Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 90: `ஒன்னுகூடிட்டாய்ங்களே!' - நாலாபுறமும் அசிமுக்கு ஸ்கெட்ச்! வெளியேறப்போவது யார்?

பிக் பாஸ்

‘அறுவை, பச்சோந்தி, சுயநலம்’ ஆகிய மூன்று குணாதிசயங்களை அசிம் தேர்ந்தெடுத்த போதே தெரிந்து போயிற்று. அது விக்ரமனுக்கான அன்புப் பரிசு என்று.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 90: `ஒன்னுகூடிட்டாய்ங்களே!' - நாலாபுறமும் அசிமுக்கு ஸ்கெட்ச்! வெளியேறப்போவது யார்?

‘அறுவை, பச்சோந்தி, சுயநலம்’ ஆகிய மூன்று குணாதிசயங்களை அசிம் தேர்ந்தெடுத்த போதே தெரிந்து போயிற்று. அது விக்ரமனுக்கான அன்புப் பரிசு என்று.

பிக் பாஸ்
அசிமைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. ஏன், பொறாமையாகக் கூட இருக்கிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு வாரக் கடைசியிலும் கமல் மற்றும் சக ஹவுஸ்மேட்ஸ்களின் மூலம் எத்தனை அடி வாங்கினாலும் மனிதர் அசருவதில்லை. ‘பீசு பீசா கிழிக்கும் போதும் ஏசுபோல பொறுமை பாரு’ என்கிற மாதிரி முகத்தை சிரிச்சா மாதிரியே வைத்துக் கொள்கிறார். மாய்ந்து மாய்ந்து தன் தவறுகளுக்கு விளக்கம் அளித்துச் சமாளிக்கிறார்.
அசிம்
அசிம்

அவருடைய மனதின் உள்ளே என்னென்ன ஓடுமோ தெரியவில்லை. ஆனால் வெளியே துளி கூட தெரியாமல், ‘பில்டிங் ஸ்டிராங்’ என்பதைத் திறமையாக நடிக்கிறார். வேறு எவராக இருந்தாலும் இத்தனை அடி தொடர்ந்து வாங்கினால் மனம் உடைந்து விடுவார்கள். ஆனால் அசிமோ, டைனோசர் லெக்பீஸ் சாப்பிட்டு விட்டு அதன் மீது அனகோண்டா ரசம் குடிக்குமளவிற்கு பயங்கர ஜீரண சக்தி உள்ளவராக இருக்கிறார். ஆனால், இந்த மன உறுதியை, நெஞ்சுரப்பை அவர் ஆக்கப்பூர்வமாகவும் நோ்மறையான விஷயங்களுக்கும் பயன்படுத்தினால் எத்தனை நன்றாக இருக்கும்?! அப்படிச் செய்தால் அந்த வீட்டுக்கு மட்டுமல்ல, சமூகத்திலும் கூட ‘சிறந்த மனிதர்’ என்கிற முன்னுதாரணமாக அவர் இருக்கக்கூடும். அது நடக்குமா? 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

வாவ்! மிக நேர்த்தியான கலர் காம்பினேஷன் கொண்ட உடையில் வசீகரமான புன்னகையுடன் அரங்கிற்குள் வந்தார் கமல் (கமலைப் போலவே அவரது ‘உடை வடிவமைப்பாளர்’ மீது நமக்கும் ஆர்வம் வருகிறது!). இந்த முறை உலக அரசியல் பக்கமெல்லாம் கமல் போகவில்லை. 'இப்படியே உழைச்சிட்டு இருக்கணுமா’ன்னு ஒருத்தர் வருத்தப்பட்டுட்டு இருந்தார். ஆனா இன்னிக்கு வெற்றிக்கு அருகில் அவர் சென்றிருக்கிறார். உழைப்பிற்கு மாற்றே கிடையாது. அதை அவுட்சோர்ஸ் செய்யவே முடியாது” என்று அமுதவாணனைப் பாராட்டுகிற முன்னுரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார்.

கமல்
கமல்
வேறென்ன? அதேதான். ‘மிக்ஸி வழங்கும் விழா’. வீட்டின் கேப்டன் ஏடிகே, ஷிவினுக்கு பரிசளிக்க முடிவு செய்தது ஒரு நல்ல இனிமையான டிவிஸ்ட். மிக்ஸிக்கு பதிலாக கேஸ் ஸ்டவ் வந்தது, அதையும் விட நல்ல டிவிஸ்ட்.

பிறகு பால் விளம்பரத்திற்கான போட்டிகளும் பரிசுகளும் முடிந்த பிறகு அகம் டிவி வழியாக வந்தார் கமல். அவர் அமுதுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது கைத்தட்டல் சத்தம் கேட்டது. ஏடிகே கேப்டன் ஆனதையொட்டி வாழ்த்து தெரிவித்து விட்டு ‘கேப்டன்சி டாஸ்க்’ பற்றி விசாரித்தார். நாம் முன்பே பார்த்ததுதான். தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் அசிம் மிக எளிதில் விட்டுக் கொடுத்து விட்டது அப்பட்டமாகவே தெரிந்தது. (தலைவர் ஆனாலும் நாமினேஷன்ல இருந்து தப்பிக்க முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம்!).

ஏடிகே
ஏடிகே

‘அவங்களுக்குள்ள நடந்த உரையாடல் வெண்டைக்காய் வதக்கின மாதிரி பூசி மெழுகி இருந்தது’ என்பதையே பலரும் வெவ்வேறு வார்த்தைகளில் சாட்சியம் சொன்னார்கள். “வாக்குவாதமா போகக்கூடாதுன்னு நெனச்சேன் சார்’ என்று அசிம் தன்னடக்கத்துடன் சொன்ன போது கமலே வாய் விட்டு சிரித்து விட்டார். (நீயா பேசியது.. என் அன்பே.. நீயா பேசியது?!).. ‘மத்தவங்களுக்கு பக்கவாதம் வர்ற மாதிரி வாக்குவாதம் பண்றவனே இப்படிச் சொல்றானே?!’ என்று மற்றவர்களும் வெடித்து சிரித்தார்கள். “அசிமே அடங்கி இருக்கும் போது நல்ல சான்ஸை கோட்டை விட்டுட்டீங்களே?” என்று ஏடிகேவிடம் சர்காஸ்டிக்காக கேட்டார் கமல்.

ஆஃபிஸ் ரூமில் பிக் பாஸ் தந்த முரட்டுக்குத்து

அடுத்ததாக நாமினேஷன் பிராசஸ் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் கமல். ஆஃபிஸ் ரூமிற்குள் வரவழைத்து முரட்டுக் குத்தாக பிக் பாஸ் குத்தி அனுப்பியதை அத்தனை எளிதில் இவர்களால் மறக்க முடியுமா? “எப்ஃஎம் ரேடியோ மாதிரி பேசி கடகடன்னு பேசி முடிச்சிட்டீங்க” என்று ஷிவினைக் கிண்டலடித்து விட்டு மற்றவர்களை விசாரிக்க “இது டாஸ்க்குன்னே எனக்கு முதல்ல தெரியல சார். பிக் பாஸ் ஏதோ ஆசையா பேச கூப்பிட்டார்ன்னு நெனச்சிட்டேன்” என்று வெள்ளந்தியாகச் சொன்னார் அமுதவாணன். “எனக்குப் புரிஞ்சது. ஆனா சைக்கலாஜிக்கலா பிக் பாஸ் பயமுறுத்திட்டார்” என்று ஏடிகே சொன்னதை கமல் ஆமோதித்தார். “அசிம் உள்ளே போனான்.. வர்றதுக்கு ரெண்டு மணி நேரம் ஆச்சு..” என்று அமுது சொல்ல கமல் உட்பட சபையே வெடித்துச் சிரித்தது.

அமுதவாணன்
அமுதவாணன்

“போகஸ் லைட் கண்ணு கூசினாலும் எப்படி பேசணும்னு அசிமிற்கு தெரிஞ்சிருக்கு” என்று பாராட்டிய கமல், “பிக் பாஸையே அசிம் நாமினேட் பண்ணிட்டாரு. பாவம் அவரு.. அசிம் கிட்ட பேசினப்பறம் ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுக்க வேண்டியதாப் போச்சு” என்று கமலே இறங்கி கிண்டல் செய்ய சிரிப்பொலி கூடியது. “என்னை எவிக்ட் பண்ணிட்டாங்கன்னு இவங்க நெனச்சிட்டாங்க சார்” என்று சிரித்துக் கொண்டே அசிம் சொல்ல “இது மத்தவங்களோட உள்ளார்ந்த ஆசை போல’ என்று நையாண்டி ஊசியை இறக்கினார் கமல்.

‘நீங்க காப்பாத்தப்படறதுக்கு ஒரு காரணம் இருக்கு' என்று ஓர் உரையாடலில் ஷிவினிடம் ஏடிகே சொன்னதை இப்போது நினைவுப்படுத்திய கமல், “அப்படியொரு தனிச்சலுகை யாருக்கும் தரப்படவில்லை. (தேவையும் இல்லை – ஷிவின்). அதற்கு நான் உத்தரவாதம். மக்களும் தகுதியைப் பார்த்துதான் வாக்களிச்சிருக்காங்க. அதற்கான உதாரணம்.. நீங்க SAVED ” என்று கமல் அழுத்தமாகச் சொல்ல ஷிவின் நெகிழ்ந்து கண்கலங்கி நன்றி தெரிவித்தார்.

பச்சோந்தி, சுயநலம், நயவஞ்சகம், பாசாங்கு.. யார்.. யார்,?

அடுத்து ஒரு நீளமான டாஸ்க்கை ஆரம்பித்தார் கமல். இந்த எபிசோடு முழுக்க நீளும் டாஸ்க்காக அது அமைந்தது. கமல் அதிகம் பேசவில்லை. போட்டியாளர்களை பேச விட்டு கவனித்தார். ‘சுயநலம்’ ‘பாசாங்கு’ என்பது போன்று வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட பலகைகள் இருக்கும். அதில் மூன்று பலகைகளை ஒருவர் பொருத்தி விட்டு, அதற்குப் பொருத்தமானவர் யார் என்பதை தன்னிடமுள்ள புத்தகத்தில் ரகசியமாக குறித்துக் கொள்ள வேண்டும். ‘அவர் யாரை குறித்து பலகைகளை வைத்திருப்பார்?’ என்பதை மற்றவர்கள் யூகித்துப் பெயரைச் சொல்லி அதற்கான காரணங்களையும் சொல்ல வேண்டும்.

பிக் பாஸ் 6 நாள் 90: `ஒன்னுகூடிட்டாய்ங்களே!' - நாலாபுறமும் அசிமுக்கு ஸ்கெட்ச்! வெளியேறப்போவது யார்?

முதலில் வந்த ஷிவின் ‘பலியாடு, வெத்துவேட்டு, கோமாளி ஆகிய மூன்று பலகைகளைத் தேர்ந்தெடுத்து பொருத்தி விட்டு ஒரு பெயரை நோட்டில் எழுதிக் கொண்டார். மற்றவர்களும் தாங்கள் ரகசியமாக யூகித்து எழுதிய பெயரை பொதுவில் சொல்லி விட்டு அதற்கான காரணங்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள். விக்ரமனும், ரச்சிதாவும் ‘மைனா’ என்கிற பெயரை யூகித்திருந்தார்கள். ஏடிகே ரச்சிதாவின் பெயரை எழுதியிருக்க, அமுதுவும் அசிமும் கதிரவனின் பெயரை எழுதியிருந்தார்கள். கதிரவனும் மைனாவும் தன்னையே எழுதிக் கொண்டதுதான் இதில் காமெடி. தான் எழுதியிருந்த ‘மைனா’ என்கிற பெயரை கடைசியில் வெளிப்படுத்தினார் ஷிவின்.

‘முதுகெலும்பு இல்லாதவர், ஊமை குசும்பு, பாசாங்கு’ ஆகிய மூன்று குணாதிசயங்களை தேர்ந்தெடுத்த ஏடிகே, ரகசியமாக எழுதி வைத்த பெயர் ‘கதிரவன்’. பெரும்பான்மையாக கதிரவனின் பெயரே வந்தது. சைலண்ட்டாக காமெடி வயலண்ட் செய்வதில் கதிர் வல்லவராம்.

கதிர்
கதிர்

மற்றவர்கள் தன்னைக் கிண்டலடிக்கும் போதெல்லாம் ரசித்து சிரித்தார் கதிர். இவர் மட்டும் ரச்சிதாவின் பெயரைச் சொன்னார். தன்னுடைய பெயர் வரும் போதெல்லாம் ரச்சிதாவின் முகபாவங்கள் கலைடாஸ்கோப் மாறிக் கொண்டேயிருந்ததைப் பார்க்க சுவாரசியம். (சீரியல் வாசனை?!).

அடுத்ததாக வந்தவர் அமுதவாணன். ‘பலியாடு, சுயநலம், கோமாளி’ ஆகியவற்றை தேர்ந்தெடுத்து விட்டு அதற்குப் பொருத்தமான பெயராக தன்னையே குறித்துக் கொண்டார். ‘டாஸ்க் என்று வந்து விட்டால் சுயநலமாகத்தான் ஆடுவேன்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். அசிம் தன்னையே சொல்லிக் கொண்டது ஆச்சரியம். ரச்சிதா தன்னைச் சொல்லிக் கொண்டதில் ஆச்சரியமில்லை. ரச்சிதா பலவற்றிற்கும் தன்னையே சொல்லி சேஃப் கேம் ஆடினார். அசிமை மற்றவர்கள் சீரியசாகவும் காமெடியாகவும் கிண்டல் செய்யும் போதெல்லாம் அரங்கில் விசில் பறந்தது. சிரிப்பது மாதிரியே நீண்ட நேரம் முகத்தை வைத்து சமாளித்தார் அசிம்.

ரச்சிதா
ரச்சிதா

‘ஊமை குசும்பு, அடிமை, பலியாடு’ ஆகிய மூன்று பலகைகளை தேர்ந்தெடுத்தார் மைனா. கதிரவனும் ரச்சிதாவும் வழக்கம் போல் தன்னையே சொல்லிக் கொள்ள, மைனாவோ ரச்சிதாவின் பெயரை எழுதி வைத்திருந்தார். அசிம், ஏடிகே, விக்ரமன் ஆகிய மூவரும் ரச்சிதாவின் பெயரை சரியாக யூகித்திருந்தார்கள். இது மைனாவின் டாஸ்க் என்பதால் அப்படியாக யூகித்திருக்கலாம். ஷிவினும் அமுதும் கதிரின் பெயரைச் சொன்னார்கள்.

விக்ரமனுக்கும் அசிமிற்கும் இடையில் நடந்த ரணகளமான விளையாட்டு

அடுத்து எழுந்து வந்தார் அசிம். மக்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். அசிம் வந்தாலே அங்கு ஒரு கச்சா முச்சாவான கலகம் உருவாகும் என்பதால் சற்று ஆவல் கூடியது. ‘அறுவை, பச்சோந்தி, சுயநலம்’ ஆகிய மூன்று குணாதிசயங்களை அசிம் தேர்ந்தெடுத்த போதே தெரிந்து போயிற்று. அது விக்ரமனுக்கான அன்புப் பரிசு என்று. ‘யார் பெயர்?’ என்று தனது யூகத்தைச் சொல்ல விக்ரமன் எழுந்தார். அப்போதும் தெரிந்து போயிற்று.

பிக் பாஸ் 6 நாள் 90: `ஒன்னுகூடிட்டாய்ங்களே!' - நாலாபுறமும் அசிமுக்கு ஸ்கெட்ச்! வெளியேறப்போவது யார்?

அது அசிமின் பெயராகத்தான் இருக்கும் என்று. பலகையில் உள்ள குணாதிசயங்களுக்கு ‘அசிம்’ எத்தனை பொருத்தமானவர் என்பதற்கான காரணங்களை விக்ரமன் அடுக்க, பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைதட்டல் கேட்டது. பல்லைக் கடித்துக் கொண்டு புன்னகை முகத்தை வலுக்கட்டாயமாகக் காட்டினார் அசிம். (யப்பா. உலக நடிப்புடா.. சாமி!).

ரச்சிதா, அமுதவாணன்
ரச்சிதா, அமுதவாணன்

‘ஒரு அவசரத்திற்கு கேட்டா.. டீ கூட போட்டுத் தர மாட்டாங்க சார்” என்று ரச்சிதாவைப் பற்றி குறை கூறினார் அமுதவாணன். இதையே முன்னர் கதிரவனும் சொன்னார். “பாருங்க.. சார்..” என்று இதற்கு சிணுங்கினார் ரச்சிதா. விக்ரமனின் பெயரைச் சொன்ன ஷிவின், இரண்டு குணாதிசயங்களை மட்டும் பொருத்தி விட்டு ‘சுயநலம்-ன்ற காரணம் அவருக்குப் பொருத்தமா இல்லை’ என்று விட்டு விட்டது நல்ல விஷயம். மூன்று குணாதிசயமும் பலகையில் இருக்கிறது என்பதற்காகவே வலிந்து காரணங்களைச் சொல்லத் தேவையில்லை. இதை ஷிவின் மட்டுமே செய்தது பாராட்டத்தக்க விஷயம்.

இதை ஏடிகேவிற்குப் பொருத்தி கதிரவன் காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஏடிகேவின் முகம் மாறியது. கோபம் வந்தது. ‘கஷ்டப்பட்டு அறுவையா காமெடி செய்வார்’ என்று கதிரவன் சொல்ல அதை மறுத்தார் ஏடிகே. ஆனால் நடுராத்திரியில் ஷிவினின் பெயரைச் சொல்லி ஏன் ஏடிகே கத்த வேண்டும்?! விக்ரமனுக்கான காரணங்களைச் சொல்ல ஆரம்பித்தார் அசிம். இவரிடம் உள்ள நல்ல பழக்கம் என்னவெனில், வீட்டில் சொன்ன காரணங்களையே பஞ்சாயத்து நாளிலும் தயங்காமல் துணிச்சலாகச் சொல்வதுதான். மற்றவர்களாக இருந்தால் சபையில் மழுப்பி மறைத்து விடுவார்கள்.

 விக்ரமன் , ஷிவின்  ஏடிகே
விக்ரமன் , ஷிவின் ஏடிகே

‘ஷிவினுக்குத்தான் எப்பவும் சப்போர்ட்டு’ என்கிற அதே பல்லவியை அசிம் இப்போதும் பாட, விக்ரமனும் ஷிவினும் நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். “மக்கள் பார்க்கறாங்கன்னு விக்ரமன் அடிக்கடி சொல்வாரு” என்று இன்னொரு பல்லவியை அசிம் ஆரம்பிக்க “வேற யாரும் அதைச் செய்யலையா?’ என்று இடைமறித்தார் கமல். அதைச் சரியாகப் புரிந்து கொண்ட சபை கைத்தட்டி ஆரவாரம் செய்ய, அசிம் சற்று கூட அசரவில்லை. தொடர்ந்து தன் தரப்பு காரணங்களைச் சொல்லி விட்டு கெத்தாக அமர்ந்தார். உப்புப் பெறாத காரணமாக இருந்தாலும் கூட அதை கம்பீரமாகவும் தன்னம்பிக்கையுடன் சொல்வதற்கு அசிமிடம் இருந்துதான் ஒருவர் பயிற்சி பெற வேண்டும்.

அசிமை போட்டு மொத்தி எடுத்த சக ஹவுஸ்மேட்ஸ்

அடுத்ததாக வந்தவர் விக்ரமன். எனவே குத்துச்சண்டையின் பரபரப்பு இன்னமும் கூடியது. அனைவருமே நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். ’சுயநலம், நயவஞ்சகம், பச்சோந்தி’ ஆகிய மூன்றும் இவர் தேர்ந்தெடுத்த பலகைகள். அசிமின் பெயரைத்தான் விக்ரமன் எழுதியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்றவர்களும் பெரும்பான்மையாக அசிமின் பெயரைத்தான் எழுதியிருந்தார்கள். அசிம் மட்டும் ஏடிகேவின் பெயரை எழுதியிருந்தார். (பழிக்குப் பழி! “உருவக்கேலி பண்ணுவாரு.. யாரையோ சொன்னா.. தன்னைச் சொன்னதா புரிஞ்சுக்குவாரு.. ஒருத்தரைப் பத்தி மத்தவங்க கிட்ட மாத்தி மாத்தி வம்பு பேசுவாரு.. ஏடிகே + விக்ரமன் காம்போ உருவாகியிருக்கு. விக்ரமனுக்கு கிடைக்கற கைத்தட்டல் பார்த்து ஏடிகே அங்க சேர்ந்துட்டாரு. அதனால பச்சோந்தி ” என்று ஏடிகேவைப் பற்றி அசிம் ரகம் ரகமாக இறங்கி அடிக்க, வலுக்கட்டாயமான புன்னகையைத் தந்தார் ஏடிகே. ஆனால் ஏடிகே மாறி மாறி புறணி பேசுவார் என்பது உண்மைதான்.

 மைனா
மைனா

அசிமின் பெயரை எழுதியிருந்த மைனாவும் துணிச்சலாக இறங்கி அடித்தார். “டாஸ்க்ல அவர் வந்தாலே ஏதாவது பிரச்சினை கண்டிப்பா வரும். உக்கார்ற இடத்துல கூட பார்த்தீங்கன்னா நடுவுல உக்காரணும்னு சுயநலமா அடம் பிடிப்பார்.. நேத்து வரை சண்டை போட்ட ஆளு கிட்ட மறுநாள் தோள்ல கை போட்டு பேசுவார்” என்று மைனா சொல்ல, அதை ஆட்சேபித்தார் அசிம். அடுத்த எழுந்த ஏடிகேவும் சரமாரியாக அசிமைப் பற்றி பேசினார். “அடுத்தவங்களுக்கு பிரச்சினை வர மாதிரிதான் நடந்துக்குவார். ஆமாம் சாமி போடறவங்களைத்தான் அவருக்குப் பிடிக்கும். எதையாவது பேசி மண்டையைக் கழுவிடுவாரு. சண்டை போட்ட ஆளுங்க கிட்ட பொய்யா மன்னிப்பு பேசி பழகுவாரு. பார்த்தாலே வெறுப்பா இருக்கு” என்று பதிலுக்குப் பதிலாக சொல்ல சபையில் ஆரவாரம் வந்தது. அசிமின் பெயரை எழுதியதாக விக்ரமன் சொல்ல பலத்த கைத்தட்டல். ‘அசிமிற்கு ஆன டேமேஜ் போதும்’ என்று கமல் நினைத்தாரோ, என்னவோ, விக்ரமனின் விளக்கத்தைக் கோரவில்லை.

 ஷிவின்
ஷிவின்

அடுத்து வந்த ரச்சிதா ‘சுயநலம், விஷம், சோம்பேறி’ ஆகிய மூன்று குணங்களைத் தேர்ந்தெடுத்து விட்டு ஷிவினை கைகாட்டினார். “இந்த வீட்டோட விஷபாட்டில் ஷிவின்தான். பயங்கர சோம்பேறி” என்று கதிரவன் பங்கமாக கலாயக்க, அதற்கு ரசித்து சிரித்தார் ஷிவின். “ஷிவின் யாரு பெயரைச் சொன்னாலும் அவங்களுக்கு ஆபத்துதான்.. அவங்க சிக்கன் செஞ்சா மத்தவங்கதான் வெங்காயம், தக்காளி அரிஞ்சு ஹெல்ப் பண்ணனும்” என்று சில உதாரணங்களுடன் ஷவினின் சோம்பேறித்தனத்தைப் பற்றி அமுதவாணன் சொல்ல சபை வெடித்து சிரித்தது. தன்னையே ஷிவின் சொல்லிக் கொண்டதுதான் ஆச்சரியம்.

அடுத்து வந்த கதிரவன் ‘சுயநலம், கோமாளி, ஊமை குசும்பு’ ஆகிய மூன்று பெயர்களைத் தேர்ந்தெடுத்து விட்டு அமுதவாணனின் பெயரைச் சொன்னார். ரச்சிதாவும் ஷிவினும் தன்னையே சொல்லிக் கொண்டார்கள். ‘செல்ஃப் நாமினேட்’ செய்தால் கமல் விளக்கம் கேட்க மாட்டார் என்கிற காரணம் போலிருக்கிறது. ஒருவழியாக இந்த நீண்ட டாஸ்க் முடிந்தது.

"யாரு மேடையைப் பயன்படுத்தல அசிம்?" – நையாண்டி ஊசியால் குத்திய கமல்

அடுத்ததாக ‘விருது விழா சர்ச்சைகளைப்’ பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் கமல். இதிலும் அசிமிற்குத்தான் அதிக டேமேஜ். தான் தந்த விருதை அசிம் தூக்கியெறிந்து அவமானப்படுத்தியதைப் பற்றி ஏடிகே ஆதங்கத்துடன் சொல்லி ‘இதை ஏற்க முடியாதுன்னு அவர் சொல்லியிருக்கலாம். ஒரு சின்ன விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் கூட அசிமிற்கு இல்லை” என்று சொல்லி முடித்தார். இதற்கான விளக்கத்தை அசிம் சொல்ல ஆரம்பிக்க “ஒண்ணு கவனிச்சீங்களா.. விக்ரமனுக்கு கூட பல விருதுகளில் ஏற்பு இல்லை. ஆனா அவர் தந்த ரியாக்ஷன் பார்த்தீங்களா?” என்று கமல் கேட்க அப்போதும் அசிம் அசரவில்லை. “எனக்கு அது பொருந்தாது. ஆனா அப்புறம் நைட்டு யோசிச்சப்பதான் தோணிச்சு. நாமளும் விருதை வாங்கி வெச்சிருக்கலாம்ன்னு” என்று சொல்ல, கமலுக்கே டயர்ட் ஆகியிருக்க வேண்டும்.

அசிம்
அசிம்

‘விக்ரமன் கிரிஞ்சுன்னு ஒரு விருது கொடுத்தாரு.. அது எனக்குப் பொருந்தாது. எனவே அவருக்கே திருப்பிக் கொடுத்துட்டேன்.’ என்று அந்த டாப்பிக்கை தானே ஆரம்பித்து ஆப்பில் வசதியாக அமர்ந்தார் அசிம். இதற்கான விளக்கத்தை விக்ரமன் சொல்லும் போது “இந்த வீட்டில் முகம் சுளிக்கறா மாதிரி அதிகமா நடந்துக்கறது அசிம்தான். மரியாதைக் குறைவா பேசுவாரு. அவரோட காமெடியிலும் பேச்சிலும் தற்புகழ்ச்சி மட்டுமே இருக்கும். தன்னை உயர்த்திக்க மத்தவங்களை கீழே தள்ளிடுவாரு” என்று சொல்ல “அப்படின்னா ... தனக்குப் பிடித்த விருதை மட்டும்தான் அசிம் வாங்கிக்குவாரா?” என்று கமல் கேட்க “இல்லை.. சார். வீக்கெண்ட் ஆக்டர், முந்திரிக்கொட்டை விருதையும் வாங்கியிருக்கேன். காரணம் சரியா இருந்தா ஓகே” என்றார் அசிம்.

“ஓகே.. அசிம். இன்னொன்னு கேட்கறேன்.. கார்டன்ல உக்காந்து யோசிச்சேன்னு சொன்னீங்களே.. அதுக்காக அப்புறம் மன்னிப்பு கேட்டீங்களா?’ என்று சரியான கேள்வியை கமல் கேட்க “இல்லை.. சார். அதப் பத்தி யோசிக்கலை” என்று அசடு வழிந்த அசிம், உடனே சுதாரித்துக் கொண்டு “வாழ்ந்தாலும்.. ஏசும்.. தாழ்ந்தாலும் ஏசுகிற வீடு சார் இது.” என்று இன்னொரு பழமொழியைச் சொன்னதுதான் ‘கிரிஞ்சு’தனம். இந்தச் சமயத்தில் கையைத் தூக்கிய ஏடிகே ‘மன்னிப்புன்றது ஆழ்மனசுல இருந்து வரவேண்டியது. இவங்க கூட பழகியாக வேண்டுமே-ன்னு மன்னிப்பு கேட்கறது ஏத்துக்க முடியாத விஷயம். இத்தனை நாள் இதை அசிம் பண்ணியிருக்காருன்னு நெனக்கும் போது வருத்தமா இருக்கு ” என்று சொல்ல பலத்த கைத்தட்டல் கேட்டது. அதற்கும் மழுப்பலான விளக்கத்தைச் சொல்ல ஆரம்பித்த அசிமை தடுத்து நிறுத்தினார் கமல்.

கமல்
கமல்

“ஓகே.. அசிம்.. நீங்க வீட்டார் கிட்ட பேச வேண்டியது நெறைய இருக்கு. நான் ஒண்ணு சொல்றேன்.. ‘ஒரு காரணத்திற்காகத்தான் பிக் பாஸ் மேடையை விக்ரமன் பயன்படுத்தறார்ன்னு சொன்னீங்க. வேற யாரு மேடையை பயன்படுத்தலை. சொல்லுங்க பார்க்கலாம்... நீங்க க்வீன்சி கூட டான்ஸ் ஆடும் போது ‘மணிரத்னம் இதைப் பார்த்துட்டு கூப்பிடணும்ன்னு சொன்னீங்க. அதுவும் மேடையைப் பயன்படுத்தறதுதானே.. கிடைச்ச மேடையை ஒருத்தர் பயன்படுத்தறதுதான்.. சரியான விஷயம். விக்ரமன் தனது மேடையை சரியாகப் பயன்படுத்துகிறார்..ன்றதுக்கு ஒரு உதாரணம்..” என்று சொன்ன கமல் “விக்ரமன் நீங்க SAVED” என்று சொன்னதுதான் அசிமிற்கான சரியான பதில். சபையோரிடமிருந்து பலத்த ஆரவாரம் கேட்டது. இத்துடன் கமல் விடைபெற்று கிளம்பி விட்டார்.

“உங்களுக்கு கிடைக்கற கைத்தட்டல் காரணமாத்தான் உங்க கூட பழகறேன்னு நெனக்கறீங்களா..?’ என்று அசிம் சொன்ன புகாரையொட்டி வருத்தமான முகத்துடன் விக்ரமனிடம் கேட்டார் ஏடிகே. விக்ரமன் அதை மறுத்தார். “எதுக்கும் அசர மாட்டாண்டா.. இந்த அசிமு” என்று அப்போதும் கெத்தாக நடந்து சென்ற அசிமைப் பார்த்து வடிவேலு காமெடி மாதிரிதான் வியக்கத் தோன்றியது. ‘ச்சே.. என்னாவொரு மனுஷன்!’