Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 83: என்னை அப்படி கூப்படாதீங்க எச்சரித்த அசிம்; எவிக்ஷனில் வெளியேறப்போவது யார்?

பிக் பாஸ்

“ரொம்ப போராடினீங்க போல. ஆனா மத்தவங்களுக்கு இருந்த சலுகை உங்களுக்கு இல்லாமப் போச்சு. நாமினேஷன்ல இருந்து விலக்கு இல்ல” என்று நமட்டுச் சிரிப்புடன் கமல் சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 83: என்னை அப்படி கூப்படாதீங்க எச்சரித்த அசிம்; எவிக்ஷனில் வெளியேறப்போவது யார்?

“ரொம்ப போராடினீங்க போல. ஆனா மத்தவங்களுக்கு இருந்த சலுகை உங்களுக்கு இல்லாமப் போச்சு. நாமினேஷன்ல இருந்து விலக்கு இல்ல” என்று நமட்டுச் சிரிப்புடன் கமல் சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள்.

பிக் பாஸ்
‘மூச்சு விடாமல் ஒரு மணி நேரத்திற்கு பேசினாலும அசிம் பேசுவதில் பாயிண்ட்டே இருக்காது’ என்று நேற்றைய கட்டுரையில் எழுதியிருந்தேன். இந்த எபிசோடில் அசிமாக நடிப்பதற்கு ஷிவினுக்கு வாய்ப்பு கிடைத்த போது, ‘இந்த விஷயத்தை’ மிகத் திறமையாக வெளிக்கொணர்ந்தார். ஒருவகையில் அசிமின் உள்ளீடற்ற வாதத்திறமையை ஷவின் அம்பலப்படுத்தி விட்டார் என்றே சொல்லலாம்.

அது கடுமையான விமர்சனமாகவே இருந்தாலும் நகைச்சுவையின் மூலம் வைக்கும் போது எதிராளியும் ஒப்புக் கொள்வார் என்பதற்கு ஷிவினின் ‘ஆக்ட்’ ஒரு நல்ல உதாரணம். ‘செம.. செம..’ என்று அசிமே இதற்கு சிரிக்க வேண்டியதாக இருந்தது. இதைப் போலவே கதிரவனாக நடித்த ஏடிகேவின் ஃபர்மான்ஸ்ஸூம் அருமை. பிய்த்து உதறி விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

பண்டிகைக் கால துணி விளம்பரங்களில் வரும் மாடல் போல, பளபளப்பான உடையில் வசீகரமாக வந்து நின்றார் கமல். வேங்கை வயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்வதற்கு நீண்ட காலமாக தடை இருந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகிய இருவரின் பெரும் முயற்சியால் இந்தத் தடை உடைக்கப்பட்டு, அவர்கள் கோயிலுக்குள் சாமி கும்பிட அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

கமல்
கமல்

இந்த சமீபத்திய நிகழ்வை மேற்கோள் காட்டிய கமல் “சுதந்திரம் அடைந்து இன்றும் கூட ‘ஆலயப் பிரவேசம்’ நடத்துகிற அவல நிலையில் இருக்கிறோம். அந்த இரு வீர மங்கையரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாரதி கண்ட புதுமைப்பெண்கள்...அவர்கள்” என்று சம்பந்தப்பட்ட இரு அரசு அதிகாரிகளையும் மனமார பாராட்டினார்.

மிக்ஸி விளம்பரத்திற்காகவே வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டுகிறார்கள் போல. தலைவரான மணிகண்டன் கதிரவனுக்கு மிக்ஸியைத் தந்து மகிழ்ந்தார். அதென்னமோ, அந்தப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் மிக்ஸிதான் வருகிறது.

‘கிட்னி கல்.. உங்கள் ஆரோக்கியத்தில் ஒரு மைல் கல்’

அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்த கமல், புதிய கேப்டன் அமுதவாணனை வாழ்த்தி விட்டு, உடல் நலமில்லாமல் இருந்த ஏடிகேவின் நலனை விசாரித்து விட்டு ‘உங்கள் ஆரோக்கியத்தில் இது ஒரு மைல் கல்’ என்று அவரது சிறுநீரகக் கல்லை வைத்து வார்த்தை விளையாட்டு செய்தார். (‘என் நோயை வெச்சு கிண்டல் பண்ணாதீங்க..ப்ளீஸ்’ என்று ஏடிகே ஆட்சேபிக்கவில்லை).

“உங்க வீட்டுல இருந்துல்லாம் வந்துட்டு போனாங்க. சந்தோஷம். யார் யாருக்கெல்லாம் வீட்டு ஞாபகம் வந்துடுச்சு.. வீட்டுக்குப் போகலாம்ன்னு தோணிடுச்சு?” என்று சென்டிமென்ட் ஏரியாவை தொட ஆரம்பித்தார் கமல். ‘எனக்கு ஆட்டத்துல புது உத்வேகம் வந்தது’ என்று மைனாவும் அசிமும் சொன்னார்கள். ஏடிகே தந்தையின் உற்சாகத்தைப் பாராட்டிய கமல் ‘தந்தையாரின் மறுபிரதி’ என்று அவரைச் சொல்ல ஏடிகேவின் முகத்தில் மகிழ்ச்சி. ‘நான் ஆட்சில இருந்த போது எங்க வீட்டம்மா வந்தது ஹாப்பி..’ என்று அமுதவாணன் சொல்ல, அவரின் மகன் செய்த ‘மிமிக்ரி’யை பிரத்யேகமாக குறிப்பிட்டு பாராட்டினார் கமல். போலவே மகன்களுக்கு சூட்டப்பட்ட தமிழ்ப் பெயர்களையும். “என் குடும்பத்தை இதுவரைக்கும் நான் எக்ஸ்போஸ் பண்ணதில்லை” என்று விக்ரமன் சொல்ல ‘நான் எழுதின கடிதத்தை உங்கள் தந்தையார் பாராட்டியதில் எனக்குப் பெருமை’ என்று நெகிழ்ந்தார் கமல்.

விக்ரமன்
விக்ரமன்

இப்படி கேள்வி கேட்டும் கூட ‘சென்டிமென்ட் பகுதி’ சரியாக வொர்க்அவுட் ஆகவில்லையென்பதால், “யார் வருவாங்கன்னு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைஞ்சீங்க?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் கமல். இது சற்று வேலை செய்தது. “எங்க அம்மா..அப்பா வரமாட்டாங்கன்னு தெரியும்.. இருந்தாலும்..” என்று ஷிவின் கண்கலங்க “இந்தப் படிக்கட்டுகள் உங்களுக்குப் பழகியிருக்கும். மாற்றம் மெல்ல வரும். உங்களின் வெற்றியைப் பார்த்து வீட்டாருக்கும் மனமாற்றம் ஏற்பட்டிருக்கும். நீங்க இங்க வெறுமனே விளையாடலை. சமூகத்துடன் ஓர் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்க ஒரு Torch bearer.. இங்க கிடைக்கற வெற்றி, தோல்வியெல்லாம் அப்புறம்’ என்று கமல் உத்வேகமாகப் பேசி ஆறுதல் சொல்ல, “It means a lot” என்று கையெடுத்து கும்பிட்டபடி கண்கலங்கினார் ஷிவின்.

மகனின் புகைப்படத்தைப் பார்த்து கண்கலங்கிய அசிம்

“அவ்ள தொலைவுல இருந்து எங்க அம்மா, அப்பா வருவாங்கன்னு எதிர்பார்க்கலை. ஆனா என் மகன் வந்திருந்தா..” என்று முடிக்க முடியாமல் ஏடிகே கண்கலங்க, ஏறத்தாழ அதே நிலைமையில் இருந்தார் அசிம். ஏடிகேவிற்காகவது அவர்களின் பெற்றோர் வந்தார்கள். அசிமிற்கு அதுவும் நிகழவில்லை. “என் மகன் வந்திருந்தா நல்லாயிருக்கும். மணிகண்டன், மைனா பிள்ளைகள் வரும் போது நானும் எதிர்பார்த்தேன்” என்று அசிமும் கண்கலங்கியபடி சொன்னது நெகிழ்வாக இருந்தது. “உங்களுக்கு ஸ்டோர் ரூம்ல ஒரு ஆச்சரியம் காத்திருக்கு” என்று கமல் சொன்னதும், ஒருவேளை, அசிமின் மகன்தான் வந்திருக்கிறானோ என்று கூட தோன்றியது. ஆனால் உள்ளே இருந்தது அழகான புகைப்படம். மிக நெகிழ்ச்சியுடன் அதைப் பார்த்து முத்தமிட்டு கண்கலங்கினார் அசிம். “உங்களுக்கும் முயற்சி பண்ணோம். ஆனா அது நடக்கலை” என்று ஏடிகேவைப் பார்த்து கமல் சொல்ல “முயற்சிக்கு நன்றி சார்” என்றார் ஏடிகே.

அமுதவாணன்
அமுதவாணன்

புதிய கேப்டன் அமுதவாணனிடம் “ரொம்ப போராடினீங்க போல. ஆனா மத்தவங்களுக்கு இருந்த சலுகை உங்களுக்கு இல்லாமப் போச்சு. நாமினேஷன்ல இருந்து விலக்கு இல்ல” என்று நமட்டுச் சிரிப்புடன் கமல் சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள். “அந்த வருத்தம் கொஞ்சம் இருந்தது சார். ஆனா கேப்டன் ஆனதுதான் மகிழ்ச்சி. ரொம்ப நாள் ஆசை அது" என்று அமுதவாணன் சொல்ல “அந்த திருப்தி மட்டும் போதாதான்னு நெனச்சு மக்கள் உங்களைக் காப்பாத்தியிருக்காங்க” என்று கமல் திடீரென சொன்னதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் அமுது.

சிவப்பு, பச்சை, மஞ்சள் அட்டையை வைத்து ஆடப்பட்ட நாமினேஷன் விளையாட்டில், மஞ்சள் அட்டை வாக்கியங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்று அப்போது சொல்லப்பட்டது. ‘அது ஏன்’ என்பதற்கான பதில் இப்போது கிடைத்தது. “இப்ப அதுக்கு பதில் சொல்லுங்க.. உங்களுக்கு தரப்பட்ட வாக்கியங்களை மறுக்கிறீர்களா, ஏற்கிறீர்களா?” என்று வீக்கெண்ட் எபிசோடிற்கான கன்டென்ட்டை சாமர்த்தியமாக தேற்றிக் கொண்டார் கமல்.

ஷிவின்
ஷிவின்

முதலில் ஆரம்பித்த ஷிவின் “க்வீன்சிக்கு பதிலா நீ போயிருக்கலாம்ன்னு சொன்னாங்க.. மறுக்கறேன்.. க்வீன்சியை விடவும் என் பங்களிப்பு பெட்டரா இருக்கு. எனவே ஏத்துக்க முடியாது. தனலஷ்மிக்கு பதில் மணிகண்டன் போயிருக்கலாம்.” என்று அந்த அட்டையை மணிக்கு தந்தார். ‘இத்தனை வாரம் எப்படி கடந்தீங்கன்னே தெரியலை’ என்று தனக்கு வந்த அட்டையை மைனாவிற்குத் தந்து ‘இவ்ள நாள் சிரிச்சிட்டே இருந்தாங்க. இப்பத்தான் அவங்களுக்கு கொஞ்சம் சீரியஸ்னஸ் வந்திருக்கு” என்று காரணம் சொன்னார் ஷிவின். “நிறைய விதிமீறல் செஞ்சிருக்கங்கன்னு கதிரவன் சொன்னாரு. ஆனா அதை அசிமிற்கு தரேன்” என்று ஷிவின் சொன்ன அடுத்த நிமிடமே துள்ளியெழுந்த அசிம் “அவங்கதான் ஜெயில் கம்பில வெளியே வந்தது முதல் பல விதிமீறல் செஞ்சிருக்காங்க. எனவே இதை ஏற்க முடியாது” என்று வாதம் செய்தார்.

‘எல்லாக் குத்தத்தையும் ஒப்புக்கறங்க எஜமான்’ - ரச்சிதா

அடுத்ததாக வந்த ரச்சிதா “எல்லாக் குத்தத்தையும் ஒப்புக்கறங்க எஜமான்’ மோடில் இருந்தார். ‘வேணாம்னா ஏற்க வேண்டியதில்லை’ என்று கமல் எடுத்துக் கொடுத்தாலும் சரணாகதி அடைவதை அவர் விடவில்லை. “இவ்ள நாள் இருந்தததுக்கு வெளில இருந்த புகழ்ன்னு அமுதவாணன் சொன்னாரு. அதை ஏத்துக்கறேன். ‘பொய்யா நடிக்கறது’ன்னு மைனா சொன்னாங்க. 85 நாளைக்கு தொடர்ந்து நடிக்க முடியாது. தெரிஞ்சுடும். அதை யாருக்கும் தர விருப்பமில்லை. நானே வெச்சுக்கறேன். ‘எப்படித்தான் உங்களை சேவ் பண்றாங்கன்னு தெரியலை’ன்னு அமுதவாணன் சொன்னாரு. அதையும் எடுத்துக்கறேன்” என்றார். கடைசிக் கேள்வியை இரு விதமாக கமல் நடித்துக் காண்பிக்க அமுதவாணன் அதற்கு மூன்றாவது வெர்ஷனை செய்து காட்டியதால் சிரிப்பொலி எழுந்தது. “எப்ப கேம் ஆரம்பிக்கப் போறீங்க?’ அட்டையை மட்டும் கதிரவனுக்கு தந்தார் ரச்சிதா.

ரச்சிதா
ரச்சிதா

அடுத்ததாக எழுந்தவர் அமுதவாணன். “அடுத்தவங்க வாய்ப்பை பறிக்கறீங்கன்னு அசிம் என்னைச் சொன்னாரு. மற்றவர்களுக்கு வாய்ப்பு தந்துதான் எனக்கு பழக்கம். குடுவை டாஸ்க்ல சரியா செக் பண்ணியிருக்காட்டி ஏடிகேவோட வாய்ப்பு போயிருக்கும். அசிமோட தீர்ப்பு தவறா இருந்தது” என்று சொல்லி அசிமிற்கே அந்த அட்டையை திருப்பிக் கொடுத்தார். இதற்கு அசிம் விளக்கம் சொல்ல முயல “பிரேக்ல.. அந்த மண்ணை எண்ணிப் பாருங்க” என்று கமல் அடித்தது, மிக நுட்பமான கமெண்ட்.

அடுத்ததாக வந்தவர் விக்ரமன். ‘இந்த ஆட்டத்துல இருக்க எனக்குத் தகுதியில்லைன்னு மணிகண்டன் சொன்னார். அதை நான் ஏத்துக்கலை. எனக்குத் தகுதி இருக்கு” என்று சொன்னதும் சபையிடமிருந்து பலத்த கைத்தட்டலும் ஆரவாரமும் வந்தது. (மகேந்திர பாகுபலியாகிய நான்...’) “இன்னமும் தகுதி வேணும்ன்ற அடிப்படையில் இதை நான் கதிரவனுக்கு தரேன். ரொம்ப டிப்ளமஸியா இருக்காரு. வீட்ல மட்டுமில்ல. வெளியுலகத்துல கூட இப்படி இருக்கக்கூடாது” என்று விக்ரமன் சொல்ல அதற்கு மறுப்பு தெரிவித்தார் கதிரவன். இங்கு குறுக்கிட்ட கமல் “கதிரவன். உங்களுக்கு ஒண்ணு சொல்றேன்.. எந்தக் கம்பெனிலயும் நடிக்க நான் சான்ஸ் கேட்டதில்லைன்னு பெருமையா சொல்லிக்க முடியாது. போஸ்டர் அடிச்சு ஒட்டினாதான் நம்ம திறமை வெளியே தெரியும்.” என்று நீளமான உபதேசம் செய்தவுடன் அட்டையை ஏற்றுக் கொண்டார் கதிரவன். ஓர் உபதேசத்தை எப்படி வலிக்காமல் இன்னொருவருக்கு சொல்வது என்கிற பாடத்தை இந்தக் காட்சியின் மூலம் அறியலாம்.

அசிம்
அசிம்

அடுத்ததாக எழுந்த அசிம் “இப்படி ஆடறதுக்கு ஆடாமயே இருக்கலாம்’ன்ற அட்டையை ரச்சிதா தந்தாங்க.. அவங்க சுபாவம் அமைதியா இருக்கலாம். ஆனா இந்த ஆட்டத்திற்கு அது ஒத்து வராது. அவங்களுக்கே இதை தரேன். ‘தேவையில்லாத ஆணி’ன்னு கதிரவன் சொன்னாரு. இதை அமுதவாணனுக்கு தரேன். மத்தவங்களைப் பத்தி ஜட்ஜ் பண்ணிட்டே இருப்பாரு. பிக் பாஸிற்கு கூட இந்த விஷயங்கள் தெரியாது.. ‘ஏமாத்தி ஜெயிக்கறது புதுசா என்ன?’ன்ற கேள்வியை விக்ரமன் தந்திருக்காரு. இதை மறுக்கறேன். நான் தனிப்பட்டு விளையாடணும்னு நெனப்பேன். ஏமாத்த நெனக்கல. ஆனா இதை யாருக்கும் தர முடியாது.. ‘அடுத்த வாரத்திற்கு செல்ல தகுதியில்லன்னு அமுதவாணன் சொன்னாரு.. இதை நான் ஷிவினுக்கு தரேன்.. வீக்கெண்ட்லதான் அவங்க பேசறாங்க” என்று சொல்லி முடித்தார்.

அசிமிற்கும் அமுதவாணனுக்கும் இடையில் ஆரம்பித்த சண்டை

இந்த விஷயத்தை இன்னமும் ஆராய விரும்பிய கமல் “அமுதவாணன். ஏன் அதை அசிமிற்கு தந்தீங்க?” என்று உசுப்பேற்றி விட “அவர்தான் முதல் வாரமே ரெட் கார்ட் நிறைய வாங்கினாரு. நீங்க கண்டிச்சும் இன்னிக்கும் வரைக்கும் சண்டை வந்துட்டுதான் இருக்கு.. எனக்கு தேவையில்லாத ஆணி கொடுத்தாரு.. நான் ஏத்துக்கலை” என்று அமுதவாணன் சாட்சியம் சொல்ல “ஓகே.. பிரேக்ல அந்த ஆணி சமாச்சாரத்தை பார்த்துக்கங்க” என்று லீட் கொடுத்தார் கமல். அவர் எதிர்பார்த்தபடியே பிரேக்கில் அசிமிற்கும் அமுதவாணனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

“அமுதவாணன் என்னை விட சிறந்த போட்டியாளர்தான்’ என்று ஒப்புக் கொண்ட கதிரவனிடம் “நீங்க SAVED” என்று சொல்லி இன்ப அதிர்ச்சி தந்தார் கமல். “பெட்டில பணம் வரும்னு காத்திருந்தது நான்தான்” என்று சிரிப்புடன் எழுந்தார் மணிகண்டன் (பெயர்லயே ‘மணி’ இருக்கே?!)

மணிகண்டன்
மணிகண்டன்

ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்ததே என்று பார்த்தால் “சார் அடிஷனல் பேப்பர் வேணும்” என்கிற மாதிரி கை தூக்கினார் அசிம். ஒரு அட்டையைப் பார்க்க மறந்து விட்டாராம். (நம்பிட்டோம்!) “அடுத்தவங்க வாய்ப்பை பறிக்கறீங்கன்னு அமுதவாணன் என்னைச் சொன்னாரு. ஆனா ஜனனியோட வாய்ப்பை அவர்தான் பறிச்சாரு” என்று சொல்லி சில சம்பவங்களை அசிம் சொல்ல, அதற்கு அமுதவாணன் மறுப்பு தெரிவிக்க “விளக்கம் கொடுக்க வாய்ப்பு தந்தா, ஸ்கூல் பசங்க மாதிரி ஒருத்தர் மேல ஒருத்தர் இங்க் அடிச்சிட்டே போறீங்களே?!” என்று நமட்டுச் சிரிப்புடன் சொல்லி பிரேக்கில் சென்றார் கமல். அவர் எதிர்பார்த்தபடியே அமுதவாணனும் அசிமும் வார்த்தைகளால் கடுமையாக மோதிக் கொண்டார்கள்.

“நீங்க சொன்னது நூறு சதவீதம் பொய் அசிம்” என்று அமுது ஆரம்பிக்க “நல்லா விளையாடிட்டு இருந்த பொண்ணு வெளியே போக காரணமே நீங்கதான்” என்று பழி சுமத்தினார் அசிம். ஜனனி வெளியேறதற்கு ஜனனியேதான் பெருமளவு காரணம். அமுதவாணனின் பங்கும் சற்று இருந்திருக்கலாம். ஜனனி தன்னைச் சார்ந்திருப்பதை அமுதவாணன் ஊக்கப்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. பழங்குடிகள் டாஸ்க்கில் “ஜனனியை வீட்டிற்கு உள்ளே அனுப்பினால் அங்குள்ள வசதிகள் காரணமாக அங்கேயே அவர் தங்கி விடுவார். ஆட்டத்தைக் கெடுத்து விடுவார். எனவே ஜனனியை அனுப்ப வேண்டாம்’ என்று சொன்ன அசிமே “அமுதவாணன்தான் ஜனனி வெளியேற காரணம். ஆட்டத்தைக் கெடுத்துட்டார்’ என்று பழி சுமத்துவது சுவாரசியமான முரண்.

‘என்னை ஒருமையில் கூப்பிடாதீங்க’- எச்சரித்த அசிம்

இருவருக்கும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற “இனிமே என்னை ஒருமையில் கூப்பிடக்கூடாது” என்று எச்சரித்தார் அசிம். சண்டை என்று வரும் போது மட்டும்தான், தன்னுடைய மரியாதை மீது அசிமிற்கு ‘திடீர்’ என்று கவனம் வந்து விடும். இதே விஷயத்தை அவர் இதற்கு முன் க்வீன்சி. ஜனனி உள்ளிட்டோர்களிடம் ஏற்கெனவே பயன்படுத்தியிருக்கிறார். ‘இனிமே அசிம்ன்னு கூப்பிடாத. அண்ணான்னு கூப்பிடாத’ என்று சண்டையின் போதெல்லாம் எச்சரிப்பது அசிமின் ஸ்டைல். “நீ மட்டும் என்னை சீப்பானவன்னு சொல்லலாமா?” என்று அமுதவாணன் எதிர்க்கேள்வி கேட்க “மறுபடியும் சொல்றேன். என்னை ஒருமையில் கூப்பிடாதீங்க” என்று மல்லுக்கட்டினார் அசிம்.

மைனா
மைனா

பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல், இன்னொரு உற்சாகமான டாஸ்க்கை ஆரம்பித்தார். ஒருவர், இன்னொருவராக மாற வேண்டும். மற்றவர்கள் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்கலாம். முதலில் வந்த மணிகண்டன், ஷிவினாக மாறி நின்று, கேள்வி கேட்பவர்களை முடிக்க விடாமல் பதில் சொல்லி அசத்தினார். அடுத்ததாக வந்தவர் அசிம். இவர் ரச்சிதாவாக மாறி பதில் சொல்ல வேண்டும். ரச்சிதா மாதிரியே செய்ய முயன்ற அசிமின் நையாண்டியும் நன்றாக இருந்தது. அமுதவாணன் வேடத்தில் வந்த மைனா அளித்த பதில்களும் ஓகே. குடுவை மண் சர்ச்சையில், தான் சொல்ல நினைத்த பதிலையே மைனா சொன்னதால் தலையை ஆமோதித்து மகிழ்ச்சியடைந்தார் அமுதவாணன்.

ஆனால் இந்த டாஸ்க்கிலேயே டாப் எண்டர்டெயின்மென்ட், அசிமாக மாறி ஷிவின் சொன்ன பதில்கள்தான். சூப்பரான காட்சி இது. ‘எளிய தாய்ப்பிள்ளையின் அன்பு வணக்கம்’ என்று ஆரம்பித்து ‘தெய்வத்தால் ஆகாதெனினும்’ என்கிற திருக்குறளை அதன் மீது தூவி விட்டு, வந்த கேள்விகளுக்கு அசிம் மாதிரியே பாய்ந்து பாய்ந்து பதில் சொல்லி, சொன்ன வார்த்தைகளையே மறுபடி மறுபடி சொல்லி ஷிவின் செய்து காட்டிய நடிப்பைப் பார்த்து கமல் மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட அசிமே சிரித்து வைத்தார். டாஸ்க்கின் இறுதியில் ‘யப்பா. சாமி செய்யச் சொன்னாங்க. செஞ்சேன்..’ என்கிற மாதிரி அசிமை நோக்கி ஷிவின் கும்பிடு போட்டது சுவாரசியமான காட்சி. ‘ஷிவின்’ காப்பாற்றப்பட்ட செய்தியை இந்தச் சமயத்தில் சரியாக சொன்னார் கமல்.

ரச்சிதா
ரச்சிதா

ஷிவினுக்கு அடுத்தபடியாக கதிரவன் போல் நடித்த ஏடிகேவின் நடிப்பு அருமை என்று சொல்லி விடலாம். எந்தக் கேள்வி வந்தாலும், கண்ணைச் சிமிட்டி, உடலை ஸ்டைலாக குலுக்கி .. ‘ஸ்நாப் இட் மச்சான்..’ என்று ஆங்கிலத்தில் ஏடிகே பேசியதைக் கேட்டு கதிரவனாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை. கமலும் இந்தப் பகுதியை ரொம்ப ரசித்தார். அடுத்ததாக ஏடிகே போல விக்ரமன் பதில் சொல்ல வேண்டும். ‘உங்களுக்கு ஏன் அங்கீகாரம் கிடைக்கலை?’ என்று அசிம் கேட்டதற்கு, விக்ரமன் சொன்ன பதிலால் உணர்ச்சிவசப்பட்டார் ஏடிகே. அவர் மனதில் இருந்த ஆதங்கத்தை விக்ரமன் மிகச்சரியாக மொழிபெயர்த்து விட்டாராம்.

ஏடிகேவிற்கு ஆறுதல் சொன்ன கமல், புத்தாண்டு வாழ்த்துகளை’ சொல்லி விடைபெற்றுக் கொண்டதோடு எபிசோட் நிறைந்தது. ஏற்கெவே சொன்னபடி இந்த வாரத்தின் எவிக்ஷன் ஓர் எதிர்பாராத ஆச்சரியமாக இருக்கக்கூடும். காத்திருந்து பார்ப்போம்.

இந்த வாரம் யார் எவிக்ஷன் ஆவார் என கமென்ட் செய்யுங்கள்.