Published:Updated:

திங்கட தக்கும் தக்கும்தா... திங்கடதக்கும்! பிக் பாஸ் தமிழ் - சீஸன் 4 என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

பிக் பாஸ் தமிழ் - சீஸன் 4

கடந்த சீஸனைப் போலவே இந்த சீஸனிலும் கலந்து கொள்ளவிருக்கிற போட்டியாளர்களைப் பற்றிய தகவல்கள் கசிந்திருக்கின்றன. அவை எந்த அளவிற்கு உண்மை என்பது நிகழ்ச்சியின் துவக்க நாளில் (இன்று மாலை 06.00 மணிக்கு) தெரிந்துவிடும்.

Published:Updated:

திங்கட தக்கும் தக்கும்தா... திங்கடதக்கும்! பிக் பாஸ் தமிழ் - சீஸன் 4 என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

கடந்த சீஸனைப் போலவே இந்த சீஸனிலும் கலந்து கொள்ளவிருக்கிற போட்டியாளர்களைப் பற்றிய தகவல்கள் கசிந்திருக்கின்றன. அவை எந்த அளவிற்கு உண்மை என்பது நிகழ்ச்சியின் துவக்க நாளில் (இன்று மாலை 06.00 மணிக்கு) தெரிந்துவிடும்.

பிக் பாஸ் தமிழ் - சீஸன் 4
அன்புள்ள நண்பர்களே.. நலம்தானே? மறுபடியும் இன்னொரு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி. எனவே, மீண்டும் ‘உங்களுடன் நான்’.
கடந்த பிக்பாஸ் தமிழ் சீஸன்களைப் போலவே இந்த முறையும் உங்களின் ஆதரவும் ஊக்கமும் செல்லமான குட்டுக்களும் தொடரும் என்கிற வலுவான நம்பிக்கையோடு 4வது சீஸனிலும் நூறு நாள்கள் உங்களுடன் பயணிக்கப் போகிறேன்.

“பிக் பாஸ்லாம் டைம் வேஸ்ட்டுங்க.. வேலையில்லாதவங்க பாக்கறது…” என்று இந்த நிகழ்ச்சியின் மீது ஆர்வமில்லாத சாமானியர்களின் குரல் ஒரு பக்கம் ஒலிக்கப் போகிறது.

பிக் பாஸ்
பிக் பாஸ்

‘மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களை ஒளிந்து பார்க்கும் வக்கிர குணாதிசயமும் அது பற்றி வம்பு பேசும் ஆதார இச்சையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு. அதற்கு தீனி போடுவதே இம்மாதிரியான நிகழ்ச்சிகளின் நோக்கம். உலக மயமாக்க காலக்கட்டத்தில் நுகர்வுக் கலாசார வெறி அதன் உச்சத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதே இம்மாதிரியான ஊடக அபத்தங்களின் அடையாளம்’ என்று இன்னொரு பக்கம் இன்டலக்சுவல் குரல்களும் ஒலிக்கத்தான் போகின்றன.

இதற்கிடையில், "நாங்க டைம் பாஸூக்கு என்னவோ பார்க்கறோம்.. இவங்களுக்கென்னவாம்?” என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் விசுவாச பார்வையாளர்களும் பதிலுக்கு மல்லுக்கட்டத்தான் போகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றிய அலசல்கள், வீடியோக்கள், மீம்ஸ்கள், நேர்முக வர்ணணை ட்வீட்கள்… என்று கடந்த சீஸன்களைப் போலவே இம்முறையும் அத்தனை கலாட்டாக்களும் வரப் போகும் நூறு நாள்களில் களைகட்டத்தான் போகின்றன.

‘பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பது அத்தனை அவசியமா என்ன?’

இதுவொரு சுவாரஸ்யமான கேள்வி. தனிநபர் உரிமை மற்றும் சுதந்திரத்தைச் சார்ந்த சமாச்சாரம் இது. "டைம்பாஸூக்கு எத்தனையோ விஷயங்களைச் செய்கிறோம். அதில் ஒன்று இது. அதுக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?” என்று இதை ‘வம்பு நிகழ்ச்சியாக’ மட்டுமே எளிதாக எடுத்துக் கொள்கிறவர்கள் ஒரு பக்கம் இருப்பார்கள்.

"இந்த நிகழ்ச்சியில வரும் மனிதர்களின் எதிர்மறையான விஷயங்கள் கேமராவின் வழியாக அம்பலப்படும் போது அது நம்முள் இருக்கிற எதிர்மறைகளையும் அழுக்குகளையும் பிரதிபலிக்கிறது. அவ்வாறு நீயும் இருக்காதே என்று எச்சரிக்கிறது" என்று சுயபரிசீலனையுடன் எடுத்துக் கொள்கிற புத்திசாலிகளும் இன்னொரு பக்கம் இருப்பார்கள்.

'பிக் பாஸ்' கமல்
'பிக் பாஸ்' கமல்

சரி, தமிழ் பிக்பாஸ் – சீஸன் 4 – இம்முறை எப்படியிருக்கக்கூடும்?

COVID 19 – சமீப காலத்தில், உலக அளவில் ஒட்டுமொத்த மனித குலத்தை மிரட்டிய வேறு பெயர் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இதனால் அவஸ்தைப் பட்டு விட்டோம்; பட்டுக் கொண்டிருக்கிறோம். பொருளாதாரம், கலாசாரம், மருத்துவம், சுற்றுலா, சினிமா என்று பல்வேறு துறைகளிலும் பலத்த பாதிப்பை கொரானோ என்கிற இந்த கொடிய விஷ(ய)ம் நம்முள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இது சார்ந்த உளவியல் அச்சமும் பதட்டமும் உளைச்சலும் ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கொரோனா நமக்கு அறிமுகமான ஆரம்பக்காலக்கட்டத்தில் கிடைத்த ‘திடீர்’ விடுமுறை குறித்த மகிழ்ச்சியை உணர்ந்தாலும் அந்த நாள்களை அனுபவிக்க விடாமல் ஏதோவொரு சங்கடம் உள்ளுக்குள் மனதைப் பிசைந்து கொண்டேயிருந்தது. விஐபி முதல் பக்கத்து வீட்டு நண்பர் வரை நிகழும் ‘திடீர்’ மரணங்கள் நமக்குள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.

ஒட்டுமொத்த மனித குலமே உளவியல் அச்சத்திலும் மனஉளைச்சலிலும் ஆட்பட்டிருக்கும் இந்தச் சூழலில் நாம் இளைப்பாறுவதற்கும், அந்த கொடிய வைரஸ் குறித்து அருவி போல் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கும் ஊடகச் செய்திகளில் இருந்த திசைமாறுவதற்கும் ஏதாவது ஒரு பொழுதுபோக்கு வடிகால் நமக்கு தேவை.

திரையரங்குகள் ஒருபக்கம் மூடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் OTT தளங்களில் வெளியாகும் தரமான தொடர்களும் திரைப்படங்களும் ஆறுதலாக இருந்தாலும் அவை பெரும்பாலும் நகர்ப்புற மக்களின் பொழுதுபோக்கிற்குத்தான் உதவுகின்றன. இன்னொரு பக்கம் ஐபிஎல் கொண்டாட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அவை பெரும்பாலும் கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளவர்களுக்குத்தான்.

இந்தச் சூழலில், சாமானிய மக்களின் பொழுதுபொக்கு வடிகாலாக ‘பிக்பாஸ்’ தமிழ் சீஸன் வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

“தப்புன்னா. தட்டிக் கேட்பேன்.. நல்லதுன்னா.. தட்டிக் கொடுப்பேன்” என்கிற பஞ்ச் டயலாக்கோடு விதம் விதமான பிரமோக்களில் வந்து ஆவலைத் தூண்டுகிறார் கமல்ஹாசன். தன்னை நேர்த்தியாக ஒப்பனை செய்து கொள்வதில் அவர் எப்போதுமே மிகுந்த அக்கறை காட்டுவார். கடந்த சீஸன்களிலும் இதைப் பார்த்தோம். விதம் விதமான அவுட்ஃபிட்களில் வந்து கெத்து காட்டினார்.

இந்த சீஸனிலும் அவரது உடையலங்காரம் வித்தியாசமாகவும் பேசப்படுவதாகவும் இருக்கப் போகிறது என்பதற்கு விசிட்டிங் கார்டாக இருக்கிறது இந்த பிரமோக்கள். கடந்த சீஸன்களில் கமலின் உடை வடிவமைப்பை கவனித்துக் கொண்டிருந்த அம்ரிதா ராம்தான் இந்த சீஸனிலும் கலக்கப் போகிறார்.

போட்டியாளர்கள் செய்யும் பிழைகளை சாக்கு வைத்து காரசாரமான, குறும்பான அரசியல் பட்டாசுகளை பற்ற வைப்பதில் கமல் ஒரு விற்பன்னர். தமிழக அரசியலில் பல்வேறு கலாட்டாக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய சூழல் கமலுக்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கும். எனவே இந்த சீஸனிலும் அவரது அரசியல் பகடிகள், சரவெடிகளாக, புஸ்வாணங்களாக, மத்தாப்புகளாக வெடிக்கும் என எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் சமூக விழிப்புணர்வு தொடர்பான அக்கறையையும் காட்டுவார்.

கமலே ஓர் அரசியல்வாதியாக மாறிவிட்ட பிறகு அவரது குரலைக் கவனிப்பவர்கள் கூடியிருக்கிறார்கள். (அது இனான்ய பாஷையில் இருந்தாலும் கூட). அதே சமயத்தில், "இவருக்கா தோணினா... தேர்தல் சமயத்துல அரசியல்ல ஆர்வம் காட்டுவாரு.. அப்புறம் சினிமா மாதிரியே இன்டர்வெல் விட்டுட்டு இந்தியன்-2ல நடிக்கப் போயிடுவாரு... இப்ப பாருங்க. பிக்பாஸ் வந்திருக்காரு!” என்கிற விமர்சனங்களும் இன்னொருபுறம் எழுகின்றன.

கடந்த சீஸனைப் போலவே இந்த சீஸனிலும் கலந்து கொள்ளவிருக்கிற போட்டியாளர்களைப் பற்றிய தகவல்கள் கசிந்திருக்கின்றன. அவை எந்த அளவிற்கு உண்மை என்பது நிகழ்ச்சியின் துவக்க நாளில் (இன்று மாலை 06.00 மணிக்கு) தெரிந்துவிடும்.

ஆனால் வெளிவந்திருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, விஜய் டிவியின் ஆஸ்தான நடிகர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பது போல ஒரு பிரமை ஏற்படுகிறது.

ஒரே மாவை வைத்துக் கொண்டு விதம் விதமான தோசைகளை சுடும் ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் போல, ஒரு குறிப்பிட்ட நடிகர்களை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்வதில் விஜய் டிவியின் சாதனை அளப்பரியது. ஆனால் இன்னொருபுறம் இது பார்வையாளர்களிடையே சலிப்பையும் சமயங்களில் எரிச்சலையும் கிளப்பி விடும்.

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இந்த ஆஸ்தான வித்வான்களே பெரும்பாலும் வந்தால் அது பார்வையாளர்களின் சுவாரஸ்யத்தைக் குறைத்து விடக்கூடும். ஆனால் இன்னொரு பக்கம், ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமே பார்த்து வந்த நபர்களின் வேறொரு பக்கத்தை நாம் அறியும் சுவாரஸ்யத்தையும் தரலாம்.

'பிக் பாஸ்' கமல்
'பிக் பாஸ்' கமல்

கடந்த சீஸன்களுக்கும் இந்த சீஸனுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கப் போகிறது. அது கொரானோ எபெஃக்ட். போட்டியாளர்கள் பதினைந்து நாட்களுக்கு முன்பே பக்காவாக பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

போலவே வார இறுதி நாள்களில் கமல் வரும் தினங்களில் வருகை தரும் பார்வையாளர்களுக்கும் அனுமதியில்லை என்கிறார்கள். எனவே கைத்தட்டல்களும் உடனடி எதிர்வினைகளும் காணாமற் போகலாம். ஆனால் பின்னணி சவுண்ட் எபெக்ஃட்டை வைத்து விஜய் டிவி இந்த விஷயத்தை ஒப்பேற்றி விடக்கூடும்.

பிக் பாஸ் தமிழ் சீஸன் 4, கடந்த மாதங்களிலேயே துவங்கியிருக்கப்பட வேண்டும். கொரானாவால் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. தமிழ் சீஸன் துவங்கப்படும் அதே சமயத்தில் தெலுங்கு சீஸன் 4, செப்டம்பர் மாதமே துவங்கப்பட்டு 28 நாள்களைக் கடந்து கொண்டிருக்கிறது. நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்குகிறார். மூன்றாவது சீஸனையும் இவர்தான் வழங்கினார்.

அதே சமயம், இந்தி வெர்ஷனில் இது 14வது சீஸனை எட்டியிருக்கிறது. அக்டோபர் மூன்றாம் தேதிதான் (நேற்று) இதன் துவக்க நாள். இந்த சீஸனையும் சல்மான்கான்தான் தொகுத்து வழங்குகிறார். இந்த முறையும் கோட்டைக் கழற்றி ஏதாவது கிம்மிக்ஸ் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ஆரவ் - ஓவியா
ஆரவ் - ஓவியா

ஆரவ் - ஓவியா காவியக் காதல், கவின் – லாஸ்லியாவின் கண்ணீர் காதல், தாடி பாலாஜியின் தலையில் குப்பையைக் கொட்டிய சர்வாதிகாரி ஐஸ்வர்யா, “நீ என் இடுப்பைப் பார்த்தே... இல்லே.. நான் பார்க்கலை” என்கிற குஷி படத்தின் காட்சி மாதிரி, “என் இடுப்பைத் தொட்டுட்டாரு” என்று மீரா மிதுனுக்கும் சேரனுக்கும் இடையில் நிகழ்ந்த பஞ்சாயத்து, “அறியா வயசுல தெரியாம தப்பு பண்ணேன்’ என்று வெள்ளந்தியாக சொன்னதாலேயே நிகழ்ச்சியை விட்டு சைலண்ட்டாக வெளியேற்றப்பட்ட சித்தப்பூ, பரணை விட்டுத் தாண்டி தப்பியோட முயன்ற பரணி... என்று பல்வேறு நபர்களை, சம்பவங்களை கடந்த சீஸன்களில் பார்த்து விட்டோம்.

இந்த சீஸன்களிலும் அது போன்ற பரபரப்புகளுக்கும் அலப்பறைகளுக்கும் நிச்சயம் குறைவிருக்காது. 'மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை’ என்பது போல ஹவுஸ்மேட்கள் ‘தேமே’வென்று இருந்தாலும் பிக் பாஸ் அவர்களுக்குள் கோள் மூட்டி குடுமிப்பிடி சண்டையை உத்தரவாதமாக ஏற்படுத்தி விடுவார்.

இந்த கொரானோ நாள்களில் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் நாமே ‘பிக் பாஸ் ஹவுஸ்மேட்களை’ போல்தான் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தோம். ஆனால் ரியாலிட்டி ஷோவிற்காக வீட்டில் முடங்குபவர்களை நாம் இனி வேடிக்கை பார்க்கப் போகிறோம். நமக்கு சம்பளம் போயிற்று. ஆனால் இதற்காகத்தான் அவர்கள் கணிசமாக சம்பளம் பெறப் போகிறார்கள்.

‘கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான். தான் விளையாட. அவை இரண்டும் சேர்ந்து பொம்மை செய்தன... தாம் விளையாட’ என்று கண்ணதாசன் இதைத்தான் பாடி வைத்திருந்தார் போல.

'பிக் பாஸ்' கமல்
'பிக் பாஸ்' கமல்
Hotstar

ஓகே... இனி ஒவ்வொரு நாளும் இந்த சீஸனில் நடக்கவிருக்கும் தரமான சம்பவங்களை, பஞ்சாயத்துக்களை, அலப்பறைகளை தினம் தினம் உங்களுக்கு என் பாணியில் தொகுத்து வழங்கவிருக்கிறேன்.

சரியா இருந்தா தட்டிக் கொடுங்க... தப்பா இருந்தா தட்டிக் கேளுங்க...

திங்கட… தக்கும்... தக்கும்தா. திங்கடதக்கும்... திங்கட… தக்கும்... தக்கும்தா... திங்கடதக்கும்!