Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 104: வீழ்வேனென்று நினைத்தாயோ?- அசிம்; அறம் வெல்லும் - விக்ரமன்; நம்பிக்கை - ஷிவின்!

பிக் பாஸ் நாள் 104

“வணக்கம் தல” என்று கவின் பிக் பாஸை கொஞ்ச “வெல்கம் பேக். உங்களுக்கும் பெட்டிக்கும் அப்படி என்ன ராசி?!” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். அவருக்கும் கூட மூன்றாம் சீசனின் கலாட்டாக்கள் இப்போது நினைவிற்கு வந்து பெருமூச்சு விட்டிருப்பார்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 104: வீழ்வேனென்று நினைத்தாயோ?- அசிம்; அறம் வெல்லும் - விக்ரமன்; நம்பிக்கை - ஷிவின்!

“வணக்கம் தல” என்று கவின் பிக் பாஸை கொஞ்ச “வெல்கம் பேக். உங்களுக்கும் பெட்டிக்கும் அப்படி என்ன ராசி?!” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். அவருக்கும் கூட மூன்றாம் சீசனின் கலாட்டாக்கள் இப்போது நினைவிற்கு வந்து பெருமூச்சு விட்டிருப்பார்.

பிக் பாஸ் நாள் 104
நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த ஓர் ஆட்டம், இன்றோடு முடிவிற்கு வரப்போகிறது. இது ஒரு ரியாலிட்டி ஷோதான்; கேம் ஷோதான். ஆனால் இது வெறும் விளையாட்டல்ல. சமூகத்தின் ஒரு துண்டு மீது நிகழ்த்தப்படும் நுட்பமான பரிசோதனை. ஒரு அடைக்கப்பட்ட சூழலில், அந்நிய மனிதர்களுடன் ஒருவர் இணக்கமாகவும் சகிப்புத்தன்மையுடனும் வாழ முடியுமா என்பதுதான் இந்த விளையாட்டின் அடிப்படையான சவால்.

வெறும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்துபவர்கள் தற்காலிகமான கவனத்தை மட்டுமே ஈர்க்க முடியும். மாறாக, நேர்மையான சகிப்புத்தன்மையுடன் இதர போட்டியாளர்களுடன் பழகியவரே உண்மையான வெற்றியாளர். மற்றபடி மக்களின் வாக்கை, மகேசனின் வாக்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

வாரஇறுதி எபிசோடுகள் என்றாலே கமல் வருவார் என்பது பழகி விட்டதால் அதே எண்ணத்துடன் அமர்ந்து பிறகு தெளிய வேண்டியிருந்தது. இறுதி நாளில் அதிக விளம்பரங்களுடன் கமல் வருவார். எனவே இன்றைக்கு அவர் விடுமுறை என்பது பிறகுதான் உறைத்தது. இந்த எபிசோடில் பெரிதாக ஒன்றுமில்லை. இறுதிப்போட்டியாளர்கள் மக்களிடம் வாக்கு சேகரிப்பதும், ஒப்பனை செய்து கொள்வதும் என பொழுது கழிந்தது. போட்டியாளர்களைப் போலவே, பார்வையாளர்களுக்குள்ளும் ஒரேயொரு கேள்விதான் பிரமாண்டமாக அலைமோதிக் கொண்டிருக்கும்?... ‘யார் அந்த வெற்றியாளர்?’

ஷிவின் - ரச்சிதா
ஷிவின் - ரச்சிதா

கார்டன் ஏரியாவிற்கு வந்தார் அசிம். ஹீரோ என்ட்ரி காட்சி மாதிரி கைகளை அகல விரித்து நின்றார். புகைப்படங்களை ரசித்துப் பார்த்தார். நண்பர்களை நினைவு கூர்ந்தார். பிக் பாஸின் குரல் கேட்டது. “தனியாகத்தான் இந்த ஆட்டத்தை ஆட வந்தேன் என்று சொல்லி, ஒட்டுமொத்த வீடும் எதிர்த்து நின்றாலும் துணிச்சலாக ஆடி மக்களின் மனதை வென்றுள்ளீர்கள். கடுமையான போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டு இறுதி வாரத்தை எட்டியுள்ளீர்கள். தனியாக நின்ற சமயத்திலும் தன்னம்பிக்கைதான் துணை நின்றது. கடும் சொற்கள் வெளிப்பட்டாலும் திருத்திக் கொள்ளும் முனைப்பு இருந்தது. உள்ளே சோகம் இருப்பவர்களுக்குத்தான் கோபம் அதிகம் வரும் என்பார்கள். உங்களின் அந்தச் சோகங்கள் தீரட்டும்” என்கிற ஆத்மார்த்தமான சொற்களைக் கேட்டு தன்னிச்சையாக கண்கலங்கிய அசிம், ‘ஐ லவ் யூ பிக் பாஸ்” என்று மனதார நன்றி சொன்னார்.

‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ – அசிமின் ‘பன்ச்’ டயலாக்

பிறகு அசிமைப் பற்றி பயண வீடியோ ஓடியது.. ஓடியது.. ஓடிக் கொண்டேயிருந்தது. பிறகு வந்த விக்ரமனுக்கும் இப்படியே. “வீட்டுக்குள்ள சிலர் என்னை வெறுத்தாலும் வெளில என்னை கோடி பேர் லவ் பண்ணுவாங்க” என்று தான் சொன்ன பன்ச் டயலாக்கை வீடியோவில் கேட்டு தானே மகிழ்ந்தார் அசிம். “நன்றி பிக் பாஸ். எடிட்டிங் டீமிற்கு நன்றி. படம் பார்த்த மாதிரி இருந்தது. 13 வருஷம் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தாலும், ஒரு சில பேர்களுக்கு மட்டுமே தெரிந்த என் பெயரை உலகத்திலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் தெரிய வெச்சிட்டீங்க. சினிமால மிகப் பெரிய நடிகனா வர்றதுக்கு இந்த மேடையைப் பயன்படுத்திக்குவேன்” என்ற அசிம் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” என்று தார்மீக கோபத்துடன் பாரதி பாடியதை, ‘பன்ச் டயலாக்’ போல ஸ்டைலாக சொல்லி விட்டு, ‘எளிய தாயின் மகன் அசிமின் நன்றி' என்று இத்தனை வாரம் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொன்னார்.

அசிம்
அசிம்

அடுத்ததாக வந்தவர் விக்ரமன். இவரும் புகைப்படங்களையும் நினைவுச் சின்னங்களையும் நெகிழ்ச்சியுடன் சுற்றிப் பார்த்து விட்டு குடை ராட்டின காமிராவிற்கு ஸ்டைலாக போஸ் கொடுத்தார். பிக் பாஸின் வாழ்த்துரை கேட்டது. `அறம் வெல்லும்’ என்கிற சொல்லுடன் வீட்டுக்குள் வந்த நீங்கள், கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல், நெறி தவறாமல் செயல்பட்டீர்கள். எந்தத் தவறு கண்ணில் பட்டாலும் தன்மை மாறாமல் தட்டிக் கேட்டீர்கள். டாஸ்க்குகளை போட்டி மனப்பான்மையுடன் ஆடினீர்கள். சக மனிதரை மதிக்கத் தெரிந்த தோழரே. உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள்” என்று சொல்லப்பட்டதும் நெகிழ்ச்சியடைந்த விக்ரமன் “இனிமே உங்களை தோழர்ன்னு கூப்பிடறேன்” என்று பரவசப்பட்டார். இவரின் வீடியோவும் நீண்ட நேரத்திற்கு ஓடியது. ‘எளிய மக்களின் குரலும் ஒலிக்கிற வகையில், இத்தனை பெரிய மேடையில் வெளிச்சம் தந்திருக்கிறீர்கள். இதுவொரு புரட்சி. அறம் வெல்லும்” என்று கையை உயர்த்தி நெகிழ்ந்த விக்ரமனிடம் “இதென்ன புரட்சி? நீங்கள் வெளியில் சென்ற பிறகு நிகழ்த்தப் போகும் புரட்சிகளை காண ஆவலாக இருக்கிறேன். ஆல் தி பெஸ்ட்’ என்று வாழ்த்தினார் பிக் பாஸ்.

மக்களிடம் வாக்கு சேகரித்த போட்டியாளர்கள்

நாள் 104 விடிந்தது. “அமுது வெறுங்கையோட போயிருந்தா ரொம்ப வருத்தப்பட்டிருப்பான். அந்த அளவிற்கு அவன் விளையாண்டான். மைனா –ன்னா ஈஸியா எடுத்துப்பா” என்று ரச்சிதாவும் ராமும் சொல்ல, “அவளுக்கும் வருத்தம் இருக்கத்தான் செய்யும்” என்றார் சாந்தி. தன்னைப் பற்றி சமூகவலைத்தளங்களில் வந்த கமெண்ட்கள் பற்றிய வருத்தம் நிவாவிற்கு இன்னமும் இருக்கிறது. “என்னாலதான் அசல் வெளியே போனாருன்னு அசிம் நெனச்சிட்டு இருக்காரு. ‘வெளிய வந்து பாருங்கன்னு சொன்னேன்” என்று ஆயிஷாவிடம் வருத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார் நிவா. வம்பு பேசும் நோய்க்கூறுத் தன்மையை பிரதான பொழுதுபோக்காக வைத்திருப்பவர்கள், சிறிய அவல் கிடைத்தாலும் விடமாட்டார்கள். பிக் பாஸ் போன்ற சோளப்பொறி கிடைத்தால் விட்டா வைப்பார்கள்? மென்று தீர்த்து விடுவார்கள். இது போன்றவற்றை காலால் உதறி விடப் பழகுவதே நல்லது.

நிவா
நிவா

இறுதிப் போட்டியாளர்கள் மூவரும் காமிராவிற்கு முன்னால் வந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார்கள். முதலில் வந்தவர் அசிம். “உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இத்தனை வாரம் வாக்களிச்ச உங்களுக்கு நன்றி. இந்த வீட்டில் யாரைப்பற்றியும் நான் பின்னாடி பேசியதில்லை. எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேரா சொல்ற தைரியம் எனக்கு இருந்திருக்கு. கெட்ட வார்த்தை பேசினதில்லை. யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை. கோவத்துல பேசியதெல்லாம் வெறுப்பால் உமிழ்ந்தவை அல்ல. அந்தத் தவறை உணர்ந்துட்டு திரும்பப் பெற்றிருக்கேன். மன்னிப்பு கேட்டிருக்கேன். உங்க கிட்ட உரிமையா கேக்கறேன். உங்க வீட்டுப் பிள்ளையா நெனச்சு எனக்கு வாக்களிச்சு வெற்றியடைய வைங்க....

கொரானோ சமயத்தில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு ஏற்கெனவே உதவி செஞ்சுட்டு வரேன். பல பேருக்கு இந்த விஷயம் தெரியாது. மேற்கொண்டு செய்ய எனக்கு நிதி உதவி போதாது.. இதில் வெல்லும் பணத்தில் பாதியை (25 லட்சம்) பொதுநிதியாக வைத்து மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்துவேன். எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நான் திமிறி எழும் தமிழன். நம்பிக்கையோடு விடைபெறுகிறேன். நன்றி” என்று வாக்கு சேகரித்தார் அசிம். (அந்த நிதியுதவி மேட்டரை தவிர்த்திருக்கலாமோ.. தேவையில்லாத சென்டியை வம்படியா சேர்த்த மாதிரி இருக்கு!).

‘அறம் வெல்லும்’ – கைகளை உயர்த்தி முழங்கிய விக்ரமன்

அடுத்து வந்தவர் ஷிவின். எவ்வித மிகையுணர்ச்சியும் நாடகத்தனமும் இல்லாமல் இயல்பான மொழியில் மக்களிடம் கோரிக்கை வைத்தார். “எவ்வித பின்புலமும் அனுபவமும் இல்லாமல் இந்த ஷோவிற்கு வந்தேன். சாமானியர்களின் அடையாளம் நான். வெளிச்சத்தை எதிர்பார்த்து காத்திருக்கிற ஒரு சமூகத்தின் அடையாளமும் கூட. உண்மையும் யதார்த்தமும் என்னோட செயல்பாடா இருந்தது. எதுவும் திணிப்பா இல்லை. இந்த விளையாட்டிற்கு முழுமையான உண்மையாக இருந்திருக்கேன். அந்த நம்பிக்கையோட கேட்கறேன். என்னை ஜெயிக்க வைங்க” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

விக்ரமன்
விக்ரமன்

‘அறம் வெல்லும்’ என்கிற முழக்கத்துடன் தனது உரையை முடித்த விக்ரமனின் பேச்சு நீண்டதாக இருந்தாலும் ஆத்மார்த்தமானதாக இருந்தது. “மக்களாகிய உங்களை நம்பித்தான் இந்த வீட்டிற்குள் வந்தேன். இந்தத் துறையில் எனக்கு பெரிதாக அனுபவம் இல்லை. என்னோடது பணபலமோ, அதிகார பலமோ கொண்ட குடும்பம் அல்ல. எளிய குடும்பம். நான் பேசுகிற கொள்கைகளை வாழ்ந்து காட்டணும். சொல்லும் செயலும் ஒன்றா இருக்கணும்ன்ற நம்பிக்கை கொண்டவன் நான். பொதுவா பத்திரிகைத்துறைல இருக்கறவங்க, இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டாங்க. கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளணும்ன்னு தயங்குவாங்க. அது போன்ற அச்சத்தை உடைச்சுட்டு இங்க வந்திருக்கேன்...

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

என்னோட கொள்கைகளை நம்பித்தான் வந்திருக்கேன். மனிதனை மனிதனா மதிக்கணும். யாரும் யாருக்கும் கீழானவனும் இல்ல, மேலானவனும் இல்ல. எல்லோரும் சமம்தான். என் கண்ணியத்தை எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை. மற்றவர்களின் கருத்துக்களோடுதான் முரண்பட்டிருக்கிறேன். அவர்களோடு அல்ல. நட்போடும், மனச்சாட்சியோடும் முழுமையா இந்த ஆட்டத்தை ஆடியிருக்கேன். என் விளையாட்டின் மூலமா உங்களுக்கு ஒரு கணம் கூட முகச்சுளிப்பு ஏற்பட்டிருக்காது. விக்ரமன் என்கிற தனிநபருக்கு அல்ல, ஒரு கொள்கைக்கு, சித்தாந்தத்திற்கு ஆதரவு கொடுங்க.. ‘யாதும் ஊரே’ன்றதுதான் தமிழர்களின் அறம். உங்கள் வீட்டுப் பிள்ளையா நெனச்சு எனக்கு வாக்களிங்க” என்று கைகூப்பி வேண்டினார் விக்ரமன்.

வீட்டுக்குள் வந்த மூன்றாவது சீசன் கவின்

‘தமிழன்’ என்கிற அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தும் அசிமை விடவும் ‘மனிதன்’ என்கிற அடையாளத்தை முன்னே வைக்கும் விக்ரமனின் பேச்சு முற்போக்கானதாக இருக்கிறது. ‘யாவரும் எங்களின் உறவினர்’ என்று உலகத்தையே தன் குடும்பமாகவும் உறவாகவும் பார்க்கும் பரந்து பட்ட பார்வைதான் தமிழர்களின் கலாசாரம். ஒரு மாநில எல்லைக்குள் சுருங்கி விடுவதல்ல. எந்தவொரு காரணத்தையும் முன்னிட்டு இன்னொரு மனிதனை கீழே இறக்குவதோ, தன் தரப்பின் பெருமிதத்தை மிகைப்படுத்துவதோ மனிதமல்ல. ஏனெனில் இனம், சாதி, மதம், எல்லைக்கோடு எல்லாம் பிறகு உருவான கற்பிதங்கள் மட்டுமே.

பிரதான வாசலில் இசை ஒலித்தது. கடைசி நேரத்தில் யார் இந்த புது விருந்தாளி என்று பார்த்தால்.. அட! நம்ம கவினு.. ஹீரோ என்றால் தாடி லுக்கில்தான் இருக்க வேண்டும் போல. அவருடைய புதிய திரைப்படத்திற்கான அறிமுகத்தை பிக் பாஸ் வீட்டில் நிகழ்த்த வேண்டும் என்பதற்காக நாயகி அபர்ணாவுடன் வந்திருந்தார். “வணக்கம் தல” என்று கவின் பிக் பாஸை கொஞ்ச “வெல்கம் பேக். உங்களுக்கும் பெட்டிக்கும் அப்படி என்ன ராசி?!” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். அவருக்கும் கூட மூன்றாம் சீசனின் கலாட்டாக்கள் இப்போது நினைவிற்கு வந்து பெருமூச்சு விட்டிருப்பார். ஆம், என்னவொரு ஜாலியான சீசன் அது?!

கவின்
கவின்

கவின் நடித்திருக்கும் புதிய திரைப்படத்தின் பாடலும் டீஸரும் அறிமுகப்படுத்தப்பட்டது. படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிற வகையில்தான் டீஸர் இருந்தது. டாஸ்மாக் பாடல்களை தமிழ் சினிமா கைவிடுவதற்கு நீண்ட காலம் ஆகும் போல. பாடலின் இடையில் சர்ப்ரைஸ்ஸாக வந்து மகிழ்ச்சிப்படுத்தினார் சாண்டி மாஸ்டர். “இப்பத்திய டிரெண்டிற்கு ஏத்த மாதிரி இருக்கு” என்று அனைவரும் பாராட்டினார்கள். “அதுல கதைன்னு பார்த்தா கொஞ்சமாத்தான் இருக்கு. அதையும் சொல்ல வெச்சிடாதீங்க” என்று சுயபகடி செய்து கொண்டார் கவின்.

அவர்களோடு சேர்த்து வீட்டில் தங்கியிருந்த முன்னாள் போட்டியாளர்களையும் ஒட்டுமொத்தமாக பார்சல் கட்டி வெளியே அனுப்பினார் பிக் பாஸ். ‘லவ் யூ சொல்லுங்க பிக் பாஸ்.. அப்பத்தான் கிளம்புவோம்’ என்கிற கோரிக்கையுடன் கண்கலங்க அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள். ‘பிக் பாஸ்..தம்பி. உடம்பைப் பார்த்துக்கப்பா.. புதன், சனி. எண்ணைய் தேய்ச்சுக் குளிப்பா” என்று பாசம் காட்டினார் சாந்தியக்கா.

இறுதி வெற்றியாளர் யார்?

“யாராவது இருக்கீ்ங்களா.. ரொம்ப அமைதியா இருக்கு.. பயமா இருக்கு” என்று புதுப்பேட்டை ‘தனுஷ்’ மாதிரி சைலண்ட்டாக அமர்ந்திருந்த மூவரிடமும் “இந்த அமைதியை நல்லா உள்வாங்கி யோசியுங்க. முந்தைய சீசன்களில் ஒரு மணி நேர நிகழ்ச்சியை மட்டும்தான் மக்கள் பார்த்தாங்க. ஆனா இந்த சீசனில்தான் 24 மணி நேரமும் அவங்க உங்களை பார்க்க முடிஞ்சது. உங்களை மதிப்பிடுவதற்கு அது உதவியா இருந்திருக்கும். இத்துடன் அந்த ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறது. ஏதாவது சொல்லணும்னா இப்பச் சொல்லுங்க” என்று பிக் பாஸ் எடுத்துக் கொடுத்தார்.

நிவா
நிவா

இருபத்து நான்கு மணி நேரமும் போட்டியாளர்களைக் கவனிக்கக்கூடிய வாய்ப்பு இந்த சீசனில் (அல்டிமேட்டிலும் இருந்தது) இருந்தாலும் எடிட்டிங் டீம் தொகுத்துத் தருகிற கோணங்களில் மட்டுமே நாம் பார்க்க முடியும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காட்டப்படாத இடைவெளிகளை சரியாக யூகித்து நிரப்பிக் கொள்வதின் மூலம்தான் தெளிவான சித்திரத்தை நாம் அடைய முடியும். போட்டியாளர்களை மதிப்பிட முடியும்.

ஷிவின், அசிம், விக்கிரமன் ஆகிய மூவரும் இந்த விளையாட்டிற்காக தாங்கள் பங்களித்ததைப் பற்றியும் அதற்கு முழு நேர ஒளிபரப்பு உதவிகரமாக இருந்தததைப் பற்றியும் பேசி அமர்ந்தார்கள். ‘இதுவரை எனக்கு ஒத்துழைப்பு தந்ததற்கு நன்றி’ என்றார் பிக் பாஸ்.

மறுபடியும் அதேதான். போட்டியாளர்களைப் போலவே, பார்வையாளர்களுக்குள்ளும் ஒரேயொரு கேள்விதான் பிரமாண்டமாக அலைமோதிக் கொண்டிருக்கும்... ‘யார் அந்த வெற்றியாளர்?’

ஷிவின்
ஷிவின்

ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் இன்று மாலை அதற்கான விடை தெரிந்து விடும். நேர்மையும் கடும் உழைப்பும்தான் எப்போதும் வெல்ல வேண்டும். அந்த நம்பிக்கையோடு காத்திருப்போம். இதில் வெளியாகும் முடிவு என்பது ஏதோ இந்த விளையாட்டின் வெற்றி தோல்வியை மட்டும் முடிவு செய்யும் சாதாரண விஷயம் மட்டுமல்ல. நம் சமூகத்தின் மனோபாவத்தை பிரதிபலிக்கக்கூடிய அடையாளமாகவும் அது இருக்கும்.

யாரை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம்மையும் நாம் வெளிக்காட்டிக் கொள்கிறோம். அந்தப் பொறுப்போடு மக்களின் வாக்கு இருக்கும் என்கிற நம்பிக்கையோடு இறுதி வெற்றியாளரை இன்றிரவு அறிந்து கொள்வோம்.