இந்த எபிசோடிலும் அசிமிற்கு நிறையப் பாடங்கள் கிடைத்தன. அது அவருக்கானது மட்டுமல்ல. நமக்கானதும் கூட. ஒருவர் தவறு செய்து சறுக்கி விழுவது இயல்புதான். ஆனால் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறுவதுதான் முதிர்ச்சியின் அடையாளம். மாறாக ‘நான் சரி, உலகம்தான் தவறு’ என்று அசிமைப் போல முரட்டுப் பிடிவாதத்துடன் இருந்தால் காலம் அந்தப் பாடத்தை கற்றுத் தரும். ஆனால் அதன் வலி மிகுந்த வேதனையைத் தருவதாக இருக்கும்.
‘அசிம் டைட்டில் வின்னராவதற்கு தகுதியில்லாதவர். ஒருவேளை வென்றால் அது மோசமான முன்னுதாரணமாக ஆகி விடும்’ என்று வீட்டின் சக ஹவுஸ்மேட்ஸ்களே சொல்கிறார்கள். அது பரலவான கருத்தாகவும் இருக்கிறது. ஒருவேளை அதையும் மீறி, அசிம் டைட்டில் ஜெயித்தால் என்ன ஆகும்?!
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
எபிசோடின் ஆரம்பத்திலேயே அசிமின் அலப்பறை களைகட்டியது. “இனிமே யார் கூட சண்டை போட்டாலும் அவங்க கூட பேச மாட்டேன். பேசினா நடிப்புன்னு சொல்லிடறீங்க.. ஸாரியும் சொல்ல மாட்டேன்.” என்று அசிம் கெத்தாக சொல்ல “ஆக.. மொத்தம்.. இனிமே சண்டை போட மாட்டேன்னு சொல்ல மாட்டீங்க.. அதானே?!” என்று ரச்சிதா கேட்டது சிறந்த கேள்வி. அசிமின் வசனத்தைப் பார்த்து மற்றவர்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். ஆம், ஒரு நோக்கில் அசிமின் கோபத்தைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஒரு பிடிவாதக் குழந்தையின் அழிச்சாட்டியம்.

“இனிமே சண்டை போடறவங்களை வெச்சு செய்வேன். டபுள் மடங்கா வெச்சு செய்வேன்..” என்று கால் மேல் போட்டுக் கொண்டு அசிம் கெத்தாக சொல்வதாக நினைத்துக் கொள்ள, அதே போல் கால் மேல் காலைப் போட்டு “நாங்களும் வாங்கிட்டுப் போறதுக்கு வரல” என்று விக்ரமன் சொன்னது ஒரு நல்ல பதிலடி. கோபமே படாமல் புன்னகையுடன் இதை விக்ரமன் சொன்னதுதான் சரியான அணுகுமுறை. கோபக்காரர்களுக்கு ‘நமட்டுச் சிரிப்பு’தான் சரியான பதிலடி. பதிலுக்கு கோபப்படுவதால் நமது நேரமும் சக்தியும்தான் வீணாகும்.
‘டாலரேட் பண்ணாதீங்க. அக்செப்ட் பண்ணிக்கங்க’ - கமலின் அட்டகாசமான அறிவுரை
கறுப்புச் சட்டை அணிந்து கலக்கலாக வந்தார் கமல். “இவங்க முகத்துலதானே விழிச்சாகணும்..ன்னு வீட்ல சிலர் சொல்றாங்க. எதுக்கு சகிச்சக்கணும்..? சகிப்பு–ன்ற வார்த்தையையே என்னால் சகித்துக் கொள்ள முடியல. தலைவலி, கால்வலின்னா சகிச்சுக்கலாம்.. ஒரு நண்பனை எவ்வாறு சகிப்பது? அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்.. அதுதான் இதற்கான சரியான வழி. எங்கேயோ இருந்த தலைவர்களின் பெயர்களை, தங்களின் பிள்ளைகளுக்கு தமிழர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால், அந்தத் தலைவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்றுதான் பொருள். `Do not Tolerate.. Please accept' என்கிற அவசியமான உபதேசத்தோடு தனது முன்னுரையை ஆரம்பித்த கமல் “இந்த ஷோவின் மூலம் நாம் நம்மையே உணர்வதுதான் முக்கியம். இந்த மாதிரி நாம் நடக்கக்கூடாது என்கிற சோதனைப் பயிற்சிதான் இந்த ஷோவின் நோக்கம்” என்று முடித்து, அகம் டிவி வழியாக உள்ளே சென்றார்.

‘டிக்கெட் டு பினாலே’ டாஸ்க்கில் உடல் எடை சமமா இருக்கறவங்க கூட மோதினா சரியா இருக்கும்ன்ற மாதிரி பேசினீங்க. அதைப் பத்தி சொல்லுங்க” என்று ஆரம்பித்தார் கமல். “விக்ரமன் கூட மோதினா சௌகரியமா இருக்கும்ன்னு நெனச்சேன். ஆனா மனுஷன் உடம்பை உடைச்சிட்டார்” என்று ஏடிகே ஜாலியாக புகார் சொன்னார். “ரச்சிதா கூட நான் எப்படி மோத முடியும்?” என்று சிணுங்கினார் ஷிவின். “அசிம் கூட மோத அமுதவாணன் விரும்பலை” என்றார் விக்ரமன். “இறுதிச்சுற்றுல மோதினா நல்லாயிருக்கும்ன்னு நெனச்சேன்” என்று விளக்கம் அளித்தார் அமுதவாணன். இந்த உரையாடல் தட்டையாக அப்படியே முடிந்து போனது. “உடல் எடை சமமா இருக்கறவங்க கூட மோதணும்ன்றதுதான் ஒலிம்பிக்ஸ்ல கூட அடிப்படையான விதி” என்று ஏற்கெனவே கதிரவன் சொன்னார். பிக் பாஸ் வீட்டில் அந்த விதி இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி கமல் தெளிவுப்படுத்தவில்லை. இருக்கிற எட்டு நபர்களை வைத்து அப்படிப் பிரிக்க முடியாது என்பதும் ஒரு நடைமுறைக் காரணம்.
அடுத்ததாக இன்னொரு விவகாரத்தை (பர்சனல் அட்டாக்) கமல் ஆரம்பித்த போது, இதற்கு ஏடிகேவும் மைனாவும் தந்த வெள்ளந்தித்தனமான எக்ஸ்பிரஷன்கள் இருக்கிறதே?! ஒரு பக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் எரிச்சலாகவும் இருந்தது. ‘மறந்துட்டோம்.” என்று இருவருமே சாதித்தார்கள். “என் கிட்டயா கேக்கறீங்க?” என்று அப்பாவித்தனமாக மைனா கேட்க, பின்னால் திரும்பிப் பார்த்து “என் கிட்டயா பேசறீங்க?” என்று கமல் பதிலுக்கு கேட்டது ஒரு நல்ல ஜாலியான குறும்பு.

“சரி. நீங்க தனியா பேசினதை விடுங்க. எல்லாக் கோட்டையும் அழிங்க. புதுசா ஆரம்பிங்க. இங்க பர்சனல் அட்டாக் பண்றது யாரு?” என்று கமல் ஆரம்பிக்க, ‘அனைத்துச் சாலைகளும் ரோமை நோக்கி’ என்கிற பொன்மொழி வாக்கியம் போல, ஏறத்தாழ அனைவரின் கைகளும் அசிமை நோக்கிச் சென்றன. “ஒருத்தர் இருக்கற துறையை வெச்சு அவர் தாக்குதல் செய்வாரு” என்று விக்ரமன் சொல்ல, “என்னை ரொம்ப ஆழமா தாக்கியிருக்காரு” என்று ரச்சிதா சாட்சியம் சொல்ல, “சில வார்த்தைகள் கொஞ்சம் முறையில்லாம இருக்கும்” என்று கதிரவன் டெட்டால் போட்ட வார்த்தைகளைச் சொல்ல, ‘சம்பந்தப்படாத இடத்துல கூட வந்துடுவாரு” என்றார் ஷவின். கூடவே ஏடிகேவையும் இணைத்துக் கொண்டார்.
‘தனிப்பட்ட தாக்குதல் செய்பவர் யார்?’
இந்த உரையாடலை துவக்கி வைத்தது ஏடிகேதான். “அசிம்தான் பர்சனல் அட்டாக் பண்ணுவாரு. ராம் கிட்ட என்னைப் பத்தி புறம் பேசியிருக்காரு” என்று ஏடிகே சொல்ல “அதையெல்லாம் ஓப்பனா கேட்டிருக்கேன். ஏடிகேதான் என் மீது தனிப்பட்ட தாக்குதல் செய்வாரு. எப்பவோ சொன்ன ‘திராணி’ன்ற வார்த்தையை மூணு வாரம் கழிச்சு புண்பட்டதா பேசினாரு. ராஜாங்கம் டாஸ்க்ல, நான் தூங்கற மாதிரி இருக்கறப்ப மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டினாரு. அமுதவாணன் கிட்ட ஜெயிக்கற வெறி இருக்குன்னு சொன்னாரு” என்று அசிம் வரிசைப்படுத்த “மூணு வாரம்லாம் கழிச்சு சொல்லலை. அதே வாரத்துலதான் சொன்னேன். அமுதவாணனை நிறைய தாக்கியிருக்கிறாரு. பிறநாட்டுல இருந்து வந்ததால ஜனனிக்கு சப்போர்ட் இருக்கும்னு அமுது சேர்ந்துக்கறாருன்னுல்லாம் சொல்லியிருக்கார்” என்று ஏடிகே விளக்கம் தந்தார். “சார் கிள்ளிட்டான் சார்’ என்று பள்ளிப்பிள்ளைகள் சொல்கிற புகார் போலவே இது இருந்தது.

“ஓகே.. எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை. விதம் விதமான பாத்திரங்கள் இருப்பதுதான் ஒரு வீட்டின் சுவாரசியம். இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வெச்சிருக்கிற நீங்கள் ‘மறந்துட்டேன்’ன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு. ஒருத்தரை சகிச்சுக்க வேணாம். அக்செப்ட் பண்ணிக்கங்க. இந்த வீட்டின் ஆரோக்கியத்திற்கு நீங்கதான் பொறுப்பு. உங்கள் தவறை ஒருவர் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள முயலுங்கள். அடிக்கடி ஸாரி கேட்டா, மன்னிப்போட கண்ணியம் போயிடும். அடுத்த முறை அதுக்கு மதிப்பு இருக்காது. முகத்திற்கு நேரா சொல்லிடுங்க. நல்ல பெயர் வாங்கறதுக்காக சுத்தி வளைக்காதீங்க. பாலசந்தர் செட்ல நேரா திட்டிட்டாலும் அது கொஞ்ச நேரம்தான். அடுத்த ஐந்தாவது நிமிஷமே ‘எப்படி நடிச்சிட்டான்.. பாரேன்’ன்னு கைத்தட்டுவார்' என்று சொல்லி பிரேக்கில் சென்றார் கமல்.

பிரேக் முடித்து திரும்பினார் கமல். இந்த முறையும் அசிமிற்குத்தான் மண்டகப்படி நடந்தது. “ஒருத்தர்தான் இங்க டைட்டில் வின் பண்ண முடியும். ஆனால்,. ‘இவர் வாங்கினா அது முறையல்ல’ என்று நினைத்தால் யாரைச் சொல்வீர்கள்?’ என்று கமல் ஒரு வில்லங்கமான கேள்வியை ஆரம்பிக்க, மறுபடியும் ‘அனைத்துச் சாலைகளும் ரோமை நோக்கி’ என்கிற பொன்மொழி போல அசிமை நோக்கியே அனைவரின் கைகளும் நீண்டன. (இதெல்லாம்... பெருமையா. கடமை!) ‘அடுத்தவங்க ஆட்டத்திற்கு இடையூறு செய்யற மாதிரியே ஆடுவாரு” என்று ஷவினும் மைனாவும் சொன்னார்கள். “இவர் கிட்ட பேசும் போது நம்மளோட சுயமரியாதையை காப்பாத்திக்கணும்ன்ற பயம் நமக்கு வர மாதிரியே நடந்துக்குவார்” என்று ஏடிகே சொன்னது முக்கியமான பாயிண்ட். “அவர் கிட்ட பேசவே பயமா இருக்கு” என்று முன்னர் ரச்சிதா சொல்லியதும் இதையேதான்.
‘இந்த ஆசாமி டைட்டில் வாங்கக் கூடாதுங்க..”
‘சக போட்டியாளரை தாழ்த்தி தன்னை உயர்த்திக் கொள்ள முயலும் அசிம் வெற்றி பெறுவது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் ரச்சிதா. கதிரவனும் அசிமையே சொல்லி “யோசிச்சிட்டு பேசுன்னு எத்தனையோ முறை அவர் கிட்ட சொல்லியிருக்கேன். எந்த மாற்றமும் தெரியல” என்று நொந்து போய் சொன்னார். “ஒருவர் எதிரியாகவே இருந்தாலும் கூட கண்ணியமாக உரையாடணும். தனிப்பட்ட தாக்குதலை அசிம் உத்தியா வெச்சிருக்காரு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட ‘டபுள் மடங்கு வெச்சு செய்வேன்’ன்னு சொல்றாரு. 14 வாரமும் நாமினேட் ஆகி உள்ளே வருவேன்னு சொல்றாரு. மக்களை அப்படி அண்டர் எஸ்டிமேட் பண்ணக்கூடாது. டைட்டில வாங்கற தகுதி அசிமிற்கு இல்லை” என்று விக்ரமன் சொன்னதும் முக்கியமான பாயிண்ட்.

‘தகுதியில்லை’ என்கிற நபராக மைனாவை சுட்டிக் காட்டினார் அமுதவாணன். ‘உழைப்பு குறைவு’ என்கிற காரணத்தைச் சொல்லி ரச்சிதாவை கை காட்டினார் அசிம். விக்ரமனின் புகாருக்கு விளக்கம் அளிக்கும் போது ‘மன்னிப்பு கேட்டாலும் சொல்லிக் காட்டறாங்க. அப்புறம் எதுக்கு ஸாரி சொல்லணும்?..இதே வீட்டுல இவங்க கூடத்தான் பழக வேண்டியிருக்கு. விக்ரமன் கூட என்னை தாழ்த்திப் பேசியிருக்காரு. இதே வீட்டில் நின்னு விளையாடி காண்பிப்பேன்” என்று அசிம் சொன்னதில் வழக்கம் போல் முதிர்ச்சியின்மைதான் இருந்தது.
“நீங்க கடைசியா சொன்னது மட்டும் பிடிச்சிருந்தது. இந்த ஆட்டத்துல எதுக்காக கலந்துக்கிட்டீங்க –ன்றது ஒவ்வொருத்தருக்கும் முக்கியம். உங்களின் பெயர்கள் மக்களிடம் பதிவாகி விட்டது. ஆனால் எப்படி பதிவாச்சுன்றது முக்கியம். நீங்க மன்னிப்பு கேட்டது உங்களுக்காக. உங்களை மாத்திக்கறதுதான் அடுத்த ஸ்டெப். உங்க கோபம்தான் பேசுபொருளா இருக்குன்றீங்க. மத்தவங்க அதை மறக்க கொஞ்சம் டைம் ஆகும். நல்ல விஷயங்களே சென்று சேர டைம் ஆகுது... மத்தவங்களை விடுங்க.. நம்ம மாற்றம் நமக்கே உள்ளே தெரியணும்..” என்ற கமல் மற்றவர்களை நோக்கி “அசிமை வெறும் கோபக்காரரா மட்டும் சித்தரிக்க வேண்டியதில்லை. அவர் கிட்டயும் சில திறமைகள் இருக்கு. பேசிப் பேசியே நாமினேஷன்ல ஜெயிச்சாரு. அதுவொரு தனித்திறமை” என்று கமல் பாராட்ட கையெடுத்து கும்பிட்டார் அசிம்.

“நானும் அவரை நிறைய முறை பாராட்டியிருக்கேன். இன்னிக்கும் என்னோட பெட் மேட் அசிம்தான். வக்கீல் கணேசன் கேரக்ட்டர் அவர் செஞ்ச போது பாராட்டியிருக்கேன். எனக்கு தனிப்பட்ட காழ்ப்போ வன்மமோ இல்லை” என்று விக்ரமன் சொல்ல “நீங்க இங்க வெளிப்படுத்தறது எழுபது சதவீதம்ன்னா மத்தவங்க இட்டு நிரப்பறது பாக்கி முப்பது சதவீதம். இது அசிமிற்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் பொருந்தும். Surviving tother..” என்று சொன்ன கமல், ஓர் எதிர்பாராத கணத்தில் “ஏடிகே நீங்க SAVED” என்று சொல்ல அவருக்கு மகிழ்ச்சி. கமல் பிரேக்கில் செல்ல, அவசரமாக வெளியே சென்ற அசிம், இடுப்பில் கை வைத்துக் கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டு சிவாஜி கணேசன் மாதிரி நின்றிருந்தார். (மறுபடியும் வக்கீல் கணேசனா மாறிட்டாரோ?!). “என்ன வெளில போஸ் கொடுத்திட்டு இருக்கான்?!” என்று கிண்டலடித்தார் ஏடிகே.
‘ஹைய்யா.. பெட்டி வந்துடுச்சு’ – அலைமோதிய அமுதவாணன்
பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல் ஆடிய ‘பெட்டி’ ஆட்டம் சுவாரசியமானது. ‘இது பிக் பாஸ்ல வழக்கமா நடக்கற விஷயம்.. உங்களுக்கும் தெரியும். ஸ்டோர் ரூம்ல ஒரு பொருள் இருக்கும்” என்று சொன்ன போதே மக்களுக்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. கதிரவன் ஒரு பெட்டியைத் தூக்கி வந்த போது, பெண் பார்க்கச் செல்லும் வடிவேலு ஆவலுடன் பெண்ணைத் தேடுவது போன்ற எக்ஸ்பிரஷனுடன் பெட்டியைப் பார்த்தார் அமுதவாணன். அவரை இன்னமும் உசுப்பேற்றுவது போல “உங்க கோட் கலரும் பெட்டி கலரும் மேட்ச்சிங்கா இருக்கு” என்று கமல் சொல்ல, அப்போதே ‘ரொம்ப நன்றி சார்’ என்று பெட்டியை எடுத்துச் செல்ல தயாரானார் அமுது. ‘எமோசனைக் குறைங்க’ என்று கமல் சொல்ல வேண்டியதாக இருந்தது.

பணப்பெட்டியை எடுக்கும் டாஸ்க் இவ்வளவு எளிதாகவா நடக்கும்? யாருமேவா இதை யோசிக்க மாட்டார்கள்?. “பெட்டி ஒரு பக்கம் இருக்கட்டும். இவர் இனி மேல் இந்த வீட்டில் இருக்கறது வேஸ்ட். குறைந்தபட்சம் பெட்டியை எடுத்தாவது போகட்டும்..ன்னு யாரைச் சொல்வீங்க?” என்பது கமல் அடுத்து தந்த டாஸ்க். இதில் மைனாவிற்கும் கதிரவனுக்கும் ஏறத்தாழ சமமான வாக்குகள் வந்தன. “மைனா வந்ததே பெட்டிக்காகத்தான்” என்று அமுதவாணன் ஜாலியாக சொல்ல ‘வெஷம்.. வெஷம். பயபுள்ள எப்படி கோத்து விடுது பாரு’ என்று அலறிய மைனா அதை வன்மையாக மறுத்தார்.
“என் திறமையைக் காண்பிக்கத்தான் வந்தேன். அது ஏறத்தாழ நிறைவேறிடுச்சுன்னு நெனக்கறேன்.. ஸோ... பெட்டியை எடுக்கறது என் சாய்ஸ்” என்று தன்னுடைய பிரத்யேக சிரிப்புடன் சொன்னார் கதிரவன். கதிரவனின் பெயரைச் சொன்ன மைனா, அதற்கான காரணங்களைச் சொல்ல முயன்ற போது கமல் செய்த குறும்பு ரசிக்கத்தக்கதாக இருந்தது. “ஓகே.. கதிரவனுக்கு அதிக வாக்குகள் வந்திருக்கு.. ஆனா மக்கள் வேற மாதிரி நெனக்கறாங்க. கதிரவன் நீங்க SAVED” என்று கமல் சொல்ல கதிரவனுக்கு திகைப்பும் மகிழ்ச்சியும்.

பிரேக் முடிந்து திரும்பிய கமல் எவிக்ஷன் கார்டை விசிறிக் கொண்டே வந்தார். எவிக்ஷன் பட்டியலில் பாக்கியிருந்தவர்கள் மைனா மற்றும் ரச்சிதா. ‘எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பது போல’ (யப்பா.. போதும்ப்பா.. இந்த உவமை!) பெரும்பாலோனோர் ‘வெளியேறுபவராக’ மைனாவை சொன்னார்கள். “எனக்கு டைட்டில் ஜெயிக்கணும்ன்னு கூட இல்லை. ஃபைனலிஸ்ட்-ஆ வெளியே போகணும்ன்னு ஆசை” என்றார் மைனா. “என்னமோ ஒருமாதிரி இன்செக்யூர்டா இருக்கு” என்று படபடப்புடன் சொன்னார் ரச்சிதா. (அவருடைய உள்ளுணர்வு நன்றாக வேலை செய்கிறது போல!).
வீட்டை விட்டு நெகிழ்ச்சியோடு வெளியேறிய ரச்சிதா
கமல் எவிக்ஷன் கவரை பிரித்துப் பார்த்த போது காலியாக இருந்ததால் ‘ஹைய்யா.. எவிக்ஷன் இல்லை போல” என்று அனைவரும் ஆரவாரம் செய்ய, “இருங்க. இருங்க. கவர் அந்தப் பொட்டில இருக்கு” என்று ஜெர்க் தந்தார் கமல். மைனாவும் ரச்சிதாவும் இணைந்து பெட்டியைப் பிரிக்க, பலரும் மைனாதான் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் திடீர் டிவிஸ்ட்டாக ரச்சிதாவின் பெயர் இருந்தது. மைனா கூட அத்தனை கலங்கவில்லை. ஆனால் ஷிவின் அப்படி அழுது தீர்த்தார். ரச்சிதாவிற்கும் அதிர்ச்சிதான் என்றாலும் உடனே சுதாரித்துக் கொண்டார்.
ரச்சிதா விடைபெறும் நிகழ்வு மிக உணர்ச்சிகரமாக இருந்தது. இந்த வீட்டை அவர் ஆத்மார்த்தமாக நேசித்திருக்கிறார் என்பது அவரது கண்ணீரிலும் உடல்மொழியிலும் உண்மையாக பிரதிபலித்தது. “இந்த வீட்ல நான் செக்யூர்டா ஃபீல் பண்ணியிருக்கேன்” என்று ரச்சிதா சொன்னதற்காக, சக ஆண் போட்டியாளர்களை கமல் ஏற்கெனவே பாராட்டியிருந்தார். (ராபர்ட் மாஸ்டரும் இதில் வருவாரா?!).

இந்தச் சமயத்தில் அசிமிடம் ரச்சிதா நிகழ்த்திய ஒரு உரையாடல் இருக்கிறதே?! மிக முக்கியமான தருணமாக அது அமைந்தது. ஆனால் என்னவொரு குறை என்றால் இதை அவர் முன்பே அசிமிடம் நிகழ்த்தியிருக்கலாம். அச்சப்படாமல் சொல்லியிருக்கலாம். “அசிம். நான் நடிக்கறேன்றதை நீங்க தொடர்ந்து சொல்லியிருக்கீங்க. நீங்க சீரியல் காலத்துல பார்த்த ரச்சிதா வேற. அதுக்கப்புறம் நெறைய வருஷம் போயிடுச்சு. நான் வேற மாதிரி மாதிரியிருக்கேன். இந்த வீட்ல நான் உண்மையா வாழ்ந்திருக்கேன். என் வீட்ல கூட இப்படி இருந்ததில்ல. இங்க ரொம்ப நேர்மையா இருந்திருக்கேன். ஆனா எனக்குத் தகுதியில்லன்னு சொன்னீங்க. அ்பபடி கிடையாது. நான் மத்தவங்க கிட்ட கூட தள்ளித்தான் பழகுவேன். ஆனா இங்க கிடைச்ச பெரிய பரிசு ஷிவின்தான். யார் கிட்டயும் நான் இத்தனை அட்டாச் ஆனதில்லை” என்று சொல்ல அசிமின் முகத்தில் இறுக்கம். ரச்சிதாவின் தோளில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதார் ஷிவின். ‘பிக்கி’யின் விர்ச்சுவல் ஹக்கை பெற்றுக் கொண்ட ரச்சிதா, மிக நெகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கொண்டார்.
‘டேமேஜ் கண்ட்ரோலில் ஈடுபட்ட அசிம்’
பிரேக் முடிந்து திரும்பிய கமல், பலருக்கும் பிடித்தமான ‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்தார். இந்த வாரம் அவர் பரிந்துரைத்த வரலாற்று நாவல் ‘The Devil's Wind’ மனோகர் மல்கோங்கர் (Manohar Malgonkar) என்கிற எழுத்தாளர், நானா சாஹேப் பற்றி எழுதிய ஆங்கிலப் புதினம். 1857-ல் நடந்த சிப்பாய்க்கலகம், ராஜகுலங்களின் வீழ்ச்சி மற்றும் அதன் தொடர்ச்சியில் பயணிக்கும் நூல். “இந்திய சுதந்திர வரலாறு பற்றி பேசும் போது சிப்பாய் கலகத்தையே முதன்மையாக எப்போதும் சொல்கிறார்கள். ஆனால் அதற்கும் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ்ஷாரை எதிர்த்துப் போராடிய வீரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் மருதநாயகம். அவர் தமிழில் பேசியதால் இந்த வரலாறு பதிவாகவில்லை” என்று முடித்தார் கமல்.

மேடைக்கு வந்த ரச்சிதாவிடம் “ரொம்ப உணர்ச்சிப் பெருக்கோடு வந்திருக்கீங்க.” என்று கமல் விசாரிக்க “முதல்ல நம்பிக்கை இருந்தது. ஆனா திடீர்ன்னு சந்தேகம் வந்தது. நானா இருக்கலாம்ன்னு நெனச்சேன். என்னோட குணாதிசயத்திற்கு இந்த வீடு மேட்ச் ஆகலை” என்று ரச்சிதா சொல்ல “அப்படியா நெனக்கறீங்க?” என்று கமல் கேட்ட கேள்வி முக்கியமானது. ரச்சிதாவின் பயண வீடியோவிற்குப் பிறகு அவரை வழியனுப்பி விட்டு கமலும் விடைபெற்றுக் கொண்டார்.
இத்தோடு எபிசோட் சட்டென்று முடியும் என்று பார்த்தால் அதை நீட்டித்துச் சென்றவர் அசிம். தனது இமேஜ் பயங்கரமாக அடிவாங்கியிருப்பதால் “டேமேஜ் கண்ட்ரோல்’ செய்யும் திட்டத்துடன் அவர் இறங்கினார். ‘பிக் பாஸ் டைட்டிலுக்கு நான் லாயக்கில்லைன்னு சொன்னீங்க” என்கிற தலைப்புடன் அவர் சபையைக் கூட்ட “டாஸ்க்ல அப்படி கேள்வி வந்தது. அதனால் பதில் சொல்ல நேர்ந்தது” என்று மற்றவர்கள் விளக்கம் அளித்தாலும் அசிம் திருப்தியடையவில்லை. விக்ரமனும் ஷிவினும் பதில் சொல்லி சோர்வடைந்தார்கள். அமுதவாணன் உள்ளிட்டோர் “இவன் காமிராக்காக பேசறான்” என்பதுபோல நைசாக நழுவி விட்டார்கள். ‘தற்புகழ்ச்சின்னு எதைச் சொல்றீங்க?” என்று அசிம் கேட்க, விக்ரமன் தயங்கும் சமயத்தில் மைனா இறங்கி அடித்த விதம் சுவாரசியம். ஏடிகேவும் துணிச்சலாக தன் கருத்தை வெளியிட்டார்.

அசிம் மறுபடியும் மறுபடியும் தன் தரப்பு நியாயத்தை மட்டுமே சொல்கிறாரே தவிர, தன் பிழைகளை உணர்ந்து தன் மாற்றத்தை மற்றவர்கள் உணரும்படிச் செய்வோம் என்பது ஏன் அவருக்கு தோன்றவே மாட்டேன்கிறது என்பது தெரியவில்லை. சக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மட்டுமல்ல, பார்க்கும் நமக்குமே அத்தனை சோர்வும் உளைச்சலும் வந்து விடுகிறது. வீட்டின் எண்ணிக்கை இன்னமும் சுருங்கி விட்ட நிலையில், இனி ஆட்டம் எப்படியிருக்கும்? வெற்றிக் கோட்டை நெருங்குபவர் யாராக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
அசிம் டைட்டில் வெல்லத் தகுதியானவரல்ல என ஹவுஸ்மேட்ஸ் சொன்னது, ரச்சிதாவின் எவிக்ஷன் குறித்து உங்கள் கருத்து இரண்டையும் கமென்ட்டில் பதிவிடுங்கள் மக்களே!