Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 103: ஷிவின், விக்ரமன் அழுகை வெளிப்படுத்திய சமூக அரசியல்; உஷாரான அமுது, ஏமாந்த மைனா!

பிக் பாஸ் 6 நாள் 103

"இந்த சீசனின் முதல் மிட் வீக் எவிக்ஷன்" என்று புதிய வெடிகுண்டை பிக் பாஸ் வீச, “யப்பா சாமி... சரியான சமயத்துல தப்பிச்சேன்” என்று அமுதுவின் மைண்ட் வாய்ஸ் வெளியே அலறியிருக்கும். ‘வட போச்சே’ என்று மைனாவின் மைண்ட் வாயஸ் கதறியிருக்கும்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 103: ஷிவின், விக்ரமன் அழுகை வெளிப்படுத்திய சமூக அரசியல்; உஷாரான அமுது, ஏமாந்த மைனா!

"இந்த சீசனின் முதல் மிட் வீக் எவிக்ஷன்" என்று புதிய வெடிகுண்டை பிக் பாஸ் வீச, “யப்பா சாமி... சரியான சமயத்துல தப்பிச்சேன்” என்று அமுதுவின் மைண்ட் வாய்ஸ் வெளியே அலறியிருக்கும். ‘வட போச்சே’ என்று மைனாவின் மைண்ட் வாயஸ் கதறியிருக்கும்.

பிக் பாஸ் 6 நாள் 103
‘வெற்றியாளரை அறிந்து கொள்வதைத் தவிர இனி வேறெந்த சுவாரஸ்யமும் இருக்காது’ என்று நேற்று எழுதியிருந்ததை இன்று பிக் பாஸ் சற்று அசைத்துப் பார்த்துவிட்டார். நாடகத்தனமாக இருந்தாலும் ‘மரண பயத்தைக் காட்டிட்டியே பரமா’ என்பது மாதிரி மைனாவின் எவிக்ஷன் சடங்கு நடந்து முடிந்தது.

‘லவ் பண்ணலாமா... வேணாமா’ என்பது மாதிரி குழப்பத்திலேயே இருந்த அமுதவாணன், சட்டென தீர்மானித்து பெட்டியை எடுத்தது ஒரு நல்ல முடிவு. இல்லையென்றால் லிஃப்ட்டில் ஏற்றி இறக்கி வெறுங்கையோடு அனுப்பி வைத்திருப்பார்கள்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

கார்டன் ஏரியாவுக்கு வந்த ஷிவினை, பிக் பாஸ் கௌரவப்படுத்திய விதம் சிறப்பானது. “சாமானியர்களின் பிரதிநிதியாக வந்தீர்கள். ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தீர்கள். நீங்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. முதல் வாரத்திலேயே உச்சத்திற்குச் சென்றவர், பிறகு கீழே இறங்கவில்லை. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் சிங்கப்பெண்ணாக உங்களின் கொடியை நிலைநாட்டினீர்கள். உங்களால் இந்த வீட்டிற்கும், நிகழ்ச்சிக்கும், ஏன்... சமூகத்திற்குமே பெருமை” என்று மனமார கிடைத்த பாராட்டால் கைகூப்பி கண் கலங்கினார் ஷிவின். அவர்களின் சமூகத்தை அவர்கள் உணரும் வகையிலேயே பொதுச்சமூகம் இனியாவது பார்க்கட்டும். அதன் சிறந்த தொடக்கமாக ஷிவின் இருப்பார். பிக் பாஸ் வீட்டில், ஷிவினை எந்தவொரு கணமும் ஒரு சிறந்த பெண்மணியாகத்தான் பார்க்க முடிந்தது. இது அவருக்குக் கிடைத்த பெரிய வெற்றி. மாற்றத்தின் முதல் படி.

பிக் பாஸ் 6 நாள் 103
பிக் பாஸ் 6 நாள் 103

‘சிங்கப் பெண்ணே... சிங்கப் பெண்ணே’ – நெகிழ்ந்த ஷிவின்

பிறகு ஷிவினின் பயண வீடியோ திரையிடப்பட்டது. விதம் விதமான முகபாவங்களுடன் ரசித்து, நெகிழ்ந்து, கைகூப்பி நன்றி சொல்லியபடி அதைப் பார்த்தார் ஷிவின். வீடியோ சிறப்பான முறையில் எடிட் செய்யப்பட்டிருந்தது. “பிக் பாஸ்... உங்க குரல்ல பாராட்டைக் கேக்கறது ஒரு கொடுப்பினை. வெளில என்ன நடக்குதுன்னு தெரியாத சூழல்ல உங்க குரல்தான் ஆதரவா நின்னு வழிநடத்துச்சு” என்று நெகிழ்ந்து நன்றி கூறினார் ஷிவின்.

“இனி நீங்க எங்கயும் ஒடி ஒளிய வேண்டாம். நீங்கள் வெளியில் காலடி எடுத்து வைக்கும் போது பல தாய்மார்கள் உங்களை அவர்களின் வீட்டுப் பெண்ணாக வரவேற்று ஆரத்தி எடுப்பார்கள். ஐ லவ் யூ ஷிவின்” என்று பிக் பாஸ் ஆத்மார்த்தமான குரலில் சொன்னதும் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் வழிய நன்றி சொன்னார் ஷிவின். “கேம் ரிசல்ட் என்னவா இருக்கும்ன்னு எனக்குத் தெரியலை. ஆனா நான் வந்த வேலை முடிஞ்சதுன்னு தோணுது” என்று ஷிவின் சொன்னது நிஜம். ஒருவேளை அவர் டைட்டிலும் வென்றால் இந்தப் பணி முழுமையான வட்டத்தை அடையும்.

வீட்டிற்குள் சென்ற ஷிவின், “அப்படியே ஷேக் பண்ணி தூக்கி உக்கார வெச்ச மாதிரி இருக்கு” என்று வெளியில் கிடைத்த அனுபவத்தை ரச்சிதாவிடம் பரவசத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். ‘க்வீன்சி’ என்று பிக் பாஸ் அழைத்ததும், ‘மைக் சரியாகத்தானே இருக்கிறது?!’ என்று தன்னிச்சையாகப் பார்த்தவரிடம் “உங்கள் நேரம் முடிந்து விட்டது” என்று வெளியே அனுப்பத் தயாரானார் பிக் பாஸ். இதைப் போலவே ஷெரினாவும் மகேஸ்வரியும். (பால் பாக்கெட் பட்ஜெட் அதிகமாயிடுச்சுப்பா!). நள்ளிரவைத் தாண்டியும் ஆந்தை போல் விழித்திருந்து அசல் பாடிய ராப் இசைப்பாட்டு உண்மையிலேயே அட்டகாசம். அத்தனை சிறப்பான வார்த்தைகளை ரகளையாகக் கோத்திருந்தார். இந்த சுவாரஸ்யமான இளைஞர், பிக் பாஸ் வீட்டில் இன்னமும் கூட கூடுதலாக இருந்திருக்கலாம். வம்பு பேசியே வெளியில் அனுப்பிவிட்டார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 103
பிக் பாஸ் 6 நாள் 103

மைனாவுக்கு ஷாக் தந்த அமுதவாணன்

அசல் பாடிய ஸ்டைலைப் போலவே ஒரு ‘ராப்’ பாடலுடன் நாள் 103 விடிந்தது. “பிக் பாஸ்ன்றது என் அஞ்சு வருஷ கனவு. பினாலே வரைக்கும் வந்துட்டேன்” என்று மைனாவிடம் பரவசமாகச் சொல்லிக் கொண்டிருந்த அசிம், “நீயும் நல்லாத்தான் விளையாடினே” என்று பாராட்டினார். ராமின் பூ போட்ட சட்டையை இரவல் வாங்கி அணிந்திருந்த விக்ரமன் ‘செம’ ஸ்டைலாக இருந்தார். "யூத் மாதிரியே இருக்கீங்க” என்று பாராட்டையும் கிண்டலையும் கலந்து வழங்கினார் மைனா.

தொகை 11 லட்சமாக உயர்ந்திருந்தது. அப்போதே அமுதவாணன் முடிவு செய்து விட்டார் போல. “ஷிவின்... நல்லா விளையாடு” என்று விடைபெறும் மோடிற்குச் சென்று விட்டார். வழக்கம் போல் அமுது விளையாடுகிறார் என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் சீரியஸாகவே சென்று அவர் பஸ்ஸரை அழுத்தியவுடன் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். ரச்சிதா திறந்த வாயை மூடாமல் திகைத்து நின்றுவிட்டார். இதில் அதிக அதிர்ச்சியடைந்தவர் மைனாவாகத்தான் இருக்கும். ‘வட போச்சே’ என்கிற மோடில் "அவன் அமுக்கிட்டான்” என்று கூக்குரலிட்டார். ‘ஸ்மார்ட் மூவ்’ என்று பாராட்டினார் சாந்தியக்கா.

“உன்னை மாதிரி ஒரு கடினமான போட்டியாளர் கூட போட்டியிட்டதுல நான் பெருமைப்படறேன்” என்று அசிம் உட்பட பலரும் அமுதுவிற்கு வாழ்த்து சொன்னார்கள். பாத்ரூம் பக்கம் சென்ற அமுது, கேமராவில் தலையை இடித்துக் கொண்டு வலியில் அப்படியே அமர்ந்து விட்டார். இத்தனை நாள்களாக அவர் புழங்கிய இடம்தான் அது. எனவே தவறி இடித்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. அத்தனை மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது. ‘ஃபைனல் மேடையில் நிற்பதா, பெட்டியை எடுப்பதா?’ என்று அவருக்குள் கடந்த சில நாள்களாகவே உளைச்சல் அதிகரித்திருக்கும்.

பிக் பாஸ் 6 நாள் 103
பிக் பாஸ் 6 நாள் 103

வெளியிலிருந்து சொன்னவர்களின் கருத்தை வைத்துப் பார்க்கும் போது ஷிவின், விக்ரமன், அசிம் ஆகிய மூவரும் முன்னணியில் இருக்கிறார்கள். எனவே டைட்டில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு குறைவு. வெறுங்கையோடு செல்வதை விடவும், இத்தனை நாள்கள் கஷ்டப்பட்டதற்குக் குறைந்தபட்சம் பண ஆதாயத்தோடு செல்வதுதான் சிறந்த முடிவு என்று அவர் நினைத்திருக்கலாம். அதே சமயத்தில் வெற்றி மேடையில் நிற்கும் வாய்ப்பை விட்டு விலகுகிறோமே என்கிற வருத்தமும் தோன்றியிருக்கும். இந்த முடிவை எட்டுவதற்குள் அவரின் மனது பல தத்தளிப்புகளில் அலைபாய்ந்திருக்கும்.

உடைந்து வாய் விட்டு அழுத விக்ரமன்

“குறைந்தபட்சம் இந்த பெனிஃபிட்டாவது இருக்கட்டும்னு நெனச்சேன்” என்று அமுது கண்கலங்கி விக்ரமனிடம் சொன்ன போது, விக்ரமன் சொன்ன ஆறுதல் சிறப்பாக இருந்தது. “நீங்கள் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ராஜாவாக இருக்கிறீர்கள். அதிகமா பேசி சிரிக்க வெச்ச நபர் நீங்கதான். எளிய மக்களை சிரிக்க வைக்கும் கலைஞன். நீங்க காமெடியன் இல்லை. ஹீரோ. வெளில உங்களுக்குப் பெரிய வாய்ப்பு இருக்கு” என்று விக்ரமன் ஆத்மார்த்தமாகச் சொன்ன ஆறுதலைக் கேட்டு அமுது நெகிழ்ந்து போனார்.

இதை விடவும் நெகிழ்ச்சியைத் தரக்கூடிய சம்பவம் அடுத்த சில நிமிடங்களில் நடந்தது. “நீங்கள்லாம் இருந்தீங்கன்னா பெரிய மாற்றம் வரும். நீங்க சொல்ற கருத்துக்கள் பல பேரைப் போய்ச் சேரும்” என்று அமுது சொன்னதும் ஒரு நொடி அமைதியாக இருந்த விக்ரமன், சட்டென்று உடைந்து போய் வாய் விட்டு கதறி அழுதார். இந்த வீட்டில் எத்தனையோ அவமதிப்புகளை எதிர்கொண்ட போதும், கமலின் பாராட்டுக்களைக் கேட்ட போதும் விக்ரமன் கலங்கியதில்லை. ஆனால் இந்தவொரு நொடியில் அவர் நிகழ்த்திய அழுகை, நூறு நாள்கள் அவர் அடக்கி வைத்திருந்த உளைச்சலின் பெருவெடிப்பு என்று தோன்றுகிறது.

பிக் பாஸ் 6 நாள் 103
பிக் பாஸ் 6 நாள் 103

'பூமர், கட்டப்பஞ்சாயத்து, ஷவினுக்கு சப்போர்ட் பண்ற, டாஸ்க் விளையாடத் தெரியல, ஜாலியா இருங்க பாஸூ, எல்லாத்துக்கும் நொய் நொய்ன்னு ஏதாவது சொல்லிட்டே இருக்காதீங்க. நாட்டாமையா இருக்காதீங்க’… இது போன்ற எதிர் விமர்சனங்களைத்தான் அவர் வீட்டில் பெரும்பாலும் சந்தித்திருக்கிறார். கமல் மட்டுமே அவ்வப்போது விக்ரமனின் நற்குணங்களைப் பாராட்டி, "வெளில வாங்க நிறைய வேலை இருக்கு” என்று வெளிச்சம் தந்திருக்கிறார்.

விக்ரமனின் சமூகக் கருத்துகள் கூட, ‘ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின்’ பரப்புரையாக மட்டுமே சுருக்கிப் பார்க்கப்பட்டன. ஆனால் சமூகத்தின் பெரிய மாற்றங்களை விக்ரமன் போன்ற சிறிய உளிகளால்தான் மெல்ல மெல்லச் செய்ய முடியும். நூற்றாண்டுகளைக் கோரும் அரிய பணி அது. பொதுநலனுக்காகப் பலத்த எதிர்ப்புகளை ஜீரணித்துக் கொள்ளும் மனவுறுதி படைத்தவர்கள் மிகக் குறைவானவர்கள்.

பிக் பாஸ் 6 நாள் 103
பிக் பாஸ் 6 நாள் 103

அமுதவாணனின் வார்த்தைகளும், அவரைப் பிரியவிருக்கும் துயரமும் விக்ரமனை உடைந்து போகச் செய்திருக்க வேண்டும். வாய் விட்டு அழுத விக்ரமனை, அசிம் உட்படப் பலரும் அரவணைத்துத் தேற்றினார்கள். "நீங்கள்லாம் அழக்கூடாது. கெத்தா இருக்கணும்” என்று அமுதவாணனே பதிலுக்குத் தேற்ற வேண்டியதாகப் போயிற்று. ‘விக்ரமன் யோசிக்கறது வேற’ என்று உணர்வுபூர்வமான அந்தச் சூழலைச் சரியாகப் புரிந்து கொண்டு பேசினார் அசிம். “அமுதா... பிக் பாஸ் பாராட்டும் கிடைச்சது. கெத்தா அமௌண்ட்டும் எடுத்துவிட்டுப் போகப் போற. அழுதீன்னா கொண்டே போடுவேன்’ என்பது போல் செல்லமாக ஷிவின் மிரட்ட, அமுதுவிற்குப் புன்னகை வந்தது.

அதென்னமோ, பணப்பெட்டி எடுப்பவர்களை உடனே வெளியே துரத்தும் அராஜகத்தில் பிக் பாஸ் ஈடுபடுகிறார். குரலில் ஓர் அலட்சியமும் எகத்தாளமும் தெரிகிறது. ‘அமுதா... பெட்டியை எடுத்தாச்சுல... அப்ப பெட்டியைக் கட்டுங்க...” என்று ஆணையிட்டார். “எனக்கு யாரும் ஓரவஞ்சனை பார்க்கலை. டிக்கெட் டு பினாலே டிக்கெட்டை நான் ஜெயிச்ச போது நீங்க எல்லோருமே சந்தோஷப்பட்டீங்க... திருப்தியா வெளியே போறேன்” என்று நெகிழ்ந்து விடைபெற்ற அமுதவாணனுக்கு அனைவருமே மகிழ்ச்சியுடன் விடைதந்தார்கள்.

ஆக. ரூ.11,75,000 (மைனஸ் வரி) தொகையோடு வெளியேறுகிறார் அமுதவாணன். இனியாவது படவாய்ப்புகள் அவருக்குக் குவியட்டும்.
பிக் பாஸ் 6 நாள் 103
பிக் பாஸ் 6 நாள் 103

‘மிட் வீக் எவிக்ஷன்' – கடைசி நேரத்தில் அதிர்ச்சி தந்த பிக் பாஸ்

அனைவரையும் கார்டன் ஏரியாவுக்கு வரச்சொன்ன பிக் பாஸ், இறுதிப் போட்டியாளர்களை மட்டும் தனியாக நிற்க வைத்து ஓர் அதிர்ச்சி வைத்தியம் தந்தார். "இந்த சீசனின் முதல் மிட் வீக் எவிக்ஷன்" என்று புதிய வெடிகுண்டை பிக் பாஸ் வீச, “யப்பா சாமி... சரியான சமயத்துல தப்பிச்சேன்” என்று அமுதுவின் மைண்ட் வாய்ஸ் வெளியே அலறியிருக்கும். ‘வட போச்சே’ என்று மைனாவின் மைண்ட் வாயஸ் கதறியிருக்கும். "என்னடா இது?!” என்று பாக்கியுள்ள மூவரும் திகைத்து நின்றார்கள்.

மைனா வெளியேற்றப்படுவது எளிதில் யூகிக்கக் கூடிய விஷயம்தான். என்றாலும் பிக் பாஸ் கோக்குமாக்கு ஆசாமியாச்சே... என்ன நடக்குமோ என்று அனைவரும் பதறினார்கள். எனவே தனது கிம்மிக்ஸ் டிராமாவை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஒவ்வொருவரையாக அவர் அழைக்க, வந்தவர் லிஃப்ட்டின் வழியாக கீழே இறக்கப்படுவார்கள். மீண்டும் அவர் திரும்பி வந்தால் எவிக்ட் இல்லை என்று அர்த்தம். இதில் ஓரளவிற்காவது கெத்தாக இருந்தவர் அசிம் மட்டுமே. தனக்கு எவிக்ஷன் இல்லை என்கிற தன்னம்பிக்கை அவரிடம் நிறைய இருந்தது. ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ என்று பாட்டுப் பாடியபடியே திரும்பினார்.

ஷிவின் திரும்புவதற்குத் தாமதம் ஆன போது விக்ரமன் உண்மையிலேயே பதறி விட்டார். "அவ சும்மா விளையாடறா” என்று மற்றவர்கள் ஆறுதல் சொன்னாலும் அவர்களின் முகங்களிலும் திகில் தென்பட்டது. இந்த சீசனில் ஷிவினுக்கும் விக்ரமனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நட்பு உன்னதமானதாக இருக்கிறது. ஒருவரையொருவர் மதித்து பிரியம் செலுத்தினாலும் கருத்து முரண்பாடுகளை வெளிப்படுத்தவும் தவறவில்லை. குட்டி டவுசர் போட்டுச் சென்ற ஷிவின் ‘கீழ இருக்கறவன் பாவம்’ என்று குறும்பான கமென்ட்டுடன் படிக்கட்டில் ஏறினார்.

பிக் பாஸ் 6 நாள் 103
பிக் பாஸ் 6 நாள் 103

இரண்டாவது முறை மைனாவை அழைத்த போதே தெரிந்து விட்டது. சில பல விளையாட்டான சஸ்பென்ஸை, திகிலான பின்னணி இசையுடன் காட்டிய பிக் பாஸ், ஒரு கட்டத்தில் மைனாவை மறையச் செய்து விட்டு அவருடைய எவிக்ஷனை அதிகாரபூர்வமாக அறிவித்தவுடன் பலரும் வருத்தப்பட்டார்கள். ஷிவினின் கண்களில் நீர் வழிந்தது. “இந்த எவிக்ஷனே ஒரு மாதிரி சங்கடத்தையும் பயத்தையும் ஏற்படுத்திச்சு” என்று ரச்சிதா சொன்னதைச் சாந்தி வழிமொழிந்தார். மற்றவர்கள் தனியாகச் சென்று கலங்கினார்கள்.

மைனா வெளியேற்றப்பட்டிருக்கிறார். "என்னால ஜாலியாத்தான் இருக்க முடியும். அதான் என் இயல்பு. என்னை என்ன செய்யச் சொல்றீங்க?” என்று கலகலப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தாலும் டாஸ்க், அவசியமான விவாதம் என்று தேவையான பங்களிப்பையும் சரியாகவே தந்தார் மைனா.

பிக் பாஸ் 6 நாள் 103
பிக் பாஸ் 6 நாள் 103
ஆக... இறுதிப்பட்டியலில் இருப்பவர்கள் அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன். ஆறாம் சீசனின் டைட்டிலை வெல்லப் போகிறவர் யார்? ஞாயிறன்று தெரிந்து விடும். இது வெறும் விளையாட்டுதானே என்று சுருக்கிப் பார்க்காமல், சமூகத்தின் முன்னுதாரணமாகவும் இருக்கும்படியாக மக்களின் வாக்குகள் அமையட்டும்.