஷ்மியிடம் “பிரபலம் எதுவும் இல்லாமல் சாமானிய மக்களில் இருந்து ஒருவராக உள்ளே வந்தீர்கள். ஆனால் வெளியே செல்லும் போது நட்சத்திர அந்தஸ்த்துடன் செல்கிறீர்கள்” என்று வழக்கமான பாணியில் உசுப்பேற்றினார் கமல்.
பிறகு தனலஷ்மியின் பயண வீடியோ ஒளிபரப்பானது. விதம் விதமான முகபாவங்களுடன் அதைப் பார்த்து முடித்த தனலஷ்மி, “சிறப்பாக இருந்தது சார்’ என்று சொல்லி அகம் டிவி வழியாக உள்ளே சென்று “நல்லா விளையாடுங்க. அசிம். நீங்க கண்ணு கலங்கறதைப் பார்த்தேன். உங்களோட இன்னொரு முகத்தையும் காட்டுங்க..” என்று சொல்லி விடைபெற்றது சிறப்பு. கூடவே கமலும் விடைபெற்றார்.

மருத்துவ சிகிச்சை முடிந்து சோர்வான முகத்துடன், கன்பெஷன் ரூம் வழியாக வீட்டுக்குள் வந்தார் ஏடிகே. “கல்லு இருந்தது. வயர்ல மாட்டிக்கிச்சு” ஏதோ ஸ்கூட்டர் ரிப்பேர் மாதிரி அவர் சொல்ல, “கமல் சார்.. உன்னோட ஓவியத்தை ரொம்ப பாராட்டினார்” என்று மற்றவர்கள் ஆவலாக சொன்னதற்கு ஏடிகேவால் மகிழ்ச்சியைக் கூட வெளிப்படுத்த முடியவில்லை. அத்தனை சோர்வு. ‘அடப்பாவிகளா! ஆளு உள்ள இருக்கும் போது கழுவி கழுவி ஊத்திட்டு ஆஸ்பிட்டல்ல படுத்திருக்கும் போது பாராட்டியிருக்காங்களே’ என்பது அவரின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்.
ஆக.. வீட்டின் எண்ணிக்கை ஒன்பதாக மாறியிருக்கிறது. இனி இந்த நவக்கிரங்களின் பார்வைகளும் ஆட்டங்களும் எப்படியிருக்கும்? பார்த்து விடுவோம். தனலஷ்மி வெளியேற்றப்பட்டது பற்றி உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்களேன்!