Published:Updated:

பிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்! - நாள் 101

பிக்பாஸ் 1

‘வெளியே நடப்பது உள்ளே தெரியக்கூடாது’ என்கிற பிக்பாஸின் ஆதாரமான நடைமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கின்றனவா?

Published:Updated:

பிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்! - நாள் 101

‘வெளியே நடப்பது உள்ளே தெரியக்கூடாது’ என்கிற பிக்பாஸின் ஆதாரமான நடைமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கின்றனவா?

பிக்பாஸ் 1

வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்திருப்பதால் சென்டிமென்ட் காட்சிகளுக்கு குறைவிருக்காது என்று முன்பே எழுதியிருந்தேன். போலவே ஆயிற்று. பொதுவாக பிக்பாஸ் வீட்டில் அதிக பிறாண்டல்கள் நிகழ்ந்தால் ‘சண்டை போட்டது போதும்... விடுங்கப்பா’ என்கிற அளவிற்கு நமக்கு கடுப்பாகி விடும். ஆனால் இப்போதோ தொடர்ந்து பாசமழையாக பொழிந்து கொண்டிருப்பதால் ‘ஐயா. யாராவது விளையாட்டுக்காகவாவது கொஞ்சம் சண்டை போடுங்க சாமி..’ என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது.

வெளியே இருந்து வந்திருப்பவர்கள் சொல்லும் விஷயங்கள் களத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவை அவர்களிடமிருந்து பல்வேறு உரையாடல்களாக வெளிப்படுகின்றன. ஆரி அனத்துகிறார். பாலாஜி புலம்புகிறார். ரம்யா கலங்குகிறார். ரியோ குழம்புகிறார். இப்படி பல்வேறு உணர்ச்சி வெளிப்பாடுகள் வெளிப்படத் துவங்கியிருக்கின்றன. ‘வெளியே நடப்பது உள்ளே தெரியக்கூடாது’ என்கிற பிக்பாஸின் ஆதாரமான நடைமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கின்றன.

பிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்! -  நாள் 101

ஓகே நாள் 101-ல் என்ன நடந்தது?!

ஆங்கிலப் புத்தாண்டு என்றால் ‘சகலகலாவல்லவன்’ திரைப்படத்திலிருந்து ‘ஹேப்பி நியூ இயர்’ பாடல் போடுவது ஒரு சம்பிரதாயம் என்பது போல, ‘போகி’ என்றால் ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ பாடல் போடுவது ஒரு கிளிஷேவாகி விட்டது. பிக்பாஸ் வீட்டிலும் இதைத்தான் பின்பற்றினார்கள்.

மக்களிடம் மன்னிப்பு கேட்ட பாலாஜி ‘புதுசா பொறந்த மாதிரி இருக்கு’ என்று சென்ட்டியாக சொன்னது இந்தப் பாட்டிலும் வெளிப்பட்டது. ‘போடா... எல்லாம் விட்டுத்தள்ளு... பழச எல்லாம் சுட்டுத்தள்ளு... புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக் கொள்ளடா’ என்கிற வரி, பாலாஜியின் எண்ணவோட்டத்திற்குப் பொருந்துகிறது. ஆனால் பாலாஜியோ காலைப் பாட்டிற்கு நடனமாட எழுந்து கொள்ளாமல் ‘புதுசாப் பொறந்த குழந்தை’ மாதிரி தூங்கிக் கொண்டிருந்தார். (எப்படில்லாம் மேட்ச் பண்ண வேண்டியிருக்கு?!).

காலைப்பாடல் முடியும் போதெல்லாம் கேமரா பிக்பாஸ் வீட்டின் மேல் மாடியைக் காட்டும். அங்கே யார்தான் தங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு நாளும் எனக்கு குறுகுறுப்பாக இருக்கும். அதுவொரு பாவனைதான். என்றாலும் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கிறதா?

புதிதாக உள்ளே வந்திருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பது போல் நடித்தாலும் ‘மொதோ நாள் வந்தோமே.. அந்த ஃபீல் இப்ப இல்லல்ல?!’ என்கிற உண்மையைப் போட்டு உடைத்தார் சனம். ஆனால் அப்போது ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போதோ ஒருவரின் பலம், பலவீனம், பகை, நட்பு போன்றவை அப்பட்டமாக வெளியே தெரிந்து விட்டதால் அது சார்ந்த மனத்தடைகள் இருக்கத்தான் செய்யும். உதாரணமாக ஆரிக்கு அன்புக்கூட்டணியுடன் சிரித்துப் பேச முடியாததைப் புரிந்து கொள்ள முடிகிறது.

‘'ஒருத்தர் தப்பா நெனச்சிக்கணும்னு முடிவு பண்ணிட்டா அது சரியா இருந்தாலும் அவங்க தப்பாத்தான் நெனச்சிப்பாங்க” என்று விசு படத்தின் வசனம் மாதிரி எதையோ சொன்னார் சுச்சி. ஏதோ மேடை நாடகத்தின் நடுவில் நிற்பது போல அவர் விதம் விதமாக கை, கால்களை நாடகப் பாணியில் அசைத்து வசனம் பேசுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.

“ஆரி ப்ரோ சொல்றது சரியா இருந்தா அதை நான் ஒத்துப்பேன். அங்க நான் தோத்துட்டேன்னு நினக்கிறது இல்ல'’ என்று இந்த உரையாடலில் வந்து கலந்து கொண்டார் ரியோ. '‘நம்ம தப்பை ஒத்துக்கறது நல்ல குவாலிட்டி பிரதர்'’ என்று ஆரி சொன்னது சரியானது. சுச்சி, ஆரி, ரியோ ஆகிய மூவருக்கும் இடையில் நிகழ்ந்த இந்த உரையாடல் சுற்றிச் சுற்றி வந்து குழப்பமாகவே இருந்தது. “இருக்கற மூணு நாளைக்கு ஜாலியா இருந்துட்டு போவோம் பிரதர்'’ என்று இறுதியில் ரியோ சொன்னதை ஆரியும் வழிமொழிந்தார்.

பிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்! -  நாள் 101

‘சிறகுகள் வீசியே...' என்கிற பாடல் ஒலித்த போது ‘வருவது அனிதாதான்’ என்பதை முதலில் கண்டுபிடித்து விட்டார் வேல்முருகன். ஒப்பனையின்றி ஒரு சோகச் சித்திரமாக உள்ளே வந்தார் அனிதா. இருக்கும்போது இவரை ஆயிரம் கிண்டல் செய்தாலும், சில காரணங்களுக்காக இவர் மீது கோபம் வந்தாலும், இவர் இல்லாத போதுதான் நாம் நிறைய மிஸ் செய்கிறோம் என்று தோன்றிற்று.

சமீபத்தில் அனிதாவின் தந்தை மறைந்திருப்பதால் அது சார்ந்த ஆறுதலை எல்லோரும் சொல்லி அனிதாவைத் தேற்றினார்கள். சுச்சியின் லிப்ஸ்டிக் அளவு மிகவும் ஓவர் என்பது அவர் அனிதாவின் கன்னத்தில் உதட்டை ஒற்றி எடுத்ததிலேயே தெரிந்து போயிற்று. ‘பிக்பாஸ் குழுமத்தின் சார்பாக உங்கள் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்’ என்று பிக்பாஸ் சொல்வதை அமைதியான முகத்துடன் ஏற்றுக் கொண்டார் அனிதா. ‘வெல்கம் பேக்’ என்று பிக்பாஸ் உற்சாகப்படுத்தியதும் இதர போட்டியாளர்களும் கைத்தட்டினார்கள்.

பிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்! -  நாள் 101

‘உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்’ என்று ஆரியை முதலில் பார்த்தவுடன் சொன்னார் சனம். அதை உறுதிப்படுத்துவது போல் ஆரியுடன் நிறைய உரையாடல்களை சனம் மேற்கொண்டார் போலிருக்கிறது. ஏறத்தாழ ஆரி ஆர்மியின் உறுப்பினராகவே சனம் மாறி விட்டார்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த ‘நாத்தனார்’ கேபி காண்டாகி ‘என்னா இவ..’ என்று ரியோவிடம் வத்தி வைக்க '‘என்ன பண்றது?!” ரியோவும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சலித்துக் கொண்டார். அதென்னமோ, ரியோ தன் முகத்தை செயற்கையாக சோகமாக்கிக் கொள்ளும் போதெல்லாம் உள்ளுக்குள் கொலைவெறி வருகிறது. (இந்த மூஞ்சி உங்களுக்கு செட் ஆகலை பிரதர்!).

பிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்! -  நாள் 101

“ரியோவை எனக்கு பிடிக்கும். அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு மேலே வந்தவங்களை எனக்கு பிடிக்கும். ரியோவும் அந்த மாதிரி’ என்று சனத்திடம் ஆரி புகழ்ந்து கொண்டிருந்தார். '‘இவங்கள்லாம் வெளில போய்ட்டு வந்திருக்காங்க. அதனால இவங்க சாதாரணமா ஏதோ சொல்றது கூட நமக்கு ‘ஜெர்க்’ ஆகுது... பாலால்லாம் தலையைப் பிச்சிக்கிட்டு இருக்கான்” என்று ரியோ சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதிகம் குழம்பிக் கொள்ளத் தேவையில்லை என்பதையும் அவர் உணர்ந்திருப்பது சிறப்பு.

'‘என் அப்பாவோட இழப்பு.. வெளியே ஏராளமாக வந்த நெகட்டிவ் கமென்ட்ஸ். இந்த ரெண்டு விஷயங்களும் என்னை ரொம்ப பாதிச்சிட்டது. என் ஹஸ்பண்ட்தான் பெரும்பாலானவற்றைத் தாங்கிக்கிட்டார்’' என்று ஆரியிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் அனிதா. '‘சரியான ஃபீட்பேக்கை மட்டும் எடுத்துப்போம்'’ என்று சரியான ஆலோசனையைத் தந்தார் ஆரி.

பிரபலங்கள் சமூகவலைத்தள எதிர்வினைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் தரத் தேவையேயில்லை. பதிலுக்கு அவர்கள் எதிர்வினை செய்தால்தான் அவை இன்னமும் உக்கிரமாகும். அதிலிருக்கும் நியாயமான விமர்சனங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு மற்றவற்றை அப்படியே விட்டு விடலாம். அவையெல்லாம் தற்காலிகம்தான்.

உதாரணத்திற்கு பிக்பாஸ் தொடருக்கு முதல் சீஸனில் இருந்தே உபயோகமான பின்னூட்டங்களுடன் கூடவே ஏராளமான எதிர்மறைப் பின்னூட்டங்களும் எனக்கு வருகின்றன. அவைகளில் மிக மோசமான வசைகளும் கூட கலந்திருக்கும். கல்லில் அரிசியைப் பொறுக்குவது மாதிரி அவற்றில் சரியான கருத்து இருந்தால் நிச்சயம் நான் கவனத்தில் கொள்வேன்.

போலவே என்னை வசைபவர்களிடம் நான் பதிலுக்கு கோபமோ, வன்மமோ கொள்வதில்லை. ஏனெனில் என் எழுத்து ஏதோவொரு வகையில் அவர்களைப் பாதிக்கிறது. அது பிடித்திருப்பதால்தான் தேடி வந்து வாசிக்கிறார்கள். பின்னூட்டம் தருகிறார்கள். என் எழுத்துக்கு முக்கியத்துவம் தந்து எதிர்வினையாற்றுகிறார்கள். இந்த நோக்கில் அவர்களை முக்கியமானவர்களாகவே கருதுவேன்.

இதற்காக வசையாளர்களுக்கு நான் ஊக்கம் தருகிறேன் என்று பொருள் அல்ல. வெறுப்பு விதைக்கும் கலாசாரம் என்பது தவிர்க்கப்பட வேண்டியதே. ஆனால் கடுமையான எதிர்தரப்பு என்றாலும் அதை நான் மதிக்கிறேன் என்பதைத்தான் சொல்ல வருகிறேன். (சந்தடி சாக்குல கட்டுரையாளரும் தற்பெருமை சொல்லிக்கறதை கவனிச்சிங்களா?! இவரும் பிரபலமாம். ஊசி விக்கறவன்லாம் ‘தொழிலதிபர்… ஹய்யோ. ஹய்யோ!).

'கடலோரக் கவிதை’ நாயகியான ‘ஜெனிஃபர் டீச்சர்’ பாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. அந்தப் பாத்திரத்தை பிக்பாஸ் வீட்டில் ரேகா மீண்டும் நடித்துக் காண்பித்தது சுவாரஸ்யமான காட்சி. ஆனால் வேல்முருகனை மட்டும் சத்யராஜாக ஜீரணிக்க முடியவில்லை. மேலும் அர்ச்சனா செய்த ஓவர்ஆக்டிங்கையும் மன்னிக்கவே முடியாது.

சபை நிறைய மக்கள் கூடியிருப்பதால் ‘நாடா, காடா’ டாஸ்க்கை தூசு தட்டி மீண்டும் கொண்டு வந்தார் பிக்பாஸ். ‘ஹய்யா... சாமை மீண்டும் தேவசேனா ஒப்பனையில் பார்த்து ரசிக்க முடியுமே” என்றுதான் முதலில் தோன்றியது. ‘என்னதான் முதல் முறை பார்த்தது மாதிரி பரவசம் அடைய முடியாவிட்டாலும் மீண்டும் க்யூட்டான சாமை மறுபடியும் பார்க்க முடிந்ததில் சந்தோஷம்.

பிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்! -  நாள் 101

இந்த டாஸ்க் தொடர்பான அறிவிப்பை நிஷா வாசிக்கும் போது ‘பின்குறிப்பு’ என்பதை அழுத்தி வாசிக்க '‘அது சேஃப்டி பின்னா.. ஏடிஎம். பின்னா..?” என்பது போல் ரம்யா மொக்கை ஜோக் போட்டார். இதை பிக்பாஸ் முதலிலேயே யூகித்திருப்பார் போலிருக்கிறது. ‘ரம்யா நிச்சயம் இதற்கு மொக்கையாக ஒரு கவுன்ட்டர் தருவார். அவர் பலமுறை சொல்லியதுதான் அது. எனவே அவரை அப்படிச் செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்று ஏற்கெனவே வார்னிங் தந்திருப்பதை நிஷா இப்போது சபையில் சொல்ல ‘'பிக்பாஸ், ரொம்ப நன்றி. என்னை நல்லா புரிஞ்சு வெச்சிருக்கீங்க’' என்று செல்லம் கொஞ்சினார் ரம்யா. ஆக பழைய ஜோக் தங்கதுரையின் ‘ஃபீமேல் வெர்ஷன்’ ரம்யாதான் போலிருக்கிறது.

'‘இந்த டாஸ்க்கை ஆரஞ்சுப்பழத் தோல் எல்லாம் பிழிந்து இம்சை செய்யாமல் ஜாலியா பண்ணுங்க'’ என்று பிக்பாஸ் தெரிவித்ததை போட்டியாளர்கள் வரவேற்று மகிழ்ந்தார்கள். அர்ச்சனா, சாம், ஆஜித், கேபி, ஆரி, அனிதா ஆகியோர் ராஜகுடும்பத்தினர். இதர போட்டியாளர்கள் அரக்கர்களாம். அரக்கர் அணியில் சுரேஷ் இல்லாத குறையை உணர முடிந்தது. (ரம்யாவை அரக்கி கோலமாக்கிப் பார்க்க எப்படியய்யா மனது வந்தது?!)

ராஜகுடும்பத்தில், சுச்சி சிப்பாய் வேடம் அணிந்திருக்கிறார் போல என்று நினைத்திருந்தேன். இல்லை அது ராணியாம். இப்படியொரு டொங்கலான ராணியை எங்கும் பார்த்ததில்லை. இம்சை அரசி மாதிரி இருந்தார். ‘இங்க்கி பிங்க்கி பாங்க்கி’ போட்டு முதலில் ஆஜித்தை அனுப்பினார்கள். அவர் மூக்கால் அழுது கொண்டே சென்றார்.

‘இருங்க.. ஒரு பொசிஷன்ல நின்னுக்கறேன்’ என்று ஆஜித் தடபுடலாக தயார் ஆனாலும் வேல்முருகனின் இம்சையைத் தாங்க முடியாமல் சில நொடிகளிலேயே சிரித்து தோற்று விட்டார்.

‘ஏம்ப்பா ஆஜித்து, டிரஸ்ஸூக்கு டெய்லர் சார்ஜே ஆயிரம் ரூவா ஆச்சு... இப்படி டக்குன்னு தோத்துட்டியே?” என்று ஜாலியாக வெறுப்பேற்றினார் பிக்பாஸ். ஆஜித்தின் முகத்தில் சங்கடம் வெளிப்படையாக தெரிய ‘இன்னொரு சான்ஸ் கொடுங்க... பிக்பாஸ்’ என்று பாவமாக வேண்டுகோள் வைத்துக் கொண்டிருந்தார்.

ராஜகுடும்பத்திலிருந்து அடுத்த ஆள் வருவதற்குள் வெளியே அரக்கர் அணி வேல்முருகனின் வழியாக விதம் விதமான பாடல்களை பாடி நடனம் ஆடிக் கொண்டிருந்தது. அடுத்து வந்தவர் கேபி. தனது முகத்தை இன்னமும் டெரர் ஆக்கிக் கொண்டு கேபி உக்கிரமாக நிற்க ‘ஹப்பாடி, நாம லன்ச் முடிச்சிட்டு தூங்கிட்டு வந்துடலாம். இந்தப் பொண்ணு நைட்டு வரைக்கும் தாங்கும்’ என்று நிம்மதியாக உள்ளே சென்றார் அர்ச்சனா.

‘இதென்ன மூக்கா, மூணாறு தேக்கா’ என்று கேபியிடம் ரைமிங்கில் இம்சை தந்தார் நிஷா. ‘என்னை மட்டும் லவ்வு பண்ணு புஜ்ஜி’ என்று இன்னொரு பக்கம் கொடுமை செய்து கொண்டிருந்தார் வேல்முருகன். ‘ஹய்யோ, இப்படில்லாம் டார்ச்சர் பண்ணா அவளுக்கு சிரிப்பு வராது. காண்டுதான் வரும்’ என்று ரியோ சொன்னதுதான் உண்மையாயிற்று. பஸ்ஸர் அடிக்கும் வரை இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு வெற்றி பெற்றார் கேபி.

‘வீரவாளை முத்தமிட்டு விட்டு களத்திற்கு செல்’ என்று ஆரி முன்பே செய்த சுமாரான காமெடிக்கு கூட கேபி சிரிக்கவில்லை. ‘நான் முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ ரேஞ்ச்சிற்கு உறுதியாக நின்றார்.

‘என்னா ரம்யா, உனக்கு பிக்பாஸ் டைட்டில் கிடைக்கும்னு பார்த்தா... விஷபாட்டில்’ன்ற டைட்டில்தான் மிஞ்சும் போலிருக்கு’ என்று ரம்யாவை காண்டாக்க முயன்று கொண்டிருந்தார் பாலாஜி. ‘டோன்ட் வொர்ரி, பி ஹேப்பி’ என்று அந்தக் கிண்டலை ‘போய்யா யோவ்’ என்பது போல் இடதுகையால் ஹேண்டில் செய்து கொண்டிருந்தார் ரம்யா.

ராஜ குடும்பத்திலிருந்து அடுத்து வெளியே சென்றவர் சுச்சி. வேல்முருகனும் சோமுவும் விதம் விதமாக இம்சைகள் தந்தாலும் சுச்சியிடம் எந்தவொரு சலனமும் இல்லை. பஸ்ஸர் ஒலிக்கும் வரை அவர் தாக்குப் பிடித்து நின்றார். இதனால் வெறுப்பான வேல்முருகன், ‘திரும்பத் திரும்ப பேசற நீ’ காமெடி போல ‘என்னைப் பார்த்தா பாவமா இல்லையா’ என்கிற வசனத்தை பரிதாபமாக திரும்பத் திரும்பச் சொல்லி கதறினார். அனிதாவின் பிரத்யேகமான சிரிப்பொலி மாதிரி வேல்முருகன் உற்சாகத்தில் கத்துவதையும் ரிங்டோனாக மாற்ற முயலலாம். குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். சோறு ஊட்டும் போது பயமுறுத்தவும் வைத்துக் கொள்ளலாம்.

அடுத்து வந்தவர் க்யூட்டான ‘தேவசேனா’. போட்டியாளராக இருந்தால் கூட சாம் சற்று மெனக்கெட்டிருப்பார் போலிருக்கிறது. இப்போது ‘லுலுவாய்க்கு’ விருந்தினராக வந்திருப்பதால் சட்டென்று சிரித்து உடனே தோற்று விட்டார். ‘ஹப்பாடி... நான் மட்டும்தான் கேவலப்பட்டிருப்பனோன்னு பயமா இருந்தது. டீமில் வந்து இணைந்ததற்கு நன்றி’ என்று மகிழ்ந்து போனார் ஆஜித்.

பிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்! -  நாள் 101

‘அய்யய்யோ... ஆரி ப்ரோ வர்றாரு’ என்று அரக்கர் அணியே பயந்து அலறி பதறும் அளவிற்கு உக்கிரமான முகத்துடன் வந்தார் ஆரி. இவருக்கு வெளியே எந்த வேலையும் கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை. குறைந்தபட்ச உத்தரவாதத்துடன் ஒரு பணி இருக்கிறது. அது விஐிபி வாசலில் ‘சிலையாக நிற்கும் பணி’. கச்சிதமாகப் பொருந்திப் போவார். ஆரியை சிரிக்க வைக்க முடியாமல் அரக்கர் அணி சோர்ந்து அமர்ந்து பரிதாபமாக தோற்றுப் போயிற்று. இதற்கு அவர்கள் பாறாங்கல்லில் முட்டிக் கொண்டிருந்தாலாவது சற்று டைம் பாஸ் ஆயிருக்கும்.

பிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்! -  நாள் 101

இந்த டாஸ்க்கின் இறுதியில் ராஜ அணி வெற்றி பெற்றது. இதற்கு ‘உம்மணாமூஞ்சி’களான கேபிக்கும் ஆரிக்கும் நிறைய க்ரெடிட் தர வேண்டியிருக்கும். ‘ராஜகுடும்பம்.. கல்நெஞ்சுக்காரயிங்களா இருக்காங்க’ என்று கலாய்த்தார் ரம்யா. ‘சிரிக்க வைக்கப்படும்’ நபராக அனிதாவை வெளியே அனுப்பாதது நல்ல விஷயம். சூழல் சரியானதில்லை.

‘கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்’ என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். கண்களைக் கட்டிக் கொண்டு கால்பந்து விளையாடும் ஜாலியான போட்டியை ஏற்பாடு செய்திருந்தார் பிக்பாஸ். இதில் இரண்டு சரியான கோல்களை அடித்து கேபி வெற்றி பெற்றார்.

‘யாரென்ற தெரியாத அந்நியர்களான உங்களுக்குள் பாசமும் பந்தமும் ஏற்பட்டது’ என்று அறிவித்த பிக்பாஸ், இந்த வீட்டில் அதுவரை நிகழ்ந்த உணர்ச்சிகரமான தருணங்களை AVயாக தொகுத்து வழங்குவதாக தெரிவித்த போது மக்கள் மூக்கைச் சிந்துவதற்கு உருக்கத்துடனும் உற்சாகமாகவும் தயாரானார்கள். வழக்கம் போல் பிக்பாஸ் டீமின் அபாரமான எடிட்டிங் திறமை இந்த வீடியோவிலும் வெளிப்பட்டது.

சிறையில் தூங்கிக் கொண்டிருக்கும் பாலாஜிக்கு சுச்சி விசிறி விடும் காடசி, உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய ஆரியின் கண்களை பாலாஜி துடைத்து விட்ட காட்சி போன்றவை நெகிழ வைப்பதாக இருந்தது. சுரேஷ் தொடர்பான காட்சிகள் வந்த போது அர்ச்சனாவும் கேபியும் அதிகம் கலங்கினார்கள். அவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்த வீடியோ பார்வையாளர்களுக்கும் கூட பல நினைவுகளைக் கிளறி விட்டிருக்கும். போட்டியாளர்களின் மீது நமக்கு எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் அவர்களை நம்முடைய நண்பர்களாகவே உணர முடிகிறது. வீடியோ முடிந்த பிறகு ‘அனைவருக்கும் ஐ லவ் யூ’ என்று பிக்பாஸ் சொல்ல சபை கூடுதலாக கலங்கியது. ‘ஒருமாதிரியா ஆயிடுச்சு’ என்று நெகிழ்ந்தார் சுச்சி.

பிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்! -  நாள் 101

வீடியோ முடிந்த பிறகும் அதன் தாக்கம் அனைவரிடமும் இருந்தது. ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டு கலங்கினார்கள். ரியோ வழக்கம் போல் மூன்றாம்பிறை கிளைமாக்ஸ் கமல் மாதிரி கலங்கிய முகத்துடன் தொடர்ந்து அமர்ந்திருந்தார். அன்புக்கூட்டணி மீண்டும் ஒருமுறை கூடி உருகி வழிந்து கொண்டிருந்தது. ரியோ வாய் விட்டு கதறி அழுதார். ‘இப்படி இருந்ததுக்குதானே என்னை குறை சொன்னாங்க?” என்று பின்குறிப்பாக புலம்பினார்.

‘உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே’ என்கிற பாடல் வரிகளின் ரேஞ்சிற்கு கேமரா முன்னால் நின்று உருகிக் கொண்டிருந்தார் சனம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவரது பயணத்தில் ஒரு முக்கியமான தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை அவரது உருக்கமான வாக்குமூலத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

பிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்! -  நாள் 101

வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டாலும் அனைவரும் உறங்கச் செல்லவில்லை. வேல்முருகன் என்கிற டேப்ரிகார்டரை ஆன் செய்து விட்டு தொடர்ந்து பாடச் செய்து விடிய விடிய உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

நாளை பொங்கல் தினம். வண்ணமயமாகவும் பல்வேறு கொண்டாட்டங்களுடனும் நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். ‘போட்டியில் தொடர்கிறீர்களா அல்லது ஐந்து லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்புகிறீர்களா?’ என்று பிக்பாஸ் ஆசை காட்டும் நிகழ்வு நாளை நடைபெறும் என்பது பிரமோவைப் பார்த்தால் தெரிகிறது. கடந்த சீஸனில் கவின் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். இம்முறையும் அப்படி எவராவது எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.