Published:Updated:

கவின், ஷெரீன் கலாய்ப்புகள்; ஆரி கேட்ட மன்னிப்பு; `நல்லவன்' பாலாஜி! பிக்பாஸ் இறுதி நாள் - பார்ட் 2

பிக்பாஸ் – நாள் 105

இருவரையும் வெளியே அழைத்து கமல் புறப்படும் சமயத்தில் வீட்டின் விளக்குகள் அணைந்து BIGG BOSS என்கிற விளக்கின் வெளிச்சம் மட்டும் எஞ்சியது பார்க்க அழகாக இருந்தது. கூடவே இனம் புரியாத சோகத்தையும் ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 105 (GRAND FINALE)

Published:Updated:

கவின், ஷெரீன் கலாய்ப்புகள்; ஆரி கேட்ட மன்னிப்பு; `நல்லவன்' பாலாஜி! பிக்பாஸ் இறுதி நாள் - பார்ட் 2

இருவரையும் வெளியே அழைத்து கமல் புறப்படும் சமயத்தில் வீட்டின் விளக்குகள் அணைந்து BIGG BOSS என்கிற விளக்கின் வெளிச்சம் மட்டும் எஞ்சியது பார்க்க அழகாக இருந்தது. கூடவே இனம் புரியாத சோகத்தையும் ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 105 (GRAND FINALE)

பிக்பாஸ் – நாள் 105

(முந்தைய பதிவின் தொடர்ச்சி...)

ஐந்து கடைசிப் போட்டியாளர்களில் முதலில் வெளியேறிய சோமை மேடைக்கு அழைத்து வந்தார் முகேன். ‘நன்றி. கப்பை கொடுத்துட்டு கிளம்புங்க. இரண்டெல்லாம் கிடையாது’ என்று முகேனைக் கலாய்த்து வழியனுப்பி வைத்தார் கமல்.

“ஐம்பது நாள்கூட தாங்க மாட்டேன்னு நெனச்சேன். டாப் 5ல வந்தது சந்தோஷம்” என்று நெகிழ்ந்தார் சோம். “உங்களையும் பாலாஜியையும் வெச்சு குத்துச்சண்டை நடத்தலாம்னு ஒருத்தர் டெரரா ஒரு ஐடியா கொடுத்தார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. வேறு சில மொழிகளில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். எனக்குப் பிடிக்கவில்லை. இதுதான் பிடித்திருக்கிறது" என்று கமல் சுயசான்றிதழ் வழங்கிக் கொண்டாலும் அதுதான் உண்மை. வேறு சில மொழிகளில் TRP-க்காக பல்வேறு விதமான நெருடிக்களைத் தருகிறார்கள். போட்டியாளர்களை பயங்கரமாக பிறாண்ட வைக்கிறார்கள். இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பாடமாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. வன்முறைக்கான கிளர்ச்சியை தூண்டி விடக்கூடாது.

“வந்த ரெண்டாவது வாரத்துல பாலாஜிக்கும் ஆரிக்கும் பாக்ஸிங் அடிப்படை கத்துக் கொடுத்திருக்கேன்” என்றார் சோம். (இந்தப் பிஞ்சு முகத்துல அப்படி தெரியவேயில்லையே?!). "ஓ... அதான் ரெண்டு பேரும் அடிச்சிட்டே இருந்தாங்களா?" என்று டைமிங்கில் கலக்கினார் கமல். சோமை தூக்கத்தில் இருந்து எழுப்பினாலும் "பத்து வருஷத்துக்கு முன்னால அழகிய தமிழ் மகன்ல…" என்று சொல்லுவார் போலிருக்கிறது. இப்போதும் அதையே சொல்லி "இந்தப் புகழை சரியாகப் பயன்படுத்திக் கொள்வேன்" என்றது சிறப்பு.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

“முந்தைய சீஸன்களை விடவும் இந்த சீஸனில் அன்பு பரவலாக இருந்தது. நீங்கள் அனைத்துப் போட்டியாளர்களுடனும் இணக்கமான நட்பைப் பின்பற்றினீர்கள்” என்று சோமை கமல் பாராட்டிய போது தன் குருநாதர் சொல்லித்தந்த தாரக மந்திரமான ‘அன்பு ஜெயிக்கும்’ என்பதை சோம் இப்போதும் சொல்ல, குருநாதர் அர்ச்சனாவும் அவரது பிரதான சிஷ்யை நிஷாவும் தொலைவில் இருந்து ஆமோதித்து கண்கலங்கினார்கள். ('இன்னாத்த ஜெயிச்சது?! அஞ்சாவது இடம்தான்’ என்று யாராவது புறணி பேசக்கூடும்).

“இதெல்லாம் எங்க அம்மா கிட்ட இருந்து வந்த நல்ல குணம் சார்" என்று சோம் நெகிழ்ந்ததை வழிமொழிந்த கமல், "எங்க அம்மா இப்ப இல்லையேன்னு ஏக்கம் இருக்கு" என்று நெகிழ்ந்தார். பிறகு சோமின் பயண வீடியோ ஒளிபரப்பானது. அவர் எத்தனை நகைச்சுவையுணர்வு உள்ளவர் என்பதற்கான சாட்சியங்கள் அதில் நிறைந்திருந்தன.

"அந்தப் பிரச்னைக்கு அப்புறம்...” என்று சோம் தனது குறையை சொல்ல முற்பட, "எந்தப் பிரச்னை? அதெல்லாம் போச்சு... நல்லபடியா இருங்க" என்று வாழ்த்தி அனுப்பினார் கமல்.

எல்கேஜி பிள்ளைகளுக்கு கற்றுத்தர, வண்ண வண்ண எழுத்துகளால் ABCD எழுதப்பட்ட புத்தகம் போன்ற சட்டையை அணிந்த வந்த ஆஜித் சில பாடல்களைப் பாடினார். பிறகு பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியின் ஒரு முக்கியமான பகுதி வந்தது. ‘பிக்பாஸ் விருதுகள்’.

சுரேஷ் (Trendsetter), கேபி (Sportive), சோம் (Mr.Clean), அர்ச்சனா (Best Cook), சனம் (Most determined), நிஷா (Stress Buster), சாம் (Best looking), ரமேஷ் (Mr.Don’t care), அனிதா (Bold & Beautiful), ஆஜித் (lovable), சுச்சி (Fearless), வேல் (Dude) ரேகா (Brave Heart), ஷிவானி (Dancing doll) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

தனக்கான விருதை அர்ச்சனா அத்தனை ரசிக்கவில்லை போலிருக்கிறது. ‘அன்பு இல்லாத ரொட்டி சுவைக்காது’ என்ற பழமொழியெல்லாம் சொல்லி அர்ச்சனாவை சமாதானப்படுத்தினார் கமல். சோமிற்கு வந்த பட்டம் ‘அவர் தினசரி குளிப்பதற்காக’ போலிருக்கிறது. தனக்கு வந்த பட்டத்திற்கு ஆஜித் ஏதோ வியாக்கியானம் சொல்ல முற்பட்ட போது, "இதற்குத்தான் எல்லோரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் சொல்லாம வாங்கிட்டுப் போயிடுங்க” என்றார் கமல். வேல்முருகன் விருது வாங்கிய போதும் பாடியது ஒரு மார்க்கமாகத்தான் இருந்தது. (அடங்கவே மாட்டீங்களா dude?!). பிறகு சாமின் நடனநிகழ்ச்சி நடைபெற்றது.

அடுத்தவரை வெளியே அழைத்துக் கொண்டு வருவதற்காக கவின் வந்தார். இவரும் சற்று புஷ்டியாக மாறி விட்டிருக்கிறார். கடந்த சீஸனில் கவின் அடித்த ஜோக்குகள் எனக்கு பிடிக்கும் என்பதால் நீண்ட நாள் கழித்து ஒரு நெருங்கிய நண்பரைப் பார்த்த உணர்வு வந்தது. “கீழே விழ இருந்த சினிமாத்துறையை மேலே தூக்கிட்டீங்க” என்று கமலுக்கு ஐஸ் வைத்தார் கவின். “கோவிட் டெஸ்ட் எடுத்தீங்கள்ல?” என்று கமல் கேட்டதுக்கு, "ஸ்கூல் சமயத்துலயே டெஸ்ட்டுன்னா பயம்" என்றது கவின் அடித்தது நல்ல மொக்கை ஜோக். ‘லிஃப்ட்’ என்கிற படத்தில் கவின் நடித்து முடித்திருக்கிறாராம். வாழ்க்கையில் ஏற்றம் பெறட்டும்.

மாஸ்டர் படத்தின் பாட்டு ஒலிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கவின் ‘சிரித்துத் தொலைடா ரியோ’ என்ற சொல்லியபடியே ஒலித்தப் பாட்டிற்கு விதம் விதமான குத்துக்களைப் போட்டது சுவாரஸ்யம். ஒரு சிலரால்தான் ஒரு சூழலையே உடனே கலகலப்பாக்கி விட முடிகிறது. “என்னா கவினு? பெட்டி எடுத்துட்டுப் போன கையோட ஆளைக் காணோம்?” என்று அப்போது பிக்பாஸ் அடித்த டைமிங் கமெண்ட் ‘நச்’ ரகம். "தல... நல்லாயிருக்கீங்களா?” என்று பதிலுக்கு நெகிழ்ந்தார் கவின்.
பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

"படிச்ச ஸ்கூல், காலேஜூக்கு மறுபடி போற ஃபீல் பிக்பாஸ் வீட்ல வருது” என்று சென்டியானார் கவின். தனக்குப் பிடித்த ஸ்பாட் ஆன மெயின் கேட் அருகில் அனைவரையும் கூட்டிக் கொண்டு அமர்ந்து கொண்ட கவின், ‘சிங்கப்பெண்ணே’ ரம்யாவை (முடியல!) பாராட்டிவிட்டு “குக் வித் கோமாளில இருந்தே நான் உங்க ரசிகன்ங்க" என்று கடலை போட ஆரம்பித்தார். (ஜகஜ்ஜால கில்லாடிய்யா!). “என்னையே உதாரணம் எடுத்துக்கங்க. உங்களுக்கு வளமான வருங்காலம் காத்திருக்கு” என்று கமல் மாதிரியே அனைவருக்கும் அள்ளி விட ஆரம்பித்தார் கவின்.

“கவின்... ரியோ... ரியோ... ன்னு ஒருத்தர் இருந்தார். இப்போ காணோம்.. அவரைக் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க” என்று பிக்பாஸ் கலாய்க்க, "அவரு இப்படித்தான் நம்மளை வெச்சு செய்வாப்பல” என்று பிக்பாஸை நெருக்கத்துடன் சிலாகித்தார் கவின். வந்த வேலையைப் பார்க்காமல் டீ சாப்பிட்டு பொழுது போக்கிக் கொண்டிருந்த கவினை பிக்பாஸ் மறுபடியும் ஜாலியாக எச்சரிக்க, “ஓகே... நியூஸ் பேப்பர் துண்டுகள் ஆங்காங்கே கெடக்கும். எடுத்துட்டு வாங்க” என்றார். பிறகு அதில் காணாமல் போன ஒரு துண்டின் மூலம் ரம்யா வெளியேற்றப்பட்ட தகவலை அறிய முடிந்தது. இதற்காக செய்தித்தாள் போன்றதொரு ஃபார்மட்டை உருவாக்கியிருந்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் வழக்கம் போல் தனது சிரிப்பால் அதை மழுப்பிக் கொண்டு அனைவரிடமும் விடைபெற்றார் ரம்யா. "பிக்பாஸ்... உங்க குரலை ரொம்பவும் மிஸ் பண்ணுவேன். ஏதாவது ஸ்வீட்டா சொல்லுங்க" என்று ரம்யா வேண்டுகோள் வைத்த போது ‘ஜாங்கிரி... லட்டு’ என்று சொல்லி ரம்யாவை விடவும் கொடூரமான மொக்கை ஜோக்கை சொல்லி ரம்யாவை கொடூரமாகப் பழிவாங்கினார் பிக்பாஸ். பிறகு ரம்யாவை பிக்பாஸ் வாழ்த்தி வழியனுப்ப, ஆண் போட்டியாளர்களும் சல்யூட் அடித்து விடை தந்தார்கள். ஆரியின் கண்களில் மட்டும் பிரத்யேகமான சோகம் மிதந்ததை எத்தனை பேர் கவனித்தீர்கள்?!

மேடைக்கு வந்த ரம்யா, "எனக்கு ஏதாவது tip கொடுங்க" என்று கமலிடம் கேட்க, “உங்களை நிறைய பேருக்குப் பிடித்திருக்கிறது. பிடிக்காதவர்களும் இருக்கலாம். வெளில ட்ரால் இருக்கும். ரெடியா இருங்க. ‘பூரணமிதம்’ என்பார்கள். அது போல் சமநிலை தவறாத போட்டியாளராக நீங்கள் இருந்தீர்கள். ஒரு சிக்கலான சூழலில் நீங்க சாரி சொன்னது கூட உங்க பண்பா இருக்கலாம் அல்லது உங்க உத்தியாவும் இருக்கலாம்" என்று ‘நீங்க நல்லவரா. கெட்டவரா’ பாணியில் கமல் சொல்ல, "அவ்ளோ மூளைல்லாம் எனக்கு இருந்தா நான் ஏன் இப்படி விளையாடியிருக்கப் போறேன்" என்று ஜாலியான சலிப்புடன் பதில் அளித்தார் ரம்யா.

ரம்யாவின் பயண வீடியோ காட்டப்பட்டது. அதில் ஒரு காட்சியில், "உள்ளே ஒருத்தர் போய் எல்லோரையும் பத்தி புறணி பேசிட்டு ரெண்டு பேரை நாமினேட் பண்ணிட்டு வருவாரு... யாரு அது? ஆரின்னுதானே நெனச்சீங்க. நான்தான் அது” என்று கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் ரம்யா சிரித்துக் கொண்டே சொல்லும் காட்சியும் வந்தது. திரையில் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நிஷா, இதன் பின்னணி புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105
இந்தக் குறிப்பிட்ட காட்சியில் ரம்யா ஆரியை ஒருபக்கம் கிண்டலடித்திருந்தாலும் இறுதியில் அதை சுயபகடியாகத்தான் மாற்றிக் கொண்டார். ஆனால் இதை ஏதோ உலகசதி போல சிலர் அப்போது பேசிக் கொண்டிருந்தார்கள். தான் மற்றவர்களை கிண்டல் செய்வது போல, தன்னை எவராவது கிண்டல் செய்தாலும் அதை எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவமும் ரம்யாவிற்கு இருந்தது.

"நான் defect ஆன பீஸாம்மா?” என்று மேடையிலேயே ஜாலியாக தன் தாயை ரம்யா கேட்க, “அப்பா இல்லாத குடும்பத்தை என் பிள்ளைகள் தாங்கிக் கொண்டார்கள்" என்று ரம்யாவின் அம்மா நெகிழ "இதுவே எனக்குப் போதும்" என்று பதிலுக்கு நெகிழ்ந்தார் ரம்யா. “புதிய ஆரம்பம் அமையட்டும்" என்று ரம்யாவிற்கு வாழ்த்தி விடையளித்தார் கமல். ‘சிங்கப்பெண்ணே’ விருது ரம்யாவிற்குக் கிடைத்தது.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105
அடுத்தது வாரம் ஒரு புத்தகம் பகுதி. எனக்கு மட்டுமல்ல, தீவிரமான புத்தக வாசிப்பாளர்கள் ஒவ்வொருவருமே வாரா வாரம் ஆவலாக எதிர்பார்க்கும் பகுதி இதுவாகத்தான் இருக்க வேண்டும். பிக்பாஸோடு இது நின்று விடக்கூடாது. தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு மேடையிலும் கமல் இதைத் தொடர வேண்டும் என்பது வேண்டுகோள். அவரது ட்விட்டர் பக்கத்தில் கூட தொடரலாம். ஏனெனில் கமல் குறிப்பிடுகிறார் என்பதற்காக சம்பந்தப்பட்ட நூலைத் தேடுபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் தற்செயலாக வாசித்து விடுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

ஏனெனில் புத்தக வாசிப்பு என்னும் விஷயமே இன்று பெரும்பாலும் அருகிப் போய் விட்டது. குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் ஏறத்தாழ சுத்தமாக இல்லை என்று சொல்லி விடலாம். இன்று கமல் பரிந்துரை செய்த நூலும் இது தொடர்பானதுதான். ‘வாசிப்பது எப்படி?’ என்கிற செல்வேந்திரன் எழுதிய நூலானது, பதின் பருவத்திற்கான வாசிப்பு வழிகாட்டியாக அமைந்துள்ளது. கல்வி தொடர்பான புத்தகங்களையே சரியாக ஜீரணிக்காமல், தொலைக்காட்சி, இணையம், மொபைல் என்று பல்வேறு கவனச்சிதறல்களின் மூலம் இளைய தலைமுறையின் சிந்தனையும் சக்தியும் பாழாகிக் கொண்டிருக்கிறது.

“இருக்கற புக்கையே படிக்க முடியலை. இதுல லைப்ரரில வேற எடுத்து வாசிப்பாங்களா?” என்று அலட்சியமாக இருக்கிறார்கள். கமல் குறிப்பிட்டது போல இளம் தலைமுறை அறிந்திருக்கும் தமிழ்ச்சொற்களானது மிகச் சொற்ப எண்ணிக்கையில் அடங்கி விடுகின்றன. எனவே தமிழில் பேசச் சொன்னால், "அது வந்து... இது வந்து..." என்றே சமாளிக்க வேண்டியிருக்கிறது.

வாசிப்பது எப்படி?
வாசிப்பது எப்படி?

ஒவ்வொரு புத்தகமுமே ஒரு புதிய உலகத்தின் வாசலைத் திறக்கும் ஜன்னல் என்பதும் பல்வேறு ஞானத்தையும் அனுபவத்தையும் கூட்டி வரும் வாசல் என்கிற விஷயமும் பலருக்குத் தெரியவில்லை. நேர விரயம், வீண் செலவு என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது சார்ந்த ஆதங்கத்திலும் கரிசனத்திலும் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்குமே புத்தக வாசிப்பு என்பது எத்தனை முக்கியம் என்பதை ஆத்மார்த்தமாக உணரும்படி செல்வேந்திரன் அருமையாக எழுதியிருக்கிறார்.

குறைந்த அளவே பள்ளிக்கல்வி பெற்ற கமலும் கூட புத்தகங்களின் வழியாகத்தான் தனது அறிவைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கான முன்னுதாரணம். தனக்கு பல்வேறு புத்தகங்களை அறிமுகப்படுத்திய கவிஞர் ஞானக்கூத்தனை மேடையில் நினைவு கூர்ந்தார் கமல். "சில புத்தகங்கள் அச்சில் இல்லை. இவற்றை சம்பந்தப்பட்ட பதிப்பாளர்கள் அச்சில் கொண்டு வர வேண்டும்" என்று கமல் வேண்டுகோள் வைத்தது சிறப்பு. அத்தோடு, "இது போன்ற நூல்களை மின்னணு வழியிலும் கொண்டு வருவது அவசியம்" என்று அவர் குறிப்பிட்டது தேவையான ஆலோசனை.

"'தொலைக்காட்சி என்னும் ஊடகம் சினிமாவிற்கு உறுதுணையாகத்தான் அமையும்' என்பதை பல வருடங்களுக்கு முன்பே நான் கணித்து சொன்ன போது என் மீது கோபம் கொண்டவர்கள் அதிகம்" என்ற கமல், "அவங்களுக்கு புரியற மாதிரி சொல்லியிருக்கணும். என் மேலதான் தப்பு" என்றது நல்ல நையாண்டி. இந்த நிகழ்ச்சியில் கமல் பரிந்துரை செய்த நூல்கள் அனைத்தும் பரிசுப் பொதிகளாக போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் பார்க்க ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் பொறாமையாகவும் இருந்தது. (யாராவது ஒரு பார்சலை இந்தப் பக்கம் தட்டி விடுங்கப்பா!).

"சினிமா என்னும் ஊடகத்தில் காட்சிகள் நம் மூளையில் திணிக்கப்படும். ஆனால் புத்தகங்கள் நம் கற்பனை சக்தியை பல்வேறு விதமாக பெருக்கும்" என்று கமல் சொன்னது முக்கியமான பாயிண்ட். ‘திருமணம் போன்ற விழாக்களில் புத்தகங்களைப் பரிசாக தரலாம்’ என்கிற அனிதாவின் கருத்து ஏற்கெனவே நெடுங்காலமாக புத்தக ஆர்வலர்களால் சொல்லப்பட்டு வருவதுதான். ஆனால் பின்பற்றுகிறவர்கள் யார்?

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

"எப்படி நீங்க கவித்துவமா, தங்கு தடையின்றி பேசறீங்க?” என்பதற்கு கமல் சொன்ன பதில் அற்புதம். “ஏதாச்சும் கவிதை சொல்லுங்களேன்" என்று பிறகு அனிதா தெரியாத்தனமாக கேட்டு விட, "கவிதைத் தொகுப்பு கொண்டு வரணும்னு ஒரு ஐடியா இருக்கு" என்னும் தகவலைத் தெரிவித்தார் கமல். இந்தச் சமயத்தில் சுப்ரமணிய ராஜூ சொன்னதாக கமல் சொன்ன கவிதை என்பது உண்மையில் நீலமணி எழுதியது. (தகவலுக்கு நன்றி: ஆர்.பி.ராஜநாயஹம்). கூட்டுக்குடித்தனத்தில் புதுமண தம்பதிகள் அனுபவிக்கும் நுட்பமான சிக்கலை ஒரு மெலிதான பகடியுடன் சொன்ன கவிதை அது. ('ஒண்டுக் குடித்தன கூட்டுக் குடும்பி கண்டு பிடித்தது ரப்பர் வளையல்').

பிறகு தான் எழுதிய கவிதை ஒன்றை பாடும் முனைப்பில் அடுத்து ஈடுபட்டார் கமல். "‘இது பாரதியார் எழுதியதா?’ன்னு ஷங்கர் மகாதேவன் ஒரு முறை கேட்டார்...” என்று நமக்கு அதிர்ச்சியைக் கூட்டிய கமல் அதற்கான தாளத்தை சோமிற்கு சொல்லிக் கொடுத்து ‘பகுத்தறிந்தார் புலம்பல்’ என்கிற வகைமையில் அமைந்த பாடல் என்று சொல்லி தக தகிட தக தகிட என்னும் தாளத்தில் உக்கிரமாகப் பாடிக் காட்டினார். (இதற்குப் பிறகுதான் ஆரியின் மகள் ரியா அழ ஆரம்பித்திருக்க வேண்டும்.)

கமல் இப்படி ஆவேசமாக இலக்கிய ஏணியில் ஏற முயன்றுக் கொண்டிருந்த போது, "சார்... 'அண்ணாத்த ஆடறார் ஒத்திக்கோ' பாடுங்க சார்" என்று அவரை ‘பொதேர்’ என்று கீழே இறக்கிப் போட்டார் டிரம்முடன் வந்த சோம். பாவம் கமல். சமாளித்துக் கொண்டு அதையும் பாட வேண்டியிருந்தது. (பிரபலம்னாலே பிராப்ளம்தான்).

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105
“கமல் சார்... உங்களுக்கு ஒரு குறும்படம்" என்று பிக்பாஸ் அறிவித்து பிறகு காட்டிய படம் உண்மையிலேயே மாஸ்! எனக்குள் உறங்கிக் கொண்டு இருந்த கமல் ரசிகன் ஆவேசமாக எழுந்து கொண்ட தருணம் அது. முதல் சீஸன் முதல் நடப்பு சீஸன் வரை விதம் விதமான உடைகளில், தோரணைகளில், உடல்மொழியில் கமல் வந்த காட்சிகள் அனைத்தும் அற்புதமானவை. கமல் என்பவர் எத்தனை சிறந்த நடிகர் என்பதற்கு சாட்சியங்களாக இருந்தன.

"குப்பை பெருக்குவனாக இருந்தால் கூட அந்தப் பணியில் நீதான் சிறந்தவன் என்று பெயர் வாங்க வேண்டும்" என்று தனது தாய் கூறியிருப்பதாக கமல் அடிக்கடி நினைவுகூர்வார். பிக்பாஸ் என்னும் சிக்கலான, நுட்பமான ரியாலிட்டி ஷோவிலும் தனது அர்ப்பணிப்பையும் உழைப்பையும் இட்டு இந்த இடத்தில் வேறு எவரையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கான சாதனையை கமல் படைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

இந்தச் சமயத்தில் கமலின் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் அம்ரிதா ராம் அவர்களையும் பிரத்யேகமாக பாராட்ட வேண்டும். "சமீபகாலத்தில் இரண்டு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஒன்று பிக்பாஸ். இன்னொன்று உங்களுக்கே தெரியும்" என்றார் கமல். முதல் முடிவு கனகச்சிதமானது. இரண்டாவதை காலம்தான் நிர்ணயிக்கும்.

காலில் ஏற்பட்டிருக்கும் அறுவைச் சிகிச்சை, அதன் சிரமங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு சமயங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருந்ததை கமல் குறிப்பிட்ட போது நெகிழ்வாக இருந்தது. இப்போது கூட நான்காம் சீஸனை முடித்துவிட்டு அடுத்த அறுவைச் சிகிச்சைக்காகத்தான் செல்கிறாராம். கமலுடன் சமீபத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்த சுரேஷ் சக்ரவர்த்தியும் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். "இவ்ளோதான் அவரால சாப்பிட முடியும்" என்று சுரேஷ் ரொமாண்டிசைஸ் செய்ய முயன்றபோது "இல்லை. அது டயட்டிற்காக" என்று கமல் உண்மையைப் போட்டு உடைத்தது சுவாரஸ்யம்.

‘பானிபூரி... பேல்பூரி’ என்று ஒரு பாட்டை சுச்சியும் அவரது குழுவும் பாடி விட்டுச் செல்ல, ‘dude’ வேல்முருகன் அட்டகாசமான காஸ்ட்யூமில் வந்து பாடினார். அடுத்த போட்டியாளரை வெளியில் அழைத்து வர ஷெரீன் வந்தார். (ஷெரீனு... என்று இழுவையாக சாண்டி அழைக்கும் சத்தம் உடனடியாக மைண்டில் ஒலித்தது). உள்ளே சென்ற ஷெரீன், "போன முறை நான் வெளியே போறப்ப என்கூட நீங்க பேசலை" என்று பிக்பாஸிடம் செல்லம் கொஞ்சினார். ஆம்... ஷெரீன் எத்தனை கெஞ்சிக் கேட்டும் பிக்பாஸ் அப்போது கல்லுளித்தனமாக மெளனம் காத்தது நினைவிற்கு வருகிறது.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

உள்ளே சென்ற ஷெரீனுக்கும் பாலாஜிக்கும் சற்று முட்டிக் கொண்டு ரகசியமாக சமாளித்துக் கொண்டார்கள். டூப்ளிகேட் சாவி தயாரிப்பவர் போல பல சாவிகளைக் கொண்டு பூட்டைத் திறந்ததில் ரியோவின் பெயர் வந்தது. அப்போதுதான் ரியோவின் முகத்தில் இருந்த பீதி பெரும்பாலும் குறைந்து ஆசுவாசம் வந்தது. ஆக இத்தனை நேரமும் இது குறித்த டென்ஷனில்தான் ரியோ இருந்திருக்கிறார் போல. "ஷெரீன் கூட்டிட்டுப் போறாங்கன்னு சொன்னப்புறம்தான் முகத்தில் சிரிப்பே வருது" என்று பிக்பாஸ் கலாய்க்க வெட்கப்பட்டு சிரித்தார் ரியோ. ஷெரீன் வாக்குமூல அறையில் தனியாக பேச வேண்டும் என்று தன்னிடம் வைத்த வேண்டுகோளை கறாராக நிராகரித்தார் பிக்பாஸ். (பக்கத்துல மிஸஸ் இருக்காங்களா பாஸ்?!)

தங்க மோதிரம் எதையோ கீழே தவறவிட்ட மாதிரி வீடு முழுக்க எதையோ ரியோ தேடுகிறாரே என்று முதலில் தோன்றியது. பிறகுதான் புரிந்தது, அவர் பிரிவுத் துக்கத்துடன் வீட்டைச் சுற்றி வருகிறார் என்பது. ஆரியும் பாலாஜியும் ரியோவின் இறுதிக்கட்ட முயற்சியைப் பாராட்டி அவரை வழியனுப்பி வைத்தார்கள். ஆரி அப்போது தரையில் அமர்ந்து வணங்க, "ப்ரோ... என் பேண்ட் டைட்டா இருக்கு. குனிய முடியாது" என்றார் பாலாஜி. பாலாஜியை ஜாலியாக பழிவாங்குவதற்காகவோ, என்னமோ... பிறகு ஆரி அவ்வப்போது தரையில் குனிந்து எழுந்ததைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

மேடைக்கு வந்தம் ரியோவின் முகத்தில் கலவரம் குறையவில்லை. திருவிழாவில் காணாமல் போன சிறுவன் மாதிரியே விழித்தார். "உங்களுக்குக் கிடைக்கும் கைத்தட்டல்களை மீண்டும் கேளுங்கள். நீங்க ஒரு நல்ல Entertainer" என்று கமல் விருது தந்து பல்வேறு விதமாக சமாதானம் சொன்ன பிறகுதான் ரியோ முகத்தில் சற்று பீதி குறைந்தது. (வீட்டம்மா முறைச்சிட்டே இருக்காங்க. இன்னிக்கு வீட்ல இருக்கு உங்களுக்கு பூசை!) "அம்மா மடில போய்ப் படுத்துக்கங்க" என்று ரியோவிற்கு ஆலோசனை சொன்ன கமல், தன் மகனின் விடுதலைக்காக கால் நூற்றாண்டிற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கும் ‘அற்புதம்மாளை’ அப்போது நினைவுகூர்ந்தது சிறப்பு.

"ஓகே... மீதமிருக்கும் இரண்டு போட்டியாளர்களை நானே உள்ளே சென்று அழைத்து வருகிறேன்" என்று வீட்டின் உள்ளே சென்றார் கமல். பிக்பாஸை தொடர்ந்து பார்ப்பதாகச் சொன்ன ஆரிக்கு இந்த மரபு தெரியாது போல. "நீங்கதான் வந்து அழைச்சிட்டு போவீங்களா?" என்று வியந்தார். ‘பேண்ட் டைட்’ என்று சொல்லிக் கொண்டிருந்த பாலாஜி கமலைப் பார்த்ததும் தரையில் குனிந்து வணங்கினார். தங்கள் பிராண்ட் கதர் உடையை இருவருக்கும் பரிசளித்து அணியச் சொல்லி அழகு பார்த்தார் கமல்.

பிறகு இருவரையும் டைனிங் டேபிள் அருகே அமர வைத்து கமல் பேசிய உரையாடல் அற்புதமானது. பாலாஜிக்கும் ஆரிக்கும் உள்ள ஆளுமை முரண்களை அவர் சுட்டிக் காட்டியது அழகு. குறிப்பாக ஆரியிடம் பேசியது மிகவும் முக்கியமானது.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

இதற்கு முன்னால், வீட்டின் தனிமையில் இருந்த ஆரி மற்றும் பாலாஜியிடம் பிக்பாஸ் பேசிய ஆத்மார்த்தமான உரையாடல் நெகிழ்வையூட்டியது. குறிப்பாக "இந்தக் குரல் இனி அமைதியாகிவிடும்" என்பது போல் பிக்பாஸ் சொன்னவுடன் எந்திரன் திரைப்படத்தின் இறுதியில் ரோபோ ரஜினி தன் உடலை தானே கழற்றி வைக்கும் காட்சிகள் எல்லாம் நினைவிற்கு வந்து போயின. "உங்கள் குரலை நாங்களும் மிஸ் செய்வோம் பிக்பாஸ்! சமயங்களில் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாததுக்கு சாரி" என்று மறந்து போனதை இறுதியில் சொல்லி மன்னிப்பு கேட்டார் பாலாஜி.

‘இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர்காலம்’ என்கிற திரிசூலம் திரைப்படத்தின் பாடல் ரேஞ்சிற்கு ஆரியும் பாலாவும் ஒருவரையொருவர் பாசத்துடன் அரவணைத்துக் கொண்டனர். பாலாஜியும் ஆரியும் உடையணிந்து வரும் வரை சாவகாசமாக வீட்டைச் சுற்றிப் பார்த்த கமல், "இந்தச் செடிகளையெல்லாம் எங்காவது பாதுகாப்பா மாத்திடுங்க" என்று பிக்பாஸிடம் வேண்டுகோள் வைத்தது சிறப்பு. "இது ஈசான மூலை. அத்தனை ஈஸியான மூலை இல்லை" என்றெல்லாம் கிரேஸி மோகன் மொழியில் பேசிக் கொண்டிருந்தார் கமல்.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105
இருவரையும் வெளியே அழைத்து கமல் புறப்படும் சமயத்தில் வீட்டின் விளக்குகள் அணைந்து BIGG BOSS என்கிற விளக்கின் வெளிச்சம் மட்டும் எஞ்சியது பார்க்க அழகாக இருந்தது. கூடவே இனம் புரியாத சோகத்தையும் ஏற்படுத்தியது.

பிறகு பாலாஜியையும் ஆரியையும் மேடைக்கு அழைத்த வந்த கமல், அவர்களின் கைகளைப் பிடித்து முடிவை அறிவிப்பது போல் சில முறை போக்கு காட்டினார். இருவரின் பயண வீடியோக்களும் ஒளிபரப்பானது. அதில் பாலாஜியின் முகபாவங்கள் சுவாரஸ்யம். ‘நானா இதையெல்லாம் செஞ்சேன்’ என்பது மாதிரியே ஆச்சர்ய, அப்பாவி முகபாவங்களைக் காட்டினார்.

இறுதியாக ஆரியின் கையைப் பிடித்து கமல் உயர்த்திய போது நமக்கு அத்தனை ஆச்சர்யமாக இல்லை. ஏற்கெனவே நன்கு அறிந்த ஒரு முடிவு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உணர்வை மட்டுமே அடைய முடிந்தது. அதற்கும் முன்பாக, வெற்றி பெற்றவர் 16 கோடியே 50 லட்சம் வாக்குகளையும் ரன்னர் –அப் 6 கோடியே 14 லட்சம் வாக்குகளையும் பெற்ற தகவலை கமல் வெளியிட்டார். எனில் மிகச் செளகரியமான எண்ணிக்கை வித்தியாசத்தில்தான் ஆரி வென்றிருக்கிறார்.
பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

வெற்றிக்கான தனது ஏற்புரையை வழங்கிய ஆரி, "நான் வழக்கமா அதிகமா பேசுவேன். இப்ப பேச்சே வரலை... கருத்து மோதல்களின் காரணமாக எந்தப் போட்டியாளரையாவது காயப்படுத்தியிருந்தால் அவர்களிடமும் அவர்களின் குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று சொன்னது அனிதாவுடனான மோதல் குறித்ததாக இருக்கக்கூடும்.

"என் வாழ்க்கையில் முதல் பரிசு என்கிற விஷயத்தையே நான் சந்தித்ததில்லை. அத்தனை தோல்விகளை வரிசையாக எதிர்கொண்டிருக்கிறேன். பிக்பாஸில் வென்ற முதல் பரிசை எண்ணி மகிழ்ச்சி. இதற்கு சக போட்டியாளர்களும் காரணம். அவர்களுக்கும் நன்றி. என் அப்பா, அம்மா இப்போது உயிரோடு இல்லை. கமலை என் பெற்றோராக நினைத்து வணங்குகிறேன்" என்று நெகிழ்ந்து கமலின் காலில் விழப் போன ஆரியை தடுத்து நிறுத்தி அரவணைத்துக் கொண்டார் கமல்.

ரன்னர் அப் விருதைப் பெற்றுக் கொண்ட பாலாஜி வழக்கம்போல் தன் பாணியில் அசால்ட்டாக பேசிச் சென்றார். "இந்த கேமை இரண்டு விதமாகவும் ஆடியிருக்க முடியும். ஆனால் நான் நானாக இருந்து உணர்வுகளை வெளிப்படுத்தினேன். தவறாக இருந்த விஷயங்களை இனி திருத்திக் கொள்வேன். வாக்களித்தவர்களுக்கு நன்றி" என்றார் பாலாஜி. ஆரி என்கிற திறமைசாலியிடம்தான் தோற்றோம் என்கிற மகிழ்ச்சி அவரின் முகத்தில் தெரிந்ததைப் போல பட்டது. "நம்புங்க நானும் நல்லவன்தான்" என்று பாலாஜி இறுதியில் கூவிய போது வெடித்து சிரித்து விட்டார் ஷிவானி.

பிறகு பணப்பரிசு ஐம்பது லட்சம் ஆரிக்கு வழங்கப்பட்டது. (டேக்ஸ் போக எவ்ளோ வரும்?!) நெடுநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்த காரணத்தினாலோ, என்னவோ... ரியா அழுது கொண்டிருந்தார். அவரை மேடைக்கு அழைத்து தன் மகளுடன் இணைந்து ரொக்கப்பரிசை ஆரி பெற்றுக் கொண்டது நெகிழ்ச்சியான காட்சி. தந்தையின் இடுப்பில் ஏறி அமர்ந்து கொண்ட பிறகுதான் ரியாவின் முகத்தில் அழுகை மறைந்தது. ஆரிக்கும் கமலுக்கும் ரியா உம்மா தந்தது சிறப்பான காட்சி.

பிக்பாஸ் – நாள் 105
பிக்பாஸ் – நாள் 105

பாலாஜிக்கு ‘Game Changer’ விருதும் ஆரிக்கு ‘Motivator’ விருதும் கிடைத்தன. “நேர்மையைத் தேர்ந்தெடுக்கும் எண்ணம் மக்களுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அதை அப்படியே தக்க வைத்திருங்கள். தேர்தல் காலத்தில் செயல்படுத்துங்கள்" என்று சூசகமாக அரசியல் பேசிய கமல் ‘நாளை நமதே’ என்கிற பஞ்ச் வசனத்துடன் விடைபெற்றார். இதர போட்டியாளர்கள் கலைந்து வந்து ஆரிக்கு வாழ்த்துச் சொன்னதோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

பின்குறிப்பு: ‘நன்றி... வணக்கம்.' என்று சொல்லி விட்டு இந்தக் கட்டுரையோடு நான் விடைபெற்று விடுவேன் என்று நீங்கள் கனவு கண்டு மகிழ்ச்சியடைய வேண்டாம். நாளை இன்னுமொரு கட்டுரை பாக்கி இருக்கிறது. அதில் இந்த நான்காம் சீஸன் பற்றிய ஒட்டுமொத்த பார்வை மற்றும் இன்னபிற விவரங்களைப் பற்றி விரிவாக அலசலாம். அதன்பிறகுதான் நான் விடைபெற்றுக் கொள்வேன். எனவே உங்களுக்கு கிடைத்திருப்பது தற்காலிக மகிழ்ச்சி மட்டுமே.