இதுவரை நடந்த வீக்லி டாஸ்களோடு ஒப்பிடும் போது ‘டிவிங்கிள் ஸ்டார்’ டாஸ்க் சற்றாவது சுவாரஸ்யமாக நடந்து முடிந்ததே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, திருஷ்டிப் பரிகாரம் போல மணிகண்டனுக்கும் விக்ரமனுக்கும் இடையில் ‘ஈகோ’ மோதல் கடுமையாக நடந்தது. ‘வாடா வாடா... என் ஏரியாவுக்கு வாடா’ என்கிற வடிவேலு காமெடி மாதிரி, ஓரிடத்தில் நிற்காமல் வாக்குவாதம் செய்தார் மணிகண்டன்.
ஒரு விமர்சனத்தை ஏற்கும் முதிர்ச்சி இல்லாமல், அதை எவ்வாறு சிறுபிள்ளைத்தனமாக எதிர்கொள்வது என்கிற பாடத்தை கற்றுத் தந்தார் ஜனனி.
நாள் 61-ல் நடந்தது என்ன?
ஆடிஷனின் இறுதியில் ஷிவினை ‘வெயிட்டிங் லிஸ்டில்’ போட்டது தொடர்பாக விக்ரமனுக்கும் ஏடிகேவுக்கும் இடையில் உரையாடல் நடந்தது. ஷிவினின் நிகழ்ச்சி முடிந்தவுடனேயே அவரை ‘செலக்ட்’ செய்து விடலாம் என்பது போல் விக்ரமனின் உடல்மொழி இருந்தது. ஆனால் ‘வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள அனைவரையும் பரிசீலித்து விட்டு பிறகு அறிவிக்கலாம்’ என்று ஏடிகே எடுத்த முடிவுதான் சரியானது.

இன்னொரு பக்கம் வேறொரு டிராமா போய்க் கொண்டிருந்தது. கலை நிகழ்ச்சியில் கதிரவனும் ஷிவினும் இணைந்து நடனம் ஆடுவதாகத் திட்டமிட்டார்கள் போலிருக்கிறது. ஆனால் திடீரென்று ஷிவினிற்குத் தயக்கம். அதை மனத்தடை என்றே சொல்லலாம். ஏற்கெனவே தன்னை கிண்டலடிக்கும் மக்கள், இதனால் கூடுதலாகக் கிண்டலடிப்பார்களோ, அதனால் கதிரவன் உட்பட தனக்கும் சங்கடம் வருமோ என்று நிறைய யோசித்துக் குழம்பினார் ஷிவின். கதிரவனுடன் இணைத்து வீடு தன்னை கிண்டல் செய்வதை அவர் ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொள்வதாகத்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்தக் கிண்டலை அவர் இத்தனை சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது இப்போதுதான் புரிகிறது. கதிரவனுடன் பேசும் போது "தொடாம பிராக்டிஸ் பண்ணலாம்... நைட்ல பிராக்டிஸ் பண்ணலாம். அப்பதான் மத்தவங்க கிண்டல் பண்ண மாட்டாங்க" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
கதிரவனுடன் நடனமாட சங்கடப்பட்ட ஷிவின்
இந்த விவகாரத்தை கதிரவன் மிக மிக முதிர்ச்சியாகக் கையாண்டதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். "இது ஒரு கலைப் பங்களிப்புதான். உங்க முடிவு எப்படியாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று அவர் சொன்னது பெருந்தன்மையான விஷயம். ரச்சிதாவும் ஆயிஷாவும் இது தொடர்பாகச் சரியான ஆலோசனைகளை ஷிவினிற்குத் தந்தார்கள். பல விஷயங்களில் புத்திசாலித்தனமாக யோசித்துச் செயல்படுகிற ஷிவின், இந்த விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை தடுமாற்றமாக இருக்கிறார் என்று தெரியவில்லை.

“உங்களுக்குத் தந்த கான்செப்டை வெச்சு நல்லா பண்ணியிருக்கலாம்” என்று மைனாவிடம் விக்ரமன் சொல்லிக் கொண்டிருந்தார். இது உண்மை. சூட்கேஸ் திருடு போவது முதல், அது தொடர்பான புகார் தரக் காவல்நிலையம் செல்லும் போது குற்றவாளி அமர்ந்திருப்பதைப் பார்த்துப் பம்முவது வரை, விதம் விதமாக டெலவப் செய்து மைனா நடித்திருக்கலாம். இது போன்ற விஷயங்களில்தான் வடிவேலு போன்ற கலைஞர்கள், மாஸ்டர்களாக இருப்பதை உணர முடிகிறது.
கெஞ்சிக் கூத்தாடி கண்ணாமூச்சி வாய்ப்பைப் பெற்ற ஏடிகே, என்னதான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மாண்டஸ் புயல் வேகத்தில் ஓடினாலும் ஏழு நபர்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததால் 200 பாயின்ட்ஸை நூலிழையில் தவற விட்டார். இரண்டு பீன் பேகுகளை இணைத்து அதன் நடுவில் தன்னை மணி ஒளித்துக் கொண்டது புத்திசாலித்தனம்.
வேதாவாக அசத்திய அமுதவாணன்
மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம் கேட்டால் உடனே உற்சாகம் தரும் பாடலான ‘எத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேல’... என்பதுடன் நாள் 61 விடிந்தது. வெளியில் அமர்ந்திருந்த போது தனக்குச் சாப்பாடு எடுத்து வந்து தந்த ஆயிஷா மற்றும் மணிகண்டனை ‘மனுஷங்கப்பா... இவங்கதான் மனுஷங்க’ என்று மனமார பாராட்டிக் கொண்டிருந்தார் அமுதவாணன். இவர் ஜனனியை அழைத்து நாடக ஒத்திகையைச் செய்ய, ஜனனியோ "டைம் ஆச்சு. குளிச்சுட்டு வந்துடறேன்” என்று அவசரப்பட்ட காட்சியே ஒரு மினி காமெடி டிராமாவாக இருந்தது.

‘பிரமாண்டமான கலை நிகழ்ச்சி’ துவங்கியது. இதில் கலந்து கொள்ளத் தகுதி பெற்ற ஐந்து நபர்கள், தங்களின் திறமையைக் காட்டுவார்கள். இவர்களின் நடிப்பு பிடித்தது என்றால் இதர ஹவுஸ்மேட்ஸ் சன்மானம் தரலாம். பிடிக்கவில்லையென்றால் ஏற்கெனவே தந்த சன்மானத்தைத் திரும்பப் பெறலாம் என்று விதிகள் சொல்லப்பட்டன. (கொடுத்து விட்ட சன்மானத்தை யாராவது திரும்பக் கேட்பார்களா?!).
முதல் நிகழ்ச்சி. கதிரவனோடு வராமல் ஆயிஷாவோடு இணைந்து கூட்டணி அமைத்து நடனம் ஆடினார் ஷிவின். அமுதவாணன் மட்டுமே இதைப் பாராட்டினார். விக்ரமன், ஏடிகே மணி உள்ளிட்டவர்கள் "என்ன செஞ்சீங்கன்னே புரியலை” என்று ஆட்சேபித்து பணத்தைத் திரும்பக் கேட்டார்கள். அடுத்து மேடையேறியவர் அமுதவாணன். ஆரம்பத்திலேயே அசத்தினார். ஒருபக்கம் ஆணாகவும் இன்னொரு பக்கம் பெண்ணாகவும் தோன்றுமாறு ஒப்பனை செய்து இரு குரலில் பேசி நடித்தார். பிறகு சட்டென்று மிகக்குறுகிய நேரத்தில் ஒப்பனைகளை மாற்றி வந்து நடித்தது, அவரது மெனக்கெடலைக் காண்பித்தது. ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தின் சுருக்கத்தை மிகத் திறமையாக நிகழ்த்திக் காட்டினார் அமுதவாணன். மனைவியாக ஜனனியும், காதலியாக மைனாவும் நண்பனாக ராமும் நடித்தார்கள். ராம் நடிப்பைப் பார்த்து ரச்சிதா உள்ளிட்டவர்கள் ரகசியமாகச் சிரித்தார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் அமுதவாணனுக்கு நிறையப் பாராட்டுகள் கிடைத்தது தகுதியான ஒன்றே.
அடுத்ததாக மேடையேறியவர் அசிம். தந்தை, மகன் என்று இரு பாத்திரங்களில் இவர் வசனமாகப் பேசி, நடித்துத் தள்ளியது ரேடியோ நாடகத்தை நினைவுபடுத்தியது. இவரது நடிப்பு பாராட்டப்பட்டாலும் "தத்து எடுக்கப்பட்ட மகனே, தந்தையை முதியோர் இல்லத்திற்குக் கொண்டு செல்வானா... அந்தச் செய்தி நெருடலாக இருக்கிறது" என்கிற லாஜிக் பிழையை எழுப்பினார் விக்ரமன். ‘அது மகனுக்கே தெரியாது’ என்று அசிம் விளக்க, மற்ற இரு நீதிபதிகளின் பாராட்டு அவருக்குக் கிடைத்தது. இந்த ‘பிரமாண்டமான கலை நிகழ்ச்சியின்’ இறுதியில் அமுதவாணனின் நடிப்பு மிகச் சிறந்ததாக இருந்ததாக நீதிபதிகள் அறிவித்தனர்.

வில்லங்கமான விருதுகளைத் தந்த பிக் பாஸ்
மக்களை ஒன்று திரட்டி சபையில் அமர்த்தினார் பிக் பாஸ். ஒவ்வொருவரும் தங்களிடம் எவ்வளவு கரன்ஸி இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். மிக அதிகபட்சமாகப் பணம் வைத்திருந்த அமுதவாணனுக்கு வாழ்த்து சொன்னார் பிக் பாஸ். அடுத்ததாக ‘ஸ்டார் விருதுகள்’ நிகழ்ச்சி துவங்கியது.
கதிரவனும் தனலஷ்மியும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக இருந்த இந்த விழாவில் கதிரவன் மட்டுமே சிறப்பாகத் தொகுத்தளித்தார். ஏனோ தனலஷ்மி அதிகம் பேசாமல் கோப்பைகளை எடுத்துத் தரும் உதவியாளர் போலவே செயல்பட்டார். ‘Best Entertainer Award’- உடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. இதர ஹவுஸ்மேட்ஸ்களில் பெரும்பான்மையோர் அமுதவாணனுக்கு வாக்களித்தது பொருத்தமான விஷயம். எனவே அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. ‘மக்களின் ஸ்டார்’ என்கிற விருது, கேரக்ட்டரிலேயே வாழ்ந்த கீதா தேவிக்கு வழங்கப்பட்டது. ‘ஹவுஸ்மேட்ஸ்களின் சூப்பர் ஸ்டார்’ விருதைப் பூனை சேகர் வந்து வாங்கிச் சென்றார். ஆக... அமுதவாணன், ரச்சிதா, மைனா ஆகிய மூவரும் அடுத்த வாரத் தலைவர் போட்டிக்குத் தகுதி பெறுகிறார்கள்.
அடுத்ததாக வில்லங்கமான விருதுகளின் வரிசை ஆரம்பித்தது. எனவே சச்சரவுகளும் கூடவே துவங்கின. ‘Most disappointing performance’ என்கிற விருதிற்கு விக்ரமனின் பெயர் நிறைய முறை அடிபட்டது. "‘அந்நியன்’ என்பது நடிப்பதற்கு ஸ்கோப் நிறைய இருந்த பாத்திரம். ஆனால் விக்ரமன் அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை" என்று நிறைய விமர்சனங்கள் வந்தன.
தன்னுடைய முறை வரும் போது மணிகண்டனைச் சொன்னார் விக்ரமன். "பாலைய்யா கேரக்டர் அவரிடமிருந்து சரியாக வரவில்லை. நிறைய விஷயங்கள் செய்திருக்கலாம்" என்று அவர் சொன்னதற்கு, மணிகண்டன் பழிவாங்க நினைத்தாரோ, என்னமோ “எனக்குல்லாம் அந்நியன் கேரக்டர் கிடைச்சிருந்தா எல்லா விருதையும் நானே வாங்கியிருப்பேன். லட்டு மாதிரியான கேரக்டர் அது" என்று சொன்னது நிச்சயம் அதிகப்பிரசங்கித்தனமானது. பாலைய்யா போல மணிகண்டன் நடனமாடியது ஓகே. ஆனால் இதர சமயங்களில் எல்லாம் சீரியஸான முகத்துடன் வெறுமனே அமர்ந்திருந்தார். மைனா காமெடி செய்யும் போது மட்டும் வெடித்துச் சிரித்தார். அவ்வளவே! பாலகிருஷ்ணாவின் ஆக்ஷன், சென்டிமென்ட் காமெடிகளை அவர் செய்யத் தவறி விட்டார். இப்படிப்பட்ட மணிகண்டன் இன்னொருவரைப் பற்றி மிகையாகக் குறை கூறுவது முதிர்ச்சியற்ற அணுகுமுறை.

விருதைப் பெற்றுக் கொண்ட விக்ரமன், “எனக்கு நடிப்பு அத்தனை பரிச்சயம் இல்லாத துறை. மணி அவருக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பா கையாண்டிருக்கணும். நான் நல்லா நடிச்சிருந்தாலும் மணி வாக்களித்திருக்க மாட்டார். இந்த வீட்ல நிறைய அப்படித்தான்” என்று விளக்கம் அளிக்க மணிகண்டனுக்கும் விக்ரமனுக்கும் இடையில் வாக்குவாதம் நீண்டது. “எங்கயுமே என்னைப் பேச விட மாட்டேன்றீங்களே... சித்தாந்த ரீதியா 'அந்நியன்’ பாத்திரத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை" என்று விக்ரமனின் விளக்கம் தொடர்ந்தது.
மணிக்கும் விக்ரமனுக்கும் இடையில் நடந்த ‘அந்நியன்’ சண்டை
ஆம், அந்நியன் படத்தின் உள்ளடக்கம் விமர்சனத்துக்கு உரியதுதான். “வேலை வெட்டிக்குச் செல்லாமல் இருக்கும் அடித்தட்டு மக்கள், ஊழல்வாதிகள் போன்றவர்களைக் கொன்றொழித்து விட்டால் ஒரு நாடு வல்லரசாக முன்னேறும்" என்கிற அபத்தமான கருத்து அதன் மையமாக இருந்தது. ஆனால் ‘எனக்கு நடிப்பில் பரிச்சயம் இல்லை’ என்று விக்ரமன் சொன்னது ஓகே. ‘சித்தாந்த ரீதியாக உடன்பாடில்லை’ என்பது ஒரு நெருடல்.
கடும் நாத்திகவாதியான எம்.ஆர்.ராதா, ஆத்திகவாதி பாத்திரத்திலும் நடித்தார். அது போல் திராவிட கொள்கைகளில் ஆழ்ந்த பிடிப்புள்ள எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள், ஆன்மிகப் படங்களில் தெய்வங்களின் தோற்றத்தில் நடிப்பதில்லை என்பதைப் பிடிவாதமாகப் பின்பற்றினார்கள். ‘அந்நியன்’ பாத்திரத்தில் உடன்பாடில்லை என்றால், அது தரப்பட்ட போதே மறுத்து வேறொன்றை விக்ரமன் பெற்றிருக்கலாம். இருவருக்கும் வாக்குவாதம் நீளவே ‘இது விருது விழா’ என்று சொல்லிச் சமாதானப்படுத்தினார்கள்.
அடுத்ததாக ‘மிக மோசமான வசன உச்சரிப்பாளர்’ என்கிற விருதில், கீச்கீச்சென்று கத்திக் கொண்டிருந்த கதிரவனின் பெயர் அதிகமாகப் பரிந்துரைக்கப்பட, எவ்வித முகச்சுளிப்பும் இல்லாமல் இயல்பான புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்டார் கதிரவன். ‘மனதைத் தொட்ட பங்களிப்பாளர்’ விருது அசிமுக்குக் கிடைத்தது. ‘Worst Character Portrayal’ விருது, ‘மேட் மதனாக’ சொதப்பிய ஆயிஷாவிற்குக் கிடைத்தது. சிம்புவிடம் மன்னிப்பு கேட்டபடியே வந்து விருது பெற்றார் ஆயிஷா. (இவரையும் Portrayal-ஐயும் பிரிக்க முடியாது போல!)

‘பெஸ்ட் டான்ஸர் யார்?’ என்கிற கேள்வி வந்த அடுத்த கணம், சந்தேகமே எழாதபடி அனைவரும் ஏகமனதாக கதிரவனின் பெயரைச் சந்தோஷத்துடன் கூவ, கதிரவன் வந்து விருது பெற்றார். "எங்க அம்மா ஒரு டான்ஸர். அதனால எனக்கு கிடைச்சது சந்தோஷம்" என்று அவர் சொன்ன போது சபை மகிழ்ச்சியுடன் நெகிழ்ந்தது. ‘Most irritating performer’ விருதும் கதிரவனுக்குத்தான் கிடைத்தது. அதேதான் காரணம். கதவில் மாட்டிய எலியின் சத்தம்.
‘Best Supporting Actor’ விருதை ஆறுதலாகப் பெற்றார் ஆயிஷா. வில்லங்கத்தின் அளவை இன்னமும் கூட்ட முடிவு செய்தார் பிக் பாஸ். எனவே ‘Boring performer’ ஆகத் தேர்வாகும் நபர், அந்த விருதின் பலகையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம். இதற்காக நடந்த வாக்கெடுப்பில், ஜனனியின் பெயர் சில முறை வந்தாலும், இறுதியில் விக்ரமன் தேர்வானார். “என்னை விடவும் போரிங்கா பண்ணவங்கள்லாம் உக்காந்திருக்காங்க. சரி ஓகே” என்றபடி பெற்றுக் கொண்டார் விக்ரமன்.
இன்னொரு ‘Boring performer’-ஐ தேர்வு செய்ய வேண்டும். இதில் ஷிவினின் பெயர் நிறைய முறை வந்ததால் அவர் தேர்வானார். “எனக்கு ஒரு கோப்பையாவது கிடைச்சதே” என்று பாசிட்டிவ்வான புன்னகையுடன் விருதைப் பெற்றார் ஷிவின். இந்தச் சமயத்தில் இந்தத் தேர்விற்கு மறுப்பு சொன்ன மைனா “அவ ஆர்டிஸ்ட்டோ, பர்ஃபார்மரோ கிடையாது. இருந்தாலும் தன்னோட பெஸ்ட்டை தந்தா” என்று ஷிவினுக்கு ஆதரவு தந்தார்.
சிறுபிள்ளைத்தனமாக ரியாக்ட் செய்த ‘அராத்து’ வானதி
‘ஜனனி ஏதோ பேசணுமாம்’ என்று சொல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தன்னுடைய நடிப்பு குறித்து ஏடிகே, அசிம் போன்றோர் சொன்ன விமர்சனங்கள் ஜனனியைக் காயப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவற்றை முதிர்ச்சியாக ஏற்றுக் கொள்வதுதான் நல்ல பண்பு. ஆனால் மேடையேறிய ஜனனி, சிறுபிள்ளைத்தனமாகப் பேசியது ரசிக்கத்தக்கதாக இல்லை. “நான் அதிகம் படம் பார்த்ததில்லை. சரியா செய்யாததற்கு மன்னிக்கணும். ஆனால் குறையைச் சொன்ன அறிவாளிகள், அப்போதே சொல்லியிருந்தால் திருத்திக் கொண்டிருப்பேன். நான் சம்பந்தப்பட்ட நடிகையிடம் மட்டும் மன்னிப்பு கேட்பேன்” என்று தன்னை விமர்சித்தவர்களைக் குத்தும் விதமாகப் பேச, இதற்கு அசிமும் ஏடிகேவும் கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவித்தார்கள். “நாங்க எதுக்கு சொல்லித் தரணும். அவங்க அவங்க வேலையைத்தானே பார்க்க முடியும்?” என்று அசிம் கேட்டது நல்ல லாஜிக். ஆனால் ஒரு சிறந்த நடிகர், மற்றவர்களுக்கும் சொல்லித் தருவார். அதன் மூலம் ஒட்டுமொத்த படைப்பின் தரம் கூடும் என்கிற இன்னொரு கோணமும் உள்ளது.

நிறையச் சிரிப்போடும் வருத்தம், வாக்குவாதங்களோடும் விருது விழா முடிந்தது. பாத்ரூம் ஏரியா மூலையில் மணிகண்டனை மடக்கிய விக்ரமன் “ஐடியாலஜி பத்தி பேசினா உங்களுக்கு ஏங்க கோபம் வருது?” என்று வாக்குவாதத்தை ஆரம்பிக்க, கழிவறை அவசரத்திலிருந்தாரோ, அல்லது விக்ரமனிடமிருந்து எஸ்கேப் ஆக நினைத்தாரோ, வேகம் வேகமாகப் பதிலைச் சொல்லி விட்டு உள்ளே மறைந்தார் மணிகண்டன். “ஏன் ஓடறீங்க?” என்று விக்ரமன் இந்தச் சமயத்தில் கேட்டது மணியின் ஈகோவை உசுப்பியிருக்க வேண்டும்.
எனவே வெளியே வந்தவுடன் ‘வாங்கப் பேசலாம்’... என்று சொல்லி விட்டு அங்குமிங்கும் நடந்து கொண்டே விக்ரமனை அலைய வைத்தார். மணிகண்டன் இப்படிச் செய்வது நிச்சயம் முறையற்ற செயல். என்னதான் ஒருவரிடம் கடுமையான கருத்து வேறுபாடு இருந்தாலும், நேருக்கு நேர் அமர்ந்து விவாதித்து பிரச்னைக்கு தீர்வு காண முயல்வதுதான் அடிப்படையான பண்பும் நாகரிகமும். இதைத்தான் ஒரு நல்ல நண்பராக மைனாவும் பின்பு சுட்டிக் காட்டினார். ஆனால் அவரிடமும் கோபத்தை வெளிப்படுத்தினார் மணிகண்டன். இந்த விஷயத்தில் இவர் ஜூனியர் அசிமாக இருக்கிறார்.
‘ஒன்று அமர்ந்து பேசுங்கள்... அல்லது பேச விருப்பமில்லை என்று சொல்லி விடுங்கள்’ என்று விக்ரமன் செய்த ஆட்சேபம் நியாயமானது. பிறகு இருவருமே இந்தப் பிரச்னையைப் பற்றி மற்றவர்களிடம் அனத்திக் கொண்டிருந்ததோடு எபிசோட் நிறைந்தது.
‘இந்த வாரம் டபுள் எவிக்ஷன்’ என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அது ‘ஆயிஷா மற்றும் ராமாக’ இருக்கலாமா? காத்திருந்து பார்ப்போம்.