Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 79:அசிம்,கமல் போல மிமிக்ரி செய்த அமுதவாணன் மகன்; குடும்பம் வராததால் கலங்கிய ஷிவின்!

பிக் பாஸ் 6 நாள் 79

ரச்சிதாவிற்கு ஷிவின் ஐஸ்கிரீம் ஊட்டி விடும் நேரம் பார்த்து ‘லூப்’ என்று பிக் பாஸ் சொல்ல, ரச்சிதாவின் மூக்கெல்லாம் ஐஸ் கிரீம். ஷிவினை அமுதவாணன் தலையணையால் அடிக்க, அவர் எதிர்பார்த்தபடியே ‘லூப்’ ஆர்டர் வந்து ஆசை தீர அடித்துத் தீர்த்தார்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 79:அசிம்,கமல் போல மிமிக்ரி செய்த அமுதவாணன் மகன்; குடும்பம் வராததால் கலங்கிய ஷிவின்!

ரச்சிதாவிற்கு ஷிவின் ஐஸ்கிரீம் ஊட்டி விடும் நேரம் பார்த்து ‘லூப்’ என்று பிக் பாஸ் சொல்ல, ரச்சிதாவின் மூக்கெல்லாம் ஐஸ் கிரீம். ஷிவினை அமுதவாணன் தலையணையால் அடிக்க, அவர் எதிர்பார்த்தபடியே ‘லூப்’ ஆர்டர் வந்து ஆசை தீர அடித்துத் தீர்த்தார்.

பிக் பாஸ் 6 நாள் 79
துளி நெகட்டிவிட்டி கூட இல்லாத இனிமையான எபிசோட் இது. ‘கடிகார டாஸ்க்’ என்று முதலில் சொல்லி மக்களை ‘சுற்ற’ வைத்து விட்டார் பிக் பாஸ். ஆனால் பிறகுதான் இந்த இன்ப அதிர்ச்சி. குடும்பத்தினரைச் சந்திக்கும் ஃப்ரீஸ் டாஸ்க்.

ஒவ்வொரு சந்திப்புமே ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக இருந்தது. மைனாவிற்கும் அவரது கணவர் யோகிக்கும் நடந்த தனிப்பட்ட உரையாடலை ஒரு காமெடி கலாட்டா என்றே சொல்லி விடலாம். ஆனால் இன்றைய ‘Scene Stealer’ என்று அமுதவாணனின் மகனைச் சொல்லலாம். ‘புலிக்குப் பிறந்து பூனையாகுமா?’ என்று ரகளையாக மிமிக்ரி செய்து நிரூபித்து விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

கேட்ட அடுத்த நிமிடமே ‘பார்ட்டி மூடை’ கொண்டு வரும் ‘யாக்கைத் திரி’ என்கிற அட்டகாசமான பாடலுடன் நாள் 79 விடிந்தது. ஏடிகேவும் விக்ரமனும் ‘தட்றோம்.. தூக்கறோம்’.. என்று கடிகார டாஸ்க்கை எதிர்கொள்வதைப் பற்றி மும்முரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். “ஆக்சுவலி. கடிகாரத்துல மூணு முள் இருக்கும்..” என்று இவர்கள் சீரியஸாக பேச, இன்னொரு பக்கம் ‘வில்லேஜ் விஞ்ஞானிகள்’ போல அசிமும் மணிகண்டனும் ஏதோ ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். ஓவனை வைத்து சமைக்க முடியும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதை கடிகாரமாக பயன்படுத்த முடியும் என்று முதலில் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இவர்கள்தான். அதில் நொடி மாறும் ரிதத்தை தங்களின் உடம்பிற்குள் செட் செய்து கொண்டிருந்தார்கள். அதற்குத்தான் விரலிலேயே சிட்டிகை ஆயுதம் இருக்கிறதே?!

பிக் பாஸ் 6 நாள் 79
பிக் பாஸ் 6 நாள் 79

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ – இன்ப அதிர்ச்சி தந்த பிக் பாஸ்

‘எல்லோரும் ஃப்ரீஸ்’ என்று பிக் பாஸ் அறிவிக்க மக்களுக்கு ஒரே திகைப்பு. ஒவ்வொருவரின் செல்லப்பெயரையும் வைத்து பிக் பாஸ் கூப்பிட, அவர்களின் திகைப்பு இன்னமும் அதிகமாயிற்று. ‘ஒருவேளை அந்த டாஸ்க்கா இருக்குமோ?’ சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த வாரம் ‘ஃப்ரீஸ் டாஸ்க்’ என்று பிக் பாஸ் அறிவிக்க, உற்சாகத்தின் உச்சிக்கே மக்கள் சென்றார்கள். ‘எதிர்பார்க்கலைல்ல’ என்று கத்துவது இப்போது பிக் பாஸின் முறை. அதையே அவரும் உரத்த குரலில் கேட்க “ஹாப்பி அண்ணாச்சி’ என்று நன்றி சொன்னார்கள். ரச்சிதா அப்போதே அறுபதுகளின் கதாநாயகியாக மாறி கண் கலங்க ஆரம்பித்து விட்டார்.

குடும்பத்தினரின் வருகை நிகழ்வதற்கு முன் அதற்கான வார்ம் – அப்பை ஆரம்பித்தார் பிக் பாஸ். அவ்வப்போது ஃப்ரீஸ், ரிலீஸ், லூப் என்று சொல்லி குறும்பான தருணங்களை ஏற்படுத்தினார். ஷிவின் மைக் மாட்டாத தருணத்தில் சரியாக ஃப்ரீஸ் செய்து அவரின் பிழையை அம்பலப்படுத்தினார்.

பாடல் ஒலிக்கும் போது, ‘ப்ரீஸ்’ என்று சொன்னதும் அனைவரும் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டுமாம். அதன் மூலம் இருட்டாகத் தெரிந்து ‘யாருடைய குடும்பம் உள்ளே வருகிறது?’ என்று இவர்கள் பார்க்க முடியாது. (என்னா வில்லத்தனம்?!). ‘குறும்பாய்.. என் உலகே நீதான்டா’ என்கிற பாடல் ஒலித்த போது ‘யாருடைய குழந்தையோ’ வரப்போகிறது என்பது தெரிந்து விட்டது. மெயின் டோர் திறந்ததும், ரோஜப்பூவிற்கு கை கால் முளைத்தது போல ஒரு சிறுவன். அவனுடைய கையில் ரோஜாப்பூ. மிக க்யூட்டாக நடந்து வந்தான், மைனாவின் மகன் துருவ். அவன் அணிந்திருந்த டிஷர்ட்டில் ‘Myna calling Naina’ என்கிற வாசகம்.

பிக் பாஸ் 6 நாள் 79
பிக் பாஸ் 6 நாள் 79

ஒவ்வொருவருமே கண்ணாடி அணிந்து பார்க்க முடியாமல் பரவசத்துடன் காத்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் தன் மகனின் குரலைக் கேட்டதும் கண்ணாடியைக் கழற்றிப் பார்த்த மைனா, ஆனந்த பரவசமும் அழுகையுமாய் ஓடிச் சென்று அவனை கையில் ஏந்தி, கட்டியணைத்து முத்தமழை பொழிந்தார். “பேச ஆரம்பிச்சிட்டானே!” என்கிற பெற்றோர்க்கு ஏற்படும் பரவசம். ‘அப்பா எங்கே’ என்று கேட்க பின்னாடியே மைனாவின் கணவர் யோகி உள்ளே வந்தார். துருவ் பயங்கர உஷார் பார்ட்டிதான். அம்மாவிற்காக கொண்டு வந்த பூவை யாருக்கும் தரவில்லை. ஆனால் ரச்சிதா தந்த சாக்லேட்டைப் பார்த்ததும் அவரிடம் பூவைத் தந்து கூடவே போனஸாக ரச்சிதாவிற்கு முத்தமும் தந்தான். (வருங்காலத்தில் பெரிய ‘மாஸ்டராக’ வருவான் போல!).

‘வாடா.. ரொமான்ஸ் பண்ணலாம்’ - மைனாவின் அதிரடி காமெடி

“உங்களை ரொம்பப் பிடிக்கும்” என்று ஷிவினிடம் சொன்ன யோகி, ``கொஞ்சம் ஜாலியா இருங்க பாஸ்” என்று விக்ரமனைக் கேட்டுக் கொண்டார். மணி, கதிரவன், அசிம் போன்றவர்களையெல்லாம் இவருக்கு முன்பே தெரியும் போல. ‘வா.. மச்சான்..’ என்று நட்புரிமையோடு பேசிக் கொண்டார்கள். ‘கதிரவன் கோபப்பட்டு முதல்முறையாக பார்த்தேன்’ என்றார் யோகி. “டேய் கொஞ்ச நேரம் லவ் பண்ணலாம்.. பெட்ரூம் போலாமா?" என்று கேட்டு ப்ளூ காமெடி செய்தார் மைனா. (சில வாக்கியங்கள் சென்சார் செய்யப்பட்டன!) தனியாகப் பேசி விஷயத்தை அறிந்து கொள்ளும் துடிப்பு அது. மைனாவின் தம்பி ஸ்டோர்ரூம் வழியாக ‘சர்ப்ரைஸ் விசிட்’ தர, இன்னொரு முறை மைனா கண்கலங்கினார்.

பிக் பாஸ் 6 நாள் 79
பிக் பாஸ் 6 நாள் 79

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை விருந்தினர்களின் வழியாக இணைத்து நடத்துவதென்று பிக் பாஸ் திட்டமிட்டார். அதன் படி போட்டியாளரும் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினரும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு சில கேள்விகள் கேட்கப்படும். இருவரும் ஒரே பதிலைச் சொன்னால் மதிப்பெண். ‘மைனாவிற்கு பிடித்த உணவு பிரியாணி’ என்கிற விஷயத்திற்கு கணவர் ‘ஆம்’ என்று சொல்ல, மைனா’ இல்லை’ என்கிற போர்டை காட்டினார். ‘துருவ்வின் சேட்டையை விட மைனாவின் சேட்டை அதிகமா?’ என்கிற கேள்விக்கு இருவருமே ஆம் என்றார்கள். ‘மைனா இரண்டு முறை வீட்டின் தலைவராகியிருக்கிறார்..’ என்று பிக் பாஸ் கேட்பதற்கு முன்பே ‘நைனா.. மூணு முறை இருந்திருக்கேன்’ என்று துடுக்குத்தனமாக ஆட்சேபம் தெரிவித்தார். ‘அதுதான் கேள்வியே’ என்பதை அறிந்ததும் நாக்கை கடித்துக் கொண்டு ‘ஸாரி நைனா’ என்றார். ‘கணவரின் மொபைலை எடுத்து மனைவி பார்ப்பாரா?’ என்கிற கேள்விக்கு இருவருமே ஆம் என்றார். (இது மேனர்ஸ் இல்லை!). இரு கேள்விகளுக்கு மட்டும் சரியான பதில் என்பதால் நூறு மதிப்பெண்கள் கிடைத்தன.

‘எனக்கு பாஸ்தாதானே பிடிக்கும். பிரியாணின்னு ஏன் சொன்னே?’ என்று மைனா கேட்க ஜாலியான உரசல் ஆரம்பித்தது. ‘எழுந்து முகத்திற்கு நேராக பார்த்து சண்டை போடுங்க’ என்று தூண்டி விட்டார் பிக் பாஸ். (வெஷம்.. வெஷம்..). பிறகு மைனாவை தனியாக ஓரங்கட்டி யோகி அளித்த ‘டுட்டோரியல் கிளாஸ் செஷன்’ இருக்கிறதே?! ஜாலியான கலாட்டாவாக இருந்தது. மைனா மக்காக இருக்கிறார். கணவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பிக் பாஸ் 6 நாள் 79
பிக் பாஸ் 6 நாள் 79

“ரேங்கிங் டாஸ்க்ல அசிம் கிட்ட தைரியமா ஃபைட் பண்ணல்ல.. அந்த தைரியம் இத்தனை நாள் ஏன் வரலை? சுய மரியாதை முக்கியம். எதையும் துணிச்சலா கேளு. உன்னால முடியும்-ன்னு காமி.. ஆக்சுவலா உன் கிட்ட கோவமா பேசணும்னு வந்தேன். என்னால முடியல” என்று யோகி பேச “பரவாயில்ல.. கோவமாவே சொல்லு’ என்று மைனா சொன்னது அவருக்கே வினையாகியது. “நீ பிக் பாஸ் விளையாட்டுக்கே லாயக்கில்ல” என்று அழுத்தம் திருத்தமாக யோகி சொல்ல ‘ஏண்டா கேட்டோம்’ என்று மைனாவிற்கு ஆகியிருக்கும். மேலும் சில உபதேசங்களுக்குப் பிறகு கிளம்பிய யோகியிடம் “உன் சட்டையைக் கொடேன். ப்ளீஸ்” என்று ரொமான்ஸாக கேட்டு வாங்கிக் கொண்டார் மைனா. அவர்களின் குடும்பம் விடைபெற்றுக் கொண்டது.

கண்கலங்கிய ஷிவின் – ஆறுதல் சொன்ன ரச்சிதா

“யோகி எனக்கு பூ கொடுத்துட்டு போனாரே..” என்று ஷிவின் பெருமையாகச் சொல்ல ‘இருடி.. உனக்கு வெச்சுக்கறேன்’ என்று ஜாலியாக காண்டானார் மைனா. பிக் பாஸின் முதல் நாளில் மைனாவைப் பார்த்த ஷிவின், அடுத்து சொன்ன வாக்கியம் இதுதான். “உங்க ஹஸ்பெண்ட் யோகியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்’. இதை நினைவுகூர்ந்து ஜாலியாகக் கோபப்பட்டார் மைனா.

ரச்சிதாவிற்கு ஷிவின் ஐஸ்கிரீம் ஊட்டி விடும் நேரம் பார்த்து ‘லூப்’ என்று பிக் பாஸ் சொல்ல, ரச்சிதாவின் மூக்கெல்லாம் ஐஸ் கிரீம். ஷிவினை அமுதவாணன் தலையணையால் அடிக்க, அவர் எதிர்பார்த்தபடியே ‘லூப்’ ஆர்டர் வந்து ஆசை தீர அடித்து தீர்த்தார். பாட்டு ஒலித்தது. எனவே கண்ணாடிகளை அணிந்து கொண்டார்கள். வந்தது ஷிவினின் நண்பர்கள். ‘கூடப் பொறக்காத அக்கா’வான நிவேதா. அவருடன் கண்ணன். திரும்பிப் பார்த்த ஷிவின், கண்ணீர் வழிய அவரைக் கட்டியணைத்துக் கொண்டார்.

பிக் பாஸ் 6 நாள் 79
பிக் பாஸ் 6 நாள் 79

ஷிவினின் அம்மாவும் அக்காவும் ஏதோவொரு காரணத்தால் வரவில்லை. அந்த வலியை மறைத்துக் கொண்டு ‘எல்லோரும் நல்லாயிருக்காங்கள்ல?’ என்று உணர்ச்சிகரமாக விசாரித்தார் ஷிவின். கண்ணனின் ஃபேவரைட் போட்டியாளர் அமுதவாணனாம். பிறகு தனியாக அமர்ந்து கலந்துரையாடல். ‘நீ நல்லாத்தான் விளையாடிட்டு இருக்கே’ என்று நிவேதா சொல்ல, ‘நீ ஒரு செலிபிரிட்டி ஆயிட்டே.. தெரியுமா?’ என்று கேட்டு கிண்டலடித்தார் கண்ணன். “இன்னும் கொஞ்சம் ஜாலியா இரு. வார்த்தைகளை கவனமா விடு” என்கிற ஆலோசனை கிடைத்தது. சில நிமிடங்களில் அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். தனது குடும்பத்தார் வராத காரணத்தினால் கண்கலங்கிய ஷிவினுக்கு ரச்சிதா ஆறுதல் சொன்னது நெகிழ்வான காட்சி.

மைனாவை பிக் பாஸ் ஃப்ரீஸ் செய்ய, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேடத்தை மக்கள் போட்டார்கள். இதற்காக முகத்தில் க்ரீமை அப்பி, பவுடரை தடவி அலங்கோலமாக நிற்க வைத்தார்கள். ரிலீஸ் ஆனதும் ‘இருங்கடா.. உங்களுக்கு வெச்சுக்கறேன்’ என்று பாத்ரூமிற்கு ஓடினார் மைனா.

அமுதவாணனின் மகன் செய்த அற்புதமான காமெடி

பாடல் ஒலிக்க அமுதவாணனின் குடும்பம் உள்ளே வந்தது. யாரையும் நோக்காமல் தன் கணவரை மட்டுமே தேடி வேகமாக நடந்து வந்தார் ராஜேஸ்வரி. அப்போதும் டாஸ்க்கை கைவிடாத கடமை வீரராக உறைந்து இருந்த அமுதவாணனை கட்டியணைத்துக் கதறினார். சூழல் அறிந்து பக்கத்தில் இருந்தவர்கள் நகர்ந்து செல்ல, ‘எப்பவுமே காமெடியா?’ என்று சிணுங்கினார். சிறிது நேரத்தில் அசிம், கதிரவன், ஷிவின், விக்ரமன் ஆகியோர்களைப் போல் அமுதவாணனின் மூத்த மகன் பேசி நடித்துக் காண்பித்த காட்சி ரகளையாக இருந்தது. “சூப்பர்டா.. செல்லக்குட்டி’ என்று கட்டியணைத்து பாராட்டினார் அசிம். அவரால் இத்தனை அதிகமாக சிரிக்க முடியும் என்பதே இன்றுதான் தெரிந்தது. இதில் ஷிவின் மாதிரி செய்யப்பட்ட பாடி லேங்வேஜ்தான் அட்டகாசம்.

பிக் பாஸ் 6 நாள் 79
பிக் பாஸ் 6 நாள் 79

பிறகு குடும்பத்துடன் தனி உரையாடல். அம்மா ரொமான்ஸ் மூடில் இருப்பதைப் பார்த்த மூன்று மகன்களும் அங்கிருந்து விலகினார்கள். “எப்படி போயிட்டு இருக்கு?” என்று அமுதவாணன் ஆவலாக கேட்க “நீதான் வெளியே வந்து பார்க்கணும்” என்பதையே திரும்பத் திரும்ப சொல்லி வெறுப்பேற்றினார் ராஜேஸ்வரி. “சிக்கன் வேணும். மட்டன் வேணும்-ன்னு கேட்கறியே.. ஒரு நாளாவது ஃபேமிலி வேணும்ன்னு கேட்டிருக்கியா?’ என்று ஜாலியான ஆதங்கத்துடன் கேட்டது சுவாரசியம். “நல்லா தைரியமா பேசுங்க. கமல் சார் வரும் போது குழப்பமாவே பேசறீங்க. டாஸ்க்லாம் நல்லா பண்றீங்க” என்று மனைவி சொல்ல “க்க்கும்..’ என்று காமெடி செய்தார் அமுதவாணன். (அசிமோடு சமீபத்தில் போராடியதின் உடம்பு வலி அவருக்குத்தான் தெரியும்).

பிக் பாஸ் 6 நாள் 79
பிக் பாஸ் 6 நாள் 79

ஜனனியை அமுதவாணனின் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதாகத் தெரிகிறது. ஜனனியால்தான் தன் கணவருக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டன என்று அவர் நினைத்திருக்கலாம். “ஜனனி ஒண்ணுமே பண்ணலை” என்று அவர் சொன்ன ஒற்றை வாக்கியத்தில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. “நீங்க எழுதின லெட்டர்தான் எனக்குப் பிடிச்ச பெரிய கிஃப்ட்’ என்று நெகிழ்ந்தார். ஆம், வாழ்க்கையிலேயே அமுதவாணன் தன் மனைவிக்கு முதன் முறையாக பாராட்டி, விசாரித்து எழுதிய கடிதம் ஆயிற்றே?!

லக்ஸரி பட்ஜெட்டில் அமுதவாணனால் ஐம்பது மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. அவர்கள் கிளம்ப வேண்டிய தருணம். மனைவியின் ரொமான்ஸான பார்வையைப் பார்த்து “ஏதாவது எசகுபிசகா பண்ணிடாத” என்று அமுதவாணன் அநியாயத்திற்கு சங்கடப்பட்டு வெட்கப்பட்டது, ஜாலியான மொமன்ட். தன் மூன்று மகன்களுக்கும் இனிமையான தமிழ்ப்பெயர்களைச் சூட்டியிருப்பதற்காக இவர்களைப் பாராட்டலாம். (இளந்தமிழ், யாழ்வாணன், யாழினியன்). கிளம்பும் போது வாசலில் “கப்பு ஜெயிக்கணும்னு சொல்லலை.. கப்பு கெடைச்சா நல்லாயிருக்கும்ன்னு சொல்லறேன்” என்று கமல் குரலில் அமுதவாணனின் மகன் மிமிக்ரி செய்தது அருமை.

மற்றவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்கும் ஆவல், அவர்களைப் போலவே நமக்கும் ஏற்பட்டிருப்பதுதான் இந்த டாஸ்க்கின் வெற்றி.