Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 80: அண்ணனைக் காண வந்த ஜஸ்வர்யா ராஜேஷ்; அம்மாவைப் பார்த்துக் கதறி அழுத ரச்சிதா!

பிக் பாஸ் 6 நாள் 80

அசிம் கிட்ட கோபம் பிரச்சினை. கதிரவன் ரொம்ப டீஸன்ட்’ என்று தன்னுடைய சகஹவுஸ்மேட்களைப் பற்றி அபிப்ராயம் சொன்னார் ஏடிகே.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 80: அண்ணனைக் காண வந்த ஜஸ்வர்யா ராஜேஷ்; அம்மாவைப் பார்த்துக் கதறி அழுத ரச்சிதா!

அசிம் கிட்ட கோபம் பிரச்சினை. கதிரவன் ரொம்ப டீஸன்ட்’ என்று தன்னுடைய சகஹவுஸ்மேட்களைப் பற்றி அபிப்ராயம் சொன்னார் ஏடிகே.

பிக் பாஸ் 6 நாள் 80
குடும்பத்தினரைச் சந்திக்கும் டாஸ்க், முந்தைய எபிசோடைப் போலவே சுவாரசியமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. அருகிலேயே இருக்கும் போது, அவர்களைத் தினம் தினம் சந்திக்கும் போது, குடும்பத்தின் அருமை தெரிவதில்லை. பிரிவில்தான் அதிகம் தெரிகிறது. பக்கத்தில் இருக்கும்போதே ஒரு விஷயத்தை கொண்டாட ஏன் நமக்கு எப்போதும் தெரிவதில்லை?!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘ஈனா.. மீனா.. டீகா’ என்கிற மகிழ்ச்சிகரமான மனநிலையை ஏற்படுத்தும் பாடலோடு நாள் 80 விடிந்தது. மைனாவை அலங்கோலப்படுத்துவதற்காகவே அவரை அடிக்கடி ஃப்ரீஸில் போடுகிறார் பிக் பாஸ். இந்த முறை மைனாவிற்கு ஒப்பனை செய்து பங்கப்படுத்தியது ரச்சிதா. ஆனால் இதற்கு மைனா ஜாலியாக பழிவாங்கியது சிறப்பு. ரச்சிதாவை ஃப்ரீஸ் ஆகி மைனா ரிலீஸ் ஆனதும்.. ‘இருடி மகளே.. இருக்கு உனக்கு’ என்று கிளம்பிய மைனாவிடம் “ஐ லவ் யூ’ என்று சொல்லி தாஜா செய்ய முயன்றார் ரச்சிதா. இந்தச் சமயத்தில் சரியாக ‘லூப்’ என்று பிக் பாஸ் சொல்ல, யாரும் எதிரில் இல்லாமல் ‘ஐ லவ் யூ’வை மறுபடி மறுபடி ரச்சிதா சொல்ல வேண்டியிருந்தது. (தர்ம சங்கடம்!)

பிக் பாஸ் 6 நாள் 80
பிக் பாஸ் 6 நாள் 80

இந்தச் சமயத்தில் ஏடிகேவை கூப்பிட்டு ரச்சிதாவின் முன் நிறுத்தி குறும்பு செய்தார் மைனா. எனவே வேறுவழியின்றி ஏடிகேவிற்கு ‘ஐ லவ் யூ’ சொல்ல வேண்டிய நிலைமை. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அங்கு கூட்டம் அம்மியது. வரிசை நீண்டது. ‘ஹே.. நான்தாம்ப்பா.. அடுத்தது’ என்று வரிசையில் புகுந்து நின்றார் அமுதவாணன். விட்டால் கேட்டிற்கு வெளியில் இருந்தும் ஆட்கள் வந்திருப்பார்கள். நல்லவேளை.

அம்மாவைப் பார்த்ததும் கை கால் உதறிய ரச்சிதா

‘நான் பார்த்த முதல் முதல் முகம் நீ’ என்கிற பாடல் ஒலிக்க ஆரம்பித்தவுடனே, ரச்சிதாவிற்கு புரிந்து போயிற்று. கண் கலங்கியது, உடல் நடுங்கியது, கை, கால்கள் உதறின. பள்ளித் தலைமையாசிரியை லுக்கில் கம்பீரமாக இருந்த அம்மா (சுசிலா) உள்ளே வந்ததும், டாஸ்க்கை மறந்து அவரைக் கட்டித் தழுவி கண்ணீர் சிந்தினார் ரச்சிதா. கன்னடத்தில் பேசி பரஸ்பரம் அன்பைப் பொழிந்து கொண்டார்கள். உலக திரைப்படம் மாதிரி இதற்கு சப்டைட்டில் எல்லாம் போட்டார்கள். ‘என் மனைவி உங்க ஃபேன்’ என்று விக்ரமனிடம் சொன்னார், கூட வந்திருந்த வருண். ரச்சிதாவின் தம்பி போலிருக்கிறது.

பிக் பாஸ் 6 நாள் 80
பிக் பாஸ் 6 நாள் 80

அம்மாவை இழுத்துக் கொண்டு பெட்ரூம் ஓடிய ரச்சிதா, அவரை படுக்கையில் அமர வைத்து ‘அன்னை மடி மெத்தையடி’ என்கிற பாடல் போல ஆசை ஆசையாக மடியில் படுத்துக் கொண்டார். “நீ சூப்பரா விளையாடறே. இன்னமும் நல்லா விளையாடு’ என்று கன்னடத்தில் உபதேசம் சொன்னார் அம்மா. "நீ நீயாவே இருக்கே.. பெருமையா இருக்கு" என்றார் வருண். பிறகு நடந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் இவர்களுக்கு 150 மதிப்பெண்கள் கிடைத்தன. ரச்சிதாவின் குடும்பம் விடைபெறும் போது "உங்கள் ஓட்டு அமுதவாணனுக்கே.. மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள்" என்று ஜாலியாக வாக்கு சேகரித்தார் அமுதவாணன்.

'டைட்டில் வின்னர் ஆவறதுக்கு ஷிவின் இல்லைன்னா விக்ரமனுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. அமுதவாணன், ரச்சிதா, கதிர் கூட வரிசைல வரலாம்' என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் மைனா. ஆனால் அதில் தன் பெயரை இணைக்கும் உறுதி அவருக்கு வரவில்லை. அவரது கணவர் சொன்னது சரிதான். 'பிக் பாஸ் விளையாட்டுக்கு லாயக்கில்லை'. மெயின் கேட்டின் அருகில் இதைப் பற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மைனாவும் மணிகண்டனும் "இந்தச் செவரு இன்னமும் எத்தனை பேரை காவு வாங்கப் போவுதோ?" என்று சிரித்தார்கள்.

ஜாலியாக நடனம் ஆடிய ஏடிகேவின் அப்பா

'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' பாடலின் ரைட்ஸை விஜய் டிவியிடமிருந்து பிடுங்கினால் நல்லது. அந்தளவு நூற்றாண்டு காலமாக சிடி உடையும் அளவிற்கு போட்டு தேய்க்கிறார்கள். இந்தப் பாடல் ஒலித்த போதே தெரிந்து போயிற்று, யாருடைய 'அப்பாவோ' போகிறார்கள் என்று. அசிமின் தந்தையாக இருக்கலாமா? என்று யாரோ யூகித்தார்கள். ஆனால் வந்தது ஏடிகேவின் பெற்றோர். கனகரத்னம் மற்றும் புவனேஸ்வரி. அதென்னமோ வருகிறவர்கள் எல்லாம் விக்ரமன் மற்றும் ஷிவினிடம் தனிப்பாசம் காட்டுகிறார்கள். 'நல்லா விளையாடறே' என்று அம்மா சொல்ல, 'கோபத்தைக் கொஞ்சம் குறைச்சுக்கோ' என்று சரியான ஆலோசனையை ஏடிகேவிற்கு சொன்னார் அப்பா.

பிக் பாஸ் 6 நாள் 80
பிக் பாஸ் 6 நாள் 80

ஏடிகே வரைந்த ஓவியத்தை, 'வரைபடம்' என்று குறிப்பிட்ட அசிம், 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்' என்கிற குறளையெல்லாம் மனப்பாடமாகச் சொல்லி ஏடிகேவின் பெற்றோர்களை மகிழ்விக்க முயன்றார். அப்பாவிடமிருந்து நல்ல ஷூவை வாங்கி தான் போட்டுக் கொண்டார் ஏடிகே. (நல்ல பிள்ளை!). 'அசிமிற்கு டாஸ்க்ல மட்டும்தான் கோபம் வரும். மத்தபடி சின்னப்புள்ளதான்' என்று சான்றிதழ் தந்த கனகரத்தினம், 'விக்ரமன் சாந்தமா இருக்கற மாதிரி நடிக்கறார்' என்று அடுத்த வாக்கியத்தில் கவிழ்த்து விட்டார். அதைக் கேட்டு விக்ரமன் ஜாலியாக பதற "இல்ல.. பாராட்டைத்தான் அவர் அப்படிச் சொல்றார் போல" என்று அசிம் டக்கென்று ஆதரவு தந்தார்.

லக்ஸரி பட்ஜெட்டில் இவர்களுக்கு முழு மதிப்பெண்களும் கிடைத்தது. அதற்கேற்றாற் மாதிரியான கேள்விகளைக் கேட்டார் பிக் பாஸ். கனகரத்தினத்திற்கு திடீரென ஒரு சந்தேகம். பலருக்கும் இருக்கக்கூடியதுதான். 'பிக் பாஸா பேசறவர் யாரு?' என்று கேட்க "அவரைப் பார்க்க முடியாது. குரல் மட்டும்தான். அதுதானே அழகு?" என்று ஏடிகே சொன்ன பதில் மிகச்சரியானது. “எனக்கு இங்க ரொம்ப பிடிச்சது விக்ரமன்தான். அசிம் கிட்ட கோபம் பிரச்சினை. கதிரவன் ரொம்ப டீஸன்ட்’ என்று தன்னுடைய சகஹவுஸ்மேட்களைப் பற்றி அபிப்ராயம் சொன்னார் ஏடிகே.

பிக் பாஸ் 6 நாள் 80
பிக் பாஸ் 6 நாள் 80

கதிரவனை அழைத்த ஏடிகே, தாளம் போடச் சொல்லி விட்டு, தன் பெற்றோர்களின் பெயர்களை வைத்து பாடல் புனைந்து பாட சூழல் உற்சாகம் அடைந்தது. கனகரத்னம், மைனாவுடன் இணைந்து நடனம் ஆட அனைவரும் ரசித்துப் பார்த்தார்கள். முதியவர்கள் வயதான கெத்துடன் கௌரவமாக ஒதுங்கி நிற்காமல், தங்களின் இயல்பை ஜாலியாக வெளிப்படுத்துவது ஒருவகையான அழகுதானே?! இந்த நோக்கில் கனகரத்னத்தின் நடனம் அருமையாக இருந்தது. ஏடிகேவின் பெற்றோர் கிளம்பும் போது ‘உங்கள் வாக்கு அமுதவாணனுக்கே’ என்று காமெடி செய்தார் அமுது.

வீட்டிற்குள் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

விக்ரமனை பிக் பாஸ் ப்ரீஸ் செய்ய, அவருடைய வாயில் ஆரஞ்சு சுளையை செருகி குறும்பு செய்தார் அமுதவாணன். பிறகு அவரை விதம் விதமாக ஒப்பனை செய்து அழகு பார்த்தார்கள். கண்ணாடி முன் நின்று, வழக்கப்படி பரபரவென்று தலை வாரிய அசிமிடம் ‘லூப்’ என்றார் பிக் பாஸ். எனவே மறுபடி மறுபடி தலை வார வேண்டியிருந்தது. ‘ஏற்கெனவே அவன் அதைத்தான் பண்ணிட்டு இருப்பான்’ என்று சொன்ன கதிரவன் “ரொம்ப வாராதடா. இருக்கிற முடியும் கொட்டிடப் போகுது’ என்று கிண்டலடித்தார். பிக் பாஸ் ரிலீஸ் செய்ததும் ‘யய்யா.. சாமி. இனிமே தலையே வார மாட்டேன்” என்று ஓடினார் அசிம். (அது!)

பிக் பாஸ் 6 நாள் 80
பிக் பாஸ் 6 நாள் 80

‘இது தந்தை பாடும் தாலாட்டு’ என்கிற பாடல் ஒலித்தது. ‘யாருடைய மகனோ’ வரப்போகிறார் என்று யூகிக்க முடிந்தது. அது அசிமா அல்லது மணிகண்டனா? தன் மகனை தூரத்தில் பார்த்ததுமே, தெய்வத் திருமகள் விக்ரம் மாதிரி ஓடிச் சென்று முழங்காலிட்டு கைகளை விரித்து வாரி அணைத்துக் கொண்டார் மணிகண்டன். கூடவே மணியின் மனைவியும் அம்மாவும் வந்திருந்தார்கள். ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் சரியாக அடையாளம் கண்டுபிடித்துச் சொன்னான், மணிகண்டனின் மகன் ஆர்யன். (பிக் பாஸோட தீவிர ரசிகனா இருப்பான் போல!). ‘வருங்கால பிக் பாஸ் ஹவுஸ்மேட்’ என்று யாரோ கிண்டலடித்தார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 80
பிக் பாஸ் 6 நாள் 80

‘ஷோ எப்படி போகுது?’ என்று அமுதவாணன் விசாரிக்க, ‘நான் பார்க்கறதில்லை’ என்று மணியின் மனைவி சோபியா ஜாலியாக பொய் சொல்ல ‘நம்பிட்டோம்’ என்றார் அமுது. பிறகு கன்ஃபெஷன் ரூம் வழியாக ‘சர்ப்ரைஸ் விசிட்’ தந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதனால் சூழலில் உற்சாகம் கூடியது. ‘நீங்க நடிச்ச காக்கா முட்டை படம் ரொம்ப பிடிக்கும்’ என்றார் விக்ரமன். நல்ல தேர்வுதான். ஆனால் ஒரு மாற்றத்திற்கு ஐஸ்வர்யா நடித்த கமர்சியல் படத்தைக் கூடவா அவர் சொல்லக்கூடாது?! மனுஷர் 24 மணி நேரமும் பொலிட்டிக்கல் கரெக்னஸ்ஸூடன் வாழ்கிறார் போல!.

‘இந்த ஷோ பெரிய ஹிட். உங்களுக்கெல்லாம் நிறைய பேன்ஸ் இருக்காங்க’ என்று ஐஸ்வர்யா சொல்ல உற்சாகத்தில் மக்கள் கத்தினார்கள். ‘ஹேட்டர்ஸ்ஸூம் நிறைய இருக்காங்க’ என்று அடுத்த நிமிடமே சொல்லி அந்த உற்சாகத்தில் ஜாலியாக மண்ணைப் போட்டார் ஐஸ்வர்யா. “மணியும் விக்ரமனும் இங்க சண்டை போடற மாதிரி தெரியுது. ஆனா நான் சொல்றேன்.. பாருங்க.. வெளில வந்தப்புறம் அவங்கதான் பெஸ்ட் பிரெண்ட்ஸா இருக்கப் போறாங்க’ என்பது ஐஸ்வர்யாவின் ஆருடம். (அண்ணன் இமேஜை காப்பாத்த டிரை பண்றாரோ?!).

ரச்சிதாவை அழ வைத்த பிக் பாஸ்

“ஏன் நீங்க எல்லோரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட மாட்றீங்க?” என்று முக்கியமான கேள்வியைக் கேட்டார் ஐசு.. ‘அத ரூலா போட்டா.. அத போட நீ யாரு..ன்னு அப்பவும் எங்களுக்குள்ள சண்டை வரும்’ என்று அமுதவாணன் சொன்ன காரணம் ஜாலியானது. பிறகு நடந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் மணிக்கு நூறு மதிப்பெண் கிடைத்தது. ‘ஆர்யன்.. உங்களுக்குப் பிடிச்ச பாட்டுப் போடறேன்.. டான்ஸ் ஆடறீங்களா?’ என்று பிக் பாஸ் தனியான பாசத்தைக் காட்டி, ‘வாத்தி கம்மிங்’ பாடலை ஒலிக்க விட, மணியின் அம்மா முதற்கொண்டு எல்லோருமே ஆடியது சுவாரசியமான காட்சி. பிறகு மணியை தனியாக ஓரங்கட்டிய சோபியா, “நீ நிறையப் பேசியிருக்கணும். இனியாவது பேசு. வெளில எப்படித் தெரியும்ன்னுலாம் கவலைப்படாதே’ என்று உபதேசித்தார். (மனைவி சொல்லே மந்திரம்!).

பிக் பாஸ் 6 நாள் 80
பிக் பாஸ் 6 நாள் 80

மணியின் குடும்பத்தினரை வழியனுப்பிய மக்கள், பழக்க தோஷத்தில் உறைந்து நிற்க “ஏன் நிக்கறீங்க?” என்று நக்கலாக கேட்டார் பிக் பாஸ். ‘நீங்க ரிலீஸ்ன்னு சொல்லலையே.. முதலாளி..’ என்று இவர்கள் சொல்ல ‘க்கும்.. நீங்க எந்தக் காலத்துலடா ஒழுங்கா ஃப்ரீஸ்ல நின்னிருக்கீங்க.. சொந்தக்காரங்க வந்தவுடனே கயித்தை அவுத்துக்கிட்டு ஓடற கன்னுக்குட்டி மாதிரில டாஸ்க்கை கடாசிட்டு ஓடறீங்க?! என்பது அவரின் அலுப்பாக இருக்கும்.

அறுபதுகளின் நாயகி கேரக்ட்டரை ரச்சிதாவிற்கு தந்தாலும் தந்தார்கள். இப்போதெல்லாம் அடிக்கடி அழ ஆரம்பித்து விடுகிறார். மற்றவர்களுக்கு எல்லாம் அவர்களின் உருவங்களும் வாசகங்களும் போட்ட டீஷர்ட் வந்திருந்தன. RAPMACHINE என்று போட்ட டீஷர்ட் ஏடிகேவிற்கு வர “என்னை விட பெரிய இசைக்கலைஞர்கள் எல்லாம் இருக்காங்க” என்று தன்னடக்கத்துடன் சொல்லி வாங்கிக் கொண்டார். ‘தக் லைஃப் தலைவரே’ போட்ட வாசகம் அசிமிற்கு கிடைத்ததால் அவர் குஷி. மணிக்கு இரண்டு டீஷர்ட்கள் கிடைத்தன. ரச்சிதாவிற்கு மட்டும் எதுவும் வராததால் குழந்தை மாதிரி சிணுங்கி அழுதார். ‘மூக்குத்தி கோப்பால்’ன்னு போட்டு வரும்’ என்று மைனா கிண்டலடிக்க ‘ச்சீ.. அப்படில்லாம் வராது’ என்று சீறினார் ரச்சிதா. (அப்ப மாஸ்டரோட கதி!).

பிக் பாஸ் 6 நாள் 80
பிக் பாஸ் 6 நாள் 80
மற்றவர்களுக்கு எல்லாம் டீஷர்ட் தந்த பிக் பாஸ், ரச்சிதாவிற்கு மட்டும் தராமல் அழ வைத்த கொடுமை ஏன்? இந்த அநீதி எதனால் நிகழ்ந்தது?.. THE NATION WANTS TO KNOW.... ஐ.நா. சபை இந்தப் பிரச்சினையில் தலையிடுமா?! இணைப்பில் தொடர்ந்து இருங்கள். விவாதிப்போம்.