Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 84: வெளியேறினார் மணிகண்டன்; விக்ரமனுக்கு அசிம் தந்த பரிசு!

பிக் பாஸ் 6 நாள் 84

பிரசங்கம் பண்றவங்க பார்த்தீங்கன்னா ஒரு மேடைல ஏறி நின்னு பேசுவாங்க. அப்பதான் அவங்களை மத்தவங்க கவனிப்பாங்க. சந்தைக்கடை இரைச்சல் நடுவுல ஏதோ சொன்னா கேக்காது. அந்த இடைவெளியை நாமதான் கண்டுபிடிக்கணும்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 84: வெளியேறினார் மணிகண்டன்; விக்ரமனுக்கு அசிம் தந்த பரிசு!

பிரசங்கம் பண்றவங்க பார்த்தீங்கன்னா ஒரு மேடைல ஏறி நின்னு பேசுவாங்க. அப்பதான் அவங்களை மத்தவங்க கவனிப்பாங்க. சந்தைக்கடை இரைச்சல் நடுவுல ஏதோ சொன்னா கேக்காது. அந்த இடைவெளியை நாமதான் கண்டுபிடிக்கணும்.

பிக் பாஸ் 6 நாள் 84
மைனா இருக்க, மணிகண்டன் வெளியேறியதை துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். டாஸ்க்கில் வேகம், நண்பர்களைச் சம்பாதிப்பதில் விவேகம் போன்ற நல்ல குணங்கள் இருந்தாலும், அவர் வெளியேறியது எதனால்?! ‘கூடா நட்பு’ ஒரு காரணமாக இருக்கலாமோ? நண்பன் தவறு செய்யும் போது இடித்துரைப்பதுதான் நல்ல நட்பிற்கு அழகு. அதில் இணைந்து கொள்வதல்ல. அந்த வகையில் மணிகண்டன், ஒரு ‘மினி’ அசிமாக’ மாறியது அவரை பின்னுக்குத் தள்ளியிருக்கலாம். மணிகண்டன் எத்தனை இனிமையான நபர் என்பது அவர் வெளியேறும் போதுதான் தெரிகிறது. ம்.. இது முன்னமே நடந்திருக்கலாம்.
பிக் பாஸ் 6 நாள் 84
பிக் பாஸ் 6 நாள் 84

‘கோபத்தை விட்டுடுவேன்’ என்பதை புத்தாண்டு சபதமாக அசிம் எடுத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். யெஸ். கடுமையான கோபமும், அதனால் அவர் இறைக்கும் வார்த்தைகளும்தான் அவரின் பெரிய பலவீனம். அதை மட்டும் களைந்து விட்டால் டாப் 3-ல் வருவார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

நீலநிற கோட்டில் அட்டகாசமாக உள்ளே வந்த கமல், ‘இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உங்களோட கடந்து போன பேங்க் ஸ்டேட்மெண்ட்டை எடுத்துப் பாருங்க. எத்தனை வீண் செலவுன்னு புரியும். முடிஞ்சு போனது எதுக்குன்னு கேட்காதீங்க. அடுத்த வருஷம் நல்லாயிருக்கும். மின்சாரம் சற்று தாரளமாக கிடைத்துக் கொண்டிருந்த காலத்திலேயே ‘அந்த ஃபேனை அணைச்சுட்டு போடா’ன்னு அப்பா சொல்வார். அப்ப புரியல. அவங்க சோ்த்து வைச்சதாலதான் இப்ப நமக்கு கிடைக்குது. ‘சிக்கனத்தை விடவும் வேஸ்ட் பண்ணாம இருக்கறது முக்கியம்’.. என்கிற உபதேசத்தோடு அகம் டிவி வழியாக உள்ளே சென்றார்.

பிக் பாஸ் 6 நாள் 84
பிக் பாஸ் 6 நாள் 84

மக்கள் பளபளப்பான ஆடைகளில், கோராஸாக புத்தாண்டு வாழ்த்து சொன்னார்கள். ‘உங்க புத்தாண்டு சபதம் என்ன?’ என்று ஒவ்வொருவரையும் விசாரித்த கமல் “இடம் மாறி உக்காந்திருக்கீங்க. மகிழ்ச்சி.. சொல்லுங்க..’ என்று ஆரம்பித்தார். ‘என் கோபத்தை விட்டுடுவேன்’ என்று அசிம் சொன்னது முக்கியமானது. சம்பிரதாயத்திற்காக அல்லாமல் உண்மையாகவே அவர் கைவிட வேண்டும். கோபமும் ஒரு கொடிய போதைப்பழக்கம் என்பதை அனுபவஸ்தனாக சொல்கிறேன். பல சமயங்களில் அசிமை விமர்சிப்பது என்பது என்னையே நான் விமர்சித்துக் கொள்வதைப் போலத்தான்.

‘உங்களின் புத்தாண்டு உறுதிமொழி என்ன?’

‘இலவச சட்ட ஆலாசனை மையம்’ என்கிற தன் லட்சியத்தைச் சொன்னார் விக்ரமன். ‘பொறுமையா இருக்கணும்ன்றதுதான் ஏற்கெனவே எடுத்த resolution.. அதையே ஃபாலோ பண்ணனும்” என்றார் ரச்சிதா. “கலக்கப் போவது யாரு பாலா கூட சேர்ந்து சில பிள்ளைகளை படிக்க வெச்சிட்டு இருக்கோம். முதியோர் இல்லம் கட்டணும்ன்றது என் திட்டம்” என்று அமுதவாணன் சொன்னது பாராட்டத்தக்க விஷயம். ‘எல்லோரையும் ஹாப்பியா வெச்சுக்கணும்’ என்கிற சிறப்பான குணாதிசயத்தைச் சொன்னார் மைனா. ‘எது தப்பு, சரின்னு நிறைய யோசனை ஓடிட்டே இருக்கும்’ என்று கதிரவன் குழப்பத்துடன் சொல்ல “அதுக்காக யோசிக்கறதை நிறுத்த வேணாம். அது முக்கியம். ஆனா சின்ன விஷயத்துக்கு கூட ரொம்ப யோசிக்காதீங்க. அதுவா இயல்புக்கு போகும்” என்று கமல் குறுக்கிட்டு சொன்ன ஆலோசனை அவசியமானது.

பிக் பாஸ் 6 நாள் 84:  கமல்
பிக் பாஸ் 6 நாள் 84: கமல்

“வெளில இருக்கிற கோபத்தை வீட்டுக்குள்ளே காட்டிடுவேன். இனிமேலாவது ஃபேமிலி கூட நேரம் செலவழிக்கணும்” என்று மணிகண்டன் எடுத்துக் கொண்ட உறுதிமொழி, ஏறத்தாழ பெரும்பாலான ஆண்கள் எடுக்க வேண்டிய புத்தாண்டு சபதம். ‘பெற்றோர்களுக்கு சொந்த வீடு கட்டித்தரணும். ஏற்கெனவே இருந்த வீடு அழிஞ்சு போச்சு” என்று ஏடிகே சொன்ன காரணம் உருக்கமானது. இலங்கைப் பிரச்சினையின் பின்னணியோடு பார்த்தால் இந்த துக்கம் மேலதிகமாக பெருகும்.

‘பிடிச்ச பொருளை மத்தவங்களுக்கு பரிசளிங்க’

“இந்த வீட்டில் உங்களுக்குன்னு சில பிடித்தமான அதிர்ஷ்டப் பொருட்கள் இருக்குமில்லையா.. சின்னதா இருந்தாலும் பரவாயில்லை. அதைக் கொண்டு வாங்க” என்றார் கமல். ஒவ்வொருவரும் அதைக் கொண்டு வர “இதை யாருக்குத் தந்தா உங்க நட்பு உருவாகும், வளரும், புதுப்பிக்கப்படும்-ன்னு நெனக்கறீங்களோ, அவங்களுக்கு கொடுங்க” என்றார். தனக்கு அந்தரங்கமாகப் பிடிக்கும் பொருளை ஒருவர் இன்னொருவருக்கு பரிசாக அளிக்கச் சொல்வது சற்று நெருடலான விஷயம்தான். ஆனால் நட்பிற்காக விட்டுத்தரலாம் என்கிற வகையில் முக்கியமானது. “வெளிய வாங்க . உங்களுக்கு ஒரு நல்ல பிரெண்டா இருப்பேன்’ என்று சொல்லி மைனாவின் கணவர் யோகி தந்து விட்டுச் சென்ற ரோஜாப்பூவைப் பற்றி சொல்லும் போது நெகிழ்ந்து கண்ணீர் விட்டார் ஷிவின்.

பொருட்களை அடுத்தவர்களுக்கு தரும் நேரம். தனது ‘லக்கி ‘செயினை விக்ரமனுக்கு அளித்த ‘அவர் எனக்கு பிணைப்பு இதுவரைக்கும் உருவாகலை. இனிமேல் ஆரம்பிப்பேன். வெளியே போய் தொடர்வேன்” என்று மணிகண்டன் சொன்னது நிச்சயம் இனிய அதிர்ச்சி. மணிகண்டனின் நல்லியல்பு தெரிந்தது. (அடப்பாவி மனுசா.. வெளில போற நேரத்துல இப்படிச் செய்யறீங்களே?!) இதைப் போலவே அசிமும் தன் பரிசை விக்ரமனிடம் அளித்தது முக்கியமான தருணம். (சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா மொமண்ட்!). இதில் ஷிவினிற்கும் மைனாவிற்கும் இடையில் நடந்த பரிமாற்றம்தான் குறும்பானது.

பிக் பாஸ் 6 நாள் 84: அசிம்
பிக் பாஸ் 6 நாள் 84: அசிம்

“என் ஃபேமிலி போட்டோவைத் தரமாட்டேன். எனக்கு கிடைச்ச ‘சூப்பர் ஸ்டார் விருதை’ ஷிவினுக்குத் தரேன். அவ தமிழ்நாட்டோட சூப்பர் ஸ்டார்’ என்று மைனா தர ‘ஹா’வென்று வாய் பிளந்து ஆச்சரியப்பட்ட ஷிவின், பிறகு குறும்பாக ‘அந்தப் போட்டோவைத் தந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்’ என்று சொல்ல ‘அஸ்க்கு புஸ்க்கு’ என்கிற மாதிரி கையசைத்தார் மைனா. தன் செல்ல தலையணையை, நெருக்கமான தோழியான ஷிவினுக்குத் தந்து நெகிழ்ச்சியாக ரச்சிதா பேசப் பேச ஷிவினின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. பதிலுக்கு தன் ரோஜாப்பூவை ரச்சிதாவிற்கு தந்து மகிழ்ந்தார். இந்த செஷனில் அதிக பரிசுகளைப் பெற்றிருந்தவர் ‘விக்ரமன்’தான். ‘நீங்க SAVED:” என்று உடனே சொல்லி விக்ரமனுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தார் கமல்.

“அசிம்.. உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். வெளில தனிமையா இருந்துட்டேன்னு சொன்னீங்க. அப்படி இருக்காதீங்க. பழகுங்க. காலேஜ்ல அந்த வாய்ப்பு இருந்திருக்கும். எல்லாத்தையும் ஓப்பனா பேசிடுவேன். தொழில் சார்ந்த இடத்தில் தயக்கம் வந்துடும். இங்கு பெற்ற அறிவை உங்களின் வெளியுலக அனுபவத்திற்கு முதலீடாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஆலோசனை சொல்லி பிரேக்கில் சென்றார் கமல். மணிகண்டன், விக்ரமனுக்கு பரிசளித்த விஷயத்திற்காக மிகவும் பாராட்டினார் மைனா. (இதுதான் நட்பிற்கு அழகு!). கதிரவனுக்கு சில டிப்ஸ்கள் சொன்னார் விக்ரமன்.

கமலின் அருமையான கவுன்சலிங் செஷன்

பிரேக் முடிந்து திரும்பிய கமல், பார்வையாளர்களிடம் “இப்ப ஒவ்வொரு போட்டியாளரிடமும் தனித்தனியா பேசப் போறேன். இது தனி உரையாடல்ன்னு அவங்க நெனக்கட்டும். கைத்தட்டாதீங்க” என்று கோரிக்கை வைத்தார். “தோட்டத்திற்கு வரவும்.. தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது’ என்கிற காமெடி மாதிரி ஒவ்வொருவரையும் பிக் பாஸ் கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்தார். அவருடன்தான் பேசப் போகிறோம் என்கிற நினைப்புடன் இயல்பாக உள்ளே நுழைந்தவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. எதிரே இருந்த திரையில் கமல் இருந்தார். “இந்தப் போட்டி தொடர்பா ஏதாவது கேட்கணும்னா கேளுங்க..” என்று கமல் ஆதரவு தர, ஒவ்வொருவரும் தங்களின் மனதில் தேக்கி வைத்திருந்த கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றனர்.

பிக் பாஸ் 6 நாள் 84: கமல்
பிக் பாஸ் 6 நாள் 84: கமல்

தேர்ந்ததொரு சைக்காலஜிட்டால் நிகழ்த்தப்பட்ட கவுன்சலிங் செஷன் மாதிரி அற்புதமாக நடந்த இந்த உரையாடலை நிச்சயம் இன்னொரு முறை பாருங்கள். இதில் வெளிப்பட்ட ஆலோசனைகள், சம்பந்தப்பட்ட போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, ஏறத்தாழ அனைவருக்குமே பொருந்தும். வாழ்க்கையில் பயன்படும். பிக் பாஸ் தமிழ் சீசனுக்கு கமல் அமைந்தது எத்தனை பெரிய வரம் என்பது இந்தப் பகுதியில் மீண்டும் அழுத்தமாக நிரூபணமாகியது. கமல் சொன்ன உபதேசத்தின் தொனி, அழுத்தம், தேர்ந்தெடுத்த வார்த்தைகள், தன்னுடைய அனுபவத்தை முன்னிட்டு சொன்ன உபதேசம், வழிகாட்டுதல் போன்ற விஷயங்கள் கேட்பவரை ஆத்மார்த்தமாக உணரச் செய்தன. புதிய வெளிச்சத்தைக் காட்டின.

ஆத்மார்த்தமான வார்த்தைகளால் உபதேசம் செய்த கமல்

முதலில் வந்த ஷிவினுக்கு ‘நான் ரொம்ப கத்தறனா?’ என்கிற சந்தேகம் வர “ஆமாம்.. தொண்டை நரம்பு புடைக்க பேசறீங்க” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் கமல். “பேசறதுக்கு முன்னாடி மனசுல ஒத்திகை பாருங்க. அநாவசியமான வார்த்தைகள் அங்கயே எடிட் ஆகிடும். கோபப்படாம இருக்கச் சொல்லல. அதோட ஸ்ருதியை கவனிச்சுக்கங்க. நீங்க வந்த நோக்கத்துல ஒண்ணு நிறைவேறிடுச்சு... இன்னொரு நோக்கம் வெற்றி. அதை நோக்கி பயணியுங்கள்” என்று வாழ்த்தினார் கமல். “ஆமாம்.. சார். என் சமூகத்தை நார்மலைஸ் பண்றதுதான் விருப்பம்” என்று மகிழ்ச்சியுடன் விடைபெற்றார் ஷிவின். “இங்க பேசினது நம்மோட இருக்கட்டும். வெளில போய் சஸ்பென்ஸை உடைச்சுடாதீங்க” என்கிற வேண்டுகோளோடு ஷிவினை அனுப்பினார்.

பிக் பாஸ் 6 நாள் 84: ஏடிகே
பிக் பாஸ் 6 நாள் 84: ஏடிகே

அடுத்ததாக வந்தவர் ஏடிகே ‘ஹாய் பிக் பாஸ்..’ என்று இயல்பாக உள்ளே வந்தவர் கமலைப் பார்த்ததும் திகைத்து ‘ஹலோ சார்..’ என்றார். “எனக்கு கான்ஃபிடன்ஸ் குறைவா இருக்கு. மத்தவங்களை ஃபைனலுக்கு போவான்னு சொல்றாங்க. ஒருமுறை கூட என்னைச் சொன்னதில்லை” என்று ஏடிகே ஆதங்கப்பட “இத்தனை தாக்குப்பிடிச்சு ஃபைனல் நோக்கி நகர்ந்துக்கிட்டு இருக்கீங்க. இல்லையா. அதை நோக்கி ஓடுவது மட்டும்தான் உங்க மனசுல இருக்கணும். நீண்ட நேரம் ஓடும் பயிற்சி எடுக்கும் போது நம்ம கூடவே ஒருத்தர் ஓடிட்டு வருவார்.. ‘போதுமே இத்தோட நிறுத்திக்கலாம்ன்னு சொல்லுவார்.. அவர் சொல்றதைக் கேட்காதீங்க. இறுதி இலக்கு வரைக்கும் நிக்காம ஓடுங்க. இது இந்தப் போட்டிக்கு மட்டுமில்ல. உங்களோட வெளியுலக வாழ்க்கைக்கும் இது பயன்படும்” என்று கமல் சொன்ன ஆலோசனையை நெகிழ்ச்சியோடு கேட்டுக் கொண்டு கிளம்பினார் ஏடிகே.

அடுத்ததாக வந்த அசிம் “எனக்கு முன்னாடி வந்த கோபத்தை வெச்சு இப்ப ஜட்ஜ் பண்றாங்க” என்று வருத்தப்பட “உங்க எல்லை மீறியிருந்தா அப்பவே ரெட் கார்டு தந்திருப்போம். ஆனா நீங்க மாற முயற்சிக்கறீங்க. அது முக்கியம். மறுபடியும் தப்பு நடக்குது. அது வேற விஷயம். ஆனா மாற நினைப்பது நல்ல அடையாளம். தனிப்பட்ட பிளேயர்ன்னு இங்க யாரும் எனக்கு கிடையாது. எல்லோரும் ஜெயிக்கணும். ஏன்னா இது என்னோட ப்ரோக்ராம்.” என்று கமல் சொல்ல ‘இன்னொரு விஷயம் சார். என் தம்பி சொன்னான். வெளில அப்பா என்ன சொல்லுவாரோ, அதையே கமல் சாரும் சொல்றாரு. நீ அதைக் கேளுன்னான். என்னைச் செதுக்கும் சிற்பி நீங்கள்தான்” என்று சொல்லி அசிம் விடைபெற்றார்.

பிக் பாஸ் 6 நாள் 84: மணிகண்டன்
பிக் பாஸ் 6 நாள் 84: மணிகண்டன்

அடுத்ததாக வந்த மணிகண்டன் “எங்க மிஸ் ஆகுதுன்னே தெரியலை. குழப்பமா இருக்கு. எல்லார் குட் புக்ஸலயும் இருந்திருக்கேன். ஆனா ரெண்டு மூணு இடத்துல பேசாம இருந்தது தப்பு” என்று குழப்பமாக சொல்ல “உங்க புக்குல நீங்க எங்க இருக்கீங்க? அதைப் பாருங்க. உங்கள் புத்தகத்தை நீங்கள்தான் எழுதியாகணும். அபூர்வ சகோதரர்கள் படத்தை நாங்க எடுத்து முடிச்சப்பறம்தான்.. ‘ஹப்பாடா. இனிமே இதை எப்படி எடுக்கணும்னு தெரிஞ்சடுச்சு"ன்னு பெருமூச்சு விட்டோம். இந்த கேரக்ட்டரை உங்களாலேயே மறுபடி சிறப்பா நடிக்க முடியாதுன்னு சொல்வாங்க. நிச்சயம் முடியும்” என்ற கமல் “வழி கேட்கற மாதிரிதான் வாழ்க்கையும். வெட்கப்படாம வழி கேளுங்க” என்று சொன்னது அற்புதமான வாக்கியம்.

காந்தியின் நகைச்சுவையை ரசித்த சார்லி சாப்ளின்

அடுத்ததாக வந்த கதிரவனின் முகத்தில் நிறைய குழப்பம். “ரொம்ப நேர்மையா என் கருத்தைச் சொல்றேன். ஆனா டிப்ளமஸின்னு சொல்லிடறாங்க” என்று அவர் சொல்ல “பிரசங்கம் பண்றவங்க பார்த்தீங்கன்னா ஒரு மேடைல ஏறி நின்னு பேசுவாங்க. அப்பதான் அவங்களை மத்தவங்க கவனிப்பாங்க. சந்தைக்கடை இரைச்சல் நடுவுல ஏதோ சொன்னா கேக்காது. அந்த இடைவெளியை நாமதான் கண்டுபிடிக்கணும். அதுக்காக கத்தத் தேவையில்லை. காந்தியார் மைக்கே இல்லாமல்தான் பேசியிருக்காரு.” என்று அருமையான ஆலோசனையைத் தந்தார் கமல். “சண்டை வரக்கூடாதுன்னு நெனக்கறவன் நான்” என்று கதிரவன் சொல்ல “நல்ல குணம்தான். ஆனா சண்டை நடந்துக்கிட்டுதான் இருக்கே? நாமதான் நம் குரலை பதிவு செய்யணும்” என்று கதிரவனுக்கு விடை தந்தார் கமல்.

சாப்ளினுடன் காந்தி
சாப்ளினுடன் காந்தி

அடுத்ததாக வந்தவர் விக்ரமன். “ஜாலியா இரு”ன்னு என் பெற்றோர் சொல்லிடடுப் போனங்க. நான் என் இயல்புப்படிதான் இருக்கேன்” என்று தயக்கத்துடன் அவர் சொல்ல “நகைச்சுவை ஒரு முக்கியமான உணர்வு. பெரிய பெரிய தலைவர்கள்லாம் இறுக்கமாக இருக்கிற புகைப்படத்தைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்களிடம் மிக கூர்மையான நகைச்சுவை இருந்திருக்கு. காந்தியாரை சந்திக்க சார்லி சாப்ளின் போனாரு. காந்தி விழுந்து விழுந்து சிரிப்பாருன்னு மத்தவங்க எதிர்பார்த்தா, தலைகீழா நடந்தது. காந்தியின் பேச்சுக்கு சாப்ளின்தான் முகம் சிவக்க சிரிச்சிட்டு இருந்தாரு. ‘என்னைப் பத்தி எனக்கு தெரியும்’ ன்ற உணர்வோட மத்தவங்க கிண்டலுக்கு சிரிக்கலாம். முக்கியமா அரசியல்ல இருக்கறவங்க மக்களோட கலக்கறது முக்கியம். அதுக்கு நகைச்சுவை உணர்வு தேவை. ‘தனித்திரு. விழித்திரு.’ன்றதெல்லாம் தனி வாழ்க்கைக்கு. பொது வாழ்க்கைக்கு ‘கலந்திரு’ முக்கியம்” என்றெல்லாம் ஆத்மார்த்தமான வார்த்தைகளில் கமல் செய்த உபதேசம் அருமையாக இருந்தது.

அடுத்ததாக வந்த மைனாவும் மிக இயல்பாக உள்ளே வந்து விட்டு கமலை திரையில் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தார். “எப்பவுமே சிரிச்சிட்டு பேசாதன்னு நீங்க சொல்லியிருக்கீங்க. அந்தச் சிரிப்பிற்கு பின்னாடி இருக்கற ஆதங்கத்தை நீங்க புரிஞ்சு சொன்னீங்க” என்று வருத்தமுடன் சொல்ல “சீரியஸ் மேட்டரைக் கூட சிரிச்சிட்டே சொல்றது ஆபத்தானது. அபூர்வ சகோதரர்கள் படத்துல ஒரு காட்சி வரும். சிரிக்கற மாதிரி முகமூடி போட்டுக்கிட்டு உள்ளே அழற காட்சி.. எப்பவும் சிரிக்கறது சரியானதல்ல” என்று பிரெஞ்சு நாவலையெல்லாம் மேற்கோள் காட்டி மைனாவிற்கு உபதேசம் செய்து அனுப்பினார் கமல்.

பிக் பாஸ் 6 நாள் 84: அமுதவாணன்
பிக் பாஸ் 6 நாள் 84: அமுதவாணன்

“எல்லா கேம்லயும் ஜெயிச்சிருக்கேன். நாடகம், ஸ்கிட் எல்லாம் பண்ணியிருக்கேன். சிரிக்க வெச்சிருக்கேன்” என்பதை நூற்று பன்னிரெண்டாவது தடவையாக சொன்ன அமுதவாணன் “டைட்டில் வாய்ப்பு கிடைக்கும்ன்ற நம்பிக்கையே உள்ளே வர மாட்டேங்குது. அது ஏன்னு தெரியல?” என்று ஆதங்கமான முகத்துடன் சொல்ல “நான் சினிமால சந்தோஷமா செய்யற வேலைக்கு சம்பளமெல்லாம் தராங்க. வான்கா மாதிரியான கலைஞர்கள் காலம் தாழ்த்திதான் பேசப்பட்டிருக்காங்க. அஸ்திவாரத்தை நாம போடுவோம். அப்புறம் மக்கள் முடிவு செய்யட்டும்.” என்று பாசிட்டிவ்வாக பேசி அமுதை வழியனுப்பினார் கமல்.

மணிகண்டனின் அதிர்ச்சி எவிக்ஷன்

‘நான் என் இயல்புப்படிதான் இருக்கேன். ஆனா பாராட்டை விட நெகட்டிவ் கமெண்ட்தான் கிடைக்குது” என்று வருத்தத்துடன் ரச்சிதா சொல்ல, “வெளில மட்டும் நெகட்டிவ் கமெணட்ஸ் கிடைச்சதில்லையா.. தங்களின் பெற்றோர்களை வீட்டுக்கு அழைச்சு காட்டணும்ன்னு நெனச்ச போட்டியாளர்கள் வெளிய போயிட்டாங்க. ஆனா நீங்க இருக்கீங்க. இதுவே பெரிய வெற்றி இல்லையா?.. தொடர்ந்து பயணியுங்கள்” என்று கடைசியாக ரச்சிதாவையும் அனுப்பி விட்டு “ஊக்க மருந்து தந்திருக்கேன். வேலை செய்யுதான்னு பார்ப்போம்” என்று பிரேக்கில் சென்றார்.

பிக் பாஸ் 6 நாள் 84: மணிகண்டன்
பிக் பாஸ் 6 நாள் 84: மணிகண்டன்

பிரேக் முடிந்து திரும்பிய கமல் “நாமினேஷன் ஆனவங்க ஒண்ணா உக்காருங்க” என்று சொல்லி விட்டு “இங்க எந்தவொரு தனிப்பட்ட போட்டியாளரும் எனக்கு ஃபேவரைட் கிடையாது. எல்லோரும் ஜெயிக்கணும்ன்றதுதான் என் விருப்பம். இங்க இல்லைன்னாலும் வெளியில அந்த வெற்றி கிடைக்கும்” என்று வாழ்த்தி விட்டு அசிமை எழுப்பி ‘SAVED’ என்று சொல்ல அசிமிற்கு மகிழ்ச்சி. பிறகு எவிக்ஷனுக்கான சஸ்பென்ஸ்ஸை நோக்கி நகர்ந்த கமல், ‘மணிகண்டனின்’ பெயர் தாங்கிய அட்டையைக் காட்ட மைனாவிற்கு பயங்கர அதிர்ச்சி. ‘தான்தான் வெளியேறுவோம்’ என்று அவர் தீவிரமாக நம்பியிருப்பார். மைனாவை விடவும் அசிம் அதிக அப்செட் ஆகி தலையைப் பிடித்துக் கொண்டு நகர்ந்து விட்டார் (வலது கை போகுதே!)

“எதையும் மனசுல வெச்சுக்காதீங்க விக்ரமன். வெளில வாங்க. நட்பை ஆரம்பிப்போம்” என்று விக்ரமனிடம் சொல்லி மணிகண்டன் அணைத்துக் கொண்ட காட்சி அருமையானது. மைனாவும் அசிமும் கண்கலங்க “நல்லா விளையாடுங்க” என்று புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார் மணிகண்ட்டா.

‘வீரநாயகன் வேள்பாரி – சு.வெங்கடேசனின் வரலாற்றுப் புதினம்

‘புத்தகப் பரிந்துரை பகுதிக்கு வந்த கமல், இந்த வாரம் அறிமுகப்படுத்திய புத்தகம் பிரபலமானது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற வரலாற்று நாவலான ‘வேள்பாரி’. எழுத்தாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதியது. கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி.. சேர, சோழ, பாண்டியர்களின் பேரரசுகள், இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக குறுநிலங்களின் மீது போர் தொடுத்தன. இயற்கையின் மீது பெருங்காதலும் வீரமும் கொண்ட பாரி, அவர்களின் போர் தாக்குதல்களை தன்னுடைய விவேகத்தால் எதிர்கொண்டான். கபிலரின் பாடல்கள், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தரவுகள் போன்றவற்றைக் கொண்டு கற்பனையும் கலந்து எழுதப்பட்ட சிறப்பான வரலாற்றுப் புதினம் இது. ‘இயற்கைக்கு இயன்றதை தந்த வள்ளலின் கதை இது” என்றார் கமல்ஹாசன்.

சு. வெங்கடேசன் | வேள்பாரி
சு. வெங்கடேசன் | வேள்பாரி

மேடைக்கு வந்த மணிகண்டன், தன்னுடைய பயண வீடியோவை ரசித்துப் பார்த்தார். பிறகு திரையின் வழியாக மற்றவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். “அசிம் கோபத்தை விட்டுட்டு ஆடு” என்று சொன்னது முக்கியமான உபதேசம். அவரை வழியனுப்பிய கமல் “அடுத்த வாரம் ‘Ticket to Finale’ டாஸ்க் இருக்கும் கடுமையாக இருக்கப் போகிற இந்தப் போட்டிக்காகத் தயாராக இருங்கள். உங்களின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி ஆடுங்கள்” என்று வாழ்த்தி விட்டு விடைபெற்றார்.

மணிகண்டனின் வெளியேற்றம் காரணமாக அசிம் ஒருபக்கம் கண்கலங்கி அமர்ந்திருக்க, இன்னொரு பக்கம் இடிந்தது போல் அமர்ந்திருந்தார் மைனா. “மணி ஒரு நல்ல Soul.. ரொம்ப நல்ல பையன்” என்று ஏடிகேவிடம் மைனா சொல்லிக் கொண்டிருந்ததோடு எபிசோட் நிறைந்தது.

வீட்டின் உறுப்பினர் எண்ணிக்கை இன்னமும் குறைந்திருக்கிற சூழலில் ஆட்டமும் இன்னமும் விறுவிறுப்பாகும் என்று நம்புவோம். ‘யார் ஜெயிப்பார்’ என்கிற யூகத்தை விடவும் ‘யார் ஜெயித்தால் அது முன்னுதாரணமாக இருக்கும்?’ என்பதற்கான விடையை கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.