சிறப்பு விருந்தினர்கள் கிளம்பிச் சென்ற பிறகு, நிகழ்ச்சி சிறப்பாக மாறத் தொடங்கியது. உற்சாகம்தான். கலகலப்புதான். அசல், ராபர்ட், சாந்தி, முத்து ஆகியோரின் மீள்வருகை, பிக் பாஸாக மாறி மற்றவர்களை அடக்கி ஒடுக்கிய ஏடிகே செய்த அலப்பறை போன்றவை சுவாரசியத்தை அளித்தன. ஒரே திருஷ்டிப் பரிகாரம், ‘Fun ஆக ஆடுங்க’ என்று சொல்லியும் விளையாட்டில் அசிம் அடைந்த கோபம்தான்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
அசிமை அமர வைத்து ஷோபனா கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். “உங்க பேச்சுதான் உங்க பாசிட்டிவ். விடற வார்த்தைகள்தான் நெகட்டிவ்” என்று ஷோப்ஸ் சுட்டிக் காட்ட “யெஸ். எனக்குப் புரியுது. அந்த நேரத்துச் சூட்டில் வார்த்தைகளை விட்டு விடுகிறேன்.” என்று தன்னை உணர்ந்தது போல் பேசிய அசிம், பேச்சு.. ஏச்சு.. மூச்சு.. என்று ரைமிங்கில் பிளந்து கட்டினார். விஷயமே இல்லாமல், எதுகை, மோனையில் பேசி தமிழ்ச் சமூகத்தை மயக்குவது ஒரு ஆதிகாலத்து டெக்னிக். அடுத்ததாக கதிரவனை அமர வைத்த ஷோபனா, “போல்டா பேசுங்க.. ஜெயிக்கற வேகமே உங்க கிட்ட இல்லையே?” என்று சுட்டிக்காட்ட “ஆம். மற்றவர்களை முன்னே வெச்சட்டு நான் பின்னாடி நிக்கறேன்” என்று புன்னகையுடன் வாக்குமூலம் தந்தார் கதிர். (தெய்வீகச் சிரிப்பய்யா உமது!).

வழக்கம் போல் அணிலைக் காட்டி விட்டு ‘Shoot the குருவி’ பாடலைப் போட்டார் பிக் பாஸ். நாள் 94 அணிலுடன் விடிந்தது. தியாகம் செய்யும் டாஸ்க் தொடர்பாக, கடந்த சீசன்களில் எல்லாம் அனல் பறந்தது. ஆனால் இதில் கருணையோடு எளிதான சவால்களைத் தந்து சம்பிரதாயத்திற்கு நடத்தி முடித்து விட்டார் பிக் பாஸ். கதிரவன் தனது ஷூவை பெயிண்ட்டில் முக்க வேண்டுமாம். பழைய ஷூவை எடுத்து கணக்கு காண்பிக்காமல், தனக்குப் பிடித்த, புதிய வெள்ளை ஷூவை கதிரவன் தியாகம் செய்தது சிறப்பு. “சோப் வாட்டர்ல போட்டா கறை போயிடுமில்ல” என்று கதிரவனின் காலணிக்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் ஷிவின்.

‘அணிந்திருக்கும் ஆடையைத் தவிர அனைத்து உடைகளையும் ஒப்படைத்து விட வேண்டும். மற்றவர்களின் உடையை அணிய வேண்டும்’ என்பது ஏடிகேவிற்கு அளிக்கப்பட்ட சவால் ‘வெளிய அனுப்பறதுக்கு ஒத்திகை பார்க்கறாங்களோ” என்று ஜாலியாக சந்தேகப்பட்டார் ஏடிகே. பட்டாபட்டி அண்ட்ராயர் தவிர அனைத்தையும் வழங்கி விட்ட ஏடிகேவின் தியாகவுள்ளத்தைப் பாராட்டினார் பிக் பாஸ்.
வீட்டிற்குள் உற்சாகமாக வந்த முன்னாள் போட்டியாளர்கள்
‘ராயபுரம் பீட்டரு’ என்கிற பாடல் ஒலிக்க ராபர்ட் மாஸ்டரும் அசல் கோளாறும் உள்ளே வந்தார்கள். பழைய நண்பர்களைப் பார்த்ததும் உள்ளே இருந்தவர்களுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது. ‘வாடா. வாடா.. என்.. செல்லாக்குட்டி” என்று அசலை தூக்கிக் கொண்டார் அசிம். அசலும் பதிலுக்கு “எங்க அண்ணன்.. எங்க அண்ணன்...” என்று பாசம் காட்ட, இருவரும் ஸ்மோக்கிங் ரூமில் ஒதுங்கி அன்பைப் பொழிந்து கொண்டார்கள். “ஒன்பதுக்கு அப்புறம் பத்து.. எங்க அண்ணன் அசிம்தான் கெத்து” என்று கூவாத குறையாக ஆனந்தம் அடைந்தார் அசல்.

ஏடிகே தொடர்பாக அசலுக்கு ஏதோ பஞ்சாயத்து போல் இருக்கிறது. ‘உங்க கிட்ட பேச விரும்பலை” என்று சிணுங்கினார். “பேசாட்டி போ.. என்னன்னு காரணமாவது சொல்லு” என்று ஏடிகே கேட்டாலும் அசல் சொல்லவில்லை. “அடிச்சுக் கூட கேப்பாங்க. சொல்லிடாதே’ என்கிற மோடிலேயே இருந்தார். அசலின் புறக்கணிப்பு காரணமாக, பிறகு கண்கலங்கிய ஏடிகேவை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.
பந்து அடித்து விளையாடும் ஒரு ஜாலியான டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். இரண்டு பந்துகள் இருக்கும். அதை பெயிண்ட்டில் தோய்த்து மற்றவர் மீது எறிய வேண்டும். எவருடைய உடையில் குறைவான பெயிண்ட் மார்க் இருக்கிறதோ அவரே வெற்றியாளர். ஆட்டம் உற்சாகமாக ஆரம்பித்தது. டிரம்மை எடுத்து தன்னை மூடிக் கொண்ட கதிரவனின் புத்திசாலித்தனத்தை பாராட்டிய பிக் பாஸ், “ஆனா.. எடுத்துடுங்க தம்பி” என்று சொல்லி விட்டார். ஜாலியான விளையாட்டாக முடிய வேண்டிய ஆட்டம். இதிலும் சண்டை வந்து விட்டது. “பந்தை தூக்கி அடிச்சு விளையாடு. தொட்டு தொட்டு விளையாடற” என்று அசிம் சொல்ல, “வேகமா அடிச்சா வலிக்கும்ப்பா.. மத்த இடத்துல பட்டுடும்” என்றார் அமுது. அது இன்டோர் என்பதால் பெயிண்ட் அநாவசியமான இடங்களில் பட்டு கறையை ஏற்படுத்தி விடலாம் என்பது அமுதவாணனின் எண்ணமாக இருக்கலாம்.

எப்போதும் இயல்பாக நட்புடன் பேசுவது போன்ற தொனியில் “இதுல கூட சண்டை போடாதடா” என்று அமுதவாணன் சொல்லி விட, அசிமிற்குள் இருக்கும் ‘மரியாதை மோடு’ சட்டென்று விழித்துக் கொண்டது. அதுவரை நட்பாக பேசி விட்டு சண்டை வரும் போது மட்டும் மரியாதையை திடீரென மிரட்டிக் கேட்டு வாங்குவது அசிமின் ஸ்டைல். “மரியாதையாப் பேசுங்க. வாடா.. போடா. ன்னு கூப்பிட்டா அவ்வளவுதான்டா.” என்று மறுபடியும் தனக்குள் இருக்கும் மிருகத்தை அவிழ்த்து விட்டார். பேசாமல் அசிம் தனது பெயரை ‘அசிம் சார்’ என்று கெஜட்டில் மாற்றிக் கொண்டால் மற்றவர்களுக்கு புண்ணியமாகப் போகும்.
‘மரியாதை ராமனாக மாறிய அசிம்’
‘தொட்டு விளையாடாதீங்க. பந்தை எறியணும்..' என்று பிக் பாஸூம் அசிமின் தரப்பிற்கு ஆதரவு தெரிவிக்க, அசிமிற்கு உற்சாகம் ஏற்பட்டது. “இப்பப் பாரு.. அமுதவாணனை டார்கெட் பண்ணுவான்” என்று மற்றவர்கள் சொல்வதற்கு ஏற்பவே நடந்தார் அசிம். இறுதியில் இந்தப் போட்டியில் ஏடிகே வெற்றி. பரிசு கூட ஏதும் கிடையாது. அதற்கே இத்தனை சண்டை. “வேற லுங்கி கொடுங்க.. பிக் பாஸ்.. ரொம்ப அசெளகரியமா இருக்கு.. ப்ளீஸ்” என்று தனியாக நின்று காமிராவில் உருக்கமாக வேண்டுகோள் வைத்த அசிமைப் பார்க்க வேறு நபரைப் பார்ப்பது போலவே இருந்தது. அத்தனை பணிவு. அதிகாரம் வைத்திருப்பவர்களிடம் பணிவையும், சாதாரண நபர்களிடம் துணிவையும் காட்டுவது முறையற்றதல்ல. அனைவரிடமும் ஒரே மாதிரியான மரியாதையைத் தருவதுதான் நல்ல பண்பு.

முத்துவும் சாந்தியும் அமைதியாக உள்ளே வந்தார்கள். “என்னதிது.. கிச்சன் இவ்வளவு கண்றாவியா இருக்கு” என்று சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். “பேதில போவானுக.. இப்படி வெச்சிருக்காங்களே” என்று புலம்பினார் முத்து. வெளியே ஏடிகே கவிதை மாதிரியான ஒன்றைச் சொல்ல ‘சூப்பர்டா” என்று அசிம் பாராட்டினார். மக்கள் உள்ளே வந்து கிச்சனில் ‘சர்ப்ரைஸ்’ தந்த சாந்தியையும் முத்துவையும் உற்சாகமாகக் கட்டிக் கொண்டார்கள். “நாங்களா அனுப்பற வரைக்கும் திரும்பிப் போயிடக்கூடாது” என்று முத்துவை செல்லமாக எச்சரித்தார் பிக் பாஸ்.
உப்புமா சாப்பிட்டு உயிர்வாழும் பரிதாப ஜீவன்களாக இருந்தாலும் “இங்க நிறைய சிக்கன், மீன்லாம் தராங்க. சாப்பிட முடியாம தூக்கிப் போட்டுறுவோம்.. போதாதக்கு நீச்சல் குளத்துல கூட மீன் இருக்கு..” என்று முத்துவை அமர வைத்து மற்றவர்கள் ஜாலியாக கலாய்த்துக் கொண்டிருக்க, சீரியஸாகவே குளத்தில் எட்டிப் பார்த்தார் முத்து.

சிவப்பு நிற பெயிண்ட் கறைகள் ஆங்காங்க இருந்ததை “எவ்ள ரத்தம் பார்த்தீங்களா.. அத்தனை கடுமையான டாஸ்க்கு.. இது ரத்த பூமி.. நல்லா வந்து மாட்டீனீங்க” என்று மற்றவர்கள் டெரர் காட்டியதால் முத்துவின் முகம் மாறியது. இதையெல்லாம் நம்பும் அளவிற்கு அவர் அப்பாவியா? அல்லது அந்த வேடம் அணிந்தால் ரசிக்கிறார்கள் என்பதால் மிகையாகச் செய்கிறாரா?
பிக் பாஸாக மாறி அலப்பறை செய்த ஏடிகே
‘நீங்களும் ஆகலாம் பிக் பாஸ். இத்தனை நாளா என் கூட குப்பை கொட்டிட்டு இருக்கீங்க. நான் என்னென்னலாம் அலப்பறை பண்ணுவேன்னு உங்களுக்குத் தெரியும். ‘ஒரு நாள் முதல்வர்’ மாதிரி உங்களுக்கும் ஒரு வாய்ப்பு.. ஜமாய்ங்க” என்று இன்னொரு ஜாலியான ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். முதல் சான்ஸ் ஏடிகேவிற்கு கிடைத்தது. பரவாயில்லை, ஃப்ரீஸ் டாஸ்க்கை வைத்து ஜாலியாகவும் உற்சாகமாகவும் பழிவாங்கினார் ஏடிகே. பிக் பாஸின் மாடுலேஷனை சரியாகப் பின்பற்றினார். மற்றவர்களும் இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு பின்பற்றியது பாராட்டத்தக்கது. வந்த அதிர்ஷ்ட வாய்ப்பை வைத்து, முத்துவை கேப்டன் ஆக்கி கிச்சன் ஏரியாவை க்ளீன் செய்ய வைத்தது ஏடிகேவின் புத்திசாலித்தனம். “நான் சொன்னா கேப்பாங்களா?” என்று அப்பாவியாக கேட்டார் முத்து. மற்றவர்கள் உற்சாகமாக இருந்தாலும் ராபர்ட் முன்பு இருந்த அதே சுணக்கத்தோடுதான் அமர்ந்திருந்தார். ‘மூக்குத்தி’ இல்லாத குறையோ?!

ஆக.. வீட்டுக்குள் பழைய உற்சாகமும் கலகலப்பும் திரும்பியிருக்கிறது. மேலும் நபர்கள் உள்ளே வரும் போது இது இன்னமும் பெருகும். காலேஜ் ரீயூனியன் மாதிரியாக இருக்கும். எனவே வரும் நாட்கள் பாசிட்டிவ்வான மோடில் கடக்கும் என்று எதிர்பார்ப்போம்.
இந்த சீசன் முடியப் போவதான மனநிலை இப்போதே ஆரம்பித்து விட்டது. இந்த ஆறாம் சீசனை எந்த அளவிற்கு நீங்கள் விரும்பினீர்கள் அல்லது விரும்பவில்லை?! கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.