இந்த எபிசோட் ஒருவகையான இணைய விமர்சனம் போல் இருந்தது. ஒரு திரைப்படம் வெளியானவுடன் அதன் பிளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட்களைச் சொல்வது போல. முந்தைய சீசன்களில் இது போன்ற வழிகாட்டுதல்கள் இல்லை. இந்த ‘அறுவை’ சிகிச்சை போட்டியாளர்களிடம் எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும்.

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தியும் பிரபல யூட்யூபர் அஹமதும் சிறப்பு விருந்தினர்களாக வந்து போட்டியாளர்களின் நிறை, குறைகளை நையாண்டியாக பட்டியலிட்டார்கள். இது சில சமயங்களில் சுவாரசியமாகவும் பெரும்பாலும் சலிப்பாகவும் இருந்தது. அதனால்தான் ‘அறுவை’ சிகிச்சை என்று சொல்லியிருக்கிறேன். அதிலும் சுரேஷின் கொனஷ்டைகள் சில இடங்களில் மிகையாக இருந்தன.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘ஐ’ திரைப்படத்திலிருந்து ‘ஐலா ஐலா ஐ...' என்கிற அட்டகாசமான பாடலுடன் நாள் 92 விடிந்தது. ஓப்ரா பாணி இசையை அற்புதமாக இதில் கலந்திருந்தார் ரஹ்மான். ஷிவினை தூக்கி ரங்கராட்டினம் போல சுழற்றி நடனமாடினார் அமுது.
ஏடிகே மற்றும் அமுதவாணனின் பெரிய பலவீனம் புறணி. ஒருவரிடம் – குறிப்பாக அசிம் – பயங்கரமாக சண்டை போட்டு விட்டு பிறகு இன்னொரு மூலையில் புறணி பேசுகிறார்கள். அவரை நேரில் பார்த்தால் ‘அப்புறம்.. ஹிஹி..’ என்பது போல் சிரித்து விசாரிக்கிறார்கள். கமல் எபிசோடில் பொங்குகிறார்கள். இப்போதும் அதுவே நடந்தது. ‘அவங்களுக்கு டீ வேணுமா கேளுங்க’ என்று உள்ளே அசிம் விசாரிக்க ‘ஐய்யய்யோ.. அசிம் டீயா.. வேணாம்ப்பா” என்று இருவரும் அலறி மறுத்தது ஜாலியான காமெடி. (அசாம் டீயை விடவும் அசிம் டீ பிரபலமாகி விடும் போலிருக்கிறது!)

அமுதுவை தவிர அனைவரும் நாமினேஷன்
அமுதவாணனிற்கும் தலைவர் பதவிக்கும் அத்தனை ராசியில்லை போலிருக்கிறது. ரப்பர் வளையம் மாட்டி விளையாடிய போட்டியில் அவர் வெற்றி பெற்ற பிறகு ‘தலைவர்ன்ற பெயர்ல யாரும் இதுவரை பெரிசா செஞ்சுடல. அதனால் அந்த ஆணியே தேவையில்லை. இனி வரும் நாட்களில் இந்த போஸ்ட்டே கிடையாது. எல்லோரும் சேர்ந்து நிர்வாகத்தைப் பாருங்க. அப்பவாவது தேறுதான்னு பார்ப்போம்” என்று தண்ணி தெளித்து விட்டார் பிக் பாஸ். இப்படியாக ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்கிற பாரதியின் வாக்கு இங்கு சாத்தியமாகியது.
‘இது இந்த சீசனின் கடைசி நாமினேஷன்’ என்கிற அறிவிப்புடன் அந்தச் சடங்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். நேரடியாக நடைபெறும் இந்தச் சடங்கில் ‘நாமினேட் செய்பவரின் முகத்தில் பிளாஸ்திரி ஒட்ட வேண்டுமாம். அடியும் வாங்கித் தந்து விட்டு பிறகு கரிசனத்துடன் மருத்துவமும் பார்க்கிற பிக் பாஸின் கருணையை எப்படித்தான் பாராட்டுவதோ!

வழக்கம் போல் மாறி மாறிக் குத்தப்பட்ட இந்தத் திருவிழாவில் அசிம் ஒரு நல்ல டிவிஸ்ட்டை வைத்தார். “நான் விக்ரமனை குத்தப் போறதில்லை. விக்ரமன் ஒரு நல்ல மனிதர். பொறுமையானவர். கோபத்தைக் கன்ட்ரோல் செய்ய அவருக்குத் தெரிந்திருக்கு. (பார்றா;!) இதுவரைக்கும் மைனாவை நாமினேட் பண்ணதில்லை. எனவே மைனா” என்று வித்தியாசமான காரணத்தை அசிம் சொன்னதும் “இதுவரைக்கும் குத்தாதது ஒரு காரணமா?" என்கிற மாதிரி நமட்டுச் சிரிப்பு சிரித்தார் மைனா.
டிப்ளமேட்டிக் கதிரவன் நல்லவரா, கெட்டவரா?
கதிரவனை நாமினேட் செய்யும் போது ‘அவரு டிப்ளமட்டிக்காக இருக்கிறார். அவசியமான நேரத்தில் கூட கருத்து சொல்வதில்லை. அவர் பேசினாதானே எப்படிப்பட்ட ஆளுன்னு தெரியும். அதனால்தான் ஜாக்கிரதையாக இருக்கிறாரோ?!” என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன. “உங்க முன்னாடி நான் பேசினதில்லைன்றதுக்காக நான் பேசலைன்னு ஆகிடுமா? சண்டையோட சூட்டுல பேச மாட்டேன். ஒருத்தனுக்கு கோபம் வந்தாதானே வார்த்தைகள் விடுவான்.. அதனால சண்டை இன்னமும் அதிகமாத்தானே ஆகும்? அதையெல்லாம் நான் பண்றதில்லை” என்று கதிரவன் தன்னை டிஃபன்ஸ் செய்ய முயன்றார்.

கதிரவனின் பொறுமையும் நிதானமும் பிரமிக்க வைப்பது. கோபமும் வன்மமும் நிதானமின்மையும் மிகுந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இம்மாதிரியான நற்பண்புகள் கொண்டவர்கள் குறைவு. ஆனால், ஒருவன் யார் வம்புக்கும் தும்புக்கும் போகாமல் இருந்தால் நமக்குப் பொதுவாகப் பிடிப்பதில்லை. அசிம், விக்ரமன், ஷிவின் மாதிரி ஏதாவது ‘கன்ட்டென்ட்’ தந்துகொண்டே இருக்க வேண்டும். என்றால்தான் அவர்களைக் கவனிப்போம். ‘தான் கவனிக்கப்பட வேண்டும்’ என்பதுதான் மனிதனுக்குள் இருக்கிற ஆசைகளுள் ஒன்று. அரசியல்வாதிகள் முதல் தனிநபர் வரை ‘என்னைக் கவனியுங்கள்’ என்று பல்வேறு விதமாக கூப்பாடு போடுகிறார்கள். குட்டிக் கரணங்கள் அடிக்கிறார்கள். இதிலிருந்து கதிரவன் போன்றவர்கள் விலகியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் பேசியே ஆக வேண்டிய நேரத்தில்கூட கதிரவன் வெண்டைக்காயை வதக்குவது சமயங்களில் எரிச்சலையும் நெருடலையும் தருகிறது.
“டாஸ்க் நேரத்துல பேச மாட்டேன். அப்புறமா நிதானமா பேசுவேன்.. அதுதான் நல்லதுன்னா நீங்க பிக் பாஸ் வீட்டுக்குள்ளயே வந்திருக்கக்கூடாது. இம்மாதிரியான சூழல்களை எதிர்கொள்வதுதானே இந்த விளையாட்டு?! இந்த வீடு மட்டுமல்ல, வெளியிலும் அப்படித்தானே இருக்கும்?” என்றெல்லாம் கதிரவனை இறங்கி அடித்தார் ஷிவின். ஆனால் இவர்கள் செய்த விவாதமெல்லாம் வீண்தான். அமுதவாணனைத் தவிர அனைவரும் நாமினேஷன் பட்டியலில் இருக்கிறார்கள் என்று தீர்ப்பு சொல்லி விட்டு துண்டை உதறிக் கொண்டே சென்றார் பிக் பாஸ்.
வீட்டிற்குள் நுழைந்த இரண்டு வறுவல்வாதிகள்
இரண்டு சிறப்பு விருந்தினர்கள் உள்ளே வந்தார்கள். ஒருவர் நமக்கு மிகவும் பரிச்சயமானவர். நடிகரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுரேஷ் தாத்தா. தலைப்பா கட்டிக் கொண்டு உள்ளே வந்தார். இன்னொரு அஹமத். யூட்யூப் மற்றும் இன்ஸ்டாவில் பிரபலமானவர். நையாண்டியான நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார், ஒருவரை வறுத்தெடுப்பதில் மாஸ்டராம்.
அமுதவாணனின் புறணி பேசும் தன்மையை நிறைய முறை டார்கெட் செய்து கிண்டலடித்தார் சுரேஷ். ‘அமுதென்பதா விஷமென்பதா.. ‘ என்கிற பாடல் வேறு. ஆனால் அதற்கு அமுது பொருத்தமானவர்தான். கமலின் முன்னால் அசிமை பயங்கரமாக போட்டுக் கொடுத்து விட்டு, இன்னொரு புறம் அசிமுடன் தோளிலும் கை போட்டுக் கொள்கிறார்.

ஒவ்வொரு போட்டியாளரையும் ஒரு பெட்டிக்குள் போட்டு விட்டு அன்பாக்ஸ் செய்ய ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு பிராடக்ட்டின் நிறை குறைகளை இருவரும் ஜாலியாக, குத்தலான நகைச்சுவையுடன் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆக மனிதர்களும் ஆன்லைன் ஆர்டரில் வந்த பொருள் மாதிரி ஆகி விட்டார்கள். ரிட்டர்ன் பாலிசி இருக்கிறதா என்று தெரியவில்லை. “இந்த வீட்டுக்கு ஆறு முறை வந்திருக்கேன். பிக் பாஸ் நல்ல அடையாளத்தை தந்தது. நிறைய படங்களில் நடித்தேன்" என்று பெருமிதமாகச் சொன்ன சுரேஷ் தாத்தாவை பாசத்துடன் வரவேற்றார் பிக் பாஸ் தாத்தா.
முதலில் மைனா இருந்த பெட்டி திறக்கப்பட்டது. “இறங்கி செய்வாங்க... தனக்குன்னு ஒரு மார்க் பதிப்பாங்கன்னு எதிர்பார்த்தோம். ஆனா எங்க இருக்காங்கன்னு தேட வேண்டியதா இருக்கே?” என்பது மைனா மீதான விமர்சனம். மணிகண்டன் போனதில் இருந்தே களை இழந்திருக்கும் மைனாவின் முகம் இன்னமும் சுருங்கிப் போனது.
‘விஷபாட்டில் அமுதவாணன்' – சுரேஷின் கலாய்
அடுத்த பெட்டி ஏடிகே. “பாட்டு, கலாய்லாம் சூப்பர். ஆனா மூலைக்கு மூலை உக்காந்து புறணி பேசறீங்க. முகத்திற்கு நேரா சொல்ல வேண்டியதுதானே?” என்றார் சுரேஷ். “உடனே உணர்ச்சிவசப்படறீங்க... அனுதாபம் தேடறீங்க” என்றார் அஹ்மத். ஷிவினின் பெட்டி திறக்கப்பட்ட போது ‘I take back my welcome’ என்று கமென்ட் செய்தார். வந்தவர்கள் தங்களைப் பற்றி என்னென்ன சொல்லப் போகிறார்களோ என்கிற பதட்டம் அனைவருக்கும் இருந்தது. ஒருவரைத் தவிர. அவர்தான் ‘அசராத’ அசிம்.

ஷிவின் மீதான நிறை, குறைகளை ஆரம்பித்தார் சுரேஷ். “உங்க மேல நிறைய எதிர்பார்ப்பு இருக்கு. ஆனா சனிக்கிழமை மட்டும்தான் பேசறீங்க.. அரிசி புடைக்கற மாதிரி உங்க தொண்டை நரம்பு புடைக்கறதைப் பார்க்க பயமா இருக்கு. அத்தனை கத்தறீங்க.. சில சமயங்கள்ல எரிச்சலா இருக்கு. லாஜிக் இல்ல. கமா, ஃபுல்ஸ்டாப்லாம் படிக்கும் போது சொல்லித் தரலையா? நான் ஸ்டாப்பா பேசிட்டே போறீங்க பளிச்சுன்னு நெத்தியடியா பேசி முடிங்க” என்பது இருவரின் கலவையான கமெண்ட்டாக இருந்தது. “அட! மைக் போட்டிருக்காங்களே?" என்று இவர்கள் கிண்டலடிக்க, சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார் ஷவின்.
அடுத்தது அசிம். உள்ளூற ஜெர்க் உடன்தான் இவர்கள் அசிமை நெருங்கினார்கள் என்று சொல்ல வேண்டும். “உங்களைப் பத்தி பேச ஒரு எபிசோட் பத்தாது. மத்தவங்களை தாழ்த்தி, தற்புகழ்ச்சி பேசறீங்க.. விஷபாட்டில்ன்னு வேற யாரையோ சொன்னீங்க. அட்ரஸ் மாத்தி போயிடுச்சு (இல்லையா அமுது?!) நூறு மார்க் எடுக்க வேண்டிய ஆள் எண்பது மார்க் எடுக்கற மாதிரி இருக்கு. மத்தவங்களை கமெண்ட் பண்ற நீங்க, உங்களைச் சொன்னா ஏத்துக்க மாட்றீங்க” என்பது இவர்களின் எதிர்வினையாக இருந்தது.
முகத்தை சிரித்தாற் போலவே வைத்திருக்கும் தன் எக்ஸ்பிரஷனை இப்போதும் அசிம் தர “இதுக்கு என்னதான் அர்த்தம் தம்பி?” என்று விசாரித்தார் சுரேஷ். ‘கவனிக்கிறேன் மற்றும் பரிசிலீக்கிறேன்' என்பது அசிம் சொன்ன விளக்கம். (நம்பிட்டோம்!;) “அப்படித் தெரியலயே. ஒரு விருது கொடுத்தா அதை மறுக்கறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு. எதுக்கு தூக்கிப் போடணும்? பாவம்ப்பா அசிமு. இவரு நல்லதுக்கு டீ போட்டுக் கொடுத்தாக் கூட வில்லங்கமா முடியுது” என்று கிண்டலும் விமர்சனமும் கலந்து வந்தது.
அடுத்தது கதிரவன். “மைனாவிற்கு சொன்ன அதே விஷயம்தான். ஒண்ணும் பெரிசா இல்லை. ரோம்ல ரோமனா இருக்கணும்” என்று சொல்ல “கோபத்தைக் கட்டுப்படுத்தற கலை எனக்குத் தெரியும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கதிரவன். அடுத்ததாக ‘விஷ பாட்டில்’ அமுதவாணன் பக்கம் நகர்ந்தவர்கள் “கேம்ல சுயநலமா இருக்கறது தப்பில்ல. ஆனா கேமைத் தாண்டியும் தந்திரமா இருக்கீங்களே தம்பி.. க்ரூப்லயும் கலந்துக்கறீங்க. புறமும் பேசறீங்க” என்று அமுதவாணனை அம்பலப்படுத்தினார்கள்.

“இவரைப் பத்தி கடைசியா வெச்சுப்போம். பேச ஒரு நாள் போதாது. என்ன சொன்னாலும் புத்தர் மாதிரியே பாப்பாரு” என்று விக்ரமனைப் பற்றி சொன்ன சுரேஷ், கடைசியில் அவரிடம் வந்தார்கள். “நீங்க சொல்ற அட்வைஸ்லாம் ஓகே. ஆனா பொழுதுபூரா அதையே சொன்னா போரடிக்குது. நாட்டாமைத்தனம் ஓவரா இருக்கு.” என்று அஹ்மத் சொல்ல “இவரை ஃபேக்குன்னு சொல்லாதீங்க. பேக்குன்னு சொல்லலாம்” என்று சுரேஷ் ஆரம்பித்தவுடன் தாங்க முடியாமல் சிரித்து விட்டார் ஷிவின். பக்கத்திலிருந்த அசிம் கண்டிப்புடன் பார்த்தார். “இப்படி சிரிச்சு சிரிச்சுதான் பல பிரச்சினைகள் வந்தது..இன்னுமா?!”
விக்ரமனுக்கு சப்போர்ட் செய்த சுரேஷ் “நீங்க செய்யதெல்லாம் ஓகே. ஆனா ஏன் பாதில நிறுத்திடறீங்க. ஃபுல்லா இறங்கி அடிங்க தம்பி” என்று பற்ற வைத்தார். “மத்தவங்களை எதிர்த்து எதிர்த்தே முன்னாடி வந்துடறீங்க” என்றார் அஹமத்.
சுரேஷ் தந்த வில்லங்கமான புத்தாண்டு பரிசுகள்
“உங்க எல்லோருக்கும் பரிசுகள் கொண்டு வந்திருக்கேன்” என்று தன் ஜோல்னாப் பையிலிருந்து கிறிஸ்துமஸ் தாத்தா போல பரிசுகளை எடுத்தார் சுரேஷ் ‘ஜனனி.. ஜனனி’ பாடல் கொண்ட சிடியை அமுதுவிற்கு பரிசு அளித்தது ஒரு நல்ல குறும்பு. ஷிவினுக்கு ரூல் புத்தகம், அசிமிற்கு ஐஸ் க்யூப், மைனாவிற்கு "காணவில்லை போட்டோ”, விக்ரமனுக்கு எனர்ஜி டிரிங்க், ஏடிகேவிற்கு வெத்தலை இடிக்கும் உரல் போன்றவற்றைத் தந்து ஊர்க்கிழவி போல சுரேஷ் நடித்துக் காண்பித்தது சிறப்பு. சுரேஷின் குறும்பிற்கு அமுதவாணனும் ஈடு கொடுத்தார்.

பிறகு நடந்தது ஒரு கலந்துரையாடல். அசிம் அப்போதும் அசராதவாராக இருந்தார். “எதுக்கும் அசர மாட்டேன்னு சொன்னது கமலையும் சேர்த்து சொன்னதா பார்வையாளர்கள் புரிந்து கொண்டிருக்கலாம்" என்று சுரேஷ் சுட்டிக் காட்டியது உண்மை. “ச்சே.. ச்சே.. அப்படியில்ல” என்று பதறினார் அசிம். “என்னா தம்பி. உங்க நன்மைக்கு சொன்னா.. என் மேல பாயறீங்க” என்று சுரேஷ் சற்று குரலை உயர்த்தியதும் அசிம் சற்று அடங்கினார்.
சுரேஷூம் அஹமதும் செய்த வறுவல், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஊக்கமுள்ள உணவாக மாறியிருக்குமா அல்லது அது வெறும் தீய்ந்து போன வறுவலா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும்.