பிக் பாஸ் சீசன் 6 கொண்டாட்டக் களையுடன் வெற்றிகரமாகத் துவங்கியது. மொத்தம் இருபது போட்டியாளர்கள். இத்தனை பேர்களுக்கு இரண்டே பாத்ரூம்கள். அவசரத்திற்கு உபயோகமாகக்கூடிய ஆறுதலுடன் ஒரு நீச்சல் குளம் என்று உற்சாகமும் நெருக்கடியுமாக ஆரம்பித்திருக்கிறது சீசன் ஆறு. (நீச்சல் குளம்... ஆறு... நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா).
மக்களின் கவனத்தைச் சற்று கவர்ந்து வைத்திருக்கும் பிரபலங்கள், மாடல்கள், சின்னத்திரை நடிகர்கள் என்று எக்கச்சக்க நபர்கள் உள்ளே வந்திருந்தாலும் சட்டென்று யாரும் உடனே கவரவில்லை. இவர்களின் பெயர்களும் குணங்களும் நமக்குப் பழக இரண்டு, மூன்று நாள்களாவது ஆகும் போலிருக்கிறது. விதிவிலக்காக இருப்பவர் ‘தலைவன்’ ஜி.பி.முத்துதான். “எப்பண்ணே பிக்பாஸூக்குள்ள போவே?” என்று பல கொலைவெறி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயம் இந்த சீசனில் நிஜமாகிவிட்டது.
வீட்டிற்குள் முதல் ஆளாக நுழைந்த முத்து, ஒத்தையில் இருப்பதற்குப் பயந்து நடுங்கிய போது டிவி வழியாக வந்து அபயம் அளித்த கமல், “அப்ப ஆதாம், ஏவாள் காலத்துல எப்படியிருந்திருக்கும்? குறிப்பா ஆதாம் எப்படித் தனியா இருந்திருப்பான்-ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...” என்று சமயோசித ஜோக் அடிக்க முயல, வெள்ளந்தியான முழியுடன் “ஆதாமா... அதாரு..?’ என்று கேட்டு அந்தக் காமெடியில் தாமிரபரணி தண்ணியை ஊற்றி உடனே அணைத்துவிட்டார் முத்து. பாவம் கமல். தொண்டைக்குள் பாதாம் சிக்கியது போல சற்று திகைத்து நின்றுவிட்டார். (இந்தாளு கூட நூறு நாளு எப்படிக் குப்பை கொட்டப் போறனோ?!)

முத்துவிற்கு அடுத்தபடியாக ஜனங்களை உடனே கவர்ந்தவர் ஜனனி என்று தெரிகிறது. உடனடி ‘ஆர்மி’ ஆரம்பித்து உறுப்பினர் எண்ணிக்கை ஐம்பது லட்சத்து அறுபத்தொன்பதாயிரத்தைத் தாண்டி வேகமாக ஏறிக் கொண்டிருப்பதாக ஒரு தகவலைப் பார்த்தேன். ‘சிங்களத் தீவுக்கோர் பாலம் அமைப்போம்’ என்கிற பாரதியின் கனவு அவ்வப்போது நிஜமாகிறது. (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ?!). ஜனனி இலங்கையைச் சேர்ந்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவர்களின் இடையே தனது அங்கீகாரத்திற்காக நீண்ட காலமாகப் போராடிக் கொண்டிருக்கும் அமுதவாணன், மகேஷ்வரி போன்றவர்களும் கவனத்தைக் கவர்கிறார்கள்.
பிக் பாஸ் புகழ் என்பது பலமா, பலவீனமா?
ஓகே... நிகழ்ச்சியைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால் சில விஷயங்களைச் சுருக்கமாகப் பார்த்து விடலாம். போட்டியாளர்களைப் பற்றிய அறிமுக வீடியோக்களைப் பார்க்கும் போது அவர்களின் இடையே ஏறத்தாழ ஒரு பொதுத்தன்மையைப் பார்க்க முடிகிறது. ‘மற்றவர்களை விடவும் நான் வித்தியாசமானவன்’ என்று கருதிக் கொள்வது ஒரு தனிநபரின் இயல்பு.
அந்த உணர்வுதான் கனவுகளை நோக்கி ஒருவனை உந்தித் தள்ளுகிறது. இந்த வகையில் தங்களின் கனவுகளை நோக்கிக் கிளம்பிய இவர்கள், தொடர்ந்த முயற்சி காரணமாக சில சின்ன உயரங்களை எட்டிப் பிடித்திருக்கிறார்கள். ஆங்காங்கே பாராட்டு கிடைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று உள்ளுக்குள் ஆதங்கப்படுகிறார்கள். பிக் பாஸ் மேடையின் மூலம் அந்தப் பாதைக்கான விடை கிடைக்கும் என்று கனவு காண்கிறார்கள்.
சில அரிதான விதிவிலக்குகளைத் தவிர, இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய பலனை அடைந்தவர்கள் என்று கண்ணுக்கு எட்டிய வரையிலும் யாருமில்லை. இந்தத் தற்காலிகமான புகழை எப்படிக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது. என்றாலும் மக்கள் கனவு காண்பதை நிறுத்துவதில்லை.

போட்டியாளர்களில் சிலருக்குக் குறைந்த வயதிலேயே மணமுறிவு ஏற்பட்டிருக்கிறது. விவாகரத்து என்பது பாவமல்ல. தவிர்க்க முடியாத நிலையில் அது அவசியமானதே. என்றாலும் இந்தத் தலைமுறையில் ‘சகிப்புத்தன்மை’ என்பதே இல்லாமல் ‘திடுக்’கென்று டைவேர்ஸ் நடந்து விடுகிறதோ என்று ஒரு சந்தேகம். விவாகரத்திற்குப் பிறகுத் தனது இணையை நினைத்து ஏங்குகிறார்களோ இல்லையோ, தங்களின் குழந்தையை நினைத்துப் பிரிவுத் துயரத்தில் வருந்துகிறவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.
ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்க்க வேண்டும். சில வீடுகளில் தந்தை பிரிந்து சென்றுவிட்டாலும் அசாதாரணமான மனஉறுதியுடன் தாய் தன்னந்தனியாக நின்று போராடி தங்களின் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். குடும்பம் என்கிற நிறுவனத்தின் ஆணிவேர் பெண்கள்தான் என்கிற சமூக உண்மை மறுபடியும் மறுபடியும் நிஜமாகிக் கொண்டிருக்கிறது.
அட்டகாசமாக ஆரம்பித்த துவக்க நாள் நிகழ்ச்சி
எப்போதுமே புதிய சீசனின் துவக்கக் காட்சிகள் ரகளையாக அமைந்திருக்கும். இந்த சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல. பிக் பாஸ் வீட்டில் நடந்த சில பழைய சம்பவங்களோடும் ரியோ, ரம்யா பாண்டியன் என்று சில பழைய போட்டியாளர்கள் தோன்றும் பின்னணியோடும் சட்சட்டென்று மாறும் காட்சிகளோடும் ஆரம்பக் காட்சிகள் அட்டகாசமாக இருந்தன. வண்ணமயமான அரங்கில் தோன்றினார் கமல். இன்னமும் ‘விக்ரம்’ மோடில் இருந்து வெளியே வரவில்லை போல. ராணுவ கமாண்டர் சீருடையைச் சற்று மாற்றி வடிவமைத்துப் போட்டுக் கொண்டு வந்தது போல் இருந்தது, அவரது ஆடை. (அல்லது முதியோர் பள்ளியின் ஸ்கவுட் டிரஸ் என்று கூட ஜாலியாக சொல்லிப் பார்க்கலாம்).
'விக்ரம்' திரைப்படத்திற்கு மக்கள் தந்த வெற்றிக்காக நன்றி சொன்ன கமல், “அந்த நன்றிக்கடனுக்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன்” என்று பாசத்தைப் பொழிந்தார். பிறகு வழக்கமான சம்பிரதாயத்தின்படி வீட்டைச் சுற்றிக் காட்டக் கிளம்பினார். டிரோன் ஷாட்களின் வழியே வீட்டின் வண்ண மயமான வடிவமைப்புகளைக் காட்சிகளின் வழியாகப் பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. புதிய லோகோவின் வண்ணக்கலவையைப் பிரதிபலிப்பது போலவே வீட்டின் வண்ணங்களும் ‘டயமண்ட் மற்றும் கோல்ட்’ தீமில் ரகளையாக இருந்தன.
நட்சத்திர ஹோட்டல் அறைகளைப் போலவே வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் நவீனத் தொழில்நுட்பத்தில் ஆக்டிவேட் செய்து காட்டினார் கமல். இந்த சீசனின் புதிய அம்சங்கள் என்று பார்த்தால் கடந்த மூன்று சீசன்களாக இல்லாத நீச்சல் குளம் மீண்டும் முளைத்திருந்தது. “நீர்ப்பற்றாக்குறையைச் சுட்டிக் காட்டி நான்தான் இதைத் தடுத்தேன்” என்ற கமல் “மழை பெஞ்சா வெளியேவும் இப்படியாகிடலாம்” என்று ஜாலியாகக் குத்திக் காட்டினார். ஆண்கள் மற்றும் பெண் போட்டியாளர்களின் படுக்கை அறைகளின் நடுவே இருந்த தடுப்பு இல்லை. ஜெயிலுக்குப் புதிதான செட் அப் என்று சில அடிப்படையான வித்தியாசங்கள் இந்த சீசனில் இருக்கின்றன.

ஸ்பான்சர் பிராண்டின் பிளாஸ்டிக் பைப்களைக் கொண்டு ஆங்காங்கே சேர்கள், அலங்காரங்களைச் செய்து வைத்திருந்தார்கள். “என்னதிது... ஒரே குழாயா இருக்கு... இதுக்கு அடிலதான் குழாயடிச் சண்டை நடக்கும் போல...” என்று டைமிங்கில் நகைச்சுவை புஸ்வாணத்தை பற்ற வைத்தார் கமல்.
அட்டகாசமான நாற்காலி செட்டப் இருந்த கன்ஃபெஷன் ரூமிற்குள் நுழைந்த கமல், “எங்க நம்மாளை இன்னமும் காணும்?” என்று பாசமாகத் தேட “எப்படியிருக்கீங்க கமல் சார்?” என்று வரவேற்றார் பிக் பாஸ். பாவம் டயட்டில் இருக்கிறாரோ, என்னமோ... குரலில் பழைய கெத்து காணவில்லை.
மறுபடியும் அரங்கத்திற்குள் வந்த கமல், போட்டியாளர்களை வரிசையாக அறிமுகப்படுத்த ஆரம்பித்தார். அவர்கள் வீட்டிற்குள் செல்லும் போது ஒரு புதிர்ப்பெட்டியை தந்து ‘அடிச்சுக் கூட கேப்பாங்க... சொல்லிடாதீங்க’ காமெடி கதையாக “பிக் பாஸ் சொன்னப்புறம்தான் பெட்டியைத் திறக்கணும்” என்று ஒவ்வொருவரிடமும் ரிப்பீட்டாக சொன்னதை எடிட் செய்திருக்கலாம். (கடந்த அல்டிமேட் சீசனின் துவக்க நாளில் போட்டியாளர்களுக்குத் தந்த கடுகு டப்பாவின் மர்மமே இன்னமும் நமக்கு விளக்கப்படவில்லை!).
‘வந்துட்டான்யா... தலைவன் வந்துட்டான்யா...’
முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தவர், பேச்சி முத்து என்கிற இயற்பெயரைக் கொண்ட ஜி.பி.முத்து. தாமரையைத் தொடர்ந்து ஒரு சாமானியனும் பிக் பாஸ் போன்ற பெரிய ரியாலிட்டி ஷோவிற்குள் நுழைய முடியும் என்று நிரூபித்தவர். கடந்த இரண்டு சீசன்களிலும் இவரது பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது. இப்போது உண்மையாகி விட்டது. ‘தலைவா... ஜெயிச்சுட்டு வா’ என்று இப்போதே சமூகவலைத்தள கமெண்ட்டுகள் எகிறத் துவங்கிவிட்டன.

‘மற்ற போட்டியாளர்களுக்காவது ஏதாவது ஒரு திறமை இருக்கிறது. மற்றவர்களை வசைவதைத் தவிர முத்துவிற்கு என்ன திறமை இருக்கிறது. இவரெல்லாம் பிக் பாஸிலா?’ என்கிற எண்ணம் கூட சிலருக்கு வரலாம். ஆனால் தனது வெள்ளந்தியான உடல்மொழி மற்றும் வட்டார வழக்கு காரணமாக எப்படியோ பொதுமக்களின் மனங்களில் இடம்பிடித்து விட்டதால் இவரைத் தவிர்க்க முடியாது.
"தலைவா... பிக் பாஸுக்கு வா தலைவா...” என்று இவருக்கு ரசிகர்கள் நெருக்கடி தந்ததற்கு அன்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. நமது நண்பர்களின் வட்டத்தில் கூட கவனிக்கலாம். வெள்ளந்தியாக இருக்கும் ஒருவனை எதிலாவது கோத்து விட்டு வேடிக்கை பார்ப்பதில் மற்றவர்களுக்கு அத்தனை குஷி ஏற்படும். அதைப் போலவே இவரை ஏற்றிவிட்டு அழகு பார்ப்பதில் பல ரசிகர்களுக்கு இன்பம் இருக்கலாம். அந்தப் பாதை இவரை பிக் பாஸ் வரை கூட்டி வந்திருக்கிறது.
ஆனால் ஆரம்ப நாளிலேயே மற்ற போட்டியாளர்களை விடவும் கவனத்தைக் கவர்ந்தவர் முத்துதான். முதல் ஆளாக வீட்டுக்குள் சென்றவர், அங்குள்ள ஆடம்பரத்தையும் தனிமையையும் கண்டு பயந்து “யாரையாவது துணைக்கு அனுப்புங்க” என்று கதறத் தொடங்கிவிட்டார். இதை அப்படியே டெவலப் செய்யலாம் என்று பிக் பாஸ் டீமிற்கு உடனே ஐடியா வந்திருக்கும் போல.
“என்னது டெக்னாலஜி பிராப்ளமா... சரி பண்றதுக்கு இன்னமும் ரெண்டு நாள் ஆகுமா?” என்று கமல் கலாய்க்க முயல, அழாதக் குறையாக மாறிய முத்து “நீங்களாவது உள்ளே வாங்க” என்று கமலைக் கூப்பிட்டது ரகளையான காமெடி. அடுத்த போட்டியாளர் வந்த பிறகுதான் சற்று ஆசுவாசமடைந்தார் முத்து. இன்னமும் சற்று பயமுறுத்தியிருந்தால் ‘செத்த பயலே... நாறப் பயலே...’ என்று பிக் பாஸையே அவர் வசை பாடியிருக்கக்கூடும்.

இதுவரை முத்துவை சமூகவலைத்தள வீடியோக்களின் வழியேதான் நாம் பார்த்திருப்போம். இனி அவரின் இன்ன பிற முகங்களும் தெரியக்கூடும். ஜி.பி.முத்து உண்மையிலேயே வெள்ளந்தியா, இல்லையா என்பது சில நாள்களில் தெரிந்து விடும். எப்படியோ இந்த சீசனின் ஃபுல் டைம் பொழுதுபோக்காக முத்து இருப்பார் என்பது கியாரண்டி. புதிதாக உள்ளே நுழைபவர்கள், மற்றவர்களிடம் கூட பேசுகிறார்களோ இல்லையோ, "எப்படியிருக்கீங்க தலைவரே?” என்று முத்துவிடம் பிரத்யேக பாசத்துடன் விசாரிக்கிறார்கள். இனி பிக் பாஸ் வீட்டின் காமெடியின் பிரதான சைட் டிஷ் முத்துவாகத்தான் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. வீட்டில் தனியாக இருக்க பயந்த முத்து, படுக்கையில் இடம்பிடிக்கும் போது மட்டும் 'தனி படுக்கை’ கேட்டது சுவாரஸ்யமான முரண்.
‘ஜோர்த்தால... மூலம் கமலைக் கவர்ந்த வசந்தகுமார்’
இரண்டாவது போட்டியாளராக உள்ளே வந்தவர் வசந்தகுமார். ‘அசல் கோளார்’ என்கிற பெயரில் அறியப்படுகிற Rap பாடகர். சுயாதீன இசைக்கலைஞர். சென்னைப் பையன். கானாவை நவீன இசையின் வழியாக வழங்கி இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்தவர். பாடலில் இவர் உபயோகித்த ‘ஜோர்த்தால’ என்கிற வார்த்தை கமலை மிகவும் கவர்ந்து விட்டது. திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தார். (அதன் பெயர் ஜோடுதலை. சொம்பு என்று சொல்லப்படுவது). தனது புனைப் பெயர் காரணத்தை வசந்த் விளக்கிய போது, “அது கோளாறு இல்லை. கோளறு பதிகம்” என்று கமல் திருத்தியது நன்று.

மூன்றாவதாக உள்ளே வந்தவர் ஷிவின் கணேசன். இவர் ஒரு Trans Woman. பொதுமக்களுக்கான கோட்டாவின் மூலம் ஆடிஷன் வழியாக தேர்வானவர். தேவகோட்டைக்காரர். மாற்றுப் பாலினத்தவர்கள் தமிழகத்தில் தாக்குப் பிடிப்பது கடினம் என்று தொலைநோக்குப் பார்வையோடு இவரது தாய் சிந்தித்ததால் சிங்கப்பூருக்கு இடப்பெயர்வு. அங்கேயே படிப்பு மற்றும் பணி. "ஏன் தமிழ்நாட்டில் நாம் இருக்க முடியாது?” என்கிற ஆதாரமான கேள்வி ஷிவினை உறுத்த அவ்வப்போது தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். அது பிக் பாஸ் வரை அழைத்து வந்திருக்கிறது. "மாற்றுப் பாலினத்தவராக ஒரு பெரிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது” என்று தன்னம்பிக்கையுடன் பேசும் ஷிவினைப் பார்ப்பதற்கு ரிசர்வ் டைப்பாக இருப்பதால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிப்பார் என்று தெரியவில்லை.

நான்காவதாக வந்தவர் அஸீம். சின்னத்திரை பிரபலம். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர். ஷிவானி வந்த சீசனிலேயே இவரது வரவும் எதிர்பார்க்கப்பட்டது. “தப்பைத் தட்டிக் கேட்கும் தமிழண்டா" என்று இவர் ஒருபக்கம் முழங்கினாலும் விவாகரத்து காரணமாக தன் மகனை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே சந்திக்க நோ்கிற துயரத்தையும் பகிர்ந்துகொண்டார். ‘இங்குப் பிறப்பினும் அயலான், அயலான்தான்’ என்று இவர் ஆவேசத்துடன் முழங்கியதை “தமிழ் உணர்வு உள்ள எவருமே தமிழன்தான்” என்று கமல் டைமிங்காக திருத்தியது சிறப்பான விஷயம்.

‘வனிதாவும் ராபர்ட்டும் ஒண்ணா வந்திருக்கலாம்’
ஐந்தாவதாக வந்தவர் ராபர்ட். டான்ஸ் மாஸ்டர். குழந்தை நட்சத்திரம். சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வனிதாவின் முன்னாள் கணவர் என்கிற தகவல் பலருக்கும் ஆர்வமூட்டக்கூடியது. 'எனில் வனிதா வந்த சீசனிலேயே இவரும் வந்திருக்கலாமே’ என்று கொலைவெறியுடன் எதிர்பார்த்தவர்கள் அதிகம். இவரது தந்தையும் ஒரு டான்ஸ் மாஸ்டர். “ஓ... ஆண்டனியா?” என்று கமல் நினைவுகூருமளவிற்கு அவரின் பழைய நண்பர்.

"நான் நானாகத்தான் இருப்பேன்” என்று அதே வசனத்தைப் பேசிய ராபர்ட், கமலிடம் வலுக்கட்டாயமாக ‘முத்தா’ பெற்றுக் கொண்டு உள்ளே சென்றார். வடிவேலு மொழியில் சொன்னால் “ஆளைப் பார்த்தா கோவக்காரரு மாதிரி தெரியுது... அப்படின்னா இருக்கு... சம்பவம் இருக்கு..." காத்திருப்போம்.
அடுத்ததாக உள்ளே வந்தவர் ஆயிஷா. இவரும் சின்னத்திரை பிரபலம். கடவுளின் தேசமான கேரளாவைச் சேர்ந்தவர். “நான் Mixed Emotions கொண்டவ. சட்டுன்னு அழுதுடுவேன். எக்ஸ்டீரிமிற்குப் போயிடுவேன்” என்று இப்போதே பயமுறுத்துகிறார். தோற்றமும் குரலும் ஓவியாவின் சாயலில் அமைந்திருப்பதைப் போன்ற பிரமை. எத்தனை நாள் தேறுவார் என்று பார்ப்போம்.

'இவருக்கு ஆர்மி ஆரம்பிக்க நெனச்சா... கொஞ்சம் யோசியுங்க...’
ஏழாவதாக நுழைந்த ஷெரினாவிற்கு ஆர்மி ஆரம்பிக்க நினைப்பவர்கள் சற்று யோசித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இவருக்கு பாக்ஸிங், கராத்தே போன்ற வீரவிளையாட்டுக்களில் பயிற்சி உண்டு. பிறந்த ஊர் கேரளா என்றாலும் வளர்ந்தது பெங்களூரில். ஸ்டூடியோ வைத்திருக்கிறார். மாடலும் கூட. ‘குடும்பம்தான் எனது பலம்” என்று நெகிழும் ஷெரினா, “வாழ்க்கை போகிற போக்கில் செல்வேன்” என்று சொன்னாலும் ஜாக்கிரதையான ஆசாமியாகத் தெரிகிறார். சமைக்கத் தெரியாதாம். "நான் சமைத்தால் ஆம்புலன்ஸ் தேவைப்படும்” என்று ஆறிப்போன பழைய ஜோக்கை வீட்டிற்குள் சொல்லித் தானே சிரித்துக் கொண்டார்.

எட்டாவதாக வந்தவர் மணிகண்டன். இவரும் சின்னத்திரை பிரபலம்தான். ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி என்று சொன்னால் கூடுதல் அறிமுகம் சட்டென்று கிடைக்கும். “சீரியல் கேரக்ட்டராவே என்னைப் பார்க்கறாங்க... என் சொந்த அடையாளத்தை உருவாக்கப் போறேன்” என்று தன்னம்பிக்கையாகச் சொன்ன மணிகண்டனிடம் “எனக்கும் இந்தப் பிரச்னை இருந்தது. ஆனால ஒரு காலக்கட்டத்துல நான் நடிச்ச கேரக்ட்டர் பெயர் சொல்லி 'வேலு நாயக்கரே’ன்னு சொன்ன போதுதான் மகிழ்ச்சியா இருந்தது” என்று தன் அனுபவத்தைத் தலைகீழாக்கிச் சொன்னார் கமல். “ஜெயிச்சுட்டு வா புஜ்ஜிம்மா” என்று வீடியோவின் வழியாக வந்து வாழ்த்து சொன்னார் ‘காக்கா முட்டை’ நாயகி.

ஒன்பதாவதாக வந்தவர் ரச்சிதா. ‘அடப் போங்கப்பா... சொல்லிச் சொல்லி போரடிக்குது...' இவரும் சின்னத் திரை பிரபலம்தான். பெங்களூரு பெண். ரிஸ்க்கி என்கிற பெயரில் வீட்டில் இருக்கிற பூனைதான் உயிர் நண்பனாம். “என்னை முதல்ல பார்க்கறவங்கள்லாம் கோவக்காரின்னு நெனப்பாங்க. ஆனா சின்னச் சின்ன விஷயங்களில் நான் திருப்தியடைஞ்சுடுவேன்” என்கிறார். (அப்ப ஒரே வாரத்துல வெளிய வந்தா கூட ஒகேதான் போல). “வாங்க... வாங்க... மங்களகரமா இருக்கீங்க” என்று வீட்டின் உள்ளே ரச்சிதாவை வரவேற்றார்கள்.

பத்தாவதாக உள்ளே நுழைந்த ராம்தான் இருப்பதிலேயே அதிக உயரத்தைக் கொண்ட போட்டியாளர். 6.4! இவரைப் பிரமிப்புடன் நிமிர்ந்து பார்க்கிறார்கள். மாடல். ஒரு விபத்து காரணமாக கிரிக்கெட்டைக் கைவிட வேண்டியிருந்தது. நடித்த ஒரு படம் ரிலீஸ் ஆகவில்லை. “நான் நடிச்ச ஒரு படத்தை குடும்பத்தோட பார்க்கணும்” என்று ஆசைப்படுகிறார் ராம். ஆறாம் சீசனின் கணேஷ் வெங்கட்ராமன் என்று இவரைச் சொல்லிவிடலாம். கனவு மெய்யாகட்டும்.

ADK என்று அறியப்படும் தினேஷ் கனகரத்தினம், இலங்கையைச் சேர்ந்த ஹிப்-ஹாப் இசைப் பாடகர். யோகி B-ன் பாடல்களால் உந்தப்பட்ட இசையார்வம் கொண்டவர். “பொண்ணுங்க என்னைப் பார்க்கணும்னுதான் ராப் பாட ஆரம்பிச்சேன்” என்று சிரித்துக் கொண்டே சொல்லும் இவருக்குப் புகழைத் தேடித் தந்தது ‘சுராங்கினி’ பாடல். ரஹ்மானின் இசை உட்பட சில சினிமா பாடல்கள் பாடியிருந்தாலும் “இன்னமும் சரியான வெளிச்சம் கிடைக்கவில்லை” என்று தினேஷ் சொன்னதை கமலும் ஆதங்கத்துடன் வழிமொழிந்தார்.

‘உடனடி ஆர்மி உருவாக்கிய கொலைவெறி ரசிகர்கள்’
பன்னிரண்டாவதாக வந்தவர் ஜனனி. உடனடி ஆர்மியைச் சம்பாதிக்கும் அளவிற்கு எளிமையான அழகு. இலங்கையைச் சேர்ந்தவர். நிகழ்ச்சித் தொகுப்பாளர். பேசும் தமிழில் வீணையின் சத்தம் கேட்கிறது. லோஸ்லியாவின் குரலும் நினைவிற்கு வருகிறது. பிக் பாஸில் கலந்து கொள்வதுதான் இளமையிலிருந்தே லட்சியமாம். (ஆஹா... இதுவல்லவோ லட்சியம்?!). அதற்காகவே பல வருடங்களாக பிளான் செய்து வருகிறாராம். ‘த்ரிஷா மாதிரி நடிகையாகணும்’ன்றது ஒரு கனவு’ என்று சொல்லி குந்தவையின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் இந்த ஜனனி.

‘அம்மி, அம்மி, அம்மி மிதித்து’ என்கிற 'மெட்டி ஒலி' சீரியல் பாட்டையும் இவரையும் பிரித்துப் பார்க்க முடியாது. சாந்தி மாஸ்டர். இவர்தான் பதிமூன்றாவதாக உள்ளே வந்த போட்டியாளர். பல திரைப்படங்களில் இவரைக் கண்டிருக்கலாம். எளிமையான பின்னணியிலிருந்து கிளம்பி ‘டான்ஸ் மாஸ்டர்’ நிலைமைக்கு உயர்வதற்குள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார். கமலுக்கு இவர் குரு வணக்கம் செலுத்திய காட்சி, பார்ப்பதற்கே அருமையாக இருந்தது.

14-வது போட்டியாளர் விக்ரமன். நோ... நோ... டைரக்டர் விக்ரமன் அல்ல. அவர் பாட்டுக்கு அங்கேயே இருக்கட்டும். இந்த விக்ரமன் ஒரு ஜர்னலிஸ்ட். இவரது அறையின் பின்னணியில் அம்பேத்கரும் பெரியாரும் புகைப்படமாக நின்று கொண்டிருக்கிறார்கள். தமிழில் ஆர்வம் கொண்ட இவர் “அதிகார சக்திகளைச் சரியாகச் செயல்பட வைக்கணும்” என்று ஆவேச அரசியலும் பேசுகிறார். “இந்தச் சமூகத்தை ஒரு துளியாவது முன்னேற வைக்க முயல்வதுதான் என் விருப்பம்” என்று அரசியல்வாதியின் கெட்டப்பில் சொல்லும் விக்ரமனுக்கு கமல்தான் முன்னுதாரணமாம்.

“பாராட்டு ஓகே... ஆனா, அங்கீகாரம் கிடைக்கலை!’
15-வதாக வந்தவருக்கு அறிமுகமே தேவையில்லை. அமுதவாணன். இவரும் சின்னத்திரை பிரபலம். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். காமெடி ஷோ, டான்ஸ் ஷோ என்று பல டைட்டில்களை வென்றிருக்கிறார். ஊரிலிருந்து வரும் திறமைசாலிகளை ஆதரித்து வளர்த்துவிடும் பணியையும் நெடுங்காலமாகச் செய்து வருகிறார். அப்படி வந்தவர்தான் ‘கலக்கப் போவது யாரு’ பாலா. “என் ஊர் பல்லாவரம். பக்கத்துல பம்மல்... பம்மல் கே.சம்பந்தம்” என்று சொல்லி கமலையே சிரிக்க வைத்தார். “பாராட்டுகள் கிடைத்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை” என்று ஆதங்கப்படும் அமுதவாணனுக்கு பிக் பாஸ் வீடு அதைத் தேடித்தரும் என்கிற நம்பிக்கையிருக்கிறது.

16-வது நபர் மகேஸ்வரி. இவரும் சின்னத்திரை பிரபலம். சில திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறார். “அப்பா, கணவர்... என்று இரண்டு ஆண் உறவுகளுமே என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார்கள். ஆண்கள் என்றாலே எனக்குப் பயமாக இருக்கிறது. சுயநலம் பிடித்தவர்களோ என்று தோன்றுகிறது. எனக்கு ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும் ஒரே ஆண் என் மகன்தான்” என்று கலங்கும் மகேஸ்வரியின் கதை கேட்பதற்கு நெகிழ்வை ஏற்படுத்துகிறது. தன்னந்தனியாக நின்று போராடும் பெண்களின் பிரதிநிதி. பிக் பாஸ் என்பது பல வருடக் கனவாம். வெல்லட்டும்!

17-வதாக உள்ளே வந்தவர் விஜே கதிரவன். தன்னம்பிக்கையும் இனிமையான புன்னகையுமாகக் கமலை இயல்பாக எதிர்கொண்டார். “ஏதாவது புதுசா பண்ணனும்” என்கிற துடிப்புள்ள கதிரவன் பிக் பாஸ் வீட்டில் புதிதாக என்ன செய்வார் என்று பார்க்க வேண்டும். ஆனால் கவர்ச்சியான தோற்றமுள்ள இவர், ஏதாவது லவ் டிராக்கில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்.

பதினெட்டாவதாக உள்ளே வந்தவர் க்வின்ஸி. மாடல். நடிகையாக விருப்பமாம். தன்னை ‘Introvert’ என்று வர்ணித்துக் கொண்டார். “அப்படின்னா உள்ள எப்படித் தாக்குப் பிடிப்பீங்க?” என்று கமல் கேட்ட போது “பார்த்துக்கலாம்” என்று அதிரடியாகச் சொன்னார். நல்ல வேளை. ‘அந்த’ வார்த்தையுடன் இணைத்துச் சொல்லவில்லை.

பத்தொன்பதாக வந்தவர் நிவாஷிணி. ‘எமோஷனல் பொண்ணு’ என்று ஆரம்பத்திலேயே கண்ணைக் கசக்கும் இவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இவர், உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். சினிமாவை அவ்வளவு பிடிக்குமாம். “தேவைப்பட்டா உள்ளே போய் சண்டை போடுவேன்... என்ன இப்ப?” என்று கெத்தாகக் கூறி விட்டுச் சென்றார். என்ன ஆகப் போகிறதோ?!

கடைசியாக வந்த தனலக்ஷ்மி, இருபதாவது போட்டியாளர். ஈரோட்டுக்காரர். சமூகவலைத்தள வீடியோக்களின் மூலம் தன் நடிப்புத்திறமையை விதம் விதமாக வெளிப்படுத்தி புகழைச் சம்பாதித்திருக்கிறார். இவரும் ‘காமன்மேன்’ கோட்டாவின் வழியாக உள்ளே வந்தவர்.

‘சரித்திரத்தில் உண்மையைத் தேடுங்க மக்களே!’
“புத்தகப் பரிந்துரையை அடுத்த வாரம் வெச்சுக்கறேன்” என்ற கமல், சமீபத்தில் கொழுந்து விட்டு எரியும் ஒரு சர்ச்சைக்கு மறைமுகமாகப் பதில் சொன்னார். “சரித்திரத்தில் உண்மையைத் தேடணும். வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியை நம்பக்கூடாது. ஆய்வுப் புத்தகங்களைப் படிக்கணும். உண்மையான வரலாறு வேற, மித்தாலஜி வேற. இரண்டும் கலந்தா ஆபத்து” என்று சொல்லி விட்டு விடைபெற்றுக் கொண்டார்.
“அய்யோ ரெண்டே பாத்ரூம்தானா... ரெண்டு மேட்டர் முக்கியமாச்சே” என்று பிக் பாஸ் வீட்டிற்குள் நடைமுறைச் சிரமங்களின் சூடு மெல்லப் பரவ ஆரம்பித்தது. மற்றவர்களைச் சரமாரியாகக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார் சாந்தி மாஸ்டர். சலசல வென்று பேசிக் கொண்டிருந்தவர்களை ஆஃப் செய்து “என்னைக் கொஞ்சம் பேச விடறீ்ங்களா?” என்று ஆரம்பத்திலேயே கெத்து காட்டினார் பிக் பாஸ்.
“போன சீசனையெல்லாம் மறந்துடுங்க. இந்த சீசன் வேற மாதிரி இருக்கும். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ மட்டுமில்ல. எதிர்பார்க்காத நேரத்துல எதிர்பார்த்த விஷயத்தை எதிர்பார்க்காம சொல்லுவேன். அதை நீங்க எதிர்பாருங்க” என்று ரைமிங்காக பேசி பயமுறுத்திய பிக் பாஸ், ஜனனியை அழைத்தார். இப்படியாக இந்த சீசனில் முதன்முறையாக கன்பெஷன் ரூமிற்குச் சென்ற பெருமையைப் பெற்றவர் ஜனனி.

அவர் கொண்டு வந்த டாஸ்க் லெட்டரில் ஒரு மினி வெடிகுண்டு சைலண்ட்டாக அமர்ந்திருந்தது. அதன்படி அனைத்துப் போட்டியாளர்களும் வாக்களித்து 'சக போட்டியாளர்களில் குறைவாகக் கவர்ந்த நான்கு போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் கார்டன் ஏரியாவில் உள்ள வாழைப்பழ செட்டப்பில்தான் இரவு முழுவதும் தூங்க வேண்டும். அவசியமான விஷயங்களைத் தவிர வீட்டிற்குள் வர முடியாது’ என்று அந்தக் கடிதத்தின் சாரம் சொன்னது. இது மட்டுமல்ல, இந்த நால்வரும் அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக தோ்வாகிவிடுவார்கள்.
அதுவரை ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த போட்டியாளர்கள், இந்த வெடிகுண்டு கடிதத்தின் கன்டென்ட்டை உணர்ந்ததும் சைலண்ட்டாக ஒருவரையொருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டார்கள். ஆக... ஆரம்பத்திலேயே சரவெடியின் திரியைக் கிள்ளி தனது திருவிளையாடலை அழுத்தமாக ஆரம்பித்து வைத்திருக்கிறார் பிக் பாஸ்.
மற்றவர்களைக் குறைவாகக் கவர்ந்து வீட்டின் வெளியே உறங்க நேர்ந்த அந்த நான்கு துரதிர்ஷ்டசாலிகள் யார், யார் என்பது நாளைக்குத் தெரிந்து விடும்.
இந்த சீசனின் போட்டியாளர்கள் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன? யார் இறுதிவரை தாக்குப்பிடிப்பார்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.