Published:Updated:

பிக்பாஸ் சீஸன் 4... வென்றது அன்பா, நேர்மையா, உண்மையா?! கற்றதும், பெற்றதும், தெளிந்ததும்!

பிக்பாஸ் கமல்

வெறும் நூறு நாட்களில் – அதிலும் தினமும் ஒரு மணி நேரத்திற்கு – வடிகட்டப்பட்ட காட்சிகளின் வழியாக காட்டப்படுவதை வைத்து ஒருவரின் ஆளுமையை எப்படி நாம் தீர்மானிக்க முடியும், அவற்றை இந்த அலசு அலசும் நமக்கு, நம்மைப் பற்றியே என்ன தெரியும்?

Published:Updated:

பிக்பாஸ் சீஸன் 4... வென்றது அன்பா, நேர்மையா, உண்மையா?! கற்றதும், பெற்றதும், தெளிந்ததும்!

வெறும் நூறு நாட்களில் – அதிலும் தினமும் ஒரு மணி நேரத்திற்கு – வடிகட்டப்பட்ட காட்சிகளின் வழியாக காட்டப்படுவதை வைத்து ஒருவரின் ஆளுமையை எப்படி நாம் தீர்மானிக்க முடியும், அவற்றை இந்த அலசு அலசும் நமக்கு, நம்மைப் பற்றியே என்ன தெரியும்?

பிக்பாஸ் கமல்

"பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க யாருக்காவது நீங்கள் பரிந்துரை செய்வீர்களா?" என்று என்னிடம் யாராவது கேட்டால், அதற்கு என் பதில் ‘இல்லை’ என்பதாகத்தான் இருக்கும்.

- இப்படியொரு அதிர்ச்சிகரமான (?!) வாக்கியத்தோடுதான் இந்தக் கட்டுரையைத் துவக்க விரும்புகிறேன்.

"அடப்பாவி மக்கா... தினமும் இதைப் பத்தி கட்டுரையா எழுதித் தள்ளிட்டு... 'கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்கலாம். வாங்க, குத்த வைச்சு காத்திருப்போம்’–ன்னு தினமும் எங்களை உசுப்பேத்தி விட்டுட்டு இப்ப கடைசில ஜகா வாங்குறீங்களே?" என்று பலரின் மைண்ட் வாய்ஸ் கொலைவெறியோடு ஒலிக்கலாம். சற்று பொறுங்கள். இதை விளக்கி விடுகிறேன்.

இந்த சீஸன் என்றல்ல, பிக்பாஸ் முதல் சீஸனில் இருந்து இதைத்தான் நான் சொல்லி வருகிறேன் என்பது துவக்கத்திலிருந்தே வாசிக்கிறவர்களுக்கு நன்கு தெரியும்.

பிக்பாஸ் என்பது அடிப்படையில் ஒரு வணிக நிகழ்ச்சி. வெற்றி பெற்ற ஒரு பிசினஸ். சில நபர்களின் அந்தரங்கமான தருணங்களை, அவர்களின் மன விகாரங்களை, நேர்மறை மற்றும் எதிர்மறையான சமாசாரங்களை காட்சிப்படுத்தி வணிகமாக்கும் ரியாலிட்டி ஷோ. இதுதான் இதன் அடிப்படை. இதை எந்தவகையிலும் ரொமான்ட்டிசைஸ் செய்து சிலாகிக்க வேண்டியதில்லை.

பிக்பாஸ்
பிக்பாஸ்

மற்றவரின் வம்புகளைப் பேசுவதில், அந்தரங்கமான தருணங்களை எட்டிப் பார்ப்பதில் மனித குலத்திற்கு எப்போதுமே மிகவும் ஆர்வமுண்டு. இது நமது ஆதிக்குணம். ‘க’ என்ற எழுத்தில் பெயர் துவங்கும் நடிகைக்கும் ‘ஞோ’வில் பெயர் முடியும் சினிமா டைரக்டருக்கும் ‘கசமுசா’வாமே?!’ என்று வார இதழில் பிரசுரமாகியிருக்கும் வம்பைப் படித்து விட்டு அது யார் என்று அரைமணி நேரத்திற்கும் மேலாக மண்டையை உடைத்து யோசித்துக் கொண்டிருப்போமே ஒழிய, ‘யார் யார் கூட சென்றால் நமக்கென்ன... அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்’ என்று நாம் யோசிக்க மாட்டோம்.

பக்கத்து வீட்டுக்காரர் தொடர்பான வம்புகளை விடவும் பிரபலங்கள் தொடர்பான வம்புகளுக்குத்தான் மதிப்பு அதிகம். அதை மெல்வதில்தான் ஒரு சராசரி நபருக்கு ஆர்வமும் கிளர்ச்சியும் அதிகம். நம்முடைய இந்த அற்பமான மனோபாவத்தைத்தான் ஊடகங்கள் பல்வேறு விதமாக பயன்படுத்திக் கொள்கின்றன. பிக்பாஸை இதன் உச்சம் எனலாம்.

‘தரமான பொழுதுபோக்கு’ என்பதை நாம் இனி செவ்வாய் கிரகத்தில்தான் தேட வேண்டியிருக்கும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு தமிழ் சமூகத்தின் பொழுதுபோக்கு சமாசாரங்கள் மிகவும் தரம் தாழ்ந்து சீரழிந்து போயிருக்கின்றன. ‘சமூகம் எக்கேடு கெட்டுப் போனாலென்ன, வணிகம்தான் பிரதானம்’ என்கிற லாபவெறியையே பெரும்பாலான ஊடகங்கள் அடிப்படையான குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன.

வம்பு பேசும் மனோபாவத்திற்கும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது. இல்லத்தரசிகளுக்கு (Home Makers) முன்பு போல் அக்கம் பக்கத்தில் வம்பு பேசும் வசதிகள் இன்று அதிகம் கிடையாது. ஃபிளாட் கலாசாரத்தில் இவை இன்று மிகவும் சுருங்கி விட்டன. மேலும் பெண்கள் பணிக்குச் செல்லும் சதவிகிதமும் அதிகமாகி விட்டது. எனவே இது சார்ந்த வெற்றிடத்தை தொலைக்காட்சித் தொடர்கள் வெற்றிகரமாக கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. அக்கம் பக்கத்து வீடுகளுக்கு மெனக்கெட்டு அலைந்தோ பணியாளரின் வாயைக் கிளறியோ வம்புகளைத் தேடி இன்று அலைய வேண்டியதில்லை. தொலைக்காட்சியை ஆன் செய்தாலே போதும். விதம் விதமான டிசைன்களில் அவை கொட்டுகின்றன. YOUTUBE சானல்கள் இன்னமும் மோசமான வகையில் இதனுடன் போட்டி போடுகின்றன. (இவர் செய்த காரியத்தைப் பார்த்தீர்களா?!)

ஆணாதிக்க உலகில் பல்வேறு விதமாக அழுத்தப்பட்டிருக்கும் பெண்களுக்கு ‘அவர்கள் வீறு கொண்டு எழுவது போல’ கற்பனையான தீனியை அளித்து ஆசுவாசம் அடைய வைப்பதைத்தான் தொலைக்காட்சித் தொடர்கள் செய்து காண்பிக்கின்றன. நிஜத்தில் பெண்கள் செய்ய முடியாத பெரும்பாலான சாகசங்களை திரையில் பார்த்து மன ஆறுதல் கொள்கிறார்கள். ஒருவகையான உணர்ச்சிக் கொந்தளிப்பின் தணிவு (catharsis). ஆண்களுக்கு எம்.ஜி.ஆர், ரஜினி படங்கள் தரும் அதே உணர்வு.

பிக்பாஸ்
பிக்பாஸ்

தமிழ் தொலைக்காட்சித் தொடர்களின் அபத்தம் குறித்து ஏராளமான விமர்சனங்களும் கிண்டல்களும் தொடர்ந்து நெடுங்காலமாக வந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். பிறகாவது அவை உள்ளடக்கத்தில் சற்றாவது மாறியிருக்கிறதா என்று பார்த்தால், இல்லை. துளிகூட மாறவில்லை. எந்த சேனலைத் திருப்பினாலும் ஏதாவது ஒரு சீரியலில் யாராவது ஒரு பெண் பத்ரகாளி போல கண்களை உருட்டி முறைத்துக் கொண்டு நிற்கிறார். அல்லது எந்த கோயிஞ்சாமி ஆணையாவது ‘பளார்’ என்று அறைகிறார் அல்லது ஒரு பெண் கண்ணீர் பெருக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார். அங்கு ஹீரோவும் பெண்தான். வில்லனும் பெண்தான். ஏனெனில் அவை வீட்டில் இருக்கும் பெண்களை பிரதான டார்கெட்டாக வைத்துக் கொண்டு செயல்படுகின்றன.

இந்த வம்பு பேசும் மனோபாவத்திற்கு ஆண்களும் விலக்கில்லை. அவர்களுக்கான இன்னொரு பரிணாம வடிவம்தான் பிக்பாஸ். பெண்கள் பார்க்கும் டிவி சீரியல்களை ஆண் பார்வையாளர்கள் ஒரு பக்கம் கிண்டல் அடித்தாலும் அவர்கள் கூட பிக்பாஸிற்கு அடிமையாக இருக்கிறார்கள். ஏனெனில் பிக்பாஸில் தோன்றும் கேரக்டர்களின் மீது ஒரு நம்பகத்தன்மை இருக்கிறது.

திரைப்படங்களில், சீரியல்களில் வரும் மனிதர்களைப் போல இவர்கள் புனைவுப் பாத்திரங்கள் அல்ல. தங்களின் உண்மையான அடையாளத்துடன் வரும் நபர்கள். அதிலும் பிரபலங்கள். சினிமாவில் வரும் பாத்திரங்கள் என்றால் அது புனைவு என்பது நம் ஆழ்மனதில் பதிந்திருக்கும். எனவேதான் சினிமாவில் ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பான காட்சியைப் பார்க்கும் அந்தச் சமயத்தில் உணர்ச்சிவசப்பட்டு பிறகு மறந்து விடுகிறோம்.

ஆனால், உண்மையான காட்சிகள் நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் என்பது மிக ஆழமானது. ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் காட்சியைப் பார்த்து கைதட்டுவோம். ஆனால் இணையத்தில் தெரியும் ஓர் உண்மையான விபத்துக்காட்சியை மனம் பதைபதைக்க பார்ப்போம். முன்னது நிழல், பின்னது நிஜம். இந்த வித்தியாசத்தை நம் ஆழ்மனம் அறிந்திருப்பதால் அதன் தாக்கம் அதிகமாகிறது. இதுவே பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களின் உலகளாவிய வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது.

ஒருவரின் அந்தரங்கத்தை அறிய விரும்பும் சராசரி மனதின் கீழ்மைகளுக்கு தீனி போடும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை நான் எப்போதும் பரிந்துரைக்க மாட்டேன். ‘இல்ல ப்ரோ... இதில் வருகிற கேரக்டர்களை நாம அனலைஸ் பண்ணோம்னா...’ என்று யாராவது ஆரம்பித்தால் அது உட்டாலக்கடி. அவர்களை நம்பாதீர்கள் (நான் உட்பட). நீங்கள் உளவியல் என்னும் சப்ஜெக்ட் பற்றி அறிய வேண்டுமென்றால் அதை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல்கள் தமிழிலேயே இன்று ஏராளமாக உள்ளன. நேரடியாக அதை வாசிக்க முயலுங்கள். பிக்பாஸின் வழியாக உளவியல் தேடுகிறேன் என்பதெல்லாம் பம்மாத்து.

`பிக்பாஸ்' அர்ச்சனா
`பிக்பாஸ்' அர்ச்சனா

ஒவ்வொரு பிக்பாஸ் சீஸனின் போதும் சமூகவலைத்தளங்களைக் கவனித்தால் பல ‘திடீர்’, ‘குபீர்’ உளவியல் நிபுணர்கள் உருவாகி விடுவார்கள். இதன் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் பற்றி அலசுவார்கள்… அலசுவார்கள்… அப்படிப் போட்டு அலசியெடுப்பார்கள். போட்டியாளர்களின் ஒவ்வொரு அசைவையும் ஏதோ உலக சதி போல கணக்கில் எடுத்துக் கொண்டு அவற்றிற்கு விதம்விதமான வியாக்கியானங்களைத் தருவார்கள். இந்த விஷயத்தில் இல்லுமினாட்டிகள் கூட இவர்களின் முன்னால் நிற்க முடியாது.

இந்த அரட்டைகளில் இன்னொரு விதமான குரூப் இருக்கிறது. அது ஒவ்வொரு போட்டியாளருக்கும் 'ஆர்மி’ என்கிற பெயரில் அடியாட்களாக மாறுவது. ஏதாவது ஒரு கேரக்டரை அவர்களுக்குப் பிடித்துப் போய் விடும். உடனே சம்பந்தப்பட்ட நபரை ஏதோ அடுத்த முதல்வர் என்கிற ரேஞ்சிற்கு புகழ்வார்கள். (நோ... நோ... உடனே என் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூடாது... கெட்ட பழக்கம்).

ஆனால், ஒருவரை புகழ்வதோடு நின்றுவிட்டால் கூட சகித்துக் கொள்ளலாம். இன்னொரு போட்டியாளரை புகழும் குரூப்பை எதிரியாக வரித்துக் கொண்டு எதிர் ஆர்மியோடு வம்படியாக மல்லுக்கட்டுவார்கள். பிறாண்டல்களும் குடுமிப்பிடிச் சண்டைகளும் ரணகளமாக நடக்கும்.

சமூக வலைத்தளங்களில் ஒரு கெட்ட வழக்கம் நெடுங்காலமாக இருக்கிறது. நீங்கள் நம்பும் கருத்திற்கு மாறாக ஒருவர் எழுதி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘அது அவரின் தனிப்பட்ட கருத்து, அது அவரின் கருத்து சுதந்திரம்’ என்று அதற்கு மதிப்பு தந்து விடக்கூடாது. ‘'ஓ... அப்ப நீ அவன் ஆளா... அந்த குரூப்பா” என்று உடனே முத்திரை குத்திட வேண்டும். அப்போதுதான் தாக்குவதற்கு வசதியாக இருக்கும்.

இப்படி தங்களுக்கு எதிரான திசையில் நிற்பவர்களை ஏதாவது ஒரு ஜாடியில் அடைத்து அதன் மீது வசதியான லேபிள் ஒட்டி விட்டால் போதும். எதிர்த்துப் பேசுபவரை எளிதில் வாயடைக்கச் செய்து விடலாம். பிக்பாஸ் என்றல்ல, அரசியல், இலக்கியம், சினிமா என்று ஏறத்தாழ அனைத்து அரட்டை, வம்புகளிலும் இதுதான் அடிப்படை. ‘நீ ரஜினியைப் பற்றி விமர்சித்துப் பேசுகிறாயா... அப்ப நீ கமல் ரசிகன்...’ இப்படி எட்டாங்கிளாஸ் மனோபாவத்திலிருந்து நாம் இன்னமும் கூட வெளியே வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. மிக உருப்படியான விவாதங்கள் என்பது இணையத்தில் வெகு வெகு அபூர்வம்.

இப்படியாக, பிக்பாஸ் பார்ப்பதைக்கூட வம்பு பேசும் இன்னொரு சந்தர்ப்பமாக நாம் மாற்றிக் கொள்வது நம் ரசனை வீழ்ச்சியையே காட்டுகிறது. போட்டியாளர்களின் குறைகளை, சறுக்கல்களை பூதக்கண்ணாடி வைத்து ஆராயும் நாம் என்றாவது அப்படியே திருப்பி நம்முடைய குறைகளை ஆராய்ந்திருக்கிறோமா?
பிக்பாஸ் போட்டியாளர்கள்
பிக்பாஸ் போட்டியாளர்கள்

வெறும் நூறு நாட்களில் – அதிலும் தினமும் ஒரு மணி நேரத்திற்கு – வடிகட்டப்பட்ட காட்சிகளின் வழியாக காட்டப்படுவதை வைத்து ஒருவரின் ஆளுமையை எப்படி நாம் தீர்மானிக்க முடியும்? அவற்றை இந்த அலசு அலசும் நமக்கு, நம்மைப் பற்றியே என்ன தெரியும்? அதைக் கூட விடுங்கள். கூடவே பல ஆண்டுகளாக வாழும் நம் நெருங்கிய உறவுகளைப் பற்றிக் கூட நமக்கு முழுதும் தெரியாது என்பதுதான் உண்மை. நம்மைப் பற்றியே நமக்கு சரியாகத் தெரியாது எனும் போது தொலைக்காட்சியில் சில நிமிடங்கள் நாம் பார்க்கும் ஒருவரின் மன அறைகளில் என்ன ரகசியங்கள் எல்லாம் இருக்கின்றன என்பது எப்படி நமக்குத் தெரியும்?

‘உன்னையே நீ அறிவாய்’ என்பதைத்தான் ஞானிகளும் (அசலான) ஆன்மிகவாதிகளும் அறிஞர்களும் நெடுங்காலமாக உபதேசித்து வருகிறார்கள். ‘உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்’ என்கிறார் கண்ணதாசன், ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தின் பாடல்வரியில்.

தோராயமாக தினமும் ஒரு மணி நேரம் என்றால் கூட 106 நாட்களுக்கு 106 மணி நேரம். 6360 மணித்துளிகள். 381600 விநாடிகள். (போதும்... நிறுத்துங்க... எங்க கிட்டயும் கால்குலேட்டர் இருக்கு!). செலவு செய்து இந்த நிகழ்ச்சியைப் பார்த்தது போக, இதைப் பற்றி வம்பு பேசவும் வெட்டியாக விவாதிக்கவும் என்று இன்னமும் ஏராளமான மணித்துளிகளை செலவு செய்திருப்போம், இல்லையா?

இத்தனை நேரம் முதலீடு செலவு செய்து இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததில் நாம் பெற்ற நிகர பயன் என்ன? மனச்சாட்சியுடன் யோசித்தால் ‘ஒன்றுமேயில்லை’ என்பதுதான் பதில்.

"ஐயா... நான் பொழுதுபோக்கிற்குத்தான் பிக்பாஸ் பார்க்கிறேன். மனுஷனுக்கு கொஞ்சமாவது ரிலாக்ஸ் வேண்டாமா? ஆனால் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி இந்த நிகழ்ச்சிக்காக செலவிடும் நேரத்தை சற்று பயனுள்ளதாகவும் மாற்றிக் கொள்ள விரும்புகிறேன். எனில் என்ன செய்யலாம்?'' என்று கேட்கிறீர்களா யெஸ்... இப்போதுதான் நீங்கள் என் வழிக்கு வருகிறீர்கள்.

இந்த நிகழ்ச்சியை வம்பு பேசும் சந்தர்ப்பமாக மட்டும் மாற்றாமல், சுயபரிசீலனையை மேற்கொள்ளும் வாய்ப்பாகவும் நம் அகத்தைக் காட்டும் கண்ணாடியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். கமல் திரும்பத் திரும்ப சொல்வது இதைத்தான்.
பிக்பாஸ்
பிக்பாஸ்

உங்களுக்கு அடிக்கடி கோபம் வரும் என்று உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். அதைத் தவிர்ப்பதற்கு ஓர் உபாயம் சொல்கிறார்கள். கோபம் வரும் சமயத்தில் சட்டென்று நிலைக் கண்ணாடிக்கு முன்னால் சென்று உங்களின் முகத்தைப் பாருங்கள். கண்கள் சிவந்து, மூக்கு விரிந்து, தலைமுடி கலைந்து, மூச்சு வாங்க, பார்க்கவே கண்றாவியாக இருப்பீர்கள். நமக்கு கோபம் வரும்போது பார்க்க இத்தனை கேவலமாகவா இருக்கிறோம் என்பது நமக்கே உறைக்கும்.

உதாரணத்திற்கு ஓய்வறையில் ஆரியுடன் விவாதிக்கும் சமயத்தில் பாலாஜி மைக்கைக் கழற்றி கோபத்துடன் கீழே ஓங்கியறைந்த காட்சியை நினைவுகூருங்கள். அது எத்தனை கொடுமையானதாகவும் பார்ப்பதற்குப் பதற்றத்தை தருவதாகவும் இருந்தது? இப்போது நீங்கள் வீட்டில் அதே போன்றதொரு கோபத்தை அடைகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே சட்டென்று ஒரு கணம் மனதை நிறுத்தி, நீங்கள் கோபம் அடையும் காட்சியானது கேமராவில் பதிவாகி பல நபர்கள் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். என்னவாகும்... அவமானமும் சுயக்கட்டுப்பாடும் நிதானமும் உடனே வரும்.

இந்தப் போட்டியின் இறுதி நாளில் பாலாஜி தொடர்பான ‘பயண வீடியோ’ ஒளிபரப்பான போது பாலாஜியின் முகபாவங்களைக் கவனித்திருப்பீர்கள். ‘அடக்கடவுளே... நானா இதை செய்தேன்’ என்கிற அவமானவுணர்ச்சியும் குற்றவுணர்வும் சங்கடமான சிரிப்பும் அப்போது அவர் முகத்தில் தெரிந்தன. பாலாஜியை ஓர் உதாரணத்திற்காகத்தான் குறிப்பிடுகிறேன். அனைத்துப் போட்டியாளர்களின் கீழ்மைகள் வெளிப்படும் ஒவ்வொரு தருணங்களிலும் அந்த இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்த்துக் கொண்டு அதன் மூலம் நம்முடைய குறைகளைக் களைவதும் நல்லியல்புகளை மேம்படுத்திக் கொள்வதும்தான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க செலவு செய்த நேரத்தின் பிரதான பலனாக இருக்க முடியும்.

‘அடப்போங்க பாஸூ... இதையெல்லாம் பார்த்து யாராவது மாறுவாங்களா..?’ என்று உங்களுக்குள் கேள்வியும் கேலியும் எழலாம். நம்புங்கள். என்னையே நான் இதற்கு முன்னுதாரணமாக்கிக் கொள்வேன். முன்கோபம் என்பது என் பலவீனங்களில் ஒன்று. பிக்பாஸ் பார்க்கத் துவங்கியதிலிருந்து அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள பெரிதும் முனைகிறேன். சில சதவிகிதம் வெற்றியும் அடைந்திருக்கிறேன்.

இது மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு என்கிற நோக்கிலும் கூட பிக்பாஸ் அத்தனை வொர்த் இல்லை. இதை விடவும் உன்னதமான பொழுதுபோக்குகள் ஏராளமாக உள்ளன. உலகின் சிறந்த திரைப்படங்கள், ஆவணப்படங்கள், அட்டகாசமான வெப்சீரிஸ்கள், குறிப்பாக இணையமெங்கும் உள்ள ஏராளமான சிறந்த நூல்கள் என்று நமது நேரத்தை உருப்படியாக செலவழிப்பதற்கு பல நல்ல வழிகள் உள்ளன.

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

எந்தவொரு கட்டுரையிலும் ‘பிக்பாஸை பாருங்கள்’ என்று நான் ஒருதுளியும் ஆதரித்திருக்க மாட்டேன். மாறாக, "ஒகே... இதை நீங்கள் பார்த்துதான் ஆவீர்கள் என்றால் அந்த அனுபவத்தை உருப்படியாக மாற்றிக் கொள்ளுங்கள்" என்பதைத்தான் முன்பும் வலியுறுத்தியிருக்கிறேன்; இப்போதும் வலியுறுத்துகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி என்பது ‘புத்தக அறிமுகம்’. நல்ல இலக்கிய படைப்புகளை வெகுசன வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை நெடுங்காலமாகச் செய்து வந்தவர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் சுஜாதா. அவரின் நண்பரான கமலும் அந்த வழியையொட்டி, இந்த ஜனரஞ்சகமான நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறந்த நூல் ஒன்றை பரிந்துரை செய்தது நல்ல விஷயம்.

புத்தகம் என்றல்ல, நல்ல திரைப்படம், கட்டுரை, தகவல் என்று எவர் பரிந்துரை செய்தாலும் உடனே அதைத் தேடி அடைந்து விடுங்கள். ஏனெனில் அவர் பல விஷயங்களை நுகர்ந்த பிறகுதான் அவற்றில் சிறந்தது என்று கருதுவதை உங்களுக்குப் பரிந்துரை செய்கிறார். எனவே அவர் செலவு செய்த அத்தனை நேரமும் உங்களுக்கு மிச்சம். என்னவொன்று, பரிந்துரை செய்பவரின் தகுதி, ரசனை போன்றவற்றை நீங்கள்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் போல கண்டதையும் ஃபார்வேட் செய்பவர்களை நம்பக்கூடாது.

கமல் பரிந்துரை செய்த நூல்களின் வரிசையை பலர் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்கள். அவை இணையத்திலேயே கிடைக்கிறது. என்றாலும் அவர்களின் வேண்டுகோளையொட்டி கீழே தந்திருக்கிறேன். இவற்றின் கள்ள நகல்களைக் கோராமல், காசு தந்து வாங்கிப் படிப்பதுதான் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு நாம் தரும் குறைந்தபட்ச மரியாதை. நமக்குமே அதுதான் பெருமையும் கூட. இந்த நூல்களைப் பற்றிய சிறு குறிப்புகளை சம்பந்தப்பட்ட நாட்களின் கட்டுரையில் தந்திருக்கிறேன். இணையத்தில் தேடினால் பல விரிவான அறிமுகங்களையும் மதிப்புரைகளையும் காணலாம்.

(1) தி பிளேக் (தமிழாக்கம்-கொள்ளை நோய்) (ஆல்பெர் காம்யு)

(2) அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ)

(3) வெண்முரசு (ஜெயமோகன்)

(4) புயலிலே ஒரு தோணி (ப.சிங்காரம்)

(5) அழகர் கோவில் (தொ.பரமசிவன்)

(6) அடிமையின் காதல் (ரா.கி ரங்கராஜன்)

(7) மிர்தாதின் புத்தகம் (புவியரசு)

(8) எஸ்தர் (வண்ணநிலவன்)

(9) தொடுவானம் தேடி (தில்லைராஜன், அருண்குமார், சஜி மேத்யூ)

(10) கோபல்லபுரத்து மக்கள் (கி.ராஜநாராயணன்)

(11) நாளை மற்றுமொரு நாளே (ஜி.நாகராஜன்)

(12) ஜே.ஜே:சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி)

(13) கரைந்த நிழல்கள்(அசோகமித்திரன்)

(14) கூள மாதாரி (பெருமாள் முருகன்)

(15) நிறங்களின் மொழி (தேனி சீருடையான் )

(16) வாசிப்பது எப்படி? (செல்வேந்திரன்)

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல் தொகுத்துத் தர முன்வந்ததை ஒருவகையில் நாம் செய்த பேறு எனலாம். இதற்காக அவருக்கு சம்பளம், கூடுதல் புகழ் மைலேஜ், அரசியல் பரப்புரை செய்வதற்கான மேடை உள்ளிட்ட சில ஆதாயங்கள் கிடைக்கும் என்பதெல்லாம் இன்னொரு பக்கம்.

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

ஆனால் மிகச் சிக்கலான, நுட்பமான இந்த நிகழ்ச்சியை பெரிதும் கண்ணியம் குறையாமல் ஒவ்வொரு சீஸனிலும் நடத்திச் சென்றதில் அவர் கவனமாக இருந்தது பாராட்டுக்குரியது. இதர மொழி பிக்பாஸ்களில் அதிக அளவிற்கான பிறாண்டல்களும் ரத்தக்களறிகளும் ஆபாசமான சண்டைகளும் நடப்பதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களும், தொகுப்பாளரும் இணைந்து கூட அவற்றைத் தூண்டி நிகழ்ச்சியை அதிக அளவிற்கு பரபரப்பாக்குவதாகவும் சொல்கிறார்கள். ஆனால், தமிழில் அவை பெரிதும் நடைபெறவில்லை என்பது ஆறுதலான விஷயம்.

இந்த நிகழ்ச்சியை வழிநடத்திச் செல்வதற்கு இதைப் பற்றிய ஆழமான அறிவு, உளவியல் ஞானம், நுண்ணுணர்வு, பொறுமை, பெருந்தன்மை, பாரபட்சமின்மை, சமயோசிதம், நகைச்சுவை, மொழியறிவு போன்று பல தகுதிகள் வேண்டும். இதன் பெரும்பாலான ஏரியாக்களில் கமல் அநாயசமாக சிக்ஸர் அடித்தார் என்று சொல்ல வேண்டும். எனவே கமலை விட்டால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து தருவதற்கு வேறெந்த தமிழ் பிரபலமாவது இருக்கிறாரா என்று நானும் பலவிதமாக யோசித்துப் பார்த்து விட்டேன். ம்ஹூம்... சட்டென்று எவரும் நினைவிற்கு வரவில்லை.

கடந்த நான்கு சீஸன்களிலும் இறுதியில் வென்றவர் யார் என்கிற வரிசையை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்களிடம் சில பொதுவான குணாதிசயங்கள் இருப்பதைக் கவனிக்கலாம். ஆரவ், ரித்விகா, முகேன், ஆரி ஆகியோரிடம் சில நேர்மறையான குணாதிசயங்கள் இருந்தன. ஆரவ், ரித்விகா, முகேன் போன்றவர்கள் இறுதியில் ஜெயிப்பார்கள் என்பதை முன்பே எவராலும் கணித்திருக்க முடியாது. அத்தனை அமைதியான போட்டியாளர்களாக இருந்து முயல் – ஆமை கதை போல இறுதியில் வென்று விட்டார்கள்.

ஓவியா தொடர்பான சர்ச்சையில் சிக்கினாலும் தனது நிதானமான குணாதிசயத்தின் காரணமாக ஆரவ் வென்றார். முகேனிடம் சற்று முன்கோபம் இருந்தாலும் பிறகு அதை மாற்றிக் கொண்டார். (பாலாஜிக்கும் இந்த வாய்ப்பு இருந்தது) பொறுமை என்கிற அடையாளம் ரித்விகாவிற்கு நிறைய உதவி செய்தது. கூடவே ‘தமிழ் பெண்’ என்கிற அடையாளத்தையும் வலுவாகப் பற்றிக் கொண்டார்.

பிக்பாஸ் சீஸன் 2
பிக்பாஸ் சீஸன் 2

இந்த நான்காம் சீஸனிலும் கூட ஆரி வெல்வார் என்று எவராலும் முன்பே கணித்திருக்க முடியாது. நாட்கள் செல்லச் செல்ல ஆரியின் பிம்பம் நேர்மறையாக வளர்ந்து கொண்டே போனது. குரூப்பிஸத்தில் இல்லாதது, அதிகம் புறணி பேசாதது, கடுமையான உழைப்பைச் செலுத்தியது, எந்தவொரு பிரச்னையையும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவது, தகுதியுள்ளவர் ஜெயிக்கட்டும் என்று ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பைக் காட்டியது என்று அவரிடம் உள்ள நேர்மறையான அம்சங்கள் அவரின் வெற்றிப்பாதையை எளிதாக்கி தந்தன. ஏறத்தாழ நிகழ்ச்சியின் முக்கால் பாகம் கடந்த போதே அவர்தான் வெற்றி பெறுவார் என்கிற எண்ணம் பரவலாக உருவாகி விட்டது. அந்த அளவிற்கு மக்களின் ஆதரவு அவருக்குக் கூடிக் கொண்டே சென்றது.

ஆனால், ஆரியிடமும் எதிர்மறை குணாதிசயங்கள் இல்லாமல் இல்லை. இதைப் பற்றியெல்லாம் முன்பே அலசி விட்டோம். சிறிய விஷயத்தைக் கூட புன்னகையுடன் பேசித் தீர்க்காமல் சட்டென்று வருகிற முன்கோபத்துடன் சூடான விவாதமாக்குவது, மற்றவர்களுடன் இணக்கமாக பழகாதது, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது என்று விமர்சிக்கத்தக்க விஷயங்களும் அவரிடம் இருந்தன. இவற்றையெல்லாம் மீறி அவரிடம் இருந்த அடிப்படையான நேர்மை என்பதுதான் அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது. முன்பே குறிப்பிட்டது போல் இந்த நேர்மையை நாம் அரசியல்வாதிகளிடமும் நம் வாக்குகளின் மூலம் வலியுறுத்தினால் அது சிறப்பானதாக இருக்கும்.

ஒவ்வொரு சீஸனிலும் யாராவது ஒரு போட்டியாளரின் ஆதரவாளராக என் மீது முத்திரை விழுவது வழக்கமான விஷயம். நான் என்றல்ல, பிக்பாஸ் பற்றி விமர்சிக்கும் எவருமே இந்த விபத்திலிருந்து தப்ப முடியாது என்றே நினைக்கிறேன். ஏன் இதைப் பற்றி பேசுபவர்களுக்கு கூட இந்த முத்திரை விழுந்தே தீரும். ‘தான் இன்ன போட்டியாளரின் ஆதரவாளர்’ என்று அறிவித்துக் கொள்கிறவரின் பாடு ஒருவகையில் எளிதானது. அப்படியல்லாமல் ‘நான் நடுநிலைமையாகத்தான் இருக்கிறேன்’ என்றால் அதை எவரும் நம்புவதில்லை.

முதல் சீஸனில் ஓவியாவை சிலாகித்து நான் எழுதிய கருத்துக்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. ஏனெனில் அப்போது ஓவியாவை பெருங்கூட்டமே கொண்டாடியது. அவரை விமர்சித்தவர்களும் இன்னொரு புறம் இருந்தார்கள். ஓவியாவை திட்டமிட்டு கொண்டாடவில்லை. அதற்கான தகுதிகளை அவர் கொண்டிருந்தார். போலவே சில எதிர்மறையான குணாதிசயங்களும் அவரிடம் இருந்தன.

பிக்பாஸ் ஓவியா
பிக்பாஸ் ஓவியா

இரண்டாவது சீஸனில் நான் ‘ஐஸ்வர்யாவின்’ ஆதரவாளனாக முத்திரை குத்தப்பட்டேன். கிட்டத்தட்ட பாலாஜியின் ஃபீமேல் வெர்ஷன் என்று ஐஸ்வர்யாவைச் சொல்லலாம். கோபம், நிதானமின்மை போன்ற எதிர்மறை குணாதிசயங்கள் இருந்தாலும் அடிப்படையில் அவரிடம் ஒரு குழந்தைத்தனம் இருந்தது. பாலாஜியைப் போலவே சட்டென்று மனதில் இருப்பதை அப்படியே பேசிவிடுவார். யாஷிகா வெளியேறும் நாளன்று, தாயைப் பிரியும் குழந்தை போல அவர் முகம் வாடி நின்ற காட்சியை மறக்க முடியாது. பாலாஜியைப் போலவே இவரும் அந்த சீஸனில் ரன்னர்-அப்பாக வந்தார் என்பது தற்செயல் ஆச்சர்யம்.

மூன்றாவது சீஸனை விகடனில் எழுத சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. நான்காவது சீஸனில் நான் எத்தனை கவனமாக இருந்தாலும் ரம்யா பாண்டியன் ரசிகர் பேரவையின் தளபதியாகவே ஒரு கட்டத்தில் அறியப்பட்டேன். ஒவ்வொரு பதிவின் பின்னூட்டத்திலும் இது சார்ந்த கிண்டல்கள் உத்தரவாதமாக வரும். அவற்றில் சுவாரஸ்யமான கிண்டல்களை ரசித்தேன் என்பதுதான் உண்மை. இதுவும் ஏற்கெனவே விளக்கப்பட்டதுதான். அவர் அணிந்திருந்த கண்ணாடியை நான் தொடர்ச்சியாக கிண்டல் செய்யப் போக, அதற்கு ஒரு காட்டமான எதிர்வினை வந்தது.

அதைச் சமன் செய்யும் முயற்சியாக ரம்யாவைச் சற்றுப் பாராட்ட, ‘ரம்யா ஆர்மி’ என்கிற கிண்டல்கள் எழுந்ததும் ‘இந்த ஆட்டத்தை சற்று விளையாடிப் பார்க்கலாமே’ என்கிற ரகசிய ஆசையுடன் தொடர்ந்ததில் விளையாட்டு வினையாகிப் போனது. பிறகு நானே விரும்பினாலும் கூட என்னால் விடுபட முடியவில்லை. நண்பர்கள் அத்தனை இறுக்கமாக கட்டிப் போட்டு விட்டார்கள்.

ஓகே… எந்தவொரு சீஸனிலும் ஒரு குறிப்பிட்ட போட்டியாளரின் மீது நமக்கு தனிப்பட்ட விருப்பமும் பிரியமும் எழக்கூடும். இதர போட்டியாளர்களின் மீதான விருப்பு வெறுப்புகள் கிளம்பக்கூடும். என்னிடமும் அவை உண்டு. அவை சார்ந்த பிரியங்களை, கிண்டல்களை என் ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டுமே பதிந்திருக்கிறேன்.

ஆனால், ஒரு பொதுத் தளத்தில் எழுதும் போது இது சார்ந்த மனச்சாய்வுகள், பாரபட்சங்கள் போன்வற்றை வெளிப்படுத்துவது, ஏன் தன்னிச்சையாக கூட கசிய அனுமதிப்பது போன்றவை விமர்சன அறத்திற்கு எதிரானது என்பதை நன்கு உணர்ந்தவன் நான். எனவே இந்தக் கட்டுரைத் தொடரில் இது சார்ந்த கவனத்தையும் பிரக்ஞையையும் சாத்தியமான அத்தனை வழிகளிலும் கடைப்பிடிக்கவே முயன்றேன் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். (நம்புங்கள்... ஆரி ப்ரோ அளவிற்கு இல்லையென்றாலும் நானும் நேர்மையாளன்தான்). ஆனால், எங்காவது தவறியிருக்கலாம் என்பதையும் மறுக்க விரும்பவில்லை.

பிக்பாஸ் ஆரி
பிக்பாஸ் ஆரி

ஏதோ ஆரி மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று விட்டதால் என் அபிப்ராயங்களை மாற்றிக் கொள்ள நான் தயாராக இல்லை. அவரிடம் நிறைய நேர்மறையான அம்சங்கள் இருந்ததைப் போலவே சில எதிர்மறைகளும் இருந்தன. அதனால் இப்போதும் சொல்வேன். இந்த சீஸனில் குறைந்த அளவு தவறுகளைச் செய்தவர் ரம்யா பாண்டியன்தான். சகிப்புத்தன்மை என்கிற பிக்பாஸின் அடிப்படையான அளவுகோலை பெரிதும் தன்னிச்சையாகக் கடைப்பிடித்தவர் அவர் மட்டுமே.

ஆரியிடம் மட்டுமே அவருக்கு கருத்து முரண்கள் இருந்தன. அவற்றை சமயங்களில் கிண்டலாக புறணி பேசியதுதான் அவருக்கு எதிராக அமைந்து விட்டது. ஆனால் ஆரியுடன் முரண்பட்ட தருணங்களையும் அவர் நேராகவே பிறகு துணிச்சலுடன் பேசினார் என்பதை பலர் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது. ரம்யாவை விடவும் அதிக தவறுகள் செய்தவர்கள் முன்னணியில் இருந்தது விசித்திரம்.

‘வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ என்கிற பொதுப்புத்தியின் அபத்தமான நம்பிக்கையைப் போல ‘புன்னகைத்துக் கொண்டே இருப்பவர், பின்னால் கழுத்தை அறுத்து விடுவார்’ என்கிற நம்முள் புதைந்திருந்த நம்பிக்கையும் ரம்யாவின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டதோ என்று தோன்றுகிறது. ‘கோபம் இருக்கற இடத்துலதான் குணம் இருக்கும்’ என்பது போன்ற பழமொழிகள், ஒருவகை சமாதானத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். ஒருவர் கோபத்தில் கத்தியால் குத்தி விட்டு பிறகு அவரே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் என்றால் அதை நல்லது என்றா சொல்வோம்?

நீங்கள் ‘Unseen’ பார்த்து விட்டு எழுதியிருந்தால் கூடுதல் வெளிச்சம் கிடைத்திருக்கும் என்கிற விஷயத்தை பல பின்னூட்டங்களில் தொடர்ந்து பார்த்தேன். நடைமுறைச் சிக்கல்களால் அதைப் பின்பற்ற முயவில்லை என்பதுதான் உண்மை. எனவே நண்பர்கள் அதைப் பொறுத்தருள வேண்டும்.

ஆனால், முன்பே சொன்னதுதான். வாழ்நாள் முழுவதும் கவனித்தால் கூட ஒரு மனதின் உள் ரகசியங்களை, அதன் செயல்பாடுகளை நம்மால் துல்லியமாக கணித்து விட முடியாது என்னும் போது அதைக் கூடுதல் இருபது நிமிடங்களில் அறிந்து விட முடியும் என்பதை நான் நம்பத் தயாராக இல்லை. என்றாலும் நண்பர்கள் சுட்டிக் காட்டிய பாயின்ட் சரியானதுதான்.

இது பின்நவீனத்துவ காலக்கட்டம். அது எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும், பிரபலமாக இருந்தாலும் அவரிடமுள்ள போலித்தனம், பாசாங்கு போன்றவற்றை சிரிக்கச் சிரிக்க அம்பலப்படுத்தி விடும் கலாசாரம் பெருகியுள்ளது ஒருவகையில் இது ஆரோக்கியமான விஷயம். இணையம் என்னும் கட்டற்ற வெளி நமக்கு இவ்வகையான ஜனநாயகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

பிக்பாஸ் அர்ச்சனா
பிக்பாஸ் அர்ச்சனா

அன்பு, பாசம் போன்றவை நல்ல விஷயங்கள்தான். ஆனால் அவை போலித்தனமாகவும் பாரபட்சத்தோடும், உள்நோக்கத்தோடும் வெளிப்பட்டால் பொதுச்சமூகம் அவற்றை கண்டிக்கவும் எள்ளலாக நகைக்கவும் தயங்காது என்பதற்கு இந்த சீஸனில் உருவான ‘அன்புக்கூட்டணி’ ஒரு நல்ல உதாரணம். ‘அன்புதான் ஜெயிக்கும்’ என்று உரத்த குரலில் அர்ச்சனா முழங்கியது இந்த சீஸனின் மிகப் பெரிய நகைச்சுவையாக மாறி விட்டது. உண்மையான அன்பிற்கும் குழு மனப்பான்மைக்கும் மக்களுக்கு வித்தியாசம் தெரியாமலா போய் விடும் என்று அந்தக் கூட்டணி சற்றாவது யோசித்திருக்க வேண்டும்.

இணையத்தில் வெளியாகும் மீம்ஸ், ட்ரோல் வீடியோ போன்றவற்றிற்கு ரசிகன் நான். ஆனால் அவை ஆரோக்கியமான நகைச்சுவையுடனும் கண்ணியமான எல்லைக்குள்ளும் அமைந்திருக்க வேண்டும் என்பதே என் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. கண்ணியமற்ற, ஆபாசமான நகைச்சுவைகளின் மீது எப்போதும் எனக்கு மதிப்பில்லை. அவை சமயங்களில் தன்னிச்சையாக சிரிக்க வைத்து விட்டாலும் கூட தார்மீகமாக அவற்றை துளி கூட ஆதரிக்க மாட்டேன்.

இந்த நோக்கில் இந்த சீஸன் தொடர்பாகவும் சில நல்ல மீம்ஸ்கள் கண்ணில் பட்டன. சில நகைச்சுவைகள் வெடித்து சிரிக்குமளவிற்கு ஆழமான நகைச்சுவையுடன் அமைந்திருந்தன. அவற்றை உருவாக்கியவர்களுக்கு நன்றி. ஆரோக்கியமான நகைச்சுவையை மட்டும் பரப்புவோம்.

இன்னொன்று… ஒரு தனிப்பட்ட விஷயம். ‘சுரேஷ் கண்ணன்’ என்கிற என்னுடைய பெயர் சில சமயங்களில் இணையத்தில் அடையாளக் குழப்பத்தையும் சங்கடத்தையும் எனக்கு தருவது வழக்கம். இந்தத் தொடருக்கு வந்த சில பின்னூட்டங்களிலும் இந்தக் குழப்பத்தைப் பார்த்தேன். எனவே அதைத் தெளிவுப்படுத்தி விடுகிறேன். ‘மூங்கில் மூச்சு’ போன்ற கட்டுரைத் தொடர்களை எழுதியவர் ‘சுகா’ என்ற எழுத்தாளர். அவர் வேறு. நான் வேறு. அவர் என் மரியாதைக்குரிய நண்பர்தான். என்னால் அவருக்கு எவ்வித சங்கடமும் வந்துவிடக்கூடாது என்பதால் இதைப் பிரத்யேகமாக பதிவு செய்கிறேன்.

‘பிக்பாஸ்’ மட்டுமே என் அடையாளமல்ல. உலக சினிமா கட்டுரைகள் உள்ளிட்ட இன்னபிற தீவிரமான விஷயங்களும் என் அடையாளம்தான். அவற்றோடு இணைந்தே நான் அறியப்பட விரும்புகிறேன். ‘நீங்கள் பிறவிஷயங்களையும் எழுத வேண்டும்’ என்று சில நண்பர்கள் பிரியப்பட்டிருந்தார்கள். அவர்களுக்காக இதைச் சொல்கிறேன். நான் ‘மாணிக்கம்’ மட்டுமல்ல. எனக்கு இன்னொரு முகமும் இருக்கு. (ஹிஹி).

பிக்பாஸ் போட்டியாளர்கள்
பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் பற்றி முதல் சீஸனில் எழுதத் துவங்கும் போது பல தீவிரமான விஷயங்களை, உளவியல் சமாச்சாரங்களை இலகுவான மொழியில் அதில் இணைக்க முயன்றேன். ஒருவகையில் உங்களின் கவனத்தை ஈர்த்ததற்கு அதுவே முதற்காரணியாக இருந்தது.

ஆனால், நான்காம் சீஸனை வந்தடைந்த போது என் மொழியை இன்னமும் ஜனரஞ்சகமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஏனெனில் இளைய தலைமுறையினரைச் சென்று சேர வேண்டும் என்பது என் சுயநலம் கலந்த விருப்பமாக இருந்தது. எனவேதான் ‘ஹாய் ப்ரோ’ என்கிற நடையைப் பின்பற்ற வேண்டியிருந்தது.

இயன்றவரை ஆங்கிலக் கலப்பில்லாமல் தூய தமிழ் உரைநடையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் என் கொள்கை. என் தமிழ் அறிவின் எல்லையை ஒட்டி அதுதான் விருப்பமும் கூட. மொழித்தூய்மைதான் இப்போது மிக மிக அவசியமானது. ஆனால், ஒரு நெருங்கிய நண்பரிடம் இயல்பாக உரையாடும் தொனியில் இந்தத் தொடரை எழுதினால் நிறைய நண்பர்களை – குறிப்பாக இளம் தலைமுறை நண்பர்களை – சென்று அடைய முடியும் என்பதால் இந்தப் பாணியைத் தேர்ந்தெடுத்தேன். நெருடலாக உணர்ந்தவர்கள் பொறுத்தருள்க!

ஜனரஞ்சகமான மற்றும் சுவாரஸ்யமான மொழியில் வெகுசனப் பரப்பிடம் இயன்ற அளவு சென்று சேர வேண்டும் என்பதில் சுஜாதாதான் என் மானசீக குரு. எனவே அது சார்ந்த அணுகுமுறையை என் பாணியில் பின்பற்ற முயன்றேன்.

இப்போது சற்று சென்ட்டியான விஷயம். (இருங்க... கண்ணாடியைக் கழட்டிட்டு ஒரு பொசிஷன்ல நின்னுக்குறேன்) இந்த சீஸனுக்கு மட்டுமல்ல, முதல் சீஸனில் இருந்தே நான் எழுதும் பிக்பாஸ் தொடருக்கு நீங்கள் அளித்து வரும் மகத்தான வரவேற்பும் ஆதரவும் பல சமயங்களில் என்னை நெகிழவும் மகிழவும் வைத்திருக்கிறது. நீங்கள் காட்டும் பிரியத்தினால் சமயங்களில் மூச்சுத் திணறுகிறது. "நாம் அப்படி என்ன செய்து விட்டோம். ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து சற்று சுவாரஸ்யமாக (ஆம்... நானேதான் சொல்லிக் கொள்கிறேன்) எழுதினோம். அதற்கு இப்படியா பிரியம் காட்டுவார்கள்?” என்று பல சமயங்களில் நானே கூச்சம் அடைந்திருக்கிறேன். அந்த அளவிற்கு அன்பைக் காட்டிய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. போலவே மாற்றுக்கருத்துக்களை வைத்தவர்களுக்கும் அதே அன்பு. (இந்த விஷயத்தில் நானும் ஆரி ப்ரோ மாதிரிதான். கருத்துச் சுதந்திரத்தை கண்ணாக மதிக்கிறவன்.)

இந்தத் தொடருக்கு வந்திருந்த சில பின்னூட்டங்கள் தரமாக இருந்தன. ‘இந்தக் கோணங்களை நாம் எப்படி தவற விட்டோம்’ என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு அவை இருந்தன. அவற்றைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி.

பிக்பாஸ் வின்னர் ஆரி
பிக்பாஸ் வின்னர் ஆரி
பிக்பாஸ் பற்றி எழுதுவதற்கு பெரியதொரு மேடையை தொடர்ச்சியாக அமைத்துத் தரும் விகடனுக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படியொரு மேடை இல்லையென்றால் உங்களைச் சென்று அடைந்திருக்க முடியாது. குறிப்பாக இந்தக் கட்டுரைத் தொடரை தினமும் எடிட் செய்து நேர்த்தியான புகைப்படங்களுடன் பிரசுரம் செய்த விகடன் நண்பர்களின் உதவி அளப்பரியது. சமயங்களில் என்னுடைய தாமதத்தை அவர்கள் முகச்சுளிப்பின்றி கனிவுடன் பொறுத்துக் கொண்டதற்கும் மிக்க நன்றி.

வேறென்ன? ஆரி ப்ரோவின் பாதிப்பில் இந்தக் கட்டுரையிலும் மிக நீளமாக என் கருத்துக்களைப் பதிவு செய்து விட்டேன். அவற்றை சரியான முறையில் நீங்கள் Validate செய்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. சரியான காரணங்களுடன் என் மீதான பிழைகளைச் சுட்டிக் காட்டினால் அவற்றை ஏற்றுக் கொள்ளத் தயங்க மாட்டேன். ‘அன்பை’ விடவும் ‘நேர்மைதான்’ இறுதியில் வெல்லும் என்கிற செய்தியோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் நண்பர்களே. அதுவரை உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த பிரியமும் அன்பும். நன்றி!