இந்த வார இறுதி எபிசோடில் ‘குறும்படம்’ போடுவதற்கான ஒரு வலுவான சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆம், எல்லைக்கோட்டை யார் முதலில் தொட்டது என்பதில் விக்ரமனுக்கும் ஜனனிக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டது. பலரும் ஜனனியின் சார்பாகவே சாட்சி சொன்னார்கள். ஆனால் விக்ரமன் முதலில் தொடுவது வீடியோவில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. எனவே பஞ்சாயத்து நாளில் விசாரணை நிகழ்ந்து, அதன் மூலம் நாமினேஷன் ஃப்ரீ முடிவில் மாற்றம் ஏற்படுமா?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
ஆட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கதிரவன் கண்கலங்கிக் கொண்டிருக்க அவருக்கு ஆறுதல் சொன்ன மணிகண்டன் “என்ன இருந்தாலும் ஷிவின் சிரிச்சது பெரிய தப்பு. ஒரு மனுஷன் உடைஞ்சு போய் பேசும் போது சிரிக்கலாமா? மனசாட்சி வேண்டாம்...” என்றெல்லாம் சொன்னது சரியானதுதான். புத்திசாலித்தனமாகவும் சமநிலையாகவும் ஆடிக் கொண்டிருந்த ஷிவினிடம் இப்போதெல்லாம் தடுமாற்றம் தெரிகிறது.

சைக்கிள் ஓட்டுவதற்காக விக்ரமனும் ஏடிகேவும் தேர்வு செய்யப்பட்டு பிறகு மாற்றம் செய்யப்பட்டதால், "ஏங்க அறிவிச்சிட்டு மாத்தறீங்க?” என்கிற நியாயமான கேள்வியை விக்ரமன் கேட்க “அதெல்லாம் நீங்க கேக்காதீங்க” என்று தனலஷ்மி சொன்னது எகத்தாளம். மீண்டும் முற்றுகைப் போராட்டம் ஆரம்பித்தது. நரகவாசிகள் மொத்தமாகப் பாய்ந்தார்கள். தள்ளுமுள்ளு காரணமாக ‘ச்சீ’ என்றபடி விலகி வந்தார் ஜனனி. விக்ரமனும் ஜனனியும் தனலஷ்மியைத் தாண்டிக் கொண்டு சென்றதில் எல்லைக்கோட்டின் மீது முதலில் கைவைத்த விக்ரமன் பிறகு வீட்டுக்குள் முதலில் சென்று ‘எதிர்பார்க்கலைல்ல’ என்கிற கோட்வேர்டை கத்தினார்.
எல்லைக்கோட்டு பிரச்னை – குறும்படம் வருமா?
ஆனால் ‘நான்தான் முதல்ல கை வெச்சேன்’ என்று ஜனனி சொல்லவே குழப்பம் ஏற்பட்டது. பக்கத்திலிருந்த தனலஷ்மி, ஜனனிக்கு ஆதரவாக அழுத்தம் திருத்தமாகச் சாட்சி சொன்னார். முன்பு நடந்த ஒரு சம்பவத்தில் தனலஷ்மிக்கு எதிராகப் பலர் சாட்சி சொன்னார்கள். குறும்படத்தின் மூலமாகத்தான் தனலஷ்மிக்குப் பிறகு நியாயம் கிடைத்தது. ஆனால் அதே தனலஷ்மியே இப்போது நன்கு தெரியாமல் சாட்சி சொல்ல வருவது முரண்.
பின்னால் எங்கோ இருந்த அசிமும் ஜனனிக்கு ஆதரவாகச் சாட்சி சொன்னார். “உள்ளே இருந்து பார்த்தா சைக்கிள் ஓட்டறது எப்படித் தெரியும்?” என்று ஷிவினை கேட்டது இதே அசிம்தான். எனில் பின்னால் இருந்த இவருக்கு மட்டும் எப்படி ஜனனி கோட்டைத் தொட்டது தெரியும்? இதே போல் மைனாவும் ஜனனிக்கு ஆதரவாகச் சொல்லி விட்டு பிறகு விக்ரமன் கேள்வி எழுப்பியதும் ‘அப்படித்தான் இருந்த மாதிரி தெரிஞ்சது’ என்று எஸ்கேப் ஆனார். ஆக... விக்ரமன் வெற்றியடைவதில் அங்குப் பலருக்கு விருப்பமில்லாதது போல் தோன்றுகிறது. ஜனனியுடன் மல்லுக்கட்டிய விக்ரமன், பிறகு சோர்ந்து போய் ‘ஓகே’ என்று விட்டுத் தந்துவிட்டார்.

தனது வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் தலைவரிடம் ஆசி வாங்கச் செல்லும் எம்.எல்.ஏ மாதிரி குடுகுடுவென்று வெளியே ஓடிய ஜனனி, கண்ணீருடன் அசிமுக்கு நன்றி சொல்ல, ‘கால்ல விழு. குமாரு... கால்ல விழு’ என்கிற தோரணையில் ‘ஓகே... ஹேப்பிதானே..?’ என்று கெத்தாகக் கேட்டார் அசிம். தனது வெற்றிக்கு அசிம்தான் உதவினார் என்பதை ஜனனியே வெள்ளந்தியாக பொதுவில் காட்டிக் கொடுத்து விட்டார். எனில் அசிம் செய்வதற்குப் பெயர் ஃபேவரிட்டஸம் இல்லையா? திடீரென்று யாருக்காவது உதவுவது போல் செயல்பட்டு அவர்களை தமக்கு இணக்கமானவராக ஆக்கிக் கொள்வதில் அசிமின் வழக்கமான தந்திரம் வெளிப்படுகிறது. போலவே ‘யார் வரக்கூடாது?’ என்கிற சூட்சுமமும் அதன் உள்ளே ஒளிந்திருக்கிறது.
‘ஒரே பாம். ஊரே டோட்டல் க்ளோஸ்’ – அசிமின் தற்பெருமை
ஜனனி உள்ளே வந்து விட்டதால், 'வெளியே போகப் போவது யார்?’ என்கிற கேள்வி எழுந்தது. ‘நான் போக மாட்டேன்’ என்று பிடிவாதமாக தனலஷ்மி சொல்ல கதிரவன் பெருந்தன்மையுடன் விட்டுத் தந்தார். உண்மையான தேவதையின் அம்சம் இதுதான். “என்னோடது ரியல் எமோஷன். சிலர் பண்ற மாதிரி கேமராக்காக பண்ணலை. எனக்கும் ஹார்ஷா விளையாடத் தெரியும். ஆனா விளையாட மாட்டேன். இப்ப பாரேன்... அசிம் வருவான்... ‘சாரி மச்சான்’ன்னு சொல்லிட்டு நாளைக்கு அதையேதான் பண்ணுவான்” என்றெல்லாம் மணியிடம் அனத்திக் கொண்டிருந்தார் ஏடிகே.
‘அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்’ என்று மைனா சொன்னதன் காரணமாக, மணி கோபித்துக் கொண்டு விலகினார். ‘உங்க சண்டை இருக்கட்டும். என் பெருமையைக் கேளு’ என்பது போல் “நான் ஒரு கேம்லதான் உள்ளே வந்தேன். ஒட்டுமொத்த ஆட்டமும் தலைகீழா மாறிடுச்சு" என்று தற்பெருமை பேசிக் கொண்டிருந்தார் அசிம். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தத் தற்பெருமை பலூனை உடைத்து விட்டார் தனலஷ்மி. “தனியா ஆடறதாத்தான் எப்பவும் நீங்க சொல்வீங்க. ஆனா இந்த முறை நீங்க ஆடினது தனி ஆட்டம் இல்ல. ஜனனி உள்ளே போகறதுக்குத்தானே நீங்க பண்ணீங்க... உங்களுக்காக விளையாண்டிருந்தா கூட ஓகே... நீங்க பண்ணது ஃபேவரிட்டஸம்" என்று தனலஷ்மி அசிமிடம் வாதத்தை வலுவாக முன்வைக்க, அசிமால் பதில் பேச முடியவில்லை.

அசிம் ஒரு முக்கியமான ஆட்டக்காரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தன்னால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்று மிகையாக நினைத்துக் கொள்வது அபத்தம். கிச்சன் ஏரியாவில் ஒரு மினி வாக்குவாதம் நடந்தது. திடீரென்று பழைய விஷயத்தைக் கிளறிய ஷிவின், ‘அழுதே காரியம் சாதிக்கறதுல என் போ் சொன்னல்ல?” என்று தனலஷ்மியை நோக்கிக் கேட்க, “இரு இரு... நீயும் என்னை ரியாக்ஷன் சேர்ல உக்கார வெச்சு கேள்வி கேட்டல்ல” என்று பழைய புழுதிகளை இருவரும் கிளப்பிக் கொண்டார்கள். கேப் விடாமல் ஷிவின் வாக்குவாதம் செய்யவே "கொஞ்சம் நேரம் அமைதியா இருக்க விடறியா?” என்று தனலஷ்மியே சோர்ந்து விட்டார். பேசியே மற்றவர்களை டயர்ட் ஆக்குவதில் மாஸ்டரான தனலஷ்மிக்கே ஒரு சோதனை. ஆனால் ஷிவின் ஏன் இப்படி ஆகிவிட்டார்?!
அசிமின் பிறந்த நாள் என்பதால் வீடியோவின் மூலமாக வாழ்த்தும் கேக்கும் வந்தது. சக ஹவுஸ்மேட்ஸ்கள் ஒன்று கூடி புன்னகையுடன் அசிமுக்கு வாழ்த்து சொன்னார்கள். “எல்லோருமே இங்க டிசர்விங்தான். ஒருத்தரை வெளியே அனுப்பிதான் ஜெயிக்கணுமா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று கலங்கிக் கொண்டிருந்த கதிரவனுக்கு ஏடிகே ஆறுதல் சொன்னார்.
இறுதி ஸ்வாப்பிங் – ஜனனிக்கு அடித்த அதிர்ஷ்டம்
நாள் 68 விடிந்தது. இந்தப் பாடலை ஏன் இன்னமும் பிக் பாஸ் டீம் தேர்வு செய்யவில்லை என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். வார டாஸ்க்கின் கான்செப்டிற்கு மிக நெருக்கமான பாடல் இது. ஒருவழியாக இன்று ஒலித்தது. ‘தீமைதான் வெல்லும்’ என்கிற பாடல் வந்ததும், அதன் வரிகளுக்கு ஏற்ப மக்கள் வார்ம்-அப் ஆனார்கள்.

ஷிவினுக்கான அறிவுக் கேள்விகள் வந்தன. ‘இந்தியா ஏவிய முதல் செயற்கைக் கோளின் பெயர் என்ன?’ என்கிற கேள்விக்கு, ‘தெரியாது’ என்று முதலில் சொல்லி விட்ட ஷிவின், ‘பிக் பாஸ்... இப்ப ஞாபகம் வந்துடுச்சு.. சொல்லட்டா?’ என்று கொஞ்சி, கெஞ்சிக் கேட்டாலும் அதற்கு அவர் மசியவில்லை. இதர மூன்று கேள்விகளின் பதில்கள் சரியாக அமைந்ததால் 150 மதிப்பெண்கள் தந்து வெளியே அனுப்பினார். இல்லையெனில் விக்ரமனைப் போலவே ஷிவினும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொன்ன நபராக இருந்திருப்பார்.
அடுத்து வந்தவர் ஜனனி. ‘சொல்லுங்க...’ என்று அவர் கேட்கும் போதே பதற்றத்தில் குரல் நடுங்கியது. டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஹவுஸ்மேட்ஸ்களை நோக்கி ‘ரெடியா?’ என்று ரசிகர்களை நோக்கி கையாட்டும் நடிகை போலத் தயாரானார். இவருக்கு வந்திருந்த கேள்வி ஒன்று ரகளையாக இருந்தது. அதில் பிக் பாஸ் டீமின் குறும்பு புரிந்தது. ‘உங்களிடமிருக்கும் ஆப்பிள் மற்றும் மாதுளம் பழங்களில் மற்றவர்களுக்குக் கொடுத்தது போக மீதம் என்ன இருக்கும்?’ என்று கேட்கப்பட, ஜனனி தடுமாறினார். “யாருக்கும் தரமாட்டேன்னு சொல்லு" என்று அவரின் கேரக்டருக்கான பதிலை வீட்டில் உள்ளவர்கள் ஜாலியாகக் கத்த, பிறகு அதையே சொல்லி ஐம்பது மதிப்பெண்ணுடன் வெளியேறினார் ஜனனி.
ஆட்களை மாற்ற வேண்டிய நேரம். ‘இது இறுதியான ஸ்வாப்பிங் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று அறிவிப்பு செய்தார் பிக் பாஸ். சொர்க்க வாசிகளின் கலந்துரையாடலில் “அசிமை வேணா எடுக்கலாம். பிறந்த நாள் வேற” என்று பாசத்துடன் சொன்னார் அமுதவாணன். ஆனால் பக்கத்திலிருந்த ஜனனியோ ‘அசிமை எடுக்க வேணாம்’ என்று சொல்லி ஜெர்க் தந்தார். (அப்ப ஆசீர்வாதம் வாங்கினதெல்லாம் பொய்யா கோப்பால்?!). இறுதியில் ஏடிகேவின் பெயர் பெரும்பான்மையாக வந்தது. தனலஷ்மிக்கு இதில் விருப்பமில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

நரகவாசிகளின் கலந்துரையாடலில் தனலஷ்மியின் பெயர்தான் பெரும்பான்மையாக வந்தது. இதற்கான காரணத்தை விக்ரமன் சொன்ன போது ‘வெற்றியையும் தோல்வியையும் சமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் தனலஷ்மியிடம் இல்லை. எனவே அவரைத் தேர்வு செய்கிறோம்’ என்று சொல்ல, முகம் இருள் அடைந்த தனலஷ்மி சர்காஸ்டிக்காக கைதட்டினார். ஆக... ‘நாமினேஷன் ‘ப்ரீ ஜோன்’ வாய்ப்பைப் பெறுபவர்களின் பட்டியல்: மணிகண்டன், அமுதவாணன், ஜனனி மற்றும் ஏடிகே. குழந்தைக்குப் பெயர் ஆலோசனை சொல்ல வந்தவன், நைசாக தன் பெயரையும் அதில் இணைத்த கதையைப் போல ஜனனியும் இந்தப் பட்டியலில் வந்தது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். இத்துடன் இந்த டாஸ்க் முடிவதாக பிக் பாஸ் அறிவிக்க மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் வேடங்களைக் கழற்றிப் போட்டார்கள்.
ஃபைனலை நோக்கி திட்டமிடும் அசிம்
தனலஷ்மி தனிமையில் சென்று கேமராவை நோக்கி சௌகரியமான பொசிஷனில் உட்கார்ந்து கொண்டார். “என்னை வெளில அனுப்பிடுங்க பிக் பாஸ்” என்று கதறுவாரோ என்று தோன்றியது. நல்ல வேளை, அப்படியில்லை. “நானும் பத்து பிரெண்ட்ஸ்களை சேர்த்து வெச்சிருந்தா நல்லாயிருக்கும். பிரெண்ட்ஷிப்தான் இங்க முக்கியமா இருக்கு” என்பது அவரின் புலம்பல். இந்த டாஸ்க்கில் தனலஷ்மியின் உழைப்பைக் குறைத்துச் சொல்ல முடியாது. ஆனால் ஒரு தேவதைக்கான பொறுமையும் நிதானமும் அவரிடம் இல்லை என்பதுதான் மைனஸ் பாயிண்ட்.
பொதுவாக டாஸ்க் முடிந்தவுடன் சிறப்பாகப் பங்களித்தவர், சுமாராகப் பங்களித்தவர் என்றுதான் தேர்வு நடைபெறும். அதை மாற்றிய பிக் பாஸ், ‘மக்களுக்குச் சுவாரசியம் ஏற்படும் வகையில் ஆடியவர் யார், சுமாராக ஆடியவர் யார்?’ என்று இரண்டிரண்டு நபர்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். ‘சூப்பர் ஆட்டக்காரர்கள்’ கேட்டகிரியில் அசிம், அமுதவாணன், தனம் ஆகிய மூவரின் பெயர்களும் அடிக்கடி வந்தன. ”என்னமோ சைலண்ட்டா பண்றாரு... ஃபைனலை நோக்கித்தான் அவரோட தொலைநோக்கு திட்டம் இருக்கு” என்று அசிமை சுட்டிக் காட்டி மைனாவும் ஷிவினும் பாராட்ட, மகிழ்ச்சியில் தனக்குத் தானே கைதட்டிக் கொண்டார் அசிம். இறுதியில் அசிம் மற்றும் அமுதவாணனின் பெயர்கள் வந்தன.

அடுத்தது சலிப்பான ஆட்டக்காரர். இதில் ரச்சிதா, ஜனனி, விக்ரமன் ஆகிய மூன்று பெயர்களும் அடிக்கடி வந்தன. இறுதியில் ரச்சிதாவும் ஜனனியும் தேர்வானார்கள். அவர்களின் கழுத்தில் ‘Boring Player’ என்கிற பலகை மாட்டப்பட்டது. நூலிழையில் விக்ரமன் தப்பித்து விட்டார். இந்தத் தேர்வு காரணமாக மூலையில் முடங்கி கண்கலங்கிய ஜனனியிடம் ‘நெருங்கலாமா, வேண்டாமா?’ என்று தயங்கி நின்று கொண்டிருந்தார் அமுதவாணன்.
இன்று பஞ்சாயத்து நாள். ‘எல்லைக்கோட்டைத் தொட்டது விக்ரமனா, ஜனனியா?’ என்பது தொடர்பான குறும்படம் வெளியாகலாம். மேலும் பல விசாரணைகளை கமல் சுவாரஸ்யமாக மேற்கொள்வார் என்று நம்புவோம். இந்த வாரத்தின் வெளியேற்றம், ஆச்சரியத்தைத் தரும் தேர்வாக அமையும் என்று தோன்றுகிறது. காத்திருந்து பார்ப்போம்.