இந்த வார எவிக்ஷன் பட்டியலில் டாப் 5 இடத்தைப் பிடித்திருப்பவர் அசிம். அவரின் நடத்தையை சக ஹவுஸ்மேட்ஸ்களில் பலர் மன்னிக்கத் தயாராக இல்லை. திங்கட்கிழமை என்றாலே அந்நியன் போல கேரக்ட்டர் மாறுவது பிக் பாஸ் வீட்டின் நீண்ட கால மரபு. ஏனெனில் அன்று நாமினேஷன் நாள்.

எனவே அசிமின் நடவடிக்கையிலும் மாற்றம் தென்பட்டது. சமர்த்தாக வெங்காயம் வெட்டித் தருகிறார். பூண்டு உரித்துத் தருகிறார். ‘தம்பி. அண்ணாச்சி கடைக்கு போய் நூறு கிராம் கடுகு வாங்கிட்டு வா” என்றால் கூட ‘டுர்...’ ரென்று வாயால் வண்டி ஓட்டிக் கொண்டு போவாரோ என்னுமளவிற்கு சின்னப் பிள்ளையாக மாறி விட்டார். இது இப்படியே தொடருமா அல்லது வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறுமா?
நாள் 22-ல் நடந்தது என்ன?
முன்கோபம் வருகிற நபராக இருந்தாலும், அந்த வீட்டில் ஒரு சிறிய கலகவாதியாக தனம் இருப்பது நன்று. எதுவாக இருந்தாலும் தன் சொந்தக் கருத்துக்களை துணிச்சலாக உதிர்க்கிறார். சிலரைப் போல சேஃப் கேம் ஆடுவதில்லை. இதில் இருந்து கதிரவன் போன்றவர்கள் கற்றுக் கொள்ள பாடம் இருக்கிறது.
அமுதவாணன் தலைமையில் ஒரு அணி புறணி பேசிக் கொண்டிருந்தது. ‘ஆயிஷாவும் ஷெரினாவும் தங்கள் உடல்நிலையை வைத்து நாடகம் ஆடுகிறார்கள்’ என்கிற சந்தேகத்தை அவர்கள் வலுவாக பதிவு செய்து கொண்டிருந்தார்கள். ‘ஷெரினாவாவது திருந்திடுவா. ஆயிஷா திருந்த மாட்டா’ என்று தனலஷ்மி சொல்கிற தீர்ப்புடன் இந்த பட்டிமன்றம் முடிந்தது.

‘பிரிவுத் துயரத்தின் பிதற்றல் நாடகம்’
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட ஆசாமி போல கிச்சன் தடுப்பின் பின்னால் அமர்ந்து தனியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார் நிவா. கண்களில் நீர். முகத்தில் துயரம். பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது. பின்பு தனிமையில் அமர்ந்து காமிராவைப் பார்த்து நிவா நிகழ்த்திய அந்த உரையாடலை ‘பிரிவுத் துயரத்தின் பிதற்றல்’ என்கிற தலைப்பில் நடந்த நாடகம் என்றே சொல்லி விடலாம்.
“இந்த வீட்டில் தப்பு பண்ணினவன்லாம் இன்னமும் இருக்காங்க. அசலை ஏன் எலிமினேட் பண்ணீங்க பிக் பாஸ்? எனக்குப் புரியல. காலைல எழுந்தவுடனே உன் முகத்தைத்தான் பார்ப்பேன்.. எனக்கு ஒண்ணுன்னா அசல்தான் முதல்ல ஓடி வருவான்..நான் முழுசா சந்திரமுகியா மாறிட்டு இருக்கேன்.. என் உணர்வு யாருக்கும் புரியல. ‘இதெல்லாம் பெரிய விஷயமா?’ன்னு உபதேசம் செய்யறாங்க.. அவங்களுக்குப் புரியல.. டேய் வசந்த். உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். உன் சட்டையை எடுத்து வெச்சுக்கிட்டேன்.. ஸாரி..’ என்றெல்லாம் அனத்திக் கொண்டிருந்தார் நிவா.

நிவாவின் இந்த உரையாடலை வெறும் ‘உளறல்’ என்று புறந்தள்ளி விட முடியாது. ஒருவரின் அரவணைப்பிற்காகவும் அன்பிற்காகவும் பல இளம்பெண்கள் ஏக்கத்தை உள்ளே தேக்கி வைத்திருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் இது. எனவேதான் ஒரு ஆண் பாவனையாக கூட தன் சிறிய அன்பை தந்தவுடன் ஒட்டுமொத்தமாக அவனிடம் சரண் அடைந்து விடுகிறார்கள். இதற்காக பின்னால் அவர்கள் எதிர்கொள்ளப் போகிற பிரச்சினைகள் ஏராளம். சில ஆண்களும் இந்த உணர்வை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சற்று அறிவுபூர்வமாக சிந்தித்தால் இப்படிப்பட்ட சிக்கல்களில் பெண்கள் விழாமல் இருக்க முடியும்.
‘ராபர்ட் – ரச்சிதா’ – இன்னொரு விசித்திரமான டிராக்
‘ஆலுமா டோலுமா’ என்கிற சென்ற நூற்றாண்டுப் பாடலுடன் நாள் 22 விடிந்தது. ராபர்ட் மற்றும் ரச்சிதாவிற்கும் இடையே ஒரு விசித்திரமான டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது. ‘ரச்சிதாவின் அழகிற்கு நான் ரசிகன்’ என்பதை பொதுவிலேயே தெரிவித்து விட்டார் ராபர்ட். தனிமையில் தெரிவித்து அசடு வழியவில்லை. இவ்வகையான ஆண்கள் ஆபத்து குறைந்தவர்கள். ‘அழகாய் இருக்கிறாய்.. பயமாய் இருக்கிறது’ என்கிற பாணியில் தூரமாக நின்று தன் விளையாட்டை ஆடுகிறார் ராபர்ட்.

“நீ அழகாக இருக்கிறாய்’ என்று ஒரு ஆணால் சொல்லப்படுவது எந்தப் பெண்ணுக்கும் மெல்லிய போதை தருகிற விஷயம்தானே?! எனவே ரச்சிதாவிற்கும் ராபர்ட் மீது ஒரு மெல்லிய சாஃப்ட் கார்னர் இருக்கிறது. தன் அழகை ஆராதனை செய்யும் பக்தனுக்கு தேவதை தரும் சிறிய பரிசு இது. இந்தப் பரிசு எப்போது வேண்டுமானாலும் விலக்கிக் கொள்ளப்படலாம் அல்லது அடுத்தக் கட்டத்திற்கும் நகரலாம்.
ரச்சிதா இருக்கப் போகும் கிச்சன் டீமில் தானும் வர விரும்புகிற ஆர்வத்தை ராபர்ட் தெரிவிக்க “நீங்க வரப்போறீங்களா?” என்று மெலிதான அதட்டலுடன் ரச்சிதா கேட்டதற்கே ராபர்ட் பயந்து ரிவர்ஸ் கியர் போட்டு விட்டார். ‘உங்களுக்கு ஓகேன்னா வரேன்’ என்று பிறகு சரணாகதி அடைந்தார். பிறகு ராபர்ட் தந்த சாக்லேட்டை ரச்சிதா ஒரு சிறிய பந்தாவுடன் ஏற்றுக் கொண்டார். ஷிவின் இதைக் கிண்டலடித்தார்.
பிக் பாஸ் வீட்டில் நூறாண்டுகளாக தொடரும் முட்டை பஞ்சாயத்து
இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி ஆரம்பித்தது. மணிகண்டன், குயின்சி, நிவா ஆகிய மூவரும் இதில் பங்கேற்றார்கள். சிவப்பு நிற திரவத்தை கையில் ஏந்தி சில தடைகளைக் கடந்து எதிரில் வைக்கப்பட்டிருக்கும் குழாயில் நிரப்ப வேண்டும். யார் முதலில் அதிகம் நிரப்புகிறாரோ அவரே தலைவர். குயின்சி கடினமான போட்டியாக இருந்தாலும் இதில் மணிகண்டன் வெற்றி பெற்றார். பிறகு வீட்டின் பணிகளைச் செய்யும் அணிகள் பிரிக்கப்பட்டன. வழக்கம் போல மெலிதான மறுப்புகளும் அரைச்சம்மதங்களும் இந்தச் சடங்கில் நடந்தன.
முட்டைகளின் எண்ணிக்கை தொடர்பான பஞ்சாயத்து பிக் பாஸ் வீட்டில் நடப்பதென்பது முதல் சீசனில் இருந்தே நடக்கும் ஆதிகாலத்து சமாச்சாரம். (கணேஷ் வெங்கட்ராமன் நினைவிற்கு வருகிறாரா?!) “எல்லோருக்கும் முட்டை சமைச்சு தரணும். உன் கிட்ட இருக்கறதை கொடேன்” என்று தனலஷ்மியிடம் ஷிவின் கோரிக்கை வைக்க, “மாத்தேன்.. போ” என்று செல்லமாக மறுத்துக் கொண்டிருந்தார் தனம்.

அடுத்ததாக நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. தலைவரான மணிகண்டன், ஃப்ரீ ஜோனிற்குத் தேர்வான அமுதவாணன், ராம், ராபர்ட் ஆகியோரை நாமினேட் செய்ய முடியாது. (ராம், ராபர்ட், ரஹீம் என்று ஆர்டர் இருந்திருந்தால் சினிமா டைட்டில் போல் ஆகியிருக்கும்!). முதலில் சென்ற தனலஷ்மியிடம், வாக்கு கேட்கும் அரசியல்வாதி போல பெரிய கும்பிடாக போட்டு அனுப்பி வைத்தார் அசிம். (அந்த பயம் இருக்கணும்!).
‘அசிமின் நடத்தையும் ஆட்சேபகரமான பேச்சும் சரியில்லை. மற்றவர்களை இன்ப்ளூயன்ஸ் செய்கிறார்’ என்கிற காரணத்தைச் சொல்லி சிலர் நாமினேட் செய்தார்கள். ‘கமல் சார் முன்னாடி அவமரியாதையா பேசிட்டாங்க’ என்று சொல்லி ஆயிஷாவை சிலர் நாமினேட் செய்தார்கள். ‘சட்டுன்னு அழறாங்க.. உடம்பு சரியில்லைன்னு அடிக்கடி டிராமா ஆடறாங்க’ என்பதும் ஆயிஷா மீது சொல்லப்பட்ட கூடுதல் காரணங்கள்.

‘என்னை அப்படி போர்ட்ரே பண்ணாதீங்க’ என்று கமல் முன்பு ஆயிஷா சொன்னது சிறுபிள்ளைத்தனமானதுதான். ஆனால் அது மிகையாக உணர்ச்சிவசப்பட்டதில் நிகழ்ந்த விபத்து. அதைக் காரணமாக சொல்லியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. ‘ஒதுங்கியே இருக்கிறார்.. சேஃப் கேம் ஆடுகிறார்’ என்கிற காரணம் கதிரவனுக்குச் சொல்லப்பட்டது. இது ஒரு நல்ல எச்சரிக்கை.
ஹவுஸ்மேட்ஸ்களை கோத்து விட்ட பிக் பாஸ்
நாமினேஷன் சடங்கு முடிந்ததும், ஹவுஸ்மேட்ஸ் சொன்ன காரணங்களை மட்டும் பொதுவில் சொல்லி கோத்து விட்டு பிறகு பட்டியலை அறிவித்தார் பிக் பாஸ். இது வழக்கமாக அவர் ஆடும் திருவிளையாடல்தான். ஆக.. இந்த வார எவிக்ஷன் பிராசஸ் பட்டியலில் இடம் பெற்றவர்கள். அசிம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன் மற்றும் ஷெரினா.

தன் பெயர் வந்ததில் விக்ரமனுக்கு மட்டுமல்ல, இதர சிலருக்கும் ஆச்சரியம்தான். பட்டியல் சிறியதாக இருந்ததால் ‘ஹப்பாடா.. நாம எஸ்கேப்’ என்று பலரும் மகிழ்ந்தார்கள். ‘நாமினேஷன்னா என்னங்கய்யா?’ என்று முதல் சீசனில் கஞ்சா கருப்பு கேட்டதைப் போல ‘Manipulation-ன்ன என்ன?’ என்று விக்ரமனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் மைனா. பிக் பாஸ் பட்டியலிட்ட காரணங்களை வைத்து ‘யார் யாராக இருக்கும்’ என்கிற யூக விளையாட்டு மூலைக்கு மூலை வீட்டில் நடந்து கொண்டிருந்தது. ‘ஹெல்த்தை காரணம் காட்டறாங்க’ என்பது தனக்கான அம்பு என்பதை ஷெரினா எளிதாக புரிந்து கொண்டார். இதைப் போலவே தனக்கான அம்புகளையும் ஆயிஷா எளிதில் புரிந்து கொண்டார். (இதெல்லாம் கரெக்ட்டா புரிஞ்சுடுமே?!).
‘மாமனுக்கு கஞ்சி மட்டும்தான் ஊத்துவியா புள்ள?!’
ராபர்ட் மற்றும் ரச்சிதாவிற்கும் இடையே இன்னொரு டிராமா நடந்தது. காமெடியும் சென்டியும் கலந்த டிராமா அது. இந்த வாரத்திற்கான கிச்சன் டீமின் தலைவி ரச்சிதா. அவர் தயார் செய்யப் போகும் உணவை சாப்பிடுவதற்கான ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார் ராபர்ட். ‘ரெடியாயிடுச்சா..?' என்று அவர் ஒருமுறை கேட்க “பசிக்குதுன்னா.. கஞ்சி இருக்கு.. சாப்பிடறீங்களா?’ என்று ரச்சிதா யதார்த்தமாக கேட்டு விட ‘மாமனுக்கு கஞ்சி மட்டும்தான் ஊத்துவியா?’ என்கிற முறை மாப்பிள்ளை போல கோபித்துக் கொண்டு ‘நான் சாப்பிட மாட்டேன்’ என்று அடம்பிடித்தார் ராபர்ட்.
ஷிவின் மற்றும் ஷெரினா ஆகிய இருவரும் செய்த சமாதான முயற்சிகளுக்குப் பிறகு சாப்பிட சம்மதித்தார் ராபர்ட். ‘அவர் சாப்பிட மறுத்தால் நானும் சாப்பிட மாட்டேன்’ ரச்சிதா சொன்னதும் ஒரு முக்கிய காரணம். இந்தச் சமயத்தில் ரச்சிதா தந்த எக்ஸ்பிரஷன்கள் பார்க்க க்யூட்டாக இருந்தாலும் ‘இந்த டிராக் எங்க போய் முடியப் போகுதோ?’ என்கிற பீதியும் கலவரமும் உள்ளே ஏற்படாமல் இல்லை.

பிறகு ஆரம்பித்தது அந்த ரணகளமான குதூகல ஆட்டம். கடுமையான வெயில் இறங்கும் பாலைவனத்தில் திடீரென ஒரு சிறுமழை பெய்தால் எப்படியிருக்கும்? அப்படியாக சண்டையும் விவாதமும் நிகழ்ந்து கொண்டிருந்த பிக் பாஸ் வீட்டில் குறும்பான விளையாட்டு நடந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொண்டது.

‘மைக் போடாதவங்களை நீச்சல் குளத்தில் தூக்கிப் போடலாம்’ என்கிற ஜாலியான யோசனையை ஆரம்பித்து வைத்தார் அமுதவாணன். விக்ரமனின் மைக்கை வலுக்கட்டாயமாக கழற்றி, அவர் பதறி ஓடினாலும் விடாமல் துரத்தி அப்படியே அமுக்கிக் கொண்டு வந்து குளத்தில் தள்ளினார்கள். தனலஷ்மி, குயின்சி, ஷிவின் என்று இந்த ஜாலியான விளையாட்டு தொடர்ந்தது. உடையை மாற்றி, தலையை காய வைத்து வாரி வந்து நின்ற அமுதவாணனை மீண்டும் குளத்தில் தூக்கிப் போட்டு முக்கியதெல்லாம் அநியாயமான குறும்பு.
‘அசல் வீட்டில் இருந்து சாப்பாடு?!' – நிவாவின் ரொமான்ஸ்
‘மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து பிளாஸ்டிக் தம்ளர்கள் விழாதவாறு கீழேயுள்ள மேஜை விரிப்பை இழுக்க வேண்டும்’ என்று அடுத்த நடந்த போட்டியில் ஜனனியும் நிவாவும் வென்றார்கள். ஸ்கிராட்ச் கார்டு மூலம் அவர்களுக்கான வெகுமதி தெரிய வந்தது. முதலில் பிரித்த நிவா, அழுகையும் சிரிப்புமாக தன் பரிசைக் கண்டார். ‘வீட்டில் சமைத்த உணவிற்கு அனுமதி உண்டு’ என்கிற பரிசைக் கண்டதும் “எங்க அக்காவை தொடர்பு கொள்ள முடியலைன்னா.. அசல் வீட்டில் இருந்து சமைச்சு எடுத்துட்டு வரச் சொல்றீங்களா?" என்று நிவா கேட்டதை, ஏதாவதொரு ரொமான்ஸ் படத்தில் பயன்படுத்தலாம். அப்படியொரு பிரியமும் வெட்கமும் அவரது முகபாவத்தில் பொங்கியது.

‘ஒரு நாளின் மெனுவை நீங்கள் முடிவு செய்யலாம்’ என்பது ஜனனிக்கான பரிசு. ‘எங்க வீட்டு உணவா. பிக் பாஸ் வீடா’ என்று அபத்தமாக சந்தேகம் கேட்டார் ஜனனி. ‘பிக் பாஸ் வீடு’ என்றதும் ‘இங்க என்ன கிடைக்கப் போகுது.. புளி சாதமும்.. உப்புமாவும்தான்’ என்று சந்தோஷத்துடன் அலுத்துக் கொண்டார் ஜனனி.
அசிம் சமர்த்தாக அமர்ந்து சிறிய உரலில் எதையோ அரைத்துக் கொண்டிருந்தார். `எனக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் ஒரு சின்ன சண்டை வந்திருக்கும். ஜஸ்ட் எஸ்கேப்’ என்று அமுதவாணனிடம் அனத்திக் கொண்டிருந்தார் தனலஷ்மி. ‘ரச்சிதாவிற்கு ஆதரவாக ராபர்ட் பேசுகிறார், இந்த வீட்டில் ஃபேவரிஸம் தலைவிரித்தாடுகிறது, என் கருத்தை நான் சொல்லக்கூடாதா?’ என்பது தனலஷ்மியின் புகார்.
ஆக அணியில் மாற்றங்கள் நிகழலாம். கூட்டணிகள் உடையலாம். புதிய அணிகள் உருவாகலாம் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.