Published:Updated:

பிக் பாஸ் 6, நாள் 8: `ஒரு நாயகன்...' வீட்டின் தலைவரான ஜி.பி.முத்து; இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?

பிக் பாஸ் 6, நாள் 8

முதல் எலிமினேஷன் பிராசஸ் பட்டியலில் இடம் பிடித்த நபர்கள் விக்ரமன், ஷிவின், சாந்தி, க்வின்சி, நிவாஷினி, ஆயிஷா, ரச்சிதா, ஷெரினா, அசிம், மகேஸ்வரி, ராம் மற்றும் தனலக்ஷ்மி. இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?

Published:Updated:

பிக் பாஸ் 6, நாள் 8: `ஒரு நாயகன்...' வீட்டின் தலைவரான ஜி.பி.முத்து; இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?

முதல் எலிமினேஷன் பிராசஸ் பட்டியலில் இடம் பிடித்த நபர்கள் விக்ரமன், ஷிவின், சாந்தி, க்வின்சி, நிவாஷினி, ஆயிஷா, ரச்சிதா, ஷெரினா, அசிம், மகேஸ்வரி, ராம் மற்றும் தனலக்ஷ்மி. இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?

பிக் பாஸ் 6, நாள் 8
முத்துவின் ரசிகர்கள் அவரை ‘தலைவரே... தலைவரே...' என்று அழைக்கும் ராசியோ, என்னமோ, இந்த சீசனின் முதல் வாரத்திலேயே வீட்டின் தலைவர் ஆகிவிட்டார் முத்து. ‘இன்று பிக் பாஸ்... நாளை?’ என்று கூட மாநிலம் முழுக்க போஸ்டர் ஒட்டப்படலாம். அப்படி நேர்ந்தால் அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ கொள்ளாதீர்கள். தமிழகத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்பாராததை எதிர்பாருங்கள். நம் வரலாறு அப்படி!

நாமினேஷன் சம்பவத்தின் வழியாக விக்ரமனும் ஷிவினும் பெரும்பான்மையோரின் வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருப்பது நன்கு தெரிகிறது. அதற்கான நியாயமான காரணங்களும் உள்ளன. என்ன நடந்தது என்று விரிவாகப் பார்ப்போம்.

நாள் 8-ல் நடந்தது என்ன?

‘மரணம்... மாஸூ... மரணம்’ என்கிற மங்களகரமான பாடலுடன் நாள் 8 விடிந்தது. பெரியவர்கள் இருக்கும் வீட்டில் இந்தப் பாடலை ஒலிக்க விட்டால் ‘காலைலயே மரணம்... சாவுன்றான். என்ன எழவு பாட்டு இது?’ என்று ஆட்சேபித்திருப்பார்கள். யார் சேலை கட்டி வந்தாலும் ராபர்ட்டின் கண்கள் விரிகின்றன. இன்று அவர் மகேஸ்வரிக்குச் சில்லறையைச் சிதறவிட்டார்.

பிக் பாஸ் 6, நாள் 8
பிக் பாஸ் 6, நாள் 8

ராம் அணிந்திருந்த ஃபேஷன் உடையைப் பார்த்து "என்ன... உங்க டிரஸ்ல ஓட்டை ஓட்டையா இருக்கு” என்று கேட்டார் மைனா. காமெடியாம். “என் டிரஸ் தரேன். போட்டுக்கறியா?” என்று அசலிடம் பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்தார் நிவா. “என்னோட டிரஸ் இன்னமும் வரலை. ஒழுங்கா அனுப்பிடுங்க. இல்லைன்னா கோவணத்தோட சுத்துவேன்” என்று இன்னொரு பக்கம் விபரீதமான எச்சரிக்கையை கேமிராவிற்கு தந்து கொண்டிருந்தார் முத்து.

யாரைப் பார்த்தாலும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வது ரச்சிதாவிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கமாகிக் கொண்டு வருகிறது. இது எங்கு போய் நிற்குமோ?! இன்று நிவாவைத் தூக்கிக் கொண்டு ‘யாருக்கு வேணும் குழந்தை?’ என்று ஜாலியாகக் கூவிக் கொண்டிருந்தார். பிக் பாஸ் வீட்டின் மனிதர்களை, சம்பவங்களை வைத்து ஏடிகே அவ்வப்போது உருவாக்கிப் பாடும் கானா பாடல்கள் நன்று.

'டான்ஸ் மாரத்தான்... உங்களில் யார் அடுத்த ஜி.பி.முத்து?'

இந்த வாரத்தின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். டான்ஸ் மாரத்தான். யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுத்துச் சவால்விட வேண்டும். இருவரும் ஒரே பாட்டிற்கு மேடையில் ஆட வேண்டும். யார் சிறப்பாக ஆடியது என்பதை மற்றவர்கள் முடிவு செய்வார்கள். தோற்ற போட்டியாளரின் புள்ளிகளும் வெற்றி பெற்றவருக்குச் சேர்த்துக் கிடைக்கும். 200 + 200 = 400 பாயிண்ட்ஸ். புதிய வரவான மைனாவிற்கு 200 பாயிண்ட்ஸ் தந்தார் பிக் பாஸ். நோகாமல் நுங்கு சாப்பிட்டார் மைனா. ஆனால் டான்ஸ் மாரத்தானில் அவர் தனியாகத்தான் ஆட வேண்டுமாம்.

பிக் பாஸ் 6, நாள் 8
பிக் பாஸ் 6, நாள் 8

‘எப்படியும் இந்தாள் மோசமாகத்தான் ஆடுவார். நாம ஈஸியா ஜெயிச்சிடலாம்’ என்று தோன்றுபவரை மக்கள் டார்கெட் செய்து சவால் விட்டார்கள். ராமை சாந்தி அழைத்த போது “நான் இப்படியே வீட்டுக்குப் போயிடறேன். இவங்க கூட ஆடி ஜெயிக்க முடியுமா?" என்று சிணுங்கினார் ராம். இப்படியாகச் சிலருக்குச் சௌகரியமான ஜோடிகள் அமைந்தன. சிலருக்கு அமையவில்லை. ஆனால் பிக் பாஸ் இதில் ஒரு டிவிஸ்ட் வைப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

க்வின்சியும் அசிமும் ஜோடி. ‘ரொமான்ஸா எல்லாம் ஆட மாட்டேன்’ என்று க்வின்சி ஆரம்பத்திலேயே சிணுங்க அவரை அமர வைத்து நிதானமாகப் பாடம் எடுத்தார் அசிம். ‘இதோ பாரும்மா... நாம ஆடற ஆட்டம் எப்படி இருக்கணும்னா வெண்ணிலவே பாட்டுக்கு பிரபுதேவாவும் கஜோலும் ஆடின மாதிரி இருக்கணும். மணிரத்னமே அலறியடிச்சு வந்து அடுத்த படத்துக்கு நம்மள கூப்பிடணும்’ என்பது மாதிரி ஏற்றி விட்டுப் பேச ‘ஓகே’ என்று கன்வின்ஸ் ஆகித் தலையசைத்தார் க்வின்சி. அமுதவாணனும் ஷிவினும் செய்து கொண்டிருந்த நடன ஒத்திகை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.

பிக் பாஸ் 6, நாள் 8
பிக் பாஸ் 6, நாள் 8

மக்களை மீண்டும் ஒன்று திரட்டிய பிக் பாஸ் “நீங்க செய்யற பிராக்டிஸ் பார்த்துட்டு எனக்கு கண்ல தண்ணியே வந்துடுச்சு. இந்த டாஸ்க்கில் ஒரு டிவிஸ்ட். சவால் விட்டவர்கள் ஒரு எதிராளியை நினைச்சுக்கங்க. சவால் ஏற்றவர்களும் ஒருத்தரை நினைச்சுக்கங்க. இப்ப ஜோடியை கலைச்சு டீம் பிரிங்க” என்றார். அதாவது சவால் விடப்படும் போது அதை மற்றவர் ஏற்றுக் கொண்டால்தான் அந்த ஜோடி உறுதியாகும். சாந்தி மாஸ்டரும் ராபர்ட் மாஸ்டரும் ஜோடி சேர சபை ஆரவாரம் செய்தது.

'ஜெயிச்சுட்டான்யா என் தலைவன்... வருங்கால தமிழகமே!'

வீட்டின் தலைவருக்கான தேர்தல். முத்துவை எப்படியாவது உள்ளே கொண்டு வந்துவிட்டால் காமெடி கன்டென்ட் நிறைய தேறும் என்று பிக் பாஸ் டீம் நினைத்திருக்கலாம்; அதற்கேற்ப காய்களை நகர்த்தியிருக்கலாம். எனவே சாந்தி, ஜனனி, முத்து ஆகிய மூவரைத் தலைவர் போட்டிக்குள் கொண்டு வந்தார்கள். வட்ட வடிவில் உள்ள பலகையில் கடிகார முட்கள் போலக் கைப்பிடிகள் இருக்கும். அதைப் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். யார் அதிக நேரம் தாக்குப் பிடிக்கிறாரோ அவரே வெற்றியாளர்.

பிக் பாஸ் 6, நாள் 8
பிக் பாஸ் 6, நாள் 8
போட்டி ஆரம்பித்த அடுத்த நிமிடமே கால் சறுக்கி கீழே வந்துவிட்டார் சாந்தி. எனவே ஜனனிக்கும் முத்துவிற்கும் இடையில்தான் போட்டி. ‘நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ’ என்பது மாதிரி கைப்பிடிகளை லாகவமாக உபயோகித்தார் முத்து. ‘குலுவாலிலே... முத்து வந்தல்லோ’ என்று முத்துவின் பெயருள்ள பாடல்களைப் பாடி மக்கள் உற்சாகப்படுத்தினார்கள். இதற்கு ஜனனி தந்த க்யூட் ரியாக்ஷன்கள் ரசிக்க வைத்தன.

முத்துவோ பலகையின் சாய்மானத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரே நிலையில் சாய்ந்து எளிதாகச் சமாளித்தார். ஆனால் ஜனனியோ அப்படியும் இப்படியும் திரும்பிக் கொண்டிருந்தது தவறான ஆட்டம். தன்னைக் கிண்டல் செய்து கொண்டிருந்த ஹவுஸ்மேட்ஸ்களிடம் “தோழர்களே... உங்களுக்காகத்தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் தலைவனானால் பாலும் பீரும் ஓடும்” என்பது போல் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார் முத்து. தடுமாறிக் கொண்டிருந்த ஜனனி “இரவு வரை கூட நிப்பேன். ஆனால் எனக்கு விருப்பமில்லை” என்றார். அவர் பேசும் ஒரு வாக்கியத்தின் இறுதியில் அவரே ட்விஸ்ட் தருவதுதான் ஜனனியின் ஸ்டைல். ‘விளங்கேலை... ஆனா புரிஞ்சிச்சு!'

பிக் பாஸ் 6, நாள் 8
பிக் பாஸ் 6, நாள் 8

ஏறத்தாழ ஒன்றரை மணி நேரமாக இவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பலகை சற்று சுற்றியதால் தலைசுற்றி ஜனனி கீழே விழுந்து மயக்கமானார். (ஜனனி ஆர்மி அதிர்ச்சி. கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பமானது!). அவரை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் முதலுதவி செய்தார்கள். முகத்தில் தண்ணீர் பட்டதும் “நான் எங்க இருக்கேன்?” என்பது மாதிரி விழித்துச் சிரித்தார் ஜனனி. ஆகவே இந்தத் தேர்தலில் முத்து அமோக வெற்றி. உடல் நலம் சரியில்லாத நிலையிலும் அவர் போட்டியில் தாக்குப் பிடித்தது பாராட்டத்தக்க விஷயம்.

வீட்டின் தலைவரை வாழ்த்திய பிக் பாஸ், “இப்போது வீட்டின் அணிகளை நீங்கள் தன்னிச்சையாக முடிவு செய்து பிரிக்கலாம்” என்று அறிவித்தார். ஆனால் முத்துவிற்குத் தலைமைத்துவ ஆளுமை பெரிதும் இல்லை. ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’ யார் என்ன சொல்கிறாரோ அதற்குத் தலையாட்டும் பொம்மையாகத்தான் இருந்தார். (ஒருவகையில் அரசியலுக்கு இவர்கள்தான் லாயக்கு!). தங்களுக்குச் சௌகரியமான அணியில் சேர்வதில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக அமுதவாணனுக்கு மனத்தாங்கல் இருந்தது. கடந்த முறை ஒரு அணியிலிருந்தவர்கள் இந்த முறையும் ரீப்பீட் ஆகாமல் பார்த்துக் கொண்டதுதான் இதிலிருந்த ஒரே நல்ல விஷயம்.

பிக் பாஸ் 6, நாள் 8
பிக் பாஸ் 6, நாள் 8
முத்துவிற்கு வழக்கம் போல் ஜாலி இம்சை தர ஆரம்பித்தார் அமுதவாணன். “தலைவரானா முட்டை, மீனு எல்லாம் வாங்கித் தரேன்னு சொன்னேல்ல. பிக் பாஸ் கிட்ட சொல்லி வாங்கித்தா” என்று அவர் அலப்பறை செய்ய “ஏலெ... நான் தலைவராகி பத்து செகண்டுதாம்ல ஆச்சு... பிக் பாஸ்... இவனுக்கு நாலு முட்டையை அனுப்பி வாயில ஊத்துங்க” என்று கெத்தாகச் சலித்துக் கொண்டார்.

'பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ்' என்னும் சிக்கலான பிரச்னை

வாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் ஒரு புத்தம் புதிய பஞ்சாயத்து புகைய ஆரம்பித்தது. சளசளவென்று பேசிக் கொண்டிருந்த ஆயிஷாவை ‘மீன் கடை’ என்று ஷிவின் கிண்டலடிக்க, விக்ரமனுக்குள் இருக்கும் ‘பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ்’ சட்டென்று விழித்துக் கொண்டது. “அப்படியெல்லாம் எந்தவொரு சமுதாயத்தையும் பற்றிக் கிண்டல் அடிக்காதீங்க. இழிவாப் பேசாதீங்க” என்று உபதேசம் செய்ய ஆரம்பிக்க “நான் எந்த உள்நோக்கமும் இல்லாம சும்மா ஒரு கிண்டல் செஞ்சதைப் பெரிசு பண்ணாதீங்க... எனக்கும் சமூக அக்கறை இருக்கு. நான் குழந்தையில்ல” என்று பதிலுக்குக் கடுப்பானார் ஷிவின்.

இந்த விவகாரத்தைச் சற்று விரிவாகப் பார்த்து விடுவோம். ஒரு சராசரி நபருக்குள் பல்வேறு விதமான பிற்போக்கு எண்ணங்கள், கருத்துகள், சமூக பாரபட்சங்கள் ஆழ்மனதில் உறைந்திருக்கும். அந்தப் பிற்போக்கு கருத்துகள் தன்னிச்சையாக மனதிலிருந்து உதிர்ந்து கொண்டே இருக்கும். ‘அவங்கள்லாம் இப்படித்தான்’ என்று பொதுமைப்படுத்தி இகழ்ந்து விடுவார்கள். இதிலிருக்கும் பாரபட்சம் அவர்களுக்கே உறைக்காது.

பிக் பாஸ் 6, நாள் 8
பிக் பாஸ் 6, நாள் 8
இது போன்ற சமயங்களில்தான் ‘பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ்’ அவசியம். எந்தவொரு கருத்தையும் அரசியல்சரித்தன்மையுடன் நிதானமாக யோசிப்பதும் பேசுவதும்தான் மனமுதிர்ச்சியின் அடையாளம். இதை யாராவது தொடர்ந்து சுட்டிக் காட்ட வேண்டித்தான் இருக்கிறது. எனவே இந்த நோக்கில் விக்ரமன் செய்தது பிழையல்ல. அவசியமே!

ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் சுய அடையாளத்துடன் இயங்குபவர்கள் பலரின் மனதிற்குள் பிற்போக்கு கருத்துக்கள் உறைந்திருக்கும். ஆனால் ‘லாக்–இன்’ செய்தவுடன் சுவிட்ச் போட்டது போல் அப்படியே மாறி விடுவார்கள். முகமூடியை அணிந்து கொள்வார்கள். எளிய கிண்டலில் உள்ளதைக் கூட நோண்டி நுங்கெடுத்து மிகைப்படுத்தி உபதேசம் செய்து அதில் இன்பம் காண்பார்கள். உள்நோக்கமும் உபத்திரவமும் அல்லாத ஒரு சாதாரண கிண்டலைக் கூட ஆராய்ந்து அதில் நெருப்பைப் பற்ற வைத்து ஊதுவது சரியானதல்ல.

பிக் பாஸ் விவகாரத்தில் விக்ரமன் சுட்டிக் காட்டியது சரிதான் என்றாலும், ஷிவினைத் தனியாக அழைத்துச் சென்று அவர் செய்த பிழையைச் சொல்லியிருக்கலாம். பொதுவில் சொல்வதன் மூலம் ஷிவினை அவர் குற்றவாளியாக்குகிறார். ‘தன் நண்பரே இப்படிச் செய்கிறாரே’ என்று ஷிவினுக்கும் கோபம் வருகிறது.

பிக் பாஸ் 6, நாள் 8
பிக் பாஸ் 6, நாள் 8

'நாமினேஷன் பிராசஸில் கொலைவெறியுடன் உச்சரிக்கப்பட்ட பெயர்'

திங்கள் என்றால் அதில் செங்கல்லைப் போடுவது பிக் பாஸின் வழக்கம். நாமினேஷன் பிராசஸ். இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தலைவர் முத்துவின் பெயரைச் சொல்ல முடியாது. இதைப் போலவே, ஏற்கெனவே நாமினேஷன் பட்டியலில் இருக்கும் அசிம், மகேஸ்வரி, ராம், தனலக்ஷ்மி ஆகிய நால்வரின் பெயர்களையும் சொல்ல முடியாது.

ரணகள ஆட்டம் ஆரம்பமாகியது. வந்தவர்கள் பெரும்பான்மையாக உச்சரித்த பெயர் விக்ரமன். இதற்கு அடுத்தபடியாக ஷிவின். மற்ற பெயர்கள் கலவையாக வந்தன. அமுதவாணன் போன்றவர்களின் பெயர் ஒருமுறை கூட நாமினேட் ஆகவில்லை.

‘நான்லாம் எங்கே, எப்படி இருக்க வேண்டியவன் தெரியுமா’ என்கிற ரேஞ்சில் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதாலும் இறுக்கமாக இருப்பதாலும் விக்ரமன் பலரின் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. பெரும்பான்மையான சமயங்களில் கோபம், அலங்கார ஆர்வம், தனிமை போன்ற காரணங்களால் ஷிவினையும் பலருக்குப் பிடிக்கவில்லை.

பிக் பாஸ் 6, நாள் 8
பிக் பாஸ் 6, நாள் 8
ஆக முதல் எலிமினேஷன் பிராசஸ் பட்டியலில் இடம் பிடித்த நபர்கள் இவர்கள்தான். விக்ரமன், ஷிவின், சாந்தி, க்வின்சி, நிவாஷினி, ஆயிஷா, ரச்சிதா, ஷெரினா, அசிம், மகேஸ்வரி, ராம் மற்றும் தனலக்ஷ்மி.

'எனக்குப் பாத்திரமே வேண்டாம். ஆளை விடுங்கப்பா...'

எபிசோடு முடியும் நேரத்தில் ஒரு பஞ்சாயத்து. ‘கண்ணைக் கலங்க வைக்கும் பிகரு வேணான்டா. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா’ என்கிற தத்துவப் பாடலை, கார்டன் ஏரியாவில் வெஷல் வாஷிங் டீம் உற்சாகப் பாடிக் கொண்டிருந்தது. அங்குப் புயல் வேகத்தில் வந்த ஆயிஷா, இடி போன்ற குரலில் “கஞ்சி வடிக்கப் பாத்திரம் வேணும். வந்து கழுவிக் கொடுங்க” என்று தன் வழக்கமான பாணியில் அமர்த்தலாகக் கேட்க அஸிமிற்கு எரிச்சல் வந்தது.

“மூணு வேளைதான் நாங்க பாத்திரம் கழுவ முடியும். நீங்க நெனக்கறப்ப எல்லாம் நிமிஷத்திற்கு நிமிஷம் வந்து கழுவித் தர முடியாது" என்று சொன்னது சற்று லாஜிக்காகத்தான் இருந்தது. 'யப்பா சாமி... தெரியாம கேட்டுட்டேன். இனி மேல் கூப்பிட மாட்டேன். எனக்கு சினிமால கூட இனிமே எந்தப் பாத்திரமும் வேணாம்’ என்பது போல் வெறுப்புற்று மன்னிப்பு கேட்டார் ஆயிஷா.

பிக் பாஸ் 6, நாள் 8
பிக் பாஸ் 6, நாள் 8
வீட்டில் கசகசவென்று நெரிசல் அதிகமாக இருப்பதால் இந்த வாரத்திலேயே ‘டபுள் எவிக்ஷன்’ தந்து பிக் பாஸ் ஆச்சர்யப்படுத்தலாம். அல்லது வழக்கத்தின்படி ஒருவர் வெளியேறலாம். அது விக்ரமனாக இருந்தால் ஆச்சர்யமே இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.