Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 88:`டைட்டில் அடிச்சுட்டு வருவேன்!'-மகனிடம் நெகிழ்ந்த அசிம்; முதலிடத்தில் அமுதவாணன்

பிக் பாஸ்

அமுது தன் பலத்தையெல்லாம் திரட்டி பைப்பை இழுக்க ‘எப்படி பிடிப்பது?’ என்று தெரியாமல் சிரித்த படி தோல்வியை ஒப்புக் கொண்டார் ஷிவின். அடுத்து மைனா Vs ரச்சிதா. ‘உப்புமாவின் பவர்’ என்னவென்று நிரூபித்தார் ரச்சிதா.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 88:`டைட்டில் அடிச்சுட்டு வருவேன்!'-மகனிடம் நெகிழ்ந்த அசிம்; முதலிடத்தில் அமுதவாணன்

அமுது தன் பலத்தையெல்லாம் திரட்டி பைப்பை இழுக்க ‘எப்படி பிடிப்பது?’ என்று தெரியாமல் சிரித்த படி தோல்வியை ஒப்புக் கொண்டார் ஷிவின். அடுத்து மைனா Vs ரச்சிதா. ‘உப்புமாவின் பவர்’ என்னவென்று நிரூபித்தார் ரச்சிதா.

பிக் பாஸ்
‘Ticket to Finale’ டாஸ்க்கில் அமுதவாணன் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார். எனவே அவர் டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அசிம் கடைசியில் இருக்கிறார். என்றாலும் இறுதி முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

சைக்கிள் டாஸ்க்கில் அசிம் வெளியேற்றப்பட்டவுடன் விதியை மாற்றினார் பிக் பாஸ். வாடகை சைக்கிளை திருப்பித்தர வேண்டிய நேரம் வந்து விட்டதோ, என்னமோ. ‘இனி மூன்று சைக்கிள்கள் கிடையாது. இரண்டு சைக்கிள்களில் ஆறு பேர் பயணிக்க வேண்டும். தயாரா இருந்துக்கங்க” என்று அறிவித்தார். மூன்று பேர் அணியில் தொடர்ந்து இருந்ததால் ‘எனக்கு சைக்கிள் பெடல் பண்ண சான்ஸ் வேணும்’ என்று ஏடிகே கேட்க ‘நாங்க என்ன ஏமாளியா?’ என்று விக்ரமன் வாக்குவாதம் செய்தார். இடம் மாறுவதற்கான பஸ்ஸரை பிக் பாஸ் அடிக்க, ஓடும் பஸ்ஸில் ஏறுவது போல சட்டென்று இடம் மாறி அவசரமாக அமர்ந்தார்கள்.

அசிமிற்கு தூக்கம் வரவில்லை போல. மறுபடியும் வெளியே வந்து “எனக்கு ஓட்ட சான்ஸே கிடைக்கலை. இதுக்குத்தான் மத்தவங்களை நம்பக்கூடாதுன்றது.. சைக்கிளிங் எனக்கு பிடிச்ச டாஸ்க்” என்றெல்லாம் புலம்பினார். “எதுவும் பிளான் பண்ணி நடந்ததில்ல அசிம்.. யதார்த்தமா நடந்த விஷயம்” என்று ஷிவின் சொல்ல, மற்றவர்களும் அதை வழிமொழிந்தார்கள். ‘சரி.. ஓகே..’ என்று ஒருவழியாக தணிந்து உள்ளே போனார் அசிம்.

விக்ரமன், அமுதவாணன்
விக்ரமன், அமுதவாணன்

‘உரத்த குரலில் கத்துவது தன்னுடைய பலவீனமாகத் தெரிகிறது’ என்பதை உணர்ந்து கொண்ட ஷிவின், இப்போதெல்லாம் பழைய அமைதிக்கு திரும்பியிருப்பது நல்ல விஷயம். “சைக்கிளே நான் ஓட்டியதில்லைன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கான்.. இப்ப என்னடான்னா. சைக்கிளிங் எனக்கு பிடிச்ச டாஸ்க்குன்றான்’ என்று அசிமைப் பற்றி இன்னொரு மூலையில் புறணி பேசினார் ஏடிகே. “அசிமு.. உனக்கு சைக்கிள் ஓட்டப் பிடிக்கும்தானே.. அங்க பாரு.. ஒரு சைக்கிள் சும்மாத்தான் இருக்கு. ஆசை தீர எவ்ள நேரம் வேணுமானாலும் ஓட்டிக்கோ” என்று அமுதவாணன் காமெடி செய்திருந்தால் ரகளையாகியிருக்கும்.

‘அமுதண்ணா... விட்டுத் தாங்கண்ணா..’ – ரச்சிதா கெஞ்சல்

அதிகாலை 05:50. ஆட்கள் மாறுவதற்கான பஸ்ஸரை பிக் பாஸ் அடிக்க, ஏடிகே மற்றும் விக்ரமனுக்கும் இடையே மறுபடியும் வாக்குவாதம் ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் ஏடிகே அவுட். அதிகாலை 06:40. ஆட்டத்தில் மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார் பிக் பாஸ். “உங்களுக்குள்ள பேசி ஒரு நபர் வெளியேறணும்” என்று நாம் எதிர்பார்த்த விதிதான் அது. அடுத்த நிமிடமே மைனா இறங்கி விட்டார். ‘என்னாச்சு?’ என்று மற்றவர்கள் பதறி விசாரிக்க “என்னால முடியல” என்று அப்படியே படுத்து விட்டார். மணிகண்டன் சென்றதில் இருந்து மைனா உற்சாகமாக இல்லை.

காலை 06:45 மணிக்கு பஸ்ஸர் அடித்தது. ஆட்டத்தில் நீடித்த விக்ரமன், ஷிவின், ரச்சிதா மற்றும் அமுதவாணன் ஆகிய நால்வரும் தங்களுக்குள் உரையாடி ஒருவரை வெளியே அனுப்ப வேண்டும். “நீங்க ரொம்ப முன்னணில இருக்கீங்க. விட்டுத் தாங்கண்ணா” என்று அமுதவாணனிடம் ரச்சிதா கோரிக்கை வைக்க, “நீ ரொம்ப பின்னாடி இருக்கே. விட்டுத் தந்தாலும் லாபம் இல்ல.

ஏடிகே, மைனா, ரச்சிதா
ஏடிகே, மைனா, ரச்சிதா

அதுக்கா இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டேன்?” என்று சரியாக லாஜிக் பேசினார் அமுது. “அப்ப.. நான் அதே இடத்துல இருக்கணுமா?” என்று ரச்சிதா சிணுங்கினாலும் அமுதவாணன் மசியவில்லை. ‘பிக் பாஸ்.. ரச்சிதா இறங்கறாங்களாம்’ என்று அமுதவாணனும் விக்ரமனும் ஜாலியாக அறிவித்து விட அதற்கு கோபித்துக் கொண்டார் ரச்சிதா. “சும்மா.. சொன்னேன்ங்க..” என்று விக்ரமன் சிரித்து சமாளிக்க வேண்டியிருந்தது.

ரச்சிதா என்னதான் கோரிக்கை வைத்தாலும் விட்டுத் தருவதற்கு அமுதவாணன் தயாராக இல்லை. அவர் எல்லைக்கோட்டை நெருங்குவதற்கு சில அடிகளே இருப்பதால், அவருடைய நோக்கில் அது நியாயமான விஷயம்தான்.

“ஷிவின் நீ வேணா ரச்சிதாவிற்காக விட்டுத்தாயேன்” என்று அவரை ஜாலியாக கோர்த்து விட்டார் அமுது. ‘அய்யாங்.. அஸ்க்கு... புஸ்க்கு’ என்று மறுத்தார் ஷிவின். “நீயும் விக்ரமனும் ஃபைனல் வரணும்ன்னு நெனக்கறவன்.. நான்” என்று ஒரு பாசமான பிட்டை அமுது போட்டுப் பார்த்தார். ஒரு கட்டத்தில் ஷிவின் இறங்கி விட, விவாதம் தற்காலிகத்திற்கு நின்றது.

இன்னொரு வாடகை சைக்கிளையும் திருப்பித்தர வேண்டிய நேரம் வந்து விட்டது போல. எனவே ‘மூணு பேரும் ஒரே சைக்கிள்ல உக்காருங்க’ என்று நெருக்கடியை அதிகப்படுத்தினார் பிக் பாஸ். விக்ரமன் சைக்கிளை ஓட்ட, ‘யார் விட்டுத் தருவது?’ என்கிற விவாதம் மீண்டும் உக்கிரமாக ஆரம்பித்தது. ஓர் எதிர்பாராத தருணத்தில் அமுதவாணன் இறங்கி விட்டார். அடுத்தடுத்த டாஸ்க்குகளில் ஆட தெம்பு வேண்டும் என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். ஆக களத்தில் இருந்தவர்கள் விக்ரமன் மற்றும் ரச்சிதா மட்டுமே.

ரச்சிதா
ரச்சிதா

சைக்கிள் டாஸ்க்கில் விக்ரமன் வெற்றி

“யாராவது ஒருத்தர் இறங்கி ஆட்டத்தை முடிங்க. அதுக்குத்தானே நான் விட்டுக்கொடுத்தேன்..?” என்று அமுதவாணன் ஆட்சேபிக்க “இறங்கறேன்.. ஆனா பஸ்ஸர் அடிக்கட்டும். அதுவரைக்கும் ஓட்டறேன்” என்று ரச்சிதா சொல்வதிலும் நியாயம் இருந்தது. காலை 08:10. ரச்சிதா இறங்கி விட ‘தனியொருவனாக’ நின்று சாதித்து வெற்றி பெற்றார் விக்ரமன்.

விடிய விடிய சைக்கிள் டாஸ்க் நடந்ததால் மதியம் ஒரு மணிக்குத்தான் ‘வேக் அப்’ பாடலைப் போட்டார் பிக் பாஸ். ‘தனியொருவன் நினைத்து விட்டால்’ என்பது விக்ரமனுக்கான ‘டெடிகேட் ஸாங்’ ஆக இருக்கலாம். ‘புரிதலின் அடிப்படையில்தான் சைக்கிளில் இருந்து இறங்கினோம்’ என்று முடிந்து போன டாஸ்க்கைப் பற்றி அமுதவாணனிடம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் விக்ரமன். அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடைசி இடத்தில் கதிர். முதல் இடத்தில் விக்ரமன். டைல்ஸ் எண்ணிக்கையின் அடிப்படையில் அமுதவாணன் தொடர்ந்து முன்னணி. அசிம் கடைசி.

பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்

டாஸ்க் எண்.7-ஐ ஆரம்பித்தார் பிக் பாஸ். இருவர் ஆடும் போட்டி இது. ஒரு நீளமான பைப்பை இரு முனையிலும் பிடித்து அவரவர் பக்கம் இழுக்க வேண்டும். யார், யாருடன் மோதுவது என்பதில் குழப்பம் நிலவியதால் “நீங்களே டீம் பிரிச்சுத் தாங்க” என்று இவர்கள் பிக் பாஸிடம் கேட்க ‘எனக்கா டிக்கெட் டூ பினாலே?’ என்று நியாயமான கேள்வியை அவர் கேட்க “கரெக்ட்டுதான்” என்று வாயை மூடி ஒப்புக் கொண்டார் அசிம். ஒருவழியாக யார், யாருடன் மோதுவது என்பது முடிவானாலும் ‘யார் முதலில் செல்வது?’ என்பதில் மறுபடியும் வாக்குவாதம். ‘நாங்க நைட்டு முழுக்க கண்ணு முழிச்சோம். சோர்வா இருக்கு’ என்று ஷிவின் கோரிக்கை வைக்க ‘மறுபடியும் ஏமாற நான் தயாரா இல்லை’ என்று மறுத்தார் அசிம். ஒருவழியாக இந்த விஷயமும் முடிவாகியது.

‘பைப்பை இழுப்பது யாரு?’

முதலில் வந்த விக்ரமன் – ஏடிகே ஜோடி மோதலில், பல்லைக் கடித்துக் கொண்டு பைப்பை இழுத்து வெற்றி பெற்றார் ஏடிகே. அடுத்ததாக ஷிவினுக்கும் அமுதுவிற்கும் இடையில் போட்டி. அமுது தன் பலத்தையெல்லாம் திரட்டி பைப்பை இழுக்க ‘எப்படி பிடிப்பது?’ என்று தெரியாமல் சிரித்த படி தோல்வியை ஒப்புக் கொண்டார் ஷிவின். அடுத்து மைனா Vs ரச்சிதா. ‘உப்புமாவின் பவர்’ என்னவென்று நிரூபித்தார் ரச்சிதா. மைனாவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அசிரும் கதிரும் மோதியதில், கதிர் சற்று டஃப் தந்தாலும், அசிமின் பலத்திற்கு முன்னால் அவரால் சமாளிக்க முடியவில்லை. இப்படியே அடுத்தடுத்து நடந்த சுற்றுகள் முடிந்து இறுதியில் அசிமும் அமுதவாணனும் மோதியதில் அசிம் வெற்றி. யாருமே அவரிடம் சவால் விடத் தயாராக இல்லை. என்றாலும் இப்போதும் அமுதவாணனே லீடிங்கில் இருந்தார். ‘சைக்கிள் டாஸ்க்லதான் எனக்கு போச்சு’ என்று இன்னமும் அனத்திக் கொண்டிருந்தார் அசிம்.

ரச்சிதா
ரச்சிதா

இடைவெளியே இல்லாமல், டாஸ்க் எண்-8-ஐ ஆரம்பித்தார் பிக் பாஸ். ஒரு மினி ‘கால்பந்து போட்டி’. ஆனால் கைகளால் பந்தை கொண்டு கோல் போட வேண்டும். களம் முழுவதும் சோப் தண்ணீர் இருக்கும். எனவே கால் வழுக்கி விழக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. யார், யாருடன் மோதுவது என்கிற விஷயத்தில் இப்போதும் குழப்பம். ‘ஷிவின்.. வாங்க விளையாடலாம்’ என்று அசிம் அழைக்க, ‘கூட்டணியை மாத்தாதீங்க’ என்று ஷிவின் பின்வாங்கி விட்டார். சைக்கிள் டாஸ்க்கில் ஷிவின் தன்னைப் பார்த்து சிரித்ததால், பழி தீர்க்க அசிம் முடிவெடுத்தார் போல. “என்னப்பா. இது எல்லோரும் இங்க சேஃப் கேம் ஆடறாங்க” என்று அசிம் பொதுவில் அலுத்துக் கொண்டாலும், அவர் சொன்னது ஷிவினைத்தான் என்பது வெளிப்படை.

ஷிவின், விக்ரமன்
ஷிவின், விக்ரமன்

ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படும் ஏடிகே, அசிமின் கமெண்ட் தன்னையும் சோ்த்துக் குறிக்கிறது என்பதாகப் புரிந்து கொண்டு ‘மச்சான்.. அந்த வார்த்தையை சொல்லாத மச்சான்.. ஒவ்வொருத்தனும் கஷ்டப்பட்டு ஆடறான். நீ பாட்டுக்கு டக்குன்னு சேஃப் கேம்ன்னு சொல்லிடற.. ஹர்ட் ஆகுது மச்சான்..” என்று கோபத்தில் கத்த “யார்ரா இவன்.. கூத்துல கோமாளி மாதிரி.. நான் இவனைச் சொல்லவேயில்லையே?’’ என்கிற மாதிரி திகைத்து விட்டு பிறகு சுதாரித்து அதை மறுத்தார் அசிம். அசிமின் கமெண்ட்டை கதிரவனும் ஆட்சேபிக்க “ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா.. ஒண்ணு கூடிட்டாய்ங்க..’ என்று அசிம் புலம்பி மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. ‘ஒருவரின் உடல் எடை அடிப்படையில்தான் ஒலிம்பிக்ஸ்ல கூட மோத விடுவாங்க” என்று கதிரவன் சொன்னது சரியான பாயிண்ட். ஆனால் பிக் பாஸ் வீட்டில் கோக்குமாக்கான விதிகள்தானே இருக்கும்?! அசிமோடு ஷிவின் மோதினால் அசிம்தான் எளிதில் வெல்ல வாய்ப்புண்டு.

கையால் ஆடப்பட்ட ‘கால்பந்து’ போட்டி

“அசிம் உட்பட்டு எல்லோரோட முயற்சியையும் நான் மதிக்கறேன். இங்க எல்லோருமே அவ்வளவு கஷ்டப்படறாங்க. அசிம் பாட்டுக்கு டக்குன்னு எதையாவது சொல்லிடறான்” என்று கதிரவன் சொல்ல “ஆமாம். வெச்சு செய்வேன்.. ன்னு என்னென்னமோ பேசிடறான்” என்று ஏடிகேவும் அதை ஆமோதித்து பேசிக் கொண்டிருந்தார். கையால் ஆடும் ‘கால்பந்து’ (?!) ஆட்டம் ஆரம்பித்தது. முதலில் விக்ரமன், ஏடிகே மோதியதில் விக்ரமன் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு வெற்றியடைந்தார். இந்த வரிசையில் கதிரவனும் ஷிவினும் மோத வேண்டி வந்த போது கூட்டம் ஜாலியாக உற்சாகம் அடைந்து ஆரவரித்தது. இதில் கதிரவன் வென்றார்.

ஷிவின், மைனா
ஷிவின், மைனா

அமுதவாணன் கோல் போடும் சமயத்தில் ‘வா.. வா.. அமுதா.. வா... வா..’ என்று ஹைடெஸிபலில் மைனா கத்தியது சற்று நெருடல்தான். இந்த விஷயத்தைப் பிறகு அசிம் ஆட்சேபித்தது நியாயமான விஷயம். ‘எல்லோருமே நம்ம போட்டியாளர்கள்தான்.. ஒருத்தருக்கு ஆதரவா கத்தறது சரியில்ல. கூட விளையாடறவனுக்கு என்ன தோணும்?” என்று சரியான கேள்வியைக் கேட்டார். இந்தப் போட்டியில் அமுதவாணன் வெற்றி. அவரே எண்ணிக்கையின் அடிப்படையிலும் முன்னணி. இன்னமும் இரண்டு டைல்கள் கிடைத்து விட்டால் எல்லைக் கோட்டை தொட்டு விடுவார்.

ஆட்டம் நடக்கும் சமயத்தில் ‘ஒருவரை ஆதரித்து கத்தலாமா. கூடாதா..’ என்கிற விவாதம் பிறகு நடந்தது. “நாம யாரு சார்பாகவும் கத்தலை.. ரெண்டு பக்கமும்தான் சப்போர்ட் பண்றோம்.. டிவில கேம் பார்க்கும் போது, அது எந்த டீமா இருந்தாலும், கோல் போஸ்ட் கிட்ட போகும் போது .’போட்றா.. போட்றா’ன்னு நாம கத்தறதில்லையா?,’ மைனா பேசியது சரியான லாஜிக்தான்.. ஆனால் அங்கு நாம் பார்வையாளர் மட்டுமே. இங்கு உற்சாகப்படுத்துவரும் ஆட்டக்காரர் என்கிற முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.

நள்ளிரவு. தன் மகனுக்கு நெகிழ்ச்சியோடு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அசிம், ‘ஃபைனல் வந்து டைட்டில் அடிச்சுட்டு வருவேன்' என்று நம்பிக்கையோடு சொல்லி விட்டு. பிறகு தனியாகப் படுத்து கண்கலங்கிக் கொண்டிருந்த காட்சியோடு எபிசோட் நிறைந்தது.