Published:Updated:

பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3 முதல்… பாவனி ரெட்டி, பார்வதி நாயர் எனப் போட்டியாளர்கள் லிஸ்ட் ரெடி!

பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவதற்கான தேதியைக் குறித்துவிட்டது விஜய் டிவி. இப்போதைய திட்டப்படி அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் எனத் தெரிகிறது.

'மாஸ்டர் செஃப்', 'சர்வைவர்' என மற்ற சேனல்களின் போட்டி நிகழ்ச்சிகள் ஒருபுறம் என்றால், கடந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கமல் தொகுத்து வழங்கப்போகும் பிக்பாஸ் சீசன் என்பதால் ‘’என்ன பேசப் போகிறாரோ’’ என்கிற எதிர்பார்ப்பு இந்த சீசனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்கிறது டிவி வட்டாரம்.

பிக்பாஸ் முதல் சீசனில் நடிகராக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பில் குடும்பங்களுக்குள் முழுமையாகப் போய் சேர்ந்துவிட்டோம் என்கிற மகிழ்ச்சியில் கட்சி தொடங்கி அரசியல்வாதியானார். இரண்டாவது சீசனில் இருந்து அரசியல்வாதி கமலாக பிக்பாஸ் மேடையை அவ்வப்போது பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கொண்ட கமல்ஹாசன், முதல்முறையாக தேர்தலிலும் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளையும் பெற்று என இந்த நான்கு சீசன்களுக்குள் முழு அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இப்போது மீண்டும் சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார்.

ஓகே... பிக்பாஸுக்கு வருவோம். இந்த பிக்பாஸ் சீசனில் என்னென்ன ஸ்பெஷல் என விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இங்கே!

கமல்ஹாசன் - பிக்பாஸ்
கமல்ஹாசன் - பிக்பாஸ்

* பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவேற்புக்குக் கிடைக்கும் முக்கியக் காரணங்களுள் ஒன்று 'எல்லாரும் கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க' என்கிற கனீர் குரல். பல சீசன்களாக யாருடையது அந்தக் குரல் என எல்லோரும் தேடினார்கள். கடந்த சீசனில் முதன் முறையாக் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான சாஷோவை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியது ஆனந்த விகடன்.

முகம் வெளியில் தெரிந்து விட்டதால் அடுத்த சீசனில் சாஷோ வருவாரா என அப்போதே சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பப் பட்டது. ஆனால் பிக் பாஸ் சீசன் 5-ம் சாஷோவின் குரல்தான் பிக்பாஸின் குரலாக ஒலிக்க இருக்கிறது.

* கொரோனா காரணமாக கடந்த சீசனும் தாமதமாகத் தொடங்கியதில், வடகிழக்குப் பருவமழைக்காலமான அக்டோபர் நவம்பரில் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்க வேண்டி வந்தது. பிக் பாஸ் செட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் சென்னையின் பெரிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட, கடந்தாண்டு வெள்ள நீர் பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்தது. எனவே இந்தாண்டு வெள்ள நீரைத் தடுக்கும் முயற்சியாக வீட்டின் சில அமைப்புகளை மாற்றியிருக்கிறார்கள். மழை நீர் பிக் பாஸ் வீட்டுக்கு வெளிப்புறமாகவே வடிந்து போகும் வகையில் தற்காலிக கால்வாய்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

* வீட்டின் முற்றமான புல்வெளி கிரவுண்டில் ஆங்காங்கே நிழல்குடைகளையும் அமைத்திருக்கிறார்கள் மெல்லிய தூறல் மழை என்றால், போட்டியாளர்கள் அங்கு உட்கார்ந்தபடி மழையை ரசிக்கலாம்.

பாவனி ரெட்டி
பாவனி ரெட்டி
பார்வதி நாயர்
பார்வதி நாயர்

* போட்டியாளர்களாக‌ பலருடைய பெயர்கள் சமூகவலைதளங்களில் அடிபட்டு வருகின்றன. ஏற்கெனவே சிலரது பெயர்களை விகடன் தளத்திலும் வெளியிட்டிருந்தோம். இப்போது கூடுதலாகச் சிலரிடம் பேசியிருப்பதாகத் தெரிகிறது. திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவனுடைய மருமகனும் நடிகருமான ஜான் விஜய் மற்றும் சீரியல் நடிகை பாவனி ரெட்டி இருவருடைய பெயர்களும் இந்த லிஸ்டில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கின்றன. பாவனி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலில் ஹீரோயினாக நடித்தவர்.


* நடிகை பார்வதி நாயர் பெயரும் லேட்டஸ்ட்டாக பிக் பாஸ் போட்டியாளர்களின் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அவரிடம் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு