ஒரு வழியாக ‘ஸ்வீட் ஃபாக்டரி டாஸ்க்’ முடிந்தது. இது நமக்குத்தான் இனிப்பான செய்தி. ‘இனிப்பு தயார் செய்யும் போட்டி’ என்றால் அதற்கான மூலப்பொருள்களை முறையாக வழங்குவதுதானே முறை? அல்லது ஒரு போட்டியின் மூலம்தான் தர வேண்டும் என்றால் ‘க்விஸ் போட்டி’ போல அறிவார்ந்த சவால்களை வைத்துத் தரலாம்.
ஆனால் கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பி ‘வலிமையுள்ளவன் எடுத்துக்கோ’ என்கிற ஏற்பாடு எதற்காக? அடிதடியும் சச்சரவும் வாக்குவாதமும் பகையும் உண்டாகும்... அதன் மூலம் பிக் பாஸ் கல்லா கட்டலாம் என்பதற்காகத்தானே?
இதை நமக்கும் பொருத்திப் பார்க்கலாம். நாம் நமக்குள் எதற்கு, எப்படி, எங்கே அடித்துக் கொள்ள வேண்டும் என்பதை வேறு யாரோ, எங்கிருந்தோ அமர்ந்து தீர்மானிக்கிறார்கள். பெரிய முதலாளிகளின் சூழ்ச்சிகளுக்கு நாம் பலியாகக்கூடாது என்பது அடிப்படையான அரசியல் பாடம்.

நாள் 33-ல் நடந்தது என்ன?
“நீங்க பிடுங்கினா... நாங்களும் அதைச் செய்வோம்” என்று பெல்ட் ஏரியாவில் ஆவேசமானார் தனலக்ஷ்மி. ஏதோ வழிப்பறிக்கொள்ளை போல ஒருவரிடமிருந்து ஒருவர் ஆவேசமாகப் பிடுங்கிக் கொண்டு சென்றதில் அமுதாவணனுக்கும் மணிகண்டனுக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டது. அனைவரையும் விட மணிகண்டனின் ஆவேசம் அதிகமாக இருந்தது. அசிம் இப்போது சற்று அடங்கிவிட்டார். ஆனால் அவரின் ‘மினி க்ளோனிங்’ மாதிரி இருக்கும் மணிகண்டனின் வேகம் இப்போது அதிகரித்து விட்டது. கமல் இது குறித்து மணிக்கு ஏற்கெனவே ‘வார்னிங்’ தந்திருக்கிறார் என்பதை நினைவுகூரலாம்.
‘நான் அடிச்சா தைரியமா சொல்லுவேன்' – மணிகண்டனின் அட்ராசிட்டி பேச்சு
அடுத்த தள்ளுமுள்ளுவின் போது ‘என் மூக்குல மணி குத்திட்டான்’ என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு வேகமாக வீட்டிற்குள் சென்றார் அமுதவாணன். “நான் என்ன காமெடியனா... என்னால அடிக்க முடியாதா? பிக் பாஸ் கிட்ட பேசணும்” என்றெல்லாம் அமுதவாணன் புலம்ப, பின்னாடியே ஓடி வந்த மணிகண்டன் “நான் உங்களை அடிக்கலை. பொருளை வேகமாக இழுக்கும் போது கை பட்டிருக்கும். நீங்க பின்னாடி இருந்ததையே நான் கவனிக்கலை” என்று விளக்கம் தந்தார். ஒரு சிறிய வாக்குவாதத்தோடு இது முடிந்திருக்கலாம். ஆனால் அப்படி முடியவில்லை.
“சரி விடு...” என்று ஒரு கட்டத்தில் அமுதவாணன் சொல்ல, அவரைத் தூண்டி விடுவது போல் பேசினார் மணிகண்டன். “நான் அடிச்சேன்னு வெளில போய் சொல்லிட்டு இருக்காதீங்க. என்கிட்ட நேரா கேட்டிருக்கணும். நான் அடிச்சேன்னா தைரியமா அதைச் சொல்லுவேன்” என்றெல்லாம் பேசியது அநாவசியமான வார்த்தைகள். அடிபட்டதை விடவும் இந்த வார்த்தைகள் அமுதவாணனை அதிகமாகப் புண்படுத்தி விட்டதைக் காண முடிந்தது. கண்கலங்கி அமர்ந்தவரை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

வார இறுதிநாள் என்பதால் ‘இது பிரச்னையாகி விடலாம்’ என்று மணி உள்ளுக்குள் பயந்தாரோ, என்னமோ, மறுபடியும் ஓடிவந்து ‘என்னை தம்பி மாதிரி நெனச்சு மன்னிச்சுக்கங்க’ என்று வேண்டிக் கொண்டார். “நான் அடிச்சேன்னா அதைத் தைரியமா சொல்லுவேன்னு சொல்ற. அப்படி கெத்து காட்றது தப்பு மணி” என்றார் அமுதவாணன்.
மணியால் தாக்கப்பட்டது தவிர, தனலக்ஷ்மி முன்பு அலட்சியமாகப் பேசியதால் மனம் வருந்துகிற அமுதவாணன் “என்னை நாமினேட் பண்ணு” என்பது போல் ஜனனியிடம் கோரிக்கை வைக்க, அதை ஜனனி மறுத்துக் கொண்டிருந்தார். “நீ ரொம்ப ரஃப்பா விளையாடற மணி” என்று முன்பு சாட்சியம் சொன்ன மகேஸ்வரி, பிறகு மணிகண்டனிடம் சென்று “டைட்டிலோ, கேமோ முக்கியமில்ல. உன் கேரக்ட்டர் முக்கியம்” என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தது சரியான விஷயம்.
‘பிக் பாஸ் வீட்டில் அதிக சுயநலவாதி யார்?’
வெவ்வேறு வடிவங்களில் ஸ்வீட் செய்யும் போட்டியில் ‘கண்ணா’ அணி வெற்றி பெற்றது. விக்ரமன், ஏடிகே, ராம் அடங்கிய மூவர் குழு கார்டன் ஏரியாவில் கூடி அமுதவாணன் பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். “எதுக்கெடுத்தாலும் போர்ட்ரே பண்றாரு, பொய் சொல்றதா சொல்றாரு... அவர் வலிமை குறைஞ்சவர்-ன்னு நாம எப்பவாவது சொல்லியிருக்கமா...” என்று விக்ரமன் சொல்ல “அவருக்குத் தன்னைப் பத்தி காம்ப்ளெக்ஸ்” என்றார் ராம்.
உண்மை அல்லது துணிவு விளையாட்டில் ஷிவினுக்கு ‘உண்மை’ வந்தது. ‘இந்த வீட்டில் சுயநலவாதி யார்?’ என்கிற கேள்விக்கு ‘தனலக்ஷ்மி’ என்று உடனே சொன்னார் ஷிவின். வெளியில் வந்து அவர் காரணம் சொல்லும் போது "கல்லா கட்டணும்-ன்ற ஆர்வம்தான் தனலக்ஷ்மிக்கு நிறைய இருந்தது. என்னோட உழைப்பை அவர் அங்கீகரிக்கவில்லை" என்று சொல்ல, அதை அலட்சியமாக மறுத்தார் தனலக்ஷ்மி. ராபர்ட், அசிம் என்று யார் யார் பெயரையோ மக்கள் தேர்வு செய்து வைத்திருந்தார்களே தவிர, ஒருவர் கூட தனலக்ஷ்மியின் பெயரை முன்மொழியவில்லை. தனிப்பட்ட காரணங்களைத் தவிர்த்து ஷிவின் பொதுவாக யோசித்திருக்கலாம்.

அடுத்ததாக அசிமிற்கு ‘துணிவு’ தேர்வு வந்தது. ‘நீச்சல் குளத்தில் 25 முறை குதிக்க வேண்டும்’ என்கிற இம்சையைத் தண்டனையாகத் தந்தார் பிக் பாஸ். ‘இந்த நேரத்துலயா?’ என்று ஜெர்க் ஆன அசிம், பிறகு அதை நிறைவேற்ற ‘பேச்சாடா பேசின...’ என்று மற்றவர்கள் கலாய்த்தார்கள்.
‘கண்ணா... லட்டு தின்ன ஆசையா...’ அணி வெற்றி
‘காசு. பணம், துட்டு, மணி... மணி...’ என்று சூழலுக்குப் பொருத்தமான பாடலுடன் நாள் 33 விடிந்தது. ‘கேக்... கப் கேக்...’ என்று அடுத்த ஆர்டரைத் தந்தார் பிக் பாஸ். பெல்ட் ஏரியாவில் மீண்டும் தள்ளுமுள்ளுவில் ஆவேசமாகச் செயல்பட்ட மணிகண்டன், “பிக் பாஸ் பொண்ணு, பையன்ன்னுலாம் இனிமே பார்க்காதீங்க... ரெண்டு பொண்ணுங்க என்னைப் பிடிச்சு இழுத்தாங்க” என்று கோபத்துடன் புகார் செய்தார். ‘அப்படித்தான் செய்வேன்’ என்பது போல் தனலக்ஷ்மி அசால்ட்டாக நிற்க, ‘நான் உன்னைப் பிடிச்சு இழுக்கவேயில்ல’ என்று பதறிக் கொண்டு வந்து தன்னிலை விளக்கம் தந்தார் ரச்சிதா.
இந்த இழுபறியில் அடிபட்ட இன்னொரு நபரான கதிரவன், வலியுடன் அப்படியே அமைதியாக மூலையில் அமர்ந்து விட்டார். ‘இதை வைத்து சண்டை போட்டு மைலேஜ் தேற்றுவோம்’ என்று கூட நினைக்காத அப்பாவியாக இருக்கிறார் கதிரவன்.
‘கப் கேக்’ டாஸ்க் முடிந்த போது தரமதிப்பீடு நடந்தது. ஷிவின் மற்றும் ராபர்ட் இதற்குப் பொறுப்பாளர்களாக இருந்தார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்து அவர்கள் ‘கண்ணா அணி’யை வெற்றியாளர்களாக அறிவிக்க “இதெல்லாம் கிரியேட்டிவிட்டியா..?” என்று தோற்ற அணியின் உரிமையாளரான விக்ரமன் ஆட்சேபிக்க “மேம்போக்கா பார்த்துச் சொல்லாதீங்க. இது எங்க முடிவு” என்று டென்ஷன் ஆனார் ஷிவின்.

“நீங்க எதிர்பார்க்கற பதில் வரைக்கும் கேள்வி கேட்டுட்டே இருக்காதீங்க விக்ரமன்” என்று அவரின் இம்சையைச் சரியாகச் சுட்டிக் காட்டினார் மகேஸ்வரி. ‘பதிலே சொல்ல மாட்டேன்றாங்க’ என்று விக்ரமன் புகார் செய்ய, அத்தனை நேரம் அவரோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த ஷிவின் கூடுதலாகச் சூடானார்.
“நீங்க செஞ்ச இனிப்புகள் எல்லாம் எங்க போச்சு–ன்னு தெரிஞ்சுக்க விருப்பமா?” என்று கேட்ட பிக் பாஸ், ஒரு வீடியோவைக் காட்டினார். குழந்தைகள் காப்பகம் ஒன்றிற்கு அந்தப் பெட்டிகள் சென்றன. குழந்தைகள் கோரஸாக நன்றி சொல்ல அனைவரும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்தார்கள். அவர்கள் இத்தனை நாள்கள் அடித்துப் பிடித்துச் செய்த வேலைக்கான உண்மையான சம்பளம் இதுதான். ஆனந்தக்கண்ணீர் வடித்தார் தனலக்ஷ்மி.
‘கல்லாப்பெட்டியை கனமாக வைத்திருக்கும் அணி எது?’
‘இனிப்பு தொழிற்சாலை டாஸ்க்’ ஒருவழியாக முடிவிற்கு வந்தது. ‘கல்லாப்பெட்டியில் அதிகமாகத் துட்டு வைத்திருக்கும் அணி எது?’ என்கிற கேள்வியை பிக் பாஸ் முன்வைக்க, ஏதோ சட்டசபையில் பதவியேற்கப் போகிற தொனியில் ‘நான் உண்மையாகச் சொல்லுகிறேன்’ என்று ஆரம்பித்த விக்ரமன், தங்களிடம் ரூ.4250 இருப்பதாகத் தெள்ளத் தெளிவாக அறிவித்தார்.

ஆனால் இன்னொரு அணியின் ஓனரான தனலக்ஷ்மி அவ்வாறு தெளிவாகச் சொல்ல முடியாமல் தடுமாறினார். ‘தான் எடுக்க நினைத்த பணம், மற்றவர்களுக்குத் தருவதற்காக வைத்திருந்த பணம் ஆகியவற்றையெல்லாம் இணைத்துக் கூற “சம்பளம் போக கரெக்ட்டா சொல்லுங்க’ என்று கறார் காட்டினார் பிக் பாஸ். மறுபடியும் உளறிக் கொட்டி ரூ.6100 இருப்பதாகச் சொல்ல, இந்த டாஸ்க்கில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ அணி வெற்றி பெற்றது.
‘கண்ணா’ அணியின் உரிமையாளரான தனலக்ஷ்மிக்கு, அடுத்த வார நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ‘ஒரு சிறந்த பணியாளரைத் தேர்ந்தெடுங்க’ என்று பிக் பாஸ் சொல்ல அமுதவாணனுக்கும் ரச்சிதாவிற்கும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டு விட்டு ரச்சிதாவைத் தேர்ந்தெடுத்தார் தனலக்ஷ்மி.
எதிர் அணியை விடவும் சிறிது கூடுதலாகப் பணம் இருந்தாலே தனலக்ஷ்மியின் அணிக்கு வெற்றி கிடைத்திருக்கும். மிச்சப் பணத்தை அவர் தன் அணிக்குப் பிரித்துத் தந்திருக்கலாம். இதைத்தான் அசிமும் யோசனையாகச் சொன்னார் போலிருக்கிறது. ஆனால் குழப்பத்திலிருந்த தனலக்ஷ்மி இதைச் செய்யத் தவறி விட்டார். “அசிம் அண்ணா இதை வெச்சுக்கங்க...” என்று ரூ.500 மதிப்புள்ள கரன்சியை தனலக்ஷ்மி தர, “வேண்டாம்மா... அண்ணன் அழுதுடுவேன்... விட்டுடு...” என்று விலகிச் சென்றார் அசிம்.

ஆயிஷா மற்றும் ஷிவினுக்கான தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. நாடகத்தில் ஏற்கெனவே போட்டது போல, ஷிவின் கிழவி வேஷம் போட வேண்டுமாம். ‘கடவுளே’ என்று விதியை நொந்தபடி ஆடை மாற்றக் கிளம்பிய ஷிவினை ‘ஓ... பாட்டி, நல்ல பாட்டிதான்...’ என்று பாட்டுப் பாடிய படியே ராபர்ட்டும் அமுதவாணனும் நிறைய இம்சை செய்தார்கள். என்றாலும் அதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார் ஷிவின். ஆரம்ப நாளிலிருந்து கவனிக்கும் போது ஷிவினிடம் கணிசமான மாற்றம் தெரிகிறது. அந்த வீட்டின் சூழலுக்குள் தன்னைச் சரியாகப் பொருத்திக் கொண்டு விட்டார் என்று தோன்றுகிறது.
ஜனனி மற்றும் ராபர்ட்டிற்குச் சிறைத் தண்டனை
Kill @ Laugh என்கிற தண்டனை ஆயிஷாவிற்குக் கிடைத்தது. யாரிடம் பேசத் தொடங்கினாலும் தன்னையே கத்தியால் குத்திக் கொண்டது போல் பாவனை செய்து, பிறகு சிரித்து விட்டுத்தான் பேச வேண்டுமாம். ஆயிஷா இயல்பாகப் பேசுவதே அப்படித்தான் இருக்கும்.
'ஸ்வீட் டாஸ்க்கில் சிறப்பாகப் பங்கேற்ற' இருவரைத் தேர்ந்தெடுக்கும் தருணம். மணிகண்டன் மற்றும் அமுதவாணனின் பெயர்கள் நிறைய முறை வந்ததால் அவர்கள் இருவரும் தேர்வானார்கள். தனலக்ஷ்மி மற்றும் ரச்சிதாவோடு இந்த இருவரும் இணைந்து அடுத்த வாரத் தலைவர் போட்டியை எதிர்கொள்வார்கள். ஆயிஷாவிற்கும் ஸ்பெஷல் பாராட்டு கிடைத்தது.

‘டாஸ்க்கில் சிறப்பாகப் பங்கேற்காதவரை’ தேர்ந்தெடுக்க வேண்டும். அமுதவாணன் கேட்டுக் கொண்டதாலேயோ என்னமோ அவரை நாமினேட் செய்தார் ஜனனி. தன்னுடைய முறை வந்த போது ‘அசிமின்’ புகழ் பாடிய பிறகு ராபர்ட்டின் பெயர் சொன்னார் ஏடிகே. இறுதியில் ராபர்ட்டின் பெயர் அதிகமாக வந்தது. எனவே அவர் தேர்வு.
அனைத்திலும் சிறப்பாகப் பங்கேற்காத ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய நேரம். இதில் ஜனனியின் பெயர் அதிக முறை வந்தது. அவரின் பெயரைச் சொல்வதற்கு முன் ‘சாரிம்மா...’ என்று ஏடிகே முன்ஜாமீன் கேட்க “உஸ்.... முடியல” என்பது மாதிரி மகேஸ்வரி சலித்துக் கொண்டார். “உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று ஏடிகே ஆட்சேபனை தெரிவிக்க, இருவருக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. தன்னுடைய இமேஜ் பாதிப்பு அடையக்கூடாது என்பதில் ஏடிகே கவனமாக இருப்பதால் பல இடங்களில் வாலையும் தலையையும் மாற்றி மாற்றி காட்டுகிறார். இந்த கூடுதல் கான்ஷியஸ் அநாவசியம்.

விக்ரமனின் முறை வரும் போது அவரும் ஜனனியின் பெயரைச் சொல்லி விட்டு ‘அவர் Dependent –ஆக இல்லாமல் சுயமாக நின்று விளையாட வேண்டும்’ என்று சொன்னது சரியான குறிப்பு. பெரும்பாலான சமயங்களில் அமுதவாணனின் நிழலில் ஜனனி இருக்கிறார் என்பது வெளிப்படை. விக்ரமனின் கமென்ட் காரணமாக முகம் மாறினார் ஜனனி. இந்தச் சமயத்தில் அமுதவாணன் எழுந்து விளக்கம் அளிக்க இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்படுவதற்கான அறிகுறி தெரிந்தது.
வீட்டில் பெரியவர்கள் சண்டை போட்டுக் கொண்டால் ‘அய்யோ... கொஞ்சம் நிறுத்துங்களேன்’ என்று குழந்தைகள் எரிச்சலும் சலிப்பும் அடைந்து அழத் தொடங்குவார்கள் அல்லவா? அதைப் போல “அய்யோ... ஆர்க்யூ பண்ணாதீங்க” என்று இதை ஆட்சேபித்த ஜனனி, ஒரு கட்டத்தில் வாய் விட்டு அழத் தொடங்கினார். மற்றவர்கள் அவரைத் தேற்றிச் சமாதானப்படுத்தினார்கள்.
“நீ பேசு ஜனனி” என்று பெண்கள் அணி உற்சாகப்படுத்த, “நான் இங்க தனியாத்தான் விளையாடுறேன். எல்லோர் கூடயும் பேசத்தான் செய்யறேன். அங்க கொஞ்சம் சௌகரியமா இருக்கறதால, இருக்கேன். நான் ஒரு ஸ்போர்ட்ஸ் பெர்சன்... பார்த்தா தெரியாது. நான் நெனச்சா விளையாடுவேன்... இந்த டாஸ்க்கில் விட்டுக் கொடுத்து ராமை வளர்த்து விட்டதே நான்தான்...” என்று ‘அழுத குழந்தை சிரிச்சதாம்... கழுதைப் பாலை குடிச்சதாம்’ என்கிற பழமொழியைப் போலச் சிரித்துக் கொண்டே விளக்கம் சொன்னார் ஜனனி. முதல் வாரத்தில் நடந்த தலைவர் போட்டியில், சக்கரத்தில் நின்று கொண்டே "நான் நெனச்சா, நைட்டு வரைக்கும் நிற்பேன்” என்று வெட்டி பந்தா காட்டியவரும் இதே ஜனனிதான். பிறகு டொபுக்கென்று கீழே விழுந்துவிட்டார்.
மோசமான பங்கேற்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராபர்ட்டும் ஜனனியும் சிறைக்குச் செல்ல வேண்டும். (நல்லவேளை, நிரந்தர பலிகடாவான ராம் தப்பினார்!). “ஏடிகே எத்தனையோ முறை என்னை உரிமையா கிண்டல் பண்ணியிருக்காரு. அந்த வகையில்தான் நானும் சொன்னேன். ஏன் இவ்வளவு கோபம்... ஏடிகே டோட்டலா ஃபேக் பொ்ஸன்’ என்று அசிமிடம் மகேஸ்வரி கோபமாக அனத்துவதோடு எபிசோடு நிறைந்தது.

இன்று பஞ்சாயத்து நாள். தனலக்ஷ்மியின் ஓவர் அட்ராசிட்டி, மணிகண்டனின் மிகையான ஆவேசம், அமுதவாணன் மூக்குத் தாக்குதல், டாஸ்க்கில் நடந்த தள்ளுமுள்ளு கலவரங்கள் போன்றவற்றைப் பற்றி கமல் விசாரிக்கக்கூடும். இந்த வாரத்தில் வெளியேறப் போகும் நபராக ‘உயர்ந்த மனிதனை’ பற்றிய வதந்தி உலவுகிறது. என்ன ஆகிறதென்று பார்ப்போம்!