Published:Updated:

ஆரியின் வெற்றிக்கு பாலாஜிதான் காரணம்... பாவம் ரியோ?! பிக்பாஸ் இறுதி நாள் பார்ட் - 1

பிக்பாஸ் – நாள் 105

"எப்படி இருக்கே?” என்று மழலை மொழியில் கமலை ரியா விசாரித்தது ‘க்யூட்’ ஆன காட்சி. தந்தையை வீடியோவில் பார்த்ததும் ரியாவிற்கு சிரிப்பாணி பொங்கிக் கொண்டு வந்தது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 105 (GRAND FINALE)

Published:Updated:

ஆரியின் வெற்றிக்கு பாலாஜிதான் காரணம்... பாவம் ரியோ?! பிக்பாஸ் இறுதி நாள் பார்ட் - 1

"எப்படி இருக்கே?” என்று மழலை மொழியில் கமலை ரியா விசாரித்தது ‘க்யூட்’ ஆன காட்சி. தந்தையை வீடியோவில் பார்த்ததும் ரியாவிற்கு சிரிப்பாணி பொங்கிக் கொண்டு வந்தது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 105 (GRAND FINALE)

பிக்பாஸ் – நாள் 105

105 நாட்கள் நீடித்த இந்த கேம் ஷோவின் முடிவு இன்று வெளியாகி விட்டது. வெற்றியாளர் ஆரி. அவருக்கு வாழ்த்துகள். டைட்டில் வின்னருக்கு மட்டுமே ரொக்கப் பரிசு. அடுத்த இரண்டு நிலையில் வந்தவர்களுக்கு ‘பெப்பே’ என்பது இந்தப் போட்டியில் உள்ள ஒரு கோக்குமாக்கு விதி. ஆனால், ஒருவகையில் அது சுவாரஸ்யம். இல்லையெனில் ‘பணப்பெட்டி’யை கைப்பற்றும் டாஸ்க் எடுபட்டிருக்காது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்ற பாலாஜி மற்றும் ரியோவிற்கு வாழ்த்துகள்.

இந்த விளையாட்டு நிகழ்ச்சி முக்கால் பாகத்தைக் கடந்து கொண்டிருக்கும் போதே ஆரிதான் வெற்றியாளர் என்கிற அபிப்ராயத்தை சமூகவலைத்தளங்களில் பரவலாகக் கேட்க முடிந்தது. இறுதியில் அது உண்மையும் ஆயிற்று. இதன் மூலம் மக்களிடமிருந்து வெளிப்படுகிற ஓர் ஆதாரமான நீதியையும் செய்தியையும் உணர முடிகிறது. ‘நேர்மையாகச் செயல்படுவரை மட்டுமே பெரும்பான்மையான மக்கள் ஆதரிப்பார்கள்’ என்பதே அது.

ஒரு சமூகத்தின் ஒழுங்கான இயக்கத்திற்கு இது போன்ற சமிக்ஞைகள் மிக அவசியம். என்னதான் பின்நவீனத்துவ காலக்கட்டமாக இருந்தாலும் ‘இறுதியில் வில்லன் ஜெயித்தால் அது நல்ல கதை கிடையாது. அதில் நீதி இல்லை. அதை ஏற்க மாட்டோம்’ என்று பொதுசமூகத்தின் ஆழ்மனதிற்குள் படிந்திருக்கும் தற்செயல் ஒற்றுமையுணர்ச்சியும் அறம் சார்ந்த பிரக்ஞையும் இருப்பது பாராட்டுக்குரியது.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

ஆனால் – ஒரு விளையாட்டு நிகழ்ச்சியிலேயே ‘நேர்மை’யை இத்தனை கறாராக தேடுகிற பொது சமூகம், அரசியல் அதிகாரத்தை ஒப்படைக்கும் முக்கியமான தேர்தல் சடங்கில் பல்வேறு சறுக்கல்களில் தொடர்ச்சியாக விழுவது துயரமானது. விளையாட்டு நிகழ்ச்சியை விடவும் நம் வருங்கால தலையெழுத்தை தீர்மானிக்கும் அதிகார அரசியல் என்பது முக்கியமானதாயிற்றே?

தேர்தல் நாட்களில் வாக்களிக்காமல் இருக்கும் சுணக்கம் முதல் தவறான அரசியல்வாதி என்பதை தெரிந்து கொண்டே மறுபடியும் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கும் அறியாமைவரை இம்மாதிரியான அபத்தங்கள் தொடர்வதில் என்ன நீதியிருக்கிறது? இனம், மொழி, சாதி, மதம் போன்றவற்றின் மீது நமக்கு இருக்கும் விருப்பு - வெறுப்புகள், அசட்டுப் பெருமிதங்கள், தனிமனித தொழுகைகள், கண்மூடித்தனமான பிடிவாதங்கள் போன்றவை வாக்களிப்பதில் பிரதான காரணிகளாக இருப்பது இன்னமும் நடைமுறையில் இருந்து கொண்டுதானே இருக்கிறது?

ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவரையே வேட்பாளராக நிற்க வைக்கும் ‘சாதி அரசியல் கணக்குகள்’ இன்னமும் நீடித்துக் கொண்டுதானே இருக்கின்றன?

நேர்மையை விளையாட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் தேடுவதோடு ஆறுதல் அடைந்துவிடாமல் நம் அன்றாட தினங்களின் தலையெழுத்தை தீர்மானிக்கிறவர்களை தேர்ந்தெடுப்பதிலும் அதே கறார் தனத்தை காட்டுவோம் என்பதை இந்தச் சமயத்தில் பணிவன்புடன் உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.

சற்று செயற்கைத்தனமாகவும் உபதேசிக்கும் நோக்கிலும் இருந்தாலும் ‘நீதிக்கதைகள்’ என்பது நமக்கு முக்கியமானது. அதனால்தான் இளம் வயதிலேயே குழந்தைகளுக்குப் பல்வேறு விழுமியங்களை நீதிகளாகப் புகட்டி விடுகிறோம். ‘நல்லதுதான் இறுதியில் வெல்லும்’ என்கிற நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் ஆழமாகப் பதிந்தால்தான் அந்த நீதியுணர்ச்சி ஒழுக்கமாக மாறி சமூகத்தில் பரவும். சமூகத்தின் அமைதிக்கும் அது ஆதாரமாக இருக்கும்.

கிளிஷேவான காட்சிகளாலும் செயற்கையான உபதேசங்களாலும் நிரம்பியிருப்பதால் பொதுவாக எம்.ஜி.ஆர் திரைப்படங்களை எனக்குப் பிடிக்காது. பிடிக்காததோடு அவற்றைக் கிண்டல் செய்யும் கூட்டத்திலும் ஒருவனாக முன்பு இருந்தேன். இப்போதும் கூட அவற்றின் மீதான அடிப்படையான சில விமர்சனங்கள் அப்படியே இருந்தாலும், எம்.ஜி.ஆர் போன்ற ஒழுக்கமானதொரு பிம்பம் – அது பாவனையாக இருந்தாலும் - ஒரு சமூகத்திற்கு எத்தனை அவசியமானது என்பதைப் பின்னர் உணர முடிந்தது. இந்த மாற்றம் எனக்குள் எப்படி நிகழ்ந்தது?

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

அதற்குப் பின்னால் வந்த பல தமிழ் சினிமா ஹீரோக்கள் ‘மாற்றம்’ என்கிற காரணத்தை வைத்துக் கொண்டு சமூகத்தின் பல்வேறு ஒழுங்கீனங்களை, பொறுக்கித்தனங்களை திரையில் வழிமொழிய ஆரம்பித்தார்கள். ‘அடிடா அவளை... வெட்றா அவளை…' என்று பெண்களின் மீது வன்முறையும் வெறுப்பையும் நேரடியாக விதைக்கும் பாடல்களும் காட்சிகளும் சகஜமாகின. ‘அதிகமா கோபப்படற பொம்பளை உருப்பட்டதா சரித்திரமே கிடையாது’ என்கிற பிற்போக்குத்தனமான காட்சிகளுக்கு கைத்தட்டல்கள் கிடைத்தன. தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக, ஒரு பெண் அதிகமாக கோபப்பட்டதால்தான் ‘கண்ணகி’ என்கிற பிம்பம் நமக்கு கிடைத்தது.

பெண்களை ஆபாசமாகவும் மலினமாகவும் சித்திரிக்கும் காட்சிகளும், காதல் என்கிற பெயரில் ஒரு பெண்ணைத் துரத்தி துன்புறுத்துவது, காதலை ஏற்கவில்லையென்றால் வன்முறையை கையாள்வது போன்ற ஆணாதிக்க சிந்தனைகள் திரையிலும் சகஜமாகத் துவங்கிவிட்டன. இவை இளம் மனங்களில் ஆழமான நச்சு விதைகளை விதைகக்கூடியவை.

இந்த ஆபத்தான போக்கை உணர்ந்த பிறகுதான் உபதேசங்களை வைக்கும் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் நம் சமூகத்திற்கு எத்தனை அவசியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவை செயற்கையான சித்திரிப்புகளாக இருந்தாலும் பரவாயில்லை. ஆதாரமான நீதியையும் ஒழுக்கத்தையும் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் கதைகள் நமக்கு எப்போதும் தேவை.

அதிலும் திரைப்படம் எனும் ஊடகத்தின் தாக்கம் ஒரு சமூகத்தை மிக ஆழமாகப் பாதிக்கும் இந்தியா போன்ற தேசங்களில் இவ்வகையான நீதிக்கதைகள் அவசியம். இது பெரியவர்களுக்கான நீதிக்கதைகள். திரையில் எம்.ஜி.ஆர் பின்பற்றும் நற்பண்புகளை நிஜத்திலும் பின்பற்றியவர்கள் முன்பு அதிகம். அதற்காக அந்தக் காலக்கட்டம் தீமைகளே அல்லாத பொன்னான காலக்கட்டம் என்று சொல்லவரவில்லை. ஒரு சினிமா ஹீரோ சொல்வதை கண்மூடித்தனமாக பின்பற்றும் இளைஞர் கூட்டம் இன்றும் கூட இருக்கிற சமூகத்தில் ஒழுக்கமான ஹீரோக்களின் தேவையும் மிக அவசியம்.

“எதுக்குங்க இப்ப ஆரி மாதிரியே லெங்க்த்தா பேசிட்டு இருக்கீங்க, எதற்காக இந்த வியாக்கியானம்?" என்று கேட்பீர்கள் என்றால்... ஆரி போன்ற நேர்மையான பிம்பங்களின் வெற்றி தொடர்ச்சியாக நிகழ வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இதன் வேறு சில கோணங்களும் உண்டு. பிக்பாஸ் என்பது நேர்மையாளரை அடையாளம் கண்டுபிடிக்கும் ஷோ அல்ல. ஒரு தனிநபரின் சகிப்புத்தன்மையை பரிசோதனை செய்யும் விளையாட்டு. ஒரு புதிய சூழலில் சில அந்நியர்களை ஒரு போட்டியாளர் எப்படி சகித்துக் கொள்கிறார் என்பதுதான் இதன் ஆதாரம்.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105
ஆரி அடிப்படையில் ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, கருத்து சுதந்திர மதிப்பு, புத்திக்கூர்மை, தர்க்க ஞானம் உள்ளிட்ட ஏராளமான நல்ல அம்சங்களைக் கொண்டிருந்தாலும் மற்றவர்களை சகித்துக் கொள்வதில் பல நேரங்களில் சறுக்கி விழுந்தார். எந்தவொரு சிறிய விஷயத்தையும் விவாதமாக்கி சண்டைக்கோழியாக சிலிர்த்துக் கொண்டு நின்றார். ‘மற்றவர்களை தகுதிப்படுத்துகிறேன்’ என்கிற பெயரில் இதர போட்டியாளர்களின் குறைகளை தொடர்ந்து சுட்டிக் காட்டி அந்தப் பிழைகளின் மீது ஒரு வெற்றியாளராக ஏறி நின்றார். இந்தப் பிசிறுகளும் களையப்பட்டிருந்தால் ஆரியின் கிராஃப் இன்னமும் கூட உயர்ந்து அவரின் வெற்றி முழுமையாகியிருக்கும் என்பதற்காக இதையெல்லாம் குறிப்பிடுகிறேன்.

ஒருவகையில் ஆரியின் வெற்றிக்கு பாலாஜியும் முக்கிய காரணம். ஒரு கதையில் சிறந்த வில்லன் அமைந்துவிட்டால் அதன் வெற்றி உத்தரவாதம் என்பார்கள். அது போல் தவறுகள் செய்து ஆரியுடன் அடிக்கடி மோதி ஆரியை ஹீரோவாக்கியதில் பாலாஜியின் பங்கும் பெரிதாக உண்டு.

‘அதான் ஆரி ஜெயிச்சிட்டார்ல... இன்னமும் என்ன விளக்கம் சொல்லிக்கிட்டு?’ என்று ஆரியின் ஆதரவாளர்கள் கருதலாம். ஒருவர் பெறும் வெற்றியினால் அவரின் பிழைகள் மறைந்து போகும் என்று கருதி விட முடியாது. அவையும் களையப்பட்டால் அந்த வெற்றியின் அழகு கூடுதலாகப் பிரகாசிக்கும் என்பதற்காக இவற்றைச் சொல்கிறேன். வெற்றி பெற்ற ஆரிக்கு மீண்டும் வாழ்த்துகள்!

ஓகே... நாள் 105-ல் (இறுதி நாள்) என்ன நடந்தது?!

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

இறுதி நாள் நிகழ்ச்சி ‘ஆறு மணி நேரம்’ என்பதை முதலிலேயே நிறைய முறை குறிப்பிட்டு நம் மனங்களை தயார் செய்து விட்டார்கள். மாலை ஆறு மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியை, நள்ளிரவு 12 மணிக்குள் முடித்துவிட்டது சிறப்பு. இதில் கூடுதலான ஒரு சிறப்பையும் கவனித்தேன். பொதுவாக இம்மாதிரியான சிறப்பு நிகழ்ச்சிகளில் விளம்பரங்களைக் கடந்து வருவதற்குள் தாவு தீர்ந்து விடும். ஆனால் இம்முறை விளம்பர இடைவெளி நேரம் சுருக்கமாக அமைக்கப்பட்டிருந்ததைப் போன்ற உணர்வு. (நான் ஹாட்ஸ்டாரில் தள்ளி தள்ளிப் பார்த்ததால் அப்படித் தோன்றியதோ, என்னமோ?!).

சென்னை நகரின் சில முக்கிய நிலப்பரப்புகளை, ஏரியல் வியூவில் இரவு நேரத்தின் விளக்கொளியில் வண்ணமயமாகவும் அற்புதமாகவும் காட்டியதோடு நிகழ்ச்சி துவங்கியது. ஹோட்டலில் இருந்து உணவு விநியோகிக்கும் வண்டி பெட்டியின் மீது ‘மக்கள் தீர்ப்பை’ வைத்து விட்டார்கள் போலிருக்கிறது. அது ஊரெங்கும் சுற்றிக் கொண்டு விஜய் டிவி அலுவலகத்தின் வழியாக வந்து app மூலம் ஆர்டர் செய்திருந்த கமலின் கேரவேனின் உள்ளே வந்து எட்டிப் பார்த்தது. “என்னப்பா. ஆனியன் ஊத்தப்பம் சூடா இருக்குல்ல?” என்பது மாதிரி எட்டிப் பார்த்த கமல், உள்ளே இருந்த வெற்றி வில்லையை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்ட பிறகு நம்மைப் பார்த்து கண்ணடித்தார். பின்னணியில் ‘விக்ரம்’ டீசரின் பின்னணி இசை ரகளையாக ஒலித்தது.

இது வரை போட்டியாளர்களிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்த பிக்பாஸ், இந்த சீஸனில் முதன்முறையாக மக்களிடம் பேசினார். “நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி" என்று அவர் சொன்னதும் இந்த சீஸனில் விழுந்த வாக்கு நிலவரங்களின் எண்ணிக்கை காட்டப்பட்டது. பல அரசியல்வாதிகளுக்கு வயிற்றெரிச்சலாக இருந்திருக்கும்.

இந்த சீஸனில் ஒட்டு மொத்தமாக வந்த வாக்குகளின் எண்ணிக்கை 290,28,00,000-க்கும் மேல். அதாவது 290 கோடியே இருபத்தெட்டு லட்சம் வாக்குகள். கடைசி வாரத்தில் மட்டும் வந்த வாக்குகளின் எண்ணிக்கை 31,27,72,000-க்கும் மேல்.

வண்ணமயமாகவும் வசீகரமாகவும் அமைக்கப்பட்டிருந்த மேடையின் மீது போட்டியாளர்கள் அழகான ஆடை, ஒப்பனையுடன் காட்சியளித்தார்கள். ஒவ்வொருவரையும் ஒருவரியில் அழகான தமிழில் அறிமுகப்படுத்தினார்கள். ‘பற்றி எரியும் பல்லக்கிலும் பதறாத ஆழ்நிலை யோகி’ என்று ரமேஷிற்கான வாக்கியம் வந்தபோது சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை. ஒப்பனையையும் மீறி அனிதாவின் முகத்தில் சோகம் எட்டிப் பார்த்தது.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

அரங்கின் பின்னணி நிறம், பார்வையாளர்கள் அமர்ந்திருந்த வெள்ளை நிற சோஃபா, வண்ண விளக்குகள் என்று ரகளையாக ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்காக உழைத்தோர்க்கு பாராட்டுக்கள். கறுப்பு நிற கோட்டில் ஜிகினா பளபளக்க அட்டகாசமான தோரணையில் வந்தார் கமல். பின்னணியில் அமைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகளின் ஏற்பாடுகள் பிரமாதம்.

இந்த நாலாவது சீஸன் கொரானோ என்னும் கடுமையான சூழலின் பின்னணியில் குறைந்த அளவு மனிதசக்தியோடு ஆனால், அவர்களின் இரண்டு மடங்கு உழைப்போடு சிறப்பாக உருவான விவரங்களைப் பகிர்ந்த கமல் ‘இந்த ஓட்டத்தில் பங்குபெற்ற அனைவருமே வெற்றியாளர்கள்’ என்றார். பார்வையாளர்கள்கூட கோவிட் டெஸ்ட் என்னும் தடையைத் தாண்டித்தான் வந்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி சுகாதார நோக்கில் மிகுந்த கட்டுப்பாட்டோடு நடந்ததை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டிருந்தார் கமல்.

எந்தவொரு நிகழ்த்துக் கலையில் ஈடுபடும் கலைஞனுக்கும் எதிரேயிருக்கும் பார்வையாளர்களிடமிருந்து உடனடியாக கிடைக்கும் வரவேற்பும் கைத்தட்டலும்தான் பெரிய சன்மானம். அந்த சன்மானம்தான் அனைத்து விருதுகளையும் தாண்டி அவனுக்கு உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்துவது. பார்வையாளர்களின் மனநிலையையும் வரவேற்பையும் உடனடியாக அறிந்து கொள்வதைப் போன்ற சுகம் வேறெதுவும் கிடையாது. கொரோனோ காரணத்தினால் வெற்று மேடையில் தனது நிகழ்ச்சித் தொகுப்பை நடத்த வேண்டியிருந்ததின் அவலத்தை உருக்கமாக கமல் சொன்ன போது நெகிழ்வாக இருந்தது. கேபி இதற்காக சிறிது கண்கலங்கினார்.

"இங்கிருந்த சில தொழில்நுட்பக் கலைஞர்களை வேண்டி எதிர்வினைகளைப் பெற்று சற்று சமாதானம் அடைந்தேன்" என்ற கமல், "ஆனால் நான் மக்களைச் சந்திக்கச் சென்ற போது இதை விடவும் பெரிய கைத்தட்டல்களும் வரவேற்பும் கிடைத்தன" என்று மகிழ்ச்சியடைந்தார். கொரோனோ காலகட்டத்தில் பணியாற்றிய முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னார் கமல்.

"பிக்பாஸ் நிகழ்ச்சி உங்களுக்குத் தந்த புகழின் வெளிச்சம் எப்படி இருந்தது?” என்று இப்போதைய பார்வையாளர்கள் மற்றும் முன்னாள் போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டார் கமல். ‘தமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன்’ என்று புளகாங்கிதம் அடைந்தார் சுரேஷ். இத்தனை குறுகிய காலத்திலேயே ஆஜித்திற்கு ஒரு திரையிசைப்பாடல் பாட வாய்ப்பு கிடைத்ததாம். மிக்க மகிழ்ச்சி.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

கமலின் உடையும், சனத்தின் உடையும் மேட்ச்சிங்காக இருந்தது. "டைட்டிலை விடவும் மக்களின் அன்பு கிடைச்சதை பெரிய விஷயமா நெனைக்கறேன். நான் தமிழ்ப்பொண்ணு கிடையாது. இருந்தாலும் அன்பு கொடுத்தாங்க. இது உங்களாலும் பிக்பாஸாலும்தான் சாத்தியமானது" என்று நெகிழ்ந்தார் சனம். ‘சனங்களின் மனத்தில் சனம்’ என்று பதிலுக்கு உடனடி ட்வீட் எழுதினார் கமல்.

‘எனக்கு பேச ஸ்பேஸே தர மாட்டேன்றாங்க’ என்று வீட்டிற்குள் புகார் சொல்லிக் கொண்டேயிருந்த அனிதாவால் இப்போது பேச முடியவில்லை என்பது துயரமான முரண். எனவே அவர் பேச மனமின்றி மைக்கை கை மாற்ற முனைய, ‘இல்ல... நீங்க பேசுங்க’ என்று கமல் ஊக்கம் அளித்தார்.

“இந்த நிகழ்ச்சில நான் விளையாடிய முறை எங்க அப்பாவிற்கு பிடிச்சிருந்தது. அதை பிறகு அறிந்ததில் மகிழ்ச்சி. ஆனால், அவரிடம் பேச முடியாமல் போனதுதான் துயரம். இந்த ஃபைனலுக்கு கூட வர வேண்டாம்னு நெனச்சேன். ஆனால் இதுதான் அப்பா ஆசைப்பட்டிருப்பார். 'முழுமையாக ஒரு விஷயத்தைச் செய்யணும்' என்று அம்மா சொன்னதால் வந்தேன்” என்று நெகிழ்ந்தார் அனிதா. ‘'என்னை உங்கள் அப்பாவாக நினைத்துக் கொள்ளுங்கள்'’ என்று கமல் சமாதானப்படுத்திய விதம் அருமை.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105
உண்மையில் Top 5-ல் வந்திருக்க வேண்டியவர் அனிதா. அத்தனை முக்கியமான போட்டியாளராக இருந்தவர். ஆனால் ஆரியுடன் நிகழ்ந்த சூடான விவாதம் காரணமாக பார்வையாளர்களின் அதிருப்தியை சம்பாதித்து வெளியேறினார் என்று யூகிக்கிறேன். ஒரு கட்டத்தில் மேலே ஏறிய அவரது கிராஃப் அவரது கோபத்தினால் கீழே இறங்கியது.

"அன்பு, வெறுப்பு ஆகிய இரண்டையுமே சம்பாதிச்சேன்" என்றார் அர்ச்சனா. "சோஷியல் மீடியாக்களின் பலம் என்னன்னு இப்ப தெரிஞ்சுடுச்சு" என்று அர்ச்சனா கூறியது ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை காலமாக மீடியா துறையில் உள்ளவர் இப்போதுதான் இதை அறிகிறாரா?

தன்னடக்கம், தாழ்வுணர்ச்சி போன்ற காரணங்களால் வீட்டிலிருந்து வெளியேறியவர் வேல்முருகன். அப்போது ‘டாக்டர் வேல்முருகன்’ என்று மீண்டும் மீண்டும் அவரை அழைத்து பெருமைப்படுத்தியவர் கமல். இப்போது, இயல் இசை நாடக மன்றத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் என்கிற அங்கீகாரத்தை தமிழக அரசு தந்திருப்பதைப் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார் வேல்ஸ். “ஆம்... கலைஞர்களுக்கு தரப்படும் டாக்டர் பட்டம் என்பது சிறப்பானது. கலைக்கு மருந்து அது" என்று அந்தப் பெருமையை தானும் வாங்கிக் கொண்டார் கமல். (ஆனா எப்ப பாடினா சரியாக இருக்கும்-ன்றதையும் நீங்க தெரிஞ்சுக்கணும் வேல் dude. நீங்க பாட்டுக்கு எப்பவும் பாடிட்டே இருக்கக்கூடாது).

“சரி.... நாமளே பேசிட்டு இருந்தா எப்படி? உள்ளே இறுதிப் போட்டியாளர்கள் இதயம் படபடக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்'’ என்று அகம் டிவி வழியாக உள்ளே அழைத்துச் சென்றார் கமல். வீடு மிகச்சிறப்பாகவும் பிரமாதமாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மீண்டும் அதேதான். இதற்காக உழைத்தவர்கள் அனைவருக்கும் பாராட்டு.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கேமரா முன்பு வந்து வசீகரமான அசைவுகளுடன் ஒருவரையொருவர் சுட்டிக் காட்டி பின்பு அவர்கள் ஒன்றாக இணைந்து நின்று கடைசியில் கமலைச் சுட்டிக் காட்டியது சிறப்பான நடன வடிவமைப்பு. ஒரே டேக்கில் இதைக் காட்சிப்படுத்தியது அற்புதம். (இதுதான் scripted. வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன்).

உள்ளே வந்த கமலை ‘looking smart sir’ என்கிற வழக்கமான சம்பிரதாயத்துடன் போட்டியாளர்கள் வரவேற்க ‘இதுவும் கதர்தான்’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார் கமல். “நீங்க ஐவருமே வெற்றியாளர்கள்தான்" என்கிற கிளிஷேவான வாழ்த்தை அடிக்கடி சொன்ன கமல், "புகழ் கொஞ்ச கொஞ்சமாத்தான் வரும். எனவே தோல்வியாளர்கள் என்று யாருமில்லை. காத்திருங்கள். நானெல்லாம் இயக்குநர் ஆவதற்கு நாற்பது வருடங்கள் காத்திருந்தேன். இந்த வெளிச்சத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு ‘ஃபைனலிஸ்ட் யாருன்னு உடனே சொல்லிட முடியுமா? அய்... அய்!" என்று வெறுப்பேற்றி விட்டு இடைவேளைக்குள் சென்றார். (பின்ன! ஆறு மணி நேரம் நிகழ்ச்சினு சொல்லிட்டு உடனேவா சொல்லிடுவீங்க?!).

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பரிசுளைத் தந்தார். காட்டிற்குச் செல்ல விரும்பிய ரியோவிற்கு Trekking kit, பாலாஜிக்கு dumbbells, ரம்யாவிற்கு செடி, ஆர்கானிக் விதைகள், ஆரிக்கு பேனா மற்றும் ரீசைக்கிள் செய்யப்பட்ட பே்பபர், சோமிற்கு Box drum என்று நிகழ்ச்சியின் போது அவரவர்களின் விருப்பம் வெளிப்பட்டவாறு பரிசுகளை கமல் அளித்தது சிறப்பு.

தனது பரிசுகளை அளித்த பின் ‘இதை விடவும் உயர் பரிசு இருக்கிறது’ என்று அவரவர்களின் குடும்ப உறுப்பினர்களை கேமரா வழியாக காட்டினார். யாருமே, 'தனது குடும்பத்தினரை முதலில் சந்திக்கிறேன்’ என்று சொல்லவில்லை. கமல் தந்த பரிசுகளை அறிவதில்தான் குறியாக இருந்தார்கள். ‘அண்ணனா... அவன் கெடக்கறான். நீங்க பரிசைக் கொடுங்க’ என்று ஜாலியான மூடில் இருந்தார் பாலாஜி.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

“இப்பவாவது சிரிச்சுத் தொலையேன்" என்பது போல் ரியோவின் மனைவி ரியோவை அழுத்தமாக வலியுறுத்தியது சிறந்த காட்சி. (நமக்கே அப்படித்தான் இருந்தது). துவக்க நாட்களில் நம்மையெல்லாம் சிரிக்க வைத்த ரியோ, ஏன் இப்படி இஞ்சிச் சாறு குடித்தவர் போல் இருக்கிறார் என்று தெரியவில்லை. ‘டைரக்டர் சொல்றது புரியுதா?’ என்று கமல் சுட்டிக் காட்டிய போதும் முகத்தில் கலவரம் குறையாமல் சிரித்தார் ரியோ. (‘பாவம் கணேசன்’ சீரியலில் ‘பாவம் ரியோ’ என்று ஒரு கேரக்டரை நுழைத்து இவரை நடிக்க வைக்கலாம் போல.)

“டேய் சோகமா இருக்காதடா" என்று பாலாஜியின் சகோதரர் மீண்டும் மீண்டும் சொல்ல, "இவன் ஒருத்தன். நான் சோகமா இல்லைடா. இவனே சொல்லி சொல்லி அழ வெச்சிடுவான் போலிருக்கு" என்று தனது சகோதரரிடம் ஜாலியாக சலித்துக் கொண்டார் பாலாஜி. இதைப் பார்த்து வெடித்து சிரித்தார் ஷிவானி.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105
‘சிங்கப்பெண்ணே’ என்கிற புகழ் மொழியும் கிளிஷேவாகி விடும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு அந்த வார்த்தையைப் போட்டு படுத்தி எடுக்கிறார்கள். இப்படி சிரித்துக் கொண்டே இருக்கிற சிங்கத்தை எங்குமே பார்க்க முடியாது. இப்படி அழைக்கப்படும் போதெல்லாம் பெருமிதம் தாங்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார் ரம்யா.

“ஃபேமிலியா... பரிசா?” என்று ரம்யாவிடம் கேட்டபோது, "என் ஃபேமிலியே உங்க பரிசைத்தான் முதலில் பார்க்கணும்னு நெனப்பாங்க" என்று ரம்யா அளித்த அந்த சாமர்த்தியமான பதில் இருக்கிறதே?!

தனது பெயர் கமலின் வாயால் உச்சரிக்கப்பட்டதற்கு அகம் மகிழ்ந்து போனார் ரம்யாவின் தம்பி பரசு. "உங்களை பக்கத்துல பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி கமல் சார்... தீபாவளிக்கு எனக்கு வாழ்த்து சொன்னீங்க. நன்றி” என்று கமலைப் பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து போனார் ரம்யாவின் அம்மா. ரம்யாவின் வெற்றியை விடவும் கமலைப் பார்த்ததில்தான் இவர்களுக்கு அதிக சந்தோஷம் போல. “உங்களைப் பார்த்ததுல என்னை விசாரிக்க மறந்துட்டாங்க. பார்த்தீங்களா?" என்று கமலிடம் புன்னகைத்தார் ரம்யா.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

ஆரிக்கு பேனா பரிசளித்த கமல் ‘இனி உங்கள் சமூகக் கருத்துக்களை பேப்பரிலும் பதிவு செய்யுங்கள்’ என்று வாழ்த்து சொன்னது சிறப்பு. ‘அத்தான்’ என்று ஆரியை அவரது மனைவி அழைத்ததைக் கேட்க அத்தனை இனிமையாக இருந்தது. இதெல்லாம் அறுபதுகளில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களிலேயெ வழக்கொழிந்து போன ஒன்று. தமிழகத்தில் இல்லையென்றாலும் இலங்கைத் தமிழர்கள் சில தொன்மையான வார்த்தைகளை இன்னமும் புழக்கத்தில் வைத்திருப்பது மகிழ்ச்சி.

"எப்படி இருக்கே?” என்று மழலை மொழியில் கமலை ரியா விசாரித்தது ‘க்யூட்’ ஆன காட்சி. தந்தையை வீடியோவில் பார்த்ததும் ரியாவிற்கு சிரிப்பாணி பொங்கிக் கொண்டு வந்தது. குழந்தையைப் பார்த்தாவது ரியோவின் முகம் மலரும் என்பதற்காகவோ என்னவோ, கேமராவை ரியோ பக்கம் திருப்பச் சொன்னார் கமல். அனைவருக்கும் ‘All the best’ என்று ரியா சொன்னது அத்தனை அழகு. சோமின் அம்மா வழக்கம் போல் அதிகம் பேசவில்லையென்றாலும் உடல்மொழியில் பாசத்தைக் காண்பித்தார். தனக்கு வழங்கப்பட்ட drum box-ஐ தட்டிக் காண்பித்தார் சோம். (இனிமே பிளாஸ்டிக் பக்கெட்ல தட்ட வேணாம்).

இதன் பிறகு அர்ச்சனா “அன்புடன்” ஆவேசமாக நடனமாடிய காட்சிகள் வந்தன. இந்த கலை நிகழ்ச்சிகளை முன்பே பதிவு செய்து பிறகு இணைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இந்தக் கலை நிகழ்ச்சிகளில் சாண்டியின் நடனத்தையும் காமெடி நிகழ்ச்சியையும் நான் மிகவும் எதிர்பார்த்தேன். அவை இரண்டுமே இல்லாமல் போனது தனிப்பட்ட அளவில் எனக்கு ஏமாற்றம். கோவிட் தடை என்பதால் இவை நிகழவில்லை போல.
பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

மீண்டும் மேடைக்குத் திரும்பி வந்த கமல், "இந்த வருடத்தில் ‘கொரானோ, கோவிட்’ உள்ளிட்ட சொற்கள் பிரபலமாகி விட்டன. அதைப் போல் பிக்பாஸ் வீட்டில் கோப்பையை வெல்வதை ‘கப் அடிக்கறது’ ன்னு சொல்லிட்டு இருந்தீங்க” என்றார். (பாத்ரூம் சுத்தம் செய்யும் அணி தங்களின் பணியைச் சரியாக செய்யாததை ‘கப் அடிக்குது’ என்று சொல்லியிருப்பார்களோ?!)

எதற்காக கமல் இப்படி லீட் கொடுத்தார் என்று பார்த்தால் வேறு ஒன்றுமில்லை, இந்த சீஸனின் கோப்பையை பிறகு கொண்டு வந்தவர் முகேன். கடந்த சீசனில் டைட்டிலை வென்றவர். உடம்பு சற்று பிடித்து பார்க்க ஸ்மார்ட்டாக ஆகி விட்டிருக்கிறார். ஒரு கிராமத்து படத்தில் ஹீரோவாக உடனே புக் செய்து விடலாம் என்கிற அளவிற்கு தமிழ் கலாசார உடையில் வசீகரமாக வந்தார். ‘வெற்றி’ என்று தலைப்பிட்டிருக்கிற படம் வெளியாக காத்திருக்கிறதாம். வெற்றி கிட்டட்டும்.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

முகேனை விசாரித்த கமல், "உங்களுக்கு ஒரு வேலை தர்றேன். இந்தக் கோப்பையை வென்றவர்களுக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. அதை நீங்கள் காப்பாற்ற வேண்டும்" என்றெல்லாம் சற்று சீரியஸாக சொல்லிக் கொண்டு போக நமக்கே சற்று குழப்பமாக இருந்தது. அப்புறம்தான் புரிந்தது. ‘மாண்பைக் காப்பாற்றுவர்கள்தான் ‘மாண்புமிகு’ என்று அழைத்துக் கொள்ள வேண்டுமாம்’ (ஐயா.... ஜோக் சொல்றதுக்காகத்தான் இவ்ளோ பில்டப் கொடுத்திருக்கிறார் போல).

வாக்கெடுப்பின் படி கடைசியில் வந்திருக்கும் போட்டியாளரை அறிவித்து வெளியே அழைத்து வருவதுதான் முகேனிற்கு அளிக்கப்பட்டிருந்த பணி. முகேன் இன்னமும் ஜோவியலாக இறங்கி ஜாலியாக விளையாடியிருக்கலாம். ஆனால் மிகத் தயக்கமாக ‘எங்க அம்மா என்ன சொல்லி அனுப்பிச்சாங்கன்னா…’ என்று பயந்து கொண்டே விளையாட வந்த பிள்ளை போல தயக்கத்துடனே இருந்தார். (ஆனால், இதையே கவின் கையாண்ட விதம் ரகளையானது).

முகேன் உள்ளே வந்து பாலாஜியைப் பார்த்த போது ‘கடலை சாப்பிட்டவங்கதான் போன சீஸன்ல ஜெயிச்சிருக்காங்க’ என்கிற வசனம் இருவரின் மனங்களிலும் ஓடியிருக்கும் என்று தோன்றியது. முகேனை பிரியத்துடன் வரவேற்றார் பிக்பாஸ். முதலில் வெளியேறும் போட்டியாளர் பற்றிய அறிவிப்பை பல்வேறு கண்ணாமூச்சி விளையாட்டுக்களின் மூலம் நிகழ்த்தி போக்கு காண்பித்து போட்டியாளர்களை நன்றாக வெறுப்பேற்றியது சுவாரஸ்யம்.

குறிப்பாக அனைவரையும் முகமூடியிட்டு ‘ஒருவர் பிரிந்து விடுவார்’ என்று அறிவித்தவுடன் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் உருக்கத்துடன் பிரியாவிடை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிறகு அதுவும் விளையாட்டுத்தான் என்பதை அறிந்தவுடன் முகேனின் மீது கொலைவெறியுடன் அவர்கள் பாய்ந்தது சுவாரஸ்யமான காட்சி.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

கடைசியில் சோம் வெளியேற்றப்பட்ட தகவல் உறுதியான போது அவர் அதை இயல்பாக எடுத்துக் கொண்டார். ஆனால் ரியோவின் முகத்தில் பீதி இன்னமும் அதிகமானது. ‘Access denied’ என்று செய்தி வந்த போது ‘அதற்கு என்ன பொருள்’ என்று கூட ரியோவிற்கு விளங்கவில்லை. அந்த அளவிற்கு திகைப்பில் ஆழ்ந்திருந்தார்.

சோம் கிளம்பும் போது ‘பாட்டி செயின், விபூதி’ என்று சோமிற்கு தாழ்ந்த குரலில் நினைவுப்படுத்தினார் ரம்யா. (அன்பு விபூதியின் மகிமையால் தான் இவ்வளவு தூரத்திற்கு சோமுவால் வர முடிந்தது போல ஜெய்! அர்ச்சானந்தா!).

‘ஒரு பாட்டு பாடிட்டு கிளம்பு’ என்று சோமுவிற்கு இம்சையைக் கூட்டினார் ஆரி. டிரம் பாக்ஸ் இருப்பதை சோம் மறந்து விட்டார் போலிருக்கிறது. வாயாலேயே சத்தம் எழுப்ப ‘let me a tell a kutti story’-ஐ துவைத்து எடுத்தார்கள். “நான் படுக்கறேன்... என்னை எழுப்பு’ என்று கார்டன் ஏரியாவிற்கு சென்ற ஜாலியாக படுத்துக் கொண்டார் சோம். ‘சோம….’ என்று இழுவையாக அழைத்து எழுப்பினார்கள். ‘எழுந்து குளிடா’ என்று கலாய்த்தார் பாலாஜி.

"பிக்பாஸ்... சோமை விஷ் பண்ணி அனுப்புங்க..." என்று வேண்டுகோள் வைத்தார் ரம்யா. நெஞ்சில் அடித்துக் கொண்டு கற்கால மனிதனை நினைவுப்படுத்திய சோம், ஏறத்தாழ வெளியில் கிளம்பி விட்ட பிறகுதான் ‘சாக்லேட்’ விஷயத்தை பாலாஜி நினைவுப்படுத்தினார். ‘தாங்க்ஸ்டா மச்சி’ என்று வீட்டிற்குள் மறுபடியும் குடுகுடுவென்று ஓடிய சோம், சாக்லேட் கவரை எடுத்து வந்து ரம்யாவிடம் தர, அவரின் முகத்தில் சிரிப்பும் சங்கடமும் இணைந்து பெருகியது.

இந்த உலகத்திலேயே காலி சாக்லேட் கவரை தனது தோழிக்குத் தந்த ஒரே ஆள் சோமுவாகத்தான் இருப்பார். சாக்லேட்டை முதலிலேயே தின்று காலி செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது. (அடப்பக்கிகளா!) "இதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியலையே” என்று நெளிந்து கொண்டேயிருந்தார் ரம்யா.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

‘இதைச் சாப்பிடாம ரொம்ப நாள் வெச்சிருந்தான். இதனாலதான் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ல கூட பத்திரத்தை ஒளிக்கத் தெரியாம வெச்சு மாட்டினான்" என்று அதற்குப் பின்னுள்ள சுவாரசியங்களை விவரித்தார் பாலாஜி. ஆக... இந்த சாக்லேட் நாடகம் ஒருவழியாக முடிவிற்கு வந்தததில் மகிழ்ச்சி. ஆனால் இந்த முடிவில் இன்னொரு ஆரம்பம் இருக்குமோ?!

இதர போட்டியாளர்களைப் போலவே ‘சோமே…’ என்று இழுவையான தொனியில் பிக்பாஸ் அழைத்தது சுவாரஸ்யம். ‘சொல்லிக்காமயே போறீங்களே...’ என்று கலாய்த்த பிக்பாஸ், சோமிற்கு வாழ்த்துக்களைச் சொல்லி விடை தந்தார்.

(ஆறு மணி நேர நிகழ்வை ஒரே கட்டுரையில் அடக்குவது சிரமம். எனவே இதன் தொடர்ச்சியை பாகம் -2ல் வாசிக்கலாம் நண்பர்களே. இரண்டாம் பகுதி விரைவில் வலையேறும்.)

அது... ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு... Stay Tuned!