Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 93: `நான் கமல் சாரை அப்படி சொல்லவில்லை'- அசிம்; சாதாரணமாக முடிந்த ‘Sacrifice Task’

பிக் பாஸ்

‘என் பெயரை பச்சை குத்தச் சொன்னா என்ன செய்வீங்க?’ என்று கதிரவனிடம் கேட்டு அவரை ஜெர்க் ஆக்கினார் ஷிவின்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 93: `நான் கமல் சாரை அப்படி சொல்லவில்லை'- அசிம்; சாதாரணமாக முடிந்த ‘Sacrifice Task’

‘என் பெயரை பச்சை குத்தச் சொன்னா என்ன செய்வீங்க?’ என்று கதிரவனிடம் கேட்டு அவரை ஜெர்க் ஆக்கினார் ஷிவின்.

பிக் பாஸ்
ஏறத்தாழ 90 நாட்களுக்கு மேல் வீட்டில் அடைந்து கிடக்கும் போட்டியாளர்களுக்கு புதிய முகங்களைப் பார்த்தவுடன் உற்சாகம் வந்திருக்கும். தன்னைப் பற்றய ரிப்போர்ட் என்ன என்பதில் ஆர்வமும் பயமும் கலந்து வந்திருக்கும். ஆனால் விருந்தினர்கள் வந்த இரண்டு எபிசோடுகளும் பார்வையாளர்களுக்கு அதே ஆர்வத்தை அளித்திருக்குமா என்பது சந்தேகம்தான். இரண்டுமே சலிப்பாக இருந்தன. தேர்வு நிறைவதற்கு முன்பே ரிப்போர்ட் கார்டு தந்த கதையாக இருந்தது. 

சக போட்டியாளர்களிடம் சொல்ல முடியாத விஷயங்களை, கோணங்களை வந்திருந்த விருந்தினர்களிடமாவது சொல்வார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதே அரைத்த மாவுதான்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

அசிமிற்கும் விக்ரமனிற்கும் ஒரு குணாதிசயத்தில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கடப்பாறையை முழுங்கி விட்டு இஞ்சி கசாயம் குடிப்பதில் அசிம் வல்லவர். அப்படியொரு சூப்பர் திறமை அவரிடம் இருக்கிறது. ஆனால் விக்ரமனோ ஒரு துண்டு இட்லிக்கே தொண்டை விக்குகிறார். ஒரு சிறு விமர்சனம் கூட அவரைப் பதற வைத்து விடுகிறது. “இத்தனை நாள் மத்தவங்களை எதிர்த்தேவா நான் முன்னாடி வந்திருக்கேன்னு சொல்றீங்க?” என்று அஹமதிடம் அதிர்ச்சியுடன் விசாரித்தார். “அது மட்டுமேன்னு சொல்லலை. அப்படியொரு டிராக்கை பிடிச்சிட்டீங்கன்னு தோணுது” என்று சிரித்தார் அஹமது.

அசிம்
அசிம்

“ஏம்ப்பா அசிமு.. டீ போட்டுக் கொடுத்தே மத்தவங்களை கரெக்ட் பண்றியாமே?” என்று ஜாலியாகப் பற்ற வைத்தார் சுரேஷ். ‘டீ போட்டுக் கொடுத்தது ஒரு குத்தமாய்யா?” என்று அமுதுவிடம் அலுத்துக் கொண்டார் அசிம். (கிச்சனில் டீ போடுவது ஓகே. சண்டையின் போது பெண்களை ‘டி’ போட்டுப் பேசுவதை அவர் கைவிடுவது நலம்). ‘என்னைப் பத்தி பாசிட்டிவ்வா எதுவும் வரலையே?’ என்று சிணுங்கினார் ஷிவின். “எல்லாத்துக்கும் முன்னாடி ஓடி வராத. நிதானமா பொறுமையா இரு” என்று அமுதவாணனுக்கு டிப்ஸ் தந்தார் சுரேஷ். விக்ரமனைப் போலவே அமுதுவிற்கும் தன் இமேஜ் வெளியில் எப்படித் தெரிகிறதோ என்கிற பதட்டம் இருக்கிறது.

இருவரின் மொக்கை தாங்காமல் ‘சுரேஷ்.. அஹமத்.. கிளம்புங்க’ என்று அவர்களைப் பற்றி விட்டார் பிக் பாஸ். ‘அமுதவாணன் விஷ பாட்டில் இல்லை’ என்று சுரேஷ் உரத்த குரலில் அறிவிப்பு செய்தவுடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அமுது. சில நொடிகள் தாமதித்து “அவரு விஷ ஃபாக்டரி” என்று சுரேஷ் காலை வார, மீண்டும் கவலை மேகம் அமுதுவை சூழ்ந்து கொண்டது.

“நான் கமல் சாரைச் சொல்லலை” – தெளிவுப்படுத்திய அசிம்

“அமுதவாணனையும் ஏடிகேவையும் வெச்சு செஞ்சுட்டாங்க” என்று அசிம் பீற்றிக் கொள்ள “உன்னைத்தான் அதிகம் செஞ்சாங்க” என்று ஓடோடி வந்தார் அமுது. ‘மேய்க்கறது எருமை.. இதில என்ன பெருமை?’ என்கிற பொன்மொழி போல “ஏம்ப்பா. இதெல்லாம் ஒரு பெருமையா?’ என்று கிண்டலடித்தார் ஷிவின். காமிரா முன்பு தனியாக வந்த அசிம் “எதுக்கும் அசர மாட்டான் இந்த அசிம்-ன்னு நான் சொன்னது மத்தவங்க சொன்ன கமெண்ட் காரணமாகத்தான். நிச்சயம் கமல் சாருக்காக இல்லை. அவர் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கு. இந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சேருங்க” என்று வேண்டிக் கொண்டார். எனில் சுரேஷ் சூசகமாக சுட்டிக் காட்டிய போதே அசிம் நிதானமாக கேட்டிருக்க வேண்டும்.

அமுதவாணன்
அமுதவாணன்

அசிமின் இந்த ‘ஒருவகையான மன்னிப்பு’ நல்ல விஷயம்தான் என்றாலும் இதில் ஒரு முக்கியமான நெருடல் இருக்கிறது. கமல் விஐபி மற்றும் பிக் பாஸ் ஆங்க்கர் என்பதால் அவரை எதிர்த்துப் பேசியது போன்ற பிம்பம் தனக்கு வந்து விடக்கூடாது என்று அசிம் ஜாக்கிரதையாக கருதுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விஐபி சொன்னால் மட்டுமல்ல, ஒரு சாதாரண நபர் சொன்னால் கூட அதில் நியாயம் இருந்தால் ஏற்றுக் கொள்வதுதான் நேர்மை. ‘விஐபிக்கு பயப்படுவேன், சாதாரண நபர் என்றால் தூக்கி எறிவேன்’ என்பது அறமற்ற சிந்தனை. ‘பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்கிற புறநானூற்று வரிகளை ‘தமிழ் ஆர்வலரான’ அசிம் நிச்சயம் பின்பற்ற வேண்டும். சக ஹவுஸ்மேட்ஸ்களின் அபிப்பிராயங்களில் நியாயம் இருந்தால் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். ‘எதுக்கும் அசராதவண்டா இந்த அசிமு” என்று பன்ச் பேசுவது ஒருவகையான முதிர்ச்சியற்ற தன்மை. சினிமா ஹீரோக்களின் அபத்தமான பாதிப்பு.

“அசிமுக்கு எப்படி 80 மார்க் தந்தாங்க?” என்று பக்கத்து மாணவனின் ரிசல்ட் பார்த்து பொறாமைப் படுவது போல விக்ரமன் யோசிக்க “ஒவ்வொரு விஷயத்திற்கும் அர்த்தம் தேடாதீங்க ப்ரோ” என்று ஆறுதல் சொன்னார் அமுது. “ஆனா என்ன வறுத்தாலும் தூண் மாதிரி அசிம் இருக்கான் பாருங்க.. அங்கதான் அவன் நிக்கறான்... அந்த க்வாலிட்டி எனக்குப் பிடிச்சிருக்கு” என்று மனமார பாராட்டினார் ஏடிகே. “அவர் மன்னிப்பு கேக்கறதை உணர்ந்து கேக்கணும். கேட்ட பிறகு அதே விஷயத்தை மறுபடி செய்யக்கூடாது” என்பதை நூறாவது முறையாக சொன்னார் விக்ரமன். (அது எப்பத்தான் நடக்குமோ?!).

“புறணி பேசறதா சொல்றாங்க. ஓகே.. அசிம் கிட்ட ரைடக்டாவே சொல்ல முடியும். ஆனா வாரா வாரம் சொல்லிட்டு இருந்தா சலிப்பா இருக்கு. அதனாலதான் மத்தவங்க கிட்ட அனத்த வேண்டியிருக்கு. அவன் கிட்ட போய் பேசினா சண்டைதான் வரும்” என்று ஏடிகே சொன்னதில் ஒருவகையான நியாயம் இருந்தது.

விக்ரமன்
விக்ரமன்

நம்மை விடவும் அதிகாரம் உள்ளவர்களிடம் பிரச்சினை ஏற்பட்டால் நேராகச் சென்று பேச முடியாது. பாதிப்பு நமக்குத்தான் வரும். எனவே மற்றவர்களிடம் புலம்பி மனஆறுதல் அடைவதை நடைமுறையில் பார்த்திருக்கிறோம். ஏடிகே பாட்டுப் பாட சற்று நேரம் உற்சாகமாகப் போனது.

சிறப்பு விருந்தினர்களின் வருகை, போட்டியாளர்களின் மனதில் நிறைய சஞ்சலங்களை உருவாக்கியிருக்கிறது. “இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கு. நல்லா பத்தி எரியட்டும்-ன்னு இவங்களை அனுப்பியிருப்பாங்களோ” என்று நள்ளிரவில் திடீரென்று எழுந்து விக்ரமன் கேட்க “இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கு. இப்பவாவது ஏதாவது பண்ணித் தொலைங்கன்னு செய்தி சொல்றாங்களோ?!” என்று சிரித்தார் மைனா.

‘சவால்களை ஆரம்பிக்கலாமா? – சாதாரணமாக முடிந்த ‘Sacrifice Task’

‘மாரி’ பாடலுடன் நாள் 93 விடிந்தது. “சண்டை போட்டுட்டு உடனே பேசறாங்கன்னு சொல்றாங்க.. இங்கனயே கிடக்கோம். பேசித்தானே ஆகணும்?!” என்று காலையிலேயே நியாயமான லாஜிக் பேசினார் அமுது. “24x7 பார்த்தா மக்களுக்குப் புரியுமே.. நாம உடனே பேசறதில்லை. ஒருத்தர் கூட சண்டை வந்தா, ரெண்டு மூணு நாள் வரைக்கும் கூட நான் பேசாம இருப்பேன்.. அமுதவாணன்.. விக்ரமன் .. உங்க ரெண்டு பேரு கூட பிரச்சினை வந்தா நாம.. உக்காந்து பேசறோம். ஸால்வ் பண்ணிக்கறோம். ஆனா சில விஷயங்கள் அப்படி முடியதில்லை” என்று ஆதங்கப்பட்டார் ஏடிகே.

‘ஃபைனலுக்காக எந்த அளவுக்கு நீங்க போகத் தயாரா இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?’ என்று Sacrifice Task-ஐ ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘அய்யோ.. என்ன செய்யச் சொல்லப் போறாங்கன்னு தெரியலையே’ என்று ஒவ்வொருவருக்குள்ளும் பதட்டம் எழுந்தது. ஆனால் இது கடந்த சீசன்களைப் போல பெரிய சவால்களாக இல்லை. பஞ்சாயத்தோ, சர்ச்சையோ எழவில்லை. “தம்பி. அந்த டீ கப்பை நகர்த்தி வை” என்கிற மாதிரி சாதாரணமாக முடிந்து விட்டது. மைனா தனது முடியை சற்று கத்தரித்துக் கொண்டார். உள்ளூற அவர் வருத்தப்பட்டாலும் பார்க்க ‘க்யூட்’டாக இருந்தார். பெண்கள் முடியை இழப்பது அவர்களுக்கு துயரமான விஷயம் என்றாலும் அந்த சென்டிமென்ட்டில் இருந்து வெளியே வர வேண்டும். “யோகி செமயா திட்டுவான்” என்று வருத்தப்பட்டார் மைனா. ‘நல்லா விளையாடு’ என்று சொன்னவரே கணவர்தானே?!

மைனா
மைனா

‘என் பெயரை பச்சை குத்தச் சொன்னா என்ன செய்வீங்க?’ என்று கதிரவனிடம் கேட்டு அவரை ஜெர்க் ஆக்கினார் ஷிவின். “அசிமை மொட்டை அடிக்கச் சொன்னா நிச்சயம் மறுத்துடுவான். அவன்தான் அடிக்கடி தலையை வாரிட்டு இருக்கான்” என்று கிண்டலடித்தார் ஏடிகே. இரண்டாவது சவால் அசிமிற்கு. பெரிதாக ஒன்றுமில்லை. லுங்கி, பனியன் அணிந்து வீட்டிற்குள் உலாத்த வேண்டும். வீட்டின் வாசலில் கிடக்கும் பால் பாக்கெட்டை எடுக்க வந்த ‘அங்கிள்’ மாதிரியாக உருமாறினார் அசிம். “நல்லாத்தான் இருக்குல்ல.. நல்லாத்தான் இருக்கு’ என்று பிறகு ஆறுதல் அடைந்தார். “வீட்ல இயல்பா உலாத்தற ஆணைப் பார்க்கற மாதிரி இருக்கு’ என்று ஷிவின் சொன்னது ஒரு நல்ல கமெண்ட்.

மூன்றாவது சவால் விக்ரமனுக்கு. கை, கால்களில் உள்ள முடிகளை ‘வேக்ஸ்’ செய்ய வேண்டுமாம். பதிலாக தாடியை எடுக்கச் சொல்லியிருக்கலாம். அதைச் செய்ய முன்வந்த மைனா, வலியால் அலறிய விக்ரமனிடம் “இப்பத் தெரியுதா. பெண்களோட வலி” என்று கேட்டார். கூட அமர்ந்திருந்த அமுதவாணனின் இம்சைகளை தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தார் விக்ரமன். “இதை எனக்கு கொடுத்திருக்கலாம்” என்று அனத்தினார் பால் பாக்கெட் அங்கிள்.

‘எதுக்கு பிக் பாஸ் வந்தீங்க?... Blah.. blah..blah..

சரியாக டியூன் செய்யாத எப்ஃஎம் ரேடியோ மாதிரியான குரல்கள் கேட்டன. வீஜே பார்வதியும் ஷோபனாவும் உள்ளே நுழைந்தார்கள். “கேட்டை மூடுங்கடா. யாரையும் உள்ளே விடாதீங்க” என்று ஹவுஸ்மேட்ஸ் ஜாலியாக வழியை மறித்தார்கள். வீஜே பார்வதியும் ஷோபனாவும் உள்ளே வந்தார்கள். ‘வாங்க.. ப்ரோ. சண்டை போடலாம்..” என்று பார்வதி ஜாலியாக அழைக்க, அதுவரை இந்த வீட்டில் தராத ஒரு புன்னகை எக்ஸ்பிரஷனை தந்தார் அசிம். (இதை நிறைய தரலாமே ப்ரோ?!). ‘நீங்க பார்க்க நயனதாரா மாதிரியே இருக்கீங்க” என்று மைனாவை உசுப்பேற்றி விட்டார் ஷோபனா. (சிவ.. சிவா!).

விஜே பார்வதி
விஜே பார்வதி

இருவரும் போட்டியாளர்களை வைத்து நேர்காணல் செய்ய ஆரம்பித்தார்கள். “எதுக்கு பிக் பாஸ் வந்தீங்க?” என்று ஆரம்பித்து பல கேள்விகள். அவர்களைப் பற்றிய மீம்களும் காட்டப்பட்டன. இந்தக் கேள்விகளையும் விளக்கங்களையும் நிறைய பார்த்து விட்டோம். புதிதாக ஒன்றுமில்லை. தான் வெளியில் எப்படித் தெரிகிறோம் என்கிற தெளிவுகளையும் குழப்பங்களையும் விருந்தினர்களின் வருகை போட்டியாளர்களுக்குத் தந்திருக்கும். இந்த மாற்றங்கள் வீட்டின் உள்ளே எப்படியாகப் பிரதிபலிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.