Published:Updated:

நாசர் மகன், மன்சூர் அலிகான்... கெடுபிடி டெஸ்ட்..! பிக் பாஸ் சீசன் 4 அப்டேட்ஸ்

'பிக் பாஸ்' கமல்
'பிக் பாஸ்' கமல்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 குறித்த அப்டேட்ஸ்...

உலகநாயகன் கமல்ஹாசன் படு பிஸியாக களமிறங்கவிருக்கிறார். `பிக் பாஸ் 4', லோகேஷ் கனகராஜ் படம், இந்தியன் 2, கூடவே அரசியல் கட்சிப் பணிகள் என இன்னும் பல மாதங்களுக்கு புரோக்ராமுடன் இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 4... ஒளிபரப்பு தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. இதுவரை வெளியான ப்ரொமோக்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால் உற்சாகமடைந்திருக்கும் சேனல் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கடைசிக் கட்டப் பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறார்கள்.

2020 சீசனின் சில அப்டேட்ஸ் இங்கே..

Bigg Boss Tamil
Bigg Boss Tamil

* சென்னை பூந்தமல்லி அருகே அமைந்துள்ள ‘பிக் பாஸ்’ வீட்டை நிகழ்ச்சிக்காகத் தயார்படுத்தும் பணிகள் 90% முடிவைடைந்து விட்டது. கோவிட் காரணமாக வீட்டின் உள்பகுதி மற்றும் டெக்னிக்கல் டீம் தங்கியிருக்கும் பகுதிகளில் நிறையவே மாற்றம் செய்திருக்கிறார்களாம். அவசர மருத்துவ உதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமூக இடைவெளி ஆகிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 4 கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்... போட்டியாளர்களுக்குப் புத்தாண்டு சர்ப்ரைஸ் என்ன?

* ஷூட்டிங்கைப் பொறுத்தவரைக்கும் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்கிறார்கள். சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோக்களின் ஷூட்டிங்குகளுக்கு அரசு விதித்த நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு யூனிட்டுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்களாம். நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ‘லீகல் விங்’ ஒன்றையே உருவாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை பொதுநல ஆர்வலர்கள் யாராவது ஷோவுக்குத் தடை கேட்டு நீதிமன்றம் சென்றால், அந்த நேரத்தில் எப்படிச் செயல்படுவது என்கிற ஆலோசனைக்காக இந்தச் சட்டக் குழுவாம்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

* போட்டியாளர்களை இறுதி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கொரோனோ காரணமாக, போட்டியாளர்களாகக் கலந்து கொள்ள பலரும் தயங்குவதாகத் தெரிகிறது. அப்படி ரிஸ்க் எடுத்து வரவேண்டுமென்றால், ஊதியம் அதிகமாக எதிர்பார்க்கிறார்களாம். இதனாலேயே போட்டியாளர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதில் ஒருவித இழுபறி நிலவுவதால் தாமதம் ஆகிறதாம்.

* போட்டியாளர்கள் கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசல்ட் நெகட்டிவ் என்றாலும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு ஒரு வாரம் முன்னதாகவே அவர்களைத் தனிமைப்படுத்தும் திட்டமும் உள்ளதாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிறார்கள்.

* கோவிட் டெஸ்ட் தவிர்த்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஹெல்த் ரிப்போர்ட் கேட்கப்படுமெனத் தெரிகிறது. உடல் ரீதியாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அந்த விபரங்கள், எடுத்துக் கொண்டிருக்கும் மருந்து மாத்திரை குறித்த விபரங்களுடன் சர்க்கரை, ரத்த அழுத்த அளவுகள் குறித்துக்கொள்ளப்படுவதுடன் மனநல பரிசோதனை, ஹெச்.ஐ.வி. உள்ளிட்ட மற்ற சில பரிசோதனைகளுக்கும் போட்டியாளர்கள் உட்படுத்தப்பட இருக்கிறார்களாம்.

'பிக் பாஸ்' கமல்
'பிக் பாஸ்' கமல்

* போட்டியாளர்கள் என சமூக வலைதளங்களில் யூகத்தின் அடிப்படையில் பட்டியல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. ஆனால் கான்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டு போட்டியாளரை உறுதி செய்யும் பணிகள் கடைசி நிமிடம் வரை இழுக்குமென்றே தெரிகிறது.

* ’கடாரம் கொண்டா’னில் கமல் மகள் அக்‌ஷரா ஹாசனுடன் நடித்த நாசரின் இளைய மகன் அபி ஹசன் கமலின் சாய்ஸாக இந்த சீசனில் உள்ளே போவார் என்கிறார்கள். மன்சூர் அலிகான் பெயரும் பரிசீலனையில் இருந்ததாம். ஆனால் மன்சூரை உறுதி செய்வதில் தயக்கம் நிலவி வருகிறதாம்.

* ஒளிபரப்பு தொடங்கும் தேதி அக்டோபர் 4 என இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறார்களாம். இந்தத் தேதியில் மாற்றமிருக்காது என்றே தெரிகிறது. ஜனவரி 2021 காணும் பொங்கல் நாள் வரை அதாவது ஷோ 104 நாள்கள் போகுமெனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு