Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 97 : பைனலிஸ்ட் ஆனார் அசிம்; இந்த வார எவிக்ஷனில் காத்திருக்கும் ட்விஸ்ட்

பிக் பாஸ் 6 நாள் 97

“இது ஏதோ காலேஜ் ராகிங் மாதிரி இருந்தது. கத்தி வைக்கும் போது, பிக் பாஸ் கூட தடுப்பார்ன்னு எதிர்பார்த்தேன். ஆனா நான் பிக் பாஸ் இல்லை” என்று கமல் சொன்ன போது, இந்த நிகழ்ச்சியின் மீது அவருக்கும் பல விமர்சனங்கள் இருப்பதின் ஒரு துளியை உணர முடிந்தது.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 97 : பைனலிஸ்ட் ஆனார் அசிம்; இந்த வார எவிக்ஷனில் காத்திருக்கும் ட்விஸ்ட்

“இது ஏதோ காலேஜ் ராகிங் மாதிரி இருந்தது. கத்தி வைக்கும் போது, பிக் பாஸ் கூட தடுப்பார்ன்னு எதிர்பார்த்தேன். ஆனா நான் பிக் பாஸ் இல்லை” என்று கமல் சொன்ன போது, இந்த நிகழ்ச்சியின் மீது அவருக்கும் பல விமர்சனங்கள் இருப்பதின் ஒரு துளியை உணர முடிந்தது.

பிக் பாஸ் 6 நாள் 97
‘அபிப்ராயம் உண்மையாகாது’ என்பது போன்ற அற்புதமான ஒன்லைனர்களால் இந்த எபிசோடை அழகாக்கினார் கமல். ஆனால் ஒரு விஷயத்தில் சற்று ஓவர் ஆக்ட் செய்து விட்டாரோ என்று தோன்றுகிறது. விருந்தினர்கள் தந்த இரண்டாவது டாஸ்க் மிகைதான். கடுமையாக ஆட்சேபிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் பிக் பாஸிற்கு இது புதிதல்ல.

நாமினேஷன் பிராசஸில் முகத்தில் கரியைப் பூசுவது துவங்கி சமையல் கழிவுகளில் கையை விட்டு தேடச் சொல்வது வரை எத்தனையோ அவமதிப்புகள் இதுவரையான சீசன்களில் ‘விளையாட்டு’ என்கிற பெயரில் நடந்துள்ளன. இவற்றையெல்லாம் பற்றி அந்தந்த சமயங்களில் இந்தக் கட்டுரைத் தொடரில் ஆட்சேபம் எழுப்பப்பட்டிருந்தது. ‘கமல் இதை தட்டிக் கேட்பாரா?’ என்றும் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் Sacrifice 2.O-க்கு மட்டும் செலக்ட்டிவ்வாக கமல் பொங்கியது ஒரு நெருடல். சரி, இதற்காகவது ஆட்சேபித்தாரே என்று மகிழ வேண்டியதுதான். அதே சமயத்தில், விருந்தினர்கள் தங்களின் தரப்பைச் சொல்வதற்கு அவர் வாய்ப்பு தராமல் போனது முறையல்ல.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

“எல்லோருக்குள்ளயும் ஒரு டார்க் சைட் இருக்கும். அதுலயும் கூட்டமா சேர்ந்துட்டா அந்த கும்பல் மனோபாவம் வன்மமா வெளிப்படும். மத்தவங்க ஈகோவை, நசுங்கின டின் மாதிரி உதைச்சு விளையாடுவாங்க. சிரிப்புல அவங்களோட குரூரம் மறைஞ்சுடும். இந்த வீட்டிற்குள்ளயும் அப்படியொரு சின்ன ஜூ இருக்குதா? வாங்க. விசாரிக்கலாம்” என்றபடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார் கமல். அதில் வழக்கம் போல் பெரிதாக ஒன்றுமில்லை. ஷிவின், அமுது, ஏடிகே ஆகியோர் தாங்கள் செய்து முடித்த சவால்களை காமிரா முன் காட்டினார்கள். “நான் சின்ன வயசுல இதைத்தான் அப்படியே நிறைய சாப்பிடுவேன்” என்று ஷெரினா சொல்ல ஒரு மறைமுகமான சாக்லேட் விளம்பரம் நம் மண்டைக்குள் புகுத்தப்பட்டது. நிவா எதற்கோ கண்கலங்கிக் கொண்டிருந்தார்.

கமல்
கமல்

‘விருந்தினர்களிடம் வன்மம் வெளிப்பட்டதா?’

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “விரும்பிச் செய்வதுதான் தியாகம். வலியுறுத்துவது வன்மம். நான் கூட சினிமால பல விஷயங்கள் செய்திருக்கேன். ஆனா அது விரும்பிச் செய்தது. அதுக்கு சம்பளம் வாங்கியிருக்கேன். விருந்தினர்களோட டார்க் சைட் வெளியே வந்துடுச்சோ? இந்த வீட்டுல இருந்து விடைபெறும் போது பிளையிங் கிஸ்லாம் கொடுத்துட்டு போனீங்களே? இப்ப அதுக்கு நேர் எதிரா இப்ப பண்ணியிருக்கீங்க. விளையாட்டா இருந்தாலும் அதுல சுயமரியாதை போகும்னா விளையாடாதீங்க. (எதே?!) இது என்னுடைய ஷோ. இதில் அநாகரிகம், கேலி இருக்கக்கூடாது. உங்களை நாயகர்களாக பார்க்கணும்னு விரும்பறேன். கோமாளிகளாக இருக்கணும்னு நெனச்சா.. உங்க இஷ்டம்” என்ற கமல், சவால்களை மேற்கொண்டவர்களிடம் தங்களின் ஒப்பனையை சரி செய்து கொண்டு வரச் சொன்னார்.

“இவங்களே பாமை வெப்பாங்களாம்.. இவங்களே எடுப்பாங்களாம்.” என்பது போல் பிக் பாஸூம் கமலும் ஒருவகையான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ‘நீ அடிக்கற மாதிரி அடி. நான் அழுவுற மாதிரி அழுவறேன்” என்பது போல். வந்த விருந்தினர்களிடம் ‘டாஸ்க்’ லெட்டரை தந்தனுப்பியது பிக் பாஸ். அவர்களாவது இரண்டாவது சவாலை சற்று சுவாரசியமாக மாற்றியிருக்கலாம். ஆனால் மொட்டை அடிப்பது, அலகு குத்துவது என்பது போன்ற கடுமையான சவால்களை தேர்ந்தெடுத்திருக்க வேண்டியதில்லை. ஆனால் ‘ஜாலியாக ஏதாவது செய்யலாம்’ என்கிற நோக்கில்தான் செய்தார்களே ஒழிய, கமல் மிகைப்படுத்துவது போல் அவர்களுக்கு வன்மமெல்லாம் இருக்கும் என்று தோன்றவில்லை. உதாரணத்திற்கு ஒப்பனை செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வமுள்ள ஷிவினுக்கு ‘டார்க் மேக்கப்’ என்கிற நேர்எதிரான சவாலைத் தந்திருந்தார்கள். இது தற்காலிகம். ஆனால் மொட்டை அடித்தல் என்பதெல்லாம் சற்று யோசிக்க வேண்டிய விஷயம். தனக்கு தரப்பட்டதை அசிம் மறுத்து விட்டார். மற்றவர்களுக்கும் இந்த வாய்ப்பு இருந்தது. அவர்களும் மறுத்திருக்கலாம்.

விருந்தினராக வந்த முன்னாள் போட்டியாளர்கள்
விருந்தினராக வந்த முன்னாள் போட்டியாளர்கள்

ஆனால் பிக் பாஸில் செய்யப்படும் எந்தவொரு செயலும் நுட்பமும் சூழ்ச்சிகளும் நிறைந்தது. ‘தியாக டாஸ்க்கை’ மறுப்பவர்களுக்கு பிறகு அதுவே மைனஸ் பாயிண்டாக மாறக்கூடும். ஏதாவது ஒரு விவாதத்தில் “நாங்கள் சவாலை மேற்கொண்டு சிரமப்பட்டோம். நீ மட்டும் செய்யாமல் விட்டு விட்டாய்” என்று மற்றவர்கள் சுட்டிக் காட்டலாம். இந்த அச்சம் மற்றும் தயக்கத்தினால் மற்றவர்கள் மேற்கொண்டிருக்கலாம். சிலர் இதையே வேறுவழியில்லாமல் பிளஸ் பாயிண்ட்டாகவும் ஆக்கிக் கொண்டார்கள் என்பது பிறகு அவர்கள் அளித்த விளக்கத்தில் தெரிந்தது.

‘நார்மல் மோடிற்கு மாறிய போட்டியாளர்கள்’

தங்களின் ‘நார்மல்’ தோற்றத்திற்கு கமல் மாறச் சொன்னதால் அசிம் உள்ளிட்ட மற்றவர்கள் அழுத்தமான மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார்கள். கமலின் கடுமையான ஆட்சேபம், விருந்தினர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. “விருப்பமில்லைன்னா செய்யாம விட்டிருக்கலாமே?’ என்று சிலர் முணுமுணுத்தார்கள். ‘நான் எதுவும் சொல்லலைப்பா” என்று சிலர் முன்ஜாமீன் வாங்கினார்கள். டாஸ்க் தந்ததைத் தாண்டி வந்திருந்த சிலர் அடித்த கமெண்ட்கள், போட்டியாளர்களின் மனதைப் புண்படுத்தியிருப்பதை உணர முடிந்தது.

ஹவுஸ்மேட்ஸ்
ஹவுஸ்மேட்ஸ்

‘ஒரு சிறிய ஒப்பனைக்குப் பிறகு’ என்று பிரேக் முடிந்து வந்த கமல் சொல்லி விட்டு ‘இப்பத்தான் அடையாளம் தெரியுது’ என்று சொன்னது ஒரு நல்ல குறும்பு. மற்றவர்கள் மாறி விட்டாலும் ஏடிகே மட்டும் தன் சவாலில் இருந்து பின்வாங்கவில்லை. “மத்தவங்க டிரஸ்ஸை கேட்டு வாங்கிப் போட்டுக்கறது எனக்குப் பழக்கம்தான். வித்தியாசமான ஒப்பனைகளைச் செய்த உங்களை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த ஹேர்ஸ்டைலை அப்படியே விட்டு வைக்கிறேன்” என்று கமலின் ஆட்சேபத்திற்கு எதிர்முனையில் நின்று ஏடிகே சொன்னதால் கமல் சிரித்து சமாளிக்க வேண்டியிருந்தது.

ஷிவின்
ஷிவின்

‘இது ஜாலியா தரப்பட்ட டாஸ்க்தானே?’ன்னு விருந்தினர்கள் பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன். அதுக்கு என் கிட்ட விளக்கம் இருக்கு. இருந்தாலும் அனுபவிச்சங்க சொல்லட்டும்” என்று போட்டியாளர்களை எழுப்பி விசாரித்தார் கமல். முதலில் எழுந்தவர் அசிம். ‘சுயமரியாதையை இழக்கற அளவிற்கு இதுவரைக்கும் பிக் பாஸ் எதுவும் டாஸ்க் தரலைன்னு விக்ரமன் சொன்னாரு. (ஆஹான்!). ஆனா மகேஸ்வரி கொண்டு வந்த டாஸ்க்ல எனக்கு உடன்பாடில்லை. சினிமால நடிக்கறது வேற. ஒரு ரியாலிட்டி ஷோல பெண் ஆடைகள் அணிவது வேற. இந்த வீட்டுக்குள்ள முன்னாடி இருந்தவங்களே இப்படிப் பண்ணிட்டாங்களேன்னு வருத்தமா இருந்தது” என்றார் அசிம். “ஏதோவொரு நோக்கம் அவங்களுக்கு இருந்ததால காரணம் கேட்டேன். முடியை இழக்கறதை நான் இழிவா நெனக்கலே. ஆனா ஒரு புரிதலோட டாஸ்க் தந்திருக்கலாம்’ என்றார் விக்ரமன்.

பிக் பாஸை மறைமுகமாக விமர்சித்த கமல்

“2.ஓ.. வே இப்படின்னா.. 3.ஓ தந்திருந்தா என்னவாகியிருக்கும்?’ என்று கமல் கேட்ட போது பலமாக கைத்தட்டி ஆதரித்தார் அசிம். “இது பார்க்க நல்லா இல்லை. தரம் பின்பற்றப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.” என்ற கமலிடம் “மக்களுக்கு இது பத்தலைன்னு சொன்னாங்க” என்று ஷிவின் சொல்ல “மக்கள்ன்னு பொதுப்படையா சொல்லாதீங்க. அதே மக்கள்தான் கலவரமும் பண்ணியிருக்காங்க. ஷிவின் முகத்துல கறுப்பு பூசறதை அவங்க விரும்ப மாட்டாங்க. அது மக்கள் மேல பூசப்பட்ட கறுப்பா உணர்வாங்க” என்று அந்தப் பக்கமும் கோல் அடித்தார் கமல். “இது ஏதோ காலேஜ் ரேகிங் மாதிரி இருந்தது. கத்தி வைக்கும் போது, பிக் பாஸ் கூட தடுப்பார்ன்னு எதிர்பார்த்தேன். ஆனா நான் பிக் பாஸ் இல்லை” என்று கமல் சொன்ன போது, இந்த நிகழ்ச்சியின் மீது அவருக்கும் பல விமர்சனங்கள் இருப்பதின் ஒரு துளியை உணர முடிந்தது. “நானும் பிக் பாஸ் தடுப்பாருன்னு எதிர்பார்த்தேன்” என்று விக்ரமன் சொல்ல சபையில் சிரிப்பொலி.

விக்ரமன்
விக்ரமன்

சவாலை அனுபவித்தவர்கள், தங்களின் சங்கடங்களைச் சொன்ன கையோடு, அதை ஸ்போர்டிவ்வாக மாற்றிக் கொள்ள முயன்றதையும் சொல்ல “தொன்னூறு நாட்களைக் கஷ்டப்பட்டு கடந்த உங்களுக்கு இது தகுந்த டாஸ்க்கா எனக்குத் தெரியல. வெற்றிக்கோப்பை ஏந்திக்கிட்டு இந்தக் கோலத்துலயா நிக்க முடியும்? இது என் கருத்து. வாய்ப்பு தந்திருப்பதால் சொல்ல முடியுது. அதனால சொல்றேன். வேணாம்ன்னு சொன்னா சொல்ல மாட்டேன்” என்று கமல் சொல்லச் சொல்ல, அவருக்கும் பிக் பாஸிற்கும் ‘டூ’ இருப்பது நன்றாக தெரிந்தது.

“ஓகே. இப்ப வேற ஒரு ஆட்டத்தை ஆடலாம். விருந்தினர்கள் கார்டன் ஏரியாவிற்குப் போங்க. அவங்க என்ன தியாகம் செய்யலாம்ன்னு போட்டியாளர்கள் சொல்லுங்க” என்று கமல் சொன்னதும் சிரிப்பு பரவியது. “ஏன் அப்படியொரு டாஸ்க்கை தோ்வு செய்தீர்கள்?’ என்று விருந்தினர்களிடமும் கமல் விசாரித்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் ஒரு தரப்பாகவே விசாரித்து முடித்து விட்டார். “உள்ளே கெஸ்ட்டா வந்தது ஒரு குத்தமாய்யா?’ என்பது மாதிரியே தாடியைத் தடவிக் கொண்டு வெளியே சென்றார் ராபர்ட்.

போட்டியாளர்களின் பெருந்தன்மை – பெருமூச்சு விட்ட விருந்தினர்கள்

விருந்தினர்கள் வெளியே சென்று கலந்தாலோசித்தனர். “நிச்சயம் அவங்க லைட்டாதான் தருவாங்க. இல்லைன்னா பெருந்தன்மையைக் காண்பிக்கறதுக்கு தராமயே போவாங்க” என்று அவர்கள் யூகித்ததுதான் பிறகு உண்மையாக ஆனது. “நான் எதுவும் பண்ண மாட்டேன். சாக்லேட் சாப்பிடுன்னு சொன்னாக் கூட செய்ய மாட்டேன்” என்று ஓவர் சீன் போட்டார் தனலஷ்மி. (மத்தவங்களுக்கு தரும் போது இது தெரிஞ்சிருக்கணும்!). ‘நான்தான் விளையாட்டில் இல்லையே, ஏன் செய்யணும்” என்பது அம்மணியின் லாஜிக்.

விருந்தினர்கள் எதிர்பார்த்தபடியே “எங்களுக்கு செஞ்வங்களுக்கு நாங்க பதிலுக்கு செய்ய விரும்பலை” என்று போட்டியாளர்கள் கோரஸாக சொன்னது சிறப்பு. “இந்த வீட்டில் இருக்கிற வரைக்கும் அவங்களை அன்பு காட்டச் சொல்லலாம்” என்று விக்ரமன் சொன்ன ஐடியா அபத்தமானது. பெரும்பாலும் சரியாக யோசிக்கிற விக்ரமனிடமிருந்து எப்படி இப்படியொரு கோளாறான யோசனை தோன்றியது என்று தெரியவில்லை. “அன்பை எப்படி நிர்ப்பந்தித்து வாங்க முடியும்? அது இயல்பா வர வேண்டிய விஷயம்” என்று ஷிவின் நெத்தியடியாக சொன்ன பதில் சிறப்பானது.

அமுதவாணன்
அமுதவாணன்

“இந்த ஷோவை யாராவது இயக்குநர் பார்த்தா, கேரக்ட்டருக்காக இவன் தன் தோற்றத்தை மாற்றிக் கொள்ள தயாரா இருப்பான்ற ஐடியா வரும். அப்படித்தான் நான் பார்க்கறேன்” என்று இந்தச் சவாலை பிளஸ் பாயிண்ட்டாக மாற்ற முயன்றார் அமுது.

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “என்ன முடிவு செஞ்சீங்க?” என்று கேட்க “நாங்க அஹிம்சையைப் பின்பற்றலாம்ன்னு இருக்கோம்” என்று போட்டியாளர்கள் சொன்னதால் விருந்தினர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். ‘எது சொன்னாலும் பண்றோம்” என்றார் டிடிஆர் மாதிரி கோட் அணிந்திருந்த முத்து. ‘நான் எதையும் பண்ண மாட்டேன். நான்தான் கேம்லயே இல்லையே?’ என்று அசட்டுச் சிரிப்புடன் சொன்னார் தனம்.

‘அபிப்ராயம் வேறு. உண்மை வேறு’ – கமலின் திருவாசகம்

“ஓகே.. வெளில இருந்து வந்து சிலர் விமர்சனம் சொன்னாங்க. அதைப் பற்றி என்ன நெனக்கறீங்க?” என்று கமல் அடுத்த பகுதிக்கு நகர்ந்தார். “ரொம்ப நேரம் இருட்டுல இருந்து திடீர்னு வெளிச்சத்திற்கு வந்த மாதிரி இருந்தது. கண் கூசியது. மைக்ரைன் மாதிரி தலைவலி வந்தது’ என்று மிகத் துல்லியமாக அந்த உணர்வை உருவகப்படுத்தினார் விக்ரமன். “விஷ பாட்டில்ன்னு என்னை சொல்லிட்டாங்க சார்” என்று புலம்பினார் அமுது. “அது நெகடிட்டிவ் அல்லது பாசிட்டிவ்வா இருந்தாலும் தனிப்பட்ட நபரின் கருத்துதான்’ என்று தெளிவாகச் சொன்னார் அசிம். “முதல்ல ஷாக்கிங்கா இருந்தது. அப்புறம் பழகிடுச்சு” என்று மைனா சொல்ல “இதுவும் கடந்து போகும்” என்று தத்துவம் பேசினார் மைனா.

நிவா
நிவா

பள்ளியில் நடுபெஞ்ச் மாணவர்களைக் கவனித்தால், சில சமயங்களில் திடீர் திடீரென்று எழுந்து ஆசிரியர்களுக்கு ஆதரவான அபிப்ராயங்களை மிகையாகச் சொல்லி அவர்களின் நல்ல மதிப்பைப் பெறுவதற்கு துடிப்பார்கள். அசிமின் செய்கையும் சில சமயங்களில் அப்படித்தான் இருக்கும். இப்போதும் அதே மாதிரியாக எழுந்து “ஒவ்வொரு வாரமும் நீங்க எங்களுக்கு மறைமுகமா குறிப்பு தந்திருக்கீங்க. அதைத்தான் அவங்க மொத்தமா சொல்லிட்டாங்க. என்னோட கோபத்தைப் பத்தி நீங்க நிறைய சொல்லியிருக்கீங்க. என்னைச் செதுக்கிய சிற்பியே நீங்கதான் சார்” என்று கமலை ஐஸ்மழையில் நனைய வைத்தார் அசிம்.

விக்ரமன்
விக்ரமன்

“வந்தவங்க ஆயிரம் சொல்லட்டும். அதைப் பரிசீலித்துப் பார்க்க வேண்டியது உங்களின் கைகளில்தான் இருக்கிறது” என்று சொன்ன கமல் “ஒருவரின் அபிப்ராயம் என்பது வேறு. உண்மை என்பது வேறு’ என்று அழுத்தமாகச் சொன்னது திருவாசகம். “யார் கிட்டயாவது அட்வைஸ் கேளுங்க.. கெத்தா உக்காந்து அவங்க சொல்றது பெரும்பாலும் தப்பாத்தான் இருக்கும். சினிமா பத்தி ஆயிரம் விமர்சனங்கள் வரட்டும். கலெக்ஷன் எவ்வளவு ஆச்சுன்றதுதான் அடிப்படையான ஃபேக்ட்டு” என்று கமல் சொல்ல சபை வெடித்து சிரித்தது. “நீங்க தொடர்ந்து விளையாடணும்னு மக்கள் டானிக் தராங்க. அதுக்கான உதாரணம் அசிம் SAVED” என்று சொல்ல மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அசிம், நெகிழ்வுபூர்வமாக நன்றி சொன்னார். ஆக இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக செல்கிறார் அசிம்.

‘வெளியுலக அனுபவம் எப்படியிருந்தது?’

பிரேக் முடிந்து திரும்பிய கமல், விருந்தினர்களை நோக்கி “பிக் பாஸ் முடிச்சு வெளியே போனீங்க.. பாராட்டுக்களும் வந்திருக்கும். விமர்சனங்களும் வந்திருக்கும். எப்படி இருந்தது அந்த அனுபவம்?” என்று விசாரிக்க கலவையான விடைகள் வந்தன. சில சங்கடங்களைச் சந்தித்திருந்தாலும் ‘பிக் பாஸ் என்பது பெரிய வெளிச்சத்தைத் தந்தது’ என்பதுதான் ஒட்டுமொத்த விடையாக இருந்தது. நிவாஷிணி மட்டும் எதையோ நினைத்து கண்கலங்க அவருக்கு ஆறுதல் சொன்னார் கமல். “அனானிமிட்டி தர தைரியத்துலதான் இதைச் செய்யறாங்க. முகம் தெரிஞ்சு சொல்றவங்கதான் உண்மையான விமர்சகர்கள்” என்று கமல் சொன்னது உண்மை. (முக்காடு போட்டுக்கிட்டு கமெண்ட் பாக்ஸில் கலவரம் செய்பவர்களின் கவனத்திற்கு!). “மளிகைக் கடைக்கு பால் பாக்கெட் வாங்கப் போனா கூட அடையாளம் தெரிஞ்சுக்கறாங்க” என்று சொல்லி கலகலக்க வைத்தார் ராம்.

முத்து
முத்து

பிறகு அடுப்பு போன்றதொரு குடுவையை எடுத்து வரச் செய்து ‘ இன்னிக்கு போகி பண்டிகை. பழையன கழிதலும் அவசியம்தான். அதுக்காக அதை கொளுத்தத் தேவையில்லை. உங்களிடம் இருந்து தூக்கிப் போட வேண்டிய குணாதிசயங்களை இந்த குடுவையில் போடுங்க” என்றார் கமல். ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள எதிர்மறையான விஷயங்களை காகிதத்தில் எழுதி வாசித்து பிறகு கசக்கிப் போட்டார்கள். ‘தற்கொலை’ பற்றி பேசிய முத்து கண்கலங்கினார். விக்ரமன் காப்பாற்றப்பட்ட செய்தியோடு கமல் விடைபெற்றுக் கொண்டார்.

இந்த வார எவிக்ஷினலும் ஒரு டிவிஸ்ட் இருப்பது போல் தெரிகிறது. என்னவென்று காத்திருந்து பார்ப்போம்.

இந்த வாரம் யார் எவிக்ட் ஆவார்கள் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்