Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 81: ‘அறம் வெல்லும்’– நெகிழ்ந்த விக்ரமனின் அம்மா; கதிரவனின் தோழி ஸ்நேகாவின் என்ட்ரி!

பிக் பாஸ் 6 நாள் 81

எதிர்பாராமல் அவரை அங்கே பார்த்ததும் கதிரவனின் முகத்தில் தெரிந்த உணர்வை இன்னொரு முறை பாருங்கள். இதனால்தான் சொல்கிறேன், ஒருவகையில் பிக் பாஸ் ஷோ, ‘ஸ்கிரிப்ட்டட்’ கிடையாது.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 81: ‘அறம் வெல்லும்’– நெகிழ்ந்த விக்ரமனின் அம்மா; கதிரவனின் தோழி ஸ்நேகாவின் என்ட்ரி!

எதிர்பாராமல் அவரை அங்கே பார்த்ததும் கதிரவனின் முகத்தில் தெரிந்த உணர்வை இன்னொரு முறை பாருங்கள். இதனால்தான் சொல்கிறேன், ஒருவகையில் பிக் பாஸ் ஷோ, ‘ஸ்கிரிப்ட்டட்’ கிடையாது.

பிக் பாஸ் 6 நாள் 81
நுண்ணுணர்வு என்கிற சொல் தமிழில் உண்டு. ஒருவரின் உணர்வுகளை மிக நுட்பமாகப் புரிந்து கொள்ளும் திறன் உடையவரை ‘நுண்ணுணர்வு’ உள்ளவர் என்று சொல்லலாம். இந்த எபிசோடில் ஷிவினின் ரகசிய சோகத்தை விக்ரமன் அணுகியதற்கும் அமுதவாணன் அணுகியதற்கும் பெருமளவு வித்தியாசம் இருந்ததைக் கவனித்தீர்களா? இந்த வித்தியாசம்தான் நுண்ணுணர்வு.

ஒரு தனிநபர் சமூகத்தில் சிறப்பாக இயங்குவதற்கு பெற்றோர்களின் வளர்ப்பும் ஒரு முக்கியக் காரணம். இந்த நோக்கில் விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும் என்பதற்கான உதாரணங்கள் நேற்றைய எபிசோடில் இருந்தன.

பிக் பாஸ் 6 நாள் 81
பிக் பாஸ் 6 நாள் 81


மறுபடியும் அதேதான். பிக் பாஸ் என்பது டாஸ்க்கில் இறங்கி வீராவேசமாக வெல்வதோ, ஆக்ரோஷமாக செயல்படுவதோ அல்ல. தன்னுடைய அன்பின் மூலம் சக மனிதர்களின் பிரியத்தைச் சம்பாதிப்பதுதான் உண்மையான வெற்றி. அதற்குரிய சகிப்புத்தன்மையும் நாகரிகமும் ஒருவருக்கு வேண்டும். இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு தனிநபர் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? போட்டியாளர்களின் சர்ச்சைகளை வைத்து வம்பு பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர, கண்ணாடியை உள்நோக்கித் திருப்பிப் பார்ப்பதில்லை.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘ஆயிரம் சன்னல் வீடு’ என்கிற பாடலுடன் நாள் 81 விடிந்தது. பட்டுப்பாவாடை, தாவணியுடன் ஸ்பெஷல் தோற்றத்தில் இருந்தார் ஷிவின். காரணம்?! கதிரவனின் பெற்றோர் வருகையா? கதிரவன் பாத்ரூமிற்குள் இருக்கும் போது வெளியில் தாழ்ப்பாள் போட்டு ஷிவின் குறும்பு செய்தார். மைனா ஃப்ரீஸ் செய்யப்படும் போதெல்லாம் அவரை அலங்கோலமாக்கிப் பார்ப்பதை மற்றவர்கள் பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்கள். இந்த முறை சூன்யக்காரப் பொம்மை போல் அவரை ஆக்கி அழகு பார்த்தார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 81
பிக் பாஸ் 6 நாள் 81

‘அன்புள்ள அப்பா’.. என்கிற பாடல் ஒலித்ததும் விக்ரமனின் முகத்தில் தன்னிச்சையாக புன்னகை வந்தது. அவருக்குப் புரிந்து விட்டது. ஏறத்தாழ விக்ரமனின் அதே ஜாடையில் உள்ளே வந்தார் அவரது அப்பா. கூடவே விக்ரமனின் அம்மா. உறைந்த நிலையில் இருந்து அசையாமல் கடமை வீரராக இருந்த விக்ரமன், ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அசைந்து தன் பெற்றோர்களைக் கண்டு மலர்ந்தார். ஒருவரை கட்டிப்பிடித்து வரவேற்கும் கலாசாரம், மிடில் கிளாஸ் சமூகத்திடம் கிடையாது. எனவே அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றார் விக்ரமன். அவருடைய அம்மாவின் கண்களில் நீர். கதிரவன் ஓடோடி வந்து காலில் விழுந்து வணங்கினார். ரிலீஸ் செய்யப்பட்ட மற்றவர்களும் முகமலர்ச்சியுடன் விக்ரமனின் பெற்றோர்களை வரவேற்றார்கள்.

‘அறம் வெல்லும்’ – விக்ரமனின் அம்மா மகிழ்ச்சி

தனிப்பட்ட உரையாடலில் ‘கமல் பாராட்டும் போதெல்லாம் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். நீ எங்களுக்கு கடிதம் எழுதியிருந்தால் கூட இத்தனை மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டோம். நீ செய்தது பெரிய விஷயம். இன்னும் கொஞ்சம் ஜாலியா இரு. யார் எது சொன்னாலும் கவலைப்படாதே. ‘அறம் வெல்லும்’ டீஷர்ட் உனக்கு வந்தது மிகப் பொருத்தமானது. பதிலுக்கு கமல் எழுதிய கடிதமும் வேற லெவல்’ என்று பெற்றோர்கள் பாராட்டுவதை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த விக்ரமன் “அந்தக் கடிதம் ஒளிபரப்பாவும்ன்னு நெனக்கல’ என்று சொல்லியதில் அரசியல் அர்த்தம் நிறைய இருந்தது. பிறகு வெளியே வந்த இவர்கள் மற்ற போட்டியாளர்களை பாராட்டினார்கள்.

விக்ரமனின் பெற்றோர் கிளம்பும் போது வழக்கம் போல் அமுதவாணன் தன்னுடைய சூறாவளி பிரசாரத்தை மேற்கொள்ள ‘கேப்டன் நீங்களே இப்படிப் பண்ணா.. எப்படி?’ என்று கிண்டலடித்த பிக் பாஸ், மற்றவர்களை மட்டும் ரிலீஸ் செய்து அமுதவாணனை அப்படியே நிற்க வைத்தது, ஜாலியான தண்டனை.  

பிக் பாஸ் 6 நாள் 81
பிக் பாஸ் 6 நாள் 81

திடீரென்று எண்பதுகளின் ராஜா பாட்டை யாரோ ஹம்மிங் செய்யும் ஒலி கேட்டது. ஹவுஸ்மேட்ஸ்களில் யாரும் இத்தனை இனிமையாக பாட மாட்டார்களே என்கிற வியப்பு நமக்குள் எழுந்தது. ஆனால் அந்த ஒலி ஸ்பீக்கரில் வருகிறது என்பதை பிறகுதான் உணர முடிந்தது. ‘கதிர் அம்மா... கதிர் அம்மா...’ என்று பேய்ப்படத்தில் வருவது போன்ற எக்ஸ்பிரஷனுடன் அலறினார் ரச்சிதா. ஷிவின் உடனே ஓடி ஒளிந்து கொண்டது ஒரு கவிதையான காட்சி.

உற்சாகப் புயலாக நுழைந்த கதிரவனின் அம்மா

வாவ்! ஆயிரம் சொல்லுங்கள்.. எண்பதுகளின் ராஜா இசையை அந்த சமகாலத்திலேயே ரசித்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இன்றும் கூட அந்தப் பாடல்கள் மேலதிகமாக ருசிக்கின்றன. ஆரம்ப இசைத் துணுக்கை கேட்ட அடுத்த கணமே நம் உடல் புல்லரிக்கிறது. இப்போதும் அதே உணர்வு. அம்மாவின் குரலை ஸ்பீக்கரின் வழியாக கேட்கக் கேட்க சந்தோஷமடைந்தார் கதிரவன். ஒரு சமயத்தில் பாடலின் இடையிசையை அவர் வாயால் சத்தம் தந்த மொமன்ட் இருக்கிறதே?! க்யூட். இளையராஜா என்கிற மகத்தான இசைக்கலைஞனை நோக்கி மனம் தன்னிச்சையாக கும்பிட்டது. எப்படிப்பட்டதொரு இசையை வழங்கியிருக்கிறார்!

உள்ளே நுழைந்த கதிரவனின் அம்மா கோமதி, புயல் வேகத்தில் அனைவரையும் கடகடவென்று விசாரித்தார். ஓர் அமைதியான சூழலில் சிலர் நுழைந்ததும் அந்த இடமே தலைகீழாக மாறி விடும். அப்படியாக இருந்தது அவரின் உற்சாகம் ததும்பும் உடல்மொழி. இதற்கு முற்றிலும் எதிர்மாறாக இருந்தார் கதிரவனின் அப்பா கபிலன். தாமரை இலை தண்ணீர் போல பட்டும் படாமல் இருந்தார். ‘உங்கள் நேரம் முடிந்து விட்டது’ என்று பிக் பாஸ் சொன்ன போது ‘எப்போதடா கிளம்புவோம்’ என்பது மாதிரி எழுந்தார். இம்மாதிரியான எதிர்முரண் குணாதிசயங்களைக் கொண்ட தம்பதிகளின் வாழ்க்கை, பொதுவாக சிறப்பாக இருக்கும்.

பிக் பாஸ் 6 நாள் 81
பிக் பாஸ் 6 நாள் 81

ஒவ்வொருவரையும் பாய்ந்து அணைத்த கோமதி, ஷிவினின் முறை வரும் போது ‘என்னோட பொண்ணு’ என்று சொல்லியபடி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். இதற்கு முன்புதான் கதிரவனையும் ஷிவினையும் அண்ணன் –தங்கையாக வைத்து பாட்டுப்பாடி  மற்றவர்கள் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். அதை வழிமொழிவது போல் கோமதி சொன்னதும் அமுதவாணன் உள்ளிட்டவர்களுக்கு பயங்கர ஜாலி. ஆனால் ஷிவினின் முகம் மாறி கண்கள் கலங்கியதை எப்படியோ சமாளித்துக் கொண்டார். இதற்கும் கூடுதலான பல நெருப்பு நிமிடங்களை அவர் அடுத்த சில நிமிடங்களில் கடக்கவிருக்கிறார் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்காது.

‘ஜென் மோடில் இருந்த கதிரவனின் அப்பா

“ஆத்திச்சூடி பாட்டை நீ பாடினவுடன் வீட்டில் அப்படி சிரிச்சோம்" என்ற கோமதி, ‘நெஜம்மாவே பாடினியா. தமாஷ் பண்ணியா?’ என்று கேட்க ‘நல்ல சோறே கிடையாதும்மா. பசில மைண்ட் வேலை செய்யலை’ என்றார் கதிரவன். ‘ஸ்கூல் டாஸ்க்ல ரெட்டைக்குடுமி போட்டுட்டு பொண்ணு மாதிரியே இருந்தான். ஷிவினும் இவனும் ஒரே மாதிரி இருந்தாங்க’ என்றெல்லாம் கோமதி இயல்பாக கிண்டல் செய்ய, ஷிவினுக்குள் தவிப்பு அதிகமாகியிருக்கக்கூடும். ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே..’ பாடலை கோமதி ஆரம்பிக்க, பின்னணி இசையோடு அதை கதிரவன் தொடர்ந்து பாடியது, இன்னொரு க்யூட் மொமன்ட். (ஐயா.. ராசாவே..!)

பிக் பாஸ் 6 நாள் 81
பிக் பாஸ் 6 நாள் 81

தனிப்பட்ட உரையாடலின் போது ‘எல்லோரும் உனக்கு நண்பர்கள்தான். ஆனா போட்டியாளர்கள். ரேங்கிங் டாஸ்க்ல உன் இடத்திற்கு நீ போராடியிருக்கணும்.’ என்று அம்மா உபதேசம் சொல்ல, பெண்களுடன் ஷாப்பிங் செய்ய வந்த அப்பா, துணிக்கடையின் வாசலில் கடிகாரத்தைப் பார்த்தபடி சகித்துக் கொண்டு அமர்ந்திருப்பது போலவே கதிரவனின் அப்பா அமர்ந்திருந்தார்.

இந்தச் சமயத்தில்தான் ஒரு ரொமான்டிக் டிராமா நடந்தது. அதை டிராஜிக் என்று சொல்வதா, மேஜிக் என்று சொல்வதா என்று குழப்பம். ஷவினுக்கு டிராஜிக். கதிரவனுக்கு மேஜிக். ‘காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன்’ என்பது, சற்று முன்பாக அவர் அம்மாவுடன் இணைந்து பாடிய பாடலில் உள்ள ஒரு வரி. அது அடுத்த நிமிடங்களிலேயே சாத்தியமாகப் போகிறது என்பதை கதிரவன் யூகித்திருக்க மாட்டார்.

கதிரவனின் மகிழ்ச்சி – ஷிவினின் அதிர்ச்சி –ஸ்நேகா எண்ட்ரி

‘பேட்டரி மாத்தணும்’ என்கிற பெயரில் கதிரவனை கன்ஃபெஷன் ரூமிற்கு வரவழைத்தார் பிக் பாஸ். அங்கு கதிரவனுக்கு ஓர் இனிமையான வெடிகுண்டு காத்திருந்தது. ஆம், உள்ளே இருந்தது, கதிரவனின் ‘நண்பரான’ ஸ்நேகா. எதிர்பாராமல் அவரை அங்கே பார்த்ததும் கதிரவனின் முகத்தில் தெரிந்த உணர்வை இன்னொரு முறை பாருங்கள். இதனால்தான் சொல்கிறேன், ஒருவகையில் பிக் பாஸ் ஷோ, ‘ஸ்கிரிப்ட்டட்’ கிடையாது. கதிரவனின் முகத்தில் அந்த அசலான இன்ப அதிர்ச்சியை, உலகத்தின் எந்தவொரு சிறந்த நடிகனும் தன் நடிப்பில் கொண்டு வரவே முடியாது.

பிக் பாஸ் 6 நாள் 81
பிக் பாஸ் 6 நாள் 81

முதலில் திகைத்து, பிறகு கண்கசிய, பெருமகிழ்ச்சியுடன் ஸ்நேகாவை அரவணைத்துக் கொண்டார் கதிரவன். பிக் பாஸ் ஷோவில் எந்தவொரு காட்சியையும் – குறும்படம் தவிர – இரண்டு கோணங்களில் காட்ட மாட்டார்கள். காட்டுவதற்கு இடமும் இருக்காது. ஆனால் கதிரவன் ஷாக் ஆனதை இரண்டு கோணங்களில் காட்டியது பிக் பாஸ் டீம். ஏனெனில் அது மிக அபூர்வமான காட்சி. காமிரா இருப்பதை மறந்து கதிரவன் கட்டியணைத்துக் கொள்ள, ஸ்நேகா இந்தச் சூழலை சாமர்த்தியமாகக் கையாண்டார். அவருக்கு கதிரவனின் உணர்ச்சிப் பெருக்கு புரிகிறது. அவருமே அந்த நிலையில்தான் இருக்கிறார். என்றாலும் மிக இயல்பாக கதிரவனை வெளியே நகர்த்திச் சென்றார். இது போன்ற விஷயங்களில் பெண்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. எமோஷனை அப்படி நுட்பமாகக் கையாள்வார்கள்.

“இதை நான் எதிர்பார்க்கலை” என்று உணர்ச்சிப்பெருக்கில் கதிரவன் கண்கலங்க “எதிர்பார்க்கலைல்ல..’ என்று பிக் பாஸூம் கத்தியிருந்தால் மேட்ச் ஆகியிருக்கும். கதிரவன் மற்றும் ஸ்நேகா ஆகிய இருவரின் முகபாவங்களைப் பார்த்து மற்றவர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் ஒரு முகத்தில் மட்டும் அதிர்ச்சியும் திகைப்பும் தென்பட்டது. அது ஷிவின். காரணத்தை அதிகம் சொல்லத் தேவையில்லை. ‘அவ என் பிரெண்டுடா’ என்று பிறகு கதிரவன் சொன்னாலும், இருவரின் உடல்மொழியுமே என்ன மாதிரியான உறவு என்பதைக் காட்டிக்கொடுத்து விட்டது. இவர்களை தனியே விட்டு விட்டு மற்றவர்கள் வெளியே சென்றார்கள். “நீங்களும் இருங்க” என்று கதிரவனின் அம்மாவிடம் ஸ்நேகா கேட்டுக் கொண்டார். (பொழக்கத் தெரிஞ்ச புள்ள!)

கதிரவனும் அவரது அம்மாவும் ஆடிய டான்ஸ்

ஆனால் மற்றவர்களின் கூடவே வெளியே வந்த  கதிரவனின் அப்பா, “ஏதோ கதை ஓடுது” என்று அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாமல் சொன்னதற்கு கூட இருந்தவர்கள் சிரித்தார்கள். பிறகு கதிரவனை அழைத்து உபதேசம் செய்தார் ஸ்நேகா. அதேதான். “ரேங்கிங் டாஸ்க்கல விட்டுத் தந்திருக்கக்கூடாது. மத்தவங்க சத்தத்துல உன் குரல் இன்னமும் அமுங்கிப் போயிடுது. நல்லா விளையாடு.. etc., etc., “கதிர்.. உங்க அம்மா உனக்கு டான்ஸ் கத்துக் குடுத்ததா சொன்னீங்களா?” என்று அவர்கள் நடனமாடுவதற்கு தூண்டிய பிக் பாஸ், ‘சென்னை செந்தமிழ் மறந்தேன்’ என்கிற அட்டகாசமான பாடலை ஒலிக்க விட, கதிரவனும் அவரது அம்மாவும் இணைந்து ஆடியது நிச்சயம் பார்க்க தவற விடக்கூடாத ‘க்யூட்’ மொமன்ட். அந்த வீட்டின் மனநிலையே ஒட்டுமொத்தமாக மாறியது பிறகு கதிரவனின் கூட ஸ்நேகாவும் இணைந்து நன்றாக ஆடினார்.

பிக் பாஸ் 6 நாள் 81
பிக் பாஸ் 6 நாள் 81

‘எப்ப இந்தக் கூத்தெல்லாம் முடியும்?’ என்கிற ஜென் மோடில் வெளியே அமர்ந்திருந்த கதிரவனின் அப்பா, ‘உங்கள் நேரம் முடிகிறது’ என்று பிக் பாஸ் அறிவித்ததும் ‘ஹப்பாடா.. கிளம்பலாம்டா சாமி..’ என்று உடனே எழுந்து விட்டார். புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி அவர்கள் கிளம்பினார்கள். கதிரவனின் அப்பா முதலில் வெளியே நகர்ந்தார். ‘வந்தது யாரு மச்சான்..?” என்கிற குறுகுறுப்பு அனைவருக்கும் இருந்திருக்கும். ‘அவ என் பிரெண்டுடா” என்று கதிரவன் புன்னகையுடன் சொல்ல “நம்பிட்டோம்’ என்கிற மாதிரி மற்றவர்கள் சிரித்தார்கள்.

‘ஸ்நேகா திட்டமிட்டே உள்ளே வந்தாரா?’

“உங்க அம்மாவும் அப்பாவும் இன்வைட் பண்ணாங்க..” என்று கதிரவனிடம் ஸ்நேகா சொன்னது, ‘என் டாட்டர்’ என்று ஷிவினுக்கு கதிரவனின் அம்மா முத்தம் தந்தது, என்று எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஸ்நேகா திட்டமிட்டே பிக் பாஸ் வீட்டிற்குள் கதிரவனின் அம்மாவால் அழைத்து வர வைக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கத் தோன்றுகிறது. அது நிச்சயம் தவறான திட்டமிடுதல் அல்ல. ஷிவினுக்கு அவர் ‘செய்தி’ சொல்ல விரும்பியிருக்கலாம். ‘ஹே.. பிரெண்டாம்டா.. அப்ப ஷிவினுக்கு சான்ஸ் இருக்கு’ என்று மைனா கிண்டலடித்தார். இப்படி உசுப்பேற்றி.. உசுப்பேற்றியே...

பிக் பாஸ் 6 நாள் 81
பிக் பாஸ் 6 நாள் 81

பிறகு ஆரம்பித்தது அமுதவாணனின் லூட்டி. அவர் செய்தது ஒரு பக்கம் காமெடியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கடுமையான எரிச்சலை வரவழைத்தது. நகைச்சுவைதான் அமுதவாணனின் ஆயுதம். அதை வைத்து ஷிவினின் சோகத்தைப் போக்க வைப்பதற்குக் கூட அவர் காமெடி செய்திருக்கலாம். ஆனால் அது ஓவர் டோஸாக சென்று போய் விட்டதுதான் சோகம். “அவங்களை தனியா விடுங்க. அமுதவாணன். இங்க வாங்க. நாம பேசலாம்.. அவங்க.. அவங்க உணர்ச்சிகளை ஹாண்டில் பண்ண அவங்க அவங்களுக்குத் தெரியும்.. விட்டுருங்க..’ என்று விக்ரமன் திரும்பத் திரும்ப ஆட்சேபம் சொன்னதிற்குப் பெயர்தான் ‘நாகரிகம்’. ஆனால் அமுதவாணன் அடங்கவில்லை. ‘கன்டென்ட்’ அமுதவாணன்’ என்று ஏடிகே கிண்டல் அடிக்குமளவிற்கு கொட்டம் அடித்தார். சமயங்களில் ஏடிகேவும் இணைந்து கொண்டார்.

அமுதவாணனின் ‘காமெடி’ அட்ராசிட்டி

‘நீங்க ஓகேவா..?' என்று ஷிவினிடம் மிக நாகரிகமாக விசாரித்தார் விக்ரமன். “அவங்க past-ஐ பத்தி சொன்னாங்க... முன்ன ஒரு உறவு இருந்துச்சாம். இதப்பத்தி சொல்லல பெஸ்ட் பிரெண்டுன்னு சொல்றாரு” என்று நிராசை பொங்கி வழியும் குரலில் சொன்னார் ஷிவின். இது நிகழப் போகாத உறவு என்பது ஷிவினுக்குத் தெரியும். என்றாலும் ‘காதல் ஆசை யாரை விட்டதோ?’ ‘எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு.. அவங்களுக்கும் வெளில ஒரு வாழ்க்கை இருக்கு. அதிகமா கிண்டல் பண்ணி எதையும் பதிவு செஞ்சு வெக்காதீங்க” என்று அமுதவாணனிடம் ஜாலியாக எச்சரித்துக் கொண்டேயிருந்தார் ஷிவின்.

‘கண்ணே கலைமானே..’ பாடலையெல்லாம் பாடி ஷிவினை தனியாகச் சென்று அழ வைத்தார் அமுதவாணன். “கோவப்படற மாதிரி அவர் காமெடி செய்தாலும்” இன்னொரு சமயத்தில் அமுதவாணன் சொனன உபதேசம் சரியானது. “அது.. இங்கயே ரொம்ப நாள் அடைப்பா இருக்கமா.. அதான். வெளில போய் வேற முகங்களைப் பார்த்தா சரியாயிடும்” என்று அவர் சொன்னது நிச்சயம் ஒரு சரியான வழி.

பிக் பாஸ் 6 நாள் 81
பிக் பாஸ் 6 நாள் 81

அமுதவாணன் ஃப்ரீஸ் ஆக, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மைதா மாவை மேலே பூசினார் ரச்சிதா. ‘ஃபாஸ்ட் பார்வோ்ட்’ என்று பிக் பாஸ் குறும்பு செய்ய வேகம் வேகமாக மாவு பூசப்பட்டது. பிறகு ரச்சிதாவை வீடெங்கும் அமுதவாணன் துரத்திச் சென்றது ஜாலியான காட்சி. சந்தடி சாக்கில் விக்ரமனின் முகத்திலும் மாவை பூசி விட்டார் அமுது.

‘எல்லோரும் ஃப்ரீஸ்’ என்றாலும் அதிகம் வியர்த்துக் கொட்டியதால் அவசரம் அவசரமாக வீட்டிற்குள் ஓடினார் அசிம். ‘மன்னிச்சூ பிக் பாஸ்” என்று அவர் சொன்ன சமயத்தில் ‘லூப்’ என்று சொல்லி அதிக மன்னிப்பை பிக் பாஸ் வாங்கிக் கொண்டது புத்திசாலித்தனம். இதைப் பயன்படுத்திக் கொண்டு அசிமின் தலையில் கிரீமைக் கொட்டினார் நண்பர். அசிமின் அதே ஜாடையில் உயரமாக இருந்த தம்பி அதிகம் பேசவில்லை. “கோவத்தை மட்டும் கம்மி பண்ணிக்கோ. மத்தபடி சூப்பரா விளையாடறே” என்று அவர்கள் உபதேசம் செய்ய “எனக்கும் விக்ரமனுக்கும் நடக்கற சண்டை எப்படி தெரியுது?” என்று அசிம் கேட்ட போதே அதற்கு எத்தனை முக்கியத்துவம் தந்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் வெளியில் “நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை’ என்பது போல்தான் வீறாப்பாக சொல்லுவார்.

பிக் பாஸ் 6 நாள் 81
பிக் பாஸ் 6 நாள் 81

அசிமை நீச்சல் குளத்தில் தள்ளி நண்பர்கள் குறும்பு செய்து பிறகு விடைபெற்றுக் கொண்டதோடு ‘இந்த டாஸ்க் முடிவதாக’ பிக் பாஸ் அறிவித்தார். தங்களின் குடும்பத்தாரைச் சந்திக்க வைத்த அவருக்கு மக்கள் கோரஸாக நன்றி சொன்னார்கள். ‘என்ன இருந்தாலும் அமுதவாணன், ஷிவினை ரொம்ப கலாட்டா பண்ணியிருக்கக்கூடாது’ என்று ஏடிகேவும் விக்ரமனும் பேசிக் கொண்டதோடு எபிசோட் நிறைந்தது. ‘பாவம் ஷிவின்’ என்று மனதால் மட்டுமே நம்மால் பெருமூச்சு விட முடிகிறது.