Published:Updated:

காதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா? பிக்பாஸ் – நாள் 103

பிக்பாஸ் நாள் 103

“நீங்கள் உருவமாக வாழ்ந்த வீட்டில் நான் குரலாக வாழ்ந்திருக்கிறேன்" என்று நெகிழ்ந்தார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

Published:Updated:

காதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா? பிக்பாஸ் – நாள் 103

“நீங்கள் உருவமாக வாழ்ந்த வீட்டில் நான் குரலாக வாழ்ந்திருக்கிறேன்" என்று நெகிழ்ந்தார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

பிக்பாஸ் நாள் 103

ஷிவானி மற்றும் பாலாஜிக்கு இடையிலான ஊடல்தான் பிக்பாஸின் இன்றைய போதைக்கு ஊறுகாய். எனவே அதை நன்றாகவே ஃபோகஸ் செய்தார். இந்த நோக்கில் பிக்பாஸ் பாயில் சுற்றி அனுப்பியது ஷிவானியை அல்ல. பாலாஜிக்கான பிரச்னையை. சம்பந்தப்பட்ட பகுதியில் இந்த விவகாரத்தை சற்று விரிவாக அலசி விடலாம். சகித்துக் கொண்டு படித்து விடுங்கள்.

மற்றபடி பொங்கலுக்கு வந்த விருந்தினர்களை பிக்பாஸ் துரத்தி விட்டு விட்டார். ஆக, இனி இறுதிப்போட்டி நிகழும். இந்தப் போட்டியும் மக்களின் வாக்குகளும் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கியமான காரணிகளாக இருக்கும். எனவே கீரிக்கும் பாம்பிற்கும் உண்மையிலேயே சண்டை நடக்கலாம். குத்த வைத்து காத்திருப்போம்.

காதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா? பிக்பாஸ்  – நாள் 103

ஓகே... நாள் 103-ல் என்ன நடந்தது?

ஏதோ பப்பில் DJ-வாக இருந்தவரை புதிதாக டீமில் சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது. தினமும் காக்டெய்லாக போட்டு அசத்துகிறார். இன்றைக்கும் ‘ஆலுமா டோலுமா’வில் ஆரம்பித்து இருக்கிற உப்புமாவையெல்லாம் பாட்டாகப் போட்டு கிளறி இறக்கி வைத்தார்.

பிக்பாஸ் வீட்டை கோயிலாகவும் பிக்பாஸை தெய்வமாகவும் கருதி உணர்ச்சிவசப்படுகிற போட்டியாளர்கள் சிலர் எல்லா சீஸனிலும் இருக்கிறார்கள். இன்று சனத்தின் வெளிப்பாடும் அப்படித்தான் இருந்தது. புகழை renewal செய்வது என்பதைத் தாண்டி பிரபலங்களை ஒரு நெருக்கடிக்குள் தள்ளி பரிசோதனை செய்து பார்க்கும் விளையாட்டுத்தான் இது. இதில் ஆத்மார்த்தமான சுயதரிசனம் கிடைத்தவர்கள் உணர்ச்சிவசப்படுவதில் ஆச்சரியமில்லை. இதை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துதான் பெற வேண்டும் என்று அவசியமில்லை. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. சுயபரிசீலனை உள்ளிட்ட பல உள்நோக்குதல்களின் மூலம் ஒவ்வொருவரும் அடையலாம். அல்லது முறையான கவுன்சிலங்கின் மூலமும் அடையலாம்.

"என்னை எனக்கே அடையாளம் காண்பிச்ச இடம் இது” என்று பிக்பாஸ் வீட்டை முன்னிட்டு ஆரி நெக்குருக "அதானே..?” என்று பின்பாட்டு பாடினார் சுச்சி. ‘'பார்த்துக்கங்க. நான் ஜெயிலுக்குப் போறேன்.. நானும் ரவுடிதான்’ என்கிற காமெடி போல ‘பிக்பாஸ் சரித்திரத்திலேயே நான்கு முறை ஜெயிலுக்குப் போன ஒரே போட்டியாளர் நான்தான்’ என்பதை அடிக்கடி தற்பெருமையாக சொல்லிக் கொள்கிறார் ஆரி. "பாவிப்பசங்க... முதுகில குத்திட்டாங்க'’ என்கிற ஆற்றாமையும் அதன் பின்னால் ஒளிந்திருந்தது.

காதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா? பிக்பாஸ்  – நாள் 103

‘'இந்த ஹோட்டல்ல நெய் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லதாம்’' என்று கவுண்டமணி ஒரு நகைச்சுவைக் காட்சியில் சொல்ல ‘'யாரு சொன்னது. ஹோட்டல்காரனா?” என்று கிண்டலடிப்பார் சத்யராஜ். அது போல ‘'ஜீரகம் கொண்ட எங்கள் பிராண்ட் அப்பளம் சாப்பிட்டால் உடம்பில் எந்தப் பிரச்னையும் அண்டாது'’ என்கிற ரேஞ்சிற்கு ஒரு அப்பளக் கம்பெனி பிக்பாஸ் வீட்டில் விளம்பரப் பாயை விரித்திருந்தது. ‘இந்த அப்பளம் சாப்பிட்டா ரொம்ப நல்லது’ – ‘யாருக்கு? – ‘அப்பளக் கம்பெனிக்கு.'

அப்பளம் முதல் அணுகுண்டு வரை எந்த டாப்பிக் கொடுத்தாலும் அதை ஒரே மாதிரியான இழுவை ராகத்தில் பாட்டாகப் பாடும் திறமை கொண்ட வேல்முருகன் இந்தச் சூழலையும் விடவில்லை. மக்கள் அப்பளம் சுடும் அழகையும் உண்ணும் லட்சணத்தையும் பாட்டாகப் பாடி நம் காதுகளை நொறுக்கிக் கொண்டிருந்தார். ‘சைட்டிஷ்ஷூக்கு சூப்பரா இருக்கும் போல குமாரு’ என்பது போல் சான்றிதழ் தந்து கொண்டிருந்தார் ரமேஷ்.

அப்பளக்கம்பெனி மண்பானை சட்டிகளில் மதியச் சாப்பாடு அனுப்பியிருந்ததை மக்கள் உற்சாகமாக வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். கூடவே ஒரு பாயும் இருந்தது. என்னவென்று உள்ளே பார்த்தால் பாய்க்குள் புசுபுசுவென்று ஒரு தலையணை. அட! நம்ம ஷிவானி! ‘ஹெளச்’ என்று பயந்து போனார் சுச்சி.

உற்சாகமாக உள்ளே நுழைந்த ஷிவானியை எல்லோரும் ஆசையாக வரவேற்று கட்டிக் கொள்ள ‘சுண்டலுக்காக நிற்கும் க்யூவில்’ தனக்கு மட்டும் கிடைக்கவில்லையே என்பது மாதிரி பாலாஜி பரிதாபத்துடனும் ஏக்கத்துடனும் காத்துக் கொண்டிருந்தார். அவரை மட்டும் அரவணைக்காமல் சுருக்கமான ‘ஹாய்’யுடன் ஷிவானி நகர்ந்து சென்று விட அடிபட்ட முகத்துடன் பரிதாப ஹீரோ மாதிரி தனிமையை தேடிச் சென்ற பாலாஜியைப் பார்க்க பாவமாக இருந்தது.

காதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா? பிக்பாஸ்  – நாள் 103

“என்னாச்சு பாலாஜி… டல்லா இருக்கீங்க... உடம்பு சரியில்லையா?'’ என்று பிறகு ஒன்றுமே தெரியாதது மாதிரி ஷிவானி விசாரித்தது, பெண்களுக்கே உரிய சிறப்புக் குணாதிசயம். கடப்பாறையை விழுங்கி விட்டு சுடச்சுட சுக்கு காபி குடிப்பதில் அவர்கள் வல்லவர்கள். ‘'இல்ல தலை சுத்துது’' என்று சமாளித்தார் பாலாஜி. "என்ன வேணா நடக்கட்டும்... நான் சந்தோஷமா இருப்பேன்'’ என்று குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த பாலாஜியை வந்தவர்கள் எல்லாம் போட்டுக் குழப்பி வைத்திருக்கிறார்கள் அல்லது அவர்கள் தெளிவாகச் சொன்னாலும் பாலாஜி தானாகவே நிறையக் குழம்பியிருக்கிறார்.

மண் சோற்றை மக்கள் மொக்கிக் கொண்டிருக்கும் போது வாக்குமூல அறையின் உள்ளிருந்து யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஒருவேளை பிக்பாஸ்தான் சாவியைத் தொலைத்து விட்டு உள்ளே மாட்டிக் கொண்டு பீதியில் தட்டுகிறாரோ என்று பார்த்தால் இல்லை. ‘சுரேஷ் தாத்தா’ என்று முதலில் சரியாக கண்டுபிடித்தவர் சுச்சி. '‘ஆமாம்... கன்ஃபர்மா அவர்தான்’' என்று வழிமொழிந்தார் சுரேஷின் பிரியமான எதிரி அனிதா. ஊரிலிருந்து வந்திருக்கும் பெரியப்பா மாதிரி முண்டாசு கட்டி பட்டோடபமாக உள்ளே வந்து அனைவரையும் அரவணைத்துக் கொண்டார் சுரேஷ். பாலாஜியின் முகத்தில் ஒரு சிரிப்பு வெளிச்சம் பிறந்தது. ‘ஹப்பாடா! நம்மாளு வந்துட்டாரு’. ‘எங்க ஆசான் வந்துட்டாரு’.

காதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா? பிக்பாஸ்  – நாள் 103

மரணப் படுக்கையில் இருந்த பாட்டியை மீண்டும் தட்டியெழுப்பிக் கொண்டு வந்தார் பிக்பாஸ். ஆம், மீண்டும் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ டாஸ்க். ஏறத்தாழ முன்பிருந்த அதே உறவுமுறைதான் இப்போதும். வெளியேறிவர்களுக்கு மட்டும் கூடுதல் பாத்திரங்கள் இணைக்கப்பட்டன. ‘அர்ச்சனாவிற்கு தங்கச்சி ரேகா’ என்று சொல்லப்பட்டதும் ‘டேய்.. எவண்டா.. அவன்.. ஸ்கிரிப்ட் எழுதினது. உனக்கு மனச்சாட்சியே இல்லையா?” என்று சேலையைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஜாலியாக சண்டைக்கு வந்தார் அர்ச்சனா.

ரேகாவும் ஆஜித்தும் திருடர்களாம். அப்போதே தெரிந்து போயிற்று இந்த டாஸ்க் வெளங்கப் போவதில்லை என்று. இந்தப் பிள்ளைப்பூச்சிகளிடமா இத்தனை பெரிய பொறுப்பை ஒப்படைக்கணும்? சாமிற்கு வீட்டின் பணியாள் வேடம். ஆனால் அந்த எளிமையான புடவையாலும் சாமின் வசீகரத்தைக் குறைக்க முடியவில்லை. பார்க்க அம்பூட்டு லட்சணமாக இருந்தார். (ஹிஹி).

ஷிவானியின் பாராமுகத்திற்கான காரணம் இப்போது மெல்ல துலங்கியது. ‘ஆஜித்திற்குப் புரியும்… அவளுக்குப் புரியாதுன்னு என்னைப் பத்தி சொன்னியா.. ஸ்கூல் குழந்தை–ன்னு என்னைச் சொன்னியா” என்றெல்லாம் வெளியில் இருந்து பார்த்த வீடியோக்களைக் கொண்டு கோபம் அடைந்தார் ஷிவானி. ஆனால் இவர் வெறும் அப்பாவி அம்புதான். எய்த ஆயுதம் ஷிவானியின் அம்மா என்பது வெளிப்படை.

கேமராக்களின் நார் நாராக் கிழித்தவர், கமல் சொன்ன ஆலோசனையைக் கூட மறுத்துப் பேசியவர், தன் மகள் வீட்டுக்கு வந்தவுடன் சும்மாவா இருந்திருப்பார்? அது வரை கொலைவெறியுடன் காத்திருந்து விட்டு ஷிவானி வீட்டுக்குள் வந்ததும் ‘'அந்தப் பாலாஜி பய உன்னைப் பத்தி என்னவெல்லாம் பேசியிருக்கான் தெரியுமா?” என்று அது தொடர்பான காட்சிகளை மட்டும் காண்பித்திபுரியாதா,,?

“அதென்ன… ஆஜித்திற்குப் புரியும். எனக்குப் புரியாதா, நான் என்ன ஸ்கூல் குழந்தையா?'’ என்றெல்லாம் ஷிவானியின் ஈகோ தூண்டப்பட்டிருக்கும். ‘இதையெல்லாம் உள்ளே போனவுடன் நீ கேட்கறே. சரியா, நான் வெளியே இருந்து பார்த்துட்டு இருப்பேன்’ என்று ஷிவானியின் அம்மா பலமாக பற்ற வைத்து அனுப்பியிருக்கலாம்.

உண்மையில் சம்பந்தப்பட்ட காட்சியில் ஷிவானிக்கு ஆதரவாகத்தான் பாலாஜி பேசினார் என்பது வெளிப்படை. அவர் சொன்ன வார்த்தைகளை உடைத்துப் பார்த்தால் ஷிவானியை கீழிறக்குவது போல் தோன்றினாலும் அதன் ஒட்டுமொத்த தொனி ஷிவானிக்கு ஆதரவாகத்தான் இருந்தது. பாலாஜி மட்டுமல்ல, ஷிவானியின் அம்மா அன்று ஆடிய ஆட்டத்தினால், அன்றைய தினத்தில் ஷிவானி மீது அனைவருக்குமே பரிதாபம் வந்திருக்கும். ஷிவானியின் மிக்சர் பாக்கெட்தனத்தை கடுமையாக வெறுத்து வந்த எனக்கு கூட அன்று பரிதாபம் ஏற்பட்டது. இதை ஷிவானியால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் துயரம்.

காதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா? பிக்பாஸ்  – நாள் 103

ஷிவானியின் புத்திக்கூர்மையைப் பற்றி நான் சில சமயங்களில் இங்கு எழுதியிருக்கிறேன். குறிப்பாக பாலாஜிக்கு ஆலோசனை சொல்லும் சமயங்களில் ஷிவானியின் பாரபட்சமற்ற தன்மையும் அறிவுத்திறனும் சிறப்பாக வெளிப்படும். ஆனால் சிலர் மற்றவர்களின் விவகாரங்களில் நன்றாகவே பஞ்சாயத்து பேசுவார்கள். ஆனால் தனக்கென்று வரும் போது குழம்பிப் போவார்கள். ஷிவானிக்கும் அதுதான் நேர்ந்திருக்கிறது.

ஒரு நோக்கில் பாலாஜியின் விமர்சனங்கள் சரியானதே. அந்த அளவிற்கு ஷிவானி செயலற்ற, ஒரு பலவீனமான போட்டியாளராகத்தான் இருந்தார். ‘நான் நானா இருக்கேன்’ என்பது அவரது இயல்பு என்பது ஒரு எல்லை வரைக்கும் சரிதான் என்றாலும் சுற்றியுள்ளவர்களின் இயக்கம், கமலின் அறிவுரை, பிக்பாஸின் வழிகாட்டல் போன்ற எதுவும் அவரிடம் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அவரது மொண்ணைத்தனம் நீண்ட நாட்களுக்கு அப்படியே நீடித்தது. அவர் ஃபைனலுக்கு முன்பு வரை எப்படி அங்கு நீடித்தார் என்பதே கூட விளங்கிக் கொள்ள முடியாத மர்மமாக இருக்கிறது. அவரது கவர்ச்சியும் ரசிகர்களின் ஆதரவும் பாலாஜியின் தந்திரங்களும் அவரைக் காப்பாற்றி இருக்கலாம்.

ஆக, சுயபரிசீலனையோடு ஷிவானி இவற்றையெல்லாம் யோசித்தால் பாலாஜி சொன்னது தன் மீதான அக்கறையினால்தான் என்பது புரியும். போட்டியின் இறுதிக்கட்டத்தில் ஏற்கெனவே சோர்ந்து, குழம்பிப் போயிருக்கும் பாலாஜியை தானும் சேர்ந்து வீழ்ச்சியில் தள்ளி விடக்கூடாது என்கிற குறைந்தபட்ச யோசனை கூட ஷிவானியிடம் இல்லாதது பரிதாபம்.

ஒரு தலைக்காதல் அல்லது காதல் பிரிவு போன்ற காரணங்களால் பெண்களின் மீது வன்முறையைச் செய்யும் ஆண்கள் மீது எனக்கு எந்த மதிப்புமில்லை. அவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். ஆனால் மனம் உடைந்து போய் தன்னையே மெல்ல அழித்துக் கொள்ள முயலும் ‘சூப் பாய்ஸ்’ நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இதைச் சொல்கிறேன்..

இது போன்ற காதல் விவகாரங்களில் உணர்ச்சிகளின் படுகுழிகளில் ஆழமாக சென்று விடாதீர்கள். காதல் தோல்வி, அது தொடர்பான திரையிசைப்பாடல்களைக் கேட்டு கலங்குவது, நண்பர்களிடம் அனத்துவது, குடி போன்ற சமாச்சாரங்கள் இந்த அவஸ்தையைக் கொண்டாடத் தூண்ட வைக்கும். இந்த மனவலியை அனுபவிப்பதில் ஒருவிதமான இன்பம் ஏற்பட்டு விடும். ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் பாஸூ’ என்று உப்பிற்கு கூட உதவாத தத்துவம் எல்லாம் பேச வைக்கும். (இதையேதான் தமிழ் சினிமா நாயகர்களும் போதையேற்றி திரையில் வாந்தியெடுத்து வைக்கிறார்கள்). ஆனால் இதெல்லாமே வீண்.

ஒரு மனநெருக்கடியை எதிர்கொள்வதில் ஆணை விட பெண்ணே சிறந்தவர். இது தொடர்பான மனவலிமையும், நுண்ணுணர்வும், நடைமுறை அணுகுமுறையும் பெண்ணுக்கே அதிகம். ஆண் உணர்ச்சிகள் சார்ந்து அதிகம் யோசிக்கும் போது பெண் நடைமுறை அறிவு சார்ந்தே அதிகம் யோசிப்பாள். குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் தன்னுடைய நலம் சார்ந்து மட்டும் ஆண் யோசிக்கும்போது பெண் பல விஷயங்களை, பல கோணங்களில் வைத்துத்தான் யோசிப்பாள்.

ஏனெனில் ஒரு பெண் என்பவர் தனியாள் அல்ல. ஒரு குடும்பத்தோடு அழுத்தமாக பிணைக்கப்பட்டவர். ஒரு குடும்பத்தின் இயக்கத்திற்கு ஆதாரமான அச்சு என்பவர் பெண்தான். அவரைச் சுற்றித்தான் அனைத்தும் இயங்குகிறது. எனவே காதல் விவகாரத்தில் ஒரு சராசரி பெண்ணால் சுயநலம் சார்ந்து யோசிக்க முடியாது. பல்வேறு முடிச்சுகள் அவளை இழுத்தவாறு இருக்கும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஒரு ஆணால் தன் குடும்பத்தைச் சட்டென்று துடித்துக் கொள்வது போல பெண்ணால் துண்டித்துக் கொள்ள முடியாது. ஒரு பிரச்னையின் பல்வேறு பரிமாணங்களை யோசித்து உணர்ச்சிவசப்படாமல் நடைமுறை சார்ந்து முடிவெடுக்கும் அறிவுத்திறன் பெண்களுக்குத்தான் அதிகம்.

எனவே காதல் விவகாரங்களில் ‘அவ என்னை ஏமாத்திட்டா மச்சான்’ என்று அபத்தமாக அனத்திக் கொண்டிருக்காமல் அவளுடைய நோக்கிலிருந்து பார்த்தால்தான் அவள் எடுத்திருக்கும் முடிவின் கோணங்கள் புலப்படும். அவற்றில் நியாயம் இருந்தால் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு கடந்து வருவதுதான் ஆண்மை. அதுதான் நாகரிகமும் கூட. நீங்கள் உண்மையாகவே ஒரு பெண் மீது அன்பு வைத்திருந்தால் அவளுடைய நலனிற்கு தீங்கு விளைவிப்பது போல் எதையும் யோசிக்கக்கூடாது. மாறாக அவளை எப்படி பழிவாங்கலாம் என்று யோசித்தீர்கள் என்றால், உங்களுக்கு காதல் முக்கியமில்லை, சுயநலம்தான் முக்கியம் என்று பொருள். ‘காதலுக்காக, காதலையே விட்டுக்கொடு’ என்பதுதான் ஆதார அன்பு.

எதற்காக இந்த வியாக்கியானம் என்றால் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு பாலாஜி விட்ட கண்ணீர் எல்லாம் வீண். இதர விஷயங்களில் கூட தெளிவாக யோசிக்கும் பாலாஜி, அன்பு விஷயம் என்றால் மட்டும் இப்படி உருகி பலவீனம் அடைவது நேர விரயம். அதிலும் இறுதிப் போட்டி நெருங்கிக் கொண்டிருக்கும் போது அதில் மட்டுமே அவர் கவனம் செலுத்த வேண்டும்.

காதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா? பிக்பாஸ்  – நாள் 103

இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும் ஷிவானியில் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடிகிறது அல்லது அதைப் போன்ற பாவனையை எளிதில் செய்து விட முடிகிறது. ஆனால் பாலாஜியால் அவ்வாறு செய்ய இயலவில்லை. தனித்து நிற்கிறார். தத்தளிக்கிறார். பொதுவெளியில் ஓர் ஆண் தன் உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்தி விடுவதைப் போல பெண்ணால் இயலாது. அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணங்களைக் கற்பிக்க சமூகம் தயாராக இருக்கும். இது சார்ந்த விதிகளை உருவாக்கி வைத்திருப்பதும் ஆணாதிக்க சிந்தனைகள்தான். ஷிவானியின் நோக்கில் அவரது பிரச்னைகளைப் புரிந்து கொண்டு தற்காலிகமான விலகலோடு ஆட்டத்தில் கவனம் செலுத்துவதுதான் பாலாஜியின் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

‘நான் உன் நல்லதிற்குத்தான் பேசினேன்’ என்று பாலாஜி விதம் விதமான பரிதாப முகபாவங்களில் சொல்லிக் கொண்டிருந்தாலும் ‘நான் ஒண்ணும் குழந்தை இல்ல. எனக்குப் புரியும்’ என்றே பதிலுக்கு ஷிவானி அனத்திக் கொண்டிருந்தார்.

“நீ பேசினதுல ஒரு தப்பும் இல்லேடா. நானும் பார்த்தேன். ஷிவானி கிட்ட நான் பேசறேன்” என்று சுரேஷூம் பாலாஜிக்கு ஆதரவு தந்தார். பாலாஜியும் ஷிவானியும் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும் போது ‘விட்டா... நீங்க விடிய விடியப் பேசுவீங்க. என் கண்ணாடியைக் கொடுப்பா நீயி’ என்று வேல்முருகன் இடையில் புகுந்து கண்ணாடியை வாங்கிக் கொண்டு போனது அநியாயக் குசும்பு.

‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ டாஸ்க்கில் அர்ச்சனா நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார். ‘ஏம்ப்பா... இந்த சொத்தையெல்லாம் எழுதி வெச்சிடணும். நம்ம லாயர் மாப்பிள்ளையைக் கூப்பிடலாம். நீதானே லாயரு?” என்று சோமைக் கூப்பிட அவரோ ‘அப்படியா நானா லாயரு?” என்றார் வெள்ளந்தியாக. வேல்ஸூக்கு அறுபது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் ‘முரட்டு சிங்கிளாக’ இருப்பதை அர்ச்சனா கிண்டலடித்தது சுவாரஸ்யம்.

திருட்டுக்கூட்டாளிகளான ஆஜித்தும் ரேகாவும் திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தார்கள். ‘திருடப் போனாலும் திசை இருக்கணும்’ என்கிற பழமொழி போல அதற்கான சூழலுக்கு காத்திருக்க வேண்டும் என்கிற பொறுமை கூட அவர்களிடம் இல்லை. திருவிழாக் கூட்டத்தில் கட்டுச் சோற்றை அவிழ்ப்பது போல மற்றவர்கள் இருக்கும் போதே ரேகா திருட முற்பட்டார். அதை திருட்டு என்று சொன்னால் திருடர்களுக்குத்தான் அவமானம். அத்தனை பாமரத்தனமான முயற்சி. ரமேஷே அதைக் கண்டுபிடித்து விட்டார் என்னும் போது ரேகாவின் முயற்சி எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் கண்டுபிடித்தாலும் ரேகா அதை சாமர்த்தியமாக மறைக்க முயன்றார். ஆனால் இயலவில்லை.

காதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா? பிக்பாஸ்  – நாள் 103

இன்னொரு முயற்சியில் சுரேஷூம் வேல் முருகனும் கூட எப்படி திருடர்களுக்கு உதவி செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆட்ட விதிகளின் படி இது தவறு. அவர்கள் ஒரே குடும்பம் என்பதால் கூட்டாக இணைந்து கொண்டார்கள் போல. ‘அட! எடுத்துட்டுப் போங்கட்டும் விடுங்கடா’ என்பது மாதிரி அர்ச்சனா கூட அசால்ட்டாகவே இருந்தார். ஆக இந்த டாஸ்க்கை யாருமே தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சனம்தான் உண்மையான பத்திரமே கைமாறுவது போன்ற உக்கிரத்துடன் ரேகாவிடம் சண்டை போட்டார். பாராட்டுக்கள் சனம்!.

ரேகா திருடிய பிறகு அவரை சாமர்த்தியமாக கழிவறைக்குத் தள்ளிச் சென்றதில் சுரேஷின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. கூட்டத்தில் திருடி பிடிபடுவரை சிலர் ஆத்திரத்துடன் வந்து அடித்து இழுத்துச் செல்வார்கள். பார்த்தால் அவர்களும் திருடனின் கூட்டாளிகளாத்தான் இருப்பார்கள். சுரேஷின் சாமர்த்தியமான செய்கை அதைக் காட்டியது. ‘விடியறதுக்குள்ள அம்மிக்கல்லை போட்டு கிழவியை சம்பவம் செய்துடலாம்’ என்கிற டெரரான ஐடியாவையும் இடையில் ஜாலியாக தந்தார் சுரேஷ். ‘ஐயோ.. என்னைத் திருடின்னு சொல்லிட்டாங்களே’ என்று ஓவர் ஆக்ட் செய்த ரேகா, பிறகு காமிராவின் முன்பு வந்து ‘சாமர்த்தியமா திருடிட்டேன்ல’ என்று தனக்குத் தானே சான்றிதழ் தந்தது போல் பேசியது சிரிப்பை வரவழைத்தது.

தான் பறித்த பத்திரத்தை ஆஜித்திடம் ஒப்படைத்தார் ரேகா. ‘நான் எங்கே இருக்கேன்.. இங்க என்ன நடக்குது... ஒண்ணும் புரியலையே’ என்பது போல் வெள்ளந்தியாக கேமராவின் முன் வந்து புலம்பினார் ஆஜித். இவர்களுக்குப் போய் திருடர் டாஸ்க்கை தந்த பிக்பாஸைத்தான் சிறையில் அடைக்க வேண்டும்.

சாமிடம் வம்பு வைத்துக் கொள்கிறவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போல. ஏதோ கராத்தே வீரர் போல கரும்பு உடைக்கும் போட்டியில் ‘மடக் மடக்’ என்று உடைத்துக் கொண்டிருந்தார். (நான் கூட உங்களின் அழகை நல்ல விதத்தில்தான் புகழ்ந்திருக்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் மேடம்!). ‘பீஸா உடைக்கச் சொன்னா. ஜூஸ் போடறாங்கடா’ என்று சுச்சியை கிண்டல் செய்து கொண்டிருந்தார் அர்ச்சனா. மற்றவர்களின் வம்புகளை மெல்வது போல் கரும்பு மென்று தின்னும் போட்டியில் வெற்றி பெற்று பாட்டியின் சங்கிலியைப் பரிசாகப் பெற்று புன்னகை பூத்தார் ரம்யா.

பிறகு சபை கூடியது. ‘திருடர்கள் முன்வந்து ஒப்புக் கொள்ளுங்கள்’ என்று பிக்பாஸ் அறிவிக்க ‘ஆமாம்..இதை தனியா வேற அறிவிக்க வேணுமாக்கும்.. அதான் ஊருக்கே தெரியுமே’ என்று இதர போட்டியாளர்கள் அலுத்துக் கொண்டார்கள்.

‘உள்ளேயும் சரி. வெளியேயும் சரி.. என்னோட அன்பு மாறாது. உனக்காக எங்கள் வீட்டின் வாசல் எப்போதும் திறந்திருக்கும்’ என்று பாலாஜியின் மீது எக்ஸ்ட்ரா பாசத்தைப் பொழிந்தார் அர்ச்சனா. அது உண்மையான அன்பாகவும் இருக்கலாம் அல்லது வெளியே தனக்கு நிகழ்ந்த டேமேஜை அர்ச்சனா சரிசெய்யும் முயற்சியாகவும் இருக்கலாம்.

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்கிற குறளையெல்லாம் மேற்கோள் காட்டி, பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த சென்டிமென்ட் காட்சிகளை தொகுத்து வீடியோவாக வழங்கினார் பிக்பாஸ். ‘நேற்று ஆக்ஷன் காட்சிகள் பார்த்தீங்கள்ல... இன்னிக்கு சென்ட்டிமென்ட்’ என்னும் பாணியாக அது இருந்தது. வழக்கம் போல் பிக்பாஸ் எடிட்டிங் டீம் கலக்கியிருந்தார்கள். சில காட்சிகளை கறுப்பு – வெள்ளையில் இணைத்திருந்தது அத்தனை அழகு. எடிட்டிங் மட்டுமல்ல. இதற்கு ஸ்கிரிப்ட் எழுதியவருக்கும் பாராட்டு. பாரதிராஜா படத்தின் இறுதிக்காட்சி போல கடைசியில் உருக்கமான மெசேஜ் கூட இருந்தது.

“நீங்கள் உருவமாக வாழ்ந்த வீட்டில் நான் குரலாக வாழ்ந்திருக்கிறேன்"
பிக்பாஸ்

“நீங்கள் உருவமாக வாழ்ந்த வீட்டில் நான் குரலாக வாழ்ந்திருக்கிறேன்’ என்று பிக்பாஸ் சொன்ன போது நமக்கே சற்று நெகிழ்வாகத்தான் இருந்தது. போட்டியாளர்களைப் போலவே நமக்குள்ளும் அந்தக் குரலின் வசீகரம் உள்ளே இறங்கித்தான் போயிருக்கிறது.

பிறகு, போட்டியாளர்களைத் தவிர விருந்தினர்கள் அனைவரையும் ‘மெயின் கேட்டின் வழியாக வெளியே வாருங்கள்’ என்று வேண்டுகோள் வைத்த பிக்பாஸ் ‘நிழல் மனிதர்களுக்கு நடுவில் நிஜ மனிதர்களாக உணர்வுகளைப் வெளிப்படுத்திய நீங்கள்தான் உண்மையான வெற்றியாளர்’ என்று சொன்னது திருவாசகம்.

மற்றவர்கள் எளிதாக வெளியேறிய போது பிறந்த வீட்டு மகள் போல் சனத்தால் எளிதில் வெளியேற முடியவில்லை. தான் முதலில் அமர்ந்த இடத்தில் மீண்டும் அமர்ந்து கண்கலங்கினார். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போதும் இதே உணர்வுகளையே அவர் வெளிப்படுத்தியது நினைவிருக்கலாம். ‘இது என்னோட வீடு.. எனக்கு கோயில் மாதிரி..’ என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு கீழே விழுந்து வணங்கினார் சனம். (விட்டால் அந்த இடத்தின் பத்திரத்திற்காக பிறகு சண்டை போடுவார் போல).

காதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா? பிக்பாஸ்  – நாள் 103

‘நான் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுடுங்க’ என்று இதர போட்டியாளர்களிடம் கேட்டுக் கொண்ட அனிதா, கிளம்பும் போது ‘நான் இந்த கேமை முழுமையா விளையாடி முடிச்சிட்டம்ப்பா’ என்று தன் தந்தையிடம் சொன்னது நெகிழ்வான காட்சி. விருந்தினர்களை வழியனுப்பி விட்டு திரும்பும் போது தடுக்கித் தவறிய பாலாஜியை ‘புல்தடுக்கி பயில்வான்’ என்று டைமிங்காக கிண்டலடித்தார் சுரேஷ்.

ஆக இறுதிப் போட்டியாளர்கள் ஐந்தாக குறைந்திருக்கிறார்கள். கடைசிப் போட்டியில் வென்று மக்களின் ஆதரவையும் பெறுகிறவர்தான் இந்த டைட்டிலை வெல்ல முடியும். உங்களின் நோக்கில் அது யாராக இருக்கக்கூடும் என்பதை தனிமனித விருப்பு வெறுப்பின்றி, ஆட்டத்தின் ஒட்டுமொத்த போக்கை மனதில் கொண்டு பாக்ஸில் சொல்ல வேண்டுகிறேன்.கமென்ட் பாக்ஸில் சொல்லுங்கள். என்னைப் பொருத்தவரை பாலாஜி குழப்பத்தில் இருக்கிறார். ஆரியின் கை ஓங்கியிருக்கிறது.