Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 99: அன்பாகத் தொடங்கி சண்டையாக மாறிய எபிசோட்; முட்டையால் வெடித்த களேபரம்!

பிக் பாஸ் 6 நாள் 99

‘இன்று பொங்கல் என்பதைத் தாண்டி ‘தமிழ்நாடு’ என்கிற பெயர் உருவான நாள் என்று வழக்கம் போல் விக்ரமன் அரசியல் பேச ஆரம்பிக்க “அடக்கடவுளே. தெரிஞ்சுதான் பேசறீங்களா?” என்று டிடி சொல்லியதற்கு காரணம் வெளியில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 99: அன்பாகத் தொடங்கி சண்டையாக மாறிய எபிசோட்; முட்டையால் வெடித்த களேபரம்!

‘இன்று பொங்கல் என்பதைத் தாண்டி ‘தமிழ்நாடு’ என்கிற பெயர் உருவான நாள் என்று வழக்கம் போல் விக்ரமன் அரசியல் பேச ஆரம்பிக்க “அடக்கடவுளே. தெரிஞ்சுதான் பேசறீங்களா?” என்று டிடி சொல்லியதற்கு காரணம் வெளியில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்.

பிக் பாஸ் 6 நாள் 99
பிக் பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம். ஏறத்தாழ ஒரு நாளின் முழுப் பொழுதையும் எனர்ஜியோடும் மகிழ்ச்சியோடும் வைத்துக் கொள்வது சாதாரண விஷயமல்ல. டி.டி., மா.கா.பா ஆனந்த், பிரியங்கா, சூப்பர் சிங் குழு, குக் வித் கோமாளி டீம், புதிய சீரியல் அறிவிப்புகள் என்று பல்வேறு விதமான பொழுதுபோக்குகளால் நிறைந்திருந்தன. (ஆம், ஒருவகையில் இவை அனைத்துமே புரமோஷன்கள்தான்.)

இதில் குறிப்பாக டிடியின் உரையாடல் ஆத்மார்த்தமாக இருந்தது. ஒருவரிடம் பேசுவது வேறு. அவரின் மனதோடு பேசுவது வேறு. அந்த வகையில் டிடி ஒவ்வொரு போட்டியாளரின் மனதோடு நெருக்கமாக பேசினார். எனவேதான் ஒவ்வொருவருக்கும் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் வந்தது. இனிப்புகள் மட்டுமே நிறைந்திருந்தால் திகட்டி விடும். எனவே அந்த வீட்டில் சில சர்ச்சைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டன. அவற்றோடு கலந்துதானே கொண்டாட்டம்?!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

பொங்கல் தொடர்பான பாடலை காலையில் அலற விட்டு மக்களை வார்ம்-அப் செய்ய முயன்றார் பிக் பாஸ். சிலர் சமர்த்தாக எழுந்து குளித்த களையுடன் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்க, இன்னும் சிலர் இன்னமும் தூக்கம் கலையாமல் அலங்கோலமாக படுத்துக் கொண்டிருந்தார்கள். ‘தனலஷ்மியை எழுப்பி விடுங்க” என்று படுத்த நிலையிலேயே அசிம் சொல்ல, ‘நீங்க முதல்ல எழுந்திருச்சு அதைச் சொல்லுங்க” என்றார் முத்து. அவரை ஜாலியாக வெளியே இழுத்துச் சென்றார் ஷிவின். “மனுஷனை.. கொஞ்ச நேரம் தூங்க விடுங்கப்பா...”

திவ்யதர்ஷினி, மைனா
திவ்யதர்ஷினி, மைனா

பிரதான வாசலில் இசை ஒலித்தது. எனில் எவரோ ஒரு விருந்தினர் வரப்போகிறார் என்பது அர்த்தம். ‘வாக்கிங் ஸ்டிக்’ குறியீட்டுடன் உள்ளே வந்தார் டிடி. அதற்கொரு காரணம் இருந்தது. எல்லோரையும் விசாரித்து விட்டு ‘அழகா இருக்கீங்க விக்ரமன்” என்று தனியான ஒரு பாராட்டு தெரிவித்தார். பிக் பாஸூம் பிரத்யேகமான பாசக் குரலில் டிடியை வரவேற்றார். பல்பொடி விளம்பரம் போல “இந்த நிகழ்ச்சிக்கு ரஷ்யா, சவுத் ஆப்ரிக்கா, கஜகஸ்தான் போன்ற வெளிநாடுகளில் கூட கணிசமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்லி மக்களை குதூகலப்படுத்தினார் டிடி.

பிக் பாஸ் வீட்டை உற்சாகமாக்கிய டிடி

தான் ‘வாக்கிங் ஸ்டிக்’குடன் வந்த காரணத்தை பிறகு தெளிவுப்படுத்திய டிடி “சேக்ரிபைஃஸ் டாஸ்க்குல நீங்க ரொம்ப சிரமப்பட்டீங்க. எனக்கு பார்த்தீங்கன்னா ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருக்கு. ரொம்ப நேரம் என்னால நிக்க முடியாது. ஸ்டிக் வெச்சிட்டு விழா மேடைல தொகுப்பாளரா இருக்க முடியாதுன்னு சில வாய்ப்புகள் போச்சு. ஆரம்பத்துல ரொம்ப வருத்தமாத்தான் இருந்தது. ஆனா ‘பேசற வார்த்தைகள்’தானே முக்கியம். இந்தச் சமயத்துல கமல் சார் தந்த ஆதரவு மறக்க முடியாதது. விக்ரம் படவிழாவை தொகுத்து வழங்கினேன். பெரிய சக்ஸஸ். அப்புறம் உதயநிதி படம், பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச்லாம் பண்ணேன்” என்று தன்னை முன்னிறுத்தி பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த முயன்ற டிடியிடம் “நீங்க கோடிக்கணக்கான மக்களுக்கு இன்ஸ்பிரேஷன். உங்களின் முகமும் அகமும் அழகு” என்று பிக் பாஸ் பாராட்டுரை வழங்கினார். (ஹே.. சூப்பர்ப்பா.. இப்படில்லாம் நீ பேசி நான் பார்த்ததே இல்ல!).

திவ்யதர்ஷினி, விக்ரமன்
திவ்யதர்ஷினி, விக்ரமன்

“ஓகே.. பொங்கல் வெக்கறதை ஆரம்பிச்சுடலாமா? உங்களுக்குத் தேவையான பொருட்கள் வேணும்னா.. என்னை இம்ப்ரஸ் பண்ணியாகணும்” என்று புன்னகையுடன் டிடி சொல்ல, அவருக்கு ராஜ மரியாதை தரப்பட்டது. ராம் குடைபிடிக்க, அசிம் இளநீர் கொண்டு வந்து தர, “நீங்க பேசினதுல இருந்து எடுத்தது” என்று வெல்லத்தைக் காட்டி அமுது அல்வா தர, கதிரவன் பாட்டு பாட, சாந்தியும் மகேஸ்வரியும் நடனம் ஆட ஒரே மகிழ்ச்சிக் களேபரம்தான். தாறுமாறான விருந்தோம்பலில் திக்குமுக்காடிப் போனார் டிடி. இதில் கூடுதல் ஆச்சரியம் விக்ரமனும் டான்ஸ் ஆடியதுதான். தனியாக ஒதுங்கியிருந்த ராபர்ட் மாஸ்டரை அவ்வப்போது இழுத்து முன்னுக்குத் தள்ள முயன்றார் டிடி. “மூக்குத்தி அம்மனை வேண்டுவோம்" என்று சொல்லியும் இந்த நாள் முழுவதும் பரிதாபமான முகத்துடன் ஒதுங்கியே இருந்தார் மாஸ்டர்.

விக்ரமன், திவ்யதர்ஷினி
விக்ரமன், திவ்யதர்ஷினி

‘இன்று பொங்கல் என்பதைத் தாண்டி ‘தமிழ்நாடு’ என்கிற பெயர் உருவான நாள்” என்று வழக்கம் போல் விக்ரமன் அரசியல் பேச ஆரம்பிக்க “அடக்கடவுளே. தெரிஞ்சுதான் பேசறீங்களா?” என்று டிடி சொல்லியதற்கு காரணம் வெளியில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும். சமீபத்திய சர்ச்சை அப்படி. மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்று உருவானதற்குப் பின்னால் இருந்த அரசியல் போராட்டங்களை விக்ரமன் உணர்வுப்பூர்வமாக சொல்லி முடிக்க “தாங்க்யூஜி” என்றார் டிடி. (எதே?!)

டிடியின் அற்புதமான மரத்தடி ஜோசியம்

பிறகு வீட்டிற்குள் நுழைந்த டிடி, ஒவ்வொரு போட்டியாளரையும் அமர வைத்து அவர்களிடம் நிகழ்த்திய உரையாடல் அற்புதம். “வாங்கம்மா.. ஜோசியம் சொல்றேன்.. மனசுல உள்ள குறை எது வேணும்னாலும் கேளுங்க’ என்கிற மரத்தடி ஜோசியம் போல் இருந்தாலும், இந்த நிகழ்ச்சியையும் போட்டியாளர்களையும் நெருக்கமாக அவதானித்து, அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தையும் உபதேசத்தையும் டிடி வழங்கியது சிறப்பு. ஒவ்வொருவருமே டிடியின் ஆத்மார்த்தமான உரையாடலினால் கண்கலங்கினார்கள். ஷிவினிடம் பேசும் போது “LGBTQ சமூகத்தின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று டிடி பேசியது அடிப்படையான நோக்கில் சரிதான். ஆனால், ‘நாம்’ ‘அவர்கள்’ என்று பிரித்துப் பார்த்து பேசியதை டிடி தவிர்த்திருக்கலாம். தன்னை ஒரு பெண்ணாக இந்தச் சமூகம் பார்ப்பதைத்தான் ஷிவின்(கள்) விரும்புகிறார்கள்.

ஷிவின்
ஷிவின்

மற்றவர்கள் அனைவரும் டிடியின் வழிகாட்டுதலை எதிர்பார்த்து பயபக்தியுடன் வந்து அமர, அசராத அசிம் மட்டும் “உங்களுக்கு ஏதாவது அட்வைஸ் வேணும்னா கேளுங்க” என்கிற உடல்மொழியில் கெத்தாக வந்து அமர்ந்தார். “நான் உடனே ரியாக்ட் பண்ணிடுவேன்.. அதுதான் என் குறை. மன்னிப்பு கேட்டாலும் டிராமான்றாங்க’ என்ற அசிமிடம் “விக்ரமன்.. அமுது..ன்னு ஒவ்வொரு காரெக்ட்டரும் வெளிய வர்றதுக்கு நீங்க காரணமா இருக்கீங்க.. ஆனா சில கோபமான தருணங்களை வெளியில் இருந்து பார்க்கறதை விடவும் பக்கத்துல இருந்து அனுபவிக்கறது அவஸ்தையான விஷயம். அவங்க உங்க கூடவே இந்த வீட்டில் இருக்கறவங்க” என்று டிடி சொன்னதை “எனக்கு வெளியுலகம் அதிகம் பழக்கமில்லை” என்கிற வழக்கமான சொற்களில் எதிர்கொண்டார் அசிம்.

இதைப் போலவே விக்ரமனுடனான டிடியின் உரையாடலும் அருமையாக இருந்தது. மிக நிதானமான குரலில், மற்றவர்களைப் பேச அனுமதிக்கிற பொறுமையுடன் விக்ரமன் பேச, அதே உடல்மொழியை தானும் பிரதிபலித்தார் டிடி. “சில விஷயங்களை நாம் சமூகத்திடம் மறுபடி மறுபடி பேசியாகத்தான் வேண்டியிருக்கிறது. இந்த நோக்கில் உங்களின் தொடர்ந்த அரசியல் உரையாடல்கள் அவசியம்தான். நீங்க மந்தையில் கலக்காத நபர். இன்னமும் சவுண்டா பேசுங்க. அதே சமயத்தில் ஜாலியாவும் இருங்க” என்று டிடி சொன்னதை கைகூப்பி ஏற்றுக் கொண்டார் விக்ரமன்.

திவ்யதர்ஷினி (டிடி)
திவ்யதர்ஷினி (டிடி)

“உங்க அடையாளத்தை நீங்கதான் எழுதறீங்க. இங்க உங்களின் அடையாளத்தை மாளிகையாகவோ, குடிசையாகவோ உருவாக்குவது உங்களின் கைகளில்தான் இருக்கு” என்று முன்னுரையில் டிடி சொன்னது ‘நச்’. ஒருவரின் பிம்பத்தை, அவரது நடவடிக்கைகள்தான் தீர்மானிக்கின்றன.

“மத்தவங்க வரும் போது வீட்டார் முகங்களில் குழப்பம்தான் தெரிஞ்சது. நீங்க வந்த பிறகுதான் புன்னகை வந்திருக்கு” என்று டிடியை ஸ்பெஷலாக பாராட்டி விடை தந்தார் பிக் பாஸ்.

‘வாங்க சரவணன்.. வெல்கம் பேக்’…

‘குக் வித் கோமாளி’யின் அடுத்த சீசன் ஆரம்பமாவதையொட்டி அதில் கலந்து கொள்பவர்கள் உள்ளே வந்தார்கள். ஹவுஸ்மேட்ஸ் தங்களின் கைகளையும் வாயையும் கட்டிக் கொண்ட நிலையில் வழிகாட்ட ‘கோமாளிகள்’ இனிப்பு சமைக்க வேண்டும். தாறுமாறாக நடந்த இந்தப் போட்டியில் ‘ஓட்டேரி நரி’ செய்த அல்வா சுவையாக இருந்ததாக நடுவர் மணிகண்டன் தீர்ப்பு கூறினார்.

இதற்குப் பிறகு ‘மகாநதி’ என்கிற தொடரின் பிரமோஷனுக்காக நடிகர் சரவணன், `பருத்தி வீரன்' சுஜாதா உள்ளிட்டவர்கள் வந்தவர்கள். சரவணணை விட்டு விட்டு மற்றவர்களுக்கு மட்டும் பிக் பாஸ் வரவேற்பு சொன்னார். “என்னை விட்டுட்டீங்களே?’ என்று சரவணன் கேட்க “நீங்க நம்மாளு.. வெல்கம் பேக்” என்று தனியான பாசத்தைக் காட்டினார். எந்த வீட்டிலிருந்து சரவணன் சர்ச்சை காரணமாக வெளியேற்றப்பட்டாரோ, அதே வீட்டிற்கு விருந்தினராக வந்திருப்பது சிறப்பு. “சீரியலை என்னமோன்னு நெனச்சேன். ஆனா டிரைய்லருக்கே வரவேற்பு நிறைய வருது” என்று சரவணன் நெகிழ்ந்த பிறகு அதன் முன்னோட்டக் காட்சிகள் காட்டப்பட்டன. ‘அப்பா..’ என்று ஒரு சிறுமி ஒரு காட்சியில் கத்துவதைக் கண்டு ஜி.பி.முத்து கண்கலங்கினார். (எனில் சீரியல் சக்ஸஸ்!).

மா.க.ப - பிரியங்கா
மா.க.ப - பிரியங்கா

அடுத்ததாக மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா, கன்ஃபெஷன் ரூமின் வழியாக உள்ளே நுழைந்தார்கள். “நீ பாட்டுக்கு ஷோல பேசற மாதிரியே இங்கயும் பேசிடாத” என்று ஆனந்த்தை ஜாலியாக எச்சரித்தார் பிரியங்கா. “என்னா பெரிசு.. எப்படி இருக்கீங்க..?” என்று பிரியங்கா விசாரிக்க ‘நல்லாயிருக்கேன் சிறிசு” என்று பிக் பாஸ் பதிலுக்கு பாசத்தைப் பொழிய ஒரே அன்பு மழைதான். ‘ஐய்.. கிச்சனு.. ஐ.. பெட்டு.. பெட்டு..’ என்று தான் குடியிருந்த வீட்டை ஆங்காங்கே அமர்ந்து உருண்டு பிரண்டு பாசத்துடன் சுற்றிப் பார்த்தார் பிரியங்கா.. “நீங்கதானே டைட்டில் வின்னர்?” என்று முத்துவிடம் கேட்டு பிரியங்கா குழப்ப ‘அய்யோ.. நானா?” என்று வெள்ளந்தியாகக் கேட்டு விழித்தார் முத்து. பிறகு அசிமையும் கலாய்த்த பிரியங்கா.. “எப்படி எப்பவும் கெத்தா இருக்கீங்க.. பாத்ரூம்ல போய் அழுவீங்களா.?” என்றெல்லாம் கிண்டலடிக்க அதற்கும் அசராமல் சீரியஸாக பதில் சொன்னார் அசிம்.

பிக் பாஸ் நடத்திய ‘வாத்தி ரெய்ட்’

பிறகு சபையைக் கூட்டிய ஆனந்தும் பிரியங்காவும் தங்களின் திருப்பணியை ஆரம்பித்தார்கள். “உங்க பெயர் சமூகவலைத்தளங்களில் என்ன ஹேஷ்டேகுடன் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்க வரிசையாக பதில்கள் வந்தன. *அறம்வெல்லும்* என்று விக்ரமன் சொல்ல “அப்ப நீங்க வெல்ல மாட்டீங்களா?” என்று டைமிங்கில் கலாய்த்தார் ஆனந்த். *திமிரா பிறந்த தமிழேன்டா* என்று தனியான கெத்து காட்டினார் அசிம். *காம் கதிர்* என்று கதிரவன் சொல்ல, “என்னது? காமக் கதிரா?” என்று கேட்டு ஜெர்க் ஆக்கினார் ஆனந்த்.

பிரியங்கா, ஜி.பி.முத்து
பிரியங்கா, ஜி.பி.முத்து

“ஓகே. அடுத்ததாக.. நீங்க நிறைய உணவுப் பொருட்களை ஒளிச்சு வெச்சு இருக்கறதா.. எங்களுக்கு உளவுத் துறைல இருந்து தகவல் வந்திருக்கிறது. நீங்களா அதைக் கொண்டு வந்து ஒப்படைங்க.. யாரு அதிகமா ஒளிச்சு வெச்சிருக்காங்களோ.. அவங்களுக்கு ஒரு பரிசு” என்று ஆசை காட்டினார்கள். மக்கள் அரைமனதாக சில பொருட்களை கொண்டு வந்து தர “நீங்களே உள்ளே போய் வேட்டையாடுங்க” என்று பிரியங்காவிற்கு சிறப்பு அனுமதி தந்தார் பிக் பாஸ். ஆனந்தும் பிரியங்காவும் முத்துவின் உதவியுடன் உள்ளே சென்று ரெய்ட் நடத்த, நாமக்கல்லில் கூட கிடைக்காத அளவிற்கான முட்டைப்பண்ணையே உள்ளே இருந்தது.

அமுதவாணன், ராபர்ட்
அமுதவாணன், ராபர்ட்

இதில் அமுதவாணன் ஒளித்து வைத்த முட்டையின் பங்கு அதிகம் இருக்க “இதெல்லாம் சமூகச் சேவைக்காக வெச்சிருக்கேன். நானா சாப்பிடப் போறேன்? சாட்சி சொல்லுங்க மக்களே?’ என்று அனத்தினார் அமுது. “ஹலோவ் .. இதெல்லாம் நாங்க லக்ஸரி டாஸ்க்ல உழைச்சு சம்பாதிச்சது” என்று அசிம் கடுமையாகச் சொல்ல “யப்பா. பயமாயிருக்கு... அங்க இருந்தே சொல்லுங்க அசிம்” என்று பாவனையாக நடுங்கினார் பிரியங்கா. பிறகு அனைத்து முட்டைகளும் காஃபி பவுடர் டப்பாக்களும் பொதுவில் வைக்கப்பட்டன. “எங்களுக்கே கிடைக்கலைன்னா என்ன பண்றது?” என்று சிணுங்கினார் கதிரவன். “ஷோவே முடியப் போகுது.. இன்னும் இந்த முட்டைகளை வெச்சு என்ன பண்ணப் போறீங்க. குஞ்சு பொரிச்சுடாது?!” என்று கிண்டலடித்தார் ஆனந்த்.

தாங்கள் உழைத்து சம்பாதித்த உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொதுவில் வைக்கப்பட்டது தொடர்பாக போட்டியாளர்களுக்கு அதிருப்தி எழுந்தது. அவர்களின் நோக்கில் அது சரியே. ஆனால் இதை உலக வரலாற்றிற்கும் பொருத்திப் பார்க்கலாம். மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் சேர்த்தே இந்தப் பூமியின் வளங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மனிதகுலம் என்றைக்கு நிலவுடமைச் சமூகமாக மாறியதோ, அன்றே பல பிரச்சினைகள் துவங்கின. தன்னுடைய சொத்தை ஒருவர் காப்பாற்றிக் கொள்வதற்காக பல பிரிவினைகள், நிறுவனங்கள் உருவாகின. ‘அனைவரும் உழைப்போம். அதன் பலனை அனைவரும் பகிர்ந்து கொள்வோம்’ என்பதுதான் நாகரிகம்.

குக்கு வித் கோமாளி டாஸ்க்
குக்கு வித் கோமாளி டாஸ்க்

பிக் பாஸ் வீட்டில் கூட சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் வந்தால் மக்கள் பாய்ந்தோடி பறித்துக் கொள்வதும், பதுக்கிக் கொள்வதும் பழக்கமாக இருக்கும் காட்சிகளைப் பார்க்கிறோம். இத்தனை காமிராக்கள் இருக்கும் போதே ஒரு பொருளை மற்றவர் எடுத்துக் கொள்வார் என்கிற எண்ணமும் செயலும் எப்படி நடைபெறுகிறது என்று தெரியவில்லை. அதன் விளைவுதான் பிக் பாஸ் இன்று நடத்திய வேட்டை டிராமா. யாராவது ஒருவர் பொறுப்பேற்று அனைவருக்கும் சென்று சேரும்படி பங்கிடுவதுதான் முறையான செயல்.

பெரிதாக வெடித்த முட்டைப் பிரச்சினை

“கெஸ்ட்டுங்க.. எங்களுக்கு கூட தராம முட்டைகளை ஒளிச்சு வெச்சிருந்தீங்க. ஒவ்வொரு முறையுமா நாங்க கேட்க முடியும். எனக்கு மனசு கஷ்டம்ப்பா” என்று சாந்தி ஆதங்கப்பட்டதில் நியாயம் இருந்தது. பிக் பாஸூம் பிரியங்காவும் ஆரம்பித்த இந்த விளையாட்டு, பிறகு பெரிய சண்டையாகிப் போனது. தனக்கு மட்டுமே அதிக கெட்ட பெயர் வந்ததால் (முட்டை அமுது) அதற்கான நியாயங்களை அடுக்கிக் கொண்டே சென்றார் அமுதவாணன். இது அப்படியே தொடர்ந்து விக்ரமனுடனான சண்டையாக மாறியது. பிறகு அப்படியே பரவி மகேஸ்வரிக்கும் மணிகண்டனுக்குமான மோதலாக மாறியது. “வெளியில் விக்ரமனுடன் நட்பை வளர்த்துக் கொள்வேன்” என்று சொன்ன மணிகண்டனிடம் அதற்கான தடயங்கள் எதுவுமில்லை. கோபம் வந்தால் ‘மினி’ அசிமாக மாறுவதில் அப்படியேதான் இருக்கிறார்.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

இது தவிர ‘பொம்மையை’ கைப்பற்றும் விவகாரத்தில் மைனாவிற்கும் மகேஸ்வரிக்கும் நடந்த பூனைச்சண்டை தனியான டிபார்ட்மெண்ட். பிறகு நடந்த இசை, பாடல் மழையுடன் பிக் பாஸ் வீட்டுப் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக நிறைவுற்றது. அனைவருமே நாமினேஷன் பிராசஸஸில் இருப்பதாக நாளின் கடைசியில் பிக் பாஸ் சொன்னது ஒருவகையான நாகரிகம்.

பொங்கலுக்குப் பிறகு தீபாவளி. பிக் பாஸின் ஃபைனல் தீபாவளியில் என்னென்ன வாண வேடிக்கைகள் இருக்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.