ஏலியன்ஸ் x பழங்குடி டாஸ்க் ஒருவழியாக முடிந்தது. பிறகு பூட்டு – சாவி விளையாட்டை வைத்து இந்த எபிசோடை ஒப்பேற்றினார்கள். டாஸ்க்கில் சிறப்பாகப் பங்கேற்காதவர் என்கிற முறையில் அசிமிற்கு ‘சிம்ப்ளி வேஸ்ட்’ அளிக்கப்பட்டது முறையல்ல. அவர் மிகையான கோபத்தை வெளிப்படுத்தியிருக்கலாம்; அனைத்துப் பூக்களையும் திருடி டாஸ்க் சொதப்புவதற்குக் கூட காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் ஆட்டத்தின் விறுவிறுப்பிற்கு அசிமும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தார் என்பதை எவரும் மறுக்க முடியாது. அந்த வகையில் சக ஹவுஸ்மேட்ஸ்கள் செய்தது ஒரு முறையற்ற தேர்வாகத் தோன்றுகிறது.
நாள் 54-ல் நடந்தது என்ன?
‘போக பிஸ்ஸா’ டாஸ்க்கின் முடிவுகளை அறிந்து கொள்ளும் நேரம். பழங்குடிகள் தரப்பில் அதிக கற்களை வைத்திருந்த ரச்சிதாவிற்கு, ‘நாமினேஷன் ஃப்ரீ ஜோன்’ அதிர்ஷ்டம் அடித்தது. மற்ற போட்டியாளர்கள், முருகன் மாதிரி மயிலேறி உலகம் பூராவும் சுற்றி வர, ரச்சிதா மட்டும் விநாயகர் மாதிரி நோகாமல் நுங்கு சாப்பிட்டு விட்டார். ஏலியன்ஸ் தரப்பில் அதிக எண்ணிக்கையிலான கற்களை வைத்திருந்த தனலஷ்மிக்கும் இதே வாய்ப்பு கிடைத்தது. பழங்குடிகளின் அணி அதிக எண்ணிக்கையிலிருந்ததால், அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

“இப்பவாச்சும் சொல்லித் தொலைங்கடா... பூவை யாருடா எடுத்தது?” என்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் மணிகண்டன். அப்போதும் சொல்லாமல் சஸ்பென்ஸை இழுத்த அசிம் ‘குறும்படம் கேட்கலாம்’ என்றார். இதன் மூலம் தொலைக்காட்சியில் தன் ஹீரோத்தனம் ரசிக்கப்படும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இது அசிமிற்கு பூமராங்க் எபெக்டில் திரும்பி வந்தது. ‘நான்தான் எடுத்தேன்’ என்று நமட்டுச்சிரிப்புடன் அசிம் ஒப்புக் கொண்டவுடன் “உடம்பு சரியில்லைன்னுதானே உன்னை உள்ளே படுக்க அனுமதிச்சோம். சிறப்பான சம்பவம் செஞ்சே... நல்லா வருவே தம்பி” என்பது போல் அடிபட்ட முகத்துடன் சொல்லி விட்டு மணிகண்டன் விலக “இது டாஸ்க்குடா” என்று சமாதானப்படுத்த முயன்றார் அசிம். மற்றவர்களும் அசிமின் செயலால் அதிருப்தியடைந்தார்கள்.
க்ளைமாக்ஸில் சொதப்பிய அசிம்
பூக்கள் அனைத்துமே திருடப்பட்டதால் ஆட்டம் அப்படியே உறைந்து போனது. பிறகு பழங்குடிகள் எதைத் திருட முயல்வார்கள்?! இதனால்தான் ரச்சிதாவும் மைனாவும் வீட்டிற்குள் சென்று கற்களைத் திருடினார்கள். ஆட்டத்தைப் பெரும்பாலும் வேடிக்கை பார்த்த ரச்சிதா கடைசியில் வென்றார். உயிரைக் கொடுத்து விளையாடியவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. “எனக்கு நாமினேஷன் ஃப்ரீ ஜோன் போறது முக்கியமில்ல. ஆனா ஆட்டத்தில ட்விஸ்ட் வேணும்ன்றதுக்காகத்தான் இதைச் செஞ்சேன்” என்று பிறகு மணிகண்டனிடம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் அசிம். ட்விஸ்ட் நடந்திருக்கலாம். ஆனால் “ஆபரேஷன் சக்ஸஸ், நோயாளி மரணம்’ என்பது மாதிரியான ட்விஸ்ட்டாகத்தான் அது அமைந்து விட்டது.
கேமரா முன்பு டைட் குளோசப்பில் வந்து நின்ற மைனா, “நைனா... பழங்குடிகள் சாப்பாடு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு விளையாடினோம். ஒரு வேளையாவது நல்ல சோறு போடுங்க... ப்ளீஸ்” என்று மன்றாடினார். ஆனால் கேமரா தலையைத் தாழ்த்திக் கொண்டவுடன் "என்னடா தம்பி தலையைத் தொங்கப் போட்டுட்டே?!” என்று காமெடி செய்தார். போராடினால்தான் பிக் பாஸ் வீட்டில் பரிசு கிடைக்கும். பசி, தூக்கமின்மை போன்றவை இருந்தால்தான் கலவரம் நிகழும், கன்டென்ட் கிடைக்கும். இதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமான விதி. எனவே மைனாவிற்கு அத்தனை எளிதாகச் சாப்பாடு கொடுத்து விடுவார்களா?!

ரணகளமாக நடந்த பூட்டு – சாவி ஆட்டம்
‘ஏ சுழலி’ என்கிற பாட்டுடன் நாள் 54 விடிந்தது. பாடலுக்கு முன்பு, பூட்டிலிருந்து தப்பிக்க ஒளிவதற்கு இடம் கிடைக்குமா என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார் அமுதவாணன். லக்ஸரி பட்ஜெட்டிற்காக, பூட்டு – சாவி ஆட்டம் தொடர்ந்தது. ‘யார், யாரைப் பூட்டுகிறார்கள். எந்தக் காரணத்திற்காக ரிலீஸ் செய்கிறார்கள்?’ என்பதெல்லாம் புரியாமல் ஒரு மாதிரி ‘குன்சாக’ பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது.
“போனா போவுதுன்னு ஜனனியை லாக் பண்ண விட்டேன். இன்னிக்கு இருக்கு அவளுக்கு” என்கிற அனத்தலுடன் ராம் வீரசபதம் எடுத்துக் கொண்டிருக்க, அருகிலேயே இருந்த ஜனனி ‘அப்படியா..?’ என்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். கதிரவனை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் சாவிகளை ஒப்படைத்தார். ராமை ரிலீஸ் செய்ய முடிவு செய்த கதிரவன், முதலில் தனலஷ்மியை டார்கெட் செய்து துரத்தினார்.
காலையிலேயே ஒத்திகை பார்த்து வைத்திருந்த அமுதவாணன், பூட்டுக்குப் பயந்து வீட்டின் கூரை மேல் ஏறி அமர்ந்திருக்க “உங்க வெயிட் தாங்காது... இறங்கிடுங்க” என்று நக்கலடித்தார் பிக் பாஸ். ‘ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது...’ என்பதே அவர் அமுதவாணனுக்குச் சொல்ல விரும்பிய செய்தி.
“அமுதண்ணே... பூட்ட மாட்டேன்... பத்திரமா இறங்கி வாங்க” என்று கதிரவன் சொல்லியும், கீழே பதற்றத்துடன் இறங்கிய அமுதவாணன், விழுந்து பல்டியடித்து எழுந்து ஓடினார். கதிரவன் துரத்திச் சென்று போராடினாலும் பெல்ட்டை அறுத்து விட்டு ஓடினார் அமுதவாணன்.

அடுத்தபடியாக ஷிவினுக்கு பூட்டுகள் வழங்கப்பட்டன. ஷிவின் முதலில் மணியை டார்கெட் செய்ய, விட்டுத் தராமல் கடுமையாகப் போராடி தப்பித்து ஓடி நீச்சல் குளத்தில் தஞ்சமடைந்தார் மணி. ஒரு கட்டத்தில் கதிரவனும் ஷிவினும் ஒரே சமயத்தில் தனலஷ்மியை டார்கெட் செய்ய, தனலஷ்மியோ கேமராவின் கீழே பதுங்கிக் கொண்டார். “கேமரா இருக்கு. பார்த்து...’ என்று கதிரவன் திரும்பத் திரும்ப எச்சரித்தார். ஆனால் தனலஷ்மிக்கோ அதுவே பாதுகாப்பிற்கான கேடயமாக இருந்தது. ‘உனக்கு கேமரா முக்கியம்னா. எனக்கு பெல்ட் முக்கியம்’ என்று அடம்பிடித்தார்.
‘தனலஷ்மியை நீ பார்த்துக்கோ’ என்று ஷிவினிடம் சொல்லி விட்டு கதிரவன் விலகினார். பிறகு ஆரம்பித்தது அந்த நீண்ட போராட்டம். ‘பேய்க்கும் பேய்க்கும் சண்டை. ஊரே வேடிக்கை பார்க்குது’ என்பது போல ஷிவினும் தனலஷ்மியும் விடாமல் மல்லுக்கட்டினார்கள். இரண்டு பெண் சிங்கங்கள் புழுதி பறக்க, காடே அதிரும்படியாக சண்டையிடுவதைப் போல இவர்களின் இழுபறி நடந்தது. நாற்காலி போட்டு அமர்ந்து இதை ஜாலியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார் அசிம்.

ஷிவின் இதமான வார்த்தைகளைச் சொல்லிச் சரணடைய வைக்க முயன்றாலும் மிக மூர்க்கத்தனமாக தனலஷ்மி எதிர்வினை செய்ததால், ஒரு கட்டத்தில் ஷிவினும் மூர்க்கமானார். பூட்டை பிடுங்கி நீச்சல் குளத்தின் அருகே வீசிய தனலஷ்மி, பிறகு நீச்சல் குளத்தில் குதித்தார். மைக்கைக் கழற்றி வைத்து விட்டு ஷிவினும் இறங்க ‘அப்படிப் போடு சபாசு’ என்று ஒட்டுமொத்த வீடும் கைதட்டி மகிழ்ந்தது. மிகுந்த சிரமத்திற்குப் பின் எப்படியோ தனலஷ்மியைப் பூட்டி வெற்றி பெற்றார் ஷிவின். (ஹப்பாடா!). ஆனால் விட்டுத்தராமல் போராடிய இருவரையுமே பாராட்டியாக வேண்டும். அப்படியொரு ஃபைட்!
நீச்சல் குளத்தில் பதுங்கி சாதனை படைத்த மணிகண்டன்
‘அம்மே’... என்று ஆட்டுக்குட்டி மாதிரி பதறி ஓடிய க்வீன்சியை விளையாட்டாகத் துரத்திச் சென்று பூட்டினார் கதிரவன். பிறகு ஷிவினை அவர் அணுக ‘சரி பூட்டுங்க’ என்று இயல்பாக ஏற்றுக் கொண்டார் ஷிவின். “ப்பா... என்ன மாதிரியான சண்டை... என்னால அப்படில்லாம் விளையாட முடியாது’ என்று WWF வேடிக்கை பார்த்த பீதியோடு சொன்னார் ரச்சிதா. க்வீன்சியை ஷிவின் ரிலீஸ் செய்தவுடன் ‘தெய்வமே’ என்று வணங்கினார்.
“ஏன் மணி நீர்யானை மாதிரி தண்ணிலேயே விழுந்த கிடக்க.. எழுந்து வா... விளையாடலாம்" என்று ஷிவின் அழைத்தாலும் வீம்பாக அங்கேயே கிடந்தார் மணி. இந்தச் சமயத்தில் மைனாவிற்குப் பூட்டு வழங்கப்பட்டது. அவர் மணியைப் பூட்டுவார் என்று பார்த்தால் ஷிவினுக்கும் மணிக்கும் இடையேதான் போராட்டம் நடந்தது. “மைனா நீ என்னைப் பூட்டிக்கோ. ஆனா ஷிவின் கூடத்தான் ஆட்டம் ஆடுவேன்” என்று சொல்லி விட்டார் மணி. இன்னொரு பக்கம், மைனா தனலஷ்மியை ரிலீஸ் செய்ய “கேம் தப்பும்மா... அவ ஏற்கெனவே நாமினேஷன் ஜெயிச்சிருக்கா. லக்ஸரியும் அவளுக்கே போகக்கூடாது” என்று கதிரவனும் அசிமும் மைனாவை ஆட்சேபித்தார்கள்.

மறுபடியும் தனலஷ்மியை டார்கெட் செய்தார் ஷிவின். இந்த முறை எந்த எதிர்ப்பையும் காட்டாமல் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பூட்டை வாங்கினார் தனலஷ்மி. “ஷிவினுக்குக் கெட்ட எண்ணம்... யார் தடுத்தாலும் ஜெயிக்கறதை தடுக்க முடியாது. க்ரூப்பா ஆடறாங்க...’ என்றெல்லாம் தனலஷ்மி அனத்த, ஷிவின் இதைக் கடுமையாக ஆட்சேபிக்க ‘என்னைப் பத்தி பேசாத...’ என்று பரஸ்பரம் இருவரும் முட்டிக் கொண்டார்கள்.
முழு சரணாகதி அடைந்த ராம்
ஆட்டத்தில் இன்னமும் புழுதியைக் கிளப்ப முடிவு செய்த பிக் பாஸ், அசிமிடம் பூட்டுகளை வழங்கினார். ஆனால் புழுதி கிளம்பவில்லை. “அசிம் வர்றாருன்னா பயப்படணுமா... அவ்ளோ சீன்லாம் இல்ல” என்று எகத்தாளமாகச் சொன்னார் ஜனனி. அசிமின் வேட்டை உக்கிரமாக இருக்கும் என்று பார்த்தால் ரச்சிதா, ஜனனி என்கிற முயல் குட்டிகளை மட்டும் எளிதாக வேட்டையாடி விட்டு மணியை ரிலீஸ் செய்து ஆட்டத்தை ‘சப்’ என்று ஆக்கினார் அசிம். “மணியைத்தான் கஷ்டப்பட்டுப் பூட்டினோம். அதைப் போய் ரிலீஸ் பண்ணிட்டிங்களே?” என்று புலம்பினார் ஷிவின். மணியிடமிருந்து கழட்டிய பூட்டை அசிம் ராமிடம் கொண்டு செல்ல “என்ன வேணா பண்ணிக்கோப்பா... நான் உன் கூட சண்டை போட மாட்டேன்’ என்று ராம் முழு சரணாகதி அடைந்தார். “நீங்க தைரியமான ஆளென்றால் ராமைப் பூட்டுங்கோ” என்று போட்டுக் கொடுத்தார் ஜனனி. வேறு வழியின்றி சரண் அடைந்த ராமையே பூட்டினார் அசிம்.
இந்தச் சமயத்தில் க்வீன்சிக்கும் பூட்டு வழங்கப்பட்டது. (என்னாத்த கொடுத்து?!). ‘சாஃப்ட் டார்கெட்’ ஆன கதிரவனைப் பூட்டி விட்டு வெற்றி பெற்றதாக மகிழ்ச்சியடைந்தார் க்வீன்சி. அடுத்தபடியாக ஆயிஷாவிற்கு பூட்டு வழங்கப்பட்டது. அவர் விக்ரமனை டார்கெட் செய்ய ‘எனக்கு ஆல்ரெடி ரெண்டு பூட்டு இருக்கு” என்று முதலில் ஆட்சேபித்தாலும் பிறகு ஒப்புக் கொண்டு திடீரென மறுத்தார் விக்ரமன். ‘இதுதான் பொலிட்டிக்கல் மைண்ட் ஸ்ட்ராட்டஜியா?’ என்று ஆயிஷா கிண்டலாகக் கேட்க, விக்ரமனுக்கு சடார் என கோபம் வந்தது. ‘புரொபஷன் பத்திலாம் பேசாதீங்க’ என்று கோபித்துக் கொண்டு விலகி ஓடினார். பிறகு ஆயிஷா மன்னிப்பு கேட்க “அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க’ என்று கேட்டுக் கொண்டார் விக்ரமன். ‘பொலிட்டிக்கல் மைண்ட்’ என்பது கெட்ட வார்த்தையா?!
தனக்கு வழங்கப்பட்ட இரண்டு பூட்டுகளை விக்ரமனுக்கும் அசிமிற்கும் பூட்டி சேஃப் கேம் ஆடினார் ஏடிகே. அடுத்ததாக, ராமிற்கு வழங்கப்பட்ட பூட்டுகளில் ஒன்றை மைனாவிற்கு எளிதாகப் பூட்டி விட்டு அமுதவாணனைத் துரத்த முயன்றார் ராம். “எதுக்கு வேஸ்ட் பண்ற. மணிதான் பூட்டு இல்லாம இருக்கான் அங்க போ” என்று மற்றவர்கள் சொல்ல, ‘ஆமால்ல’ என்றபடி அங்குச் சென்றார் ராம். ‘மணியாவது ஜெயிக்கட்டும். என்னைப்பூட்டு’ என்று தனலஷ்மி சொல்ல, “ஆமால்ல...’ என்று அதற்கும் சொல்லி விட்டு தனலஷ்மியைப் பூட்டி ஆட்டத்தை முடித்தார் ராம். (ஆமால்ல!).

ஆக... கடைசியில் பூட்டு இல்லாத நபரான மணி இந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். நீச்சல் குளத்திலேயே பதுங்கியிருந்து இந்தச் சாதனையைப் படைத்தார் மணிகண்டன். வெற்றி அறிவிக்கப்பட்டவுடன்தான் துண்டை உதறிக் கொண்டு வெளியே வந்தார்.
அசிம் மீது சரமாரியான புகார்களை வைத்த விக்ரமன்
ஏலியன்ஸ் x பழங்குடி டாஸ்க்கில் சிறந்த பங்கேற்பாளரைத் தேர்ந்தெடுக்கும் நேரம். ஷிவின் மற்றும் தனலஷ்மியின் பெயர்கள் அதிகமுறை வந்ததால் அவர்கள் இருவரும் தேர்வானார்கள். ‘அனைத்திலும் முழுமையாகப் பங்கேற்ற’ நபராக மணி தேர்வானார். இந்த மூவரும் அடுத்த வாரத் தலைவர் போட்டிக்குத் தகுதியானார்கள்.
வில்லங்கமான தேர்வு அடுத்து வந்தது. டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்காத நபரைச் சொல்ல வேண்டும். இதில் அசிமின் பெயர் நிறைய முறை சொல்லப்பட்டது. தனக்கும் உபயோகமில்லாமல், அணிக்கும் உபயோகமில்லாமல் ஆட்டத்தின் க்ளைமாக்ஸை அசிம் சொதப்பியதால் அவர் மீது பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது.
இந்தச் சமயத்தில் அசிம் மீது விக்ரமன் வைத்த ஆட்சேபம் கடுமையானதாக இருந்தது. "கோபத்தின் உச்சத்திலிருந்தாலும் ஒருத்தர் மேல கைவெச்சது மகா தப்பு. அவர் ஸ்ட்ராட்டஜியா இதைப் பண்றாரு. லைம் லைட்டில் இருக்க விரும்புகிறார். கவன ஈர்ப்பு செய்கிறார். வீக்கெண்டுல திடீர்னு மாறிடறாரு” என்று சரமாரியாக விக்ரமன் குற்றம் சாட்டினார். கூடுதலாக ஆயிஷாவையும் தனலஷ்மியையும் குறிப்பிட்டார் விக்ரமன்.

தள்ளுமுள்ளுவின் போது ஆயிஷாவின் உடை கிழிந்தது தொடர்பாக "உள்ளே டிரஸ் போடலைன்னா. என்ன ஆகியிருக்கும்?" என்று தனலஷ்மி சொன்னது நிச்சயம் ஒரு அபத்தமான புகார். ஏடிகேவும் தனலஷ்மியின் புகாரிலிருந்த விபரீத நோக்கத்தைச் சுட்டிக் காட்டி கோபப்பட ‘நான் சொன்னதில் தவறில்லை’ என்று சாதித்தார் தனலஷ்மி. விக்ரமனின் குற்றச்சாட்டை மறுத்த அசிம் “நான் ஸ்ட்ராங் பிளேயர்ன்றதாலதான் என்னை டார்கெட் பண்ணி அவர் கவன ஈர்ப்பு செய்யறார்" என்று பந்தைத் திருப்பிப் போட்டார். பிறகு சபையிலும் அமுதவாணனிடம் பொது மன்னிப்பு கோரினார்.
அசிமின் குற்றச்சாட்டிற்கு மீண்டும் விளக்கம் அளித்தார் விக்ரமன். “டீசன்ட்டா விளையாடறவங்கதான் ஸ்ட்ராங்க் பிளேயர். அந்த வகையில் அசிமை ஸ்ட்ராங் பிளேயர்ன்னு நான் ஒத்துக்க மாட்டேன். ஏற்கெனவே அவருக்கு ‘அட்டகத்தி’யை கொடுத்தேன். எதுவா இருந்தாலும் முகத்திற்கு நேரா பேசணும். புறணி பேசக் கூடாது. ஆள் சேர்த்து க்ரூப்பிஸம் பண்ணக்கூடாது. ஜனனி வரக்கூடாதுன்னு பிளான் பண்ணீங்க. ரச்சிதா ஜெயிக்கக்கூடாதுன்னு திட்டம் போட்டீங்க... அதனால நீங்க ஸ்ட்ராங் பிளேயர்லாம் கிடையாது” என்று விக்ரமன் கடுமையான புகார்களை முன்வைக்க, ஆச்சர்யகரமாக அசிம் எதிர்ப்பே காட்டாமல் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். சபையில் துணிச்சலாகப் பேசிய விக்ரமனை பிறகு தனிமையில் பாராட்டினார் ஏடிகே. (பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டறது என்பது இதுதான்).
அனைத்திலும் முழுமையாகப் பங்கேற்காத நபராக மைனா தேர்ந்தெடுக்கப்பட்டார். அசிமிற்கும் மைனாவிற்கும் என்ன தண்டனை என்பதில் ஒரு சஸ்பென்ஸ் வைத்தார் பிக் பாஸ். பிறகு கார் விளம்பரம் தொடர்பாக ஒரு 'Jigsaw Puzzle' நடந்தது. இதில் மணி தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

மீண்டும் சபையைக் கூட்டிய பிக் பாஸ், ‘SIMPLY WASTE’ என்று எழுதப்பட்டிருந்த அட்டைகளைக் கொண்டு வரச் செய்து அவற்றை அசிம் மற்றும் மைனாவின் கழுத்தில் மாட்டச் சொன்னார். “என்னைச் சொன்னவங்களை இந்த அட்டை சொல்றதா எடுத்துக்கறேன்” என்று கெத்தாக அசிம் சொல்ல “எவ்ளோ பேரு இங்க வேஸ்ட்டா உக்காந்திருக்காங்கன்னு யோசிச்சுப் பாருங்கடா டேய்” என்று அசால்ட்டாகச் சொன்னார் மைனா.
இன்று பஞ்சாயத்து நாள். அசிம் என்னதான் தவிர்க்க முடியாத, திறமையான ஆட்டக்காரராக இருந்தாலும் அவரிடமுள்ள எதிர்மறையான குணாதிசயங்கள் நிகழ்ச்சிக்குள் மட்டுமன்றி, பார்வையாளர்களிடமும் பலமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இதற்கான நியாயமான நடவடிக்கையை கமல் எடுப்பார் என்று நம்புவோம்.