“அசிம்... இதுதான் உங்க ஸ்ட்ராட்டஜின்னா சொல்லிடுங்க. மத்தவங்களை அதுக்கேற்ப விளையாடச் சொல்றேன்” – இப்படியாக அசிமிடம் கமல் எச்சரிப்பார். அசிமும் சிரித்தாற் போல் முகத்தை வைத்துக் கொண்டு “அப்படில்லாம் இல்லை சார்” என்று பம்முவார். பிறகு மக்களால் அசிம் காப்பாற்றப்படுவார். இதுவே தொடர்கதையாகி “நீங்க என்ன விளக்கம் சொல்லுவீங்கன்னு எனக்கே மனப்பாடம் ஆகிடுச்சு” என்று கமலே நொந்துபோகும் அளவிற்கு நிலைமை ஆகி விட்டது.
அசிம் தன்னுள் இருக்கிற மிருகத்தை, அவசியம் ஏற்படும் போது அவிழ்த்து விடுவதும், எச்சரிக்கையான சமயங்களில் கட்டிப் போட்டு வைப்பதும் என, தனது ஆட்டத்தைத் தெளிவாக ஆடிக் கொண்டிருக்கிறார். தனக்கு வேண்டியவர்களைத் தவிர, மற்றவர்கள் எவராக இருந்தாலும் – பெண்கள் உட்பட - தூக்கி எறிந்து கடுமையாகவும் அராஜகமாகவும் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அது குறித்து அவர் வருந்துவதோ, மன்னிப்பு கேட்பதோ கூட பெரிதும் கிடையாது. இந்த ‘கெத்தை’ பெரும்பாலான மக்கள் ரசிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

உணர்ச்சிப்பட்டு தவறு இழைப்பவர்களைச் சட்டம் கூட சற்று கருணையோடு பரிசிலீக்கிறது. ஆனால் தப்பு என்பது அப்படியல்ல. அது பின்விளைவுகளை அறிந்து தெரிந்தே செய்வது. அசிம் செய்வது தப்பான ஆட்டம்.
...தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்...
– என்பது எம்.ஜி.ஆர் திரைப்படப் பாடலில் உள்ள வரிகள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வேக்அப் சாங், சமையல் போட்டி, காஸ் ஸ்டவ் பரிசு போன்ற உதிரியான சமாச்சாரங்களை விட்டு விட்டு மெயின் மேட்டருக்கு வருவோம். ரேங்கிங் டாஸ்க். இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ரேங்கிங் என்பது என்ன? ஒரு சிலரின் செயல்பாடுகளை, தகுதியுள்ள ஒரு தனிநபரோ அல்லது ஒரு குழுவோ சில அளவுகோல்களை வைத்து அவர்களை நேர்மையாகவும் கறாராகவும் மதிப்பிடுவது; அதற்கேற்ப வரிசைப்படுத்தி அறிவிப்பது. இல்லையா? ஆனால் பிக் பாஸில் என்ன நிகழ்கிறது? நெரிசல் அதிகமான பேருந்தில் வலிமையுள்ளவன் அடித்துப் பிடித்து கர்ச்சீப் போட்டு இடம் பிடிப்பது போல அவரவர்களே முட்டி மோதி இடத்தைப் பிடிக்க வேண்டும். ஏனெனில் இப்படி நிகழ்ந்தால்தான் சர்ச்சைகள் நிகழும். கன்டென்ட் கிடைக்கும். டிஆர்பி எகிறும்.

ஏனெனில் நமக்குக் கண்ணியமாகவும் நேர்மையாகவும் ஒரு விவாதத்தைச் செய்யத் தெரியாது. நம் தரப்பில் உள்ள எதிர்மறைத்தன்மைகளை ஒப்புக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டு கோபமாகக் கத்தி நியாயப்படுத்துவோம். இத்தகைய சண்டைகளைத்தான் ஆவலோடு அமர்ந்து வேடிக்கை பார்க்கும் மனோபாவமும் நம்மிடம் உள்ளது. அறிவார்ந்த விவாதங்கள் எங்கு நிகழ்கின்றன? அப்படியே நிகழ்ந்தாலும், அவற்றைத் தேடிச் சென்று பார்ப்பது நம்மில் எத்தனை பேர்? ஆக... நெகட்டிவிட்டியை நம் மனம் உள்ளூர தேடி ரசிக்கும் மனோபாவத்தைத்தான் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக வணிகப்படுத்துகின்றன. அதற்கேற்ப தீனியை அளிக்கின்றன.
இந்த ரேங்கிங் டாஸ்க்கையே மிகக் கண்ணியமாகவும் சுயபரிசீலனையுடனும் நேர்மையாகவும் தர்க்கத்திறனுடனும் ஆடி அவரவர்களின் இடத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் எந்தவொரு சீசனிலும் அப்படி நடந்திருக்கிறதா? உடல் ரீதியாக வலிமையாகவும் பேச்சுத் திறனுடனும் இருக்கிறவர்கள், தங்களின் சவடால்களின் மூலம் அடித்துப் பிடித்து முதல் இடத்தில் நின்று விடுவார்கள். துணிச்சல் உள்ள சிலர் மோதிப் பார்த்து விட்டு விடுவார்கள். மற்ற அனைவரும் ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்று நைசாக ஒதுங்கி விடுவார்கள். இதுதான் நேற்றைய எபிசோடிலும் நிகழ்ந்தது.
வீட்டை மீண்டும் ரத்த பூமியாக்கிய பிக் பாஸ்
சண்டைக்குப் பயந்து அல்லது அதற்கு விருப்பமில்லாமல் ஒருவர் விட்டுக் கொடுத்து விட்டால் என்ன நிகழும்? விசாரணை நாளில் கமல் வந்து “ஏன் ஒன்றாம் இடத்துக்கு யாரும் போட்டியிடலை?” என்று கேட்பார். இதற்குப் பொருள் கமலும் முட்டி மோதி சண்டையிடச் சொல்கிறார் என்பதல்ல. ஜனநாயக முறையில் விவாதத்தைக் கண்ணியமாக நிகழ்த்தி அவரவர்களுக்குத் தகுதியான இடத்துக்குப் போட்டியிடும் ஆதாரமான முயற்சியைக் கூட ஏன் செய்யவில்லை என்பதே அதன் பொருள்.
பிக் பாஸ் போன்ற எதிர்மறைத்தன்மை கொண்ட நிகழ்ச்சியின் கடுமையை ஓரளவிற்காவது மட்டுப்படுத்துவது அதன் நெறியாளரிடம்தான் இருக்கிறது. டிஆர்பிக்காக அவரும் சட்டையைக் கழற்றிவிட்டு கோதாவில் இறங்கினால் முழு நாசம்தான். நல்லவேளையாக, கமல் போன்ற பொறுப்புள்ளவர்கள் நெறியாளர்களாக இருப்பதால் இந்த நிகழ்ச்சியின் கடுமை சற்றாவது தமிழில் மட்டுப்படுகிறது.

கடந்த மூன்று நாள்களாக மழலைப் பள்ளி, ஹைஸ்கூல், காலேஜ் என்று பிக் பாஸ் வீடு நெகட்டிவிட்டி இல்லாமல் ஜாலியாகச் சென்று கொண்டிருந்தது. அது பிக் பாஸிற்குப் பொறுக்கவில்லை. இப்படியே நிகழ்ச்சி சிரிப்பாகப் போனால், ‘நம் பிழைப்பு சிரிப்பா சிரிச்சுடுமே’ என்று அவருக்குப் பயம் வந்திருக்க வேண்டும். எனவே ‘ரேங்கிங் டாஸ்க்கை’ மீண்டும் உக்கிரமாக ஆரம்பித்தார்.
மக்கள் வழக்கம் போல் கர்ச்சீப் போட்டு இடம் பிடிப்பது போல் வந்து நின்றார்கள். அசிம் ஒன்றாம் இடத்திலும், அமுதவாணன் இரண்டாம் இடத்திலும் தனலஷ்மி மூன்றாம் இடத்திலும் வந்து நின்று கொண்டார்கள். தாமதமாக வந்த ஷிவினும் விக்ரமனும் “ஓகே... அந்தந்த இடத்திற்கு ஒருவர் எப்படித் தகுதியானவர்ன்னு பேசுங்க” என்று உரையாடலை ஆரம்பித்தார்கள்.
“எனக்கு 2வது இடம் வேணும். என்னோட கேரக்டரை நான் மாத்தினதில்லை. விளையாட்டில் நூறு சதவிகிதம் தந்திருக்கேன். தனிப்பட்ட நட்பு வேற, கேம் வேற...ன்றதுல நான் தெளிவா இருந்திருக்கேன்” என்று தன் தரப்பு நியாயத்தைச் சொன்னார் ஷிவின். முதல் இடத்துக்காகப் போட்டியிட்ட விக்ரமன் “நான் என்னைத் துளி கூட மாத்திக்கலை. என்னோட கொள்கை, கோட்பாடு வெச்சுதான் விளையாடறேன். சொல் ஒன்று செயல் ஒன்றா இருக்கிறேன். யாரையும் நான் காயப்படுத்தினது இல்ல. எல்லோரையும் சமமா அணுகறேன். மத்தவங்களை மட்டம் தட்டி விளையாடியதில்லை. டாஸ்க்ல நூறு சதவிகிதம் தந்திருக்கேன்” என்று தன் தரப்பு பாயின்ட்டுகளை அடுக்கினார்.
ஒன்றாம் இடத்தில் அழிச்சாட்டியமாக நின்ற அசிம்
முதல் இடத்திற்குப் போட்டியிட்ட அசிம், “என்னோட கோபத்தையே குற்றமா சொல்றாங்க. கோபம் எல்லோருக்கும் வருகிற விஷயம்தான். ஒருதலைபட்சமா நடந்தாதான் எனக்குக் கோபம் வரும். நான் தொடர்ந்து மக்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறேன். எனவே நம்பர் 1 இடத்திற்கு நான் தகுதியானவன்” என்று தன்னுடைய பாயின்ட்டுகளைச் சொன்னார். ஆனால் அவர் இத்தோடு நிறுத்தியிருந்தால் கூட சரி. “நான் விட்டுத்தரணும்னா மூணு பேருக்கு விட்டுத் தருவேன்” என்று அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ஏடிகே ஆகிய மூவரையும் அவர் சுட்டிக் காட்டியது நிச்சயம் போங்காட்டம். தன்னுடைய தகுதியை மட்டும்தான் அசிம் முன்மொழிய வேண்டுமே ஒழிய, குறிப்பிட்ட நபர்களுக்கு விட்டுத்தருவேன் என்று சொல்வது குழு மனப்பான்மையைத் திட்டமிட்டு வளர்க்கும் தந்திர அரசியல்.
4-ம் இடத்தில் மணிகண்டனும், 5-ம் இடத்தில் ஏடிகேவும் 6-ம் இடத்தில் ரச்சிதாவும், 7-ம் இடத்தில் மைனாவும், 8-ம் இடத்தில் கதிரவனும் நின்று தங்களின் பாயின்ட்டுகளைச் சொன்னார்கள். சிலருக்கு தாங்கள் நின்றிருந்த இடத்தை விடவும் முன்னேற விருப்பம் இருந்தது. “கிடைச்சா ஓகே... அதுக்குன்னு கடைசில தள்ளி விட்றாதீங்க” என்று மென்மையாகச் சொல்லி விட்டுச் சிரித்தார் கதிரவன்.

மூன்றாம் இடத்தை மைனா கோரியதால், அங்கு நின்று கொண்டிருந்த தனலஷ்மி தன் தரப்பு பாயின்ட்டுகளைச் சொல்ல “சரி... கூட்டிட்டு போங்க" என்று காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் வசனம் போல விட்டுக் கொடுத்து விட்டார் மைனா. (என்னய்யா ஆட்டம் இது?!) "அமுதவாணன் ஏன் இரண்டாம் இடத்துக்குத் தகுதியில்லை?" என்கிற விஷயத்தைக் கையில் எடுத்த ஷிவின் ‘கன்வேயர் பெல்ட்... ஜனனி’ என்கிற தலைப்பை ஆரம்பிக்க, அமுதவாணனும் பதிலுக்கு மல்லுக்கட்டினார். இந்தச் சமயத்தில் அமுதவாணனுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்தார் அசிம். “நான் 2-ம் நம்பர் இடத்திற்காக அமுதவாணன் கிட்ட பேசறேன்... நீங்க ஏன் குறுக்கால வரீங்க?” என்று ஷிவின் கேட்டாலும் அசிம் அடங்கவில்லை. கத்திக் கொண்டே இருந்தார்.
“நீங்க மைக் மாட்டலை... வேக் அப் சாங்கிற்கு எழுந்து ஆடலை...” என்றெல்லாம் பாயின்ட்டுகளை ஆவேசமாக அமுதவாணன் எடுத்து வைக்க, “பாடலுக்கு எழுந்து ஆடணும்-ன்னு கட்டாயம் கிடையாது” என்று ஷிவின் விதாண்டாவாதம் செய்ய “அப்ப பிக் பாஸ் பாட்டு போடத் தேவையேயில்லையே?" என்ற அமுதவாணன், "நான் இதுவரைக்கும் ஜெயிலுக்குப் போனதில்லை" என்று கூடுதல் பாயின்ட்டுகளை வைத்தார். மைக் போடாத விஷயத்தில் ஏடிகேவிற்கும் கோபம் வந்து அவரும் சிலவற்றைக் கத்தினார். இதனால் நொந்து போன ஷிவின் “சரிங்கப்பா... நான் ஒன்பதாவது இடத்துக்குப் போறேன்” என்று எரிச்சலுடன் விலகினார்.
அசிமுக்கும் விக்ரமனுக்கும் இடையில் நிகழ்ந்த கடுமையான வாக்குவாதம்
1-ம் இடத்துக்கு விடாமல் போட்டியிட்ட விக்ரமன் "நான் யாரையும் காயப்படுத்தினதில்லை. யாருக்கு எதிராகவும் சதி, சூழ்ச்சி செய்ததில்லை” என்று ஆரம்பிக்க, அசிம் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால் தன் தரப்பு நியாயங்களைப் பேசாமல் “எனக்கும் வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டு நடந்துக்கிட்டே பேசத் தெரியும்” என்று சொற்களில் எகத்தாளம் பொங்கச் சீண்டுதலை ஆரம்பித்தார். “என்னைப் பேசி முடிக்க விடுங்க” என்று விக்ரமன் தொடர்ந்து கோரிக்கை வைத்தாலும் “நீங்க விடிய விடியப் பேசிக்கிட்டு இருந்தா யாரு உக்காந்து கேட்கறது?” என்று அதற்கும் நக்கலாகவே எதிர்வினை செய்தார் அசிம்.

“நீங்க ஷிவினுக்குத்தான் எப்பவும் சப்போர்ட் பண்ணுவீங்க” என்பது விக்ரமனின் மீது அசிம் எரிச்சலுடன் தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டு. இதற்காக ஜால்ரா அடிப்பது போன்ற வில்லங்கமான சமிக்ஞையை அசிம் செய்ததெல்லாம் அநியாயம். விக்ரமனும் ஷிவினும் ஏறத்தாழ ஒரே அலைவரிசையில் சிந்திப்பதால் இணக்கமான மனநிலையில் உள்ளவர்கள் என்பது உண்மைதான். ஆனால் மாற்றுக்கருத்துகள் எழும் நிலையில் ஒருவரையொருவர் ஆவேசமாக எதிர்த்துக் கொள்வார்கள். ஆனால் அசிம் தனது நண்பனான மணிகண்டனை ஒருமுறை கூட எதிர்த்துப் பேசியதில்லை.
தன்னுடைய பெயரை அசிம் இழுத்ததால் எரிச்சல் அடைந்த ஷிவின், “வேணாம்னு பார்த்தேன்... நானும் ஒன்றாம் இடத்திற்குப் போட்டியிட விரும்பறேன்” என்று கிளம்பினார். அசிமும் ஏடிகேவும் நட்பாக இருப்பதைப் பற்றி அவர் பேச, “ஜோடின்னுலாம் பேசாதீங்க” என்று ஏடிகே தனது ஆட்சேபத்தைத் தெரிவித்தார். “மக்கள் இதை முடிவு பண்ணட்டும். நான் பத்தாம் இடத்துக்குப் போறேன்” என்று நொந்துபோன குரலில் சொன்னார் விக்ரமன். அசிமின் அட்ராசிட்டியால் எரிச்சல் அடைந்த மைனாவும் எழுந்து வந்து "எனக்கும் ஒண்ணாம் இடம் வேணும். அசிமால் என்னுடைய ஆட்டம் பாதிக்கப்பட்டிருக்கு. மத்தவங்களைக் குறை சொல்லித்தான் அவரு விளையாடறாரு. மத்தவங்களைக் கீழே இறக்கி அதன் மூலம் மேல நிக்கலாம்ன்னு பார்க்கறாரு” என்று புகார்களை அடுக்கினார்.
‘விக்ரமன் கட்டப்பஞ்சாயத்து செய்யறாரு’ – அசிமின் அட்ராசிட்டி
மீண்டும் உரையாடலுக்கு வந்த விக்ரமன், “ஜனனியின் பெற்றோர் இன்னொரு நாட்டிலிருந்து வருவதால், ஜனனிக்காக விட்டுத் தந்ததாக அசிம் சொன்னார். ஆனால் இதே அசிம்தான் ‘ஜனனியை உள்ளே விடக்கூடாது’ என்று இன்னொரு டாஸ்க்கில் சொன்னார்” என்று ஆரம்பிக்க, இதற்குப் பதில் சொல்லத் திராணியில்லாத அசிம் “கட்டப்பஞ்சாயத்து பண்றீங்களா... இதுவே பழக்கம் ஆயிடுச்சா?” என்று இந்த உரையாடலை அநாவசியமான இடத்துக்கு எடுத்துச் சென்றார். ‘கட்டப்பஞ்சாயத்து’ என்னும் சொல்லை விக்ரமன் கடுமையாக ஆட்சேபித்தாலும், மீண்டும் மீண்டும் அதையே சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் அசிம்.

ஷிவினும் வந்து இந்தச் சமயத்தில் உரையாட “நீ என்ன வேணா பேசிட்டே நில்லு. ஒன்றாம் இடத்தை நான் விரும்பறவங்களுக்குத்தான் தருவேன். உனக்கு விட்டுத்தர மாட்டேன்” என்று அந்த இடத்திற்குப் பட்டா வாங்கியவர் போல் பேசினார் அசிம். ஒரு கட்டத்தில் "இந்த வெங்காயம் வியாக்கியானமெல்லாம் எங்கிட்ட பேசாத... தைரியம் இல்லைன்னு யாரைப் பார்த்து சொல்ற?” என்று அச்சுறுத்தும் உடல்மொழியில் ஷிவினை அசிம் நெருங்க, ஏதாவது ரசாபாசமாக ஆகி விடப் போகிறது என்கிற அக்கறையுடன் நெருங்கினார் விக்ரமன். “நீங்க எனக்கு சப்போர்ட் பண்ண வேணாம். இவரைப் பார்த்துல்லாம் எனக்குப் பயம் இல்லை” என்று ஷிவின் மறுத்தது கெத்தான விஷயம். விக்ரமனைத் தாண்டி ஷிவினிடமும் தன் அராஜகமான உடல்மொழியை அசிம் வெளிப்படுத்தியது முறையான செயல் அல்ல.
“மக்கள் பார்த்துட்டு இருக்காங்க" – விக்ரமன் எச்சரிக்கை
“மக்களே பார்த்துக்கங்க... இதுலயும் அசிம் கிட்ட பிஹெவியர் வெளிப்படலை. இதுவே அவர் நம்பர் 1 இடத்துக்குத் தகுதியில்லைன்றதுக்கு அடையாளம்” என்று விக்ரமன் சொன்னதும் சிலர் கைதட்டினார்கள். “விளையாட்டுக்காகத் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தக்கூடாது. மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. ஒவ்வொரு முறையும் கமல் அண்ணன் முன்னாடி மன்னிப்பு கேட்கறீங்க. ஆனா மறுபடியும் ஆரம்பிச்சடறீங்க. மக்கள் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தராங்க... அவ்வளவுதான்... நான் கட்டப் பஞ்சாயத்து பண்ணதுக்கு நீங்க இப்ப உதாரணம் சொல்லியாகணும். அதுவரைக்கும் நான் இங்கயே நிப்பேன்” என்று விக்ரமன் ஆவேசத்துடன் கேள்வி கேட்க, அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் “தண்ணி வேணுமா?” என்று சிறுபிள்ளைத்தனமாக வெறுப்பேற்ற முயன்றார் அசிம். இதுவா விவாதம் செய்யும் முறை?!

"உங்ககிட்ட பதில் இல்ல. அப்படின்னா கட்டப்பஞ்சாயத்துன்னு சொன்னதுக்கு மன்னிப்பு கேளுங்க” என்று ஷிவின் சொன்னாலும் ‘சாரில்லாம் கேட்க முடியாது’ என்று அசிமின் பதில் எகத்தாளமாக வந்தது. “இதெல்லாம் ஓகே, ஆனா மேட்டருக்கு வாங்க...” என்று தன் காரியத்தில் கண்ணாக இருந்த பிக் பாஸ் “முடிவு என்னாச்சு... வெளிப்படுத்துங்க” என்றார்.
“நான் யாரையும் காயப்படுத்தாம கண்ணியமா விளையாடியிருக்கேன். எல்லோருக்கும் சமமா மரியாதை கொடுத்து பேசியிருக்கேன்” என்று தன் தரப்பு பாயின்ட்டுகளை இறுதியாகச் சொன்ன விக்ரமன் “எனக்கு ஒண்ணாம் இடம் வேணும். ஆனா அது கிடைக்கலை. எனவே பத்தாம் இடத்துக்குப் போறேன்” என்று சொல்லி விலகினார். ஒன்றாம் இடத்தை விட்டு அழிச்சாட்டியமாக அசிம் நகராததால் மற்றவர்களும் அவரவர்களின் இடத்தில் நின்று கொண்டார்கள்.
தான் தவறு செய்து விட்டதாக உணர்ந்தால், மன்னிப்பு கேட்கும் நல்ல மனோபாவம் ஏடிகேவிடம் உண்டு. விக்ரமனின் உணர்ச்சிகரமான வாக்குமூலம் அவரை அசைத்திருக்க வேண்டும். “நான் இப்ப சொல்றேன். நீங்க ஒண்ணாம் இடத்துக்குத் தகுதியானவர்தான்” என்று விக்ரமனுக்கு ஆதரவாகச் சாட்சியம் சொன்னதற்குப் பாராட்டு. “எனக்கு நீதி கிடைக்கலை. நானும் ஒன்பதாவது இடத்திற்கு போறேன்” என்றார் ஷிவின். “என்னை நான் நம்பறேன். மக்களும் சும்மா தொடர்ந்து வாய்ப்பு தர மாட்டாங்க. எனவே ஒன்றாம் இடத்திற்கு நான் தகுதியானவன்” என்று அடம்பிடித்து தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார் அசிம்.

ஆக... இந்த ரேங்கிங் டாஸ்க் இப்படியாக நடந்து முடிந்தது. 1) அசிம் 2) அமுதவாணன் 3) தனலஷ்மி 4) மணிகண்டன் 5) ஏடிகே 6) ரச்சிதா 7) மைனா 8) கதிரவன் 9) ஷிவின் 10) விக்ரமன்.
சாட்சிகள், தங்களுக்குத் தாங்களே எழுதிக் கொண்ட தீர்ப்பு இது. ஆனால் மக்களின் தீர்ப்பு எப்படியாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம். இன்று கமலின் விசாரணை நாள். ஜாலியாகவே இந்த வாரம் நடந்து முடிந்திருந்தால் அவருக்கு நிறைய வேலை இருந்திருக்காது. ஆனால் ரணகளமான ரேங்கிங் சமாச்சாரம் பெரிய தீனியை அளித்திருக்கிறது. எனவே கமலின் விசாரணை காரசாரமாக இருக்கக்கூடும்.
இந்த வாரத்தின் எவிக்ஷனில் ஓர் எதிர்பாராத திருப்பம் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது என்னவென்று காத்திருந்து பார்ப்போம்.